என் நெஞ்சிலாடும் களபமே-13

என் நெஞ்சிலாடும் களபமே-13

களபம்-13

மித்ராவின் கல்யாணத்துக்கு சுமியும் அருணும் அண்ணன் அண்ணி என்ற முறையில் முந்தினநாளே அங்கே போய்விட்டனர்.

இப்போது மோகனும் ருக்குமணியுமாக காரில் சென்று கல்யாண மண்டபத்திற்குப்போய் இறங்கினார்கள்.

அக்காவைப் பார்த்ததும் சங்கரன் “வாக்கா உடம்புக்குப் 

பரவாயில்லையா?”என்று அவரது கையைப் பிடித்துக்கொண்டுக் கேட்டார்.

ருக்குமணியும் நடந்ததையெல்லாம் மறந்து “நல்லாயிருக்கேன் தம்பி!எல்லா வேலையும் செய்து முடிச்சிட்டியா?மாப்பிள்ளை வீட்டுல வந்தாச்சா?” என்று கேட்டவாறே உள்ளே போனார்கள்.

அதைப்பார்த்த மோகன் “இதுங்க என்னடா என்னைய டீல்ல விட்டுட்டு பாசமலர் படத்தை ஓட்டிவிட்டு அதுங்கப்பாட்டுக்கு போகுதுங்க!” என்று முழித்துக்கொண்டு நின்றிருந்தவன் மேல் பன்னீரை தெளித்தாள் மித்ராவின் தங்கை.

அதில் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.அவனைப் பார்த்ததும் “இது மோகன் அத்தானா!”என்று அதிர்ந்தவள் முகத்தை உர்றென்று வைத்தவாறே உள்ள போங்க என்றுவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அந்த முகத்திருப்பலில் உன்னையெல்லாம் யாருடா இங்க வரச்சொன்னது என்பதுபோன்றதொரு அர்த்தம் இருந்தது.

அதில் அவனுக்குச் சுர்ரென்றுக் கோபம் வந்தது.அதனால் திரும்பி வேகமாக வெளியே நடந்தான்.ஆனாலும் நித்திராவுக்குப் பதிலடிக் கொடுக்காமல் போக மனம்வரவில்லை.

அதேவேகத்தில் திரும்பி வந்தவன் நித்திராவின் முன்பு போய் தெனாவெட்டாகக் சட்டையின் கையை மடித்து மேலேற்றியவாறே நின்றவன் ”உங்க அக்காக் கல்யாணத்துக்கு வரணும்னு நான் என்ன ஆசையாபட்டேன்? இதைவிடவும் உங்க கொக்காவை நான் கல்யாணம் பண்ணனும்னு கனவுலக்கூட நினைச்சதில்லை. அப்புறம் என்னைப் பார்த்து முகம்திருப்புறதுக்கு நான் என்ன உன் கையவா பிடிச்சு இழுத்தேன்? இல்லை உன்னையும் உங்க அக்காவையும் சேர்த்துக் கட்டிக்கணும்னு நினைச்சேனா? எங்கம்மா உங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தாங்கன்னு கூட துணைக்கு வந்தேன் புரியுதா?இதுக்குமேல என்னைப் பார்த்து முகத்தைத் திருப்பினன்னுவையேன் உன் முகத்தை ஒன்னுவிட்டுத் திருப்பிடுவேன்”என்று சத்தம்போட்டான்.

நித்திரா இதை எதிர்பார்க்கவில்லை.மோகன் அத்தானா இப்படி பேசுறது?என்று பயந்து மிரண்டு நின்றிருக்க அதற்குள் மண்டபத்தின் உள்ளே இருந்து ஒரு பெண் சண்டையிடும் சத்தம் கேட்டது.

உடனே இருவரும் என்னவென்று பார்க்க உள்ளே வேகமாக ஓடினார்கள்.

அங்கே சீனுவின் சட்டையைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் அடிப்பதற்கு நின்றிருக்க அவளைத் தன்னிடமிருத்து விலக்கி நிற்கவைக் அவன் முயன்றுக் கொண்டிருந்தான்.

அந்தப்பெண்ணின் பின்னால் ஒரு குழந்தையோடு ஒரு வயதான தம்பதியர் பாவமாக நின்றிருந்தனர்.

ஒருவேளை அந்தப்பெண்ணின் பெற்றோராக இருக்கலாமோ? ஆனால் கையில் இருக்கும் குழந்தை யாரோடது?என்று எல்லோருக்கும் சந்தேகம் வந்தது.

அந்தப்பெண்ணோ என்கூட பழகி “குழந்தையும் பெத்துக்கிட்டு இப்போ இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணப் போறீயா? எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு? உங்க அம்மாக்காரியைக் கூப்பிடு அவளுக்கு எல்லாம் தெரிஞ்சும் உனக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணிவைக்க இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கா?அவளை செருப்பால அடிப்பேன்.போலீசுக்குச் சொல்லிருக்கேன்.

அவங்க வந்துடட்டும். உன்னையும் உனக்கு கூட துணைக்கு நின்ன உன் குடும்பத்தையும் மொத்தமா போலீஸ் லாக்கப்புக்குள்ள வைச்சு கவனிப்பாங்க அப்போ நல்லத் தெரியும்”என்று சத்தம்போட்டாள்.

அதைக்கேட்டதும் சங்கரன் 

“என்னது ஏற்கனவே ஒரு பொண்ணுக்கூட பழகிக் குழந்தையும் இருக்கா? அப்படிப்பட்டவனையா என் பொண்ணுக்கு மாப்பிள்ளையா பார்த்திருக்கேன்?” என்று அதிர்ச்சியில் நின்றார்.

அதற்குள் அண்ணனாக அருண் உள்ளே புகுந்து சீனுவைப்பிடித்து அந்த பெண்ணிடம் இருந்து விலகி நிறுத்தியவன் “என்ன பிரச்சனை? என்னாச்சு சீனு? நீங்க சொல்லுங்க? இந்தப்பொண்ணு யாரு? உங்க முதல் மனைவியா?”

“ஆமாங்க சீனுவோட மனைவியும் அவர் மகனுக்கு அம்மாவும் நான்தான்.என் கழுத்துல ஒரு செயினைப் போட்டுத் தாலின்னு ஏமாத்திட்டிருந்தார். நானும் அவரும் ஒரே ஆபிஸ்லதான் வேலைப்பார்த்தோம். துபாய்லதான் இருந்தோம்.நான் டெலிவரிக்காக ஊருக்கு வந்துட்டேன்.அதுக்கப்புறம் என்கிட்ட பேசாமல் இருந்து என்னை தவிர்த்தான். ஒருவருஷமா போன் பண்ணியும் எடுக்கலை,பிரண்ட்ஸ் மூலமா காண்டக்ட் பண்ணியும் பேசலை.இப்போ இந்தப் பொண்ணை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கப்போறான் பிராடு” என்று மீண்டும் அவனது சட்டையைப் பிடித்து அந்தப் பெண்ணோ அடிக்க போனான். அருண் அவர்களுக்கிடையில் சென்று நின்று அந்தப்பெண் சீனுவை அடிக்கவிடாது தடுத்துப் பிடித்துக் கொண்டான்.

“சார் எதுக்கு சார் இடையில வந்த அடிக்கிறதை தடுத்துட்டு இருக்கீங்க?இவன் என்கிட்ட அடிவாங்கி சாகக்கூடிய ஆள்தான் சார். ஒரு பொண்ணு நான் எவ்ளோ ஆசை ஆசையா நம்பிக்கையுடன் இவன் கூட வாழ்ந்திருப்பேன்? எப்படி ஏமாத்திட்டு வந்து மாப்பிள்ளை கோலத்துல நிக்கிறான் பாருங்க.இப்படி இன்னொரு பொண்ணு கழுத்துலத் தாலிக்கட்டி ஏமாத்த போறோம்னு மனசாட்சி உறுத்தாம நிக்கிறானே இவனையெல்லாம் அடிக்காம என்ன செய்வாங்க? இதே இடத்துல உங்க தங்கச்சியோ அக்காவோ இருந்தா இப்படி விடுவீங்களா சார்!” என்று கேள்வி கேட்டாள்.

அருணோ அப்படியெல்லாம் விடமாட்டோம்.மித்ராவும் என் தங்கச்சிதான் நீயும் என் தங்கச்சிமாதிரி தான்மா.கொஞ்சம் பொறுமையா அமைதியா இரு. போலீஸ்க்கு சொல்லிருக்கல அவங்க வரட்டும்.அடிச்சோ கட்டாயப்படுத்தியோ யாரையுமா யாரோடும் வாழ முடியாது. அமைதியா இரு” என்றவன் அங்கிருக்கும் எல்லோரையும் கொஞ்சம் அமைதிப்படுத்தினான்.

இப்போது எல்லோரும் அப்படியே அமைதியாக நிற்கவும் அருண் சீனுவிடம் திரும்பி”இந்தப் பொண்ணு சொல்லுறதெல்லாம் உண்மையா!? என்று கேட்டான்.

“இல்லை அவ யாருன்னே எனக்குத் தெரியாது.எங்கயோ இருந்து வந்து என்னைத் தெரியும்னு கட்டுக்கதைக் கட்டுறா?”

என எந்தவித அலட்டலும் இல்லாமல் சொன்னான்.

அவனது கண்களில் உண்மையில்லை என்பது 

எல்லோருக்கும் தெரிந்தது.

சங்கரன் நேரகா சீனுவின் அம்மா சத்யவதியிடம் போய்” சம்மந்தி உங்க மேல நம்பிக்கை வைச்சுத்தானே இந்தக் கல்யாணத்துக்கே இவ்வளவு சீக்கிரமாக ஏற்பாடு செய்தேன்.இப்போ என்ன இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்கு?அதுவும் இவ்வளவு ஏற்பாடு பண்ணி தாலிக்கட்டுற நேரத்துல இப்படி வந்து அந்தப்பொண்ணு பிரச்சனை பண்ணுதே!நீங்க ஏன் சும்மா இருக்கீங்க?அந்தப்பொண்ணைப் பிடிச்சு வெளியே தள்ளுங்க. என் மகள் வாழ்க்கை என்ன பதில்னு சொல்லுங்க?”என்று பாவமாகக் கேட்டார்.

“ஹலோ அங்கிள் தாலிக்கட்டலைன்னு சந்தோசப்படுங்க.அப்புறம் நீங்களும் உங்க மகளும் இவன்கூட சேர்ந்து ஜெயிலுக்கு போய் உட்காரவேண்டியது வந்திருக்கும்.இவன் என்கூட வாழ்ந்ததுக்கான எல்லா மெம்மரிஸும் என்கிட்டயும் இருக்கு அவன்கிட்டயும் இருக்கு. அவன் வேணும்னா அழிச்சிருக்கலாம். நான் எல்லாம் பத்திரமாக வைச்ச்சிருக்கேன்.என் மகனோட பிறந்த சர்டிபிகட்டுலயும் அப்பா பெயர் சீனுன்னுதான் இருக்கும் வேணும்னா செக் பண்ணிப் பார்த்திடுங்க”என தைரியமாகச் சொன்னாள்.

சங்கரன் தனது நெஞ்சை லேசாக தடவியவாறே”என்னம்மா சொல்ற நானே என் மூத்த மகள் சந்தோசமாக வெளிநாட்டில் போய் வாழுவான்னு ஆசை ஆசையாகக் கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கேன். கல்யாணத்துக்கு எல்லாமா தயாராகி தாலிக்கட்டப்போற நேரத்துல உன்னோட பிரச்சனைக்காக நிறுத்தி என் மகள் வாழ்க்கையைக் கெடுக்கலாமா? அவளுடைய அந்த பாவப்பட்ட முகத்தை பாரு. அவளது வாழ்க்கைக்கான தவிப்பைப் பாரு. இந்த முகத்தைப் பார்த்துமா உனக்கு இப்படிலாம் வந்து பிரச்சனை பண்ணனும்னு தோணுது? அவ கல்யாணத்தை நிறுத்தணும்னு தோணுது?”என்று பாவமாக கேட்டார்.

அதைக் கேட்டவள் உடனே தனது தாய் கையில் இருந்தால் தன் மகனை வாங்கி சங்கரனின் கையில் கொடுத்தவள் இந்த பிஞ்சு முகத்தை பாருங்க.இவனோட அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த பிள்ளைக்கு அப்பா எப்படி இருப்பான்னு யோசிங்க?அப்பானு ஒருத்தர் இல்லாம போயிடுவானே இந்தப் பிள்ளை என்ன பாவம் பண்ணுச்சு?இந்த முகத்தை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலையா நீங்க வளர்த்த இவ்வளவு பெரிய பொண்ணுக்காக பேசுறீங்களே. எங்க அப்பா அம்மா என்னனையும் இப்படித்தானே வளர்த்திருப்பாங்க. நானும் இவனை நம்பி ஒன்னு பெத்து வச்சிருக்கனே!இதை நான் எந்தக் கணக்குல எடுக்கிறது?” என்று அவளும் திருப்பி சங்கரனிடம் கேள்விக்கேட்டாள்.

அதைக்கேட்டதும் சங்கரனுக்கு வாயடைத்துப் போனது.அப்படியே பாவமாக முழித்தார்.

இதற்குமேல் பொறுக்கமுடியாது தாயளனும் ருக்குமணியும் அங்கு படியேறி வந்து

“ஏய் சீனு இதுக்கு என்ன பதில்சொல்லப்போற?”

 என்று கேட்டனர்.

சீனுவின் அம்மோவோ “எவளோ வந்து என்னமோ சொன்னா அப்படியே நம்புவீங்களா?இந்தா நிக்கிறவளுக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பணத்தை புடுங்கிறதுக்குன்னே இப்படி கிளம்பி வந்திருக்காளுங்க. அதுக்குன்னே பெத்துப்போட்டு வளர்ப்பாங்க போல”என்று அவளது பெற்றோரையும் சேர்த்துத் திட்டினார்.

“ஹலோ சத்யவதி மேடம் பேருலதான் சத்யம் இருக்கும்போல வாயில இருக்காதோ?உன் மகனோடு நான் பேசுனது பழகினது எல்லாம் தெரிஞ்சும் என்னை நீங்க போன் பண்ணி மிரட்டுனது எல்லாம் மறந்துட்டுப்போல.நீங்க என்கிட்ட பேசினதோட ஆடியோ போலீஸ்கிட்ட பத்திரமா இருக்கு.இப்போ வேணும்னாலும் என் போன்ல இருக்கிறதையும் சேர்த்து போட்டுக்காட்டவா. மொத்தபேரும் கேட்கட்டுமா?”என்று வந்தனா கேட்டாள்.

அதைக்கேட்டதும் சீனுவின் அம்மா சத்யவதி உடனே ஜெர்க்காகி முறைத்துப் பார்த்தார்.

“என்ன மேடம் வாய் அடைச்சுப்போச்சா என்ன?நான் கேட்டதுக்குப் பதில்சொல்லுங்க மேடம்”என்று நக்கலாகக்கேட்டாள்.

சங்கரனையும் மித்ராவையும் பார்த்து “இப்போதாதவது இவங்க இலட்சணம் தெரிஞசுதேன்னு நினைச்சு சந்தோசப்படுங்க. பொண்ணுங்களை ஏமாத்துற இவனைமாதிரி ஆட்களுக்கு மட்டும்தான் பார்த்துப் பார்த்து பொண்ணுக்குடுக்க லைன்ல நிக்கிறீங்க”என்று திட்டினாள்.

இதையெல்லாம் ஓரமாக நின்று மோகன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.நித்ரா ஓடிப்போய் மித்ராவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

அவளுக்கு இப்போது அந்த துணை தேவையாக இருந்தது.நம்ம நினைச்ச வாழ்க்கைத்தான் கிடைக்கலைன்னு அழுதோம் இப்போ பெத்தவங்களா ஏற்பாடு பண்ணினக் கல்யாணமும் இப்போ இப்படியாகிட்டே! என்று வேதனைப்பட்டவளின் கண்கள் முன்பு மோகன் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் கோபம் எங்கிருந்து வந்ததென்று தெரியாது மோகனை முறைத்துப் பார்த்தவள் திரும்பிக்கொண்டாள்.

“என்னங்கடா இது அக்காவுக்கும் தங்கச்சிக்கும் என்னைப் பார்த்தால் தலையைத் திருப்பிக்கணும்னு தோணுது!என்னைப் பார்த்தா இவளுங்களுக்கு எப்படித் தெரியுது?இந்தப்பிரச்சனை முடியட்டும் அப்புறம் இருக்கு” என்று நினைத்து அமைதியாக நின்றான்.

சங்கரன் ஒருமாதிரி நெஞ்சைப்பிடித்துக்கொண்டடு அப்படியே அமர்ந்துவிட்டார்.தனம் ஓடிப்போய் அவரைத் தாங்கிப்பிடித்தவர் “ஐயோ என்னங்க ஆச்சுங்க?” என்று கதறினார்.மித்ராவும் நித்ராவும் அவரருகில் ஓடிப்போய் மண்டியிட்டு அமர்ந்து அவரது கையைப் பிடித்துக்கொண்டனர்.

ருக்குமணிதான் “ஏய் சங்கரா! ஏய்எதுக்குடா இப்படி இடிஞ்சுப்போய் உட்கராந்திருக்க? இந்தப்பரதேசி நாய் ஒன்னும் நம்ம மித்ராவுக்கு வேண்டாம்.நம்ம மித்ராவுக்கு இருக்கும் படிப்புக்கும் அழகுக்கும் இன்னும் நல்ல வரன் அமையும்டா எழும்பு எழும்பு நம்ம வீட்டுக்குப்போவோம். அவனுங்க பஞ்சாயத்தை அவனுங்க பார்த்துக்கட்டும்”என்று சமாதானப்படுத்தினார்.

அவரோ ருக்குமணி கையைப்பிடித்துக்கொண்டு “நீ சொல்லும்போது உன்னைத் திட்டினனேக்கா. இப்போ பார்த்தியா அந்தப்பரதேசி பொம்பளைப் பொறுக்கியா இருந்திருக்கான். இப்போ என் மகள் வாழ்க்கை என்னவாகுமோ?” என்று கண்கள் கலங்க பேசினார்.

அதைக்கேட்டதும் ருக்குமணிக்கு தம்பியின் மீது பரிதாபம் வந்துவிட்டது.உடனே எழுந்துப்போய் ஐயர் பக்கத்தில் வைத்திருந்த தாம்பூலத் தட்டில் இருந்த தாலியை வேகமாக எடுத்துவந்தவர் நேராக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மோகனின் அருகில் சென்றார்.

“உண்மையில என் மேல உனக்குப் பாசம் இருந்தா இந்தத் தாலியை மித்ரா கழுத்தில் கட்டு.என் தம்பி மகளுக்கு நீதான் வாழ்க்கைக் கொடுக்கணும்” என்று தாலியை அவனிடம் நீட்டினார்.

அதை முற்றிலும் எதிர்பார்த்திராத மோகன் “அம்மாஆஆஆஆ!நீ என்ன சொல்லுறன்னு புரிஞ்சுதான் சொல்லுறியா?இது எப்படிம்மா? என்று கேட்டுவிட்டு அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டான்!