மெய் பேசும் மித்தியமே-23

மெய் பேசும் மித்தியமே-23
சூர்யாவின் நெஞ்சில் ரோஜா மலர்ந்துப்பூத்துக்கிடந்தாள்.விடிந்து வெகுநரேம் கழித்துதான் தூங்கினதால் யாரும் எழுந்திருக்கவில்லை.
லலிதாதான் காலையில் எழுந்து தனக்கானதைச் செய்து சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தார்.அவருக்கு சூர்யா மீது அவ்வளவு கோபம் வந்தது.
கொஞ்சம்கூட பொருத்தமே இல்லாத பெண்ணைக் கட்டிக்கிட்டான் என்றுதான் நினைத்தார்.அவருக்குத் தெரிந்தது எல்லாம் படிப்பு, பதவி,பணக்காரத்தனம் இதுதான்.அதைத்தான்டி வசதி வாய்ப்பும் இருந்தும் எந்தவிதமான அலட்டலும் இல்லாத மனிதர்களாக வாழும் இவர்களை லலிதாவுக்கலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லைதான்.
மல்லிகாதான் மகளை நினைத்து தூங்காதிருந்தவர் காலையில் இருந்து மத்தியானம்வரைக்கும் இரண்டுமுறை வந்து பார்த்துவிட்டுப்போனார்.
இப்போது மெதுவாக எழுந்த ரோஜாதான் தன் பக்கம் எந்தவிதமான தயக்கமும் இன்றி தன்னையே நம்பி கைப்போட்டுப் படுத்திருந்த கணவனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.
“என்ன இது?எல்லாமே கனவாகவே இருக்குது?இப்போதான் இந்தாளைத் தண்ணிக்குள்ள இருந்துக் காப்பாத்தின மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள இரண்டுபேருக்கும் கல்யாணம் முடிஞ்சு எல்லாமும் முடிஞ்சு”என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
அந்தப்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
பூஜா அவளது புடவையைத் தனது கைகளுக்கு இடையில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் அப்படியே இருந்த யோசனை எல்லாம் கைவிட்டுவிட்டு அவளை தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டாள்.
தூங்கும் அந்த அப்பன் பெற்ற குழந்தையின் மீது அவ்வளவு பாசம் பொங்கி பிரவாகிக்க அப்படியே வாரியணைத்து முத்தமிட்டாள்.
அந்த முத்தத்தில் கண்களை திறந்து பார்த்தா பூஜா ரோஜாவின் முகத்தைப் பார்த்ததும் அப்படியே தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டு அவளது தோளில் படுத்தாள்.இந்தப் பாசம் போதுமே ரோஜாவுக்கு!
தனக்கு ஒரு குழந்தை பிறக்குமா? என்று அவளுக்கு தெரியாது. குழந்தை பிறந்தாலும் பிறக்காமல் போனாலும் எதுவாக இருந்தாலும் பூஜாவை தனது சொந்த மகளாகவே அவள் உணரத் தொடங்கி இருந்தாள். அது தான் உண்மையும்கூட!
கல்யாணம் முடியுமா? முடியாதா? என்று தனது உணர்வுகளை மரத்துப் போக வைத்திருந்தவளுக்கு கடவுள் ஒரு கல்யாண வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அவளுக்கு குழந்தை இல்லை என்றாலும் அவளுக்கு கவலை இல்லை. பூஜா இருக்கிறாள் இதுபோதுமே! இதற்கு மேலும் தனக்கு குழந்தை வேண்டும் என்ற பேராசையெல்லாம் அவளுக்கில்லை.
அப்படியே பூஜாவை தூக்கிக் கொண்டு போய் பல் தேய்த்து விட்டு, குளிக்க வைத்து, அவளும் குளித்து இருவரும் வெளியே வரவும் மல்லிகா வரவும் சரியாக இருந்தது.
“என்ன பட்டுமா நீ? நாங்க எல்லாம் பயந்து போய் என்னாச்சோ ஏதாச்சோன்னு கவலையோட காலையிலே எழும்பி வந்து பார்த்திட்டிருக்கேன்.இதோட நாலுதடவை வந்து பார்த்துட்டேன். நீ இப்பதான் ஆடி அசைஞ்சு தூங்கி எழும்பி வர்ற.இது என்ன பழக்கம்?” என்று சத்தம் போட்டார்.
அதைக்கேட்டதும் “யம்மா பசிக்குதும்மா ஏதாவது செய்தியா?கொண்டு வந்திருக்கியா?பூஜாவுக்கு பால் காய்ச்சிக்குடுக்கணும்”என்று செல்லம் கொஞ்சினவளைப் பார்த்து மல்லிகாவுக்கு சந்தோசமாகத்தான் இருந்து.
அவளது முகத்தில் தெளிவு இருந்தது.இரவு இருந்தக் குழம்பம் இல்லை.உடனே அருகில் வந்து “பட்டுமா”என்று கன்னத்தைத் தடவினார்.
அவருக்குப் புரிந்துவிட்டது.மகளது வாழ்க்கை துளிர்க்கத் தொடங்கிவிட்டது,சூர்யபிரகாஷ் அப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுக்கக்கூடியவர் இல்லை.அவர் யோசித்துதான் இதை செய்திருக்கிறார்.இதுபோதும் மகளோட வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று நிம்மதியானவர்.
“வா பட்டுமா கோழிக்கறியும் இடியாப்பமும் கொண்டு வந்திருக்கேன்.மருமகன் என்ன சாப்பிடுவாங்கன்னு தெரியாது.பாலும் வைச்சிருக்கேன்,தேங்காப்பாலும் வைச்சிருக்கேன்.வா வந்து சாப்பிடு அவருக்கும் எழுப்பிக் குடு”
சரிம்மா நான் சாப்பிடுறேன் என்றவள் லலிதா அங்கு இருப்பதைப் பார்த்து அத்தை “வாங்க உங்களுக்கும் எடுத்து வைச்சிருக்கேன்.சூடா சாப்பிட்டிருங்க”என்றவாறே சமையலறைக்குள் சென்று எல்லாம் எடுத்துட்டுவந்து வைத்தாள்.
அதைப்பார்த்த லலிதா ஒன்றுமே பேசாது எழுந்து உள்ளே போய்விட்டார்.
ரோஜாவுக்கு சட்டென்று கோபம் வந்தது.அவளது முகம் மாறியது.
அதைப்பார்த்த மல்லிகாதான் அவளது கையைப்பிடித்து”இப்படித்தான் இருப்பாங்க.எல்லோருடைய குணமும் ஒன்னுபோல இருக்காதுல்ல.நம்ம வீட்டுல மாதிரியே எல்லா இடத்துலயும் உன்னை ராணியாகவோ இளவரசியாக நடத்தவும் மாட்டாங்க.அப்படி உணரவைக்கவுமாட்டாங்க.மனுஷங்க இப்படித்தான்னு சில இடங்களில் அமைதியாகக் கடந்துப்போயிடு.அதுதான் நம்ம மனசுக்கும் நிம்மதி வாழ்க்கைக்கும் நிம்மதி.அதனால் உன் துடுக்குத்தனத்தை இங்க காண்பிக்காத.மருமகன் மனசைப்பார்த்து நடந்துக்க.பூஜாவைப் பாரு”
“ம்ம்ம்”என்றவள் பூஜாவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டாள்.
“யம்மா அப்பாவைப் பார்க்கணும்போல இருக்கு.நான் கீழ வர்றேன்.அப்பாவைப் பார்த்துப்பேசினாதான் நிம்மதியா இருக்கும்”
“அது அது பட்டுமா நீ அப்பாவை பிறகு வந்துப் பார்த்துப் பேசு.இப்போ அண்ணனுங்க இருக்கானுங்க உன் மேல கொஞ்சம் கோபத்துல இருக்கானுங்க.நீ வீட்டு வந்தா ஏதாவது சொல்லிட்டா உனக்கு சங்கடமாயிடும் பாரு”என்று வார்த்தைகளை மென்னு முழுங்கினார்.
அதைக்கேட்டதும் சட்டென்று மனம் தடுமாற அப்படியே உட்கர்ந்துவிட்டாள்.அவளது தோளில் கைவைத்த மல்லிகாதான்”ஏய் பட்டுமா எதுக்கு இப்போ இப்படி இடிஞ்சுப்போய் உட்கார்ந்துட்ட. உங்கண்ணனுங்களைப் பத்தி உனக்குத் தெரியாதா?உன்மேல உள்ள பாசத்துல நேத்து உன்னை கூப்பிட்டாங்க.நீ மருமகன்கூட வந்துட்டியா?அதுத்தான் வருத்தம்,கோபமெல்லாம்.எல்லாம் சரியாகிடுவாங்க.நீ சங்கடப்படாத”என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.
ஆனால் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர சட்டென்று அழுதுவிட்டாள். அவள் அழுகிறதைப் பார்த்த பூஜா பயந்து அவளது கையைப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
பூஜா அழவும்தான் தனது கண்ணீரைத் துடைத்துவிட்டு அப்படியே அழுகையை அடக்கிக்கொண்டாள்.அதற்குள் பூஜா சத்தமாக அழவும் அதில் கண்முழித்து வெளியே வந்த சூர்யா இவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு மெதுவாக வந்து ரோஜாவின் அருகில் உட்கார்ந்தான்.
“என்னாச்சு?”
“அது ஒன்னுமில்ல மருமகனே.அவங்க அண்ணனுங்க பேசமாட்டாங்கன்னு நினைச்சு அழுதா.அவ்வளவுதான் வேற எதுவுமில்லை.நீங்க பேசிட்டிருங்க நான் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்று அவர்களுக்கு தனிமைக் கொடுத்து போய்விட்டார்.
பூஜாவைப் பார்த்துச் சிரித்தவன் “ரோஜாம்மா எதுக்கு அழுதாங்கன்னு கேட்டியா பூஜா?”
“இல்ல”
“அப்போ நீ எதுக்கு அழுத”
“ரோஜாம்மா அழுதா”
“ஓஓ ரோஜாம்மா கண்ணைத் துடைச்சிவிடு” என்றவன் அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.
பூஜா தனது பூங்கரங்களால் ரோஜாம்மா அழாத என்று கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
அவளது தோளைப்பிடித்து தன்பக்கமாகச் சாய்த்து அவளது தோளை வருடிக்கொடுத்தவன்”கண்ணீரை சும்மா சும்மா அழுது அதுக்கான மதிப்பை இழக்க வைக்கக்கூடாது மை பொண்டாட்டி புரியுதா.உங்கண்ணனுங்க என்ன உன்கிட்ட பேசாமல போயிடுவானுங்க.நம்ம நல்லவாழ்ந்து காண்பிச்சா சந்தோசத்துல பேசுவாங்க.விடு.இதுக்காகவெல்லாம் அழாத”என்று ஆறுதல் படுத்தினான்.
அப்படியே அவங்க அம்மா அறையை எட்டிப்பார்த்தான்.லலிதா உள்ளே இருந்தும் மகனிடம் பேசக்கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தார்.
“இனி யாருக்காகவும் நம்ம வாழ்க்கையை விட்டுக்கொடுக்கமுடியாது.நமக்கான வாழ்க்கை நாமதான் வாழ்ந்தாகணும். என் வாழ்க்கையை என்னிஷ்டப்படி வாழப்போறேன் அவ்வளவுதான்”என்று யாரையும் கண்டுக்காது எழுந்துப்போய் குளித்துவிட்டு வந்தான்.
ரோஜா அவனுக்காக சாப்பாடு எடுத்து வைத்தாள்”நீ சாப்பிட்டியா?”
“ம்ம்ம்”
“உனக்குப் பிடிக்கும்னுதான் இடியாப்பமும் கோழிக்கறியும் கொண்டுவந்தாங்க.எனக்கும் அதையே தாடி. ஏன் பால் வைக்கிற?”
“உங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதே?”
“உன்னைத்தான் பிடிக்கும் இப்பவே சாப்பிடவா?”என்று கண்ணடிதான்.
அதைக்கேட்டதும் கொஞ்சம் வெட்கம் கலந்தக் கோபத்தில் அவனை முறைத்தவள் “பிள்ளைக்கு முன்னாடி கேட்கிற கேள்வியைப் பாரு. டாக்டருக்கு மூளை மழுங்கிடுச்சுப்போல”என்றவள் அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
“இப்போ இருக்கிறதுக்கு ரொம்ப தெம்புத் தேவைன்னு தெரிஞ்சே என் மாமியார் கோழிக்குழம்பு அதுவும் நாட்டுக்கோழியை குழம்பு வைச்சுக்குடுத்திருக்காங்க.மாமியாருக்குத் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுடி”
ஹ்ம் ஹ்ம் என்று கண்களாலே அவனிடம் ரகசியம் பேசினாள்.
“ம்ம்ம் நீ அன்னைக்குக் கொண்டுவந்த முருங்கக்காய் குழம்புதான் செம் டேஸ்ட்டு.அந்தளவுக்கு இது இல்லைடி. நீ முருங்கைக்காய் போட்டு குழம்பு வைச்சி தந்தா இப்போதைக்கு ரொம்பத் தெம்பா இருக்கும்டி”
“அதுசரி முருங்க கம்பால அடிவேணும்னா இப்போதைக்கு கிடைக்கும்.டாக்டரு மாதிரி பேசுங்க.டாக்டர் மாத்ரூபூதம் மாதிரி பேசாதிங்க”
“க்கும் பொண்டாட்டிக்கிட்ட டாக்டர் மாத்ரூபூதம் பேசின விசயத்தைத்தான் செயல்ல காட்டணும்டி.இதுக்கூட தெரியாமதான் டீச்சருக்குப் படிச்சியா என்ன?”
“டீச்சருக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?”
“டீச்சரு நடத்த வேண்டிய பாடத்தை எனக்கு ஒழுங்கா நடத்தணும்லடி அதுதான்”
“ஒத்தை இராத்திரியில் மொத்தமா முடிச்சிட்டு பேச்சைப்பாரு பேச்சை போயா”என்று எழுந்தவள் பூஜாவைத் தூக்கிட்டுப் போனாள்.
“அடியேய் கருப்பாசமி மவளே எனக்கு சாப்பாடு போட்டுட்டு போடி”
“போடமுடியாது போய்யா.நீயே எடுத்துப்போட்டுக்க”என்றுவிட்டு உள்ளே போனாள்.
அவளைத் திரும்பிப் பார்த்து சத்தமாக சிரித்தவன் முன்பு லலிதா வந்து உட்கார்ந்தார்.
“என்னம்மா சாப்ட்டீங்களா?உங்க வீட்டுக்காரருக்கு போன் பண்ணுனீங்களா?இங்க நடந்த விசயத்தைச் சொல்லிட்டீங்களா?”
“என்ன சூர்யா பேச்சில நக்கல் தொணிக்குது?”
“பின்ன என்னம்மா என் ஆசை விருப்பம் இதையெல்லாம்விட உங்களுக்கு உங்க கௌரவம் முக்கியம்னு நேத்து ரோஜாவை திட்டுனீங்க.உங்களுக்கும் உங்க வீட்டுக்காரருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.விடுங்க” என்றவன் சாப்பிட ஆரம்பித்தான்.
“நான் சென்னைக்குப் போறேன்”
“சரி போங்க.கார் ஏற்பாடு பண்ணட்டுமா”
இப்படிக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார்.
“ஓஓ அப்போ நான் எப்போ கிளம்புவேன்னுதான் காத்திருக்கிற.சரிதான் புதுசா பொண்டாட்டி வந்தாச்சு.இனி நாங்களாலம் இடைச்சல்தானே.கொஞ்ச நாள் பூஜாக்கூட இருந்துட்டுப் போறேன்”என்று எழுந்துப்போய்விட்டார்.
அவரைப்பார்த்து ஏக்கமாகப் பார்த்தவன் இவங்க இங்க ரொம்ப நாள் இங்க இருக்கமாட்டாங்க.போனா போகட்டும் என்று நினைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.
எப்படியும் இவங்க நம்மளோடு இருக்கப்போறதில்லை.அதனால் அமைதியா போவோம்.எப்படியும் பிறவி குணம் வெளியே வரும் என்று சாப்பிட்டு எழுந்துப்போனான்.
ரோஜாவும் பூஜாவும் பேசிக்கொண்டிருக்க அவர்களைப் பார்த்தவாறே துணிகளையெல்லாம் எடுத்து வைத்தான்.
அதைப்பார்த்த ரோஜா புருவம் சுருக்கிப்பார்த்தாள்.அதைக்கண்டவன் தனது உதட்டைக் குவித்து முத்தம் வைத்தான்.
அடிங்ங் என்று நாக்கைத் துருத்தியவள் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
“பூஜாகுட்டி உன் ட்ரஸ்ஸெல்லாம் ரோஜாம்மாவை எடுத்து வைக்கச்சொல்லு அப்படியே ரோஜாம்மா ட்ரஸ் கீழே இருக்கு அதை எடுத்து வைச்சிருப்பாங்க.அதை எடுத்துட்டு நம்ம ஊருக்குப்போறோம் வாங்க”என்று கூப்பிட்டான்.
“ஊருக்கா?யாரு ஊருக்கு?எந்த ஊருக்கு?என் ஊரைவிட்டெல்லாம் நான் வரமாட்டேன்”என்று சொன்னவளின் கண்களில் பயம் இருந்தது.
“அதைப்பார்த்தவன் ஏன் உன் புருஷன் ஊருக்குக் கூப்பிட்டா வரமாட்டியா?கல்யாணம் முடிஞ்சா புருஷன் ஊருக்குத்தானே வரணும்”
“அதைக்கேட்டதும் அது அது உங்க ஊரு எந்த ஊருன்னு சொல்லுங்க”என்று குரல் நடுங்கக் கேட்டாள்.
“முதல்ல கிளம்புடி கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூனுக்குக் கிளம்பிட்டிருக்கேன்.இவா ஒருத்தி பயந்துச்சாகுறா.என்னை எவளும் கடத்திட்டுப்போகமுடியாது.நான் உனக்கு சொந்தமானவன்,அது முதல்ல மனசுல பதியவையிடி என் ஒத்தை ரோசா” என்று அவளருகில் போய் அவளை இழுத்து தன்னோடுக் கட்டிக்கொண்டான்.
அதற்குமேல் அவள் ஒன்றுமே பேசவேயில்லை.இருவரையும் அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.லலிதாவிடம் தகவலாக மட்டும் சொல்லியிருந்தான்.அவருக்கு ஏக்கக்கடுப்புத்தான்.நம்மளை கண்டுக்கவேமாட்டுக்கானே என்ற ஆதங்கமும் வந்தது.
அதேயெல்லாம் அவன் சட்டை செய்யவேயில்லை.ரோஜாவும் அவனும் காரில் ஏறவும் மல்லிகாதான் அவளுக்கா பேக்ஐ எடுத்து வந்துக்குடுத்தார்.
கருப்பாசமிக்கு மகளைப் பார்த்து சந்தோசம்தான்.அவள் வாழட்டும் யாரும் என்னமும் சொல்லிட்டுப்போகட்டும்,அதுக்கெல்லாம் கவலைப்பட்டால் நம்ம மகள் வாழ்க்கை என்னவாவது?என்று தெளிந்துவிட்டார்.
குணசேகரனுக்கும் கருணாகரனுக்கும் தங்கை வாழ்க்கிறாள். அதுசரிதான் அது நிலைக்கணுமே என்கின்ற கவலைதான் அதிகமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாது முகத்தைத் திருப்பிக்கொள்கின்றனர்.
அவர்களுக்கு கையசைத்துவிட்டு கண்களை மூடிக் காரில் உட்கார்ந்தவளுக்கு ஒருமாதிரி படபடப்பாக இருந்தது.
குடும்பத்தைப் பிரிந்து தன் கணவன் பூஜான்னு தனது உலகம் சுருங்குதுன்னு ஒரு பயம் தானாகவே வந்தாலும் இதுதான் இனி என் வாழ்க்கை என்பதும் புரியத்தான் செய்தது.
இப்போது பெங்களூரு ஹோட்டலில் தங்கியிருக்க ரோஜாவின் மடியில் பூஜா உட்கார்ந்திருந்தாள்.அவளுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரையும் கண்ணெடுக்காத பார்த்திருந்த சூர்யாவின் மனதில் “ஏன் எனக்கும் ரோஜாவுக்கும் மகளாக பூஜா பிறந்திருக்கக்கூடாது?இந்தக் கடவுளுக்கு ஏன் இத்தனை ஓரவஞ்சனை?”என்று யோசித்தான்.அவனது யோசனை அவனுக்கே அபத்தமாக இருந்தது.அதனால் தலையை உலுப்பி அந்த சிந்தனையை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தான்.
அப்படியே எழுந்து வந்து ரோஜாவின் பின்னால் உட்கார்ந்து அவளை இழுத்து தனது நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
அவளோ அவனது கையைப் பிடித்துத் தனது வயிற்றோடுப்போட்டுப் பிடித்துக்கொண்டாள்.மூவரும் வரிசையாக உட்கார்ந்திருந்தது அவ்வளவு பொருத்தமாக இருந்தது.இதில் யாருடைய அன்பையும் குறைத்து மதிப்பிட முடியாது.
பூஜா ஏன் ரோஜாவிடம் ஒட்டிக்கொண்டாள்?அதுக்கும் விடை தெரியாது.
இந்த நிர்பந்தமற்ற அன்பில்தான் மூவரின் வாழ்க்கையும் கட்டப்பட்டிருக்கிறது!