அலெக்ஸ் 17
Alex17

17 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
ஆறு மாதங்கள் கடந்து ,
மாடிப்படியில் சத்தமில்லாமல் இறங்கி வரும் தன் மகளை நல்லபெருமாள் அண்ணாந்து பார்த்தார்..
என் மகள் யாமினியா இது ?? ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு சுடிதார் கழுத்தில் நெப்போலியன் கட்டிய தாலி மட்டும் தான் கிடந்தது , காலில் புதிதாக மெட்டி ஜொலித்தது... மெட்டி போட்டா அழகா இருக்கும்டி என்று தலைகீழ் கணக்கு காதல் படித்த மனைவி காலில் இச் வைத்த கணவன் வேண்டுகோளுக்கு இணங்க மெட்டி அவளே வாங்கி போட்டு கொண்டாளோ??
கையில் சரக்கு பாட்டிலோடு தலைமுடியை விரித்து போட்டு ஆடும் மகள் தான் கண் முன் வந்தாள் தலையை உதறினார்...
மதுரைக்காரியாவே மாத்திட்டானே என்று மெலிதாக சிரித்தார்...
அன்று தன் மனைவிக்கு முறுக்கு மீசை பிடிக்கும் என்று மீசையை வளர்த்து முறுக்கி விட்ட தன் வாலிப காதலும் கூடவே நியாபகம் வந்தது ....
என் பொண்ணா இது , மலைக்கும் மடுவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ, அப்படி ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் மகளிடம் காண்கிறார்..
தாம் தூம் என்று நிற்கும் மகள், ஆடையில் நேர்த்தி தலைவாரி பொட்டு வைத்து வீட்டில் அடிக்கடி இருப்பதே பெரிய மாற்றம் தான் ...
அதிலும் சமையல் அறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது புதிது, மேஜையில் கொண்டு வைக்கும் உணவு பதார்த்தங்களின் பெயர்களை சொல்லுவது மிகவும் புதிது... அதிலும் இது வஞ்சிரம் மீன் தானே, இப்படி பொரிக்கிறத விட பெப்பர் தூவி பொரிச்சா இன்னும் நல்லா இருக்கும்.. என்று வேறு கூறுவாள்..
எந்த சரக்கு எங்கு கிடைக்கும், எந்த பப் ஆடம்பரமாக இருக்கும் . எங்கே கிழித்துப் போட்ட ஆடைகள் புதுசு புதுசாக வந்து இறங்கும் என்று சதா ஷாப்பிங் மால் சரக்கு என்று திரியும் தன் மகளா இது கலர் கலர் சுடிதார் அணிந்து வீடு , புறா தோட்டம் என முற்றிலுமாக மாறிப்போனாள்
ஒருவர் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவளை கட்டாயப்படுத்தினால் மாறக்கூடிய ஆள் அவள் இப்போதும் இல்லை.. அவளாக நினைத்தால் மட்டும் தான் அவளை வளைக்க முடியும்... இந்த மாற்றங்கள் எல்லாம் அவளே தனக்காக உண்டாக்கிக் கொண்டாள் என்பது தெரியாத தகப்பன் இல்லையே
தரை அதிர நடக்கும் தன் மகள், இப்போதெல்லாம் தரைக்கு கூட வலிக்காது நடக்க பழகிக் கொண்டாள் வயது வித்தியாசம் தெரியாமல் அடிக்கவும் பேசவும் செய்யும் மகள் , இப்போதெல்லாம் வேலைக்காரர்களை கூட அக்கா எனக்கு ரசம் வச்சிடுங்க அப்படியே கொஞ்சம் உருளைக்கிழங்கு மட்டும் போதும் வயிறு சரியில்லை, என் ரூம் நானே கிளீன் பண்ணிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் ஏதோ வேற்று கிரகத்தில் நின்றது போல இவருக்கே மலைப்பாக இருக்கிறது..
சில நேரங்களில் தன் மனைவியின் ஜாடை விழுவது போலவும் இருந்தது,
"கொஞ்ச நாள் தான் அங்கு இருந்தா, அப்படியே அம்மா போல மாறிட்டா போல இருக்கே, குடும்பத்தை நிர்வகிப்பதில் சமையல் பூஜை அறை தோட்டம் என்று கலந்து கட்டும் ஸ்ரீதேவியின் சாயல் அப்படியே தன் மகள் மீது விழுவது புரிந்தது...
இதுவே முன்னமாக இருந்திருந்தால், எம்புள்ளைய கெடுத்துட்டா என்று இதற்கும் ஒரு போர் தொடங்கி இருப்பார்... இப்போதெல்லாம் அவரும் தான் மாறிவிட்டார் சதா ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கிறார் .. யாரையும் பழிவாங்க வேண்டும், புலி வாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் போய், என்னவோ ஒரு மனநிலையில் கிடந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்.... மகளின் வித்தியாசங்களை காண அவர் உண்டு ஆனால் அவருக்குள் இருக்கும் பல பிரளயங்களை காண யாருமே இல்லையே என்ற ஒரு மனநிலை கூட இப்போதெல்லாம் வருகிறது ..
மகள் மருமகனின் மீது காதல் உணர்வில் சாய ஆரம்பித்து விட்டாள் புரிகிறது என் பொண்ணு அவன் கூட வாழட்டும் என்று நினைத்த அடுத்த நொடி ..
அப்போ இனி எனக்குன்னு யாருமே இல்லையா என் மக கூட இனிமே எனக்கு கிடையாதா இனிமே இந்த தனிமை முதுமை அய்யய்யோ!! இழக்கக்கூடாதது எல்லாவற்றையும் இழந்து விட்டோமோ என்று அல்லல்படும் இதயத்திற்கு என்ன சமாதானம் சொல்ல என்றே தெரியவில்லை ...
அவ வாழட்டும் நாம பார்ப்போம் வேறு என்ன செய்ய என்று சமாதானப்படுத்திக் கொண்டார்
என்னம்மா எங்க கிளம்பிட்ட?
நீங்க இங்கதான் இருக்கீங்களா டேடி.. நான் கோவில் வரைக்கும் போகலாம்னு நினைச்சேன் நீங்களும் வர்றீங்களா?
"ஓஓஓ அப்படியா நைட் டூட்டி தான் , சரிம்மா வா போவோம் என்று தகப்பனும் மகளும் காரில் ஏறினர்.. யாமனி காரை ஓட்ட நல்லபெருமாள் மகள் அருகில் உட்கார்ந்திருந்தார்
"சாரி கண்ணா
"எதுக்குப்பா என்று யாமி தன் தகப்பனை திரும்பிப் பார்க்க
"உன் அம்மா கிட்ட இருந்து நான் உன்ன அபகரிச்சுட்டேன் நான் மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருந்தா, நீ அம்மா இல்லாத பிள்ளையா இத்தனை வருஷம் வாழ்ந்திருக்க மாட்ட.. என்னோட வீம்பும் வரட்டு கௌரவமும்தான்.. உன்னையும் உன் வாழ்க்கையையும் கெடுத்துருச்சு... ஐ அம் ரியலி சாரி கண்ணா என்ற தகப்பன் கையை இழுத்து தன் கையோடு வைத்துக் கொண்ட யாமினி
"டேட் அன்னைக்கு சொன்னதுதான் இப்பவும் நீங்க கெட்டவராவே இருந்தாலும் , எனக்கு எப்பவும் நீங்க என்னோட டேட்தான் , என்னோட ஹீரோதான் என்ற மகளை இழுத்து நெற்றியில் முத்தமிட்டார்
இன்னும் தங்க கொலுசு போட்டு டேடி என்று தன் நெஞ்சில் விழும் மகளாகத்தான் அவள் தெரிந்தாள்
"அப்பா நீ தப்பே செஞ்சாலும் எனக்கு ஹீரோதான் என்று சொல்வது உண்மையான நேசத்தில் உச்சம் அல்லவா?? தன் மனைவியின் நேசத்தை காதலை பங்கு போட விரும்பாதவர் மகளின் பாசத்தையாவது முழுதாக பெற்று விட வேண்டும் என்று தூக்கிக் கொண்டு ஓடி வந்தவர் உண்மையாக மகளின் பாசத்தை முழுதாக பெற்றுத் தான் விட்டார்
யாருக்கு நீங்க எப்படியோ , பட் எனக்கு நீங்க நல்ல டேடி அம்மாவ என்கிட்ட இருந்து நீங்க பிரிச்சே இருந்தாலும் , அம்மாவுடைய ரோலையும் நீங்க எனக்கு கரெக்டா செஞ்சு இருக்கீங்க எப்படி மறப்பேன்.... அஞ்சு வயசுக்கு பிள்ளைய கழுத்துல தொங்க போட்டுக்கிட்டு நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போனத எப்படி என்னால மறக்க முடியும் டேட் , இன்னைக்கு வரைக்கும் நீங்க எவ்வளவு பிசியா இருந்தாலும் , நான் என்ன பண்றேன், நான் சாப்பிட்டேனா, இல்லையான்னு அத்தனை வேலைக்கு நடுவுலேயும் என்ன நீங்க மறந்ததே கிடையாது.... ராத்திரி எவ்வளவு நேரம் ஆகி வீட்டுக்கு வந்தாலும், என் ரூம்ல வந்து தூங்குற என் தலை கோதுற உங்களோட ஸ்பரிசத்த எப்படி நான் மறந்து போவேன்.. நான் குடிச்சிட்டு லேட்டா வந்தா கூட , எனக்காக காத்திருந்து கதவை திறந்து விடுற உங்களை நான் எப்படி விட்டுக்கொடுப்பேன்.. ஏண்டா குடிச்சிட்டு வந்த, இதெல்லாம் தப்பு , இப்படி எல்லாம் செய்யாத அங்க போகக்கூடாது இங்க போக கூடாதுன்னு இதுவரைக்கும் என்னை நீங்கள் கட்டுப்படுத்தினதே இல்லை அத்தனை சுதந்திரம் தந்தீங்க ... இப்படி எல்லாம் இருக்கக் கூடாது பொண்ணுன்னா இப்படித்தா கண்ணா இருக்கணும்னு ஒருவேளை நீங்க சொல்லி கொடுத்து இருந்தா.. நானும் பொண்ணா இருந்திருப்பேன் , ஏன்னா இந்த உலகத்துல நான் ரசிச்சது நான் பார்த்தது நான் கடைபிடிச்சது எல்லாமே என் ஹீரோ உங்கள பார்த்து தான்... சோ, நானும் ரகடாவே இருந்துட்டேன் என்ற மகள் கைப்பிடித்து முத்தம் கொடுத்தவர்..
"இது போதும்டா என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனி அதை சீர்படுத்த முடியாதுன்னு தோணுது ஆனா உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு இப்பதான் என் மரமண்டைக்கு புரியுது ... இத்தனை நாள் நீ அப்பாவுக்காக பார்த்தது போதும் கண்ணா, இனிமேல் நீ எனக்காக பார்க்க வேண்டாம் உன் வாழ்க்கையை நீ வாழ். அதுதான் எனக்கு கடைசியா இருக்கிற சந்தோஷம்
"டேடி ஒன்னு கேக்குறேன் நீங்க மறைக்காம பதில் சொல்லணும்
"என்னடா கண்ணா?
"அம்மாவை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று யாமனி கேட்டு விட்டு தன் தகப்பன் முகத்தைக் கூர்ந்து பார்க்க .. சத்தம் இல்லாது குனிந்து கொண்டார் அவர் காதலை அவர் முகம் காட்டிக் கொடுத்து விடும் ..
"ஏம்பா இப்ப கூட இறங்கி போக முடியல
"தெரியல என்ற அவர் தலையாட்ட
"அதேதான்பா, என்னோட பிராப்ளமும், உங்கள பாத்து வளர்ந்த எனக்கு உங்களோட வரட்டு கௌரவமும் வீம்பும் அப்படியே வந்துடுச்சு டேட்.. புரியுது ஆனா எதையும் மாத்த என்னால முடியாது இதுதான் யாமினி, அப்படின்னு செட் ஆயிட்டேன் காதலுக்காகவோ இல்ல என் வாழ்க்கைக்காகவோ கூட என்னால இறங்கி போக முடியும்னு தோணலப்பா, வேண்டாம் விட்ருங்க உங்களுக்கு நான் எனக்கு நீங்கன்னு அப்படியே ஜாலியா இருந்துடலாமே டேடி..
"தான் செய்த தவறு எவ்வளவு பெரிய சிக்கலை கொண்டு வந்து விட்டிருக்கிறது என்று இப்பொழுது தான் நல்லபெருமாளுக்கு புரிந்தது ..
தங்களை பற்றி யோசித்த தாயும் தகப்பனும் ஒரே ஒரு நிமிடம் மகளுக்கு தாயும் வேண்டும் தகப்பனும் வேண்டும் என்று யோசித்து இருந்தால் இன்று அவளும் மற்ற பெண்களைப் போல வாழ்ந்து இருப்பாளோ நெஞ்சில் சம்மட்டிக் கொண்டு அடித்தது போல் வலித்தது
அவளை சொல்லி குற்றமில்லை அவள்தான் சொல்லி விட்டாளே, நீ என்ன செய்தாயோ அதையே நான் செய்து கொண்டிருக்கிறேன் .. உன்னால் உன்னுடைய கௌரவத்தை வீம்பை விட முடியாது என்றால் என்னால் எப்படி முடியும் என்று கேட்கும் மகளுக்கு பதில் சொல்ல முடியாது முழித்தார் இருவருமாக கோவிலில் இறங்கி நடந்தனர்..
காதல் பெரிதா வீம்பு பெரிதா காதல் பெரிது என்று நினைப்பவர்கள் வீம்பை விட்டு விடுவார்கள் வீம்பு தான் பெரிது என்று நினைப்பவர்கள் காதலை விட்டுவிடுவார்கள்