தினம் தினம் 4
Thinam4

4 தினம் தினம் !!
"சத்யா உன் தங்கச்சி உன் கிட்ட பேசணும்னு தான் மெனக்கெட்டு வந்திருக்கா போல இருக்கு," அரட்டை எல்லாம் முடித்துவிட்டு தூங்குவதற்கு ரெடியான சத்யா அருகே தாயும் ,தங்கையும் அமர்ந்து கொண்டனர்...
உள்ளே போனில் பிசியாக இருந்தாலும் காதலில் இவர்கள் சிரிப்பு சத்தம் ஈயத்தை காய்ச்சி ஊத்தியது போலத்தான் இருந்தது
" கடவுளே முடியல, என் அண்ணன் அப்படி இப்படி லாலே லாலா போடுதுக, தியாகி பட்டம் கொடுத்ததும் இந்த மங்கூஸ் மண்டயனுக்கு முகம் எல்லாம் பூரிச்சு போகுமே, இவளுகள சொல்லி குத்தம் இல்ல .. இந்த ஆறடி வளர்ந்த காண்டாமிருகத்தை யாரோ தியாகி , நீ நல்லவன் வல்லவன்னு மண்டைக்குள்ள புகுந்து பிக்ஸ் பண்ணிட்டாங்க, என்கிட்ட கேட்டு பாருடா வெங்காயம், உன்ன பத்தி வண்டி வண்டியா சொல்றேன்... ஒரு சானிடரி பேர்ட் எக்ஸ்ட்ரா வாங்கி தர கூட அந்த காலத்துல துணிதான் வச்சாங்க, காசு கரியா போகுதுன்னு சொல்ற தற்குறிதான் நீன்னு கத்தி சொல்வேன்... பொண்டாட்டியை கால்ல மிதிச்சு தங்கச்சி தாயை தோள்ல சுமக்கிறதுக்கு பேர் தியாகி இல்லைடா நசுங்கி போன மூஞ்சா, இதுவும் துரோகம் தான் பக்கி, அய்யோ அய்யோ பேட் வேர்ட்ஸா வாய்ல வருதே, நோ நோ நம்மள இளம் தீவிரவாதியா மாத்திடும்ங்க, கைப்புள்ள ஹெட்போனை எடுத்து காதுல போட்டு இதுக வெண்கல குரலை ஸ்டாப் பண்ணிடு, நமக்கு குடும்பம் குட்டி இருக்குடா தம்பி "என்று அஞ்சலி தன்னை தானே தட்டி கொண்டு ஹெட்போனை எடுத்து காதில் நன்றாக அடைத்து கொண்டாள்...
அப்பாடா !!! என்ன ஒரு இன்பம், இந்த இம்சைக குரல கேட்டாலே குடல் குந்தாணி எல்லாம் அவியுது எனக்கு மட்டும் தான் இப்படியா , இல்லை எல்லாருக்கும் இப்படி தான் இருக்குமா குமரேசா "டிங் டிங் தன் எழுத்தாளர் எபி டான் என்று விழ
நமக்கு எதுக்கு அடுத்தவன் பிரச்சனை நம்மாளு ஹீரோ என்ன பண்றான்னு பார்த்து ஹீரோவுக்கு முட்டு கொடுக்க போவோம் என்று கதையோடு ஐக்கியம் ஆக போய்விட்டாள்..
"அண்ணன் உன்கிட்ட தான் பேச வந்தேன் காயத்திரி மெல்ல இழுத்து ஆரம்பித்தாள்...
"என்ன காயு ஏதாவது பிரச்சனையா? உடனே சஞ்சீவி மலையை தூக்கி பிடிச்சு நிக்கிற மாதிரி தங்கச்சிக்கு அரணா நிக்க ஓடியாச்சு..
"எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது அண்ணா , உன்னை மாதிரி யாராவது தங்கச்சியை கல்யாணம் கட்டி கொடுக்க முடியுமா என்ன ? என் மாமியார் மூச்சு பேச்சு இல்லாம கிடக்குதுன்னா அதுக்கு காரணம் நீ எனக்கு செஞ்ச சீர் சினத்தை தானே ... தங்கச்சி மாதிரியா நினைச்சு செஞ்ச, உன் வயித்துல பறந்த புள்ளைக்கு என்ன செய்வியோ அதைப்போல என்ன செஞ்சு பாராட்டி சீராட்டி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்ச , அப்போ ஏதாவது பிரச்சனை வந்துடுமா என்ன.... இல்ல நான் கோழையா, நான் சத்யாவோட தங்கச்சி என்னை யாராவது ஏதாவது பண்ணா விட்டுடுவனா என்ன என்ற தங்கையின் பேச்சில் கர்வமாக புன்னகைத்தான் சத்யா...
சில கணவன் ஜந்துக்களுக்கு ஒரு கெட்ட குணம் உண்டு.. பொண்டாட்டி பேசினா கசக்கும், அதுவே மத்தவன் பேசுனா இனிச்சு கிடக்கும்.... இவனுக்கும் அதே நோய்தான் , அதுவும் முத்தி போன கேஸ் ,
அவனைத் தூக்கிப் பேசும் தங்கையின் பேச்சில் ஆகா ஓகோ என்று உடல் புல்லரித்து விட்டது ,
வேற என்னடா பிராப்ளம் "
அது எல்லாம் ஒன்னும் இல்லண்ணே... மொத மொதல்ல இதை உன்கிட்ட தான் சொல்லணும்னு ஓடி வந்து இருக்கேன்....
"ஓஓஓ அப்படி என்ன விஷயம்
"முழுகாம இருக்கேன் அண்ணன்" என்று காயு வெட்க பட்டுக்கொண்டே கூற... ஐந்து வருடம் அதற்கு ட்ரிட்மெண்ட் பாக்க காசு போனதும் இங்க இருந்து தான் அது வேற விஷயம் அஞ்சலி ஏதாவது வாயை திறந்தால் எனக்கு பிள்ளை இல்லைன்னு குத்தி காட்டிறீயா அண்ணி என்று மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு அது எல்லை பிரச்சனை போல வெடித்து நிற்கும்.. அதனால் அஞ்சலி இப்போதெல்லாம் நாளைக்கு என்ன குழம்பு வைக்கலாம் துவைச்ச துணியை எப்போ காய போடலாம் என்ற சிந்தனையோடு முடித்து கொள்வது ...
அஞ்சலி முதல்முறையாக பிள்ளை உண்டாகி இருக்கேன் என்று சொன்னது கூட இவனுக்கு இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்து இருக்குமா என்று தெரியாது... தன் தங்கையின் தாய்மையில் சிலிர்த்து விட்டான்
"நிஜமாவா??
"ஆமா, அவர் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட தான் சொல்லணும்னு ஓடி வந்து இருக்கேன் .... எனக்கு அவர் புருஷன் தான் ஆனா நீ எனக்கு அப்பா மாதிரி , தெய்வத்துக்கு சமம்... உன்கிட்ட சொன்னாதான் என் புள்ள நல்லபடியா இந்த உலகத்தில் வந்து பிறக்கும் ..
"கடவுள் கிருபையால எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் காயத்ரி...
"கடவுள் போல அண்ணன் நீ இருக்கும் போது எனக்கு என்ன குறைவு வந்துற போகுது சொல்லு..
ஹாஹா
அண்ணா , அப்பறம் ஒன்னு சொல்லணும் "
"என்ன காயு
"எப்படி என் கல்யாணத்தை சிறப்பா நடத்துனியோ அதே மாதிரி என் வளைகாப்பையும் சிறப்பா நடத்திடனும்... ஒருத்தரும் ஒன்னும் சொல்லிட கூடாது ..நீ செய்ற சீர்ல எங்க குடும்பமே மூக்கு மேல விரல் வைக்கணும்.. அவரோட தங்கச்சிக்கு தங்கவளையில் போட்டாங்களாம் நான் சொன்னேன் நான் பிள்ளை உண்டானா, எனக்கு என் அண்ணன் வைர வளையல் போடுவார் பாருங்கன்னு சொன்னேன் , அவர் தங்கச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலை எடுத்து கொடுத்தாங்களாம்.... ம்க்கும், எனக்கு நீ ஒரு லட்சத்துக்கு எடுத்து தரமாட்ட.. எனக்கு நல்லா தெரியும் உனக்கு இருக்கிறது ஒரே தங்கச்சிதானே அதெல்லாம் சிறப்பா பண்ணிடுவ .... அப்புறம் வளைகாப்புக்கு பெரிய மண்டபம் எடுத்து ஃப்ளவர் டெக்கரேஷன் எல்லாம் பண்ணுனாங்களாம்.. வந்தவங்க எல்லாரும் வாய பொளந்து பாத்துட்டு போனாங்களாம். என்ன பெருசா பண்ணிருக்க போறாங்க ஒரு லட்சத்துக்கு பண்ணி இருப்பாங்களா? எங்க அண்ணன் கல்யாண மண்டபம் முழுக்க பிளவர் டெக்கரேஷன் பண்ணி இந்த ஊரிலேயே பெரிய மண்டபத்துல எனக்கு வளைகாப்பு நடத்துவாருன்னு பெருமையா சொல்லிட்டு வந்து இருக்கேன் .... அண்ணன் அண்ணன்
அண்ணன் சமாதி ஆகி பத்து நிமிஷம் ஆகி போச்சு பக்கி
"அப்புறம் குழந்தை உண்டாகிட்டேன் இனிமே அடிக்கடி செக்கப் அது இதுன்னு போகணும் அவர் பைக்ல போனா சரியா இருக்காது, 10 லட்சத்துக்கு குட்டி கார் வாங்கினா, எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் ... என்கிட்ட ஒரு நாலு லட்ச ரூபாய் இருக்கு அண்ணே, நீ ஒரு ஆறு லட்ச ரூபாய் கடனா தந்தா போதும், நீ கஷ்டப்படுறத கண்ணால பாக்குறேனே எனக்கு நீ தந்தாதான் ஆகும்னு சொல்ல மாட்டேன்... ஆனா கடனா தந்தேன்னா வட்டியோட நான் திருப்பி தந்துடுறேன் அண்ணா. சத்யா நெஞ்சை தடவிக்கொண்டான் ..
"இப்பொழுது தான் அவள் கல்யாணத்துக்கு வாங்கிய கடனை நாக்கு தள்ள தள்ள அடைத்திருக்கிறான், அதிலும் பாதி நகை அவன் மனைவி அஞ்சலியோடது... இன்னும் அதை திருப்பவே இல்லை.. சூப்பர் மார்க்கெட் வைப்பதற்காக வைத்த நகை முங்கி விட்டது... இது அவன் மனைவிக்கு தெரியாது , தெரிந்தாலும் சமாளித்து விடலாம்... பிச்சி புடுங்கி அஞ்சலியின் வீட்டில் 75 பவுன் நகை வாங்கிக் கொண்டு வந்தார்கள் .... அதில் இப்போது அவள் கழுத்தில் கிடக்கும் தாலியும் , கையில் கிடக்கும் வளையல் மட்டும் தான் உபரி ... மத்தது எல்லாம் அதற்காக இதற்காக என்று அடகு வைத்து சோலி முடித்தாயிற்று .... கேட்டால், அவளுக்கு என்னப்பா சூப்பர் மார்க்கெட் முதலாளியோட பொண்டாட்டி என்பார்கள்... மாத மாதம் லாபமெல்லாம் எடுக்கத்தான் செய்கிறான், ஆனால் வந்த பணம் எங்கே செல்கிறது என்று தான் தெரியவில்லை... அஞ்சலி கணக்கு கேட்டால்
எல்லாம் உன் வயித்துல தான் கொட்ட வேண்டியது இருக்கு, உன் பிள்ளைகளுக்கு படிப்பு மூணு நேரம் சமையலுக்கு மளிகை சாமான், இதுபோக வீட்ல எப்ப பார்த்தாலும் டிவி ஓடுது, ஏசி ஓடுது கரண்ட் பில் வாரத்துல மூணு நாள், மூணு பேரும் கால் வலிக்கு கை வலிக்குதுன்னு ஆஸ்பத்திரிக்கு போறீங்க ... ஆஸ்பத்திரி செலவு, இப்படியே போட்டுக்கிட்டு இருந்தா மனுஷன் சம்பாதிக்கிறதுல என்ன மிஞ்சம் எடுக்க முடியும்" என்று இதற்கும் மனைவியை திட்ட .... அஞ்சலி கணக்கு கேட்பதையே விட்டுவிட்டாள்
பத்தாயிரம் ரூபாய் வந்தால் தங்கைக்கும் தாய்க்கும் மூக்கு வேர்த்துவிடும், அதில் 5000 ரூபாயாவது ஆட்டையை போட்டு விட்டுப் போனால்தான் நிம்மதியாக அவர்களுக்கு தூக்கம் வரும்..
கூட பிறந்த அண்ணனே ஆனாலும் திருமணம் செய்து அவனுக்கென்று ஒரு குடும்பம வந்த பிறகு அவன் அடுத்தவன் ... அவனுக்கும் தேவை இருக்கும் அவனுக்கு போக தான் மீதி என்ற உணர்வு வரவில்லை என்றால் அவள் பெண்ணாக இருப்பதற்கே தகுதியற்றவள் , பிடுங்கி கொண்டு போகும் பணம் செழிப்பை எப்படி கொண்டு வரும், சாபத்தை தான் கொண்டு வரும்... ஒரு பெண்ணின் கண்ணீரில் வயிறு நிறைக்க முடியுமா ?? அவள் பிள்ளை அழ உன் பிள்ளை சிரிக்குமோ??
"அண்ணே என்னண்ணே அளவுக்கு மீறி ஆசைப்படுறேனோ... தன் அண்ணனின் யோசனையான முகத்தை பார்த்து காயத்ரி நகத்தைக் கடித்துக் கொண்டே தன் தாயைப் பார்க்க
"அட, அவன் சம்பாதிக்கிறது யாருக்கு, அவன் பிள்ளைக்கு போக உனக்கு தானடி... ஊரான் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தா தாம் பிள்ளை தானே வளரும்னு அவனுக்கு தெரியாதா என்ன?
நீ என்ன அவன் சொத்தையா கேட்ட , இந்த வீடு அவன் சூப்பர் மார்கெட் கட்டி வச்சிருக்கிற இடம் எல்லாம் நம்ம அப்பா சம்பாதித்தது, நீ என்ன அப்பா சம்பாதித்ததுல பாதியா கேட்ட ... இல்ல அம்மாவுக்கு மாச மாசம் கொடுக்க வேண்டிய பணத்தை எனக்கு தந்ததுடுன்னு கேட்டியா... நீ எதுவும் கேட்க மாட்டியே கல்யாணத்துக்கு கூட நீ வாயே திறக்கல, அவனே பார்த்து எல்லாம் செஞ்சான்ல.. வளைகாப்பு மட்டும் எப்படி விட்டுடுவான்...
"அது வந்தும்மா என்று சத்யா வாயை திறக்க
"யய்யா , சாகப் போற வயசுல என் மகளோட வளைகாப்பை கண் நிறைய பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு
"இல்லம்மா ஏற்கனவே அஞ்சலிக்கு இந்த மாசம் நகையை திருப்பி கொடுக்கிறேன்னு சொன்னேன்...
"அவளுக்கு இப்ப எதுக்கு நகை? இந்த குட்டி வீட்டுக்குள்ள நகையை திருப்பி வச்சா எவனாவது வந்து எடுத்துட்டு போயிட்டா என்ன பண்ணுவா? அவளும் வேலைக்கு போயிடறா, நானும் மாத்திரயை போட்டுட்டு காலையில என்ன மீறி தூங்கிடுறேன் திருட்டு சகவாசம் வேற அதிகமா இருக்கு எதுக்கு இப்போ அவளுக்கு நகையை திருப்பனுமாம், பேங்க்ல பத்திரமா இருந்தா ஆவாதாம்மா..."
"அவ மாமா பொண்ணு கல்யாணத்துக்கு ஊருக்கு போகணும்னு சொன்னா.... இப்படி மொட்டை கழுத்தா போனா நல்லா இருக்காது , எனக்கு ஒரு நெக்லஸாவது திருப்பி கொடுங்கன்னு மூணு மாசமா கேட்டுட்டு இருக்கா ,ஒரு நெக்லஸ் மட்டுமாவது திருப்பி கொடுத்திடலாமேன்னு யோசிச்சுட்டு கொஞ்சம் பணம் வச்சிருந்தேன்..
"ஓஓ பொண்டாட்டி அழுததும் பணம் ரெடி பண்ணிட்ட
"அப்படி இல்லை , நகை இல்லாம போனா எனக்கு மதிப்பு இருக்காதே அதான் யோசிச்சேன்... ஏற்கனவே நமக்கு எதிர்ல வேற இன்னொரு சூப்பர் மார்கெட் வந்துடுச்சு,, வியாபாரம் பாதிக்கு பாதி பிரிஞ்சு போச்சு .. தம் புடிச்சு தான் நான் வியாபாரத்தை நடத்திக்கிட்டு இருக்கேன் ... அதுல வர்ற லாபம் குடும்பத்தை நடத்தவே கஷ்டமா இருக்கு , பையன் 11 படிக்கிறான் இன்னும் கொஞ்ச நாள்ல அவனுக்கு படிப்பு செலவு பாக்கணும்.. பாப்பா சடங்காகிற நிலைமையில இருக்கா.. அவளுக்கு நகை நட்டு பண்ணனும் ... இது போக அவ நகை அத்தனையும் ஈடு வச்சிருக்கேன்.. அதுல கொஞ்சத்தையாவது திருப்பனும்... அந்த நகை இருந்தா நாளைக்கு உதவும் பாருங்க...
"என்ன அண்ணன் அப்போ நான் வேறயா? உன் குடும்பம் உன் புள்ள உன் பொண்டாட்டின்னு யோசிக்கிற.. எங்க அண்ணன் எனக்கு செய்வான்னு நம்பி வந்த நான் அப்போ வேறையாகி போனேனா? என்று காயத்ரி அழுவது போல தன் அண்ணனை பார்க்க ..
"ப்ச் சரி விடு கஷ்டம் தேவை என்னைக்கு தான் ஆம்பளைக்கு இல்லாம இருந்திருக்கு... சரி காயத்ரி ஏதாவது ரெடி பண்ண முடியுமான்னு பார்க்கிறேன் பார்க்கிறேன் "
"அப்படி சொல்லாத அண்ணன், நான் என் வீட்டுக்காரர்கிட்ட பெருசா வாங்கிட்டு வந்துருவேன்னு வாய்ச்சவடால் விட்டுட்டு வந்துட்டேன்... இப்போ ஒன்னும் இல்லாம போனா கிண்டல் அடிப்பாரு அண்ணா... சத்யா யோசனையாக தலையாட்டிவிட்டு
"பார்கிறேன்
"ம்ம்
சத்யா தன் அறைக்குள் வந்து கதவை மூடினான்
"என்னம்மா அண்ணே ஒரு மாதிரி முழிக்குது காசு தருமா இல்லையா... நீ சொன்ன மாதிரியே பேசிட்டேன்
"அட விடுடி அவனுக்கு கொம்பு சீவு விட்டா தானா நமக்கு வேண்டிய செய்யப் போறான்
"அண்ணி எதாவது சொல்லுமோ??
"உன் அண்ணிக்காரி வாய தொறந்தா வாய் மேலேயே மிதிச்சிட மாட்டான்....ஆறு லட்சம் தரலனாலும் அட்லீஸ்ட் ஒரு லட்சமாவது அவன்கிட்ட இருந்து கறந்து வாங்கி தர்றது என் பொறுப்புடி.. நீ அந்த வீட்ல கௌரவம் குறையாம இருக்கணும் , கால் மேல கால் போட்டு உன் பாட்டுக்கு ஜம்முன்னு இரு... நாம அவங்கள விட ஒரு படி மேல இருந்தா தான் நமக்கு மரியாதை, அந்த மரியாதையை கெடுக்க நான் ஒரு நாளும் விட மாட்டேன்...
ம்ம் "
"அப்புறம் உன் புருஷன் சொல்றதுக்கு எல்லாம் ஆமானு தலையாட்டி கிட்டு இருக்காத ,எதிர்த்து பேசு, இதோ அஞ்சலி கிடக்கிறா பாரு , அந்த மாதிரி கிணத்து தவளையா கிடந்துடாத புரியுதா?
சரிம்மா
"பின்ன நம்ம தலையில மிளகாய் அரைச்சு விட்டுவிடுவாங்க, புருஷனை எந்த இடத்தில எப்படி பிடிக்கணும்னு கொஞ்சம் சூட்சுமம் தெரிஞ்ச வச்சுக்கோ , விடுற மாதிரி விட்டு புடிச்சிடு, குறிப்பா தாய் கிட்ட உக்காந்து பேச விடாதே
"அதெல்லாம் நீ சொல்ற மாதிரிதாம்மா வீட்டுக்குள்ள வந்த உடனே ஏதாவது சொல்லி ரூமுக்குள்ள இழுத்துட்டு போயிடுவேன்.. அந்த கெழவி கிட்ட உட்கார்ந்து பேசவே விடமாட்டேன்... மூணு வேளை சாப்பாடு செலவுக்கு காசு தவிர வேற எதுவும் கொடுக்க விட மாட்டேன்
"ப்ச் அந்த சாப்பாட்டுக்கு கூட நீ ஏண்டி குடுக்கணும் அதான் அதோட மாப்பிள்ளை பென்ஷன் ரூபா வருதுல்ல, அதுல செய்ய வேண்டியது தானே சாப்பாட்டு பைசா மருத்துவ செலவுன்னு அம்மாடி எம்புட்டு காசு ,மருமகன் கையில இருந்து போகுது என்னடி அறிவு கெட்ட வேல பாக்குற "
"இல்லம்மா ஒரு 4,000 ரூபா தானே போகுதுன்னு நெனச்சேன்.."
"4000 ரூபாயை சீட்டு கட்டுனா , 20 மாசத்துல உனக்கு ரெண்டு லட்ச ரூபா வந்துரும்டி,"
"ஓஓஓ அதுவும் சரிதான்மா , இனிமே அதுக்கும் எதையாவது சொல்லி காசு கொடுக்குறதே நிப்பாட்ட பார்க்கிறேன்...
"அதைச் செய் போயி நேரத்தோட தூங்கு, ஏசி போட்டுக்கோ காலையில அண்ணன் சூப்பர் மார்க்கெட்டில போயி உனக்கு வீட்டுக்கு என்ன எல்லாம் தேவையோ அதை வாங்கி கொண்டுட்டு போ.. ஒரு மாசம் மளிகை செலவு மிச்சம் பாரு"..
"ஆனா உன்ன போய் அண்ணன் நம்புது பாரும்மா
"நான் என்னடி என்னவோ அவனுக்கு எதிரி மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க, இந்த வீட்ல அவ ராணி மாதிரி இருக்கா, அவன் பிள்ளைக ராஜாக்கள் மாதிரி இருக்காங்க.. நான் ஏதாவது அவுகளுக்கு கெடுதல் பண்ணி இருக்கேனா.,. என் புள்ள சம்பாதிச்ச சம்பாத்தியத்தில கொஞ்சம் என் மகளுக்கும் எடுத்துக் கொடுக்கிறேன் அவ்வளவுதான்... இதப்போய் என்னமோ பாவம் மாதிரி சொல்ற .. உனக்கு வேண்டாமா அப்போ
"நான் அப்படி சொல்லுவேனா, என் அண்ணன் சம்பாத்தியத்துல எனக்கு கொஞ்சம் வாங்கிட்டு போறேன்... அண்ணி எத்தனை நாள் இப்படி அமைதியா இருக்கும்னு தான் தெரியல
"அண்ணி அமைதியா இருக்கும் வரைக்கும் உன் அண்ணன் கூட வாழ்வா? வாயை திறக்கிற அன்னைக்கு பொட்டியை கட்டிக்கிட்டு போய் சேர வேண்டியதுதான்" என்று சொல்லும் தன் தாயை பல்லை இளித்துக் கொண்டு பார்த்தாள் காயத்ரி
பெண்ணுக்கு பெண் எதிரியோ இல்லையோ பெண்ணுக்கு பெண் தான் துரோகி!!