என் நெஞ்சிலாடும் களபமே-2

களபம்-2
சென்னை….
சங்கரன் தன் முன்பு அமர்ந்திருக்கும் ருக்குமணியிடம் கோபமாக ”இங்கப்பாருக்கா உன் மகனுக்காக இதுக்குமேல் எல்லாம் காத்திருக்க முடியாது.என் மகளின் மனசை மாத்துறதுக்காக இரண்டு வருஷம் மேல் படிப்ப் படிக்க வைச்சாச்சு. இவளுக்கு அடுத்து ஒருத்தி இருக்கா. அவளுக்கும் எல்லாம் பார்க்கணும் இல்ல இவளை மட்டும் பார்த்துட்டே இருந்தா முடியுமா அதனால மித்ராக்கு வெளியில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். தரகர் ஒரு நல்ல வரன் கொண்டு வந்திருக்காரு. முன்னாடியைவிட இப்போ இன்னும் நல்ல வரன்கள் வருது.மித்ரா எம்.ஈ படிச்சிருக்கா அதனாலக்கூட இருக்கலாம். உன் முகத்துக்காக தான் இப்ப வந்து உன்கிட்ட சொல்றேன். நான் இந்த வரனை மித்ராவுக்காக முடிக்கப்போறேன். இதுல இனி நீ வருத்தப்படக் கூடாது. அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று நேரடியாகவே தனது அக்காவிடம் சங்கரன் பேசி விட்டார்.
அதைக் கேட்டதும் ருக்குமணிக்கு கோபம் தான் வந்தது ஆனாலும். அந்த கோபத்தை இப்பொழுது வெளிப்படுத்த முடியாதே.
ஏனென்றால் தன்னுடைய மகன் எங்கே இருக்கிறான்? எப்போது வருவான்? என்று எதுவும் தெரியாது.
மித்ராவை காத்திருக்க சொல்லுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.அப்படியே ஓடிப் போன மோகன் திரும்பி வந்தாலும் மித்ராவை கல்யாணம் பண்ணிக் கொள்வானா?அது என்னவோ தெரியாது? என்று பல குழப்பத்தில் அமைதியாக தனது தம்பிப் பேசுவதை கேட்டவாறே அப்படியே உட்கார்ந்து இருந்தார்.
அதைக் கேட்ட சுமிதான் “மாமா நீங்க மித்ராவுக்கு வேற வரேனையே பாத்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துடுங்க. அண்ணனுக்காக நீங்க வெயிட் பண்ண வேண்டாம்.இரண்டு வருஷம் வெயிட் பண்ணியாச்சு. அதுவே அதிகம்தான்.அப்படியே உங்க அக்காவுக்காக அண்ணா வருவான் வருவான்னு இன்னும் இரண்டு மூணு வருஷம் காத்திருந்தால் கஷ்டமும் நஷ்டமும் உங்களுக்குத்தான். அவன் வராமலும் போகலாம் இல்லையா?
அப்படியே அவன் வந்து எனக்கு கல்யாணம் வேண்டாம்னோ, இல்லை எனக்கு மித்ராவைக் கட்டிக்கிறதில் விருப்பமில்லைன்னு சொன்னாலோ என்ன பண்ணுவீங்க?
அதுக்கப்புறம் மித்ராவுக்கு வேற வரேன் வந்தாலும் அது செட்டாகுமா? இல்லை சரியாகுமா? அதனால உங்க மகள் வாழ்க்கையை நீங்க பாருங்க. அவங்க மகன் வாழ்க்கையை அவன் திரும்பி வந்ததும் இவங்க பாத்துப்பாங்க உங்க அக்கா தம்பிப் பாசத்துக்காகவெல்லாம் மித்ரா வாழ்க்கையை அழிச்சிடாதீங்க. அப்போ அந்த பாவமும் எங்கண்ணா தலையில்தான் விழும்” என்று அப்போதே யதார்த்த நிலை என்னவென்று யோசித்து அதை பேசியும் முடித்துவிட்டு இப்போது சுமி அருணைப் பார்த்தாள்.
அருண் சரியாகத்தான்டி பேசியிருக்க என்று பெருவிரலை தூக்கி காட்டிக் கண்ணைச் சிமிட்டினான்.
ஆனால் ருக்குமணியோ சுமியை முறைத்தவர் தனது தம்பியிடம் ”ஏன்டா என் பையனே மனசு நொந்துப்போய் கோபத்துல எங்கயோ போயிட்டான். அவன்திரும்ப வரணுமேன்னு நான் வேண்டாத கடவுளே இல்லை. நீ என்னடானா உன் மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுலதான் குறியா இருக்க.என் மகன் திரும்பி வரணும் அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கணும்னு நினைப்பே இல்லையே!நீயெல்லாம் என்னடா தாய் மாமன்னு சொல்லிட்டு திரியுற.உங்க அண்ணங்காரன் ஒதுங்கி இருக்கிறமாதிரி நீயும் ஒதுங்கப்பார்க்கிற.நடத்து நடத்துங்க உங்க இஷ்டம்போல நடத்துங்க.என் மகன் வரும்போது நான் அவனை நல்லா பார்த்துப்பேன் உன் பொண்ணைவிடவும் அழகா படிச்ச பொண்ணா பார்த்துக் கட்டிவைச்சிக்கிறேன்.நீ உன் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவை யாரு வேண்டாம்னு சொல்லுறா”என்று சங்கரனிடம் சொன்னார்.
ஆனாலும் ஆசை ஆசையாக கல்யாணத்தை நடத்திடணும்னு நினைச்சனே இப்படி ஆகிட்டே என்று நினைத்தவருக்கு உடனே கண்ணீர் கன்னத்தில் இறங்கிவிட்டது.
அக்கா!என்ன அக்கா இப்படிச் சொல்லிட்டு அழுதன்னா அந்த கண்ணீரின் பாவம் என் மக்களுக்குத்தான் பிடிக்கும் என்று நொந்துப்போய் பேசினார்.
“இங்கப் பாரு உன் மகளுக்கு நீ வெளியே வரன் பாரு. இல்ல சொந்தத்தில் வரன் பாரு.எங்கேயாவது பார்த்துக் கல்யாணத்த முடிச்சுவை. ஆனால் இதுக்கு மேல என்கிட்ட வந்து நீ எதையும் சொல்லிட்டு இருக்காதே. என் மகனை நினைத்து நினைத்து நானே இரண்டு வருஷமா கண்ணீரோடும் வேதனையோடும் இருக்கேன்.இப்போ வந்து உன் மகள் கல்யாணத்துக்காக வந்தெல்லாம் என்கிட்ட பேசாதே! எப்படியோ மித்ராவுக்கு நல்லது நடக்கட்டும்.சுமி சொன்ன மாதிரிஅவன் வந்து மித்ராவை கல்யாணம் பண்ணிப்பானான்னுக் கூட தெரியாது. ஆனால் அவங்க வந்துருவான்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு. என்மேல ரொம்ப கோவத்துல போய் இருக்கான். நான் இப்படி மோசமா அடிச்சி திட்டி அவனை வெளியே அனுப்பிவைச்சுட்டனேன்னு வருந்திட்டிருக்கேன்.இப்போதைக்கு அவன் வந்து என் கூட இருந்தா போதும். நான் உனக்கு உன் மகளை விட நல்லதா ஒரு பொண்ண பார்த்து கட்டி வைப்பேன் உன் மகளுக்கு கல்யாணம் பண்ணிவை.எதுனாலும் நல்லதுநடக்கட்டும்” என்று விட்டேத்தியாக சொன்னார்.
அதையெல்லாம் கேட்டு இதற்குமேல் இங்கிருந்தால் நம்ம ஏதாவது பேசிடுவோம்னு அருண் தனது மகன் அழுகிறான் என்று எழுந்து வெளியே போய்விட்டான்.அவன் பின்னாடியே சுமியும் போனாள்.
“என்னடி உங்கம்மா எப்போதுமே மகனைப் பத்திதான் யோசிப்பாங்களா? அவன் செய்துவைச்சிட்டுப் போனதைப்பத்தி யோசிக்கவேமாட்டாங்களா?
அவனுக்கும் அதிலிருந்து மீண்டு வரவேண்டாமா? இப்போ எங்கப்பாவையும் சேர்த்து திட்டுறாங்க.சித்தப்பா மித்ராவுக்கும் வயசாகுது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசிப்பாருல்ல”என்று கோபத்தில் பல்லைக் கடித்தான்.
“எதுக்கு என்கிட்ட இப்படி கத்துற? எங்க அம்மா அவங்க தம்பி கிட்ட பேசிட்டு இருக்காங்க.அவங்க மகனுக்காக பேசுறாங்க.அவனுக்கு முடிஞ்சாளவு நல்லது கெட்டது எதுவோ அதை சொல்லி அவனுக்கும் புரிய வைக்கணும் இல்லையா? அவன்பாட்டுக்கு திருந்தனும் விடமுடியுமா என்ன? இப்பதான் உன் பிரண்டு அதான் எங்க அண்ணன் எங்கே இருக்கான்னு உனக்குத்தெரியுமே. அவன்கிட்டப் பேசி வரவைக்கவேண்டியதுதானே”
“எனக்கு எப்படிடி உங்கண்ணன் இருக்கிற இடம் தெரியும்? உங்க அம்மா இருக்கும்போது இப்படி உளறி கிளரி வச்சிறாத.. அப்புறம் அவனை உடனே பிடிச்சு இழுத்துட்டு வா, கூட்டிட்டு வான்னு சொன்னால் நான் எங்கப்போய் அவனை தேடி கண்டுபிடிக்கிறது? உங்க அண்ணன் சாமியாராக போய் இருக்கத்தான் அதிகவாய்ப்பிருக்கு” என்று நக்கலாகச் சொன்னான்.
“அப்படியாவது சாமியாரக போயிருக்கட்டும்.ஆனாலும் எங்க இருக்கானாவது சொல்லித் தொலையணும்ல அதுவும் இல்ல.அப்படி எங்கதான் போனானோ?அதுவும் இருக்கிற வேலையை விட்டுட்டு போயிருக்கான்.அவன் ஆபிஸ்லக்கேட்டாலும் சொல்லமாட்டுக்காங்க. தெரியாதுன்னு சொல்லூறாங்க. எப்படித்தான் அவனைக் கண்டுப்பிடிக்கிறதோ?எச்கம்மாவேற மகனை பார்க்காமலே செத்துப் போயிருவேன்ன்னு ஏங்கி ஏங்கி தினமும் நெஞ்சில கைய வச்சு அழுதிட்டிருக்காங்க. உனக்கு ஏதாவது அவனைப்பத்தி தெரிஞ்சா சொல்லுடா. ஏன்டா எங்கள இப்படி படுத்துற?” என்று அருணை முறைத்தாள்.
அந்த ராதாவைக் கடத்தி மிரட்டினதுனால்தானே ராதாவோட புருஷன் கிருஷ்ணன்கிட்ட அடி வாங்கினான்.அவன் மட்டுமா என் கையில கிடைக்கட்டும் அவனை பொளந்துட்டுத்தான் மறுவேலை.நானே அவன் மேல கோவத்துலதான் இன்னும் இருக்கேன். இதுல அவன் இருக்கிற இடம் தெரிஞ்சா சும்மாவா விட்டு வச்சிருப்பேன்” என்று சொன்னவன் மீண்டும் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டான்.
அதைக் கேட்ட சுமி ஒருவேளை இவனுக்கு அண்ணன் இருக்கிற இடம் தெரியாமால்தான் இருக்குமோ?அது உண்மைபோலதானே இருக்கு,இல்லைன்ன இந்த பயபக்கி இவ்ளோ கோபப்பட மாட்டானே? இந்த அண்ணன் எங்க தான் போய் தொலைஞ்சானோ? கடவுளே சீக்கிரமா எங்கக் கண்ணுல காட்டு”என்று அவளும் உள்ளே வந்தாள் அதற்குள் சங்கரன் பேசி முடித்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பத் தயாரானார்.
“சரிக்கா நான் கிளம்புறேன்.அவளுக்கு ஏற்கனவே நம்ம சொந்தத்துல இருந்து ஒரு இஞ்சினியர் வரன் வந்திருக்கு.பெரியண்ணன் தான் வரன் வந்திருக்குன்னு சொன்னான். அவன் மூலமாகவே மித்ராவுக்கு பேசி முடிக்கிறேன். ஏன்னா அவளும் இன்ஜினியரு அவனும் என்ஜினியரு ரெண்டு பேரும் வேலைக்கு போனால் ஓரளவு செட்டாகும். அதுவும் இல்லாமல் அந்த மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கானாம். ஒரு மாசத்துல கல்யாணத்தை முடிக்கணும்னு அவங்க அப்பா ஒத்தைக் காலில் நிக்கிறாராம்.இந்தக் கல்யாணத்தையே பேசி முடிச்சிட்டா இவளையும் ஒரு மாசத்துல அவளோட கூட்டிட்டு போயிருவான்”
“ஓஹோ! அப்போ உனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேணும். அவளுக்கும் இன்ஜினியர் மாப்பிள்ளை வேணும். அதனால்தான் என் மகனை மறந்துட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ற இதுல பெரியண்ணனும் உனக்கு கூட்டு களவாணி” என்றவர் அருணை அப்படியே திரும்பி பார்த்தார்.
சங்கரின் பெரிய அண்ணன் வேறு யாரும் இல்லை.அருணின் அப்பாதான். அதனால்தான் அவனை ஏறிட்டு பார்த்தார். நீங்கள் எல்லாம் கூட்டு சேர்ந்துதானடா இந்த வேலைப் பண்றீங்க என்பது போல அவரது பார்வை இருந்தது.
ப்ச்ச் இந்த சித்தப்பா வேற.எந்த நேரத்துல எதைச்சொல்லணும்னு தெரியாமல் சொல்லி வைச்சிடுறாரு என்று முழித்தான்.
“நடத்துங்க நடத்துங்க அண்ணனும் தம்பியும் இப்ப ஒண்ணா சேர்ந்துட்டீங்க உங்களுக்கு இடையில கூட பிறந்தவளான நானும் வேண்டாம் என் மகனும் வேண்டாம். சரி சரி போய் உன் மகள் கல்யாணத்தை நல்லபடியா நடத்து. எனக்கு பத்திரிகை கித்திரிக்கை எல்லாம் கொண்டுவராத நான் வரமாட்டேன்: என்று பெருமூச்சோடு சொன்னவர் அப்படியே தனது கண்களை மூடிக்கொண்டார்.
அதைப் பார்த்த சங்கரன் இவகிட்ட என்ன பேசி என்ன பிரயோஜனம்? என்று தோளைக் குலுக்கிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து விட்டார்.
அவருக்கு இப்பொழுதுதான் ஆசுவாசமாக இருந்தது. அக்காகிட்ட எப்படி சொல்ல? எப்படி பேச?என்றிருந்த விசயத்தை சொல்லியாச்சு.
இப்போ மித்ராவுக்கு வரன் வர்றதை பத்தியும் சொல்லியாச்சி. எல்லோமே பேசி முடிச்சாச்சு. இனி அவளாச்சு.. அவ மகனாச்சி.. அவன் மகன் வந்தாலும் சரி வராமல் போனாலும் சரி.நம்ம நம்மபொண்ணு வாழ்க்கையைப் பார்ப்போம் கிளம்பி சென்றவர் மனதில் நிம்மதியை உணர்ந்தார்.
அங்கிருந்து வீட்டுக்கு வந்தவர் மனைவி தனலெட்சுமியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“இங்கப்பாரு தனம் நான் போய் அக்காகிட்ட எல்லாத்தையும் பேசிமுடிச்சிட்டேன்.அப்படியே அண்ணன்கிட்டயும் என்ன ஏதுன்னு விசாரிச்சு என் முடிவை சொல்லிட்டு வந்துட்டேன்.நாளைக்கே மித்ராவைப் பொண்ணுப் பார்க்க வரச்சொல்லியாச்சு..மித்ராகிட்ட மட்டும் இந்தத்தகவலை நீயே சொல்லிடு.அப்புறம் இதுக்கும் அபசகுணமா எதையாவது சொல்லிட்டிருக்கப்போறா”
“ப்ச்ச் என்னங்க எல்லாத்தையும் இவ்வளவு அவசர அவசரமா பண்ணிட்டு வந்திருக்கீங்க”
“அண்ணன் சொன்னப்படிதான் செய்திருக்கேன்.நீ உன் மகக்கிட்ட சொல்லிடு அதுபோதும்”
“க்கும் நீங்க அவக்கிட்ட கோபத்துல பேசாமல் இருந்தாலே போதும்.பாதிப்பிரச்சனை தீர்ந்திடும்”
“அப்படி என்னதான்டி நான் பிரச்சனை பண்ணி விடுறேன்,எப்போ பாரு நீங்க பேசாதீங்க நீங்க பேசாதீங்கன்னு சொல்லிட்டு இருக்க.வேற வரன் பாக்குறேன் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுறது தப்பா என்ன? ஒரு அப்பனா நான் என் பொண்ணோட வாழ்க்கையைத்தானே பார்க்க முடியும் “என்று சங்கரன் ஆயாசத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
“உங்க இஷ்டத்துக்கெல்லாம் பொம்பளை பிள்ளை மனசை மாத்திக்கச் சொன்னா எப்படி மாத்திக்கும்?அதுதான் பிரச்சனையே!
அவ அவபாட்டுக்கு படிப்பு உண்டு வேலை உண்டுன்னு போயிருப்பாள் என் அக்கா மகனை நீதான் கட்டிக்கணும்னு சொல்லி சொல்லி அவ மனசுல ஆசையை வளர்த்துவிட்டீங்க. இப்போ நீங்களே உங்க அக்கா மகன் செய்த வேலையெல்லாம் தெரிஞ்சதும் வேற வரன் பாக்குறீங்க.இதுல உங்க அக்காமகன் இருக்கிற இடமே தெரியலை.அப்போ அவ என்னதான் செய்வா? நீங்க சொல்லும்போதெல்லாம் தலையத் தலைய ஆட்டிட்டு நின்னா. இப்போ அவளுக்கே மனசு கஷ்டமா இருக்கு. அதனால்தான் வேற வரன் பார்க்க வேண்டாம்னு சொல்றா. அதை நீங்க புரிஞ்சுக்க வேண்டியது தானே!
ஒன்னுக்கு ரெண்டு பொம்பள பிள்ளைகள் ஆயிடுச்சு. அந்த பிள்ளைகளோட மனச பத்தி கொஞ்சமாவது கவலைப்பட்டீங்களா?
“எங்க அக்கா முக்கியம்.எங்க அக்கா பேச்சு முக்கியம்னு தானே நீங்க ஆடுனீங்க.இப்போ அதற்கான பலனை அனுபவிக்கிறீங்க.உங்க மகளாச்சே..உங்களை மாதிரி பேசத்தான் செய்வா. கேட்டுக்கங்க”
“என்ன பேசத்தான் செய்வாளா? அவ பேசுறாளோ? இல்லையோ? நீயே அவளைப் பேச சொல்லி கொடுப்பப் போலிருக்கு. என்ன செய்வ அக்கா பேச்சைக் கேட்டு நானும் மோகனுக்கு மித்ராவை கட்டிக் கொடுக்கலாம் அவளும் வாழ்க்கையில் நல்லா இருப்பான்னு நினைச்சு சொன்னேன்.இப்படி அவன் புத்தி கோக்குமாக்கா போகும்னு கனவா கண்டேன்.அதுதான் முடிஞ்சுப்போன கதையாச்சே.விடு இப்போ நாளைக்கு பொண்ணுப் பார்க்க வராங்கன்னு மித்ராகிட்டச் சொல்லிடு.அவளை ரெடியாகி இருக்கச்சொல்லு.உடனே கல்யாணம் வைக்கலாம்னு அண்ணனும் சொல்லிட்டாரு”என்று தனத்திடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது உள்ளே வந்த மித்ரா அவளது அப்பா சங்கரனை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
அந்தப் பார்வையிலே ‘நீங்க பேசிட்டிருந்ததைக் கேட்டுட்டேன். இந்தக் கல்யாணத்துக்கெல்லாம் நான் சமாதிக்க மாட்டேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு ஏற்பாடு பண்ணாதீங்க’ என்ற பதில் இருந்ததை சங்கரன் புரிந்துகொண்டவர் தனத்தை மெதுவாக திரும்பி பார்த்தார்.
தினமும் இதே அக்கப்போரா இருக்கு.அப்பாவும் மகளும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கிட்டே அலையுறீங்க.நீங்களாச்சு உங்க மகளாச்சு.
எதுனாலும் நீங்களே பேசிக்குங்க. என்னை குறுக்கால இழுத்து விடாதிங்க என்று சொல்லிவிட்டு எழுந்து கிட்சனுக்குள் போய்விட்டார்.
சங்கரன் இப்போ வேறு வழியில்லையே.மித்ராக்கிட்ட விசயத்தைச் சொல்லித்தானே ஆகணும்.எப்படிச்சொல்ல? என்று யோசனையோடு அமைதியாக இருந்தார்.