தினம் தினம் 6
Thinam6

6 தினம் தினம் !!
அஞ்சு ஸ்கூலுக்கு கிளம்பிட்டியா? காதில் போனை இடுக்கி கொண்டு இட்லியை அவிப்பதற்கு வேலை நடந்து கொண்டு இருந்தது ..அஞ்சலி தாய் ஃபோனில் அழைத்தார்
"என்னம்மா காலையிலேயே போன் போட்டு இருக்க
"இல்ல கல்யாணத்துக்கு எப்ப வருவ
" வரணும்
"நல்லது கெட்டது எதுக்கும் வர்றது இல்ல அப்படி என்னடி புருஷன் வீட்டில வெட்டி முறிக்கிற வேலை
"நீ உன் புருஷன் வீட்டில் என்ன பண்ணிக்கிட்டு இருக்கியோ, அதே தான் நானும் இங்க பண்ணிக்கிட்டு இருக்கேன்.... உன் புருஷனாவது பரவாயில்லை, நீ சொல்றது எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போடுவார்... என் புருஷன் இருக்கான் பாரு அந்த மலை முழுங்கி மலைமாடு, நான் சொன்னதுக்கு அப்படியே ஆப்போசிட்டா பண்றதுல அவனுக்கு அப்படி ஒரு இன்பம்.... அப்பா ஊர்ல உலகத்துல ஆம்பளையே இல்லன்னு இவனுக்கு பிடிச்சு என்ன கல்யாணம் கட்டி வச்சியாக்கும்... அவன விட்றலாம் உன்னைய தான் கட்டி வச்சு தோலை உரிக்கணும்" என்று காலையிலேயே எரிச்சலில் கத்திய மகளின் பேச்சில் தாய் அரண்டு போயிருப்பார்..
"என்னடி மருமகன் கிட்ட ஏதாவது சண்டை போட்டியா
"ம்க்கும் என்னைக்கு கொஞ்சி பேசினேன் , சண்டை போட, நான் சண்டை போட்ட உடனே உன் மருமகன் அப்படியே என்னை விட்டுடுவானா என்ன? தூக்கி குக்கர்ல வச்சு அவிச்சு புடுவான் , நான் வாயை திறந்தேன் நாளைக்கு உன் வீட்டு வாசல்ல நிற்க வேண்டியதுதான்... எனக்கு தான் உன்ன பத்தி நல்லா தெரியுமேம்மா வாய் கிழிக்க பேசுவ.... அங்க வந்து நின்னா எப்போ உன் வீட்டுக்கு போவன்னு கேப்ப ரெண்டு வீடு இருந்தும் ஒரு வீடு கூட எனக்கு சொந்தம் இல்லை இத்தனை பேர் இருந்ததும் எனக்கு ஆறுதல் இல்லை குடும்ப இஸ்திரின்னு பேர் வச்சதுக்கு அனாதைன்னு வச்சிருக்கலாம் அப்படி தான் என் கதை ஓடுது "கை என்னவோ விறுவிறுவென சட்னி தாளிக்க, இன்னொரு பக்கம் பிள்ளைகளுக்கு லஞ்ச் பேக் கட்ட என்று பிசியாக இருந்தது ...
"வேற என்னதான்டி பண்ண சொல்ற , கட்டிதான் கொடுக்க முடியும், அங்க நடக்கிற ஒவ்வொரு சண்டைக்கும் பஞ்சாயத்தா பண்ண முடியும்
அப்படியே பஞ்சாயத்து பண்ணினா நல்லாவா இருக்கும் , அனுசரிச்சு போடி "
"ம்ம் அனுசரிச்சு போய் தான் இன்னிக்கி வாய் ஒன்னு இருக்கிறது பேசன்னு மறந்து போச்சு திங்கிறதுக்கு மட்டும்தான் வாயைத் திறக்கிறேன்.. அது கூட இன்னும் கொஞ்ச நாள்ல வாய் வழியா திங்காதன்னு இந்த கூட்டம் சொன்னாலும் சொல்லும்... அதுக்கும் வாய்ப்பு இருக்கு
"என்னடி காலையிலேயே கோவமா இருக்க பிறகு பேசுறேன்
" நான் எப்பவும் இப்படித்தான் பேசுவேன் என்ன விஷயம் சொல்லு ..
"அப்பா தான் நீ எப்ப வருவன்னு கேட்க சொன்னாங்க.. உன்னை பார்க்கணும் போல இருக்காம்" என்றதும் இவளுக்கு உருகி விட்டது
"தங்க தட்டில் வைத்து வளர்த்தார்கள், ரெண்டு பெண் பிள்ளைகள் மட்டும்தான்.. கவர்ன்மெண்ட் டிரைவராக வேலை செய்து ஓய்வு பெற்றவர் அஞ்சலி தகப்பன் , எப்படியோ கவுரவமாக இரண்டு பிள்ளைகளுக்கும் நகை நட்டு போட்டு கட்டிக் கொடுத்து விட்டார்..
இவள் படும் பாட்டை பார்த்து இளையவளுக்கு இன்னும் பெரிய இடத்தில் கல்யாணம் கட்டி வைத்து விட்டார்கள் .... முதலில் இங்கு மூச்சு முட்டுகிறது என்று கோவில் திருவிழா கல்யாண வீடுகளுக்கு அங்கே போவாள்
தங்கச்சிக்காரி என் வீட்ல அது இருக்கு இது இருக்கு என் புருஷன் என்ன அப்படி தாங்குறான் , இப்படி தாங்குறான் என்று செய்யும் அலப்பறையில்
"போங்கடா நானே வெந்து செத்துகிட்டு இருக்கேன் இதுக எல்லாம் படுத்துற பாட்டுல , நானே சூசைட் அட்டென்ட் பண்ணிடுவேன் போல இருக்கு என்று அலுத்து கொள்வாள்.... தாய் வேறு அவள் பெரிய இடத்து மருமகள் என்பதால் ஆகா ஓகோ என்று வரவேற்க... இவளுக்கு முக்கியம் குறைவாக கொடுப்பது போல் இருந்தது...
எல்லா இடத்திலும் நமக்கு மரியாதை இவ்வளவு தான் கிடைக்கிறது என்று அவளுக்கே என்னவோ போல் இருக்க அங்கும் போவதில்லை...
நீ என்னமமா காலையிலேயே போன் போட்டு இருக்க.. ஏதோ விவகாரம் இருக்குன்னு தெரியும் ஆத்தா தயவு செஞ்சு அதை சொல்றியா?
எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு
இல்லடி உன் தங்கச்சிக்காரி , ஏழு பவுன்ல ஆரம் வாங்கி இருக்காளாம்..
"அதுக்கு நான் என்ன செய்யட்டும் நாண்டுட்டு நின்னு செத்துடவா
"ப்ச் இல்லடி. போன வாட்டி ஏழுசாமி மாமா கல்யாண வீட்டுக்கு வரும்போது , நீ கழுத்துல ஒன்னும் போடாம வந்து நின்னல்ல அதுக்காடி உனக்கு 75 பவுன் நகை போட்டு கல்யாண கட்டிக் கொடுத்தோம்..."
"உன்னை யாரு கல்யாணம் கட்டிக் கொடுக்க சொன்னா, அப்படியே ஒரு காவி சேலை கட்டி என்னையை பஜன் பஜன்னு அனுப்பிவிட்டு இருக்கலாம்ல்ல... நானாவது நிம்மதியா இருந்திருப்பேன்... பாரு , இலவச வைபை போல ரெண்டு பிள்ளையை வச்சிக்கிட்டு அங்குட்டும் போக முடியாம இங்கிட்டும் போக முடியாம நான் சுத்திட்டு இருக்கேன் ... நீ வேற தொல்லை பண்ணிக்கிட்டு, இப்ப எதுக்கு சுத்தி வளச்சு மூக்கை தொட்டுக்கிட்டு இருக்க, ஸ்ட்ரைட்டா சொல்லு "
"இல்லாம வந்து நின்னு மூஞ்சி சுருங்கி போகாத ஏதாவது திருப்பி போட்டுட்டு வர முடியுமான்னு பாரு அஞ்சலி , அதான் மருமகனுக்கு பிசினஸ் கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொன்னியே ... நேத்து ராத்திரி வண்ண வண்ணமாய் வாங்கியது போதாதா என்ன?
"எம்மா நான் கல்யாணத்துக்கே வரலம்மா , 500 ரூபாய் மொய் அனுப்பி விடுறேன்.. தயவுசெஞ்சு அந்த மொய்யை குடுத்துட்டு , ஆள விடு சாமி
என்னடி இப்படி உடனே கோவப்படுற, எங்களுக்கும் உன்னை கழுத்து நிறைய நகையோட பார்க்க ஆசை இருக்காதா...
"அப்படின்னா கவரிங் நகை தான் வாங்கி போட்டுட்டு வரணும், உன் மருமகன் கிட்ட நகையை திருப்பி தாங்கன்னு கேட்டதுக்குத்தான் நிலையழிஞ்சு நின்னான்.. என் கழுத்துல கிடக்கிறது தாலியா போச்சு, இல்ல அவன் தங்கச்சி மேனாமினுக்கி இதையும் அத்து வீட்டுக்கு போயிருப்பா.. இந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட சுய உணர்வே வராதாம்மா ... பொண்டாட்டி, நம்ம பிள்ளைகள்னு எப்ப தான் உணர போறார் .. எனக்கு இங்க இருக்கவே புடிக்கலம்மா" என்ற அஞ்சலிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது ..
என்னடி இப்படி பஞ்சப் பாட்டு பாடுற, நீ சம்பாதிக்கிற பதினாராயிரம் சம்பளம் எங்க , அதை என்ன செய்ற .. அத சேர்த்து வைத்திருந்தா கூட உன் நகையை திருப்பி இருக்கலாமே, உனக்கு சூதானமில்லை என்று சொல்ல
"ம்க்கும் சம்பளம் வந்து அடுத்த நாள் ஆயிரம் ரூபா தான் என் ஏடிஎம் கார்டுல கிடக்கும், மத்ததை எல்லாத்தையும் உன் மருமகன் எடுத்துட்டு என்ன ஓட்டாண்டியா விட்டுருவான்... நான் சம்பாதிச்ச காசுதானன்னு ஒரு தடவை கேட்டுட்டேன்... நீ திங்குறது உடுக்கிறது எல்லாத்துக்கும் காசை எடுத்து மேல வையுங்கிறான் .. இப்படி தினமும் மானங்கெட்டு வாழ்றதுக்கு ஒத்தையா போயி மானத்தோடு வாழலாம்னு தான் தோணுது ..
"கிறுக்கி மாதிரி பேசாத ஆம்பள துணை இருக்கிற வரைக்கும் தான் உனக்கு மட்டும் மருவாத , தனியா போய் பாரு அப்போ தெரியும் ... அத்தனை பேரும் உனக்கு இலவசமாக வந்து சேரும்..
"அது தெரிஞ்சதுனால தான் இத்தனை வருஷமா பல்ல கடிச்சுக்கிட்டு வாழ்ந்துட்டேன்.. ஆனா இப்ப எல்லாம் பயமா இருக்கும்மா .."
"என்னடி அஞ்சு, இப்படி எல்லாம் பேசுற.. நீங்க எல்லாம் நல்லா இருக்கணும்னு நினைச்சு தான் கஷ்டப்பட்டு கல்யாணத்தை கட்டி வச்சோம் இப்படி தினம் தினம் அலுத்துக்கிற.. உன் தங்கச்சியையும் கல்யாணம்தான் கட்டிக் கொடுத்திருக்கோம், பாரு எவ்வளவு காரியமா குடும்பத்தை நடத்துறான்னு... மருமகன் அவ்வளவு பணத்தையும் கொண்டு வந்து அவ கையில தான் கொடுக்கிறார்... இப்போ கூட தாம்பரம் பக்கத்துல ஒரு எடம் வாங்கி போட்டிருக்கா போல இருக்கு, குழந்தைக்கு இப்பவே பணம் சேர்க்க ஆரம்பிச்சுட்டா, தாய் சொல்ல சொல்ல அஞ்சலிக்கு பொறாமை வரவில்லை ..
மாறாக என் வாழ்க்கை ஏன் இப்படி போகுது எனக்கு இடம் நகை இதெல்லாம் கூட வேண்டாம் ... வீட்டுக்கு வந்தா நிம்மதி இருந்தா போதும் ,.புருஷன் என்கிட்ட கொஞ்ச நேரம் கைய புடிச்சுகிட்டு பேசுனா போதும்... அதுக்கு கூட இந்த வீட்ல பஞ்சமா? என்றுதான் புலம்ப தோன்றியது..
"சரிம்மா அவர் வந்துட்டார், நான் பிறகு பேசவா
"ம்ம் பார்த்துக்கடி , நீ நல்லா இருந்தாதானே நாங்களும் சந்தோஷமா இருக்க முடியும்..
"சும்மா நேத்து ஒரு சண்டைம்மா, அதான் கோவத்துல காச்சி மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கேன் மத்தபடி அந்த மனுஷன் என்ன நல்லா தான் வச்சிருக்கான்... கல்யாணத்துக்கு வர பார்க்கிறேன் ஓகேவா?? என்று போனை வைத்தாள்
அதற்குள் சத்யா குளித்து ரெடியாகி மேஜையில் வந்து அமர்ந்தவன்
"அஞ்சு நேத்து தங்கச்சி வந்திருந்தால்ல, அவ முழுகாம இருக்காளாம்
"ஓ அப்படியா ?
என்னடி சந்தோஷமே இல்லாம அப்படியென்னு கேக்குற
அதுக்கு என்னடா செய்யணும் மொட்டை மாடியில் இருந்து கீழே குதிச்சு செத்துடவா என்று கேட்கவா முடியும் ... கல்யாணம் முடிஞ்சா உள்ள வரத்தான் செய்யும் அதுல தான் உங்க ஆண்வர்க்கம் கரெக்டா இருக்கீங்களே என்று புலம்பிக்கொண்டே
"சரிங்க சந்தோஷமான விஷயம் தான்...
"அவ மாமியார் வீட்டுக்கு இனிப்பு பழம் எல்லாம் கொண்டு வர சொல்லி இருக்கா... சாயங்காலம் மூணு மணிக்கு போயிட்டு வந்துருவோமா?
"எனக்கு இன்னைக்கு கிளாஸ் இருக்குங்க... லீவு எடுக்க முடியாது
"பெரிய ஐஏஎஸ் அகாடமி நடத்திக்கிட்டு இருக்க, லீவு எடுக்குறதுக்கு முடியாதுன்னு சொல்ல ஒரு அரை நாள் உன்னால லீவு எடுக்க முடியாதா? இது நம்ம குடும்பம் அஞ்சு, எப்ப தான் இதெல்லாம் நீ புரிஞ்சுக்க போற ? இன்னைக்கு நீ செஞ்சாதான் நாளைக்கு உன் பிள்ளைக்கு அவ செய்வா
"ஆமா அப்படியே செஞ்சு கிழிச்சிடுவா , என் மக தூங்கிக்கிட்டு இருக்கும் போது , அவ காதுல இருந்து கம்மல அத்திட்டு ஓடாம இருந்தா சரிதான்.. சரியான கொள்ளக்கார கூட்டம் , உனக்கு அந்த விவரம் பத்தல, அதுக்கு நானும் பைத்தியக்காரி மாதிரி நீ பேசுறதுக்கு எல்லாம் தலையாட்டணுமா
"என்னடி நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன், என் மூஞ்சிய பாத்துட்டு இருக்க .. பதில் ஏதாவது சொல்லி தொல
"லீவு கிடைக்குமான்னு எனக்கு தெரியல
"ப்ச், இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்னு நெனச்சேன்... மதியத்துக்கு மேல கடையை பூட்டுடிட்டு காயத்ரி வீட்டுக்கு போயிட்டு , அப்படியே வரும்போது கல்யாணத்துக்கு போகணும்னு சொன்னல்ல... நகையை தான் திருப்பி கொடுக்க முடியல அட்லீஸ்ட் ஒரு சேலையாவது எடுத்துக் கொடுக்கலாம்னு நினைச்தேன்.. என்றதும் எங்கிருந்துதான் அவள் சோர்ந்த முகத்தில் மத்தாப்பு மின்னியதோ தெரியாது... அவ்வளவு இறுக்கமான முகத்தில் பளிச்சென்று மின்னல் வெட்டியது
"நிஜமாவாங்க.. நீங்களும் நானும் மட்டுமா?
"பின்ன வேற யார் கூட போக சொல்ற, உன்னையதான கல்யாணம் கட்டி இருக்கேன்..
ரெண்டு கல்யாணம் கட்டுனா தூக்கி உள்ள வச்சி பல்பை உடைச்சிருவாங்கன்னு பயம் ன அதனால ஒன்னோட சுத்துற மேன் நீ, அது தெரியாதா என்ன என்று ஊமையாக சிரித்தாள் ... ஆனாலும் அவனோடு தனியாக போகும் நேரம் சண்டைதான் இறுதியில் வரும் தெரியும், ஆனாலும் ஆசை யாரை விட்டது ??
மதியத்துக்கு மேல நீங்களே வந்து ஸ்கூல்ல கூப்பிட வரீங்களா? என்றதும் அவன் யோசனையாக நாடியை தடவ...
சரி வேண்டாம் நானே உங்க சூப்பர் மார்க்கெட் வந்துடுறேன்...
ஆட்டோவுக்கு 100 ரூபாய் செலவு எதுக்கு உன் ஸ்கூல தாண்டி தானே காயத்ரி வீட்டுக்கு போகணும் நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என்ற சத்யா பேச்சில் எப்போதாவது மகிழ்வது உண்டு ..
ஒரு தலை காதல் பல கேள்விப்பட்டிருப்போம் ஆனால் , பல குடும்பங்களில் தன் கணவனை ஒருதலையாகவே காதலித்து காதலித்து செத்து மடியும் பல குடும்பத் தலைவிகள் உண்டு.... இவளும் அதில் விதிவிலக்கு இல்லை ...