துணைவி 21

Thu21

துணைவி 21

21 இவள் துணைவி 

     அவள் மனைவி !!

உன் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறேன்னு நினைக்காத திராம்மா, அவரை போல ஒருத்தர் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் "

அவரை பற்றி இவ்வளவு தெரிஞ்சும் ஏன்க்கா ? 

"அவர உனக்கு நான் விட்டு கொடுக்கல... நீ எங்க வாழ்கை உள்ள வரல , வாழாத ஒரு வாழ்க்கைக்கு என்ன மரியாதை இருக்கு ... உனக்கு நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து தர்றேன்னு நினைச்சிக்கோ... அவரை உன் வாழ்க்கை உள்ள திணிக்கிறேன்னு நினைக்காத, அவரோட ஒரே ஆசை கெளரியோட இருக்கிற தகப்பன் மகன்ங்கிற உறவை கடைசி வரை இழக்க விரும்பல.... அந்த உறவு நீடிக்க , எங்க வாழ்க்கை பத்தி தெரிஞ்ச நீ எங்க ரெண்டு பேருக்கும் இடையில வர்றதுதான் சரி 

"இது அசிங்கம்...அவரை நான் அப்படி ஒரு எண்ணத்துல பார்க்கல பார்க்க முடியாது...  

"என் புருசனா அவரை பார்க்காத .. ஏன்னா நானே அவருக்கு அந்த உரிமையை கொடுக்கல.... அவரும் தாலி கட்டின துணைவியா என்ன பார்க்கல.. இந்த பந்தம் அர்த்தம் இல்லாத ஒன்னு.... இந்த தாலிதான் உங்க எல்லாருக்கும் தடங்கலா இருக்குன்னா, இதை எப்ப வேணும்னாலும் கழட்டி தர நான் தயாரா இருக்கேன் ... அவருக்கு வாழ்க்கை கொடுன்னு கேட்கல என்ன மதிச்ச அவருக்கு உன்னை விட நல்ல துணை கிடைக்காதுன்னு உங்க கிட்ட கெஞ்சுறேன் என்ற வேணி பேச்சில் திரவியா அமைதியா இருக்க ...

"அன்னைக்கு இந்த சமுதாயத்துக்கு என்ன பதில் சொல்லுவேன்... இந்த சமுதாயத்தை முன்னாடி எப்படி வாழ போறேன்னு ஏகப்பட்ட கேள்வி இருந்தது .... அது எல்லாத்துக்கும் ஒரு பாதுகாப்பா மட்டும் தான் இந்த தாலி உதவி இருக்கு.... ஆனா, இப்போ அந்த சமுதாயத்துக்காக கூட இந்த தாலி எனக்கு தேவையில்லை .... இந்த சமுதாயத்தை எதிர்த்து நிற்கவும் நான் துணிஞ்சிட்டேன்... எனக்காக வாழ்க்கையே தியாகம் பண்ணுன அவருக்காக இந்த சமுதாயத்தை எதிர்த்து நிற்க முடியாதா ??

"கேவலமான சமுதாயம் இது, அக்காவுக்கு குழந்தை இல்லன்னு தங்கச்சியை புடிச்சு கல்யாணம் கட்டிக் கொடுக்கிற புத்திக் கொண்ட இந்த சமுதாயம், உன்ன கண்டிப்பா கேவலமா பேசதான் செய்யும்.. அக்காவை விட தங்கச்சி அழகா இருக்கான்னு அவளை வக்கிரமா பாக்குற ஆம்பள இருக்குற இந்த சமுதாயம், உன்னை கண்டிப்பா அவமானப்படுத்த தான் செய்யும்... ஆனா ஆம்பள மலடா இருக்கான்னு அவனோட தம்பியை கல்யாணம் கட்டிக் கொடுக்க சொல்லு பார்க்கலாம்... பொண்டாட்டி செத்துட்டா குழந்தைய வளர்க்க ஆள் இல்லைன்னு அவனுக்கு புது கல்யாணம் கட்டி வைக்கிற இந்த சமுதாயம், புருஷன் செத்துட்டான்னு அந்த பொண்டாட்டி தவிச்சு நின்னுடுவான்னு அவளுக்கு புருஷனோட தம்பியை கல்யாணம் கட்டி கொடுக்க சம்மதிக்காது... ஏன்னா, இந்த சமுதாயத்துக்கு ஆம்பளைக்கு ஒரு நீதி, பொம்பளைக்கு ஒரு நீதி தான் கொடுக்க முடியும் .... என்ன செஞ்சாலும் நம்மள குத்தம் குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பான் ... இந்த சமுதாயத்தை எதுக்கு நாம பாக்கணும்... நீ, நான் , அவரு இதுல சம்பந்தப்பட போறது நாம மூணுபேரும் தான், எனக்கு அவர் வாழணும் என்ற அக்காவின் பேச்சை உண்மையாக கண் விரித்து தான் பார்த்தாள் ...

அக்கா இவ்வளவு தெளிவா பேசுற நீ... நான் சொல்றதை ஏன் புரிஞ்சிக்க மாட்டைக்கிற, ஒரு வாழ்க்கை முடிஞ்சு போனா இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கவே கூடாதுங்கிறியா?... 

"அப்படி நான் சொல்லவே இல்ல, அது அவங்க அவங்க மனநிலையை பொறுத்தது .... என் மனநிலை இவ்வளவுதான் திரா ... 

"ஒருவேளை உனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தர் வந்தா 

"ஹாஹா என்று சிரித்த வேணி 

"உமாபதி மாமாவை விட ஒருத்தர் என் வாழ்க்கை உள்ள வந்திட முடியுமா, அவரை விட ஒரு நல்லவர் வந்திட முடியுமா ? அவருக்கே என் காதலை பங்கு போட முடியாத நான், வேற யாருக்கோ பங்கு போடுவேனா... எனக்கு உரியவர் அவர்! அவர்! அவர் மட்டும்தான் என் மூக்காலமும் போஸ் மாமாதான்.. அந்த சிரிப்பை மறக்க முடியாது, அந்த அணைப்பை கடக்க முடியாது, அந்த தாம்பத்தியத்தை என் நெஞ்சை விட்டு அழிக்க முடியாது .. போஸ் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது, நிரப்ப விடவும் மாட்டேன்...

ஊப்ஸ்.. உலகத்தை பொறுத்தவரை நீங்கதான் கணவன் மனைவி 

மணமேடை ஏறினதால மட்டுமே நான் மனைவி ஆனேன் .. 

நீ அவர் இதயத்துல குடியேறி துணைவி ஆகிடு

"ப்ச் உலகத்தை பொறுத்தவரை நீதான் அவர் முதல் மனைவி அதை நானே நினைச்சாலும் மாத்த முடியாது 

"ம்ம் ஒரு ஹீரோ கதைக்காக ஒவ்வொரு படத்துக்கும்னு நாலு பேருக்கு தாலி கட்டுறான் அவன் பொண்டாட்டி யார் ???"அந்த தாலிக்கு ஏது மதிப்பு ???

"அது திரா தடுமாற 

"நான்தான் தாலி கட்டினேன், வாழ்ந்தே தீருவேன்னு ஹீரோ அடம் பிடிக்க முடியுமா ??

"ம்ஹூம் 

"அது திரைக்காக கட்டுற தாலி, இது காரணமே இல்லாம கிடக்கிற தாலி ரெண்டுக்கும் என்ன பொறுத்தவரை மதிப்பு இல்லை திராம்மா... அக்கா கணவரை அபகரிச்சிட்டேன்னு சொல்ற எந்த வாயும் நான் உமாபதியோட மானசீகமான மனைவின்னு சொல்லாது... இவர் என் வாழ்க்கை உள்ள வர்றதுக்கு முன்ன அவர்தான் என் வாழ்க்கை உள்ள வந்தார், எனக்கும் அவருக்கும் இடையில நானே யாரையும் விட்டிருக்க மாட்டேன்... ஏன்னா அவரை நான் அவ்வளவு காதலிக்கிறேன் ... நான் ஒருத்தி இங்க செல்லாத காசு அதை தூக்கி எறிஞ்சிட்டு போறது தான் புத்திசாலித்தனம்.. 

ஒரு வேளை நான் மாட்டேன்னு சொன்னா? என்று திரவியா கேள்வியாக நிப்பாட 

பத்து நாள் துக்கவீடு 

அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ ... 

"அப்பறம் பிள்ளையை பாத்துக்க ஆள் இல்லைன்னு அவருக்கு இன்னொரு கல்யாணம் நடக்கும்... அப்ப மட்டும் இது எல்லாம் முறை ஆகுமா ? அப்பவும் அக்கா பிள்ளையை தங்கச்சி தான் நல்லா பார்த்துப்பா தூக்கு அவளைன்னு உன்னதான் தூக்க போறாங்க ....

ஹான் அவள் அரண்டு முழிக்க, அவள் தலையில் செல்லமாக தட்டிய வேணி ...

"என் பிள்ளையை அவர் நல்லா பார்த்துப்பார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு, ஆனா வேற ஒருத்தி வந்தா நினைச்சு பார்க்க பதறுது,... 

"ஆக மொத்தம் அவர் வாழணும் அதான?? 

"ம்ஹூம் எனக்காக எல்லாத்தையும் விட்டு கொடுத்த அந்த மனுசன் காதலிக்கணும் , காதலிக்க படணும் அதை நான் பார்க்கணும் அவர் வாழ்றதை நான் ரசிக்கணும் அவ்வளவுதான்....  

ஊப்ஸ்இஇஇ என்று தலையை தடவிய திரவியா... வீட்டுக்குள் உமாபதி கார் நுழைய, தலையை திருப்பி பார்த்தாள்... 

காரை விட்டு இறங்கிய உமாபதி சிகரெட் ஒன்றை எடுத்து புதர் மறைவில் நின்று இழுத்து விட்டு கொய்யா இலையை பறித்து வாயில் போட்டு கொண்டு தன் கையில் ஊதி வாசனை பார்த்தபடி நிற்க அவனையே பார்த்தபடி நின்ற திரவியாவை பார்த்து மெல்ல சிரித்தாள்.. 

"அவ்வளவு சீக்கிரமா உன்ன ஏத்துக்க மாட்டார் ...

"சிக்கல்ல மாட்டி விடுறியே அக்கா, இவ்வளவு சொன்ன நீ நான் என்ன பண்ணணும்னு சொல்லேன்... 

"இனி இது உங்க வாழ்க்கை , நீ அவர் உங்களுக்கு இடையில நான் யாரோ? அவரை எப்படி காதலிப்பியோ அவர் உன்ன எப்படி காதலிக்க ஆரம்பிப்பாரோ?? அதை நான அறிய நினைக்கிறது கூட தவறு, அது உங்க பெர்சனல்... 

ப்ச் போக்கா... மனசு ஏத்துக்க மாட்டைக்குது 

காதலிக்க தொடங்கிட்டா விடவும் தோணாது விட்டு கொடுக்கவும் தோணாது , மறக்கவும் விடாது ...  

என்னவோ சொல்ற மொத்தத்துல மாட்ட போறது நான்தான்... இந்த நெட்ட சாமியார் என்னை திரும்பி பார்ப்பார்னு எனக்கு தோணல...  

அது உன் சாமர்த்தியம் ...

ப்ச் 

"வயசான அந்த ரெண்டு பேருக்காக தான் இப்ப வரை இந்த தாலி என் கழுத்துல அலங்கார பொருளா கிடக்குது... நீ இந்த வீட்டுக்குள்ள அவரோட துணைவியா வரும் போது , நான் அவர் வாழ்க்கையை விட்டு வெளிய போயிடுவேன். .. நீ அவர் துணைவியா ஆகும் போது இந்த கயிறு என் கழுத்தை விட்டு இறங்கி நான் சுதந்திரமா குற்றவுணர்வு இல்லாம, என் போஸ் மாமாவை காதலிக்க ஆரம்பிச்சிடுவேன் ...

அக்கா 

"மூச்சு முட்டுதுடி இந்த கயிறை என்னால சுமக்க முடியல எனக்கு விடுதலை கொடு ஊஊஊஊ, இந்த மனச்சிறையில இருந்து எனக்கு ஒரு விடுதலை கொடு ப்ளீஸ் "என்றவள் தங்கை கைக்குள் முகம் புதைத்து அழ...  

கதவு அருகே வரும் வரை உமாபதி முகத்தில் இருந்த வேதனைகளின் சாடை , கதவை வந்து திறந்த தகப்பனை கண்டதும் , போலியாக சிரிக்க அந்த போலிச்சிரிப்புத்தான் இவளை கண்கலங்க வைத்தது , 

இனி இவளை வாழ் என்று கட்டாயபடுத்தினால். ஒருநாள் இதயம் வெடித்தே செத்து விடுவாள் , 

வாழ ஆசை கொண்டவன் வாழ வழிதெரியாது முட்டி மோதி மன உளைச்சலில் தள்ளாடுகிறான், இருவரின் சுமையையும் என்னால் போக்க முடியும் என்றால், நான் சுமை தாங்கி ஆகிவிட்டு போகிறேன் என்று அந்த நொடி முடிவு எடுத்தாள் திரவியா.. 

ம்ம் இனி உன் போஸ் மாமாவை சுதந்திரமா காதலி என்ற தங்கை கையில் முத்தமிட்ட வேணி.... 

"நீ கொடுக்கிறது காதலா இருக்கணும், பரிதாபமா இருக்கக் கூடாது, நீ கொடுக்கிறது நேசமாக இருக்கணும் ஐயோ பாவம் வாழட்டுமேன்னு அன்பு பிச்சை போடுறதா இருக்க கூடாது, இவளுக்கு என்ன பத்தி எல்லா உண்மையும் தெரியும், பாவம் பார்த்து நமக்கு ஒரு வாழ்க்கை தர்றான்னு அவர் நினைச்சா, அந்த இடத்துல உன் காதல் தோத்து போயிடும்... உன் காதலை ஜெயிக்க வைக்கிறதும் தோற்கவைக்கிறதும் உன் கையில் இருக்கு.. இதுக்கு மேல இதை பத்தி அதிகம் பேச வேண்டாம்னு நினைக்கிறேன் ... உன் வாழ்க்கை உன் காதல் , எப்படி வேண்டுமானாலும் காதலி ஆனா அவரை வாழ வச்சிடு ...

"சில நேரங்கள்ல பயம் அழுகை போஸ் மாமா நியாபகம் வரும் போது உடலெல்லாம் பதறும்... அப்ப என்ன அறியாம மனம் பதறி போஸ் மாமாவா நெனச்சி அவர தொட்டுடுவேன் ..அதுல தகப்பனோட,தோழனோட பாதுக்காப்பு மட்டுமே உணர்ந்து இருக்கேன் ... மன்னிச்சுக்கோ, இனிமே மாத்திக்க முயற்சி பண்றேன்... உன்னவர் மேல என் நிழல் கூட இனி படாது.. ரொம்ப நாளைக்கு பிறகு சந்தோசமா இருக்கேன் என்று வேணி சிரிக்க... திராவுக்கு என்ன பதில் சொல்ல என்றே தெரியவில்லை...

ஒருத்தியின் கழுத்தில் பாதுகாப்பிற்காக அவன் கட்டிய தாலி கிடந்தது

இன்னொருத்தி உயிரை காப்பாற்றுவதற்காக அவன் தாலி ஏறியது ....

அவனை பொறுத்தவரை இரண்டு பெண்களுக்கு ஏறிய தாலியிலும் காதல் இல்லை..

ஒருத்தியை பாதுகாக்க அது பயன்பட்டது, இன்னொருத்தி உயிரைக் காக்க அது பயன்பட்டது அவ்வளவே, 

ஆசைப்பட்டு கட்டிய தாலி அவனுக்கு வாழ்க்கையை கொடுக்கவில்லை

வழியே இல்லாமல் கட்டிய தாலி வழிய வந்து காதலை கொடுத்தது..

என்னதான் ஒரே அறையில் இத்தனை வருஷங்கள் உமாபதியும் வேணியும் இருந்திருந்தாலும் அவர்கள் இடையே மிகப் பெரிய கோட்டைச் சுவர் மனங்களை பரிமாறிக் கொள்வதில், தங்கள் அந்தரங்களை பரிமாறிக் கொள்வதில் எப்போதும் தயக்கம் உண்டு ... தன் வாழ்க்கையின் அடாவடியாக வந்து வம்பு செய்தது வேறு பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக வேணியிடம் போய் விஷயத்தை சொல்லி இருப்பான்... ஆனால் அவன் வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்தது வேணியின் தங்கை ....

விஷயம் தெரிந்தால் திரவியாவுக்கும் இவளுக்கும் இடையில் பிணக்கு வருமோ என்ற பயத்தில் மறைத்தான்... தகப்பன் வேறு தன்னை சுற்றும் திரவியாயை சந்தேக கண்ணோட்டதில் பார்க்க பதறி பதறி சுற்றினான்... 

சிறு பெண் அறியாது ஆசை கொள்கிறாள் என்று லட்ச காரணம் அடுக்கி அவளை அப்புறப்படுத்த முயன்ற வரை போராடி அவளிடமே தோற்று போய் நிற்கிறான் .... 

உன் தங்கையை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் யாரோ ஒருத்தியோட வாழ சொன்னாயே, அந்த யாரோ உன் தங்கையா இருக்கட்டும் என்று சொல்ல பதிக்கு தயக்கம்...  

அவன் முகத்தில் இருந்த நிம்மதியும் சிரிப்பும் கள்ளத்தனமும் வேணிக்கு அடைக்கப்பட்ட பாரம் நீங்கியது போல உணர்வை கொடுத்தது 

அப்பாடா காதலிக்க ஆரம்பிச்சிட்டார், இனி என் போஸ் மாமாவை குற்றவுணர்வு இல்லாம காதலிப்பேன் என்றுதான் அப்போதும் நினைத்தாள்...  

மேடையில் பல நாடகங்கள் அரங்கேறுகிறது, அதே போல இந்த வீட்டில் தினமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு திரை இல்லாத நாடகம் அவர்கள் கணவர் மனைவி என்ற வாழ்க்கை நாடகம்!?

அதில் உயிர் இல்லை அந்தக் கதாபாத்திரங்களுக்கு மதிப்பும் இல்லை..  

மதிப்பு இல்லாத ஒன்றுக்காக அத்தனை பேர் நிம்மதியும் வாழ்க்கையும் கெட வேண்டுமா? 

எது துரோகம்?

நேசித்தவரை ஏமாற்றுவது துரோகம்!! 

நம்பியவர் நம்பிக்கையை காப்பாற்றாது போவது துரோகம்!! 

ஒருவரை ஒருவர் நேசிக்கவே செய்யாத ஒரு உறவில், வாழ்க்கையில் , வாழவே செய்யாத இடத்தில் துரோகத்திற்கு என்ன வேலை?? 

இரவு ஊர் போய் சேர்ந்து விட்டேன் என்று வேணியிடம் சொன்ன பதி

வேணி உன்கிட்ட ஒன்னு சொல்லணும் 

சொல்லுங்க ...

இல்லை அது பெர்சனல் எப்பப் பேச தொடங்கன்னு தெரில டைரில எழுதி மேஜை மேல வச்சிருக்கேன், போஸை நினைக்காத நேரம் டைம் இருந்தா படிச்சு பார்க்க முடியுமா 

சாரி பதி மாமா அப்படி போஸ் மாமாவை நினைச்சு பார்க்காத நாழிகை என் வாழ்க்கையில வரவே செய்யாது.... அதான் சொல்லிட்டீங்களே பெர்சனல்னு அதை நான் வாசிச்சு என்ன செய்ய போறேன் ...பதி பெருமூச்சு விட ...

வேலை முடிஞ்சு நீங்க ப்ரீயா இருந்தா போஸ் மாமாவும் நானும் சேர்ந்து இருக்கிற போட்டோவை உங்க போனுக்கு அனுப்பி விட்டிருக்கேன்... ப்ரேம் போட்டு கொண்டு வருவீங்களா?? "

"அனுப்பி விடும்மா போட்டு கொண்டு வர்றேன் ஒன்னு போதுமா? 

ம்ம் என்றவள் முற்றிலும் அவன் வாழ்க்கை விட்டு வெளியேறிவிட்டாள் என அறிந்த பின்னே தயக்கம் இல்லாது அவன் துணைவி வீட்டில் போய் நின்றது..

காலை உடைந்து தனியாக தொங்கிய தன் போட்டோ அருகே போஸ் போட்டோவை சுதந்திரமாக வைத்து அதில் இச் என வைத்தாள் வேணி...

ஐ லவ் யூ போஸ் மாமா என்று தாலியை எடுத்து போஸ் என்ற பெயரில் நச் என்று முத்தம் வைக்க சில்லென்று காற்று அவள் இடை தழுவி போக முகம் சிவந்து நின்றாள் போஸின் துணைவி!! 

சில காதலுக்கு அழிவே இல்லை 

அழிக்க நினைப்பது தர்மமும் இல்லை !!