அலெக்ஸாண்டர் 3

Alex3

அலெக்ஸாண்டர் 3

3 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!! 

ஊரே நெப்போலியன் வீட்டு வாசலில் தான் வாயை பிளந்து கொண்டு நின்றது ... வண்ணத்திரையில் பெண்கள் அரைகுறை ஆடையில் ஆடினால் கூட பிள்ளைகளின் கண்ணை பொத்தும் கிராமத்து வாழ்க்கை வாழும் அவர்களுக்கு, கண்ணெதிரே அரைகுறை ஆடையில் சூட்கேசோட நின்ற அலெக்சாண்டர் மனைவியை பே என்று ஆண்கள் பார்த்துக் கொண்டிருக்க , பெண்களோ தங்கள் பிள்ளைகளின் கண்களை பொத்திக் கொண்டு நின்றனர்..

அடியாத்தி,! நெப்போலியன் பொண்டாட்டியா இது, குளிக்கும்போது இடையில் எழும்பி வந்துடுச்சா? இல்ல உடுப்பே இதுதானாடி"

"அட டிவி போட்டியில் பாக்குறது இல்ல அந்த மாதிரி வெளிநாட்டில் படிச்ச புள்ளையாம் அந்த புள்ள, டிரஸ் அவ்வளவு தானாம்.. "

"ம்க்கும் , அதுக்கு இப்படியா குறைவா போடுவாக எங்க கழண்டு விழுந்திருப்போம்னு நமக்குல்ல கெதக் கெதக்குன்னு இருக்கு.. அந்த புள்ள அது பாட்டுக்கு நெஞ்ச நிமித்திக்கிட்டு நிக்குது...  

"கிழவி இதெல்லாம் ஃபேஷன் அதோட அருமை உனக்கு தெரியுமா என்று இக்காலத்து பெண் ஒன்று வாயை விட்டுவிட..

"சிண்டு முடியை ஆஞ்சு புடுவேன்டி, நாகரிகமா இருந்தாலும் அடுத்தவன் கண்ணு உறுத்துற மாதிரியா இப்படி ஆடை போடுவாங்க... நெப்போலியன் எப்படிப்பட்ட புள்ள, அவனுக்கு இந்த ஊர்ல பொண்ணே கிடைக்கலன்னா சீமையிலே போய் இந்த சிறுக்கியை புடிச்சிட்டு வந்தான் .... ஆளும் முகரையும் நிக்குது பாரு அருவருப்பே இல்லாம காட்டிகிட்டு

அவ உடம்பு அவ காட்றா, உனக்கு என்ன ஆத்தா வந்தது என்று ஒவ்வொருவருமாக கிசுகிசுத்தனர்... 

யாமினியோ, போனை பார்த்துக் கொண்டே வீலர் வைத்த சூட்கேஸை அந்த புழுதி காட்டில் இழுத்துக் கொண்டு நெப்போலியன் வீட்டை தேடினாள்.. பல வருடங்களுக்கு முன்பு பார்த்த வீடு அது ... அப்படியே இருக்க கண்டுபிடிக்க ஒன்றும் பெரிதாக இல்லை வாசலுக்கு வந்து நின்றாள்..

தாயை அவள் சடங்கான அன்று பார்த்தது ..தாய்மாமன் சீர் கொண்டு வந்து இருவரும் நிற்க வாசலில் நின்ற அவள் கன்னத்தை நெப்போலியன் தடவி 

"நல்லா இருக்கியா கொடி" என்று கேட்டு விட 

"ச்சை இடியட் என்று அதை துடைத்த அக்கா மகள் செயலில் பல்லை கடித்தான் ..

"பாருடி ஒரு நாள் உன் கழுத்தில தாலி கட்டி தூக்கிட்டு போய் வச்சிக்கிறேன்" என்று முனங்கிய அவனை முறைத்து கொண்டே தாய் நீட்டிய பட்டு சேலையை எட்டி உதைக்க...

"சபாஷ் இது என் பொண்ணு என்று நல்லபெருமாள் வந்து மகளை அணைத்து கொண்டு ..

உனக்கும் எனக்கும் எதுவும் இல்லைன்னு ஆன பிறகு என் மகளை பிடிக்க சீர் கொண்டு வந்தியா மானம் உள்ளவன்னா இங்க வராத" என்று வாசலோடு விரட்டி விட்ட பெரிய மனுசன் மகள் எப்படி இருப்பாள் இப்படிதான் இருப்பாள் ..

காலை வேளை பூஜையை முடித்துக் கொண்டு திரும்பிய ஸ்ரீதேவி வீட்டு வாசலில் தன் மகளைக் கண்டதும் அதிர வெல்லாம் இல்லை ... அவர் போட்ட வழியில் தானே தன் தம்பி போகிறான்... 

"வாடி இப்பதான் வர்றியா ?? அங்கேயே நில்லடி என் தம்பி பொண்டாட்டிக்கு ஆரத்தி தட்டு எடுத்துட்டு வரேன் என்று ஸ்ரீதேவி உள்ளே போய் ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு வந்து மகளுக்கு சுத்த போக...

டமார் என்று அது பறந்து போய் தெருவில் விழுந்தது , காலால் எட்டி உதைத்து இருந்தாள் ஸ்ரீதேவி பெத்த மூதேவி

"ஏய் ஆரத்தி தட்ட உதைச்சு விடுற அறிவில்ல" என்ற தாயை மேலும் கீழும் பார்த்த யாமினி

"பெத்ததுக்கு கூலி மம்மி, அதான் உன்ன எதுவும் செய்யல , இல்லை அது நிலமை தான் உனக்கும் என்ற மகளை ஸ்ரீதேவி பெருமூச்சு விட்டு பார்த்தாள்.. தப்பை விதைத்து விட்டான் கணவன் இனி இவள் எது சொன்னாலும் அவளுக்கு புரிய போவது இல்லை.

"வலது கால் எடுத்து வச்சாவது உள்ள வா

"ஹாஹா, இந்த வீட்டுக்கு நான் ஒன்னும் வாழ வரல மம்மி வலது கால் எடுத்து வச்சு வர.. ஒன்னையும் உன் தம்பியையும் ஒன்னும் இல்லாம ஓட்டாண்டியா நிப்பாட்டுறதுக்காக வந்திருக்கேன்... உங்க நிம்மதி சந்தோஷத்தை எல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவதற்காக வந்த நான் இடது கால் வச்சாதான் சரியா இருக்கும் ... 

"என் வழியில குறுக்க வந்துட்டீங்க இல்ல , இனிமே நீங்க ரெண்டு பேரும் நினைச்சாலும் என் வழியை விட்டு எங்கேயும் போக முடியாது.

ஏன்டா இவ கிட்ட வந்தோம்னு கண்ணீர் வடிக்கிற மாதிரி உங்க ரெண்டு பேரையும் ஆக்கிட்டு தான் இந்த இடத்தை விட்டு நான் போவேன்... நீங்க எனக்கு செக் வைக்கல , வீணா வந்து என்கிட்ட மாட்டிக்கிட்டீங்க அவ்வளவுதான் தள்ளு" என்று யாமினி இடது கால் எடுத்து வைத்து வீட்டுக்குள் போனவள் அறையை சுற்றி கண்களை சுழல விட்டவள் ...

"அந்த ரூம் இன்னும் கொஞ்ச நேரத்துல நீட்டாகி இருக்கணும் வித் ஏசியோட ஏசி இல்லாம என்னால எங்கயும் இருக்க முடியாது ஏசி மாட்ட சொல்லு உன் தம்பி கிட்ட...

"அதை நீயே சொல்லிடும்மா உன் புருஷன் உனக்கு பின்னாடி தான் நிக்கிறான்....

"என்ன இங்க சத்தம் .... காலில் கிடந்த செருப்பை கழட்டி போட்டுவிட்டு தெருவில் கிடந்த ஆரத்தி தட்டை ஒரு பார்வை பார்த்தவன் சுற்றி நின்ற ஊரையும் மீசையை முறுக்கிக் கொண்டே பார்த்தவன் 

"என்னடே ஊர் உலகத்துல குடும்ப பிரச்சனை எங்கனையுமே நடக்கலையா, என் வீட்டு விஷயம் தான் வேடிக்கை பார்க்கணுமா , வேணும்னா நாளைக்கு பந்தல் சீரியல் செட் எல்லாம் போட்டு, என் வீட்டு முன்னாடி சேர் எல்லாம் போட்டு வைக்கிறேன் வரிசையா வந்து உட்கார்ந்து பார்த்துட்டு போங்கடே...

"இல்ல நெப்போலியா உன் பொஞ்சாதியை பார்க்க வந்தோம் .. "

"பார்த்தாச்சா ??

"ஆமா ஊருக்கேல்ல காட்டுது... 

"ம்க்கும் என்ன சொன்ன ஆத்தா 

"அது சும்மாய்யா ஆனாலும் நிதானிச்சு இருக்கலாம் நீ , இந்த ஊருக்கே பிள்ளை உனக்கு பொண்டாட்டி இவளான்னு இருக்கு .... 

"போய் வேலையை பாரு ஆத்தா , கல்யாணம்னு ஆனா 1000 சங்கதி நடக்கத்தான் செய்யும்.. எல்லாரும் இப்படி ஆன்னு வாயை பார்த்துகிட்டு இருந்தா வந்தவ நம்மள பத்தி என்ன நினைப்பா...நான் எது செஞ்சாலும் சரியா இருக்கும் போங்க 

அது சரிதானே நெப்போலியன் எது செஞ்சாலும் சரியாதேன் இருக்கும். அவன் இந்த அடங்காப்பிடாரியை தாலி கட்டி தூக்கிட்டு வந்து வீட்ல வச்சிருக்கான்னா ஏதாவது விஷயம் இருக்கத்தேன செய்யும்.. அவுக வீட்டு விஷயத்தை அவன் பார்பான் போங்கடி போங்க "என்று கிழவி அத்தனை பேரையும் அடித்து விரட்ட .

"அத்தான் என்று ஓடி வந்து நின்றாள் ஒருத்தி 

"அட பவுனு என்னடி ஆளு வனப்பா இருக்க 

"போ அத்தான் உன் மேல கோவமா இருக்கேன் 

"ஏனாம்..

"பின்ன என்ன அத்தான் சும்மா கூப்பிட்டு இருந்தா கூட நான் வந்து வாழ்ந்திருக்க மாட்டேனா... இப்படி ஒரு பரட்டைய கூட்டிட்டு வந்து விட்டு இருக்கீங்க.. என்று அவன் முறைப்பெண் முறைக்க..

"அதுக்கு என்னடி, அவ வீட்டோட இருக்கட்டும் நீ வந்து தோட்டத்துல குடியேறிடு என்று நெப்போலியன் அவள் கன்னத்தில் இடிக்க..

"பாருங்க அத்தான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க நீங்க மட்டும் உம்முன்னு கண்ணு காட்டுங்க, தோட்டத்துல வந்து உங்களுக்கு வப்பாட்டியா இருந்து புடுறேன்.. அவ ஆளும் மூஞ்சியும் உங்க அழகுக்கும் தோரணைக்கும் அவ கால் தூசிக்கு வருவாளா? இதுல உங்க அக்காவை வேற முறையில்லாம பேசுது, 

அது அவங்க அம்மா புள்ள பிரச்சனை உனக்கு என்னடி உனக்கு அத்தான் நான் இருக்கேன் என்ன கவனி? "

"அப்ப நான் தோட்டத்து வீட்டுக்கு வரவா அத்தான் என்று அவள் உதட்டை கடிக்க

"உன் அக்காக்காரி ஓகேன்னு சொன்னான்னு வச்சுக்கோ நீயும் வா உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...

"அது யாரு அந்த நொக்காக்காரி"

"வேற யாரு என் பொண்டாட்டி , இப்போ உள்ள போனாளே பஜாரி அவதான், அவகிட்ட போயி அக்கா அக்கா உன் புருஷன் கூட நான் வப்பாட்டியா இருந்துக்குவான்னு கேளு, அவ தலையாட்டினான்னு வச்சுக்கோ , நீயும் உன் தங்கச்சியும் நேரா வந்து அத்தானுக்கு வப்பாட்டியா இருந்துக்கங்க ..."

"அய்ய , போங்க அத்தான் ... அந்த பொண்ண பார்த்தாலே பயமா இருக்கு... இவ கிட்ட போய் நான் கேட்கணுமா யாரு வாங்கி கட்டிக்க ... என்று அப்பெண் தெறித்து ஓடி விட..

"அப்படி என் அக்கா பெத்த பொண்ணு எல்லாரையும் பார்வையிலேயே அலற விடுறா போல இருக்கு என்று சிரித்துக் கொண்டே ஆரத்தி தட்டை எடுத்து திண்ணையில் வைத்து விட்டு உள்ளே போனான்

தெரியும் அவ அடங்காத கழுதை என்று அடக்கத்தானே அவன் சண்டிராணியை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்கிறான்...

எக்கா "

"என்னடா 

"என்ன சத்தம் 

"நான் எங்கடா சத்தம் போட்டேன், நீ கட்டிக்கொண்டு வச்சிருக்கியே உன் பொண்டாட்டி ... ஏசி இல்லாம இருக்க மாட்டாளாம்.. அவ தான் உள்ள வந்த நேரத்தில் இருந்து கத்திக்கிட்டு இருக்கா... நீயே வந்து உன் பொண்டாட்டிய என்னன்னு கேளு எனக்கு அடுப்படியில வேலை இருக்கு .... "

"ம்ம் கூல் காய்ச்சி வையி ... என்றவன் புழுக்கத்தில் மேல் இருந்த ஆடையையும் கழட்டி வீசி விட்டு நின்றவளை பல்லை கடித்து பார்த்தான்... அவளை தாண்டி அறைக்குள் நெப்போலியன் நுழைய போக கையை நீட்டி தடுத்த யாமினி

இட்ஸ் மை ரூம் "

ஹான் 

"ப்ச் ஹண்டிரி ப்ரூட் இது என்னோட ரூம்னு சொன்னேன் 

"ஏதே இது என் அப்பன் கட்டுன வீடு.. 

"ப்ச் பட் இனி நான்தான் இங்க இருப்பேன் தேவையில்லாத ஆட்கள் என் அறை உள்ள வர கூடாது .... ஸ்ரீதேவியை திரும்பி பார்த்தான் கண்ணை சுருக்கி தம்பியை பரிதாபமாக பார்க்க மீசை நடுவே கோவத்தை அடக்கினான் 

"எய்யா நெப்போலியா என் பிள்ளையை பார்க்காம செத்துடுவேன் போல சாமி" என்று ஸ்ரீதேவி இவன் கையை பிடித்து அழுதது கண் முன்னே வந்தது ...

"அவ என் மனைவி ஆனா இந்த வீட்டுக்குள்ள மறுபடி வருவான்னா அதையும் உனக்காக செய்வேன் அக்கா" என்று தன் அக்காவுக்காக எல்லாவற்றையும் இழந்தவன் வாழ்க்கையையும் இந்த நரகதேவதையிடம் ஒப்படைக்க துணிந்தவன் ஆயிற்றே ... 

"ஆறு மாசம் என்கூட இருந்தா போதும், இந்த அம்மா அவளை தூக்கி வீசலன்னு அவளுக்கு தெரியும்ல, அவளுக்காக ஜீவனை புடுச்சி வச்சிருக்கேன்னு புரிஞ்சிப்பாள்ல "என்று ஸ்ரீதேவிக்கு பதில் சொல்ல தெரியாது நின்றான்... இன்றும் அதற்கு பதில் இல்லை இவள் கண் இருந்தும் குருடி!! அப்பன் சொன்னா தலைகீழா குதிக்கும் குரங்கு , எங்கே கண்ணை திறந்து பார்ப்பாள்..அக்காவுக்காக கட்டியாச்சு அவ்வளவு தான் மனநிலை .

எனக்கு ஏசி வேணும் அப்பதான் நான் இங்கே இருப்பேன்....ஏசி மாட்ட சொல்லு ... கண்ணை நீவி கொண்டே அவளை பார்த்தவன் 

"இது ஒன்னும் உன் அப்பன் வீடு இல்லை நான் ஓன்னும் நீ வளர்கிற நாயும் இல்ல வாலாட்ட ... 

உன்னை ஒன்னும் நீ இங்கதான் இருக்கணும்னு நான் சொல்லலையே ...  

"கோர்ட் இங்க தான் இருக்க சொல்லி இருக்கு 

"அப்போ அது உன் பாடு , ஏசி மாட்ட எல்லாம் உன் புருசன் கிட்ட டப்பு இல்லை ...

"ப்ச் பிச்சைக்காரன் 

"பிச்சைக்காரன்தான் ஆனா உன் அப்பன் போல திருடன் இல்லையே 

"என் டேடி பத்தி பேசாத 

"நீ என்ன பத்தி பேசினா , உன்ன ஒழுங்கா வளர்க்க தெரியாத உன் தாடி பத்தி தான் பேசுவேன் .. கோர்ட் என் பொண்டாட்டியா தான் உன்ன வாழ சொல்லி இருக்கு , நல்லபெருமாள் மகளா இருக்கணும்னா வெளிய போ .... என் பொஞ்சாதியா இருக்கணும்னா இப்படி தான் இருக்கணும் "அவள் உதட்டை சுளித்து கொண்டு அறைக்குள் போக .... 

ஏசி இல்லாமலேயே இங்க காத்து சிலுசிலுன்னு அடிக்கும் அதோ அந்த நாலு ஜன்னலுக்கு தொறந்து விட்டு தூங்கு..என்று ஸ்ரீதேவி வந்து ஜன்னலை திறந்து விட .... 

"என் ரூம் உள்ள குறிப்பா நீ வராத மம்மி ...

"அடிங்க யாரடி கை நீட்டி பேசுற" என்று நெப்போலியன் சீறிய குரலில் பயந்தால் அது யாமினி இல்லையே 

"அப்படிதான் பேசுவேன் உனக்காக என்ன தூக்கி போட்டுட்டு வந்த இந்த லேடியை வேற எப்படி பேச சொல்ற "

"பெல்ட்டை எடுத்து விளாசி புடுவேன் நாய , என்ற நெப்போலியன் கையை பிடித்து கொண்ட ஸ்ரீதேவி 

"அவ கிடக்கா நீ வாய்யா என்னத்தையாவது பேசிட்டு போகட்டும் 

"யக்கா உன் மக கிட்ட சொல்லி வச்சிபுடு உன் மரியாதை குறைஞ்சது கொன்னுபுடுவேன்னு.. இந்தாருடி உனக்கு பாடு பாக்குறதுக்கு எல்லாம் என்னால தனியா சம்பாதிக்க முடியாது, இருக்கிறத திங்கிறதா இருந்தா தின்னு இல்ல பட்டினியா கிட , நீ உன்னை நான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட பொண்டாட்டி கிடையாது உன்ன வச்சு பாராட்ட  

"அப்போ என் அப்பா உன்ன கொல்ல அனுப்பி விட்ட ஆட்களை விடு நான் போறேன் 

"அதுதான உன்ன சிறை வைக்க,உன்ன வச்சி செய்ய நான் வச்சிருக்க ஆயுதம் விட மாட்டேன் ... போகணும்னா போ உன் அப்பனை கொலை கேஸ்ல தூக்கி உள்ள போடுறேன் 

ப்ச் டமார் என்று அறைக்கதவை மூடி கொண்டாள் 

ஏன் அக்கா இந்த அகம் பிடிச்ச கழுதைக்கு பாலுக்கு பதிலா கழுதை பித்தம் எதையும் கொடுத்து வளர்த்தியா இந்த நிலை நிக்குறா...

ஹாஹா அவளை அடக்கத்தான் உனக்கு தெரியுதே பின்ன என்ன ..என்ற ஸ்ரீதேவி முகம் வாடி இருக்க 

என்ன அக்கா ஆச்சு "

"என் ஆசைக்காக உன் வாழ்க்கையை கெடுத்து புட்டேனே ராசா..

"விடுக்கா நான் வாழ்றதே உனக்காக தானே எனக்குன்னு என்ன தனி வாழ்க்கை கிடக்கு போ போய் வேலையை பாரு என்றவன் பெருமூச்சு விட்டான்....

தாலி கட்டிய பிறகு தனி வாழ்கை வாழ முடியுமா ??

இல்ல நாமதான் எவனையாவது தனியா வாழ விட்டிருவோமா??