மெய் பேசும் மித்தியமே-18

மெய் பேசும் மித்தியமே-18

மெய் பேசும் மித்தியமே-18

சூர்யா ரோஜாவின் இதழில் முத்தக்கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.அவளும் அவனிடம் மயங்கினாலும் இது தப்பு என்று உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருக்கவும் அவனிடமிருந்து வேகமாக விலகினாள்.

அவளுக்கே தன்னை நினைத்து வெட்கமாக இருந்தது.அவன் முத்தம் கொடுத்தால் உனக்கு எங்கடி போச்சுது அறிவு?என்று தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

“ஏன்டி தலையில அடிச்சிக்கிற?”

“உன்னைய அடிக்க முடியல அதுதான்.என்னைய அடிச்சிக்கிறேன்யா”

உனக்கு என்னைய அடிக்கணும் அவ்வளவுதான.என் பொண்டாட்டிக்கு என்னை அடிக்க உரிமையில்லையா என்ன?என்றவன் அவளது கையைப் பிடித்து இழுத்து “இந்தா அடி” என அவளது கையை வைத்துத் தனது கன்னத்தில் அடித்தான்.

அவளோ வெடுக்கென்று கையை உருவியவள்”என் நிலமையை வைச்சு இப்படியெல்லாம் செய்தா இவ வந்திருவான்னு நினைச்சித்தானே இப்படியெல்லாம் செய்யுற?நான் உன் பொண்டாட்டியா யோவ்?என்னைப் பார்த்தா உனக்கு அவ்வளவு கேவலமாக இருக்கா?”என்று கேட்டவளுக்கு வேதனையின் உச்சத்தில் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.

அவள் தனது கண்களை மூடிக்கொண்டவள் அப்படியே மடங்கி மண்டியிட்டு உட்கார்ந்து அழுதாள்.அவனும் அவளோடு மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது கைகளை இழுத்து எடுத்து தனது நெஞ்சில் வைத்தான்.

“விடுங்க”என்று தனது கையை உருவினாள்.

“ப்ச்ச் உனக்கு என்னைய ரொம்ப பிடிக்கும்னு தெரியும்.அது உன் கண்ணுல நான் பார்த்தேன்.ஊருக்குப் போய் பூஜாவையும் அம்மாவையும் கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் நீ உன் பிடித்ததை மறைக்க ஆரம்பிச்ச.இப்பவும் உனக்கு என்னைய பிடிக்கும்னு எனக்குத் தெரியும்”

“உங்களை எதுக்கு எனக்குப் பிடிக்கணும்?ஒரு கல்யாணம் முடிஞ்சு பிள்ளை இருக்கவனைப் பார்த்து யாரும் ஆசைப்படமாட்டாங்க!நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவ கிடையாது”

“இதையே என் முகத்தைப் பார்த்தும் என் கண்ணைப் பார்த்தும் நேரா சொல்லு”

“ஏன் சொல்லமுடியாது.அதெல்லாம் சொல்லுவனே” என்று நிமிர்ந்து அவனது கண்களைத்தான் பார்த்தாள். 

அவளால் ஒரு நொடிக்கூட. அவனது பார்வையைத் தாங்கிக்க முடியாது திணறி இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.

“என மேல நம்பிக்கை வை.எனக்கு அதுபோதும்.என் வாழ்க்கையை உன்கூடத்தான் பகிர்ந்துக்கணும்னு விரும்புறேன்”

“இன்னொருத்தியோட வாழ்க்கையை நான் பகிர்ந்து வாழ என்னால முடியாது”

“அப்போ என்னை பிடிச்சிருக்கு.ஆனால் இந்த பகிர்ந்திக்கிற வாழ்க்கைதான் பிடிக்கலை.அப்படித்தானே”

“அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை”

“அப்போ வேற என்ன மண்ணாங்கட்டி இருக்கு”

அதைக்கேட்டதும் “என்ன நக்கலா?”என்று அதற்கும் கோபப்பட்டாள்.

“இல்ல காதலு”

“ப்ச்ச் இதை சொல்ல வெட்கமா இல்லையா?

“இல்லையே”

“நீயெல்லாம் என்ன ரகம் டாக்டரே”

“நாட்டு ரகம்தான்”

இவன்கிட்ட பேசவே முடியாது என்று உடனே எழுந்து கீழ வருவதற்கு நடந்தாள்.அவள் முன்புபோய் வழியை மறைத்து நின்றவன்”எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு.நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.எனக்கான வாழ்க்கையே நீதான்.உன் சம்மதத்தைச் சொல்லு.நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்”

“ஆமா இவரு முருகருக்குச் சொந்தாக்காரரு.வள்ளி தெய்வானையை மாதிரி இந்தப்பக்கம் அத்தப்பக்கம்னு பொண்டாட்டியை நிக்கவைக்கப்பார்க்கிறாரு.உன் பொண்டாட்டியை இங்க வரச்சொல்லி வாழச்சொல்லு”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.நீ என்னைக் கட்டிக்க சம்மதம் சொல்லு”

“யோவ் லூசாயா நீ?”

“அப்படித்தான்னு நினைக்கிறேன்”

“உன்மேல வர்றக் கோபத்துக்கு தலையில் கல்லைத் தூக்கிப்போட்டிருவேன்.என் நிலையைத் தெரிஞ்சிக்கிட்டும் விளையாடுதப் பாரு”

“இது விளையாட்டில்லை.உண்மையாகவே கேட்கிறேன்.உனக்கு என்கூட வாழ விருப்பமா?”

“அடுத்தவ புருஷன்கூட எல்லாம் நான் வாழ விருப்பப்படல”

“உன்னோட புருஷனாகதான் வாழ வர்றேன்டி”

“எப்படிச் சொன்னாலும் முடியாதுதான்”

“உன் கழுத்துல நான் தாலிக்கட்டி என் பொண்டாட்டியாக்கிடுவேன்”அதைக்கேட்டு நிதானமாக அவனைப் பார்த்தாள்.

“அப்படியா?”

“ஆமா”

“அதையும் பார்ப்போமே”

அவளருகில் நெருங்கி வந்தவன் முகத்தோடு முகம் உரசியவாறே”இந்தக் கழுத்துல நான் தாலிக்கட்டி அதேகழுத்துல வளைவில முத்தம் வைச்சு நான் உன்கூட இணைந்து வாழ்வேன்.இது சத்தியம்.இது மாறாது”

“இவன் ஏன் இப்படி பேசுறான்?” என்று முதன்முறையாக பயந்தாள்.

“வேண்டாம் டாக்டரு.எனக்கு பயமாக இருக்கு!நீ தப்பாட்டாம் ஆடப்பாக்குற”

“சரியாகத் தடம்பிடிச்சு போயிட்டிருக்கேன்டி என் பட்டுரோசா”என்றவன் அவளது இதழில் முத்தம் வைத்து சட்டென்று மீண்டான்.

அதில் அரண்டவள் இவன் சரிப்படமாட்டான் என்று நினைத்தவள் “போயா” என்று அவனைத் தள்ளிவிட்டு விலகி நடந்தாள்.அவளது கையைப்பிடித்து இழுத்தவன் இறுக்கமாக அணைத்துவிடுவித்தான்.

அவளுக்கும் இப்போது “என்ன நடக்கிறது? என்று புரியாத நிலையில் நின்றிந்தாள்.

“சீக்கிரம் போ உங்கண்ணனுங்கு வந்துட்டா பிரச்சனை”

“அதுசரி அந்த பயமெல்லாம் இருக்கா என்ன?”

“அதெல்லாம் பயமில்லை.

நீ மாட்டிக்கிடுவியேன்னுதான்.போ போ”

“என் வீடு என் மெத்தையா.நீ எதுக்குப் போகச்சொல்லுற”

“அப்போ இரு எனக்கு இன்னைக்கு இருக்கிற மூடுக்கு உன்னை கடிச்சே திங்குறேன்”

“அட ச்சை”என்று தலையில்அடித்துக்கொண்டாள்.இதுக்குமேல இங்க நின்னா சரியாகாதுன்னு ஓடி கிழே வந்துவிட்டாள்.

சூர்யாதான் தூக்கம் வராது நிறைய யோசித்து யோசித்து நடந்தவன் முடிவாக ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அடுத்தநாள் சூர்யா ஹாஸ்பிட்டல் போனதும் முருகேசனிடம் பேசினான்.

“நான் ரோஜாவை விரும்புறேன்?அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்.அதனால்தான் அப்படி பேசினேன்.நீ எதுவும் தப்பா நினைச்சிக்காத?”

“அப்போ பூஜாவோட அம்மா பரீன்ல இல்ல.நீங்க அவங்களை பிரிஞ்சு இருக்கீங்க அப்படித்தானே”

அவன் கேட்டக் கேள்விக்கு ஆமா இல்லை என்று எந்த பதிலும் சொல்லாது அமைதியாக அவனைப் பார்த்தான்.

முருகேசனோ”உங்கக்கிட்ட எந்த விளக்கமும் நான் கேட்கலை.ஆனா ஒன்னு ரோஜா பாவம்.ஏற்கனவே பலவேதனையோடு இருக்கிறவ.அவளை நிச்சயமா நீங்க வேதனைப்படுத்தமாட்டீங்கன்னு நம்புறேன்.உங்களுக்கு இரண்டாந்தாரமா வர்றளவுக்கு அவ எதுலயும் குறைஞ்சிப்போகல.இந்த ஊரு வாயில் அசிங்கமா விழாதவாறு உங்கக் கல்யாணத்தை நடத்திக்கங்க.ஆனா இன்னோருத்தியோட வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு அவ வாழ்வான்னு நினைக்காதிங்க ரோஜா அப்படிப்பட்ட பொண்ணு இல்லை.உயிரையே விட்றும்.எது செய்தாலும் யோசிச்சு செய்ங்க”

“நீயே இவ்வளவு யோசிக்கும்போது நான் யோசிக்கமாட்டேனா முருகேசா?”

“சில நேரங்கள்ல புத்தி தடுமாறிட்டா நம்ம செய்கிறதே நமக்குத் தெரியாது போயிரும் டாக்டர்.அதுதான் யோசிங்கன்னு சொன்னேன்”

“அதுவும் உண்மைதான்.இதை நான் பார்த்துக்கிறேன்”என்று அத்தோடு முடித்துவிட்டான்.

காலையில் ரோஜாவோடு பூஜா இருப்பதைப் பார்த்த கருணாகரன் வேற உர்றென்று உட்கார்ந்திருந்தான்.

ரோஜோவோடு ஒட்டிக்கொண்டே எல்லா இடத்துக்கும் பூஜா போனாள்.அதுவே அவனுக்கு கடுப்பாக்கியது.

“இந்த பிள்ளையை எதுக்கு நீ கூடவே கூட்டிட்டு போற.ஏதோ உன் பிள்ளை மாதிரி.அவன் பிள்ளையை அவன் பார்க்கட்டும்.அவங்க பாட்டிக்கிட்ட கொண்டுவிடு”என்று ரோஜாவை திட்டினான்.

அவன் ரோஜாவை திட்ட ஆரம்பித்ததும் பூஜா அழ ஆரம்பித்து விட்ட்டாள் ரோஜாவின் தோளில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழுதாள்.

“ப்ச்ச் என்ன இந்தப் பிள்ளை இப்படி அழுது? என்று அதற்கும் சத்தம்போட்டான்.

காய்ச்சலில் தூங்கிக்கொண்டிருந்த மல்லிகா தான் எழுந்து வந்து “அதுவே தாய் இல்லாமல் இருக்கு.அதைப்போய் சத்தம்போடுறீயே.சின்னப்புள்ளைக்கு என்ன தெரியும்?”

“யம்மாஆஆ பாக்குறவங்க நம்ம ரோஜாவோட பொண்ணுன்னு நினைக்கப்போறாங்கம்மா.சும்மாவே இங்க பிரச்சைனை பிச்சிக்கிட்டு வருது.இதுல இது வேறையா.பட்டுமா இது சரியில்லை” என்று அவளிடம் நேரடியாகவே சொல்லிட்டான்.

அதைக்கேட்டதும் “இதுக்கே இப்படின்னா நான் டாக்டருக்கூட பேசுறது தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான் கொன்னுபோட்றுவாங்களே!” என்று பயந்து உள்ளுக்குள்ளயே நடுங்கினாள்.

அதைப்பார்த்த கருணாகரன்”எதுக்கு இப்போ பயப்படுற.அந்தப்பொண்ணைத்தானே சத்தம்போட்டேன்.நீ எதுக்குக் கண்கலங்குற.போய் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பு.அப்பா உன்னைத்தான் தேடுவாங்க. இன்னும் ரெண்டு மூணு நல்ல அப்பாவா டிஸ்சர்ஜ் பண்ணிடுவாங்க. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்.அதுவரைக்கும் கொஞ்சம் அலைச்சல்தான்”

“ம்ம்ம் சரி”என்று தலையாட்டியவள் அறைக்குள் போய்விட்டாள்.

இப்போது மல்லிகாவிடம் கருணாகரன் பேசினான்.

“ இந்த டாக்டரையும் டாக்டர் குடும்பத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைங்க சரியா. ரொம்ப உள்ளுக்குள்ள சேர்க்க கூடாது. ஏன்னா அந்த டாக்டரை பார்த்தா எனக்கு பிடிக்கல அவன் மூஞ்சியும் பார்வையும் சரியில்ல”

“உனக்குதான் யாரைப் பார்த்தாலும் சந்தேகம் வருமே. அவங்க எல்லாம் நல்ல மனுஷங்க. டாக்டர் அப்படியான ஆள் கிடையாது. நம்ம அப்பாவ காப்பாத்துனது அவர்தான். சும்மா கண்டதையும் உளறாத கருணா”

“யம்மா என்னம்மா பேசற நீ? நான் ஒன்னும் கண்டதையும் உளறல. எனக்கும் டாக்டருக்கு என்ன முன் ஜென்ம பகையா என்ன?அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு தோணுச்சு சொல்லி இருக்கேன் அவ்வளவுதான் பார்த்து சூதானமா நடந்துக்கங்க”

“ம்ம்ம்”

“நீயும் கிளம்புமா அப்பாவ பார்க்க போகலாம். உனக்கு காய்ச்சல் வந்ததுக்கே மனசு சரியில்ல. சீக்கிரம் கிளம்புங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு அவன் தனது அறைக்குள் போய் விட்டான்.

ரோஜா கிளம்பி வெளியே வந்தவள் பூஜாவை அவங்க வீட்ல கொண்டு விடுவதற்காக நீலாவிட் சொன்னாள்.

ஆனால் பூஜாவோ ரோஜாவிடமிருந்து இம்மி அளவுக்கூட நகராது உட்கார்ந்துக்கொண்டாள்.

“அப்பனை மாதிரியே இதுவும் நம்மக்கிட்டதான் இருக்கணும்னு அடம்பிடிக்குது” என்று நினைத்தவள் அவளைத் தூக்கிக்கொண்டு மேல போனாள்.

லலிதா அவளைப் பார்த்ததும் “பூஜா நீ எப்போ கீழே போன?”என்று தெரியாத மாதிரியே அவளிடம் கேட்டார்.

அவளோ கீழே இறங்கியவள் ரோஜாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சூர்யாவின் அறைக்குள் போனாள்.

அங்கிருந்த பீரோவில் இருந்து ட்ரஸ் எடுத்து அவளுக்குப் போட்டுவிடச் சொன்னாள்.

“வேண்டாம் பூஜா எனக்கு நேரம் ஆகுது. தாத்தாவை பார்க்க போகணும்.நான்போறேன் நீ பாட்டிகிட்ட பத்திரமா இருந்துக்கோ” ன்று அவளது கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தவாறே சொல்லி வெளியே வரவும் அவளது புடவை பிடித்து இழுத்துக் கொண்டு தூக்கு என்று கையை காட்டி ஒரே அழுகை.

அவளுக்கு அந்த அறையில் நிற்பது ஒரு மாதிரி கை கால்க்ஷஎல்லாம் நடுக்கம் கொடுத்த.து நேத்துதான் சூர்யாவிடம் அவ்வளவு நெருக்கமாக நிற்கும் பொழுது அவளது நாசி உணர்ந்த அவனது வாசனையை இங்கேயும் உணர்ந்தாள்.

அதலிருந்து தப்பிக்கத்தான் அவள் போகிறாள்.ஆனால் பூஜா விடவில்லை.அவளுக்கு வேகவேகமா ஒரு ட்ரஸ்ஸை எடுத்து போட்டுவிட்டவள் வேறு வழியின்றி தன்னோடு கூட்டிக்கொண்டு கீழே இறங்கினாள்.

லலிதா அவளோடு பேசாது இருந்தது அவளுக்கு ஒருநெருடலாக இருந்தது.அதைக் காண்பித்துக்கொள்ளாது”நான் பூஜாவை என்கூட கூட்டிட்டுப் போறேன்.டாக்டருக்கிட்ட சொல்லிடுங்க”என்று சொல்லிவிட்டு இறங்கி வந்துவிட்டாள்.

ரோஜா பிள்ளை நல்லபடியாகாப் பார்த்துப்பாள் என்று லலிதாவுக்கு தெரியும். அவருக்குதான் ரோஜாவை பிடிக்காது. மகனுக்கும் பேத்திக்கும் ரோஜாவை மட்டும்தானே பிடிக்கிறது.

இப்போது ரோஜா பூஜாவையும் கூட்டிட்டுத்தான் ஹாஸ்பிட்டல் போனாள்.அவளது அண்ணனுங்க இரண்டுபேருக்கு மட்டும்தான் பூஜா வந்தது பிடிக்கவில்லை.

சூர்யபிரகஷும் மத்தியானம் டூட்டி முடிந்து நேராக தென்காசிக்குப்போய் கருப்பசாமியை பார்த்தான். 

அங்கே தனது மகள் இருப்பதை பார்த்ததும் அவனுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது மகளை பார்க்கிறதுக்கு ரோஜா இருக்கிறாள் என்று தைரியம் வந்தது.

கருப்பசாமி ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்து வீடு வருகின்ற வரைக்கும் பூஜா ரோஜாவோடுதான் இருந்தாள். அது பழகிவிட்டது அதற்குப் பிறகு யாரும் எதுவும் சொல்லவில்லை.

கருப்பசாமி வீடு வந்த பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் ரோஜாவும் பூஜாவும் சேர்ந்தேதான் பள்ளிக்கு சென்றார்கள்.

 பூஜாவை ரோஜாவே பார்த்துக் கொள்கிறாள்.அன்றிரவு அவளை பார்த்து பேசியதற்கு பின்பு சூர்யா அவளை தனியாக பார்த்து பேச முயற்சிக்கவேயில்லை.

அவன் யாரிடம் பேச வேண்டுமோ அவரிடம் சரியாக பேசி எல்லா திட்டமும் போட்டு முடித்திருந்தான்.

கருப்பசாமி உயிர்பிழைத்து வந்ததும் முதலில் ஊர் மக்களின் முக்கியமானவர்களை கூப்பிட்டு வைத்துப் பேசினார். ஊர் திருவிழாவை நடத்தவேண்டும் என்கின்ற முடிவை எடுத்திருந்தார்.

தான் ஹாஸ்பிட்டலில் இருக்கும் பொழுது ஊர் சாமியிடம் வேண்டிக் கொண்டிருப்பதால் திருவிழாவை தானாகவே முன்வந்து நடத்த முடிவு எடுத்திருந்தார். மொத்த செலவும் கருப்புசாமியே ஏற்றுக்கொள்ளுவதாகச் சொல்லி திருவிழாவும் தொடங்கி இருந்தது.

ஊர்த்திருவிழா என்றால் கொண்டாட்டங்கள் இல்லாமலா இருக்கும்.

அதில் கருப்பசாமி டாக்டர் குடும்பத்தையும் தன் குடும்பத்தோடு சேர்த்துக்கொண்டார்.

வீட்டில் நல்லவிசயம் நடந்து எட்டு வருடங்கள் முடிந்துவிட்டது.இந்த வருஷமாவது மகளுக்குக் கல்யாணம் முடியவேண்டும் என்று சாமியிடம் வேண்டிக்கொண்டார்.

கோவில்திருவிழா என்றதும் புதுபுதுப்புது துணிகள் குடும்பத்தோடு எடுக்கப்போனார்கள்.தினேஷ் இருப்பதால் பூஜாவும் ரோஜாவோடு தொத்திக்கொண்டுப் போக கருப்பசாமி ரோஜாவிடம்”யம்மா பட்டு அந்த பச்சப்புள்ளைக்கும் சேர்த்து எடுத்திருமா?பாரு எல்லாரும் எடுக்கும்போது பாவமா உட்கார்ந்திருக்கா.நல்லபிள்ளை அமைதியாக இருக்கு”என்று வாஞ்சையோடு சொன்னார்.

அவ்வளவுதான் சந்தோசமாக சரிப்பா என்று சொன்ன ரோஜா பூஜாவுக்கு விதவிதமாகத் துணியெடுக்க ஆரம்பித்தாள்.

அதைக்கேட்ட கருணாகரன்தான் அப்பாவாச்சே என்று ஒன்றும் சொல்லாமல் பல்லைக் கடித்தான்.

மல்லிகாவிடம் வந்து” நம்ம ஊரு கோவில் திருவிழாவுக்கும் இந்த டாக்டரும் டாக்டர் குடும்பத்துக்கு என்ன சம்பந்தம்? இந்த ஊர்ல இருக்கறதுனால கோயில் வந்து சாமி கும்பிட்டு போக வேண்டியதுதானே. இந்த பிள்ளைக்கு எதுக்கு நம்ம துணியெடுத்து தரணும். இந்த அப்பாவுக்கும் பட்டுவுக்கும்தான் வரவர அறிவே இல்லாமல் போகுதுன்னா ஏம்மா உனக்கு அறிவில்லாம போயிட்டு?”என்று சிடுசிடுத்தான்.

“என்னல எப்பவும் பாரு சத்தம் போட்டுக்கிட்டே இருக்கணுமா உனக்கு? அந்த டாக்டருக்கும் உனக்கும் என்னதாம்ல பிரச்சனை. அவரே ஹாஸ்பிடல் உண்டு தான் வீடு உண்டுன்னு இருக்காரு. பொண்டாட்டி பாரீன்ல இருக்குதாம். அவர் குடும்ப வாழ்க்கையை பார்த்ததே அவருக்கு நேரம் இல்லை. இதில நீ எதுக்கு அவரைக கரிச்சிக் கொட்டிக்கிட்டிருக்க?”

“இங்க பாரு அந்த புள்ளையை அடிக்கடி நம்ம வீட்டுக்கு வர விடாத.அவங்க பாட்டி இருக்காங்கள்ல அவங்க பார்க்கட்டும்.நம்ம பட்டுமா அந்த புள்ளையவே பாத்துகிட்டு இருக்கா. எனக்கு என்னவோ இது சரியாபடல”

“அது பச்சை புள்ள நம்ம வீட்ல என்ன சோத்துக்கு பஞ்சமா? இல்லை பணத்துக்கு பஞ்சமா? இந்த பிள்ளைக்கு ஒரு நாலஞ்சு துணி எடுத்துக் கொடுக்கிறதில என்ன குறைஞ்சு போக போறோம். சும்மா இரு” என்று மல்லிகா அவனைத் திட்ட விட்டு ரோஜா பக்கமாக வந்து உட்கார்ந்துக்கொண்டார்.

பூஜாவுக்கு பெற்றவளே தோற்றும்போகும் அளவிற்கு பார்த்துப் பார்த்து ரோஜா உடையெடுத்து வைத்திருந்தாள்.

குணசேகரனிடம் போய் மெதுவாக காதில் பேசிய கருணாகரன்”அண்ணே எனக்கு இது என்னமோ சரியபடல.பட்டுமா அந்த டாக்டரு புள்ளைக்கு ரொம்ப இடம் குடுக்கா. கவனமா இரு.எனக்கு அந்த டாக்டர் மேல நம்பிக்கையில்லை.இதுக்கு முன்னாடி அவனை எங்கயோ பார்த்திருக்கேன்.ஆனால் எங்கன்னு ஞாபகம் வரமாட்டுக்கு”என்று எச்சரித்தான்.

அவனது எச்சரிப்பை யாருமே கண்டுக்கொள்ளவில்லை.அதற்கான பலனைக் கடைசி திருவிழா அன்று நேரிலயே பார்த்து தெரிந்துக்கொண்டார்கள்.

மூன்று நாள் திருவிழாவாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

சென்னைக்குள் இந்தளவுக்கு மண்மனம் மாறதளவுக்கு திருவிழாக்கள் இருந்ததில்லையே.அதனால் சூர்யாவுக்கு திருவிழா பார்ப்பதில் அதிக சுவாரசியம் வந்தது.

அதுமட்டுமா டாக்டரே காரணம்,புதுசு புதுசா ரோஜாவும் பூஜாவும் மேட்சுக்கு மேட்சா ட்ரஸ்போட்டு சந்தோசமாக திருவிழாவுக்கு போறதைப் பார்க்கிறதுக்குத்தானே நீ போற!அதேதான்…இதுல டாக்டருன்னு கெத்தா போய் நின்னு சைட்டடிக்கிறது!சாமி கும்பிடுறேன்னு போய் பிகரபார்த்திட்டு வர.இருடியேய் சாமி உனக்கு ஆபாபை பின்பக்கமா சொருகப்போறாரு.

இன்றுதான் கடைசி திருவிழா என்பதால் ரோஜா பூஜாவைத் தூக்கி வைத்துக்கொண்டு சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள்.

கருப்பசாமியும் கண்களை மூடி மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார்.அவர் கண்களில் கண்ணீர்.

“இத்தனை சொத்துக்களையும் வசதியையும் தந்தியே கடவுளே ஒத்தை பொம்பளைபுள்ளை வாழ்க்கை இப்படி இருக்கே!அவ வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வழிகாட்டு” என்று மனம் நொந்து வேண்டிக்கொண்டிருந்தார்.

அவர்கள் குடும்பம் மொத்தமும் அந்தப்பக்கம் நின்றிருக்க இந்தப்பக்கம் ரோஜாவும் பூஜாவும் தனியாக நின்றிருந்தனர்.

அப்போது மெதுவாக அவள் பக்கத்தில் நெருக்கமாக வந்து நின்ற சூர்யபிராகஷ் கண்களை மூடி சாமிக்கும்பிட்டான்.

குணசேகரனும் கருணாகரனும் அதைப் பார்த்ததும் “இந்த டாக்டர் வேணும்னே நம்ம தங்கச்சியை இடிச்சிட்டு வந்து நிக்கிறான் பாரு.இவன் போக்கே சரியில்லை” என்று இந்தபக்கம் வருவதற்குள் ஐயர் தீபாரதணைத் தட்டினை கொண்டுந்துவிட்டார்.

அவ்வளவு பெரிய தீபத்தினைப் பார்த்து மக்கள் எல்லோரும் கையெடுத்துக்கும்பிட்டு கடவுளை மனமுருக வேண்டிக்கொண்டிருந்தனர்.

ஆனால் டாக்டர் சூர்யபிரகாஷோ தனது பாக்கெட்டில் இருந்தத் தாலியை எடுத்து பொறுமையாக கண்களை மூடி தனது வாழ்க்கைய நினைத்து, மனம் உருகி, கண்ணீரோடு வேண்டிக்கொண்டிருந்த ரோஜாவின் கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தான்.

பூஜா கண்ணைத் திறந்துப் பார்த்து “டாடீ ரோஜா மிஸ்க்கு செயின் போட்டுட்டாங்க “என்று கைதட்டி சிரித்ததும்தான் ரோஜா வெடுக்கென்று கண்களைத் திறந்து பார்த்தாள் கழுத்தில் தாலிக்கிடந்தது.

அதை எடுத்து அப்படியே தூக்கிப் பார்க்கவும் எல்லோரும் கண்களைத் திறக்கவும் சரியாக இருந்தது!

அவ்வளவுதான் டாக்டரே!இன்னைக்கு நீ சட்னிதான்!