மெய் பேசும் மித்தியமே-12

மெய் பேசும் மித்தியமே-12

மெய் பேசும் மித்தியமே-12

ரோஜா வந்து உட்கார்ந்ததுமே மாப்பிள்ளை வீட்டாரிடம் கருப்பசாமியும் குணசேகரனும் பேசினார்கள்.

“எங்க பட்டுமாவுக்கும் உங்க மகன் வெங்கடேஷனுக்கும் கல்யாணம் முடிஞ்சதும்.அடுத்த மாசமே உங்க மகள் ஜீவிதாவுக்கும் என் இரண்டாவது மகன் கருணாகரனுக்கும் கல்யாணம் முடிச்சிடலாம்.உங்களுக்கு சம்மதம்னா இப்பவே தட்டைமாத்திக்கலாம்.அடுத்தமாசம் கல்யாணத்தை வைக்க தேதிக்குறிக்கலாம்” என்று பேசிக்கொண்டிருந்தனர்.

எல்லோருமே தலையாசைத்து சம்மதம் சொல்லிவிட அப்போ தட்டை மாத்திக்கலாம் என்று இருவீட்டு பெரியவர்களும் ஒருமனதாக முடிவெடுத்து தட்டை மாத்திக்கொண்டு உட்கார்ந்தனர்.

சூர்யா ரோஜாவையேதான் பார்த்திருந்தான்.தனது கண்களால் வேண்டாம்னு சொல்லு.இதை நிறுத்து என்பதுபோன்றே அவளைப் பார்த்தான்,

அவளோ ஏற்கனவே பயத்தில் இருந்தாள்.இவன் என்ன சொல்ல வருகிறான் என்பதையே புரியாது கண்டுக்காது உட்கார்ந்திருந்தாள்.

பூஜாவும் தினேஷும் ரோஜாவின் பக்கத்துலயே உட்கார்ந்திருந்தனர்.

மாப்பிள்ளையின் அப்பா தியாகராஜனும் இந்த சம்பந்தத்தைக் கொண்டுவந்த பால்ராஜும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

கருப்பசாமிதான் “என்ன பால்ராஜி எதுவும் பேசணுமா?என்னனாலும் சபையில பேசிட்டா நாளைபின்ன பிரச்சனை இல்லல.எதுன்னாலும் சொல்லுங்க”என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சான் பிள்ளைக்கு என்ன செய்வீங்கன்னு சொல்லிட்டா நல்லாயிருக்கும்ல.அதுதான எப்போதும் நம்ம பக்க வழக்கமும் பேச்சும்.அதுதான் பேசிட்டிருந்தோம்”

“அதுவும்சரிதான் எனக்கு இருக்கது ஒரே மக அவளுக்கு நகைநட்டு என்னபோடணுமோ அதைசிறப்பா செய்துடுவேன்”

அதைக்கேட்ட மாப்பிள்ளை வெங்கடேஷன்”அப்போ ஒரு நூறு பவுனு போடுங்க”என்று வெடுக்கென்று கேட்டான்.

அதைக்கேட்டதும் கருணாகரன் உட்பட எல்லோரும் சிரித்துவிட்டனர்.

அதைப்பார்த்து மாப்பிள்ளையின் அப்பாவுக்கும் மாப்பிள்ளைக்குமே கொஞ்சம் ஈகோ தலைத்தூக்கியது.

“எதுக்கு சிரிக்கிறீங்க?.நூறு பவுனு போடமுடியலைன்னா விடுங்க.அதுக்குப் பதிலா சொத்து ஏதாவது எழுதி வைங்க”

இதற்கு கருணாகரன்தான் பதில்சொன்னான்”இதே மாதிரி நானும் உங்கக்கிட்டக் கேட்பேன்.உங்கப்பொண்ணுக்கு நூறு பவுனு உங்கப் போடுங்கன்னு.உங்களால குடுக்கமுடியுமா?”

“அது அது என் பொண்ணும் உங்கப்பொண்ணும் ஒன்னா?”என்று அவர் வெடுக்கென்று கேட்டுவிட்டார்.

அந்தக் கேள்வியில் கண்கள் கலங்க சட்டென்று ரோஜா தனது அண்ணனைப் பார்த்தாள்.வெங்கடேஷின் தங்கச்சி இப்போது கருணாகரனை ஏறிட்டுப் பாவமாகப் பார்த்தாள்.அவளது கண்களில் ஏதும் பிரச்சனை பண்ணவேண்டாம் என்று கெஞ்சல் இருந்தது.

இதுதான் மாப்பிள்ளையின் தங்கை.தனக்காக பேசி முடித்திருப்பவள் என்றெல்லாம் தெரியும்.ஆனாலும் அவளிடம் அவன் பேசமுற்பட்டதேயில்லை.

இன்று காலை இங்கு வந்திறங்கியதும் அவளைப் பார்த்தான் அவ்வளவுதான்.அதன்பிறகு அவளது கண்களின் மொழியை இப்போதுதான் படிக்கிறான்.

ஆனால் அவனுக்குக் கோபம்தான் ஏறியது’என்ன மாதிரியான குடும்பம் இது.இப்படி பணம் நகைன்னு பேசுறாங்க. அப்போ நம்ம வசதி வாய்ப்பு பார்த்ததன் இந்த பொண்ணு நம்மளக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருப்பாளோ?”என்றுதான் அவனுக்கும் எரிச்சல் வந்தது.அதனால் அவள் பேசியதை கண்டுக்காது முகத்தை திருப்பிக் கொண்டான்.

அதைக்கேட்டு சூர்யாவுக்குமே கோபம்தான் வந்தது.எந்த எதிர்வினையும் ஆற்றமுடியாதே!அப்புறம் நீயாருடா எங்கக்குடும்பத்துக்குள்ள வர்றன்னு கேட்டிருவனுங்களேன்னு தன்னை அடக்கிக்கொண்டான்.

ரோஜாவின் கைகள் மறுபடியும் நடுங்க ஆரம்பித்தது.மீனாதான் அவளது தோளைப் பிடித்து ஒன்னுமில்ல பட்டு என்று ஆறுதல்படுத்தினாள்.

உடனே தியாகராஜன்”வெங்கடேஷ் நீ சும்மாயிரு நாங்க பெரியவங்க பேசிட்டிருக்கம்ல.நீ பேசாத”என்று சத்தமிட்டார்.

அவனோ கோபத்தில் உர்றென்று முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

கருப்பசாமிதான்”சம்மந்தி எங்களைபத்தி விசாரிக்காம பேசிட்டீங்க அதுதான் சிரிச்சோம்.என் பொண்ணுக்கு நூறுபவுனா போடாமாட்டேன்?அவளுக்குன்னா முந்நூறு பவுனே போடுவேன்.அதெல்லாம் பிரச்சனையே இல்லை.என் சொத்துல மூணு பங்கு சரிபாதியா பிரிச்சு எழுதி என் மகளுக்கு ஒரு பங்கு தந்திடுவேன்.இதுல எந்த மாத்தமும் பின்னாடி வராது.என் பொண்ணு வாழணும்.அதுவும் நல்லா வாழணும் அதுதான் எங்க ஆசை”

அதைக்கேட்டதும் வெங்கடேஷும் தியாகராஜூம் அவ்வளவா? என்று மனதிற்குள்ளாகவே கணக்குவேறு போட்டுக்கொண்டனர்.

“அதுசரி சம்மந்தி.சும்மா பேசணும்னுதான் கேட்டோம்.உங்கப்பொண்ணுக்கு நீங்க எவ்வளவு போடணுமோ போடுங்க.செய்யணுமோ செய்யுங்க”

என்று கொஞ்சம் தணிந்துவிட்டார்.

உடனே ஜீவிதா தனது அம்மா ராஜலெட்சுமிமிடம்”இதென்னமா இப்படி அப்பா கேட்கிறாங்க?அண்ணனும்கூடசேர்ந்து பேசுறான். அவங்க வேற முந்நூறு பவுனு நாநூறு பவுனுன்னு பேசுறாங்களேமா. இதுல வேற சொத்து எல்லாம் பங்கு கொடுக்கறேன்னுவேஃ சொல்றாங்க,அவங்கபண்ற மாதிரி நம்ம கிட்ட கேட்டால்.நம்ம என்ன பண்ண முடியும்?”கேட்டாள்.

“அதெல்லாம் கேட்கட்டும் கேட்டு வாங்குறதுல தப்பு இல்ல. நம்ம உனக்குத்தான் வரன் பேசினோம்.ஒரு ஐம்பது பவுனு போட்டு உனனைக் கட்டிக் கொடுக்கலாம் அப்படின்னு பார்த்தோம்.ஆனா அவங்களாதான் அவங்க பொண்ணுக்கு வரன் பார்க்குறோம். பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கலாம் என்று வழிய வந்தாங்க அப்போ நம்ம கேட்டா ஒன்னும் தப்பு இல்ல” என்று கொஞ்சமும் யோசிக்காது சொன்னார்.

“அதுக்காக இப்படி மனசாட்சி இல்லாமல் எல்லாம் கேட்பீங்க.அவங்க திருப்பி கேட்டா நம்மளால செய்ய முடியாதுன்னு தெரியும்ல. கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்களா மூணு பேரும்” என்று திட்டினாள்.

“சும்மா இருடி அதுதான் அப்பாவும் அண்ணனும் பேசிட்டு இருக்காங்கல்ல .நீ எதுக்கு இடையில என்கிட்ட வந்து சண்டை போடுற? அவங்க பேசி முடிச்சிட்டாங்க நீ சும்மா அடக்கமாக இரு” என்று மகளை வார்த்தையால் அடக்கினார்.

“நேத்து நைட் வரைக்கும் நல்லா தானே இருந்தாங்க.பணம் சொத்துன்னு வந்த உடனே இவங்களும் மாறிட்டாங்க போலிருக்கு” என்று மனதிற்குள் தனது குடும்பத்தை வறுத்துக் கொண்டு இருந்தாள் ஜீவிதா!

பால்ராஜிதான் “கருப்பசாமி மச்சான் சொன்னைத சொன்னபடி செய்வார்” என்று அந்தப் பேச்சை அத்தோடு முடிக்க முயன்றார்.

ஆனால் சில மனிதர்களுக்கு பேராசை தலை தூக்கும் பொழுது எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நிறைவில்லாத எண்ணமே மேலோங்கும்.

அப்படித்தான் வெங்கடேஷிற்கும் இது போதாது இன்னும் கேட்டு வாங்க வேண்டும் என்ற பேராசை மேலோங்கி இருந்தது.

“சித்தப்பா இப்பவே எல்லாம் பேசி முடிச்சிடுங்க கல்யாணத்தன்னைக்கே முந்நூறு பவுன் நகையும் அவங்க என்னென்ன சொத்துக்கள் அவங்க மகள் பேருல எழுதி வைச்சிருக்காங்களோ, அந்தப் பத்திரங்கள் எல்லாம் என் கைக்கு வந்தால்தான் நான் தாலி கட்டுவேன். அதுக்கப்புறம் மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டாரு அப்படி சொல்லிட்டாரு என்று நம்மளை யாரும் குறை சொல்ல வரக்கூடாது” என கொஞ்சம் தெளிவாக பேசுகிறேன் என்று பைத்தியக்காரத்தனமாக பேசிக் கொண்டிருந்தான்.

“அவளுக்குள்ள நகையை கல்யாணத்தன்னைக்கே அவ கழுத்துல போட்டுதான் அனுப்புவோம்.ரொக்கமாக எவ்வளவு பணம் வேணாம்னு கேளுங்க அதை தருவோம்.ஆனால் சொத்து பத்திரங்கள் அதையெல்லாம் இப்பவே தரமுடியாது.அது என் தங்கச்சி பெயர்ல இருக்கு. ஆனா உங்க கையில தரமாட்டோம்” என குணசேகரன் முடிவாக சொல்லிவிட்டான்.

கருப்பசாமியும் குணசேகரனை பார்த்து” குணா எதுக்கு இவ்வளவு போட்டு பேசிட்டு இருக்க? நான் சம்பாதிச்சது எல்லாமே என் மகளுக்குத்தான்,அவன் நல்லா வாழனும்னா கூட ரெண்டு சொத்தையும் சேர்த்து எழுதி கொடுத்துட்டு போறேன். ஏன் போட்டு இவ்வளவு பிரச்சனையா பேசணும். சொத்துபத்திரம் கொடுக்கிறதுல என்ன தப்பு இருக்கு? அது அவளுக்கு செய்ய வேண்டியதுதானே” என்று தன்மையாக பேசினார் அவரை பொறுத்த வரை மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் எது கேட்டாலும் கொடுக்கலாம் என்று தாராள மனதில் இருந்தார்.

“அது இல்லப்பா முந்நூறு பவுன் நகை கொடுக்குறோம் சொத்து அவளுக்குதான் எழுதி வச்சிருக்கோம். அந்த சோத்துல வர்ற எல்லாத்தையுமே அவங்க அனுபவிக்கட்டும். ஆனால் பத்திரங்கள் அவளுக்கு இப்போதைக்கு கொடுக்க வேண்டாம் .அதுதான் நல்லது. அதை நம்ம தீர்மானமா இப்பவே சபையில் பேசி ட்டா பிரச்சினை இல்லை பாருங்கப்பா. அதுக்கு பதிலா எத்தன லட்சம் வேணும்னு கேட்க சொல்லுங்க. நம்ம ரொக்கபணமா தட்டில் வைத்து கொடுத்துடுவோம்.அதுதான் அவளுடைய எதிர்காலத்துக்கு நல்லது” என்று தனது தங்கையின் வாழ்க்கைக்காக குணசேகரன் யோசித்து சொன்னான்.

அதைக் கேட்டதும வெங்கடேஷ் கோபத்தில் பொங்கி எழுந்து “சொத்து பத்திரத்தை ஏன் தர மாட்டீங்க? எங்க மேல நம்பிக்கை இல்லையா? உங்க வீட்டு பொண்ணு விதவைனு தெரிஞ்சும், கல்யாணம் முடிஞ்சு வேற எதுவும் நடக்கல கன்னி பொண்ணுதான்னு நீங்க சொன்னதையும் நாங்க நம்புறோமே.அதுதான் நிச்சயமே பண்ண வந்தோம். ஆனால் இங்க வந்த பிறகு தான் தெரியுது உங்க வீட்டு பொண்ணுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைன்னு டாக்டர்ஸ் எல்லாம் சொன்னதா சொல்றாங்க. அப்படி ஒரு பேச்சு இருக்குதே. அதையும் மீறி உங்க பொண்ண நான் கட்டிக்க சம்மதிக்கிறேன். கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுக்கிறேன். அப்போ எனக்காக நீங்க இதெல்லாம் செய்றதுல என்ன பிரச்சனை?” என்று கேவலமாக உண்மை உடைத்து பேசி விட்டான்.

அதை அவன் சபையில் அத்தனை பேரும் முன்னாடி சொன்னதும் ரோஜா அதிர்ந்து எழுந்தாள்.

அவன்பேசினதைத் தாங்க முடியாது சத்தமாக வெடித்து அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சூர்யாவும் லலிதாவும் அதிர்ச்சியோடு அவளைத்தான் வேதனையோடு பார்த்திருந்தனர்.

“இவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? இவள் விதவையா?”என்று லலிதா யோசனையோடு இருந்தார்.

“இவளுக்கு குழந்தை பிறக்காதுன்னு டாக்டர் சொன்னாங்களா? அது எப்படி சொல்லி இருப்பாங்க?” என்று அவன் ஒரு மருத்துவனாக யோசித்துக் கொண்டிருந்தான்.

கருப்பசாமியோ உடனே கோபத்தில் எழுந்தவர்” என்ன தம்பி ஓவரா பேசுறீங்க?என் பொண்ணைக் கல்யாணம் பண்ணப் போறவருன்னு நானும் என் மகன்களும் இவ்வளவு நேரம் மரியாதை கொடுத்து பேசிட்டிருந்தோம். ஆனால் அவளோட குறையெல்லாம் நிறைவாக்க பணமும் நகையும் சொத்துக்கள் தான் வேணும்னா அப்படி நீ அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இப்பவே இங்க இருந்து வெளியே போயிருங்க. பால்ராஜ் உங்க அண்ணன் குடும்பத்தை கூட்டிட்டு போ” என்று கருப்பசாமி அடிக்காத குறையாக அவர்களை விரட்டினார்.

இதை வெங்கடேசன் தியாகராஜனும் எதிர்பார்க்கவில்லை உடனே கொஞ்சம் தணிந்து” அது இல்ல சம்மந்தி.. என் மகன் என்ன சொல்ல வந்தான்னா? என்று பேச முயன்றார்.

ஆனால் கருப்பசாமி அவரை கையை காட்டி நிறுத்தி பேசாதே மரியாதையாக வெளியே போ என்று கைகளினாலயே சொல்லிவிட்டார்.

வெங்கடேஷோ “ஐயோ வாய் தவறி எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டோமே? என்று நினைத்தலும் தனது கெத்தை விட்டுக் கொடுக்க முடியாது அமைதியாக நின்றிருந்தான்.

இவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்த்திராத ஜீலித்வோ கருணாகரனை ஏறிட்டு பார்த்தாள். அவன் ஏதாவது சொல்லுவானா என்று காத்திருந்தாள்.

அவனோ அவளைக் கண்டுக்கவே செய்யாது தனது தங்கையை பார்க்க ஓடிவிட்டான்.

ஆனால் கருப்பசாமி தனது மகளது கல்யாணம் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று சந்தோசத்துடன் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்திருக்க இப்பொழுது அது நடக்காமல் போனதும் வேதனையோடு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றிருந்தார்.

அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்த சூர்யபிராகஷுக்கு புரிந்து விட்டது.

‘ என்னமோ அவருக்கு ஆகப்போகிறது?’ என்று அவருக்கு அருகில் போய் அவரை தாங்கி பிடித்தான்.அதற்குள் அவர் அப்படியே அவனது கைகளில் மயங்கி சரிந்து விட்டார்.

அதைப் பார்த்த குணசேகரனும் “அப்பாஆஆ” என்று அலறி ஓடி வந்து அவரை சூர்யாவோடு சேர்ந்துத் தாங்கிப்பிடித்திருந்தான்.

அவ்வளவுதான் எவ்வளவோ எதிர்பார்ப்போடு ரோஜாவின் நிச்சயம் நல்லபடியாக நடக்கும் என்று நினைத்திருக்க, அந்த வீடே இப்பொழுது சோகத்தில் மூழ்கி இருந்தார்கள்!

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புதிரை வைத்திருக்கிறது. அதற்கான விடை கண்டுபிடித்தவர் யார்?