தினம் தினம் 7
Thinal7

7 தினம் தினம் !!
"அஞ்சு போயிட்டு வர்றேன்" என்று சத்யா வாசலில் நின்று குரல் கொடுக்க
"எம்மாடி என் புருசன் போயிட்டு வர்றேன்னு எல்லாம் சொல்றான் எந்த பேய் அடிச்சுச்சுன்னு தெரிலேயே" என்று அஞ்சலி வெளியே வர ... கிழவி முகம் சிடுசிடுக்க மகனை பார்த்தது ....
"சரிங்க போயிட்டு வாங்க ....
"மதியம் லீவ் போட்டுரு பிறகு அது இதுன்னு காரணம் சொல்லாத...
"ம்ம்" புருசன் வெளியே போக
"மதியம் எங்க போறீங்க? என்று மங்களம் குறுக்கு விசாரணை பண்ண
"பக்கத்து தெருவுல அவர் பிரெண்ட் முனிசாமி இருக்கார்ல "
"முனிசாமியா அது யார் ??
"அவர் பிரெண்ட் முனிசாமி அவரு பொண்டாட்டி கரெண்ட்ல அடிச்சு செத்து போச்சாம் , உடம்பை கரிக்கட்டை ஆகி போச்சாம் அடக்கத்துக்கு போறோம் வர்றீங்களா ?
"ச்சைக் அங்க வந்து நான் என்னடி பண்ண போறேன், இழவு வீட்டுக்கு வயசானவளை வர சொல்றியே அறிவு இல்லை
"உன் இழவு தான் விழ மாட்டைக்கு, அதையாவது போய் பார்த்தா துணை பொணமா போவியான்னு ஆசைதான் "என்று முனங்கி விட்டு போக ... இருப்பதிலேயே பழைய சேலையை அஞ்சலி எடுத்து கட்டி கொண்டாள்
நல்ல சேலை கட்டினா கிழவி அலர்ட் ஆகி ,நானும் வர்றேன்னு நிக்கும்.. எதுக்கு வம்பு என்று கெட்டப்பை மாத்திய அஞ்சலி ஒரு நல்ல சேலையை எடுத்து பையில் திணித்து கொண்டு கிளம்பி விட்டாள்....
சிறு பிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பது போல அவள் முகம் எங்கும் மலர்ச்சி
புருசன் போயிட்டு வர்றேன் சொல்லிட்டு போயிட்டான், அதோடு வெளியே வேற கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டானே இவளுக்கு ஏக மகிழ்ச்சி .
"என்ன அஞ்சலி இன்னைனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி இருக்கு என்று ஸ்டாப்ரூமில் வந்து உட்கார்ந்த அஞ்சலி பக்கத்தில் மோனிகா அமர
அய்யய்யோ இவ கண்ணுலயா மாட்டணும், நம்ம முகத்துக்கு எதையுமே மறைக்க தெரிய மாட்டேங்குதே.. அதுவும் இந்த சந்தோஷம் வந்தா பல்ல காட்டியே காட்டி கொடுத்துடுறேன்" என்று வழிந்து வைத்த அஞ்சலி
மேல் நாடி பல்லுல பல் வலி மோனி... அதனால் விரிச்சு வச்சிருக்கேன், சிரிச்ச மாதிரியா இருக்கு "
அப்படியா ஆனா முகம் முழுக்க பூரிப்பா சிரிச்ச மாதிரி இருக்கே, அதான் கேட்டேன்"
அது பல் வலியில் வீங்கி போய் உங்களுக்கு அப்படி தெரியுமா இருக்கும்... தான் வீட்டில் சண்டை என்றால் அடுத்தவனிடம் ஒரு மணி நேரம் கூட உட்கார்ந்து குறைபேசி விடலாம்.... நான் நல்லா இருக்கேன்னு எவன் கிட்டயாவது சொல்லிட்டோம் முடிஞ்சு போச்சு ,வீட்டுக்கு போகும்போதே சண்டையோட தான் அந்த நாள் முடியும்.. மோனி நகர லதா வந்து அஞ்சலி பக்கத்தில் இடித்துக்கொண்டு அமர்ந்தவள்
என்னடி அஞ்சு அண்ணே ராத்திரி ஏக கவனிப்பு போல , முகம் முழுக்க சிலிர்த்துப் போய் இருக்கு...
"அவ்வளவு கேவலமாவா தெரியுது .. ஆனா கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கேன் ... இன்னைக்கு மதியத்துக்கு மேல கடைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு ...
"அட பார்டா அப்போ யேங் ஜோடி ரொமான்ஸ் தான்
"ப்ச் கிண்டல் அடிக்காதுடி எப்பவாவது அவரே ??கூட்டிட்டு போவார்.. அப்படி நாம சொல்லாம ஒன்னை செஞ்சா .. எதோ உள் குத்து இருக்குன்னு அர்த்தம் ... ஆனா இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தான் தெரில ஆளு ஏதோ பெருசா அடி போடுதோன்னு தோணுது ... என்று அஞ்சலி நாடியை தடவ ...
ம்க்கும் இங்க புடுங்க என்னடி இருக்கு ??
அதான ரெண்டு கிட்னி தவிர ஒன்றும் இல்லை ... என்னவா இருக்கும் ....
தப்பாவே நினைக்காத அஞ்சு ஆசையா கூட கூட்டிட்டு போகலாமே
அதுக்கு எல்லாம் சான்ஸே இல்ல லதா ... அதுவும் என் புருசன் பர்ஸ்ல இருந்து பத்து ரூபாய் எடுக்கிறான்னா சம்திங்க் ராங்க்.."
ரொம்ப யோசிக்காத அஞ்சு ஜாலியா போயிட்டு வா அப்பறம் நடக்கிறதை அப்பறம் பார்ப்போம்
ம்ம் அது சரிதான் ...
உண்மையாக இந்த சந்தோஷங்கள் எல்லாம் எப்போதாவது நடப்பது தான்... இதற்காகத்தான் வருடம் முழுவதும் ஏங்கிக் கிடப்பது வரமா சாபமா?? ..
அவனோடு ஒரு அரை நாள் இல்லை ஒரு அரை மணி நேரம் பேசி சிரித்து அவன் கைக்குள் கையை விட்டு காலாற நடந்து , ஏதோ ஒரு கடையில் நாலு பிஸ்கட் வாங்கி உள்ளே போட்டுக்கொண்டு, ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு ஜூசை வாங்கி குடித்துவிட்டு அந்த நிமிடங்கள் எல்லாம் சர்க்கரை நொடிகள் அது எல்லாம் கிடைத்து விடாதா என்று எவ்வளவு ஏக்கம்
"அந்த மோனிகா கிட்ட எதையும் சொல்லிக்கலையே அஞ்சு, சொன்னா வயிறு எரிஞ்சே செத்துடுவா
"இல்லடி நான் எதுவுமே சொல்லல எனக்கு தெரியாதா
"அஞ்சு மிஸ் உங்கள ஹெச்எம் கூப்பிடுறார்
என்றதும் அஞ்சலி பாட புத்தகத்தை எடுத்துக் கொண்டு...
இந்த கோழி மண்டையன் எதுக்கு என்ன கூப்பிடுறான்னு தெரியலையே.. நீயும் வர்றியா லதா ... அவன் கிட்ட தனியா போகணும்னாலே பயமா இருக்கு "
"அச்சச்சோ எனக்கு முதல் பீரியட் கிளாஸ் இருக்கே என்னால வர முடியாது அஞ்சலி "
சரி நானே பாத்துக்கிறேன் எனக்கு காலையில பஸ்ட் பீரியட் லெசர்னு தெரிஞ்சுக்கிட்டே வேணும்னே என்ன கூப்பிடுறான்.. ஏதாவது பண்ணட்டும் எட்டி ஒரு மிதி குண்டு பல்பை உடைச்சுடுறேன் .. "
எது பண்றதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணு அஞ்சு, ஏன்னா நமக்கு உதவி செய்ய நம்ம வீட்டிலிருந்து எவனும் வரமாட்டான் ..."
"ப்ச் ஊமை குத்தா குத்தி வச்சிட்டாவது ஓடி வந்துடுவேன் இந்த அஞ்சுவை சாதாரணமா நினைச்சுக்கிட்டான்... பாத்துக்கலாம்" என்று வீர ஆவேசமாக நடந்து போனவள் நடை ஹெச்எம் அறை போகும் போது பம்ம ஆரம்பித்தது
வீரமங்கை தான் தைரியசாலி தான் ,ஆனால் அந்த தைரியத்தை எல்லாம் காலை உடைத்து முடமாக்கி விட்டது கணவனின் பேச்சுகள்
உனக்கு ஒன்னும் தெரியாது நீயெல்லாம் சோறு திங்க தான் லாய்க்கு , படிச்சியா பன்னிக்குட்டி மேய்ச்சியா? ஏன் இப்படி எதுவுமே தெரியாம நிக்கிற என்ற வார்த்தைகளில் அவளுக்கு இருந்த தன்னம்பிக்கை தைரியம் தான் யார் என்பதை மறந்து போனது..
சொல்லுங்க சார் கூப்பிட்டீங்களோ? உள்ளே நுழைந்த அஞ்சலியை வக்கிரமாகத்தான் அவன் பார்த்தான்...
பத்து ரூபாய் டை அடிச்சிட்டு வந்துட்டானாம் ,அதை பார்க்கணுமாம் அப்படியே இவன பார்த்தவுடனே மேல வந்து விழுந்துருவோம்னு எப்படி இந்த ஆம்பளைக எல்லாம் நம்மள அண்டர் எஸ்ட்டிமேட்டா நினைக்கிறாங்க.... புல்லே ஆனாலும் புருஷன் கல்லானாலும் கணவன் அரை மென்டலாவே இருந்தாலும் அவன்தான் என் நாயகன்னு வாழ்ரதுனால தான் இப்படி புலம்பிக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.... ஆம்பள பிடிக்க தெரிஞ்சிருந்தா நான் அப்பவே ஜாலியா பறந்து இருக்க மாட்டேனா... "
இவன் வேற ஜொள்ளு விட்டு ஸ்கூல நீச்சல் குளமா மாத்திக்கிட்டு இருக்கான் ... பாக்குற பார்வையை பாரு"
"என்ன அஞ்சலி மிஸ் என்ன திட்டி முடிச்சாச்சா... என்றதும் அவள் திருத்திருவென முழித்துக் கொண்டு
" எதுக்கு சார் என்னை கூப்பிட்டு விட்டீங்க
" கொஞ்சம் அட்டனன்ஸ் எல்லாம் கிளியர் பண்ண வேண்டியது இருக்கு முன்னாடி உட்கார்ந்து இந்த அட்டனன்ஸ் எல்லாம் எனக்கு கிளியர் பண்ணி பெர்ஃபெக்ட் பண்ணி கொடுங்க என்று ஒரு அட்டனன்ஸ் ரிஜிஸ்டரை தூக்கி அவள் முன்னால் போட.. அவரை பார்க்காமல் தன் ஒரு பக்க சேலையை சரியாக மூடிக்கொண்டு அதை எட்டி எடுத்தாள்
ஏண்டா அங்க பாக்குற என்று சட்டையை பிடித்து இழுத்து நான்கு அறை விட ஆசைதான், ஆனால் அடுத்த நிமிடம் என்ன சொல்வார்கள்...
நல்லா காட்டிகிட்டு நின்னிருப்பா, அவன் இடிச்சிருப்பான் ... இவ கண்ணசைக்காமலா ஆம்பள அவள ஒரசறான், இத்தனை பேர் வேலை பார்க்கிற இடத்துல அவளை மட்டும் ஏன் இடிக்கணும்... இப்படி ஏகப்பட்ட காரசாரமான விவாதங்கள் நடக்கும் கடைசியில் இவளை குற்றவாளி என தீர்த்துவிடும்.. அதற்கு துஷ்டனை கண்டால் தூர விலகு என்று நகர்ந்து போய்விட வேண்டியதுதான் என்றுதான் எப்போதும் கண்டும் காணாது நகர்வாள்...
"ஸ்டாப் ரூம்ல உட்கார்ந்து முடிச்சு கொண்டு வர்றேன் சார்" சாவுகிராக்கியை எல்லாம் சார்னு கூப்பிட வேண்டி இருக்கு ...
எனக்கு இப்பவே வேணும் அஞ்சலி, அங்க போய் பண்ற வேலைய இங்க பண்ணுங்க.. நான் உங்களுக்கு ஏசி போட்டு கொடுக்கிறேன்..
அது "
பயப்படாதீங்க இவ்வளவு பேர் இருக்கிற இடத்தில உங்களை நான் என்ன பண்ணிட போறேன்.. கடிச்சா தின்னுட போறேன்" என்றவர் பார்வையோ அவளை கடித்துதான் தின்றது...
"ஒழுக்கம் டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் ஆணிடமும் உண்டு , ஒழுக்கமின்மை பூஜை அறையில் வேலை பார்ப்பவனிடமும் இருக்கும்... இடம் பார்த்து தகுதி பிரிக்காதீர்கள்..
அவருக்கு முன்னால் இருந்த சேரில் ரிஜிஸ்டரை தூக்கி வைத்துக்கொண்டு குனிந்து உட்கார்ந்து கொண்டாள்...
எவ்வளவு சம்பளம் வாங்குற அஞ்சலி ??
16 ஆயிரம் சார் "
மோனிகா வந்து ரெண்டு வருசம் தான் ஆகுது எவ்வளவு வாங்குறா தெரியுமா .... 27 ஆயிரம் ....
அது எனக்கு தேவையில்லாத கேள்வி பதில் சார் ... பல துண்டில் குடும்ப பெண்ணை சுற்றி விழும் .... அது தன்னை சீரழித்து விடும் என்று தெரியாது வலையில் மாட்டி , வாழ்க்கை இழந்து விடுவார்கள்... தன் மீது விழும் மற்றவர்கள் கரிசனை துண்டில் என புரிந்து கொண்டாளே இரையாகாது தப்பித்து விடலாம்..
"மோனிகா மிஸ் கார் வாங்கிட்டாங்க தெரியுமா? அஞ்சலி
"ஆமா சார் நேத்து பார்த்தேன்
"உங்களுக்கு கார் வாங்கணும்னு ஆசை இல்லையா
"இல்ல சார் இருக்கிறது போதும் ,
"இருக்கிறது போதும்னு எவ்வளவு நாள் , இப்படி அடிபட்டு மிதிபட்டு பஸ்லையே வர போறீங்க.. ஏதாவது ஒன்னு கிடைக்கலன்னா, அதுக்காக ஆசைப்படுறதோ இல்ல அதை அடைய நினைக்கிறதோ தப்பில்லை அஞ்சலி" என்றவரை முறைப்பாக ஒரு பார்வை பார்த்தாள் ..
அவன் பார்வை பேச்சு எதைச் சொல்கிறது என்று புரிந்தது
"உங்க சார் கொஞ்சம் கோவக்காரர் போல இருக்கு... உங்களை சரியா ட்ரீட் பண்றது போல இல்லையே .... அம்சமா அழகா இருக்கீங்க ,உங்க அருமை தெரில போல ...
"அவர் கோவக்கார தான் சார் , ஆனா நாக்க தொங்க போட்டுக்கிட்டு அடுத்தவன் பொண்டாட்டி கூட போற பொட்ட பொறுக்கி இல்ல..
" என்னையா பொட்ட பொறுக்கின்னு சொல்றீங்க அஞ்சலி
"ச்சே சே , சாக போற வயசுல இருக்கீங்க ... உங்களுக்கு என்ன மாதிரி ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்கு.... பேர புள்ள வேற... சுகர் பிரஷர், அவ்வளவு ஏன் இரண்டு தடவை பாத்ரூம்ல வழிக்கு வேற விழுந்துட்டீங்களாமே... இவ்வளவு பிரச்சனை இருக்குற உங்கள போய் நான் பொம்பள பொறுக்கின்னு சொல்ல முடியுமா? இந்த ஸ்கூலுக்கே நீங்க கடவுள் மாதிரி,
"என்ன அஞ்சலி உங்க பேச்சுல நக்கல் இருந்த மாதிரி இருக்கு ..
"அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது சார், என் பேச்சே இப்படித்தான்
"சரி சுத்தி வளைச்சு பேச விரும்பல, நான் உங்களை கொஞ்ச நாளா பார்த்துகிட்டு இருக்கேன்னு தெரியுமா என்றதும் எழுதிக் கொண்டிருந்த அவள் கைகள் ஒரு நிமிடம் நின்று மீண்டும் வேலையை தொடங்கியது..
"எனக்கு உங்க மேல ஒரு லைக் , உங்களுக்கும் உங்க வீட்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி சார் நடந்துக்க மாட்டார் என்கிறது தெரியும் ... மோனிகா மாதிரி நீயும் அட்ஜஸ்ட் பண்ணி போனா"
"அட்ஜஸ்ட் பண்ணி போனா "என்றவள் சேரை நகட்டி விட்டு எழும்பினாள் அவர் சற்று பயந்து வியர்வையை துடைக்க ...
"சொல்லுடா அட்ஜஸ்ட் பண்ணிப் போனா? என்ன யூஸ் பண்ணிக்குவ... எனக்கு கார் வாங்கி தருவ, வீடு வாங்கி தருவ அப்படித்தானே ? என்ன தொட்டு பாருடா அப்ப தெரியும் என் புருஷன் யாரு, நான் யாருன்னு... நானும் ஒதுங்கி போவோம்னு நினைச்சா ஸ்ட்ரைட்டாவே கேக்குறியா, செருப்பு பிஞ்சிடும் ஜாக்கிரதை... குடும்பத்துல அடிபட்டு மிதிபட்டு அவங்க சொல்றத எல்லாம் கேக்குறதுனால நான் ஒன்னும் கோழை இல்லை.... அந்த குடும்பத்தை கடைசி வரைக்கும் தக்க வச்சுக்கணும் என்கிற ஆசையிலதான் அங்க அமைதியா கிடக்கிறது ... அதுக்காக உன்ன மாதிரி ஈன பிறவிகள் கிட்ட எல்லாம் அவுத்து போட்டுட்டு நிற்பேன்னு நினைச்சு பார்க்காத ... இந்த பத்தாயிரம் ரூபாயில நான் ஒன்னும் கோட்டையை கட்ட போறது கிடையாது , வேலையை விட்டு தூக்க போறியா தூக்கி தூர போடு., இங்க என் தன்மானத்தை இழந்து சாப்பிடுறதுக்கு, என் புருஷன் காலடியில தன்மானத்தை இழந்து அவன் சம்பாத்தியத்தில சாப்பிட்டு போயிடுவேன்டா
அஞ்சலி ப்ளீஸ் கத்தாத "வெடவெடத்து விட்டார் .... அன்பு பஞ்சத்தில் கிடக்கும் பெண் தானே உனக்கு நான் இருக்கேன் என்று பசப்பி அவளை களவாட நெனைக்க வெகுண்டு விட்டாள்...
"இன்னொரு வாட்டி இந்த மாதிரி பேச்சு ஏதாவது என்கிட்ட வந்தது, எனக்கு உன்ன குத்தி போடறதுக்கு கத்தியோ கடப்பாறையோ தேவையில்லை.. என் கையில இருக்கு பாரு இந்த பேனா , அதை எடுத்த சொருக வேண்டிய இடத்துல சொருகினேன் இந்த இடத்திலேயே உன் உசுர் போயிடும்...சார் பிரஷர்ல நெஞ்சு வெடிச்சு செத்துட்டாருன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன் பார்த்துக்கோ "என்றவள் பேச்சில் ஆள் அரண்டு விட்டது ..
"இந்தா உன்னோட வேலை எல்லாம் முடிச்சுட்டேன் என்று ரெஜிஸ்டரை தூக்கி அவர் பக்கத்தில் போட்டவள் ... விறு விறுவென்று வெளியே போக...
மரத்தடியில் சத்யா அவளுக்காக காத்து நின்றான்.. அழுகைதான் வந்தது..
இவன் அன்பை கொடுத்தால் , ஏன் அடுத்தவன் எல்லாம் அணைக்க விரும்ப போகிறான் உனக்கு நான் இருக்கேன் என்று எல்லா இடத்திலும் அரணாக இவன் நின்றிருந்தால்.. ஏன் அடுத்தவன் உனக்காக நான் இருக்கேன் வரியா வரியா என்று கூப்பிட போகிறான் நெஞ்சு முட்ட..
இன்னைக்கு பேசின பேச்சுக்கு நாளைக்கு என்ன பாடெல்லாம் பட போறனோ, வவ்வாலா தொங்க விடப்போறான் , கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாமோ...
"ப்ச் இவன்கிட்ட என்ன யோசிச்சு பேச வேண்டியது இருக்கு... படுக்க வரியான்னு கூச்சமே இல்லாம கேக்குறான் நாயி, இவனையெல்லாம் இப்படித்தான் பேசணும்... சபாஷ் அஞ்சலி சபாஷ் உனக்கு வீரம் வந்துடுச்சு, இப்படியே போய் உன் புருஷனையும் நாலு கிழி கிழி பார்க்கலாம்...
"எங்க , தீவிரவாதிகிட்ட கூட விஜயகாந்த் மாதிரி பக்கம் பக்கமா டயலாக் பேசி திருத்தி கால்ல விழ வச்சிடலாம் , ஆனா என் புருஷன் கிட்ட மட்டும் தான் பேசவே வரமாட்டேங்குது பேசினாலும் நீ பேசி நான் கேட்கணுமான்னு கேட்பார் ... ஆதரவு தேடும் குழந்தை போல புலம்பிக்கொண்டே புருஷனை நோக்கித்தான் அஞ்சலி ஓடினாள்....
அடங்கி போகிறவள் மட்டுமே நல்ல பெண் என்று இவர்கள் போட்டு வைத்து இருக்கும் வரையறையை உடைக்காது , பெண் தனக்கான சுதந்திரத்தை வாங்கிக்கொள்ள முடியாது ..