மெய் பேசும் மித்தியமே-19

மெய் பேசும் மித்தியமே-19
பூஜா சொன்னதன் அர்த்தம் புரிந்து கண்ணைத் திறந்து பார்த்த ரோஜாவுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
தனது கழுத்தில் தாலியைக் கட்டியிருக்கிறான்.அதுவும் ஊர்க்கோவிலில் திருவிழா நடக்கும்போது எல்லோரின் முன்பும் தாலிக்கட்டியிருக்கிறானே என்று அதிர்ச்சியில் இருந்தாள்.
இப்போது அவளது மனம் படபடவென்று அடித்துக்கொள்ள
சூர்யாவை நிமிர்ந்துப் பார்த்தவள் அவன் கட்டின தாலியை எடுத்து தனது உள்ளங்கையில் வைத்து அதை நம்ப முடியாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“உண்மையாவே தாலியைக் கட்டிட்டானே.கடவுளே!” யாருக்கும் எதுவும் சொல்ல முடியாது அப்படியே அந்த இடமே ஸ்தம்பித்து அசையாது நின்றிருந்தனர்.
சூர்யாவோ ஐயர் வைத்திருந்த தட்டில் இருந்தக் குங்குமத்தை விரலில் எடுத்தவன் ரோஜா கையில் பிடித்து வைத்து பார்த்துக்கொண்டிருந்த தாலியில் அந்த குங்குமத்தை வைத்துவிட்டான்.
யோவ் என்னய்யா பண்ற என்ற ரீதியில் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
அதுவும் அவனுக்கு வசதியாகப்ஓயிற்று அவளது நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்து விட்டான்.
அவ்வளவுதான் எதிர்பக்கத்தில் நின்றிருந்த குணசேகரனும் கருணாகரனும் துள்ளிக்குதித்து இந்தப்பக்கம் வந்தார்டள்.
டேய் நீ என்ன பண்ணி வச்சிருக்க என்று அப்படியே அவனை சுற்றி வளைத்து நின்றார்கள்.
சூர்யாவின் சட்டையைப் பிடித்து இருவரும் இழுத்தனர் அடிக்க கையோங்கிருந்தனர்.
ஆனால் சூர்யா தைரியமாக அவர்களது கையை பிடித்து விலக்கி விட்டான்.
“மச்சான்களா என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? உங்க ரெண்டு பேருகிட்டயும் அடி வாங்கிட்டு நிப்பேன்னு நினைச்சீங்களா என்ன? அப்படியெல்லாம் நினைக்கப்படாது.அது நல்லதில்ல”
“என்னது?யாருக்குல நல்லதில்ல”
“நமக்குத்தான்.இப்போதான் கல்யாணத்தை முடிச்சிருக்கேன்.அடுத்து நடக்கவேண்டியதெல்லாம் பாதிக்கும்ல மச்சான்ஸ்”
“அடிங்க மச்சானாம்ல மச்சான்.யாருல உனக்கு மச்சான்?”
“நீங்கதான் மச்சான்ஸ்.என் பொண்டாட்டிக்கு அண்ணனுங்கன்னா மச்சான்ஸ்தானே மச்சான்ஸ்”
“உன்னைக் கொன்னுட்டா எப்படிக் கூப்பிடுவடா மடப்பைய டாக்டரே”என்று அடிக்கக் கையோங்கினவனின் கையைப் பிடித்து தடுத்தான்.
“இந்த மேல கை வைக்கிறது, மிரட்டி பார்க்கிறது இதெல்லாம் இந்த சூர்யாபிரகாஷ்கிட்ட நடக்காது மச்சான்ஸ்.உங்களுக்குப் பயந்து ஒதுங்கிப்போகமாட்டேன்.எதுனாலும் நானேஃசமாளிக்கிற அளவுக்கு நான் தைரெயமா ஆம்பளதான் மச்சான்ஸ்.கொஞ்சம் தள்ளியே நில்லுங்க.அப்புறம் நான் கையை நீட்டிரப்போறேன்” என்று கெத்தாக அவர்களை பிடித்து தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.
“ஏலேய்ய் டாக்டரு என் தங்கச்சி கழுத்தில் திருட்டு தாலியைக் கட்டிட்டு எவ்வளவு தெனாவட்டா பேசுற? உன் தலையை சீவாமல் விடமாட்டோம்?”என்று ஓடிப்போய் கருணாகரன் தனது ஆட்களிடம் சொல்லி காரிலிருந்த அருவாளை எடுத்து வரச்சொல்லிஅவனை வெட்டப்போனான்.
அதைப்பார்த்து ரோஜா மிரள,பூஜா பயந்து கதற,சூர்யாவோ யாரை சமாதானப்படுத்த என்று யோசிக்கும்போதே கருப்பசாமி அவர்கள் முன்பு வந்துநின்றார்.
மகன்கள் இருவரையும் தள்ளிப்போங்க என்று சத்தம்போட்டு விலக்கி நிறுத்தயவர் சூர்யாவின் அருகில் வந்தார்.
“என்ன டாக்டரு இத்தனைபேரு முன்னாடி என்மகளையும் என்னையும் அசிங்கப்படுத்திட்டீங்களே?உங்களுக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கே.நீங்கபோய் என் மகளை இரண்டாவதா கட்டிக்கலாமா?இது சட்டப்படி தப்புத்தானே.என் பட்டு என் மகளாகவே இருந்திருப்பாளே.இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே?”என்று வேதனையோடு கேட்டார்.
“
மன்னிச்சிடுங்கய்யா.நான் ஒரு டாக்டர் அப்படித் தப்பா சட்டத்தை மீறியெல்லாம் ரோஜா கழுத்துல தாலிக்கட்டல, கல்யாணம் பண்ணிக்கவும் இல்ல.சட்டப்படியும் தர்மப்படியும் ரோஜா மட்டும்தான் என் மனைவி.சில விசயங்கள் சொன்னால் உங்களுக்குப் புரியாது.உங்களுக்குப் புரிய மாதிரியே சொல்லிடுறேன்.நானும் பூஜா அம்மாவும் பிரிஞ்சிருக்கோம்.இனி அவங்க என் வாழ்க்கையில வரமாட்டாங்க.நான் ரோஜாவை உங்கக்கிட்ட பொண்ணு கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் பார்த்தேன்.அதுக்கு இரண்டுதடைகள் பெருசா இருந்துச்சு”என்று சொன்னவன் ரோஜாவின் அண்ணன்களை ஏறயிறங்கப் பார்த்தான்.
(அவனுங்கதான் அந்த இரண்டு தடையுமா உண்மையை சொல்லு டாக்டரே)
அவன் சொன்னதைக்கேட்டதும் குணசேகரன்“லேய் டாக்டரு நீ ஏதோ திட்டம்போட்டுத்தான் ஊருக்குள்ள வந்திருக்கன்னு நினைக்கிறேன்.பெரிய வீட்டு பொண்ணுன்னு தெரிஞ்சு மயக்கிக்கூட்டிட்டுப் போகலாம்னுதானே ப்ளான் பண்ணிருக்க.அதுஸ்ரீஇங்க நடக்காது”
“ஆமா இவங்க மட்டும்தான் பெரிய வீட்டுபிள்ளைங்க.போவியா நானும் பெரியவீட்டு பையன்தான்.உங்களுக்கு இந்த கிராமத்துல சொத்து இருக்குன்னா எங்களுக்கு சிட்டில இருக்கு.இந்த டாக்டர் பொழப்பையும் அதுல வர்றதையும் வைச்சுத்தான் வாழணும்னு எனக்கில்ல.வந்துட்டானுங்க.மூக்கை உடைச்சிடுவேன்”என்று எகிறினான்.
அவனது சட்டையைப் பிடித்து இழுத்த ரோஜா வார்த்தையே வாராது கலங்கிய கண்களோடு”என்னதிது?ஏன் இப்படி செய்த?என்னை எல்லோரு முன்னாடியும் கேவலப்படுத்ததான் இந்த ஊருக்கே வந்தியா?இப்போ இந்தத்தாலியை கழட்டினா அதுக்கும் ராசியில்லாதவ அமங்களின்னு வரும்.ஆகா மொத்தம் உன் பங்குக்கும் என் மனசோடவும் வாழ்க்கையோடவும் விளையாடிட்ட.இந்தத் தாலிக்கட்டினா மட்டும் வாழ்க்கை முடிச்சிப்போச்சா?அதுக்குப்புறம் உள்ளதையெல்லாம் நீ யோசிக்கலையா?”என்றவளுக்கு அழுகையாக வந்தது.சுற்றி ஊர்மக்கள் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.
“இப்போ எதுக்கு அழறடி.நான் உன்னை விரும்புறேன்.உன்னோடுதான் என் வாழ்க்கை இருக்குன்னு நம்புறேன்.அதுதான் சாமி முன்னாடி தாலிக்கட்டினேன்.என் கடந்தகால வாழ்க்கையை உன்கிட்ட சொல்ல எனக்குக் கடமை இருக்கு.அதுக்காக இப்படி ஊர்மக்கள் முன்னாடி சொல்லமுடியாது.இனி முடிவு உன் கையிலதான் இருக்கு.என்கூட வாழ்றதுக்காக வான்னு மனப்பூர்வமா உன்மேல் உள்ள காதலோடுக் கூப்பிடுறேன்.என் மேல நம்பிக்கை இருந்தா என்கூட வா”என்று கையை நீட்டி அழைத்தான்.
ரோஜா தன் தகப்பனை பார்த்தாள்.அவருக்கும் இதில் சம்மதம் போல இருக்கவும் அவரும் அமைதியாக பார்த்தார்.
அதைக்கண்ட அண்ணனுங்க இரண்டுபேரும்
“அப்பா எங்களை விடுங்கப்பா நம்ம பட்டுவை பேசிய ஏமாத்துறான்.அவ விருப்பமில்லாமல் இவன் தாலியைக் கட்டிட்டு வாழ்றதுக்கு வான்னு கூப்பிடுறான்.அவனை சும்மாவிடச் சொல்லுறீங்களா?”
“இது நம்ம வீட்டுப்பொண்ணு வாழ்க்கை குணசேகரா?நிதானமாகதான் யோசிச்ச் முடிவெடுக்கணும்.இப்போ அவரு தாலிக்கட்டின பிறகு அவளை நம்ம வீட்டுக்குள்ள வைச்சிருந்தா வேறெரு மாப்பிள்ளைப் பார்த்துக் கட்டிக் குடுத்திடுவியா?உன்னால முடியுமா?இவ்வளவுதூரம் ஆனபிறகு எவன் வருவான்.ஏற்கனவே நம்ம வீட்டுப்பொண்ணுக்கு ராசியில்லை.அமங்களின்னுஃபேரு வைச்சிட்டானுங்க இப்போ இவனையும் அடிச்சிவிரட்டிட்டு நம்ம பட்டுவை மொத்தமா சாகடிக்கப்போறீங்களா?”என்று கேட்டவர் இருமியபடியே தனது நெஞ்சை பிடித்தார்.
அதைப்பார்த்த எல்லோரும் பதறி அப்பா என்று அவரைப் பிடிக்க,ஐயோ மாமா என்று உரிமையாக அழைத்துக்கொண்டு சூர்யா ஓடிவந்து அவரது நெஞ்சைத் தடவிவிட்டு அங்கயே உட்காரவைத்து செக் பண்ணினான்.
(டேய் டாக்டரே என்னாமா நடிக்கிறடா.சிவாஜி தோத்துட்டாருடா உன்கிட்ட)
ரோஜா உட்பட எல்லோரும் பயந்து ஒன்றும் பேசாது பயந்து நின்றிருந்தனர்.
அவர்கேட்ட அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது மகன்கள் இருவரும் விக்கித்துபோய் நின்றனர்.
இப்போ கருப்பசாமி நெஞ்சை வேற பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவும் “நீங்க சொல்லுறதை நாங்க ஏத்துக்கிறோம்ப்.ஆனால் நம்ம பட்டுவுக்கு என்ன குறைச்சல்னு இவனுக்கு இரண்டாந்தரமா வாழ்க்கைப்பட்டு வாழணும்னு இருக்கு.இவனும் இவன் ஞ்சியும் நல்ல ஏமாத்துறான்பா.அவன் பொண்டாட்டி பிரிஞ்சிருக்கான்னா இவனுக்குத்தானேப்பா பிரச்சனை இருந்திருக்கும்.இது வேண்டாம்பா”என்று கருணாகரன் பேசினான்.
கருப்பசாமியோ “கருணா இதையெல்லாம் இங்க வைச்சு பேசவேண்டிய அவசியமே இல்லை.கோவில் விசேஷம் முடியட்டும் நம்ம இதைப்பத்தி வீட்டுல பேசி முடிவெடுப்போம்” என்று அப்போதைக்கு அந்தப்பிரச்சனையை ஒத்திவைத்தார்.
மல்லிகாவுக்கோ “எப்படியோ அந்த சாமியா பார்த்துதான் நம்ம மகளுக்கு இப்படி ஒரு வாழ்க்கைக் கொடுத்திருக்கு.ஆனாலும் இந்த டாக்டரு மொதப்பொண்டாட்டியை விட்டுட்டு பிரிஞ்சிருக்காரு.இப்போ என் மகள் கழுத்துல தாலிக்கட்டியிருக்காரே.என் மகள் வாழ்க்கை சந்தோசமாகப் போகுமான்னு தெரியலையே?”என்றும்,ஐயோக்ஷென் புருஷன் நெஞ்சு பிடிச்சிட்டு உட்கார்ந்திருக்காரே என்று மனசுக்குள்ளாகவே பயந்து அவர் ஒரு திசைக்கு யோசித்துக்கொண்டிருந்தார்.
குணசேகரனுக்கும் கருணாகரனுக்கும் மனம் கேட்காது பாவமாக நிற்கும் தங்கையைத்தான் பார்த்தனர்.அவளருகில் போக முயன்றனர்.
சூர்யா அவளை இழுத்து தன்பக்கமாக நிறுத்தி அவளது தோளில் கையைப்போட்டுப் பிடித்துக்கொண்டு சாமிக்கும்பிட நின்றிருந்தான்.
(டாக்டரு இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா?)
அவளோ கோபம் வந்தாலும் அதைக் காண்பிக்காது அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்து”டாக்டரு கையை எடு இல்லை கையை கடிச்சு வைச்சிருவேன்”என்று மிரட்டவும் சிரித்தவாறே அவள் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டு பொண்டாட்டிக்கு அடங்கும் நல்ல புருஷனாக நின்றிருந்தான்.
இத்தனை நடந்தப்பிறகும் ரோஜாவின் கைகளில்தான் பூஜா இருந்தாள்.அவளை அவள் இறக்கிவிடவே இல்லை.அவளது அண்ணனுங்க சூர்யாவை அடிக்கப்போய் சண்டைப்போடும்போதும் பயந்து அவளது தோளில் ஒட்டிக்கொண்டாள். அவள்தான் பூஜாவின் முதுகைத் தடவிக்கொடுத்து சமாதானப்படுத்தினாள்.
தன்னவனின் குழந்தை என்ற தாய்மை அவளுக்குள் ஏற்கனவே வந்திருக்க அவளால் பூஜாவை எந்த சூழ்நிலையில் வெறுக்கவே விலக்கிவைக்கவோ முடியாது அவளது மனசு திணறியதுதான்.அந்த தடிமாடு செய்ததுக்கு பச்சைப்புள்ளை என்ன செய்யும்? என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்
கழுத்தில் கிடந்தத் தாலியை மீண்டும் ஒருமுறை கையிலெடுத்து பார்த்தாள்,அவனையும் பார்த்தாள்.
“நான்தான் நானேதான் கட்டினேன்”என்றான்.
அவனை அத்தனைக்கூட்டத்திலும் அடிக்க முடியாது பல்லைக்கடித்துக்கொண்டு முறைத்தாள்.அவனோ ஈயென்று பல்லைக் காண்பித்துக்கொண்டிருந்தான்.
உடனே ரோஜா முகத்தைத் திருப்பிக்கொண்டு சாமியைப் பார்த்துக்கும்பிட்டாள். அவளது இதயத்தின் மொத்த பாரத்தினைத் தாங்காது அவளது கண்களில் இருந்து கண்ணீர் பொளபொளவென்று வந்தது.
அதைப்பார்த்தவன் பதறி அருகில் நெருங்கினான்.அதற்குள் பூஜா அவளது குட்டிக்கரங்களினால் அவளது கண்ணீரை துடைத்துவிட்டாள்.
அவ்வளவுதான் அதைப்பார்த்துக்கொண்டிருந்த மல்லிகா முதற்கொண்டு அப்படியே நெகிழ்ந்துப்போய்விட்டனர்.
ரோஜா அவளை அப்படியே இறுக்கி கட்டிக்கொண்டு தன் முகத்தோடு அவளது முகத்தை வைத்து சாமிக்கும்பிடு என்று அவளது கையையும் பிடித்து கும்பிடவைத்தாள்.
பெற்றவளிடம் காணாத தாய்மையை உற்றவளிடம் காண்பதினால் வந்த பந்தம் இது!இது சொல்லி தந்து வந்த பாசமில்லை.உணர்வோடு பிணைந்த தாய்மகள் பந்தம்!
இந்த வரம் தனக்கு கிடைக்காது என்று நினைத்திருந்தவளுக்கு ஆண்பெண் உறவில்லாது,இரத்தபந்தம் இல்லாது,மசக்கைக் காணாது வந்த மகளல்லவா!
‘இரண்டாவதாக என் கழுத்தில் தாலி விழவைச்சிருக்க கடவுளே!இது நீயா எனக்கு தந்ததுன்னு ஏத்துக்கிறேன்.இதுல எந்த பிரச்சனை வந்தாலும் நீயே பார்த்துக்க.நான் உன்கிட்டதான் வந்து முறையிடுவேன்!என் வாழ்க்கையை உன்கிட்டதான் யாசிக்கிறேன்!’என்று உருகி சாமிக்கும்பிட்டுவிட்டு அமைதியாக நின்றிருந்தாள்.
கருப்பசாமி ஊர்மக்களிடம் வணங்கி”இதெல்லாம் எங்க வீட்டுப் பிரச்சனை.இதை நானே பார்த்துக்கிறேன்.தயவுசெய்து ஏதாவது தப்பாக இருந்தா மன்னிச்சிடுங்க”என்று பேசி விடைபெற்று காரில் ஏறினார்.
அவர்பின்னாடியே வந்த மல்லிகாவிடம்”உன் மகன்களை வரச்சொல்லு பேசவேண்டியதிருக்கு.டாக்டரையே அவருக்குடும்பத்தைக் கூட்டிட்டுவரச்சொல்லு”என்றவர் வெளியே வந்து நின்றுகொண்டார்.
‘டாக்டரை அவருக் குடும்பத்தைக்கூட்டிட்டு வரச்சொல்லுன்னு சொன்னாரே அப்போ இவருக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்தான்போல’ என்று மல்லிகா யோசிக்க அதையேதான் பின்னாடி வந்த மகன்களும் நினைத்தார்கள்.
“என்னதிது இந்த அப்பா இப்படி படக்குன்னு இந்த டாக்டர் செய்ததை ஏத்துக்கிட்டாரே.அவனை நையப்புடைச்சி இந்த ஊரைவிட்டுத் துரத்திவிடணும்னு இருக்கோம்.இவரு நம்ம பட்டுவை அவருக்கூட வாழ அனுப்பிடுவாருபோல” என்று கோபத்தில் செய்வதறியாது பல்லைக் கடித்துக்கொண்டிருந்தனர்.
மல்லிகா சத்தமாக “பட்டு உன்னையும் உன் வீட்டுக்காரரையும் அப்பா உங்கக்கார்லயே வீட்டுக்கு வரச்சொல்லுறாரு.சீக்கிரம் உங்க கார்லயே வந்திடுங்க”என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
ரோஜாவோ “என்ன சொல்லிட்டுப் போறாங்க இந்தம்மா?”என்று யோசித்தவாறே சுற்றிப்பார்த்தாள்.
அவர்களை வேடிக்கைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம்
நின்றிருந்தது.இதற்குமேல் இங்கே நின்றிருந்தால் நம்மளை பொருட்காட்சி பார்க்கிற மாதிரி பார்ப்பாங்க என்று நினைத்தவள் வேகமாக பூஜாவைத் தூக்கிக்கொண்டு நடந்தாள்.
“ஒத்தைத் தாலியில நம்மளை இப்படியாக்கிட்டானே! இந்த டாக்டரு இருடா உன் மண்டையை உடைக்கிறேன்” என்று நடந்துப்போனவள் அவனது காருக்கு முன்னாடி போய் நின்றாள்.
அவளது மனநிலையை அவளாலயே விவரிக்க முடியாதநிலையில் இருக்கிறாள்.
உடனே அவளது பின்னாடியே வந்தவன் அவளுக்கு முன்பக்க கதவைத் திறந்துவிட்டான்.அவள் ஏறி உட்கார்ந்ததும் அவனும் ஏறி உட்கார்ந்து காரை எடுத்தான்.
திருவிழாவுக்கு வராது வீட்டில் இருந்த லலிதா கார் தனித்தனியாக வரும் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்து மேலே நின்றவாறே பார்த்துக்கொண்டிருந்தார்.
கருப்பசாமி குடும்பம் வந்து இறங்கியதும் அவளது அண்ணனுங்க இரண்டுபேரும் கோபத்தில் காத்திருந்தனர்.
“என்னாச்சு வீட்டுக்குள்ள போகாமல் எல்லோரும் வீட்டு முன் வராண்டாவுல காத்திருக்காங்க?” என்று லலிதா பார்த்திருக்கும்போதே சூர்யாவின் கார் வந்து நின்றது.
அவன் இறங்கியதும் அந்தப்பக்கம் வந்து கதவைத் திறந்துவிட தூங்கும் பூஜாவைத் தனது தோளில் போட்டுக்கொண்டு ரோஜா இறங்கினாள்.
அவளது கழுத்தில் தாலியும் நெற்றியில் குங்குமத்தையும் பார்த்த லலிதா அப்படியே அதிர்ந்து பேச்சற்று நின்றார்.
சூர்யாவும் ரோஜாவும் இறங்கி வந்ததுமே கருணாகரன் அவனை அடிக்க கையோங்கிட்டு வந்தான்.குணசேகரன் அருவாளைத் தூக்கிட்டு வந்தான்.
அவர்களது கோபத்தை பத்தி நன்கு தெரிந்த ரோஜா வேகமாக முன்னாடி வந்து சூர்யாவை மறைத்து நின்றாள்.
“பட்டுமா!”என்று இருவரும் அதிர்ந்து அவளைப் பார்த்தனர்.
“முதல்ல தாலியேறிய அன்னைக்கே கடவுள் அதை பறிச்சிக்கிட்டாரு.அதுதான் எனக்கு எதுவுமே தெரியாத ஒரு வயசு.ஆனால் அதனுடைய தாக்கம் இப்போவரைக்கும் இருக்கு.மறுபடியும் இரண்டாவது தடவையா என் கழுத்துல தாலி ஏறியிருக்கு அதையும் உடனே அறுத்தெறிய பாக்குறேங்களேண்ணே.அவருக்கு என்னை பிடிச்சிருக்குன்னுதானே தாலிக்கட்டினாரு.அவரு மனைவியை பிரிஞ்சிருக்காரு. அவங்க எங்க வாழ்க்கையில குறுக்கவாரமாட்டாங்கன்னுதானே சொல்லுறாரு.நானும் துணிஞ்சு இந்த வாழ்க்கைக்குள்ள இறங்குறேன்.அவரு என் வாழ்க்கையில விளையாடியிருந்தா நீங்க என்ன நானே அவரை வெட்டுவேன்”என்றவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“ஆகமொத்தம் யாருக்கும் என்மேல நம்பிக்கை வரலை க்கும் இதுக்கு எதுக்குடா நான் தாலிகட்டணும்.அப்படி தப்பானா வாழ்க்கையை வாழணும்னா தாலிக்கட்டியிருக்கமாட்டனே.வேறமாதிரி பயன்படுத்திட்டு போயிருப்பனே.என் வாழ்க்கை ரோஜான்னு முடிவு பண்ணித்தான் கல்யாணம் பண்ணிருக்கேன்.அவளில்லாமல் நானில்லை.இதுதான் நான் தீர்மானமாக சத்தியம் பண்ணிச் சொல்லும் வார்த்தை.நம்புனா நம்புங்க.இல்லையா நான் தூக்கிட்டுப்போய் அவளோடு லாழ்வேன்.எவனும் என்னைத் தடுக்கமுடியாது.உங்க அருவாளாம் என்னை ஒன்னும் செய்யமுடியாது”என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இரண்டு ஹிப்போபொட்டமஸுக்கே சவால் விட்டான்.
அதைக்கேட்டு அவர்கள் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினார்கள்.
ரோஜோவோ அவனை கோபத்தில் திரும்பிப் பார்த்து “தூக்கிட்டுப்போய் வாழுவியா?பக்கத்துல வந்துப்பாரு கடிச்சு வைக்கிறேன்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
அவனோ “அதுக்காகதானே காத்திட்டிருக்கேன் ஒத்த ரோசா” என்றவன் அவளைப் பார்த்து சைக்கிள் கேப்ல கண்ணடித்து உதடுக்குவித்து முத்தம் வைத்தான்.
இந்த ரணகளத்திலயும் இவன் எப்படி இப்படி இருக்கான்?
“யார்ல நீ?”என்ற ரீதியில் அவனை அதிர்ச்சியில் ரோஜா பார்த்திருந்தாள்.