ரணம்12
Ra12

12 ரண ரணமாய் !!
இருவரும் பேருந்து ஒன்றில் ஏறினர் ... பெண்கள் பக்கத்தில் ஒரு இருக்கையில் காவ்யா அமர.. ஆண்கள் பக்கத்தில் இன்னொரு ஆணோடு மாதவன் அமர்ந்தான் ..இருவருக்கும் மாதவன் டிக்கெட் எடுத்துவிட்டு சீட்டில் சாய்வாக அமர அவனுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த காவ்யா நொடிக்கு ஒரு முறை திரும்பி திரும்பி அவனை பார்த்தாள்..
இவன் கையில் எப்போதும் பயணம் செய்யும் பொழுது படிப்பது போல வார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தவன், சட்டென அவள் பார்வை தன்னை நோக்கி இருப்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க ... அவனையே பார்த்துக் கொண்டிருந்த காவ்யாவை என்ன எதுவும் வேணுமா என்பது போல் மாதவன் கண்ணால் சைகை செய்ய ..
இல்ல என்று உதட்டை கடித்து திரும்பி அமர்ந்து கொண்டாள்... ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அவனைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்... அவன் பக்கத்தில் இருந்த ஆடவன் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி போய்விட , அவன் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருக்க ... இன்னொரு ஆடவன் வந்து அருகே அமர போக..
"எக்ஸ்க்யூஸ் மீ , என் மனைவி வருவாங்க ,காவ்யா இங்க இடம் இருக்கு வா" என்று மாதவன் உரிமையாக கூப்பிட ... மறுப்பாளா மாதவனின் காவ்யா ஓடி வந்து அவன் அருகே பூனை குட்டி போல பதுங்கி உட்கார்ந்து கொண்டாள்
"ரொம்ப நன்றி சார் , அந்த லேடி இடம் கொடுக்கவே இல்ல .. இருக்கவே முடியல நல்லவேளை இங்க கூப்பிட்டீங்க ...
"பார்த்தேன், அதான் இங்க இவ்வளவு இடம் இருக்குல்ல தள்ளி உட்காரு" சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்த அவளை அருகே வரச் சொல்லி உந்தினான்
அவளும் சமத்தாக அவன் தோள் உரச அமர்ந்து கொண்டாள்..அவன் வார இதழை புரட்ட ஆரம்பித்து விட்டான்
ம்க்கும் இதுக்கு அங்கயே இருந்து இருப்பேனே
என்ன காவ்யா ?
"ஒன்னும் இல்லேயே , அப்புறம் மாதவன் சார் பஸ்ல எல்லாம் போனா இப்படித்தான் பேப்பர் வாசிக்கிட்டே போவீங்களா என்று அவன் காது பக்கம் சரிந்து முணுமுணுக்க ... பேப்பரை மடக்கி அருகில் வைத்தவன் ...
"தனியா போக போரடிக்கும் இல்ல ,அதனால இது பழக்கமாகி போச்சு
"ம்ம், இந்த சைட் அடிக்கிறது, பெண்களை டாவ் அடிக்கிறது இதெல்லாம் சாருக்கு தெரியாதா மெலிதாக சிரித்தவன்
"அப்படி எல்லாம் தெரிஞ்சிருந்தா நான் எப்பவோ செட்டில் ஆகி இருப்பேன்
"வாஸ்தவம்தான், ஏன் சார் சும்மா கூட பொண்ணுங்கல சைட் அடிச்சது இல்லையா?
" எனக்கு சொந்தம் இல்லாத பொருளை பார்க்கிறது முறை இல்லல்ல
"ஓ தன்னையும் அதனால்தான் ஏறெடுத்து பார்க்க மறுக்கிறானோ என்று யோசனையாக இருந்தவளை மாதவன் ஓரக்கண்ணால் மேலிருந்து கீழ் வரை பார்க்க ஆரம்பித்தான் ..
காவ்யா மஞ்சள் நிற சேலை , ஓரத்தில் பச்சை நிற பாடர் போட்ட சேலை அணிந்து இருந்தாள்..
அவன் எடுத்துக் கொடுத்ததுதான் , மென்பட்டு வகை.. அவன் வாங்கும் சம்பளத்தில் அதிகபட்ச செலவு செய்தது இவள் கட்டி இருக்கும் சேலைக்காகத்தான் இருக்கும்.. எப்போதும் தனக்கு என்று அதிகம் செலவு செய்யாதவன், பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கி கொடுப்பான்... ஆனால் தனக்கு என்று வரும் பொழுது நூறு ரூபாய் ஷர்ட் போட்டாலும் ஷர்ட் தான்... அதுக்கு எதுக்கு போட்டு காசு செலவழிக்கணும் என்று எப்போதும் செலவு செய்வதில் யோசித்து தான் செய்வான் .. அவளுக்கு ஆடை எடுக்க கடைக்கு போனவன் பணத்தை பார்க்கவே இல்லை அவளுக்கு பொருத்தமாய் இருக்குமா என்று மட்டும் தான் யோசித்தான்..
சிறப்பு!! அவன் எடுத்துக் கொண்டு வந்திருந்த சேலை அவளை அவ்வளவு அழகாக காட்டியது இந்த சேலையால் அவளுக்கு அழகு கூட வில்லை... தான் அருகே இருப்பதால் நிம்மதியாய் இருக்கிறாள் சந்தோஷமாய் இருக்கிறாள், அந்த சந்தோஷத்தின் விளைவு அப்படியே அவள் முகத்தில் பிரதிபலித்தது மாதவனுக்கு தெரியாது இல்லை...
"சார் இதுதான் அந்த சர்ச் இறங்குங்க ,,அய்யோ பஸ் போகுது சார் படிக்கட்டில் நின்று கொண்டு அவள் கத்த
"எனக்கு ஓடுற பஸ்ல எல்லாம் இறங்க தெரியாது காவியா .."
"ப்ச் என்ன சார் நீங்க, இப்படி இருக்கீங்க என்று அவன் கையையும் இழுத்து பிடித்துக் கொண்டு ஸ்பீட் பிரேக்கில் வண்டி ஏறி இறங்கும் போது பஸ்ஸிலிருந்து இருவரும் குதித்து இறங்கினர்..
"அப்பா சரியான ரவுடிதான் போல இருக்கு.. கீழ விழுந்து இருந்தா என்ன ஆகி இருக்கும்
"டாக்டர் சாருக்கு தையல் போட்டு இருக்க வேண்டியது இருக்கும் ... அதான் விழலயே சார் என்று அவன் கையை உரிமையாக பிடித்துக் கொண்டு ரோடை கிராஸ் செய்து சர்ச்சுக்குள் இருவரும் போனர்..
"சார் ஒரு நிமிஷம் இங்க வெயிட் பண்ணுங்க நான் ஃபாதர் இருந்தா பாவமன்னிப்பு கேட்டுட்டு வந்துடுறேன்.. அவன் ஏதோ சொல்ல வாய் எடுத்தவன் அமைதியாக போ என்று விட்டு அங்கிருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்தான்..
காவ்யா , பாவ மன்னிப்பு கூண்டின் அருகே போய் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கண்ணீரைத் துடைத்து துடைத்து ஏதோ சொல்லிக் கொண்டிருக்க... இவன் பார்வை அவளை மட்டும் தான் தீண்டிக்கொண்டிருந்தது..சிறுது நேரத்துக்கு பின்னே
உனக்கு சமாதானம் உண்டாவதாக மகளே !போய் வா என்ற குரலும்
நன்றி பாதர் என்று கூறும் அவள் குரலும் மட்டும் தான் கேட்டது .. முந்தானையில் கண்ணீரை துடைத்து சிரித்தபடி வந்தவள் .. அவன் அருகே உட்கார்ந்து கொண்டு எதிரே பார்த்து கொண்டே
"பாவமன்னிப்பு கேட்டதுக்கு பிறகு மனசு கொஞ்சம் லேசா இருக்கு சார்... அவனும் அதே போல் முன்னால் பார்த்துக் கொண்டே
"பாவம் செஞ்சவங்க தான் மன்னிப்பு கேட்கணும் என்ன பொறுத்த வரைக்கும் நீ அப்பவும், இப்பவும் தூய்மையானவதான் " என்றவனை தலையை திருப்பி பார்த்த காவ்யா... சிறிது நேரம் அமைதிக்கு பின்
" சார்
" சொல்லு காவ்யா"
" இப்பவும் அதை முடிவிலதான் இருக்கீங்களா?
"புரியல என்ன கேக்குற..
" இல்ல அன்னைக்கு கேட்டீங்களே, என்ன கல்யாணம் கட்டிக்கிறியான்னு !?
"ம்ம் , ஆமா நீ தான் வேண்டாம்னு சொல்லிட்டியே என்று அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க
"இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா சார் ???என்று சட்டென கேட்டுவிட்டாள்
மாதவன் கண்ணில் தேக்கி வைத்திருந்த கண்ணீர் சொட்டு என்று அவள் உள்ளங்கையில் விழ..
சார் தப்பா எதுவும் பேசிட்டேனா...
இதை கேட்க இத்தனை நாளாடி .... அழுத்தக்காரி ஒரு வருஷமா காக்க வச்சுட்ட, கல்யாண கட்டிக்கலாமாடி ? என்றவன் அவள் கலங்கிய கண்ணை ஆழ பார்க்க .. அவள் கண்ணீரும் சொட்டு என்று அவன் கண்ணீரின் மீது விழுந்து கலக்க...அவள் உதடு அழுகையில் துடித்தது ... ஆனால் முகம் சிரிப்பில் தவித்தது... நிம்மதியை பிரதிபலித்தது .. இது புனிதமான இடமாக இல்லாது இருந்தால் .. இறுக்கமாய் அவளை அணைத்திருப்பான்...
பார்வைகள் ஒன்றை ஒன்று கட்டித்தழுவி முத்தமிட்டு கொள்ள.. கைகள் ரெண்டும் காதலிக்க தொடங்கி இருந்தது அவன் தோளில் அவள் சாய அவன் அவள் உச்சி மீது நாடியை பதித்து சுள் வெயிலில் கூட காதலை அனுபவித்தனர்...
மாதவனின் போன் ஒலி எழுப்பியது சட்டென்று இருவரும் பார்வையை மாற்றிக் கொண்டு போனை எடுத்துக் கொண்டு மாதவன் வெளியே போக... அவன் பின்னாலையே அவளும் போனாள்..
மச்சான் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல எல்லா ரெடிடா என்னவோ ஆள சரி பண்ணி தூக்கிட்டு வரேன்னு போன ... உன் ஆளு மடங்கிச்சா இல்லையா? என்று ராகவ் கத்தியது இங்கிருந்த காவ்யா வரைக்கும் கேட்டது...
ஹிஹி என்று வழிந்த மாதவன் காவ்யாவை திரும்பி பார்க்க ..
காவியா முறைத்தபடி மாதவனை பார்க்க..
போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி" என்று அசடு வழிந்து கொண்டே ..
பேசிட்டு வரவா என்றவனை முறைத்துக் கொண்டே போய் தோட்டத்து பெஞ்சில் அமர்ந்தாள் ..
காவ்யா என்று அவள் பக்கத்தில் வந்து மாதவன் அமர அடுத்த நொடி அவன் நெஞ்சில் படீரென்று அடிக்க ஆரம்பித்தவள் அடியை தாங்கிக் கொண்டவன் சட்டென அவளை வளைத்து தன்னோடு இறுகி அணைத்துக் கொண்டு ...
இது எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?
ஒரு வருஷமா என்ன வந்து பார்க்காம இருந்தததுக்கு.. நான் வந்த அடுத்த நாளே நீங்க வந்து இருந்தாலும் உங்க கூட வந்திருப்பேன் தெரியுமா? ஏன் என்னை தனியா விட்டுட்டீங்க...
இப்படி உரிமையா கட்டிக்க உனக்கும், உன்ன உரிமையா அணைச்சுக்க எனக்கும் இந்த ஒரு வருஷம் தேவைப்பட்டுச்சுடி அழுகையோடு அவனை அவள் ஏறிட்டு பார்க்க..
இப்படி நீயா வந்து அணைச்சுக்கணும்னு நினைச்சது தப்பா? என்றான்... இப்ப தயக்கம் பயம் இல்லைல்ல
ம்ஹூம் அவள் கலங்கிய கண்ணில் முத்தம் கொடுக்கும் ஆசையில் அவன் இதழ் வியர்த்துப் போய் அவள் கண்ணருகே நிற்க ...
"உண்மையா என்ன கல்யாணம் கட்டிக்கிறீங்களா?? ..
ம்ஹூம் , இல்ல பொய்யா கட்டிக்கலாம் பொய்யா குழந்தை பெத்துக்கலாம் , பொய்யா காதலிக்கலாம் அப்புறம் பொய்யா நிறைய வாழலாம்.. என் கூட வாழ ரெடியா என்றவனுக்கு பதில் சொல்ல முடியாமல் உதடு கிடுகிடுக்க .. அவள் தலையாட்ட
அப்பா டேய் ரிஜிஸ்டர் ஆபீஸ் பூட்டிட போறாங்கடா சீக்கிரம் வந்து தொலை என்று ராகவ் கார் ஹாரன் கிங்கிங் என்று அடிக்கும் சத்தத்தில் இருவரும் சட்டென்று களைந்து விலகி நின்றனர்..
அங்கே காரில் ராகவ் ஹாரனை அடித்துக்கொண்டிருக்க ... அவன் அருகே காயத்ரி உட்கார்ந்திருந்தவள்.. இவளை பார்த்து கையசைத்து வா என்பது போல் அழைக்க..
காவ்யா தயங்கி போய் அவன் முதுகு பின்னால் ஒளிய போக ... காயத்திரி இறங்கி ஓடி வந்து அவளை அணைத்து கொள்ள... முதலில் சங்கடமாக பேச ஆரம்பித்த காவ்யா, காயத்ரியின் இயல்பான பேச்சில் கவரப்பட்டு அவளும் சர்வசாதாரணமாக பேச ஆரம்பித்து விட்டாள் ..
மாலை சென்னையில் ரிஜிஸ்டர் மேரேஜ்..
ஆர்ப்பாட்டம் இல்லாமல் பத்தே பேர் திருமணத்திற்கு வந்திருந்தார்கள்... அதில் அவள் தங்கையும் ஒருத்தி அக்கா என்று ஓடி வந்து காவ்யாவின் கையைப் பிடித்துக் கொள்ள பரமதிருப்த்தி ..
நீங்க அன்னைக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னீங்க ஆனா அந்த அக்காவும் என்ன மாதிரி தான் ஏன் சொல்லல காயத்ரியோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான்
இறந்து போன காவ்யா பற்றி அவளுக்கு தெரியும்...
அதை சொல்லி, உனக்கு அனுதாபத்தால காதல் வரக்கூடாதுடி..
"அப்போ உங்களுக்கு என் மேல அனுதாபத்தாலதானே காதல் வந்து இருக்கு.. இது மட்டும் சரியா
"யாரு அப்படி சொன்னா, உன்ன பிடிச்சததாலதான் உனக்கு வலிக்க கூடாதுன்னு தோணுச்சு .. உன்ன போல எத்தனையோ பேர் இருக்காங்க எல்லார்கிட்டேயும் போயா கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டேன்...
"ம்ம் எங்க கேட்டுதான் பாருங்களேன் என்று அவள் முறைக்க .. இந்த செல்ல ஊடல் கூட காதலில் அழகுதான்...
"எனக்கு இந்த ஒத்த பொண்டாட்டி போதும் கல்யாண கட்டிக்கலாமா இல்ல கதை பேசிக்கிட்டே இருப்போமா என்று மாதவன் சட்டை பாக்கெட்டை தடவி தாலியை எடுத்து அவள் முன்னால் தூக்கி காட்ட
இது எல்லாம் கனவா நினைவா ??என்று சத்தியமாக அவளுக்கு தெரியவில்லை ..
தாலி என்னும் புனித பந்தத்திற்கு அவள் தகுதி தானா என்று இப்போதும் கூட அவளுக்கு சிறிய நடுக்கம் அந்த நடுக்கத்தில் உடலெல்லாம் அவளுக்கு வெடவெட என்று ஆட ஆரம்பிக்க அத்தனை பேர் முன்னாலும் மாதவன் அவளை சற்று அணைத்து பிடித்தது போல் தன்னோடு இறுக்கிக் கொண்டவன்
நான் இருக்கேன்ல என்ன பயம் ?? என்று மாதவன் கிசுகிசுக்க அவன் கையை இறுக பிடித்துக் கொண்டவள் கழுத்தில் அழகாய் அவனுடைய தாலி ஒய்யாரமாக தொங்கியது..
ரணம் இதமாய் மாறியது
ரணம் அழகாய் மாறியது
ரணம் சுகமாய் மாறியது
ரணம் காதலா மாறியது!!!