மெய் பேசும் மித்தியமே-20

மெய் பேசும் மித்தியமே-20

மெய் பேசும் மித்தியமே-20

லலிதா வேகமாக வந்து சூர்யாவை அடிக்கப்போனார்.ஆனால் ஓங்கிய கையை ரோஜாவின் முறைப்பில் அப்படியே எடுத்துவிட்டார்.

“பார்த்தியா உன்னை அடிக்கக்கூட எனக்கு உரிமையில்லைங்கிற மாதிரியே இவ என்னை முறைக்கிறா?இதுக்குத்தான் மட்டுமரியாதை தெரிஞ்ச உன் தகுதிக்கு ஏத்த பொண்ணா பார்த்துக் கட்டிக்கச்சொன்னேன்.நீ என்னடான்னா போயும் போயும் இவளைக் கல்யாணம் பண்ணிருக்க.வெட்கமாயில்லையா.நம்ம ல்டேட்டஸ் என்னாகுறது?ஏன் இப்படி செய்த சூர்யா?இதுக்கு நீ தனியாகவே பூஜவோடு இருந்திருக்கலாம்.இப்போ நம்ம குடும்ப மானமே போயிடுச்சு”என்றுவருத்தப்பட்டார்.

அதைக்கேட்டதும் அவளது அண்ணனுங்க இரண்டுபேரும் அவருக்கு முன்னாடி வந்து நின்றார்கள்.

“என்ன டாக்டரம்மா பேச்சு ஒருமாதிரி போகுது?அப்படி நாங்க எதுல குறைஞ்சிப்போயிட்டோம்னு என் தங்கச்சியை இப்படி மட்டம் தட்டுறீங்க.என் தங்கிச்சிக் கிடைக்க உங்க மகன்தான் குடுத்து வைச்சிருக்கணும்”

“அதுதான் ரொம்ப குடுத்து வைச்சிட்டமே.என் மகனோட அந்தஸ்த்தும் ஸ்டேட்டஸ்ஸூம் தெரியுமா?இல்லை என் பரம்பரையைப் பத்தித் தெரியுமா?இவங்க அப்பா அக்கா இவங்க அத்தை அத்தைக் குடும்பம்னு எல்லாருமே டாக்டர்ஸ்தான்.அவங்க எல்லாம் அமெரிக்காவுல இருக்காங்க.இவனோட முன்னாள் மனைவியும் டாக்டர்தான்”

“அவங்க டாக்டர்னா ஏன் முன்னாள் மனைவியானங்களோ?அதைச் சொல்லுங்க டாக்டரம்மா?நீங்களும் டாக்டர் இல்லைன்னு தெரியுதே.அப்புறம் எப்படி டாக்டரு அப்பாவைக் கட்டிக்கிட்டீங்க?”

“நான் டெபுடி கலெக்ட்ராக இருந்து ரிட்டயர்டு ஆனவ.என்னை அவங்கப்பா விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.நானும் சும்மா இல்லையே படிச்சவதான்”

“என் தங்கச்சியும் படிச்சவதான்.எங்கக்கிட்டயும் பணம் சொத்துன்னு ஊரே மெச்சிக்கிற மாதிரி இருக்கு.உங்கப்பிள்ளை மாதிரி பிள்ளையை பெத்து வைச்சிக்கிட்டு அடுத்த பொண்ணுக்கு கட்டாயதாலிக்கட்டி பொண்ட்டாட்டி ஆக்குனமாதிரி கேவலமா என் தங்கச்சி இல்லை.நாங்க கிழிச்சை கோட்டைத் தாண்டமாட்டா.பாக்குறீங்களா?”என்று எகிறினான்,

“பட்டுமா இங்க வா.வீட்டுக்குள்ள போ.இவனும் வேண்டாம் இவன் குடும்பமும் வேண்டாம் என்று வந்திரு.இந்த குடும்பம் உனக்கு செட்டாகாது”என்று அழைத்தவன் அவளது கையைப்பிடித்து இழுத்தான்.

அவ்வளவுதான் டாக்டர் பொங்கிட்டான்”இப்போ அவா என் பொண்டாட்டி..எப்போ அவா கழுத்துல நான் தாலிக்கட்டினனோ அப்பவே அவா உன் தங்கிச்சியில்ல.என் மனைவிங்கிற ஸ்தானத்துக்கு வந்துட்டா.இதுக்கு மேல என்னையும் அவளையும் யாராவது பிரிக்க நினைச்சீங்க.அவனுங்களை பிரிச்சு மேஞ்ச்சிடுவேன்”எச்சரித்தான்.

அதைக்கேட்டதும் லலிதாவும் மகனை ஏறிட்டுப்பார்த்தார்.ரோஜாவும் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

லலிதா மகன் இனி நம்மபக்கம் பேசவேமாட்டான் என்கின்ற ஏக்கத்தில் பார்த்தார்.ரோஜாவோ இவன் குடிச்சிட்டுப்பேசுறானா? என்கின்ற ரீதியில் பார்த்தாள்.

“என்ன இரண்டுபேரும் அப்படிப் பாக்குறீங்க.தாலியை யாரும் சும்மா விளையாட்டா தாலியைக் கட்டுவாங்களா?எட்டு வருஷ காதலுங்க.சும்மா ஒன்னுமில்லை.இடையில சிலபேரு செய்த சதியால் எல்லாம் பொய்யாகப் போயிடுச்சு.நான் நினைச்சது நடக்க எட்டு வருஷக் காத்திருப்பும் சிலபல ரணங்களும்தான் மிஞ்சியிருக்கு.அது சரியாகணும்னா என் ரோஜாதான் எனக்கு வேணும்.வேறு எதாலயும் என்வாழ்க்கை சரியாகாது.என் ரோஜாவால் மட்டும்தான் என் வாழ்க்கையும் சரி என் காதலும்சரி நல்லாயிருக்கும்.இதுக்குமேல யாராவது என்கிட்டயிருநது அவளைப் பிரிக்க நினைச்சீங்க.என்ன செய்வேன்னு சொல்லமாட்டேன் செய்திடுவேன்”என்று கருணாகரனை நோக்கி ஒரு விரலால் எச்சரித்தான்.

அதைக்கேட்ட குணசேகரன் உட்பட எல்லோரும் அதிர்ந்து”என்னது எட்டு வருஷக்காதலா என்னல சொல்லுத? சும்மா இருக்க என் தங்கச்சி மேல சும்மா ஏதாவது சொல்லாத.அடி வெளுத்துவிட்றுவோம்.தாலிகட்டிட்டா என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுட்டு பேசாத.நீ சொல்லுற பேசுறது எல்லாம் என் தங்கச்சி குணத்தை கேவலப்படுத்தும்.அறியாத வயசுல கல்யாணம் பண்ணிக்குடுத்து வாழ்க்கையே இல்லாமல் இருந்தாள்.அப்போக்கூட அவளுக்கு ஒரு வாழ்க்கையை யோசிக்கவேயில்லை.நீ இப்படி எப்படி என் தங்கச்சிக்கும் உனக்கும் எட்டு வருடக்காதல்னு அபாண்டமா சொல்லுவ?”

“அடேய் மச்சான்ஸ் நான் சொன்னது உங்க காதுல சரியா கேட்கலையா?நான் என்னோட காதல்னு சொன்னனே தவிற அவள் என்னைக் காதலிச்சான்னு சொல்லவேயில்லையே.முதல் முதல் அவளை கோவில்பட்டி ஹாஸ்பிட்டல்ல இரத்த வெள்ளத்துல தூக்கிட்டு வரும்போதுதான் பார்த்தேன்.அவளது கழுத்தில் தாலியோடதான் பார்த்தேன்.அந்த தாலிக்கு சொந்தக்காரன் உயிரோடு இல்லாத சூழல்லதான் பார்த்தேன்.அப்போ இங்க நின்னவா இப்போவரைக்கும் இங்கதான் நின்னு என்னை ஆட்டிப்படைச்சிட்டிருக்கா.அதைச்சொன்னேன்.போதுமா விளக்கம்.இல்லை இன்னும் வேணுமா?”என்று சுருக்கமாகச் சொன்னானே தவிற அவன் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்லவேயில்லை.

அதைக்கேட்ட ரோஜா முதற்கொண்டு அப்படியா என்று நம்ப முடியாது அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

மல்லிகாவுக்கு ஆச்சர்யம்.இப்படியும் ஒருத்தன் லவ் பண்ணுவானா என்ன மாதிரி காதல் இது?என்றுதான் நம்பமுடியாது நம்பவும் வேணும் என்ற நிலையில் இருந்தார்.

கருப்பசாமியோ வெறும் பார்வையாளராக எந்த அதிர்ச்சியும் என்னை ஒன்றும் செய்யாது என்று இடிதாங்கியாக நின்றிருந்தார்.

லலிதாதான் இதைத்தான் இத்தனை வருஷமா ஒருத்தியை விரும்பினேன் தேடினேன்னு இருந்த.இப்போதான் தெரியுது அது ரோஜான்னு இவளுக்காகதான் ஏங்கிட்டிருந்தியா.அப்படி என்ன இருக்கு இவக்கிட்ட? என்று லலிதா ரோஜாவை கேவலமாக பார்த்தார்.

“என் மனதை சாந்தமாக்கும் அழகு அவ முகத்துல இருக்கு.அந்த சாந்தம் என்னை அவளுக்குள்ள இழுத்துக்கொண்டது.அவ்வளவுதான் இதுக்குமேல காதலுக்கு நான் என்ன விளக்கம் சொல்லணும்னு நீங்க நினைக்கிறீங்க.இதுக்குமேல இனி ரோஜாவைப் பத்திப்பேச எந்த உரிமையும் உங்களுக்கு இல்லைம்மா அவா என் பொண்டாட்டி அவ்வளவுதான்”

கருணாகரன் அப்போதான் யோசித்தான்.இவனை எங்கயோ பார்த்தமாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்ல.இவனை அந்த ஆக்ஸிடெண்ட் அப்போ ஹாஸ்பிட்டல்ல பார்த்தது.வலியில் கதறிய தங்கையைப் பார்த்துக் கோபத்தில் சண்டையிட்டதும் அப்போது ட்யூட்டியில் இருந்த டாக்டரைப் பிடித்து அடித்ததும் சண்டையிட்டதும் ஞபகத்துக்கு வந்தது.

அந்த டாக்டர் வேறயாருமில்லை சாட்சாத் எதிர்ல நிக்கிற சூர்யபிராகாஷ்தான்.

முதலில் உணர்வற்ற நிலையில் ரோஜாவை கொண்டு வந்திருந்தனர்.வயிற்றில் சீட்டின் கம்பிக் கிழித்திருக்க அதை பொறுமையாக அகற்றி உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் வேகவேகமாக தையல் போட்டு அவளது கிழிந்த உடைகளையெல்லாம் மாற்றியிருந்தனர் வெற்றுடலில்தான் இருந்தாள்.

அவளுக்கு நர்ஸ் வந்து ஒரு ஹாஸ்பிட்டல் ட்ரஸ்ஸைப் போட்டுவிட படபடவென்று அவளுக்கான சிகிச்சையை ஆரம்பித்தனர்.

ஒருவருடமாக அங்கே வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும் ஜூனியர் டாக்டரான சின்ன டாக்டர் சூர்யபியகாஷ்தான் முழுக்க முழுக்க அவளுக்கு அவசரசிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றினான்.

இன்னும் இன்னும் இரத்தம் போய்க்கொண்டிருக்க உயிருக்கு ஆபத்துதான். ஆனாலும் காப்பாற்றியே ஆகணும் என்று இரத்தம் செலுத்த ஏற்பாடு செய்ய சொல்லிருந்தான்.

இரத்தம் குடுக்க வந்தது கருணாகரன்.அவன் இரத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும்போதே ஓஓஓவென்று அழும் சத்தம் கேட்டதும் தங்கச்சிக்குத்தான் ஏதோ ஆகிட்டென்று கையில் இருந்த ஊசியை உருவிப்போட்டுட்டு ஓடிவந்தவனது கையில் இருந்து இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.

அது தெரியாது தங்கச்சிக்கு ஏதோ ஆகிட்டுன்னு ஓடிப்போய் பட்டுமாவுக்கு என்னாச்சு என்று ஓடியவனைப் பிடித்து இழுத்திருந்தான் சூர்யபிராகஷ்.

அவ்வளவுதான் அவனது சட்டையைப்பிடித்தவன்”யார்ல நீ என் கையைப்பிடிச்சி இழுக்க.என் தங்கச்சியை என்ன செய்தீங்க?ஐயோ பட்டுமா?”என்று அழுதவன் டாக்டரின் கையைபிடித்துத் தள்ளினான்.

ஏற்கனவே பதினாறு பதினேழு வயசுக்கூட இல்லாத பொண்ணுக்குக் கல்யாணத்தைப் பண்ணி வைச்சிருக்கானுங்க.அன்னைக்கே அவளது வாழ்க்கையும் முடிஞ்சமாதிரி அவ கழுத்துல தாலிக்கட்டினவன் செத்துப்போயிட்டான்.எவ்வளவு பெரிற கொடுமையை அந்தப்பொண்ணுக்கு செய்துட்டானுங்க என்று கோபத்தில்தான் இருந்தான்.

பதினாறு வயசுல இவ்வளவு பெரிய ஆக்ஸிடெண்ட்டு வாழ்க்கையிலும் உடலிலும் எனும்போது கோபம்தான் வந்தது.

இவனுங்கபாட்டுக்கு கண்டதையும் செய்து இப்போ இந்தபொண்ணுக்கு வயித்துலயும் இவ்வளவு பெரியா காயம்.இது சரியனாலும் அவளது கல்யாண வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கும் என்றுதான் அந்த வயசிலும் பக்குவத்தோடு யோசித்தான்.ஒரு மனுஷனாக மனிதாபிமானம் எட்டிப்பார்த்தது.

அதனால் தனது சட்டையைப் பிடித்து இழுத்த கருணாகனின் கையைப்பிடித்து தள்ளிவிட்டான்.

ஏற்கனவே பட்டுமாவுக்கு இப்படியாகிடுச்சு பழனி செத்துட்டான்.எல்லாமே போயிடுச்சு என்று வேதனையில் இருந்த கருணாகரனுக்கோ சூர்யா தள்ளிவிட்டதும் கோபம் எகிறியது.

கருணாகரன் அவனை அடிக்கக் கையோங்க அதைத்தடுத்த டாக்டரைப் பிடித்து மீண்டும் அடிக்கப்போக சூர்யா விட்டான் ஒரு அறை.

அதில் அவன் கீழே விழுந்துவைக்க பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் டாக்டரையும் அவனையும் பிடித்து பிரித்துவிட்டனர்.

அப்போ சூர்யா இருபத்தி நான்கு வயதில் இருந்தான்.அவனது மீசை இந்தளவுக்கு இல்லை.முகமும் முதிர்ச்சியில்லாத பருவம்.

எப்படி இருந்தாலும் கோபம் மட்டும் மூக்குமேலவரும் இளமைப் பருவம்.அதனால் செய்கின்ற தொழிலிற்கான பொறுமை இப்போ இருக்கிற மாதிரி இல்லை.கருணாகரனை அடித்துவிட்டான்.

அதற்குள் வலியில் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தவளால் வலியைத் தாங்க முடியாது கதறித்துடித்தாள்.

அதில் இருவருமே ஓடிப்போனார்கள்.ஒருத்தன் தங்கைப்பாசத்தால் ஓடிப்போனான்.இன்னொருத்தன் பாவம் சிறுபெண் தாங்கிக்க முடியாத வலியில் துடிக்கிறாள் என்று மருத்துவம் பார்க்க ஓடினான்.

கருணாகரனால் உள்ளே போகமுடியவில்லை.அவனைத் தள்ளிவிட்டு உள்ளே போன சூர்யாவின் கையைப்பிடித்துட்டு வலிக்குது டாக்டர் என்று அழுதவளை பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது.

அடுத்தநாள்தான் கண்முழித்து அழுதாள் என்றாலும் இதற்குமேல் இங்கு வைப்பது நல்லதல்ல என்று அவனுக்குத் தெரிந்தது.உடனே பெரிய டாக்டரிடம் சொல்லி அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்று பேசி மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் பட்டுமாவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று இருந்ததால் அடிவாங்கியவனுக்கு அந்த நேரக் கோபம் தணிந்துவிட்டது.

தங்கையை அடுத்து எங்கக்கொண்டுபோகணும்? என்ன பண்ணனும்? என்று டாக்டருங்ககிட்ட குணசேகரனுடன் சேர்ந்து கேட்டு ஓடினார்கள்.

அதில் அடிவாங்கியவனுக்கு மறந்துவிட்டது அடித்தவனுக்கு ஞாபகம் இருக்குது.அதுதான் கொடுமை இங்கு!

கோவில்பட்டியிலிருந்து மதுரை மருத்துவணைக்கு பட்டுரோஜவை மாற்றும்போது பெரிய டாக்டர்கூடப்போனார்.

சூர்யாவின் அடிதடி தெரிந்து அவனை உடனே சென்னைக்கு சின்ன மருத்துவமனைக்கு மற்றிவிட்டு ஒருமாதம் சஸ்பெண்ட்டும் பண்ணிருந்தனர்.

அதன்பின் அவனுக்கு ரோஜாவைப் பத்தி நேரடியாக பார்த்துவிசாரிக்க முடியாதுபோனது.ஒரு மாதம் கழித்து வந்து விசாரித்தான்.

அவர்கள் சொன்ன ஒரே பதில் அந்தப்பொண்ணு செத்துப்போச்சு டாக்டர்.மதுரைக்குக் கொண்டுபோனதுல முடியலன்னு சொல்லிட்டாங்கன்னு ஒருத்தரும்,இன்னொருத்தங்க பிரமிளாவையும் இவளையும் மாத்தி மாத்தி சொல்லி இரண்டும் செத்துப்போயிட்டாங்க டாக்டர் என்று சொல்லிவிட்டனர்.

ரோஜாவுக்கு அப்போ இருந்த நிலை அதுதான்.அவள் பிழைக்க வாய்ப்பில்லைதான்.இரத்தப்போக்கு நிற்காது போனதால்தான் மதுரை மருத்துவணைக்கே கொண்டுசென்றார்கள்.

ஒருவேளை இறந்திருக்கலாம் என்று அப்போதிருந்த மனநிலையில் அவனும் அதை அப்படியே விட்டுவிட்டான்.ஆனால் அவளது முகம் மட்டும் நெஞ்சிலயே பதிந்திருந்தது.அவள் உயிரோடிருந்திருந்தால் போய் பார்க்கலாம்.எந்த ஊருன்னு விசாரிக்கலாம்.ஆனால் செததுப்போனவளை எங்கேபோய் தேடுறது?

ஆனாலும் அவளுடைய அந்த முகம் அவனால் மறக்கமுடியாததாகத்தான் இருந்தது.எத்தனை சூழ்நிலையிலும் அவனை நினைக்கவைக்கும் ஒரு மின்னல் வெட்டும் முகம்.அவளது முகத்தில் இருந்த இரத்தக்கறைகளையும் உடம்பையும் துடைக்கும்போது ஐயோ சின்னப்பொண்ணு பாவம் என்று நெஞ்சை பதைபதைக்க வைத்து டாக்டரான அவனையே அழவைத்த முகம்!அவனால் எப்படி மறக்குமுடியும்?

காலப்போக்கில் மறந்திடும் என்று நினைத்திருந்தவனுக்கு அவள் இறந்துவிட்டாள் என்றதும் அது கல்வெட்டாக மனதில் நின்ற முகம்!

இந்த ஊருக்கு தனது சொந்தப்பிரச்சனையால் மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தபோது இறந்துவிட்டாள் என்று நினைத்திருந்தவள் கையில் தாமாரைப் பூவோடு குளத்தில் இருந்து எழுந்து வந்தால் எப்படி இருக்கும்?

அப்படியொரு அதிர்ச்சியை அவள் கொடுத்தால் தண்ணிக்குள்ள விழாமல் என்ன செய்வான்?உண்மையாகவே செத்துப்போன அந்தப்பொண்ணு மோகினிபேயாக பூவோடு வந்துட்டுன்னுதானே நினைப்போன்.

ஆனால் அவள் உயிரோடு இருக்கும் ஒரு பெண்தான்.தான் காப்பாற்றிய அதே பெண்தான்.இந்த ஊரில்தான் இருக்கிறாள் என்றதும் உண்மையில் அவனால் நம்பவேமுடியவில்லை.

வாழ்க்கை நாம் நினைத்ததையும் ஆசைப்பட்டதையும் சிலபல அடிகள் முதுகில் வாங்கி துவண்டு விழுந்து, என்ன வாழ்க்கைடா இந்த வாழ்க்கையே வேண்டாம்னு விரக்தியில் இருக்கும்போது கண்ணில் காண்பித்து வாழ்க்கை மீதான ஆசையைத் தூண்டிவிடுகிறது.

அப்படித்தான் ரோஜோவோடான வாழ்க்கையை வாழ்ந்துபார்த்துவிட துணிந்து இறங்கிவிட்டான்.

ரோஜாதான் என் வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு இதை ஒருபோது கைநழுவிப்போகவிடமாட்டேன் என்ற சங்கல்பம் பண்ணாக்கொண்டான்.

அதனால் இப்போது அவளது கழுத்தில்,அவளது விருப்பம் இல்லாமலே தாலியைக் கட்டி இப்படி இரண்டு ஹிப்போபொட்டமஸுக்கு நடுவுல ப்ளாஷ்பேக் யோசிச்சி நின்னுட்டிருக்கான்.

டாக்டரு ஹனீமூனுக்குப் ப்ளான் போட்டிருக்கான். மச்சான்ஸ் டிவார்ஸ்க்கு ப்ளான் பண்ணிட்டிருக்கானுங்க.

இதுல நீ எங்க இருந்து குடும்பம் நடத்துவ?

குடும்பம் நடத்திருவியா சூர்யபிரகாஷு?