அநாயகனே-3
அநாயகனே-3
இளந்தீரனுக்கு எந்தவிதமான மன உறுத்தலும் இல்லாது, தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு நேராக பொங்கல் விழா நடக்கும் திடலுக்குப் போனான்.
அவனுக்கு அவன் அம்மா இவனால் வருத்தப்படுவதோ,இல்லை அம்மாச்சி அழுவதோ பெரிய விசயமே இல்லை.
இது எதுவுமே அவனது மூளைக்குள்ளும் போகாது,மனசுக்குள்ளயும் போகாது. அவனுக்கு இப்போ கட்சியில அடுத்த தலைமைப் பொறுப்புக்கு வரணும், இல்லையா இன்னும் மூணு மாசத்துல வர்ற தேர்தல் நின்னு எம்.எல்.ஏவாக ஜெயிச்சிடணும்,அதுக்கான வழியென்னன்னு மட்டும்தான் சிந்தனையில் இருக்குது. அதுக்கூடதன் காதலியை எப்படி கல்யாணம் பண்ணிக்கணும் என்கின்ற உள்ளான திட்டமும் இருக்கிறது.
அவன் தனது புல்லட்டில் கெத்தாக போகும்போது மைனர் மாதிரி இருந்தான்.
அவர்கள் கட்சியின் சார்பாக பொங்கல்விழா நடக்கும் இடத்தில் போய் இறங்கி, கம்பீரமாக மீசையை முறுக்கிவிட்டவாறே நடந்தான்.
அவனைப் பார்த்ததும் கட்சித்தொண்டர்களும், அவன்கூட உள்ளவர்களுமாக சேர்ந்து மொத்தமாக கோஷம்போட்டனர்
நம்ம கட்சியின் அடுத்த தலைவர்,வருங்கால சிங்கம், அண்ணன் இளந்தீரன் வாழ்க என்று அவனை வரவேற்றனர்.
அந்தக் கம்பிக்கரை போட்ட வேஷ்டி உடுத்திய அத்தனை இளைஞர்களும் இவன் பேரை சொல்லி வாழ்க என்று கோஷம் போட்டதும், அவனுக்குள் இருந்த அந்த அரசியல் தலைவன் என்ற உணர்வில் பெருமை தலையின் உச்சிக்கு ஏறியது.
அந்த தலமை போதை அவனுக்கு ரொம்ப பிபித்திருந்தது. அது தனக்கு வேணும், அதற்கு என்ன வழியுண்டு என்பதை மூளை தானாகவே கணக்குப்போட ஆரம்பித்துவிட்டது.
ஒன்னு நம்ம தலைவர் சிவானந்தனுக்குப் பதிலாக நம்ம தேர்தல்ல நின்னு எம்.எல்,ஏவாக ஜெயிச்சிடணும், இல்லை நம்ம எதிரி மிஸ்டர் தாய்மாமனை வீழ்த்தி அவரு இடத்துல நின்னு ஜெயிச்சு அவருக்கு ஆப்பு வைச்சிடணும் என்றுதான் யோசித்தான்.
அவன் அப்படி யோசிக்கிறதை வெளிக்காட்டாது சிரித்து, கையெடுத்துக் கும்பிட்டவாறே மேடைக்கு நடந்தான். அவனை மொத்தக்கூட்டமும் அவனை தலையில் தூக்கிவைத்து ஆடாத குறையாக கொண்டாடினார்கள்.
தலைவருக்கு அடுத்தது நம்மளைத்தானே இந்த கட்சியில் ரொம்ப பாசமா கொண்டாடுறாங்க. அதனால் நமக்கு ஒரு பெரிய எதிர்காலம் இந்த கட்சியில் இருக்கே என்ற நினைப்போடு தலைக்கணமும் தலைக்கேறி அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்தது.
அவன் அப்படியே கூட்டத்திற்குள் நுழைந்து மேடையில் ஏறவும், அங்கே அவனது நண்பன் ரகுவரன் அவனுக்காகஇவ்வளவு நேரமும் காத்திருந்தவன், ஓடிவந்துக் கட்டிக்கொண்டான்.
“பங்காளி பொக்கல் வாழ்த்துகள்டா! இன்னைக்கு என்னடா முகம் கொஞ்சம் டல்லடிக்குது. நீ எதிர்பார்த்திருந்த ஆளைப் பார்க்கலைன்னா இப்படி இருக்க?”
“அதெல்லாம் இல்லடா!சும்மாஆஆஆ” என்றவன் வீட்டில் நடந்ததைச் சொல்லவில்லை. எப்போதும் எல்லாத்தையும் அவன்கிட்ட ஷேர் பண்ணிக்கிறவன் இன்னைக்கென்று அதைமறைத்துவிட்டு, சமாளித்து நின்றான்.
“என்னடா இன்னும் தலைவர் வரலையா? நேரமாகிட்டேடா. எல்லோரும் வந்தாச்சே”
“வருவாங்கடா”
“டேய் எல்லா ஏற்பாடும்தான் நேத்தே பண்ணிட்டோமே இன்னும் தலைவர் வரலைன்னா எப்படிடா?அவருக்குப் போன் பண்ணி வரச் சொன்னியா?இங்க பொங்கல் வைக்க எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க பாரு. ஆயிரத்துல பானையும், குடும்பமும் காத்திருக்காங்க அவர் வந்தவுடனே பொங்கல் வைக்க ஆரம்பிச்சிடலாம்ல. நீ போன் பண்ணுனியா நான் போன் பண்ணி கூப்பிடனுமா?”
“இல்லடா அதோல்லாம் நான் மாமாக்கு போன் பண்ணி கூப்பிட்டேன் மாமா குடும்பத்தோட வர்றாருல்ல அதனால கொஞ்சம் லேட்டாகுது. அவங்க கிளம்பி வந்தட்டிருக்கிறதா சொன்னாங்க, என்ன ஒரு ஐஞ்சு நிமிஷத்துல வந்துருவாங்க”
“அப்படியா. அப்போ எல்லாம் சரி பாத்திருவோம்.அப்புறம் அவரு வந்தபிறகு ஓடிட்டிருக்க முடியாது. எல்லாம் சரியா இருக்கா நீ பார்த்திட்டியா?”என்று அவனும் ஒரு முறை தனது கண்களால் நோட்டம் விட்டுப் பார்த்தான். எல்லாமே சரியாகத்தான் இருந்தது.
அந்த நேரம் அவர்கள் கட்சியின் மாவட்டத் தலைவரும், அவரது குடும்பமும் வந்த கார் அந்தத் திடலுக்குள் சரியாகநுழைந்தது.
ஏற்கனவே இந்த ஆயிரம் பொங்கல் வைக்க,ஆட்களையும் பொருட்களையும் ஏற்பாடு எல்லாம் செய்தது இளந்தீரனும் ரகுவரனும்தான். தங்களது கட்சியின் சார்பாக ஏதாவது செய்யணும் என்றுதான் ஓடி ஓடி எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தனர்.
அவர்கள் தலைவர் மட்டும்தான் வருவார் என்று எதிர்பார்த்திருக்க, தலைவரது குடும்பமும் வருகிறது என்றதும் இளந்தீனுக்கு மனசுக்குள் மத்தாப்பு வெடித்ததுபோன்று உணர்வுகள் பூவாய் பூத்தது.
அவன் நேசிக்கும் ஒரு உறவும் கூடசேர்ந்து சிவானந்தன்கூட வருகிறதென்பதால்தான் அவனுக்கு அப்படியொரு சந்தோசத்தில் மனதிற்குள் காதல் மத்தாப்பு பூப்பாவாக பூத்து, குலுங்கி அவனது முகத்திலும் அது தெரிந்தது.
அப்படியே தலைவர் கார் வந்ததும் ஓடிப் போய் அவரை வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தான். அவரோடுகூட அவரது மகள் மதுமிதாவும், அவரது மனைவி மரகதமும் வந்திருந்தார்.
அவருக்கு ஒரே மகள் தான். அவளை அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பினதால் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவார்.
சிவானந்தனை மேடைக்கு அழைத்து வந்தவனது, பின்னாடியே வந்த மதுமிதாவை யாருக்கும் தெரியாமல் இடித்துக் கொண்டுவந்தான் இளந்தீரன்.
அவர்களைப் பார்க்கும்போது கூட்டத்தில் பாதுகாப்பாக அழைத்து வருகிறான் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அவள் என்னவள் என்ற உரிமையில்தான் உரசிக்கொண்டே வந்தான்.
மதுமிதா அவன் தன்னை இடித்ததும் ஓரக்கண்ணால் ஏறிட்டு,உதட்டைக் கடித்துக்கொண்டு,அப்படியே கண்களை சுழற்றி அவனை ஒரு நொடி பார்த்துவிட்டு குனிந்துக்கொண்டாள்.
ஹப்பா அந்த ஒரு நொடிக் காந்தப் பார்வையிலயே மயங்கியவன், ஒருசில நொடிகள் உறைந்து நின்றுவிட்டான்.
அவனது தோளைத் தட்டிய ரகுவரன்தான் “என்னடா அப்படியே நிக்கிற? மாமாவும் அத்தையும் முன்னாடி போறாங்க பாரு, மதுமிதாவுக்கு வழியை விடு அவளும் போய் உட்காரட்டும்”என்று காதில் கிசுகிசுவென்று சொன்னதும்தான் சட்டென்று உணர்வுக்கு வந்தவன் அவளுக்கு வழியைவிட்டு நகர்ந்தான்.
அவளை முன்னாடி போகவிட்டு, பின்னாடியே பாதுகாப்பாக போய் மேடையில் அவளை உட்கார சொல்லி கைக்காட்டினான்.
மதுமிதா தனது அப்பாவிற்கு அந்தப்பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். அவளது அந்த ஒற்ற பார்வையில் தன்னை ஒட்டுமொத்தமாக இழந்தவன் அவள் பின்னாடியே போனான். அவள் உட்கார்ந்ததும் அவள் பக்கத்தில் போய் நின்றான்.
அந்த ஒரு நொடியில் அப்படியே அவளை தூக்கிட்டு போயிடலாமா?இல்லை கழுத்துல தாலியைக் கட்டித் தன் மனைவியாக்கிடலாமா?என்ற ஏகசிந்தையில் இருந்தவன், இப்போதுதான் நிற்கும் இடமறிந்து அமைதியாக போய் தலைவர் பக்கத்தில் நின்றுகொண்டான்.
அதற்குள் பொங்கல் வைக்கக்கூடிய நேரமும் வந்துவிட்டதால், அவரிடம் குனிந்து பேசியவன், தலைவரை அழைத்து, அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வெள்ளி பொங்கல் பானையிருக்கும் அடுப்பை பற்றவைக்கச் சொல்லி அந்த விழாவை ஆரம்பித்து வைக்கச்சொன்னான்.
சிவானந்தனோ தனது மதுமிதாவை பக்கத்தில் அழைத்து அவள் கையால் அந்த விழாவைத் துவக்கிவைத்தார்.
மதுமிதாவும் ஸ்டைலாக பொங்கல் பானையில் பொங்கல் வைப்பதாக போஸ்கொடுத்து, அதை கிளறிக் கொண்டிருந்தாள்.அவளுக்கு உதவுகிறேன் என்று இளந்தீரனோ அவள் பக்கத்திலயே நின்று எல்லா உதவெயையும் செய்தான்,அவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்துநின்று பொங்கல் வைத்தார்கள்.
ராகுவரன் மெதுவாக அவர்கள் பக்கமாக வந்தவன் “என்னங்கடா நடக்குது இங்க? எல்லோரும் பொங்கல் வைச்சிட்டு பிஸியா இருக்கிற நேரத்துல, உங்க காதல் பொங்கலைத் தனியாக வைச்சிட்டிருக்கீங்க. அடேய் இளா என்னடா நினைச்சிட்டிருக்க?பொங்கல் வைக்கிறேன்னு என் மாமா மகளை உஷார் பண்ணிட்டிருக்க. நம்மள சுத்திதான் எல்லாரும் நிக்கிறாங்க கவனமா இருங்க. இது வெளியே கசிஞ்சா அவ்வளவுதான் எதிர்கட்சி வீட்டுல என்ன நடக்குது பாருங்க மக்களேன்று புளிபோட்டு விளக்கிவிட்டிருவானுங்கடா. இரண்டுபேரும் கொஞ்சம் அடக்கி வாசிங்க”என்று இளந்தீரனிடம் மெதுவாக சொன்னான்.
அதைக்கேட்டதும் இளந்தீரன் கொஞ்சம் வெட்கப்பட்டு சிரித்தவன், லேசாக மீசையை முறுக்கிவிட்டு மதுமிதாவைப் பார்த்து கண்ணடித்தான்.
அவளோ அச்சோ என்று தலையை திருப்பி வேறு பக்கம் பார்ப்பதுபோன்று நின்றுகொண்டாள். அவளது அம்மாவோ வீட்டுக்காரரோடு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் குடுப்பதில் கவனமாக இருந்தார்.
மதுமிதா வெட்கப்படவும் இன்னும் அவள் பக்கத்தில் நெருங்கி நின்றவன் “அடுத்த வருஷம் நீயும் நானும் தலைப்பொங்கல் கொண்டாடணும்டி. அதுக்கான வேலையில் இந்த மச்சான் இறங்கப்போறேன். நீயும் நம்மக் கல்யாணத்துக்கு தயாராக இரு. இதுக்குமேல எல்லாம் இந்த மச்சானால உன்னைப் பார்த்துட்டு மட்டுமே இருக்கமுடியாதுடி. நீ பக்கத்துல வந்தாலே மச்சானோட நெஞ்சுல அப்படியே பால் பொங்குற மாதிரி மனசில காதல் பொங்கி வழியுது. ஐயாவால கட்டுப்படுத்த முடியல. அதனால் சீக்கிரமா ஒரு முடிவை எடுப்போம். என்ன புரியுதா?”என்று கேட்டவன் குனிந்து கரும்பைத் தூக்கி வெட்டி அவள் கையில் கொடுத்தான்.
அங்கு நின்று பாக்குறவங்களுக்கு அவன் மதுமிதாவுக்கு பொங்கல் வைக்க உதவுறான்னுதான் தெரியும். ஆனால் அவனோ அவளைக் கண்டம்பண்ண நேரம் குறிச்சிட்டிருக்கான்னு தெரியாதே!அவளும் அவன் வெட்டிக்கொடுத்தக் கரும்பைக் கடித்தவாறே அவனிடம் பேசினாள்.
“அதெல்லாம் இந்த மதுமிதா எப்பவோ ரெடியாதான் இருக்காள். நீங்க உங்க மாமா ஜெயச்சந்திரனுக்கு எதிராக வர்ற தேர்தல்ல நின்னு ஜெயிச்சு,எம்.எல்.ஏ இளந்தீரனாக வந்து நின்னு,என்னை பொண்ணுகேளுங்க. அன்னைக்கே எங்கப்பா நம்ம கல்யாணத்தை நடத்தித் தந்திருவாரு. அந்தநாளுக்காகத்தான் நானும் காத்திருக்கேன்”என்றவள் ஆசையாக அவனை முகத்தைப் பார்த்து நின்றாள்.
அவளது கண்ணில் தெரிந்த தன் மீதான காதலையும் ஏக்கத்தையும் உணர்ந்தவன் “ஏய் இப்படி பார்க்கதடி. இந்தப்பார்வைக்கே என்னையவே நான் எழுதிக்கொடுத்திடுவேன். இந்த எம்.எல்.ஏவாகமாட்டனா என்ன?உனக்காக நம்ம காதலுக்காக மட்டுமில்லடி, நம்ம வாழ்க்கைக்காவும் என் கனவுக்காகவும் அந்த எம்.எல்.ஏ பதவியை ஜெயிச்சிக்காட்டுறேன்டி. அதை ஜெயிச்சிட்டு வந்து உன்னை மொத்தமா இந்த மச்சான் எடுத்துப்பேன்டி. இது உன் மேலசத்தியம்டி என் வெள்ளத்தங்கமே”என்றவன் யாரும் பார்க்காதவண்ணம் அவளுக்கு உதட்டைக்குவித்து முத்தம் கொடுத்து அந்த அடுப்பு எரியுற இடத்துலயும் குளுகுளுன்னு காதல் பண்ணிட்டிருந்தான்.
அடேய் இளந்தீரா உனக்கு இப்படி லவ் டயலாக்கெல்லாம் பேசவருமாடா?எனக்குத் தெரியாமல்போச்சுதே!
இதையெல்லாம் பார்த்திருந்த ரகுவரனோ ‘இதுக இரண்டும் நம்ம என்ன சொன்னாலும் கேட்காதுங்க’ என்று அங்கிருந்து மெதுவாக வந்து அவங்க மாமா பக்கத்துல நின்றுகொண்டான்.
“என்ன ரகு நீ தனியா வந்துட்ட?மதுமிதா தனியா நிக்கிறா பாரு. அவளை கவனிச்சிக்க வேண்டியதுதானே”
“அதுதான் இளந்தீரன் நிக்கிறானே மாமா. அவன் கவனமா பார்த்துப்பான். இன்னும் கொஞ்ச நேரம்தானே. அவா அங்க நிக்கட்டும். அப்போதான் எதிர்கட்சியா இருந்தாலும் மக்களோடு மக்களா கலந்து பொங்கல்கொண்டாடுறாங்கன்னு நம்ம மேலயுய் நம்ம கட்சி மேலயும் ஒரு நல்ல அபிப்பராயம் வரும். அடுத்த எலக்க்ஷன்ல நிக்கும்போது கணிசமான ஓட்டு நம்மளைத் தானாகவே தேடி வரும். லைவ்ல டீவியில ஓடிட்டிருக்கு. எல்லோரும் பார்ப்பாங்கள்ல. இதுவும் ஒருவிதமான ராஜதந்திரம்தான் மாமா”
“நீங்க இரண்டுபேரும் சேர்ந்து என்னவோ செய்றீங்க. நல்லதா நடந்தாச்சரிதான். இது எப்போ முடியும்னு சொல்லு. எனக்கு வேற வேலையிருக்கு. இதுங்கக்கூடவெல்லாம் ரொம்ப நேரம் நிக்கக்கூடாது மருமகனே”
“இன்னும் பத்து நிமிஷம்தான். நம்ம பானை இறக்கிட்டா வேலை முடிஞ்சுது. இந்த மக்களை இப்படி ஏமாத்தகனாதானே உண்டு மாமா. இந்த தடவை எப்படியாவது நம்மக்கட்சியில் இருந்து இந்த தொகுதியை பிடிக்கணும். அதுதான் நம்ம இலட்சியமா இருக்கணும் மாமா”
“அதுதான் பத்து இருபது வருஷமா என் இலட்சியமாவே இருக்கே.அது ஒன்னும் நடந்தமாதிரியே இல்லையேடா. நானும் எவ்வளவோ முயற்சிப் பண்ணிட்டேன். அந்த ஜெயச்சந்திரன் அதிகவாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சிடுறானே. அவன் இருக்கிறவரைக்கும் நான் எம்.எல்.ஏ ஆகுறது நடக்காதுபோலடா. அந்த ஜெயச்சந்திரனைத் தூக்கிபோட்டுட்டா நம்ம ஜெயிச்சிடலாம். அதுக்கு என்ன வழின்னு யோசிச்சு செய்யிங்கடா”
“அதுதான் நம்ம ஏற்கனவே போட்ட திட்டம்தானே மாமா. அதந்தத் திட்டத்தை எப்படி நிறைவேத்தன்னு நம்ம இளந்தீரன் ஏதாவது ப்ளன் பண்ணுவான். இந்த எல்க்ஷன்ல நம்ம ஜெயிக்கிறோம் மாமா.அதுக்கு இந்த ரகு உத்தரவாதம் தர்றேன்”என்று சொன்னவன் ஒரு மார்க்கமாக உதட்டை வளைத்துச்சிரித்தான்.
அதைப்புரிந்துக்கொண்ட சிவானந்தனும் அவனோடு சேர்ந்து சிரித்தாரு. அந்த சிரிப்பில் சகுனித்தனம் வெளிப்பட்டது.
இதுல யாரு சகுனின்னு கண்டுபிடிக்கமுடியலையே?சிவனாந்தனா?ரகுவரனா?