சொல்லாலே தொட்டு செல்லும் மின்னல் 1

Min1

சொல்லாலே தொட்டு செல்லும் மின்னல் 1

1 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல் !!

சென்னை !! 

ஜன நெருக்கடியான அந்த சந்து பொந்துகளில் ஒரு கார் லாவகமாக ஓடிக் கொண்டிருந்தது...  முன் சீட்டில் சாலையை மட்டும் கவனம் வைத்துக் கொண்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் விருமன் ... 

அந்த குறும்பு எங்கே? சிரிப்பு எங்கே? , ஓயாது பேசும் உதட்டுக்கு என்ன ஆனது? அத்தனை மாற்றம் அவன் உடல் மொழியில் .. அடர்ந்த தாடியும் ,சிரிக்கா முகமும்,  சிடுசிடு பார்வையும், ஏனோ பிறந்தாச்சு வாழணும் என்று ஏனோதானோ செய்கையுமாக வண்டியை அந்த குறுகிய சந்தில் ஓட்டி கொண்டிருக்க,  எதிரே ஒருவன் குடித்து விட்டு வந்து நேரே வண்டி மீது விழ..

"________ மக்கா எனக்குன்னு வந்து சேருவான்க போல "என வண்டியை விட்டு இறங்கி போன விருமன்

பளார் பளார் என விழுந்தவனை அடித்து ரோட்டோரம் இழுத்து போட்டவன் 

"சாகணும்னு முடிவு பண்ணிட்டா,  எவனையும் தொல்லை பண்ணாம போய் சேரு நாய , எவன் கிடைப்பான், எவனுக்கு பிரச்சனையை உண்டாக்கி விடலாம்னு அலையாதீங்கடா, முட்டா கூவைகளா" என்று எரிச்சலில் கத்தி விட்டு வந்து வண்டியை எடுத்தான்..  

"என்னாச்சி வீர்... "என்று பின்னால் சத்தம் கேட்டு திரும்பிட அவன் முதலாளி..

 ஒன்னும் இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான்..

மகப்பேறு மருத்துவர் மைதிலி ராஜசேகர் சென்னையின் மிகப்பெரிய மருத்துவர், சகுந்தலாதேவி தோழியும் கூட, அவர் வீட்டில் தான் டிரைவராக விருமன் வேலை செய்கிறான் ..வேலைக்கு சேர்ந்து இதோ நான்கு மாதங்கள் கடந்து விட்டது .. வேலையில் மட்டும் கவனமாக இருப்பான்,  அதை தாண்டி ஒரு வரி பதில் கூட விருமனிடம் வாங்க முடியாது.... 

"ஓகே வீர் , நீ போய் டீ சாப்பிடுட்டு வா, லேபர் வார்ட் ட்யூட்டி பார்த்துட்டு வர்றேன்" என்று மிடுக்காக நடந்து போகும் ஐம்பது வயது மைதிலி... குணமானவர்... ஒரு நாள் கூட டிரைவர் என்று நடத்தியது கிடையாது ... முதல் நாள் வந்த அன்றே.. 

"என் சகுந்தலா பையன் நீ ,டிரைவர் வேலை பார்த்தா நல்லாவாப்பா இருக்கும்"

"நான் படிச்ச நாலாப்புக்கு என்ன வேலை கொடுக்க போறீங்க மேடம்" என்று கேட்டவனை தோளில் தட்டி சிரித்தவர்..

"ஆக டிரைவர்னு செட் ஆகி வந்துட்ட..

"அதை தவிர ஒன்னும் தெரியாதுன்னு வந்துட்டேன்.."

"ஹாஹா சரி வீர் , இந்தா உன் கார் சாவி" என கொடுக்க,  அந்த தன்மை பிடித்து வாங்கி கொண்டான்..  இன்று வரை தன்மை மாறாது பழகும் மைதிலிக்கு ஒரு மரியாதை மனதில் உண்டு ..  

"இரண்டு கேஸ் இருக்கு வீர் முடிச்சிட்டு சொல்றேன் என்று நடந்து கொண்டே கூற 

"சரி மேடம்" என்று சட்டையில் முகத்தை துடைத்து கொண்டு கேன்டீன் நோக்கி போனான்..  டீ காப்பி என்று கிடைத்தது உண்டு ,குடித்து வாழும் விருமனை பார்த்தால்,  இது நம்ம விருமனா என்றுதான் தோன்றும் ..

காதல் அவன் சிரிப்பை , பசியை, நிம்மதியை அழித்து போட்டு ஆமைக்கு ஓடு போல , தனக்கு ஒரு ஓட்டை பொருத்தி கொண்டு இயந்திரமாக வாழ பழகி கொண்டிருக்கிறான்..

கேண்டீனில் வந்து அமர்ந்து காப்பியை உறிஞ்சி கொண்டிருக்க..  போன் மணி அடித்தது.. சிறு புன்னகை முகத்தில் தோன்ற எடுத்து காதில் வைத்தான்..

"மதனிஇஇஇஇஇ..

"தம்பி எங்கன இருக்கிய? வேலைக்கு போயாச்சா??" ஐந்து மாத மேலிட்ட வயிற்றை பிடித்து கொண்டு குழலி  சமயலறை போக , வாத்து கோழிகளும் அவள் பின்னால் பரேட் எடுக்க ... அதன் பின்னால் மருது பாண்டியனும் கூட்டணியில் ஒன்றாக போனான்...

"அங்க போய் இருங்க மாமா நீச்ச தண்ணீ எடுத்துட்டு வர்றேன் "

"நீ அங்க கொண்டு வர முன்ன ஆறி போவும் "என்று சட்டமாக அடுப்பு திணடில் ஏறி அமர்ந்து கொண்டான் 

"நீச்ச தண்ணீ ஆறுமா??"...கேள்வியாக மனைவி கேட்ட

"இப்ப எல்லாம் உனக்கு அதிக சந்தேகம் வருதுடி இது நல்லதுக்கு இல்ல சொல்லி புட்டேன், அவனுக்கு என்னவாம் காலையில என்ற பொஞ்சாதி கூட பேசிட்டு இருக்கான் ... லேய் போனை வை" ..

"அட மாமா , பாவம் தம்பியே தூர தேசத்துல கிடக்காவ "

"மெட்ராஸ் இங்கதான்டி இருக்கு.."

"ப்ச் நம்மள விட்டு தூரமாதான இருக்காவ மாமா, அதேன் இதுல பேசுதேன்... "என்பதறக்குள் வியர்த்து போனது..

பின்ன!! இரட்டை பிள்ளை சுமப்பது எளிதா? ஏற்கனவே புல்லட் பாடி இதில் இரட்டை கரு ..மருது அவள் சுமையை பாதி நாள் வாங்கி கொள்வான்..

இரு படு தூங்கு என்று அவளுக்கு வலி தெரிய விட்டது இல்லை .. 

"இந்தா அண்ணன் நான் மதனி கூட பேசிட்டுதான் வைப்பேன் உனக்கு காந்தள் தாங்க முடிலைன்னா தூர போ "என்று இவன் இங்கிருந்து குரல் கொடுக்க..

"ஊர் விட்டு போன நாயிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன்டா.. "என்று மருது மீசையை திருக..

"அட அட!! இருங்க சண்டை போடாதீய ஒரு நாலு வார்த்தை பேசிட்டு வர்றேன் மாமா ,பொறவு மூச்சு திணறும் ""என்று மனைவி முகம் சுணங்க..

"சொல்லி வை  அந்த நாய்கிட்ட நாலு மாசமா இந்த ஊர் வேண்டாம் அண்ணன் வேண்டாம்னு போனான்ல,  இனிமே அவன் கூட நான் பேசுறதாவே இல்ல "என்று வேட்டியை ஏத்தி கட்டி கொண்டு போனவன் மறுபடி வந்து ..

"மறந்துட்டேன்" என்று குழலி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு முந்தானை விலக்கி வயிற்றில் இரண்டு முத்தம் கொடுத்தவன்..

"இந்தாருடி டவுனுக்கு போறேன் ஏதாவது வேணுமா?

"உங்களுக்கு ஜவ்வாது , பவுடர் முடிஞ்சு போச்சுதுது மாமா அதை வாங்கியாங்க.."

"உனக்கு என்னடி வேணும்??..

"எனக்கா ??"என யோசித்தாள்..  அவன் தேவை எதுவென தெரியும் , அவள் தேவை மறந்தே போனது இருந்தால்தானே நியாபகம் வைக்க 

"நேத்து ஸ்டிக்கர் பொட்டு காலியாகி போச்சுல்ல , வேற என்ன வேணும் ??"என மனைவி அலமாரி தேடி  இது அது என்று குறிப்பெடுத்து கொள்ள குழலி ஆசை ததும்பி மருதுவை பார்த்தாள்.. 

"மதனிஇஇஇஇ

"ஹாங் சொல்லுங்க தம்பி "போகும் புருஷனை வாசல் வரை வழி அனுப்பி வைத்து விட்டு..சாய்வாக அமர்ந்தாள்..

"உடம்பு எப்படி இருக்கு, வெள்ளனே போன் போட்டிருக்கிய.. "விருமன் காப்பியை குடித்து கொண்டே வெளியே பெய்த மழையை பார்த்தான்..  ரசிக்கும் எண்ணம் எல்லாம் மறந்து போயிருந்தது ... 

"தம்பி ஒரு பத்து ரூபாய் தாயேன் என ஒருவன் வந்து அவனிடம் கைநீட்ட ..

"வேற வேலை இல்ல போ" என்று உள்ளே வந்து விட்டான்..

"ஏற்கனவே இளிச்சவாயன் பட்டம் வாங்குனது போதாதா??  எல்லாரும் போல நானும்..  நான் உண்டு என் வேலை உண்டுன்னு எதையும் கண்டுக்காம போயிருந்தேன்னா,  எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா,  என் மதனியையும் அண்ணனையும் விட்டுட்டு இப்படி தனியா வந்து,  யாருமே இல்லாம இருப்பேனா..  எல்லாருக்கும் பார்க்கப் போய்தான் என் வாழ்க்கை இப்படி போயிடுச்சு..  இனிமே யாருக்கும் கருணையே  பார்க்க மாட்டேன்.. யாருக்கும் இளகிப் போகவும் மாட்டேன்..  பட்டது எல்லாம் போதும் எவனுக்கும் கொடுத்து நல்ல பேரும் வாங்க வேண்டாம்,  யாரும் நம்ம பக்கத்துல பல்ல இளிச்சிட்டு வரத் தேவையில்லை" என்று கஷ்டப்பட்டு கொடூர எண்ணங்களை தனக்குள் வளர்த்துக் தன்னை  கடினமாகிக் கொண்டிருந்தான்...

"தம்பி 

"ஹாங் சொல்லுங்க மதனி..

"நான் ஒரு விஷயம் சொன்னா கோவிச்சிக்க கூடாது. 

"வைக்கவா மதனி "எதை பற்றி பேசுவாள் தெரியுமே துண்டு கத்திரித்தான்..

"தம்பி ஒரு நிமிஷம்,  மின்னல் அப்பா இறந்து போயிட்டார்... ஒரு வாரம் ஆகுது.."

"மதனி சரியா கேட்கல பொறவு பேசுறேன் அலோ அலோ" என்று வைத்தே விட்டான்..

"ம்ம் மத்தது எல்லாம் கேட்குது ,மின்னல் பத்தி பேசினா மட்டும் கேட்க மாட்டைக்குது எப்படித்தான் இரண்டு பேரையும் சேர்த்து வைக்கவோ தெரியல மாமா வேற உதவி செய்ய மாட்டேன்னு சொல்லிட்டார்...

"சொன்னா புரிஞ்சுக்க தெரியணும் புரியாம ஊர விட்டு போறவன்கிட்ட,  உட்கார்ந்து சின்ன பிள்ளைக்கு சங்குல வச்சு ஊத்துற மாதிரி ஒவ்வொன்னையா சொல்லிக் கொடுக்க முடியாது..  நீ இத்தனை நாள் சொல்றியே, ஒரு நாளாவது காது கொடுத்து எதையாவது கேட்கிறானா..  எதுக்கு அவன் கிட்ட போயி பேசிட்டு இருக்க "என்று மனைவியைத்தான் மருது கடிந்தான்..

"என்ன செய்ய மாமா, உங்க கூட பிரிஞ்சி இருக்கும் போச்சுல தம்பிதான் எனக்கு பக்க துணையா இருந்தாப்ல..  அவருக்கு ஒரு கஷ்டம்னு வரும்போது நான் கண்டும் காணாம இருந்தா நல்லாவா இருக்கும்.."

" கண்டும் காணாமதான் இருக்கோணும்,  அடுத்தவன் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க நீயும் நானும் யாரு? அவன் உனக்கு உதவி செய்யலனாலும் உன்னை பிரிஞ்சி என்னால இருக்க முடியாது , என்னையும் பிரிஞ்சு உன்னால இருக்க முடியாது..  நாம ரெண்டு பேரும் எப்படினாலும் சேர்ந்துதான் இருந்திருப்போம் காதல் எல்லாம் தானா வரணும்டி,  நீ இப்படி எள்ளுக்கு பதில் கருப்பட்டி கடலைக்குப் பதில் நெல்லுன்னு ஒவ்வொன்னையா கொடுத்தா அவனுக்கு என்னது விளங்க போகுது .. மாடு மாதிரி வளர்ந்து இருக்கான்ல , புத்தியை எந்த பேங்க்ல கொண்டு அடகு வச்சான்..  இத்தனை பேர் சொல்றாங்கன்னு, இல்ல .. அவன் நினைச்சதுதான் செய்யணும்ங்கிற மாதிரி போய் அங்க உக்காந்துக்கிட்டான்..  இவனுக்கு நீ சப்போர்ட் கழுத பண்ணிக்கிட்டு இருக்க" என்றதும் குழலி உதட்டைப் பிதுக்கி அமைதியாக அமர்ந்து கொண்டாள்..அதன்பிறகு  மருது தலையிடவே இல்லை.. இவள் தான் எதையாவது சொல்லி இருவரையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று குடைந்து கொண்டு வருகிறாள்

விருமன் போன அன்றே மின்னல் அவன் பின்னால் போவதற்கு தயாராக..அவள் தகப்பன் தள்ளாடி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனை வாசம் ..இதோ ஒரு வாரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறக்கவும் செய்துவிட்டார்..  மருதுவும் குழலையும் தான் கூடவே இருந்து பார்த்துக் கொண்டனர்..  தங்கள் வீட்டிற்கு அவளை அழைக்க ..

"யாருக்கும் தொல்லையாக இருக்க விரும்பல அக்கா இங்கனையே இருக்கேன்" என்று அந்த குடிசையிலேயே இருந்து கொண்டாள்..  மருதுக்கு வேண்டிய பெண் என்று தெரிந்த பிறகு யாராவது அவளிடம் வாலாட்ட முடியுமா என்ன..  நாலடுக்கு பாதுகாப்பு அன்றோ இருக்கும் .. இதோ ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் .. 

மருது திடீரென்று மின்னல் வீடு நோக்கி குழலியை அழைத்துக் கொண்டு சென்றான்..

"மின்னல் உன்ற துணி எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு மெட்ராஸ் கிளம்பு "என்று போனதும் மின்னலை அவசரப்படுத்த ..

"அப்பா இறந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல ஊரை விட்டு போக கூடாதுன்னு சொன்னாவ..

"அப்படி எவன் சொன்னானோ ,அவனை போய் உன் அப்பன் கல்லறை பக்கத்துல படுக்க சொல்லு..  உன் அப்பனே போன பிறகு இங்க உட்கார்ந்து உனக்கு என்ன வேலை..  இப்போ நீ போகலன்னு வச்சுக்கோ, இனி காலத்துக்கும் ஏன் போகாம இருந்தோம்னு கவலைப்படுகிற அளவுக்கு ஆகிப்போகும் .. சீக்கிரம் துணி எல்லாம் எடு" என்று வேக வேகமாக அவளை கிளப்பி சென்னை பஸ்ஸில் ஏற்றி விட்டான்..

 ஏனென்று தெரியாது ஆனால் இந்த அவசரம் ஏதோ பயத்தை மட்டும் அவளுக்கு கொடுத்தது..

" ஏன் மாமா பொட்ட புள்ளைய இப்படி தனியா அனுப்புறோமே நீங்க வேற அந்த ஊர்ல பாதுகாப்புக்கு ஆள் இல்லைன்னா கஷ்டம்னு சொல்லி இருக்கீங்க .. தம்பி வேற முகத்தை இன்னும் தூக்கி வச்சுக்கிட்டே இருக்கார். யாரை நம்பி இந்த புள்ளைய அனுப்புறீங்க.."

"சில இடத்துல எதிர்நீச்சல் போட்டுதேன் ஆகணும் நீச்சல் போடலன்னு வச்சுக்கோ, நடுக்கடல்ல மூழ்கி செத்துப் போவோம்...  அவ எதிர்நீச்சல் போடணும்ங்கிறது அவ விதி போல..  போட்டுத்தான் ஆகணும் .

"இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா அனுப்பிவிடுறீங்க மாமா.."

" ஏன் காரணம் சொன்னா அந்த விஷயத்தை நீ முடிச்சு வச்சுடுவியா...உடனே மனைவி முகத்தை சுருக்கவும் ..

அவளை தோளோடு சாய்த்துக் கொண்டவன் "மாமா எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு நினைக்கிறியா, இல்லையா??"

" என் மாமா எப்பவுமே சரியாத்தான் செய்வாருன்னு எனக்கு தெரியும்"

"அப்போ விடு சரியா இருக்கும்" என்றவன் பெருமூச்சு விட்டான்..

"அண்ணே மைதிலி டாக்டர் வீடு இதுவா??" என்று கேட்டில் நின்ற வாட்ச்மேனிடம் கையை பிசைந்து கொண்டே மின்னல் விலாசத்தை காட்ட ..

"ஆமாம் டாக்டர் வீடு இதுதான், நீங்க யாரு? உள்ள விசேஷம் நடக்குதே என்றதும் வீட்டை அண்ணாந்து பார்த்தாள்.. இரண்டு மாடி கட்டிடம் ஏதோ திருமணம் போல வீடெல்லாம் வண்ண வண்ண விளக்குகள் தோரணங்கள் என்று ஜெகஜோதியாக இருந்தது..

"மருது அண்ணன் அனுப்பி விட்டார்னு மைதிலி மேடம் கிட்ட சொன்னா தெரியும் என்றதும்

"ஓ நீதானாம்மா,  மேடம் காலையிலேயே போன் போட்டு சொல்லிட்டாங்க..  உடனே உள்ள அனுப்ப சொல்லி.. சாரிம்மா நிக்க வச்சு கேள்வி கேட்டேன்னு மேடம் கிட்ட சொல்லிடாதீங்க.."

" ஐயோ!! பரவாயில்லை அண்ணா, போகவா??" என்றதும் கேட்டை திறந்து விட..

 இங்கே தானே தன் இனியவன்  வேலை செய்கிறான் என்ற ஆசையில் ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே வாசல் அருகே போனாள்..

" நல்ல நேரம் முடிய போகுது மோதிரம் மாத்துப்பா" என்றதும் ..

"ம்ம்" என்று சிறு சத்தம் வர..

விருமன் ம்ம் சத்தம் கூட அவளுக்கு அத்துபடியே காதலன் சத்தம் கேட்டு,  வாசலில் நின்ற மின்னல் சிரித்துக் கொண்டே உள்ளே பார்க்க...உடைந்து போனது ஏற்கனவே உடைந்து கிடந்த இதயம்..

அவள் ஆருயிர் காதலன் விருமன் என்ற வீர் விரலில்  மைதிலியின் மகள் சுவாதி மோதிரத்தை மாற்றி கொண்டிருந்தாள்.. அங்கே இருவர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது..

 ஸ்வாதியும் சிரித்த முகமாக அவன் புறம் கரத்தை நீட்ட விருமன்  மோதிரத்தை போட்டு விடாது , ஏதோ யோசனையில் வாசலை பார்க்க,  அங்கே அதிர்வுகள் தாங்க முடியாமல் வாசல் நிலைக்காலை பிடித்து தடுமாறியபடி நின்ற  மின்னலைப் பார்த்ததும் இளக்காரமாக சிரித்தவன்... தடுமாற்றம் போய் சுவாதி கரத்தை பிடித்து மோதிரத்தை மின்னலை பார்த்து கொண்டே போட்டு விட.. 

சுவாதி அவன் உள்ளங்கையில் முத்தமிட..  அதேபோல் விருமனும் ஸ்வேதாவின் கரத்தில், பட்டும் படாமல் ஒரு முத்தமிட்டான்..

வீர் கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்? என்று மைதிலி கேட்க ..

எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வெச்சிடுங்க என்றவன் பார்வை மின்னலை வெட்டி கிழித்தது..

அவள் பேசிய வார்த்தைகளை மட்டும் மனக்கிடங்கில் போட்டு வைத்தவன் காதலை மறந்தானோ?

அவள் தையலிட்ட இதயத்தில் இன்னும் தையலிட வருவான்....