தினம் தினம் 18

Thinam18

தினம் தினம் 18

18 தினம் தினம்!! 

"இல்லடா வயசு 45 ஆகிப்போச்சு, இப்போ போய் வேலைன்னு எங்கேயாவது நின்னா, நமக்கு முன்னுரிமை தர மாட்டான் .. அதோட கௌரவமான வேலையும் கிடைக்காது.. ஏதாவது கடையில மேற்பார்வை கணக்கு எழுதுறது அந்த மாதிரி இருந்தா கொஞ்சம் பார்த்து வைக்கிறியா? பொண்டாட்டி பிள்ளையை கூட்டிட்டு கிளம்ப போறேன் .. யோசிச்சு யோசிச்சு பார்த்தேன் என்ன செய்யறதுன்னு ஒன்னும் புரியல, கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு .. கொஞ்ச நாள் பொண்டாட்டி புள்ளைய மாமனார் வீட்டில் விட்டுட்டு வரலாம்னு பார்த்தா, ஒரே அடியா வந்தே தீருவேன்னு கைய புடிச்சுகிட்டு தொங்குறா.. நம்ம நிலைமையை இவ என்னைக்கு புரிஞ்சுருக்கா இன்னைக்கு புரிய ... சரி ஒரு வருஷம் தகப்பன் வீட்டுல இருப்போம்னு நினைக்கிறது இல்ல.. உன் கூட தான் வந்து சாவேன்னா , நான் என்ன பண்ண முடியும் சொல்லு , வேற வழி இல்ல கூட்டிக்கிட்டு தான் வந்தாகணும் தங்க வீடு பார்க்க சொன்னேன் ஏதாவது கிடைச்சதா மச்சான்... எங்க போனாலும் உன்கூட தான் வருவேன் என்று மனைவி,பெட்டியை அடுக்க தொடங்கவும் தான் உயிர் போய் படுக்கையில் கிடந்த சத்யா பெருமூச்சு விட்டு எழும்பினான்... எத்தனை முறை இவன் அவளை கொன்றாலும் அத்தனை முறையும் அவனை மீட்டு எடுப்பது என்னவோ அவள்தான் ... எத்தனை கொடுமையானது இந்த காதல் !! 

"ஓஓ ரொம்ப நன்றி டா சின்ன வீடா இருந்தாலும் பரவால்ல அவ சமாளிச்சுக்குவா, அவ வேலை பார்த்த இடத்திலும் கொஞ்சம் சண்டை போட்டுட்டு வந்துட்டேன் அங்கேயும் வேலைக்கு அனுப்ப முடியாது ஒரு ரெண்டு மாசம் தட்டு தடுமாறத்தான் வேணும்...  

காசு எல்லாம் வேணாம் மச்சான், அதெல்லாம் இருக்கு திடீர்னு எதுவுமே இல்லனு ஆகி போச்சா அதான் எங்க இருந்து தொடங்க , என்ன செய்யணும்னு யோசிச்சு யோசிச்சு தலைவலி எடுக்குது.... ம்ம் ம்ம் "

அஞ்சலி பெட்டியில் துணியை அடுக்கிக் கொண்டே ஜன்னலுக்கு அந்தப் பக்கம் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த கணவனின் குரலை கேட்டுக் கொண்டிருந்தாள் 

"ஏன் இந்த ஆறுதல என்கிட்ட வாங்கினா ஆகாதா, என்னடி பண்ணலாம்னு என்கிட்ட கேட்டா நான் சொல்ல மாட்டேனா, இப்ப கூட வாய்க்குள்ள கொழுக்கட்டை தான் வச்சிருப்பான்.. கம்முன்னு உட்கார்ந்துக்கிட்டே இருக்கான், சரி ஏதாவது பேசுவாருன்னு முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தா இப்பவும் நாமதான் விரோதி போல பார்த்து வைக்கிறார்... இதுக்கு தானடா சொன்னேன் அண்டர் கிரவுண்ட்ல பெருசா வச்சு விட்டுருவாங்க கவனமா இருன்னு நான் சொன்னது அப்போ கசந்தது... இப்போ ஐயோ அம்மா காந்துதேன்னு கத்திக்கிட்டு இருக்காரு ... ஆனாலும் இந்த மனுசன பாரக்க பாவமா தான் இருக்கு... கிழவிக்கு எவ்வளவு திமிரு இருக்கணும் , புடுங்கியா கொடுக்கிற இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு அங்க சீவி சிங்காரிச்சு பொட்டு வைக்கிறாங்கன்னு பாக்கத்தானே போறேன்... என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டு நீங்க சௌக்கியமா இருந்துருவீங்களா என்ன?? ச்ச சே , இவங்களையெல்லாம் சாபம் விடுறதுக்கு கூட மனசு வரமாட்டேங்குது ... நாமளும் இவங்களே போல தரம் தாழ்ந்து போக கூடாது ... எப்படியோ இப்பவாவது பொண்டாட்டி ஒருத்தி இருக்கான்னு வீடு வந்து சேர்ந்தாரே , அதுவரைக்கும் போதும் சாமி!! 

"ஒன்னு கிடக்க ஒண்ணு பண்ணிக்காம நமக்கு பொண்டாட்டி புள்ள இருக்குன்னு யோசனை குடுத்தியே, உனக்கு கோடி புண்ணியம் இனிமேலாவது என் அருமை தெரிஞ்சா போதும்... என் அருமை தெரியலனாலும் பரவாயில்லை நமக்கு பொண்டாட்டி பிள்ளை இருக்குன்னு யோசிச்சா கூட போதும் ... 

"அஞ்சு 

"ஹான் 

"ஏழு மணிக்கு பஸ்ன்னு சொன்னா, இன்னும் என்னடி பண்ணிக்கிட்டு இருக்க... ஒவ்வொண்ணா உனக்கு சொல்லித் தரணுமா அஞ்சு, எல்லாம் எடுத்துட்டியா? பிறகு பஸ்ல ஏறின பிறகு அதை எடுக்கல இதை எடுக்கலன்னு சொல்லிட்டு இருக்காத "என்று போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சத்யா உள்ளே வரும்போதே மனைவிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லிக் கொண்டுதான் வந்தான் 

ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இருக்காது அதேபோல பொண்டாட்டி கிட்ட வள்ளு வள்ளுன்னு விழுந்த புருஷன் எவ்வளவு தான் மாற நினைத்தாலும் அது அது புத்திய தான் காட்டும்.... சோ நாய் வாலை நிமிர்த்த ட்ரை பண்ணாம அதுதான் அதோட இயல்பு என்று கடந்து போவது நலம் !! 

"போய் சேர்ந்ததும் அப்பாவுக்கு போன் போடு கண்ணா, இந்தா இதுல கொஞ்சம் திராட்சை பழம் வாங்கி வச்சிருக்கேன்.. உனக்கு பஸ்ல போனா கொமட்டிகிட்டு வரும் இல்ல, அப்போ இத ரெண்டு வாயில பிச்சு போட்டுக்கோ... 

பஸ்ல வந்தா இவளுக்கு குமட்டுமா?? புது தகவல், தன் மகளுக்கு குமட்டும் தெரியும் , இவளுக்கு இந்த பிரச்னை இருப்பது இன்றுதான் சத்யாவுக்கே தெரியும் .. 

புள்ளைக்கு பழம் வச்சிருக்கேன். கண்டதையும் வாங்கி கொடுத்து சாப்பிட வைக்காதே ..

சரிப்பா "

எய்யா விஷ்ணு அம்மாவ பாத்துக்கய்யா, பேருந்து நகர நகர சாந்தகுமார் பேருந்தோடு நகர்ந்து வந்து கொண்டிருந்தார்.. நீள சீட்டில் நான்கு பேரும் உட்கார்ந்திருந்தனர்..

அம்மாடி அப்பா இருக்கேன் இப்பவும் எதுக்கும் கவலைப்படாத சரியா? "

அப்பா எந்த சூழ்நிலையிலயும் கடக்க எனக்கு நீங்க கற்று தந்திருக்கீங்க, அதனாலதான்பா இத்தனை வருஷம் என்னால கடக்க முடிஞ்சது.. பாத்துக்குறேன்பா"

 நீ பாத்துக்கவன்னு தெரியும்த்தா, அந்த நம்பிக்கை அப்பாவுக்கு இல்லையா என்ன ... இருந்தாலும் ஒத்தையாவே இருக்கணும்னு நினைக்காத அப்பாவும் இருக்கேன்னு ஞாபகப்படுத்துறேன் பாத்துக்கத்தா மருமகனை பார்த்துக்க.. கூடவே இரு விட்றாத..."

சரிப்பா "

திருமணம் முடிந்து அஞ்சலியை சத்யா வீட்டிற்கு அனுப்பும் போது இதே போல அலங்கரித்த வண்டியின் பின்னால் தகப்பன் ஓடி வந்தார் அப்போது முகத்தை திருப்பிக் கொண்டவன்..

"விசேஷமா இவருக்கு மட்டும் தான் பொம்பள புள்ள பொறந்த மாதிரி, என்னவோ நான் அவளை கூட்டிட்டு போயி கோவிலுக்கு பலி கொடுக்கிற மாதிரி தங்கம் தகரம்ன்னு கொஞ்சிக்கிட்டு இருக்கார் என்று நக்கல் அடித்து சிரித்தவன் இன்று ஏனோ தன் மடியில் தூக்கத்திற்கு சொக்கி கொண்டிருந்த மகளை குனிந்து பார்த்தான்

இன்று அவர், நாளை நான் அவ்வளவுதான் வாழ்க்கை!!

இன்று யாருக்கோ நாம் செய்வது நாளைக்கு நமக்கு திருப்பி வரும் என்ற உணர்வு இருந்தால் இன்றே சரியாக இருக்க பழகிக் கொள்வோம்.... 

பேருந்து அந்த இருட்டில் மின்மினி பூச்சி போல கருப்பு சாலையில் அழுங்காத சென்று கொண்டு இருந்தது 

அம்மா நான் ஜன்னல் சைட் வரவா என்று விஷ்ணு கேட்கவும் அஞ்சலி எழும்பி நடுவில் வர விஷ்ணு ஜன்னலோரம் போய் உட்கார்ந்து கொண்டான்.. நடுவில் அஞ்சலி கடைசியில் மகளை மடியில் படுக்க போட்டு சத்யா உட்கார்ந்து இருந்தான்... தலையை சீட்டில் சாய்த்து வைத்திருந்தான்

பேருந்தில் உள்ள வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இருட்டாகி விட்டது, ஏதாவது பேசுவான் என்று சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. சத்யா அவளை திரும்பி பார்க்கவில்லை, அஞ்சலி தூக்கத்திற்கு கொட்டாவி விட்டவள்... அவளும் சீட்டில் தலை சாய்த்தவள் அப்படியே தூங்கிப் போனாள். மகள் தலையை தடவி கொடுத்துக் கொண்டே இருந்த சத்யா தன் தோளில் விழுந்த பாரதத்தில் சட்டென்று வலது பக்கம் திரும்பி பார்த்தான். அவன் மனைவி அஞ்சலி தூக்கத்தில் தலை சரிந்து அவன் தோளில் போட்டு இருந்தாள , முதல் தீபாவளிக்கு வந்து விட்டு திரும்பும் போது இதே போல சம்பவம் நடந்தது உடனே தோளை உலுக்கி அவளை எழுப்பி விட்டவன்..

"சீட்ல தலை வச்சு படு அஞ்சு , மேல வந்து விழுற பார்க்கிறவன என்ன நினைப்பான் "என்று சுளளென சத்யா காய்ந்து விட , அஞ்சலி உதட்டை சுளித்து சீட்டில் படுத்துக்கொண்டாள்

சில பல பிரயாணங்கள் மட்டுமே குடும்பத்தோடு சேர்ந்து சென்று இருக்கிறார்கள் மற்ற நேரங்கள் முழுவதும் இலவச இணைப்பு பற்றி மாதிரி தங்கையோ, தாயோ அவன் பின்னாலேயே வந்து விடுவார்கள் இவன் அவர்களோடு சேர்ந்து கொள்வான், இவள் தன் பிள்ளைகளோடு தனியாக சுற்றி வருவாள் ...

பொண்டாட்டிக்கு சரிக்கு சமமா இடம் கொடுத்தா தலைக்கு மேல உக்காந்துருவாங்க சத்யா, பொண்டாட்டி ஒரு படி கீழ தான் இருக்கணும், பொண்டாட்டியை மரியாதைக்கு வீட்டோட இருந்தா போதும், அவளுக்கு ஊர் உலகம் கற்றுக் கொடுத்தா நாளைக்கு நமக்கே பாடம் எடுப்பா, பொண்டாட்டி சபைக்கு கௌரவத்துக்கு மட்டும் தான், இப்படி சொன்னது ஆண் இல்லை ஒரு பெண் !!அதுவும் தன் தாய் ... தாய் சொல்வது எல்லாம் மந்திரம் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பி இருக்கக் கூடாது... அவனுக்கு தெரியுமே அவன் மனைவி அப்படி இல்லை என்று , அவன் மனைவி யார் என்று அவன் அல்லவா கண்டுபிடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும்... 

உலகத்தை கற்றுக் கொண்டவன் தன் மனைவி யார் என்று கற்றுக் கொள்ள முதல் படி கூட எடுத்து வைக்கவில்லை... இதோ 16 வருடத்தில் இன்று மாறுவான் நாளை மாறுவான் என்று அவன் கண் பார்த்தே வாழ்ந்து அவள் பெற்றது என்னவோ தெரியாது, ஆனால் இழந்தது அதிகம்!! 

"அய்யோ சாரிங்க வாந்தி வராம இருக்க மாத்திரை போட்டேன் கொஞ்சம் தூக்கம் வருதுன்னு சாஞ்சுட்டேன்" என்று அவன் மீது இருந்த தலையை அஞ்சலியை பயந்து எடுத்தவளை திரும்பி பார்த்தான் 

"படுத்துக்க" என்று சொல்லும் தகுதி இழந்த உணர்வு ..

"இவள் யார் ?

தெரியாது

"எப்போது தூங்குவாள்?

தெரியாது 

"என்ன பிடிக்கும்?

தெரியாது 

இது உனக்கு நல்லா இருக்கும் வச்சுக்கோ இது உனக்கு போதும் பிடிச்சுக்கோ, அவன் விருப்பத்தைத்தான் அவளிடம் இத்தனை நாள் திணித்து இருக்கிறான்... அவள் விருப்பம் என்னவென்று அறிய அவனுக்கு நேரம் இருந்தது இல்லை விருப்பமும் இருந்ததில்லை...

ஆனால் அவன் எதையாவது இழந்து இருக்கிறானா என்று தன் 16 வருட வாழ்க்கை பக்கத்தை திருப்பி பார்த்தான

திருமணத்தின் போது தனியார் கம்பெனியில் வேலை பார்த்தான... அடுத்தவன் கிட்ட கைகட்டி என்னால் வேலை செய்ய முடியல அஞ்சு ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டலாம்னு இருக்கேன் அப்பா இடம் கிடக்கு, காசு வேணும் ...

உங்களுக்கு விருப்பம்னா செய்யுங்க என்று நகையை கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தாள

காலேஜ் டீம்கூட டூர் போறேன் வர நாலு நாள் ஆகும் அவனே தலையை சரித்துப் பார்ப்பாள்.. பெட்டியில் துணியை அடிக்க ஆரம்பித்து விடுவாள்

இப்படி அவன் விருப்பங்கள் ஒவ்வொன்றுக்கு பின்னும் அவளுடைய பல தியாகம் இருந்தது... அவன் விரும்பியதை எல்லாம் இத்தனை வருடமும் குறைவில்லாமல் அனுபவித்து விட்டான், ஆனால் அவள்??

அவளை பற்றி பிடித்ததும் தெரியவில்லை பிடிக்காததும் தெரியவில்லை .... 

தாய் செய்த துரோகம் சிறிதுதானோ ?? 

நான் இவள் நம்பிக்கை பாசத்துக்கு செய்த துரோகம் தான் பெரிதோ? கேள்விக்கு பதில் இல்லாது மிரண்டு முழித்தான் ...

நூறு சதவீதம் அவளுக்காக இவன் இனி மாறினாலும் அவள் மனதில் கிடக்கும் 16 வருட பொத்தலை எப்போதும் அவன் நேசம் அடைத்து விடாது அது வடுவாகத்தான் கிடக்கும்... 

இத்தனை இழப்புக்குப் பிறகுதான் நான் இவளை புரிந்து கொள்வேன் என்றால்.. நான் கணவனாக இல்லை மனிதனாக கூட அவளோடு இருந்தது இல்லையோ? ஆனால் அவள் இத்தனையும் இழந்த பின்னும் உன்னோடு வருகிறேன் என்று என் தோளில் சாய்கிறாள் என்றால் என் மீது எத்தனை நேசம் வைத்திருப்பாள் 

அவள் நம்பிக்கையை வாழ்க்கையை மட்டும் இழக்க வில்லை அவளையே இழந்து தான் அவனை வாழ வைத்திருக்கிறாள்.. 

அவன் கர்வத்துக்கு எத்தனை பெரிய அடி !

மீண்டும் தன்னை அறியாது அவன் தோளில் சாய்ந்த அஞ்சலி உச்சியில் அவன் வைத்த முத்தம் அவ் இருட்டு மட்டுமே அறியும் !! 

வாழ்க்கை ததுணையாக மட்டும் இல்லை வழி துணையாகவும் துணைவி இருந்து விட்டால் இழப்பது எதுவாகவும் இருக்கலாம் , ஆனால் நிம்மதி இழக்காது அவள் பார்த்து கொள்வாள்!! 

அவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை மனைவிக்கும்

அவள் பார்த்து கொள்வான் என்ன நம்பிக்கை கணவருக்கும் கொடுப்பதுவே பரஸ்பர திருமண வாழ்க்கை!!