வேரலை மேய்ந்த வேழம் 20
Veram20

20 வேரலை மேய்ந்த வேழம் !!
"எங்க வீட்ல இறக்கி விடுங்க, நாளைக்கு தானே பாப்பாவுக்கு சிகிச்சை பார்க்கணும்.. நாளைக்கு வர்றோம் "ரோட்டை பார்த்துக்கொண்டே, வேரல் கடகடவென்று கூறி முடிக்க...
"ஏன் , வீட்ல கொண்டு விட்டதும் ராத்திரியோட ராத்திரியா சுவர் ஏறி குதிச்சு , என் புள்ளையை தூக்கிட்டு கண் காணாத இடத்துக்கு ஓடிப் போகலாம்னு நினைக்கிறியா ?என்றதும் அவள் திருதிருவென்று அவனைப் பார்த்து முழிக்க
"நீ ஜகஜால கில்லாடி என்ன பண்ணுவ , எப்போ ஜகா வாங்குவேன்னு எல்லாம் எனக்கு தெரியும்.. நீ இனிமே என்ன விட்டு எங்கேயும் போக முடியாது...
உங்களுக்கு நான் சொல்றது புரியலையா ?
"நான் பேசுறது புரிச்சும் புரியாத மாதிரி முதல்ல பார்க்காத "
"நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுக்கோங்க
"என்னடி புரியணும், நீ செத்த பிறகு புரிஞ்சு எதுக்கு ஹான் ... பத்து நிமிஷத்துல உசுரே ஆடிப்போச்சுடி.. நல்லவேளை நான் வந்தேன், இல்லன்னா நீங்க ரெண்டு பேரும் இருந்த இடத்துல கரிகட்டைதான் கெடந்து இருக்கும் .... பாரு என் புள்ளையை இன்னும் நடுங்குது....
உள்ளத்தில் இருந்து என் பிள்ளை என்ற வார்த்தை வந்தது... என் அப்பா என்று நிலாவும் உள்ளத்தில் இருந்து சொன்னாள் இது என்ன உறவு?? இவள்தான் புரியாது நின்றாள்.. அவர்களை போல அவளால் எல்லாவற்றையும் உடனே ஏற்று கொள்ள முடியவில்லையே, எதையும் தள்ளிவிடவும் முடியவில்லை ... அவள் அப்பா என்பதற்கும் இவள் கணவன் என்று சொல்வதற்கும் வித்யாசம் லட்சம் உண்டே ...
"இன்னொரு தடவை உங்க ரெண்டு பேரு விஷயத்தையும் என்னால ரிஸ்க் எடுக்க முடியாது அம்மு ..
"ஏற்கனவே ஊர் முழுக்க நாறிப்போச்சு
"நாறி போனது நாறி போனதா இருக்கட்டும், அத பத்தி நானே கவலை படல ,உனக்கு என்னடி?
"உங்களுக்கு கவலை இல்லாம இருக்கலாம்.. ஆனா பொம்பள புள்ளைய பெத்து வச்சிருக்கேன் நாளைக்கு "
"நாளைக்கு ம்ம் சொல்லு, நாளைக்கு என்ன ஆயிடும் சொல்லு , என் பிள்ளைக்கு வாழ்க்கையை எப்படி பிரைட்டா அமைச்சு கொடுக்கணும்னு அவ அப்பன் எனக்கு தெரியும்.... இந்த மீடியா , நியூஸ் அப்புறம் அந்த வீணா போன கேசவன் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.... நீ உன்னை பாரு போதும், இறங்கு நம்ம வீடு வந்துடுச்சு.. இனி நீ நான் இவ இதுதான் குடும்பம் இதுதான் நம்ம வீடு இதுதான் நம்ம வாழ்க்கை புரிஞ்சாலும் சரி புரியாம பேக்கா இருந்தாலும் சரி நான் போற பாதையில தான் நீ வரணும்" ..
"சர்வதிகாரம் பண்றார்" என்று அவள் முனங்கியது கேட்டு விட்டதோ
காதல் சர்வாதிகாரி!! உனக்கு காதலை மட்டும் கத்து கொடுக்கிற சர்வாதிகாரி இத்தனை நாள் அடக்கிகிட்டு இருந்தேன் இனிமே காதல் ஆசை எதையும் அடக்க மாட்டேன் என்று அவள் காது பக்கம் குனிந்து கூறிய தீத்தன் அவள் அகண்ட கண் மீது தன் உதட்டை குவித்து ஊதி அவளே உயிர் பெற செய்து
"பிகாஸ் இனி நீ என் சொத்து மை டியர் பொண்டாட்டி வாங்க நம்ம பேலஸ் போகலாம்" என்று கையை நீட்ட முகத்தை திருப்பி கொண்ட வேரலுக்கு கதவை திறந்து அவளை வெளியே தூக்கி போடாத குறையாக இழுத்து தன் அருகே விட்டான்...
"முதல்ல குளிச்சிட்டு ரெஸ்ட் எடு,
வீடா இது , எத்தனை மாடி என்று தாயும் மகளும் அவன் வீட்டை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றார்கள்..
நாலு மாடி கீழே ஆஃபீஸ் மீட்டிங் ஏதாவது நடந்தா யூஸ் பண்ணுவேன், இரண்டாவது மாடியில ஜிம் மூணாவது மாடியில தங்குவதற்கான ரூம் நாலாவது மாடி சும்மா தான் இருக்கு... உனக்கு எப்படி வேணுமோ அப்படி மாத்திக்கலாம் ...
அப்பா இது வீடா நான் ஏதோ பெரிய ஹோட்டல்னு நினைச்சேன்... தாயின் கையில் இருந்து தகப்பன் கைக்கு குழந்தை மாறிவிட்டது..
காட்டு கத்து கத்தினாலும் அவள் பேச்சு அவள் காதில் கேட்பது போலவே இல்லை
நான் எங்கேயும் வரல என்னை கொண்டு போய் வீட்ல விடுங்க என்று வேரல் தீத்தன் பின்னால் கெஞ்சிக் கொண்டே போனாள் ஆனால் அவன் அசையவே இல்லை..
நான் வரமாட்டேன் நிலா , அடி போட போறேன் ஒழுங்கா அவர்கிட்ட இருந்து இறங்கி வா.. நாம நம்ம வீட்டுக்கு போலாம்... இதெல்லாம் சரி வராது..
என்ன சரி வராது காலம் முழுக்க உன் புள்ளைய இதே மாதிரி சுமந்துகிட்டு இருக்க போறியா..
நாளைக்கு ஆபரேஷன் பண்ணனும் இல்லன்னா அவ காலை சரி பண்ணவே முடியாதுன்னு டாக்டர் சொன்னது, உன் செவிட்டு காதுல கேட்கல" என்றவன் கோபமாக கத்தி கொண்டே அவளை பார்க்க....
தெரியும் என்கிட்ட காசு இருக்கு..நான் பார்த்துப்பேன் "
அறிவாளி, எவ்வளவு வச்சிருக்கீங்க மேடம்
அது அவள் ஒவ்வொரு விரலாக எண்ணி
60,000 இருக்கு, "
60 ஆயிரம் ரூபாய்க்கு நம்ம போனோமே அந்த ஹாஸ்பிட்டல் அதோட கார் பார்க்கிங்கில் கூட நம்மள நிக்க விடமாட்டான்.."
ஹான் வேரல் திகைத்துப் போய் அவனை பார்க்க....
பாப்பா ட்ரீட்மெண்ட்டுக்கு நாளைக்கு இருபது லட்சம் கட்டணும்"
இருபது லட்சமா நாங்க அரசு ஆஸ்பத்திரி "
ம்ம் போ போ , உனக்கு ஆரத்தி எடுத்து ரூம் தருவான்....அவள் நகத்தை கடிக்க அதை சுண்டி விட்ட தீத்தன்
உன்னோட விதண்டாவாதம் , வீம்ப பிடிச்சுக்கிட்டு நிக்க போறியா, இல்லன்னா மகளோட எதிர்காலத்தை மாத்துறதுக்கு, என் கூட வாய பொத்திகிட்டு இருக்க போறியா?? நீ ஓடினாலும் ஒளிஞ்சாலும் நான் பின்னாடி வந்து தூக்கிட்டு வர போறேன் ஏன் தேவையில்லாம மண்டை ஓடையுற, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீ ப்ரீயா விடுடி... வா
சத்தம் இல்லாமல் தீத்தன் பின்னால் நடந்து போவது தவிர அவளுக்கு வழி இல்லை.. அவன் கைகாட்டிய அறையில் போய் நுழைந்து கொண்டாள்
"உன் அம்மாவ சமாளிக்கிறதுக்கு முன்ன அப்பாவுக்கு நுரை தள்ளிடும் போல இருக்கு இதுக்கே இவ்வளவு பண்றாளே பாப்பா, நாளைக்கு காலையில அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு இருக்கு , இந்த உண்மை தெரிஞ்சா உன் அம்மா என்ன செய்வா? என்று மகளோடு பேசிக்கொண்டே தீத்தன் திரும்ப... அறை வாசலில் நகத்தைக் கடித்துக் கொண்டு அவனை திகைத்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள் வேரல்
ஊப்ஸ் இதை எப்படி தனியா ஆரம்பிக்கன்னு யோசிச்சுட்டு இருந்தேன், அவளே கேட்டுட்டா பிரச்சனை ஓவர்... என்று கழுத்தை தடவி கொண்ட தீத்தன்
மகளை குடுங்க குளிக்க வைக்கணும் என்று வாங்க வந்தவள் அவன் பேசியதை கேட்டுவிட்டு அப்படியே அதிர்ந்து போய் நிற்க...
ம்க்கும் என்று கனைத்தவன்
"பொய் ஒன்னும் சொல்லல.. நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம்..... "
"இவளுக்கு ஆபரேஷன் நடக்கணும்னா ஏகப்பட்ட இடத்துல கையெழுத்து போட்டு கொடுக்கணும் அதுக்கு தாய் தகப்பன் இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போடணும்... அதனால எனக்கு வேற வழி தெரியல ... நைட் ஆபரேஷன் காலையிலேயே சட்டப்பூர்வமா நீயும் நானும் கணவன் மனைவி ஆனா தான் அவளுக்கு ஆபரேஷன் உடனே செய்ய முடியும் ... சும்மா அடித்து விட்டான்...
இனி அவளை தக்க வைத்து கொள்ள தாமதம் ஆகாது தாலி அவசியம் ... அதுவும் சட்டப்பூர்வமாக அவன் மனைவி ஆக வேண்டும் துரித செயலில் இறங்கி விட்டான் ...
நாம லேட் பண்ண பண்ண ரிஸ்க்... உனக்கு ஏதாவது வேற ஐடியா இருந்ததுனாலும் சொல்லு அதை பண்ணிக்கலாம் ... கல்யாணம்தான் பண்ணனும்னு அவசியம் இல்ல "ஊமை குத்து குத்தினான்... அவளிடம் பெரிதாக எதிர்பார்க்க அவளோ பெருமூச்சு விட்டுவிட்டு
"அவளை குளிக்க வைக்கணும்
"ம்ம் பிடி, கல்யாணம் காலையில் இருக்கு என்ன பண்ணட்டும், ஓகேவா இல்ல அவன் கேள்வியாக அவளை பார்க்க ...
"எனக்கு என் மக மட்டும்தான் முக்கியம் அதுக்காக என்ன அவப்பெயர்னாலும் வாங்குவேன் ... எது வேணாலும் செய்வேன் , எதுவுமே செய்யாம என் மானம் போயிடுச்சு இனிமே சாண் போனா என்ன மொழம் போனா என்ன என்னவோ செய்யுங்க" நிலவா குளிச்சு தூங்க வைக்க போறேன் அவனிடமிருந்து பிடுங்காத குறையாக பிடுங்கிக் கொண்டு உள்ளே போய்விட்டாள்
"யா ஹூ "என்று அவள் உள்ளே போனதும் துள்ளி குதித்தான் தீத்தன்...
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் இவன் ஒரே ஒரு பொய் சொல்லி கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி விட்டான் அவ்வளவே ..
அவளுக்கு என்று என்று யோசித்தாள் மகள் வாழ்வாள் என்றால் எதை வேண்டுமானாலும் இழக்க தயாரே ..
காலையில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அவன் கார் போய் ரிஜிஸ்டர் ஆபீஸில் நின்றது...
வேரல் சாதாரண சேலையில் எப்போதும் போல் தான் மகளை கையில் வைத்துக்கொண்டு அவனோடு இறங்கினாள்
"அம்மு, அவங்க கையெழுத்து போட சொல்லுவாங்க நான் காட்டுற இடத்துல கை நாட்டு போடு.. அப்பதான் கல்யாணம் ரிஜிஸ்டர் ஆகும்...அவளிடம் பதில் இல்லை...
பல மீடியாக்கள் போட்டோ எடுத்துக் கொண்டது உரிமையாக அவள் தோள் மீது தோள் போட்டு போஸ் கொடுத்தவன் , அலுவலகம் உள்ளே சென்றான்...
அவன் கம்பெனியில் வேலை பார்க்கும் சிலர்,அவன் பார்ட்னர் என கொஞ்சம் பேர் நிற்க ... தலை குனிந்து அவன் பக்கத்தில் நின்ற அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டான் ...
அம்மு
ம்ம்
"இங்க வந்து நின்னு...
"ஏன் அடம் பிடிக்கிறீங்க.. என்று சத்தமில்லாது கேட்டாள் அவனோ மெலிதாக புன்னகை செய்தபடி
"இதுக்கு பேர் அடம்னா இருந்துட்டு போகட்டும் , என்ன பொறுத்தவரை இதுக்கு பேர் காதல் காதல் மட்டும் தான் ...
"நீங்க தப்பான முடிவெடுத்துட்டேன்னு உணர போறீங்க
"நான் சரியா முடிவு எடுத்து இருக்கேன்னு நினைக்க வைக்க போறேன்
"நான் மாற மாட்டேன்
" நான் உன்ன மாத்திடுவேன் அதுக்கு ஆதாரம் தான் இங்க இதோ உன்ன நிக்க வெச்சது
"நான் பட்டது அத்தனையும் காயம்
"அந்த காயத்தை என் காதல் ஆத்தும்"
"ப்ச் என்னால உங்களுக்கு ஒரு மனைவியா அவள் திக்க "
"காதல் தாம்பத்தியம் பத்தி உன் புரிதல் அவ்வளவுதான் அம்மு, அது அழகானது!!! அது புனிதமானது , அதோடு இன்னொரு கோணத்தை நான் காட்டுறேன் ... அவனை மொத்தமா உன் வாழ்க்கை விட்டு துரத்த நம்ம பிள்ளையை பாதுகாக்க இந்த தாலி கண்டிப்பா அவசியம்.. நான் இப்ப என்ன பண்ணட்டும் அம்மு??
வேரல் தலைகுனிந்து கொள்ள..
"கட்டவாடி நீ வேண்டாம் சொன்னா வேண்டாம் ....
"அம்மு
"உங்க இஷ்டம்
"ப்ச் சே எஸ் ஆர் நோ
"உங்க இஷ்டம்னு சொல்லிட்டேனே:
ஆசையாக தன் கண் பார்த்து அவன் கட்டப் போகும் தாலியை வாங்க வேண்டும் என்று ஆசைதான்.. சரி எல்லாவற்றிற்கும் அவளிடம் அடாவடி செய்யக்கூடாது என்று நினைத்தவன் ... அவள் கழுத்தில் மாலையைப் போட வேரல் உடல் இறுகி கட்டை போல் மாறியது , உணர்ச்சி துடைத்த முகத்தோடு என்னமோ நடக்கட்டும் என்ற ரீதியில் அவள் நின்றாள் ..
சார் தாலியை கட்டிடுங்க என்றதும் ... தீத்தன் தன் பாக்கெட்டில் இருந்த தாலியை தூக்கி அவளுக்கு முன்னால் நீட்டினான்
தங்குச்சரடு அதன் முகப்பில் வைரம் .. ஒரு மூங்கிலை யானை தும்பிக்கை ஒன்று வளைத்து பிடித்து இருந்தது போல் தங்கத்தில் செதுக்கி அதன் மீது வைரம் பதித்திருந்தான்.. அவள் பெயரை முதல் முதலில் கேட்ட பொழுதே அந்தப் பெயருக்கான அர்த்தம் என்னவென்று தேடி எடுத்தவன் அதை அப்படியே அந்த தாலியில் பதித்து விட்டான்...
அம்மு தீத்தன் கைகள் அவள் கையை அழுத்தமாக பிடித்து..
"இங்க பார் நீ இதுவரைக்கும் வாழ்ந்ததுக்கு பேரு கல்யாண வாழ்க்கை இல்லை , அதை முதல்ல புரிஞ்சுக்கோ.. இத்தனை நாள் இருந்தது சிறை.. அத விட்டு வெளியே வந்திருக்க , நீ இப்போ சுதந்திர பறவை.. இந்த தாலி உன்னை எப்பவும் மறுபடியும் சிறைகுள்ள அனுப்பாது, இந்த தாலி உன்னை எப்பவும் வலிக்க வைக்காது.. இந்த தாலி உனக்கு எப்பவும் உறுதுணையா இருக்கும் ... இந்த தாலியை கட்டுற என்னோட காதல் எப்பவும் கடைசி வரைக்கும் நிலைத்திருக்கும்... இப்ப வேணும்னா இந்த தாலி உனக்கு பாரமா இருக்கலாம்.. ஆனா என்னைக்காவது ஒருநாள், இந்த தாலி உன்னை காதலிக்க வைக்கும் .. அந்த நம்பிக்கையோட இந்த தாலியை நான் உன் கழுத்துல கட்டுறேன்.. சீக்கிரம் எல்லாம் மாறும்டி "என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் பரிதவிக்க அண்ணாந்து பார்த்த அவள் கண்ணிலும் முத்தம் வைத்து தன் கையில் வைத்திருந்த தாலியை அவள் கழுத்தில் அணிந்தான் ...
அய் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு என்று கைதட்டிய நிலாவில் பட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தவன்
அப்பா ரொம்ப ரொம்ப ஹேப்பி நீ ? என்று கேட்க
நானும் ரொம்ப ரொம்ப ஹேப்பிப்பா, இனிமே எங்களை யாரும் அடிக்க மாட்டாங்கல்ல என்ற குழந்தை முகத்தில் இருந்த சந்தோஷத்தை கடைசி வரைக்கும் காப்பாத்த உயிரைக் கூட கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்...
அவள் மர பொம்மை போல அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் போனாள், அவன் காட்டிய இடத்தில் எல்லாம் கைநாட்டை வைத்து கொடுக்க சட்டபூர்வமாக தீத்தன் திருமதியானாள் வேரல்...
வாங்கிய விலை உயர்ந்த சட்டை போதவில்லை என்பதற்காக அதை இழுத்து திணித்து போட்டு மூச்சு முட்டுவதற்கு பதில், அந்த சட்டையை கிழித்து தூற போட்டுவிட்டு இலகுவான சட்டையை அணிந்து கொள்வதில் தவறு இல்லை ....
சாம்பாரில் உப்பு இல்லை டைவர்ஸ் பண்ணினேன் என் புருஷனுக்கு மேட்டர் பண்ண தெரியல டைவர்ஸ் பண்ணினேன், என் பொண்டாட்டிக்கு என் குடும்பத்த அனுசரிச்சு போகல டைவர்ஸ் பண்ணினேன், என் பொண்டாட்டிக்கு சிரிக்கவே தெரியல அதனால விவாகரத்து ஆயிடுச்சு, என் புருஷன் குறட்டை விடுறான் அது சகிக்க முடியல அதனால விவாகரத்து பண்ணினேன் என்று விவாகரத்து பண்ணுவதினால்தான் நியாயமாக விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் சிலர் கூட பயந்து மறுபடியும் மறுபடியும் இந்த திருமண வன்முறையில் மாட்டிக் கொள்கிறார்கள்..
எதைப் பொறுத்துப் போக முடியுமோ? அதைத்தான் பொறுத்துப் போக முடியும், எதைத் தாங்கிக் கொள்ள முடியுமோ அதைத்தான் தாங்கிக் கொள்ள முடியும், எதை சகிக்க முடியுமோ அதை தான் சகிக்க முடியும் ..
தாலி கட்டி விட்டான் என்பதற்காக அத்தனை வன்முறையையும் மனதிலும் உடலிலும் தாங்கிக் கொண்டால் தவறு நம் பக்கமும் தான்.. குறைந்த பட்ச அன்பே கேள்விக்குறியாகும் ஒரு உறவை பிடித்து வைத்து என்ன பயன்? .... காயப்பட்டு, ரணப்பட்டு ஒரு நாள் அவள் மனமே ஊனமாகி போகும்.
ஆக, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர்வது சாலச் சிறந்தது....