என் நெஞ்சிலாடும் களபமே-14

என் நெஞ்சிலாடும் களபமே-14

களபம்-14

ருக்குமணி மோகனிடம் தாலியைக் கொடுத்து மித்ரா கழுத்தில் கட்டச்சொல்லவும் அதிர்ந்தவன்”அம்மாஆஆஆ என்னம்மா நீ?தாலிகட்டு அதுஇதுன்னு முதல்ல மாமாவைத் தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போவோம் வாங்க”என்று சங்கரனைத் தூக்குவதற்குப்போனான்.

“அதெல்லாம் அவன் சரியாகிடுவான்.மித்ராவுக்கு கல்யாணம் நடந்தால் தன் தம்பி சரியாகிடுவான்” என்று சத்தமாக பேசியவருக்கு அதிகமாக இருமல் வந்தது.

இருமிக்கொண்டே சொன்னார்.அவருக்குத் தம்பிக்கு எதுவும் ஆகிடக்கூடாது என்கின்ற பதட்டம் என்றால் சுமிக்கும் மோகனுக்கும் தனது அம்மாவுக்கு எதுவும் ஆகிடுமோ என்று பயமே வந்துவிட்டது.

“அம்மாஆஆஆ! அம்மாஆஆஆஆ! நீ பதறாதம்மா!மாமாவுக்கு ஒன்னும் ஆகாது.அருண் அவரைத் தூக்குடா” என்று மோகன் சத்தம்போட்டான்.

“என் மகக் கல்யாணம்!மித்ரா கல்யாணம்!போச்சே போச்சே!எல்லாம் போச்சே!என் மக வாழ்க்கையே போச்சே” என்று மூச்சுவிட சிரமப்பட்டு அப்படியே ஏங்கினார்.

உடனே ருக்குமணி மோகனிடம்”என்னையும் உன் மாமானையும் நீயே கொன்னுடுடா.எவனோ ஒருத்தன் வந்து மித்ராவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணப் பார்த்திருக்கான்.அவள் வாழ்க்கையே நாசமா போயிடும் போலிருக்கு.இனி யாரு அவளைக் கட்டிப்பா நம்மதானே அவ வாழ்க்கையைப் பார்கணும்.நீயே இப்படிப் பண்ணலாமா மோகன்?என்று அழுதார்.

“ஐயோ இது அழுது கல்யாணம் பண்றதுக்கான நேரமில்லை. முதல்ல உங்க இரண்டுபேரையும் ஹாஸ்பிடடல் அட்மிட் பண்ணனும் வாங்க” என்று தூக்கினான்.

“விடு மோகன் என் மகளைவிட்டுட்டு நான் எப்படி வருவேன். அவ வாழ்க்கையை பார்க்காமல் எங்கேயும் வரமாட்டேன்” என்று மூச்சுவாங்கப்பேசினார்.

அதற்குள் சீனு அந்தத் தாலியை பிடுங்கியவன் வேகமாகப்போய் மித்ராவின் கழுத்தில் கட்டுவதற்கு முயன்றான்.

மித்ராவோ “விடுடா என்னை டேய் விடுறா” என்று கதறினாள். சீனுவின் மனைவியா அந்தப்பொண்ணு வந்தனா அவனைப் பிடித்து இழுத்தாள்.

இதையெல்லாம் பார்த்த சங்கரனுக்கு நெஞ்சுவலி அதிகமாகியது.வியர்த்து வழிந்தது.

ருக்குமணி வேகமாக எழுந்து மோகனது கையைப்பிடித்து இழுத்து மித்ராவின் அருகில் கொண்டுபோய்விட்டுவிட்டு அந்த சீனுவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

அவன் அதிர்ந்து நிக்கும்போது அவனைத் தள்ளிவிட்டவர். அவனது கையில் இருந்தத் தாலியைப் பிடுங்கி மோகன் கையில் குடுத்தார். மோகனோ ருக்குமணியை முறைத்தான்.

“இதுவரைக்கும் நீ உன்னைப்பத்தி மட்டுமே நினைச்சு சுயநலமாக இருந்தது போதும்.இப்போ எங்களையும் குடும்பத்தையும் பத்தி யோசி.இல்லைன்னா நான் செத்துப்போயிட்டேன்னு மொத்தமாக முடிச்சுக்க” என்று மீண்டும் இருமிக்கொண்டே சொன்னார்.

ஊப்ஸ் என்று சொன்னவன் என்ன செய்யவென்று முடிவெடுப்பதற்குமுன் திரும்பிப்பார்த்தான் சங்கரனுக்கு மூச்சைடைத்துக் கண்கள் சொருகியது.

‘எதுன்னாலும் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று வேகமாக மித்ராவின் கழுத்தில் தாலிக்கட்டத் தொடங்கினான்.

மித்ராவால் இதை நம்பமுடியாது பார்த்தாள் என்றால் ருக்குமணிக்கு இப்போதான் நிம்மதியாக இருந்தது.

அருணும் சுமியும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சங்கரன் இருவரையும் பார்த்து கையை நீட்டி ஆசிர்வதித்தவர் அப்படியே அவரது மனைவி தனத்தின் தோளில் சரிந்துவிட்டார்.

அவ்வளவுதான் தனம் “ஐயோ!என்னங்க” என்று கதறி அழவும் எல்லோரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர்.

அவர் ஆசிர்வதிக்கக் கையைத் தூக்கியதைப் பார்த்த மித்ராவும் மோகனும் அவர் சரிந்துவிழவும் ஒன்றாகவே ஓடிவந்துத் அவரைத் தூக்கினார்கள்.

ஆனால் அவரது நாசியில் சுவாசமில்லை.மோகனுக்குப் புரிந்துவிட்டது.

ஆனால் மித்ராவுக்கும் தனத்துக்கும் யார் புரியவைப்பது?

“அருண் இங்க வாடா உங்க சித்தப்பாவைத் தூக்கு” என்று சொல்லியவன் அவனோடு சேர்ந்து தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் போய் அட்மிட் பண்ண முயன்றார்கள்.

ஆனால் உள்ளே கேசுவாலிட்டி கொண்டுப்போறதுமே சங்கரன் இறந்துவிட்டார்.இனி ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டனர்.

உண்மையில் இந்தவொரு நொடியை நேரத்தை மோகன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

தன் பின்னாடியே அலைந்து தன் மகளைக் கட்டிக்க என்று அமைதியாக அம்மாவின் பேச்சைக்கேட்டு வந்த சங்கரன் மாமா இப்போது உயிரோடு இல்லை!

அவனால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியாது அப்படியே அதிர்ச்சியில் நின்றிருக்க அருணுக்கோ அதுவிடவும் அதிர்ச்சி தங்கச்சிக் கல்யாணத்துக்கென்று சந்தோசமாக வந்தோமே இப்படி சித்தப்பாவை பறிக்கொடுத்துட்டமே!என்று மனம் கலங்கி அப்படியே தலையில் கையைக் கொடுத்தவாறே உட்கார்ந்துவிட்டான்.

அவர்களது பின்னாடியே காரில் ஏறிவந்து இறங்கிய ருக்குமணி தனம்,மித்ரா, நித்ரா என்று எல்லோரும் அவர்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று புரிந்துக்கொண்டனர்.

ருக்குமணி வேகமாக ஓடிவந்து “சங்கரனை எங்கடா?எங்க அட்மிட் பண்ணி வைச்சிருக்கீங்க.எனக்கு என் தம்பியைப் பார்க்கணும்” என்று சத்தமாகவே கேட்டார்.

அவரது கையைப் பிடித்துக்கொண்ட மோகனுக்கு தம்பிமேல் அதிகம் பாசம் வைத்திருக்கும் ருக்குமணியிடம் என்ன சொல்லவென்று தெரியாது அவரது முகத்தையே பார்த்தான்.

அவருக்கு மோகனது முகத்தைப் பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்கு என்று தோன்றவும்”என் தம்பிய என்னங்கடா செய்தீங்க? அவனை எங்கடா?என்று அருணிடமும் மோகனிடமும் மாத்தி மாத்திக் கேட்டார்.

இருவரும் ஒன்றாக அவரை வைத்திருந்த இடத்தைச் சுட்டிக்காட்டினர்.அவர்களுக்கு வாய்வார்த்தை வரவில்லை.அதனால் கையால் சைகை செய்துவிட்டு சுவரில் பின் தலையை முட்டிக்கொண்டு அப்படியே உட்கார்த்திருந்தனர்.

மித்ராவும் நித்ராவும் ருக்குமணிக்கு முன்னாடி ஓடிப்போய் சங்கரனை வைத்திருந்த ஸ்ட்ரெட்சர் அருகில் சென்று முகத்தைத் திறந்துப்பார்த்தனர்.

அங்கே சங்கரன் மனநிம்மதியோடு இந்த உலகத்தைவிட்டுப்போன சுவடு தெரியாது அமைதியாக படுத்திருந்தார்.

அவரது கடைசி ஆசையான மித்ரா கல்யாணத்தைப் பார்த்துவிட்டுத்தான் நிம்மதியாக கண்ணைமூடியிருந்தார்.

அப்பாஆஆஆஆஆ என்று அலறியடித்துக்கொண்டு சங்கரனை உடலைப்பார்த்து அழுதனர்.தனம் அப்படியே அழாது அதிர்ந்து கணவனின் அருகே சென்று நம்பமுடியாது பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவரால் எதையுமே சொல்லவும் முடியாது அழவும் முடியாது அப்படியே அசையாது நின்றிருந்தார்.அதைப்பார்த்து அருண்தான் சித்தி சித்தி என்று அவரது கையைப்பிடித்து உலுக்கினான்.

அதில் கொஞ்சம் உணர்வுக்கு வந்து “ஐயோ! என்னங்க என்னை விட்டுட்டுப்போக எப்படிங்க மனசு வந்துச்சு?என்னை இப்படி தனியா விட்டுட்டுப் போயிட்டீங்களே!”என்று அந்த அவரது நெஞ்சிலயே கவிழ்ந்து முட்டி மோதி அழுதார்.

என்னதான் அழுதாலும் உருண்டாலும் மாண்டோர் மீண்டு எழுந்து வரப்போவதில்லையே!

எல்லோரும் அழும் சங்கரனின் மனைவி பிள்ளைகளைப் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க அங்கே சுமிதான் “அம்மாஆஆஆஆஆ என்னாச்சும்மா அம்மாஆஆஆஆ என்னாச்சும்மா” என்று சத்தம்போட்டாள்.

“அம்மாவுக்கு என்னாச்சு?” என்று மோகன் திரும்பிப் பார்க்க அவரோ மயங்கி விழுந்திருந்தார்.

“ஐயோ! அம்மாஆஆஆ” என்று ஓடியவன் உடனே அங்கயே டாக்டரை அழைத்துப்பார்த்து அட்மிட் பண்ணிவிட்டார்கள்.

மொத்தக் குடும்பத்தையும் சங்கரன் மறைவுத் தாக்கி துக்கத்தால் சாயவைத்திருந்தது.

இது நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.ருக்குமணிக்கு பீ.பீ அதிகமாகியிருந்தது. அவரால் எழுந்து நடக்கக்கூட முடியாதளவுக்கு அரை மயக்கத்திலயே இருந்தார்.

இனி நடக்கவேண்டியதைப் பார்க்கணுமே என்று மோகனும் அருணும் நின்று சங்கரனை வீட்டுக்குக் கொண்டுவந்து இறுதிக்காரியத்தைச் செய்யணுமே என்று அங்கிருந்து பத்திரமாக வீட்டுக்கு கொண்டுவந்து வைத்திருந்தனர்.

மித்ரா இப்போது அழுகையை நிறுத்திவிட்டு அவரருகில் அமைதியாக உட்கார்ந்த்திருந்தாள். அவளது கழுத்தில் புதுமஞ்சள தாலி மோகன் கட்டியது எல்லோருக்கும் தெரிந்தது.

ஏற்கனவே சொந்தங்கள் எல்லாம் கல்யாணத்துக்கு வந்து அங்கே நடந்த பிரச்சனைகளைப் பார்த்திருந்ததால் எதுவும் கேட்கவில்லை.

ஆனாலும் அவரது மறைவு செய்தியைக்கேட்டு துக்கம்விசாரிக்க வந்தவர்கள் சிலரால் மித்ராவின் கல்யாணம் முதல் சங்கரனின் சாவுவரைக்கும் அலசி ஆராயப்பட்டது!

இதுயெதையும் கண்டுக்காது மித்ரா கண்களை மூடிக்கொண்டு கண்ணீரோடு உட்கார்ந்திருக்க மோகனுக்கு என்ன சொல்லுவது என்றுக்கூட தெரியாது பாவமாகப் பார்த்திருந்தான்.

தயாளனும் அருணும் இங்கே எல்லாத்தையும் முடிக்க ஏற்பாடு செய்துக்கொண்டிருக்க ஹாஸ்பிட்டலில் சுமி ருக்குமணிக்குத் துணையாக இருந்தாள்.

இதற்குமேல் எப்படி இப்படியே உட்கார்ந்திருக்க முடியும் என்று மோகனும் எழுந்துச்சென்று சங்கரனின் இறுதிக்காரியத்தினை நடத்த அருணோடு துணை நின்றான்.

ஒருவழியாக மாலை சங்கரனின் இறுதிக்காரியங்களை முடித்திருந்தனர்.

நித்ராவையும் தனத்தையும்தான் சமாளிக்க முடியாது திணறினார்கள்.அவர்கள் கதறி அழுதது மொத்தபேரையும் கண்ணீர் வடிக்கவைத்திருந்தது.

தனத்துக்கு சங்கரனே உலகம்.மித்ரா நித்ராவுக்கு தாய்தகப்பனே உலகம்.இப்போது அதில் பாதி அவர்களைவிட்டுப் போயிற்றே என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

மோகனுக்கு மித்ராவையும் சமாதானப்படுத்த அருகில் செல்லமுடியவில்லை.மாமா மகள் என்று இருக்கும்போதாவது ஏதாவது பேசவாவது செய்வான்.இப்போது நடந்தக் களேபரத்தில் அவள் கழுத்தில் தாலியைவேற கட்டியாச்சு என்று நொந்துப்போய் இருக்கிறான். எங்கிருந்து யாரை சமாதானப்படுத்த முடியும்?

கல்யாணம் நடக்கவிருந்த வீட்டில் துக்கக் காரியம் நடந்துவிட்டதே! இதே நினைப்பில் அத்தனைபேரும் ஒவ்வொரு இடத்தில் முடங்கிக்கிடந்தனர்.

அடுத்தநாள் காலைவரைக்கும் இப்படித்தான் இருந்தது. அடுத்தநாள் காலையில் ருக்குமணி ஹாஸ்பிட்டலில் இருந்து நல்ல ஞாபகத்துக்கு வந்தவர் உடனே சுமியிடம் எனக்கு என் தம்பியைப் பார்க்கணும் வா போகலாம். என்னை எதுக்கு இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்க என்று வேகமாக வெளியே வந்தவர் மோகனுக்கு போன் பண்ணு என்றார்.

சுமிக்குமே மகனையும் அம்மாவையும் சேர்த்து சமாளிக்க முடியாது அருணுக்கு அழைத்து விபரத்தைச் சொன்னாள்.அருண் காரை எடுத்துக்கொண்டு வந்தவன் அத்தையிடம் இப்போதைக்கு விசயத்தைச் சொல்லாத அவங்க நேத்து சித்தப்பாவுக்கு நடந்த எல்லாத்தையும் மறந்துட்டாங்க போல. அமைதியா கூட்டிட்டுப்போவோம். வீட்டுலபோய் எல்லாத்தையும் சொல்லிக்கலாம் என்று அமைதியாகவே மித்ராவின் வீட்டிற்கு அவரை அழைத்துக்கொண்டு வந்துச்சேர்ந்தனர்.

வீட்டின் முன்புக்கிடந்த பச்சை ஓலை கருப்பு சாமியான பந்தல் என்று ஒரு நோட்டம்விட்டவருக்கு நேற்று நடந்தது தானாக மூளைக்குள் திரும்பத் திரும்ப வந்தது.

“சங்கரா இந்த அக்காவை நினைக்காமல் போயிட்டியேடா! உன் மகள்களுக்கு நான் நல்லது நடத்தி வைக்கமாட்டேனா.அக்கா இருக்கான்னு நம்பியிருந்திருக்கலாமேடா. ஏன்டா இப்படி அவசரப்பட்டு போயிட்டியேடா!” என்று தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு உள்ளே சென்று தனத்தைக் கட்டிக்கொண்டு அழுதார்.

தனம் பேசிய பேச்சுக்களையெல்லாம் ருக்குமணி மறந்துவிட்டார்.

தனது தம்பி போய் சேர்ந்துவிட்டானே!இனி அவனது குடும்பம் என்னாகும் என்ற கவலைதான் அவருக்கு அதிகமாக இருந்தது.

தனத்திடம்”நீ அழாத தனம் என் தம்பிக்குப் பதிலா நான் இருக்கேன் கவலைப்படாதே!மித்ரா என் பொறுப்பு.நித்ராவின் வாழ்க்கையையும் நாங்க பார்த்து வைக்கிறோம்”என்று ஆறுதல் சொன்னார்.

மூன்றுநாள் கழித்து காலையிலயே மித்ரா கிளம்பி வெளியே வந்தவள் அருணிடம் அண்ணா வாங்க நம்ம போலீஸ் ஸ்டேஷன் போகணும்.அந்த சீனு குடும்பத்துக்கிட்ட இருந்து நஷ்ட ஈடு வாங்கணும்.எங்கப்பாவை நம்பவைச்சு ஏமாத்தி இப்போ கொன்னுட்டாங்க.அவங்களை சும்மாவிடக்கூடாது அண்ணா.அப்பா இந்தக் கல்யாணத்துக்காக அவரது வாழ்நாள் சேமிப்பையே போட்டிருக்காரு.அவங்களை சும்மாவிடக்கூடாது என்று சொன்னாள்.

அதைக்கேட்ட மோகன் இவள் என்ன இப்படிப் பேசுறா என்று யோசனையோடு பார்த்திருந்தான்.

அவள் அவனைக் கண்டுக்கொள்ளாது பேசியது வேறு எரிச்சலைக் கிளப்பியது.

அருண் “ஏன் மித்ரா இப்படி சொல்லுற அந்தக்குடும்பத்துக்கிட்ட இருந்து ஒரு நஷ்ட ஈடும் நமக்குத் தேவையில்லை.அவங்க சங்காத்தமே நமக்கு வேண்டாம்” என்று சொன்னான்.

“அதெப்படின்னா விடமுடியும்? அப்பாக்கிட்ட இருந்து ஆறுஇலட்சம் அந்த சீனுக்கு அம்மா எண்ணி வாங்கினாங்க கல்யாணத்துக்குன்னு.சீனுக்கு ஐஞ்சு பவுன்ல செயின் போட்டிருக்காரு. அந்தக்குடும்பமே மொத்தமாக ஏமாத்திட்டாங்க. அத்தனை பணத்தையும் வாங்கணும்.எங்கப்பாவைக் கொன்னுட்டானுங்க.அந்த லேடிக்கு எல்லாம் தெரிஞ்சும் எங்களை ஏமாத்தியிருக்காங்க அவங்களை சும்மாவிடக்கூடாது அண்ணா” என்று கோபத்தில் நின்றிருந்தாள்.

இவளுக்கு இவ்வளவு கோபம் வருமா?எப்போதும் அமைதியாக போகும் மித்ராவுக்குள் இவ்வளவு கோபம் இருக்குதா?என்று முதன்முறையாக மோகன் அவளையே இமைக்காது பார்த்திருந்தான்!