துணைவி19
Thunai19
19 இவள் துணைவி !!
அவள் மனைவி!!
வேணி கழுத்தில் கட்டிய மஞ்சள் தாலியை தலையில் கை வைத்து உமாபதி பார்த்துக் கொண்டிருந்தான்..
இதில் அவன் என்ன முடிவு எடுக்க? என்று சத்தியமாக புரியவில்லை..
போஸ் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக 100% இதோ உன்னவளை வைத்துக் கொள் என்று கையில் பிடித்துக் கொடுத்திருப்பான் ...
தாலி கட்டியதால் ஒருத்தி மனைவி ஆகிவிடலாம் ஆனால் துணைவியாகிவிட முடியாதே !!
வெகு நேரம் கழித்து வேணி கண்களை திறக்க.. பதி அவளுக்கு சூடாக காபியை ஆற்றி கையில் கொடுக்க.. அவள் மறுத்து தலையாட்ட ,
"இங்க பாரும்மா வேணி நான் ஒன்னும் அரக்கன் இல்லை, நானும் மனுஷன்தான்.. அதுவும் மனசாட்சி உள்ள மனுஷன் , தாலி கட்டிட்டேன்னு ஒரே காரணத்துக்காக உன்ன எதுக்காகவும் கட்டாய படுத்த மாட்டேன் ...
"சத்தியமா நம்புங்க அந்த நிலைமையில என்ன சுத்தி என்ன நடந்ததுன்னு கூட எனக்கு தெரியாதுங்க" என்று அவன் காலில் வேணி வந்து விழப் போக... சட்டென அவளை விலக்கி நிறுத்திய உமாபதி...
"உன்னை நான் நம்புறேன்மா, உன் கண்ணுல இருக்குற இந்த கண்ணீர் பொய் சொல்லலை
"நான் நான் என்று அவள் வயிற்றை கசக்கி பிடிக்க
"டாக்டர் நீ குழந்தை உண்டாகி இருக்கிறதா சொன்னார்.. பயப்படாத, இந்த விஷயம் உன்னையும் என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாது ..
ரொம்ப நன்றிங்க இந்த தாலி என்று அவள் கேள்வியாக அதைப் பார்க்க ..
இது உன்னையும் என்னையும் பொறுத்தவரைக்கும் இப்ப வர இது வெறும் மஞ்சள் கயிறுதான் அதை போட்டுகிறதோ, கழட்டி தர்றதோ உன்னோட விருப்பம் என்று அவன் கையை நீட்ட ... அவள் அதை கழட்ட போக
"ஆனா இதை கழட்டிட்டு என்னம்மா பண்ண போற?? அவள் புரியாது அவளை பார்க்க...
"இதை கழட்டிட்டா உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு என்ன அடையாளம் கொடுக்கப் போற? முழுக்க முழுக்க காதல்ல உண்டான குழந்தை இதுக்கு உன்னால அங்கீகாரத்தை கொடுக்க முடியுமா? இல்ல, இந்த குழந்தையோட மரியாதைக்காக உன்னால இந்த உலகத்தோட போராட முடியுமா? இந்த சமூகத்தை எதிர்த்து உன்னால் நிற்க முடியுமா? இல்ல நீ சொல்றது எல்லாத்தையும் உண்மைன்னு இந்த உலகம் ஏத்துக்கும்னு நீ நம்புறியா? அப்படியே நம்புனாலும் உன்னை இனிமே இந்த உலகம் வாழ விடும்னு நினைக்கிறியா?? உன் வீட்டுக்கு இந்த தாலியை கழட்டி கொடுத்துட்டு போறது உன் இஷ்டம் .. ஆனா, உன் அப்பாவோ அம்மாவோ உன்னை இப்படியே விட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? மறுபடியும் உனக்கு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கட்டி வச்சு வாழ்ந்து தான் தீரணும்னு கட்டாயப்படுத்துவாங்களே .. உன்னால இன்னொரு வாழ்க்கை வாழ முடியுமா? உன் மனசு இப்ப இருக்கிற நிலைமைக்கு போஸோட இழப்பை விட்டு வெளியே வர உன்ன சுற்றி அமைதி வேணும் அது உனக்கு கிடைக்குமா??
அது அத்தனை கேள்வியில் ஒன்றுக்கு கூட வேணியிடம் பதில் இல்லை...
:அப்படி ஒரு வேளை, இந்த காயங்கள் வடுக்கள் மாறி இன்னொரு வாழ்க்கை உன்னால வாழ முடியும்னா, அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்.." என்றவனை அவள் அதிர்ந்து போய் பார்க்க
'உன் இதயத்துல போஸ் இருக்குற இடம் காலியானா, எனக்கு ஒரு வாய்ப்பு கொடு ... நான் காத்துட்டு இருக்கேன், அதுவரைக்கும் இந்த தாலி உனக்கு வேலியா , இந்த சமுதாயத்தில் இருந்து வர்ற அவச்சொல்கிட்ட இருந்து பாதுகாக்கிற சுவரா ... உன் குடும்பத்தில் இருந்து உன்னை காக்குற அரணா, இந்த உலகத்துல உனக்கு ஒரு மரியாதை சின்னமா இருந்துட்டு போகட்டுமே...
இதயத்துல சுமக்கிறது தான் காதல்மா, உன் கழுத்துல கிடக்குற இந்த தாலிக்கு மதிப்பே இல்ல... அது வெறும் கயிறு தான் !! வெறும் கயிறுக்காக நீ பாரப்பட வேண்டியது இல்லை, ஒருவேளை அந்த வெறும் கயிறை கட்டுன என் மேல பிரியம் வந்ததுன்னா சொல்லு வாழ ஆரம்பிப்போம்... இல்ல எப்பவும் என்னோட மனைவி என்கிற அந்தஸ்தோட, என்னோட மனைவி என்கிற மரியாதையோட , உனக்கு இந்த வீட்ல ஒரு பாதுகாப்பு எப்பவும் என்கிட்ட இருந்து கிடைச்சுக்கிட்டே இருக்கும் .... இது உன் மேல சத்தியம்!!! என்று அவள் கை பிடித்து அவன் வைத்த சத்தியம் உமாபதி யார் என்று காட்டிவிட்டது...
அவளை புரிந்து கொள்ள முடியாத அத்தனை பேர் மத்தியில் அவளை அவள் காதலை, அவள் மனதை புரிந்து கொண்ட ஒருவன் உமாபதி!!
அவன் கடவுளாகத் தான் தெரிந்தான்.. அவன் கட்டிய தாலிக்கு உள்ளே போஸ் மாட்டிவிட்ட செயின் பின்னி பிணைந்து தான் கிடக்கும்... அவளை பொறுத்தவரை அவன் போட்டு விட்ட அந்த தங்க சங்கலி தான் முதல் தாலியும், இறுதி தாலியும் ...
வெறுமையான பூஜ்ஜியத்துக்கு எப்படி மதிப்பு இல்லையோ , அந்த பூஜ்ஜியம் தகுதி ஆக முன்னே எண்கள் வேண்டுமோ ??
அப்படியே , அவள் கழுத்தில் கிடக்கும் தாலியும் பூஜ்ஜியம் தான் அதை உறவாக்க காதல் வேண்டும் !!
ஒரு இழப்பு அவ்வளவு சீக்கிரம் எழும்ப விட்டுவிடுமா? இல்லை , அந்த இழப்பை மறந்துதான் அடுத்த வாழ்வுக்கு தயாராகி விட முடியுமா ? உண்மையான நேசித்த நேசங்கள் உயிர் உள்ளவரை மறக்காதே...
உமாபதி கேட்டு கொண்டது ஒன்றே ஒன்று
என் தாய் தகப்பன் இயலாதவர்கள் எனவே அவர்களிடம் எதையும் காட்டிக்காம மட்டும் இருந்தா போதும், ஊருக்கா மனைவியா நடிச்சா கூட போதும் ப்ளீஸ் என்றவன் மீது அவளுக்கே பரிதாபம் ஆகி போனது ...
குழந்தை வயிற்றில் , மனதில் போஸ் நினைவுகள் எல்லாம் சேர்த்து அவளை முற்றிலுமாக உடல் மனது அளவில் உடைத்து போட ... ஒவ்வொரு நேரமும் அவளை தாங்கியது உமாபதி கைகள்தான்...
ஆஆஆஆஆ நடுஇரவு பயந்து கத்த ஆரம்பித்தாள்
போஸ்மாமா மாமா என்று உமாபதி சட்டையை பிடித்து கொண்டு
என்ன விட்டுட்டு ஏன் போஸ் மாமா போன , வந்திடு மாமா வா மாமா என்று பிதற்ற ...
வேணி நான் போஸ் இல்லை, கண்ணை திறந்து பாரும்மா ... நான் உமாபதி என்று வேணியை பிடித்து உலுக்க, வேணி அலங்க மலங்க முழிக்க ..
இதே தொடர்கதை ஆக, ஹனிமூன் டரீப் என்று தன் தாய் தகப்பனிடம் பொய் சொல்லி , அவளை ட்ரீமெண்ட் அழைத்து சென்றான்...
தூக்கம் மருந்தின் வீரியத்தில் வேணி படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவளை மனைவியாக பார்த்தானோ இல்லையோ? சக மனுசியாக பார்த்தான்..
சூழ்நிலை கைதியாக வந்து தன்னிடம் மாட்டிக் கொண்ட அவளிடம் காமத்தை மட்டும் அல்ல, காதலை எதிர்பார்ப்பதும் தவறு என்று புரிந்து கொள்ளும் அளவு பக்குவம் இருந்ததற்கு அவனை அவனே பாராட்டிக் கொண்டான்
"போஸ் இறந்ததை அந்த பொண்ணால இன்னும் நம்ப முடியல உமாபதி, அதோட வெளிப்பாடு தான் அடிக்கடி உங்ககிட்ட போஸ் மாமா போஸ் மாமான்னு அந்த பொண்ணு அழ காரணம் ...கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கும் நிலை
ஓஓஓஓ
முதுமையில் பெற்றோர்கள் தன் பிள்ளையை இழப்பது கொடுமை. ,
இளமையில் தன் மனைவியை இழப்பது கொடுமை
குழந்தையில் தன் தாயை இழப்பது கொடுமை
என்றால்
தான் தாலி கட்டிய மனைவியின் இதயத்தில் அவன் இல்லை என்பது அதைவிட கொடுமையிலும் கொடுமை.... இதே இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால் வேற எவன் பிள்ளையை சுமந்துட்டு என்ன ஏமாத்துறியா என்று ஊர் கூட்டி நாறடித்து இருப்பான், அவன் மூச்சு காற்று கூட அவளுக்கு வலியை ஏற்படுத்த கூடாது என்று நினைத்தவன்... தனக்கு சொந்தம் இல்லாத ஒன்று அவள் ... அவனை சொந்தமாக ஏற்று கொண்டால் மட்டுமே அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு பந்தம் உருவாகும்.. அதுவரை இருவரும் ஒரே அறையில் வாழும் அந்நியர்களே !!
நல்ல வேளை அவளை மனைவியாகவோ காதலியாகவோ பார்க்கக்கூடிய ஒரு தருணம் கூட அவனுக்கு கிடைக்கவில்லை, அதுவரை சந்தோஷம் !! ஆனால் சத்தியமாக அவள் போஸை மறந்து உன்னோடு ஒரு வாழ்க்கை வாழ்கிறேன் என்று சொன்னால்... வாழ அவன் எப்போதும் தயார் நிலையில் தான் இருந்தான்... அதற்காக காத்தும் இருந்தான் என்பது மெய்!!!
பிள்ளை பிறந்தான் , என் பிள்ளை என்று தூக்கி ஆற தழுவிய உமாபதியை கண்கள் கலங்க நீலவேணி பார்க்க .... அவனுக்கு அந்த குழந்தையை தன் குழந்தை என்று சொல்ல தயக்கம் இல்லை..
கெளரிபதி பேர் அழகா இருக்கா என்ற உமாபதியை கண்கள் கலங்க பார்த்தாள் , என் பிள்ளை என்று வீடு வீடாக போய் அத்தனை பேருக்கும் இனிப்பு வழங்கினான்...
அவள் ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக் கொண்ட ஒருவன் கடவுளுக்கு மேலானவன் அல்லவா ??
"என்னோட காதலுக்கு மதிப்பு தந்துட்டு நீங்க வாழாம இருக்கீங்களே , பேசாம ஏதாவது ஒரு காரணம் சொல்லி டைவர்ஸ் வாங்கிட்டு
"வாங்கிட்டு நான் வாழ்ந்துடுவேன்... நான் ஈசியா மூவ் ஆகிடுவேன், இதுதான் எனக்கு வாழ்க்கை தந்ததுன்னு ஏத்துப்பேன்... பட் நீ வாழ்ந்துடுவியா வேணி.... உன்னால இந்த குழந்தையை வச்சுக்கிட்டு வாழ முடியுமா ?
"ஆனா இது சுயநலம் இல்லையா? என்னால வாழ முடியாது என்பதற்காக உங்க வாழ்க்கையை கெடுக்கிறது பாவம் இல்லையா?
"அப்போ பாவம் பார்த்தாவது வாழ்க்கை பிச்சை தரலாமே என்று அவன் சிரிப்பாக கேட்க ... அவளுக்கு இருதயத்தில் ஆணி குத்திய உணரவு தலையை குனிந்து உட்கார்ந்திருந்தாள்
"சஸ்ட் கிட்டிங் ... உடனே ஃபீல் பண்ணிடாத .. உனக்கும் உன் போஸ்கோ நடுவுல நான் வரவே மாட்டேன் ரிலாக்ஸ் "என்று அவளை சமாதானப்படுத்தினான்
எப்போதாவது மனநிலை பிரண்டு போய்விடுவாள் அப்போது போஸ் மாமா போஸ் மாமா உங்களுக்கு எதுவும் ஆகாது நான் உங்களை பத்திரமா பாத்துக்குவேன்" என்று பதி அவன் முன்னும் பின்னுமாக சுற்றிக்கொண்டு இருப்பாள் ... சிறிது நேரம் கழித்து தன்னிலை வந்த பிறகு பாவம் போல் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்க
"அது என்னடா அவ உன்னை அடிக்கடி மாமா மாமாங்கிறா என்று தகப்பன் கேட்க..
"ஏன் புருஷனை மாமான்னு சொல்லக்கூடாதா என்ன சொல்லிட்டு போறா ... நீ சொல்லிக்கம்மா உனக்கு இல்லாத உரிமையா என்று விட்டான்
உண்மையாவே என் மேல வருத்தம் இல்லையா ... கோவம் வரலையா. உங்களோட வாழ்க்கை கேள்விக்குறியா ஆயிடுச்சுன்னு நியாயப்படி நீங்க என்கிட்ட சண்டைதான் போடணும்....
"ஹாஹா , சண்டை போடுற அளவுக்கு நீ எந்த தப்பையும் பண்ணலையேம்மா "என்றவன் வாழ்க்கையை சீராக்கி விட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு.... குமரகுருவுக்கு இவர்கள் ஒட்டாத நடத்தை மீது எப்போதும் சந்தேகம் இருக்கும் அதை அறிந்து கொண்டவன்....
ஒரு நாடகத்தில போடுற வேஷம் மாதிரிதான் நம்மள பொறுத்தவரை இந்த திருமண வாழ்க்கை கொஞ்சம் நடிக்கலாமே... நான் நல்லா இருக்கேன்னு தெரிஞ்சா கொஞ்ச வருஷம் கூட வாழுவாங்க, எனக்கு அவங்களை விட்டா இந்த உலகத்துல யாரும் இல்லை வேணி என்றவன் பேச்சில் இவளுக்கு குற்றவுணர்வுதான் வந்தது.. தயங்கி தயங்கி இந்த வீட்டில் ஒருத்தியாக வாழ ஆரம்பித்தாள்... வயதான இருவரையும் பார்த்து கொள்வது அவளுக்கு மனதுக்கு நிம்மதி தந்தது ... வேலைகளை தூக்கி தலையில் போட்டு கொள்வாள்
எதுக்கு வேணி இதை எல்லாம் நீ செஞ்சிட்டு இருக்க ... அம்மா அப்பாவை பார்க்க ஆள் வச்சிருக்கேன் அவங்களை ஏன் வேலையை விட்டு நிறுத்தின, நீ ஓய்வு எடு...
"இல்ல அமைதியா உட்கார்ந்தா பைத்தியம் ஆகிடுவேனேனோன்னு பயமா இருக்கு செய்றேனே என்று அவளே விரும்பி எல்லாவற்றையும் செய்தவள் மறந்தும் உமாபதிக்கு தன் வாழ்க்கை உள்ளே ஒரு இடம் கொடுக்கவில்லை...
நாட்கள் தான் வீணா போகுது , என்னால எதையும் மாத்திக்க முடியல ப்ளீஸ், எனக்காக காத்து இருக்கிறது வேஸ்ட் என்று ஒவ்வொரு முறை வேணி சொல்லும் போதும்
இந்த ஒரு வருடம் பார்ப்போமே, இந்த ஒரு வருசம் பார்ப்போமே என்று விடுவான்... அவள் மீது காதல் என்று இல்லை இப்படி ஒருத்தியை தனியே விட பயம், மகனை விட பயம் !!
அவன் வாழ்க்கையை தன்னால் மாற்ற முடியாது என்று தெரிந்தாலும் முயற்சி எடுக்க பார்த்தாள்
மருத்துவரிடம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள்
என்னம்மா இப்போ பரவாயில்லையா.. அவள் இல்லை என்ற தலை ஆட்ட
"கொஞ்சம் உங்க போஸை மறக்க முயற்சி பண்ணலாமே ... உமாபதி பாவம் இல்லையா?
"புரியுது சார், நீங்க அவர் கட்டுன தாலிக்கு உண்மையா இருக்க சொல்றீங்க... நான் கடைசி வரை உங்கள சுமப்பேன்னு சொன்ன அவர் காதலுக்கு உண்மையா இருக்க பார்க்கிறேன்.... அவர் கட்டுன தாலிக்கு உண்மையா இருக்க பார்க்கிறேன்... எப்படி சார் அவரோட வாழ்ந்த வாழ்க்கையை இவரோட என்று முகத்தை மூடி அழ...
"என்னால அவர் வாழ்க்கை கெட்டுப் போச்சு என்கிற குற்ற உணர்ச்சி நிறைய இருக்கு... என் கழுத்துல தாலி கட்டின ஒரே காரணத்துக்காக அந்த மனுஷனை கொடுமை படுத்துறது முறையிலல்லன்னு தெரியுது... ஆனா, இதயத்துக்குள்ள வாழ்ந்துகிட்டு இருக்கிற போஸ் மாமாவை என்னால மறக்கவே முடியாதே, அவர் சாடையில பெத்து வச்சிருக்க குழந்தை மறக்க விட்டுடுமா சார் ...
"அவரோட வாழ அட்லிஸ்ட் ட்ரையாவது பண்ணுங்கம்மா.. எத்தனையோ பேர் செகண்ட் லைப் உள்ள மூவ் ஆகி சந்தோசமா இருக்கிறது இல்லையா?? ஒரு வேளை முடியவே முடியாது என்கிற கட்டாயம் வந்தா , அதை புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இருக்கும்மா.... உங்க காதலுக்கு கடைசி வரைக்கும் அவரால் மரியாதை கிடைக்கும்.... அமைதியாக வேணி இருக்க
சரி நீங்க அவரை வர சொல்லுங்க , வெளிய வெயிட் பண்ணுங்க என்று அனுப்பி விட
உமா பதியை அழைத்து பேசிய மருத்துவர்
"தன்னால உங்க வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க ... வாழ ட்ரை பண்றேன்னு சொன்னது அவங்க உதடு மட்டும்தான் பதி..
ம்ம்
"அவங்க மனசு இன்னும் தயாராகல, ஒரு வேளை அதுக்கான ஸ்டெப் அவங்க எடுக்க நினைச்சா
"ஒத்துழைக்கிறேன் ஆனா, எனக்கு வர்றவ வெறும் மனைவியா வேண்டாம், என் துணைவியா வேணும் சார்.. கட்டுன தாலிக்காக என்கூட வாழ கூடாது,.. அவ இருதயத்துக்குள்ள அந்த போஸ் இருந்து கழுத்துல மட்டும் என் தாலி இருக்குங்கிறதுக்காக என் கூட ஒரு வாழ்க்கை வாழ்ந்தா, அவ காதலும் அசிங்கமாயிடும். என்னோட வாழ்க்கையும் போலியாகிடும் ... அந்த ரெண்டையுமே நான் செய்ய விரும்பல... ஒரு வேளை அந்த இதயத்துக்குள்ள நான் புகுந்துட்டேன்னா அப்புறம் அவங்களை மனைவியா துணைவியா நான் ஏத்துக்க தயங்க மாட்டேன்... அதுவரை அந்த தாலிக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.... திருமதி உமாபதி என்பது ஒரு பட்டம் மட்டுமே !!
இதோ கிட்டத்தட்ட நாலு வருடம் ஆகிறது , ஒவ்வொரு முறையும் வேணி அவனோடு வாழ்ந்து விட வேண்டும் என்று கடினப்பட்டு , தன் இருதயத்தை குத்தி குதறி காயப்படுத்தி உமாபதியின் அருகில் வருவாள்.. நடுங்கி நடுங்கி அவனை தொடுவாள் , அந்த நடுக்கத்திலேயே அவனுக்கு தெரிந்து விடும்... அதில் கடுகளவு கூட நேசமோ காதலோ இருந்தது இல்லை... மரியாதை இருக்கும் அன்பு இருக்கும் , இவன் வாழ்க்கையை வாழ வைத்து விட வேண்டும் மனப்பான்மை தான் இருக்கும் அவள் கையை தன் கைக்குள் பிடித்து வைத்துக் கொண்டவன் ..அவள் கழுத்தில் சேலைக்குள் இதயம் தொட்டு கிடந்த போஸ் கட்டிய தங்கசெயினை காட்டியவன்...
உன் கழுத்துல கிடக்குற இது சொல்லுது நீ மாறலைன்னு மாற மாட்டேன்னு , கஷ்டப்படாத போய் தூங்கு என்று விடுவான்..
சிலர் கொடுத்து விட்டு போன காதலை, அதைவிட கூடுதல் காதல் கொடுக்க யாராவது இருந்தாலும் மனம் ஏற்காது !!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தாலி கட்டியதனால் அவனோடு வாழ்ந்து செத்து விட்டேன் என்பது அல்ல...
மனதில் நேசம் கொண்ட ஒருத்தியையே , ஒருவனையே சுமந்து.. சாகும் வரை அவனை சுமந்து கொண்டு வாழ்வேன் என்பதுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கான அடையாளம்!!