அநாயகா-18
அநாயகா-18
இளந்தீரன் ரகுவரனிடமிருந்து இப்படியொரு துரோகத்தை எதிர்பார்க்கவில்லை. அந்த பேனரில் ரகுவரனும் மதுமதியும் சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டதும் தாளமுடியாத கோபம்தான் வந்தது.
எப்படி இப்படியெல்லாம் நடக்குது?நானும் மதுமதியும் காதலிக்கிறோம்னு அவனுக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் அவன் எப்படி மதுமதியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இப்போ கல்யாணமும் நடக்கப்போகுது. இந்த பேனர்ல இருக்கிறது நிச்சயதார்த்தத்துக்கு எடுத்து போட்டோ போட்டிருக்காங்க போல. மதுமதி சோகத்துல நிக்கிறா. இவனைப்பாரு வாயெல்லாம் பல்லா இருக்குது. அப்படி சிரிச்சிக்கிட்டே அவமேல கையைப்போட்டுக்கிட்டு நிக்கிறான். அப்போ நான் எப்போ அந்த இடத்துலயிருந்து காலியாவேன் இவன் சேட்டப்போட்டுடலாம்னுதான் காத்திருந்தானா?உயிர் நண்பன்னு இவனை நினைச்சனே. எனக்கே துரோகம் பண்ணிட்டானே!
எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து, நான் ஜெயிலுக்குள்ள போயிருக்கேன். என்னை வந்து பார்க்கவும் இல்லை, ஜாமீன்லயும் எடுக்கவும் வரலை. ஆனா தன்னோட மகளுக்கும் ரகுவரனுக்கும் இந்த சிவானந்தன் கல்யாணத்தைப் பேசி முடிச்சிருக்காரு. நான் வெளிய வரதுக்கு முன்னாடியே கல்யாணத்தை முடிஞ்சிடணும்னு, இப்படி அவசர அவசரமாக கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்காருன்னா இது எங்கயோ இடிக்குதே? உண்மையிலயே நம்ம குடும்பத்து ஆட்கள் சொன்னமாதிரி இவனுங்களுக்கு அடிமையாகாவா நான் இத்தனை நாளும் இருந்தேன்? என்று முதன்முதலாக சிவானந்தன் மீதும் ராகுவரன் மீதும் அவனுக்கு சந்தேகம் வந்தது.
அங்கயே கொஞ்சநேரம் நின்று யோசித்தான். அடுத்து என்ன பண்ணலாம் என சிந்தித்தான். அவனுக்கு இப்போதைக்கு மதுமதி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சாளா?இல்லைக் கட்டாயப்படுத்தி கல்யாணம்பண்ணி வைக்கிறாங்களா?இதெல்லாம் தெரிஞ்சிக்கணும். எப்படியும் ஏதாவது பிரச்சனை நடந்திருந்தால் மட்டும்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருப்பாங்க. அதனால் நம்ம போய் இப்போ பேசி மதமதியை நம்மக்கூடவே கூட்டிட்டுவந்துட்டா பிரச்சனை முடிஞ்சிரும். அதுக்கப்புறம் எதுன்னாலும் பார்த்துக்கலாம் என்று நிதானமாக முடிவெடுத்துவிட்டு காருக்குள் வந்து உட்கார்ந்தான்.
“ஆதி”ரா அத்தான் என்று மெதுவாகக் கூப்பிட்டாள்.
அவனோ அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு டிரைவரிடம் “வண்டியை நேரா சிவானந்தன் வீட்டுக்கு விடு. எனக்கு அங்கப்போகணும்”என்று சொன்னான்.
அதைக்கேட்டதும் டிரைவர் திரும்பி ஆதிராவைப் பார்த்தான்.
அவ்வளவுதான் இளந்தீரனுக்கு அடக்கப்பட்ட கோபம் பீறிட்டு வெளியே வந்தது.
“என்ன நீ சாதாரண டிரைவர்தானே. நான் யாருன்னு உனக்கு தெரியாதா? நான் சொன்னா கேடக்க மாட்டியா? உடனே திரும்பியும் அவளை பார்க்குற. அவ சொன்னால்தான் போவியா? அப்படி ஒன்னும் நீ போக வேண்டாம். நான் இறங்கி நடந்து போறேன்?” என்று கீழே இறங்கபோனான்.
அதற்குள் ஆதிரா டோரை செண்ட்ரல் லாக் போடச்சொல்லி இளந்தீரனை இறங்கவிடாமல் செய்திருந்தாள்.
“டிரைவர் அண்ணா எங்களை சிவானந்தன் வீட்டுலகொண்டு விடுங்க. எதுன்னாலும் நாங்க பார்த்துக்கிறோம்” என்றதும்தான் டிரைவர் நேராக சிவானந்தன் வீடு நோக்கி காரை ஓட்டினான்.
இந்த டிரைவர்கூட நம்ம பேச்சைக் கேட்க மாட்டுக்கானே. எல்லாம் நம்ம நேரம் என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டவன் கோபத்தில் காரின் கண்ணாடி வேகமாக குத்தினான்.
அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரியே ஆதிரா திரும்பி வெளியே பார்த்தாள்.
அதற்குப் பிறகு அவன் ஏதும் சொல்லாது அமைதியாகிவிட்டான்.
இப்போ கார் நேராக சிவானந்தன் வீட்டு முன்பாக போய் நின்றது. ஆனாலும் இன்னும் டோர் லாக்கை திறக்காத ஆதிரா அவனை திரும்பிப் பார்த்தாள்.
அவனோ என்ன என்பதுபோல் இறுக்கமான முகத்தோடு அவளிடம் திரும்பினான்.
“அத்தான் இன்னைக்குத்தான் கேஸ்ல இருந்தே வெளியே வந்திருக்கீங்க. அதனால எது செய்யிறதா இருந்தாலும் கவனமா யோசிச்சு செய்யுங்க. ஜெயில்ல இருந்து வந்த அன்னைக்கே திரும்பும் உள்ள போகிற மாதிரி எதுவும் பண்ணிட்டு வந்துடாதிங்க.இது உங்க சம்பந்தப்பட்ட பிரச்சனை நான் இறங்கி வந்து எதுவும் பேச முடியாது. நீங்களே போய் பேசிட்டு வாங்க. உங்களால முடிஞ்சா உங்க காதலியை உங்கக்கூடவே கூட்டிட்டு வாங்க, நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்”என்று சொன்னவளின் குரலில் வேதனையும் இருக்கிறது என்பதை அவன் உணரத்தான் செய்தான்.
ஆனாலும் தன்னால் வேறு ஏதும் செய்ய முடியாதே! என்று நினைத்தவன், அதற்குமேல் எதுவும் யோசிக்காது வேகமாக இறங்கி சிவானந்தன் வீட்டு கேட்டின் முன்பாக போனான்.
ஆதிராவோ டிரைவரிடம் காரை பின்னாடி எடுத்து கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்தச் சொன்னாள். நம்மதான் கூட்டிட்டுவந்தோம் என்று அவங்க யாருக்கும் தெரகயக்கூடாது என்று நினைத்தாள்.
அவனைப் பார்த்ததும் வாட்ச்மேன் பயந்துப்போய் அவனை வழி மறித்து, கேட்டுக்குப் பக்கத்துலக்கூட போகவிடாது தடுத்தான்.
“நீங்கெல்லாம் வந்தா உள்ளவிடக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க. உங்களையெல்லாம் விடமாட்டேன்”என்று நேரடியாகவே சொன்னான்.
அதைக்கேட்டவனுக்கு கொஞ்சம் ஷாக்குதான். நம்ம வந்தாக்கூட உள்ளவிடக்கூடாதுன்னு சொல்லுறளவுக்குத்தான் இவனுங்க நம்மளை நடத்தினானுங்களா?அந்தளவுக்குத்தான் நான் இருந்தனா?என்று நினைத்ததும் அவனுக்கு ஆத்திரம் பீறிட்டு வர, அங்க நின்றே சத்தம் போட்டான்.
“ஹல்லோ மிஸ்டர் சிவானந்தன் அவர்களே கொஞ்சம் வெளிய வர்றேங்களா உங்க வாட்ச்மேன் என்னை உங்க வீட்டுக்குள்ள விடமாட்டுக்கான். போன மாசம் வரைக்கும் என்னை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்குள்ள விட்டவங்க, இப்போ கேட்டை பூட்டி வச்சுட்டு, உள்ள விடமாட்டுக்கான். நீங்களா வெளியே வர்றீங்களா? இல்லை நான் கேட்டை உடைச்சிட்டு உள்ள வரட்டுமா?” என்று சத்தம் போட்டு கலாட்டா செய்தான்.
அதைக் கேட்ட வாட்ச்மேனோ “அண்ணே அண்ணே என் பேரை சொல்லி இழுக்காதிங்கண்ணே. ப்ளீஸ் அண்ணே. ஏற்கனவே நீங்க வந்தா கேட்டெல்லாம் திறக்க கூடாதுன்னு சொல்லி வச்சிருக்காங்க. நான் திறந்து விட்டேன்னு வௌங்களேன் என் வேலதான் போகும்.நீங்க ஜெயிலுக்கு போனதிலிருந்து இங்கே என்னென்னமோ நடக்குது. அதெல்லாம் நாங்க பாத்துட்டுதான் இருக்கோம். உங்களை எனக்கு பிடிக்கும்னாலும் எனக்கு வயித்து பொழப்புன்னு இருக்குலாண்ணே. என் வேலையை கேடுத்திடாதங்கண்ணே” என்று அவனிடம் கெஞ்சினான்.
அதைக் கேட்டதும் கொஞ்சம் நிதானமான இளந்தீரன் அமைதியாக அவனை பார்த்தான்.
அவன் மறுபடியும் “என்னை அடிக்கவேணும்னாலும் செய்யிங்கண்ணே. ஆனால் உள்ள போயிடாதிங்க. எனக்கு பிரச்சனையாகிடும். நானே இந்த சம்பளத்தை நம்பித்தானே இருக்கேன்” என்று அழாத குறையாக கெஞ்சினான்.
அதைக்கேட்டதும் இளந்தீரன் அவனைப் பாவமாகப் பார்த்தான். இதுவே பழைய இளந்தீரனாக இருந்திருந்தால் நடக்கிறது வேறயாக இருந்திருக்கும். இப்போ வந்திருப்பவன் ஓரளவு தெளிந்து வந்திருப்பதால் பொறுமையை கையாண்டான். அவனது பொறுமையை பார்த்து ஆதிராவிற்கே ஆச்சரியமாக இருந்தது.
“என்ன இந்த அத்தான் இவ்வளவு பொறுமையா வாட்ச்மென்கிடடெல்லாம் பேசிட்டு இருக்காங்க. இதே பழைய அத்தானா இருந்திருந்தா இதுக்குள்ள கேட்டு ஏறி உள்ள புகுந்து இருப்ப்ங்களே. இந்த அத்தானுக்கு என்ன ஆச்சு?ஜெயிலைக்குள்ள போதி மரம் ஏதும் இருக்கா என்ன?”என்று யோசனையோடு அவனை கவனித்தாள்.
அதற்குள் இவனது சத்தம் கேட்டு வெளியே என்னமோ நடக்கிறது என்று வேலைக்காரர்கள் போய் உள்ளே சொல்லிவிட, சிவானந்தனும் ராகுவரனும் வேகமாக வெளியே வந்துப் பார்த்தார்கள்.
அங்கே கேட்டுக்கு வெளியே இளந்தீரன் நகன்றிருப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகி அப்படியே உறைந்து நின்று விட்டார்கள்.
உள்ளே எட்டிப்பார்த்த இளந்தீரன் அவர்களையே உற்றுப்பார்த்தான்.
அவர்கள் இருவரும் மற்றவர் முகத்தை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு “இவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் வெளியவந்தான். அதுவும் நேரா நம்ம வீட்டுக்கே வந்திருக்கான். யாருகூட்டிட்டு வந்திருப்பா?”என்று கேட்டு மீண்டும் அவன் பார்க்கிறானா?அங்கே நிக்கிறானா?என்று எட்டிப்பார்த்தார்கள்.
அவன் அவர்களைத்தான் கண்ணெடுக்காது சத்தம்போடாது பார்த்துக்கொண்டு நின்றான்.
இவன்கிட்ட என்ன பேசவென்று புரியாது அப்படியே தொண்டையில் எச்சில்கூட இறங்காது,அதிர்ச்சியில் இருந்தனர்.
அவர்களது அந்த அதிர்ச்சியான முகமும் மௌனமுமே அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்பதை அவனுக்கு வெட்டவெளிச்சமாக உணர்த்தியது.
அதிலே இளந்தீரனின் மனது சுக்கு நூறாக உடைந்து விட்டது!
‘அப்போ இவங்க எல்லாரும் திட்டம்போட்டுத்தான் என்னைப் பார்க்க வராமல் இருந்திருக்காங்க. இவங்களும் ஏதோ ஒரு விதத்துல நம்மளை ஏமாத்த்தான் நினைச்சிருக்காங்கபோல. அப்போ இத்தனை வருஷமா என்கூட பழகி பழக்கமெல்லாம் நட்பாக இல்லையா?என்னை வைச்சு ஆதாயம் தேடிக்கவா?நம்ம விரலை வைச்சு நம்மக்கண்ணைக் குத்துற மாதிரி என்னை வைச்சு எங்க மாமாவை போட்டுத்தள்ளுறதுதான் இவங்களோட திட்டமோ?அப்பத்திலிருந்து இவங்க நயவஞ்சகமாகத்தான் என்கிட்ட பழகிருக்காங்களா?என்னைது தூண்டிவிட்டு எல்லாம் செய்யவைச்சது ரகுவரன்தான. இவனுங்க மாமாவும் மருமகனும் அரசியல்ல ஜெயிக்க எங்க மாமா மருமகன் பாசத்தை உடைச்சிருக்கானுங்களா?”என இப்போதும் அது உண்மையா? என்பதுபோன்றே அவன் மனம் யோசித்தது.
இதுக்குமேல உள்ளயே நின்னா இளந்தீரன் ஏதாவது செய்திடுவான்னு நினைச்ச சிவானந்தன் வேகமாக வந்து வாட்ச்மேனை கேட்டைத் திறக்கச் சொன்னார்.
அவன் கேட்டைத் திறந்ததும் எதுவுமே பேசாமல் நின்றிருந்த இளந்தீரனைப் பார்த்தவருக்கு அடுத்து என்ன பண்ணுவானோ என்ற பயம் வரவும் திரும்பி ரகுவரனைப் பார்த்தார்.
அவன் ஓடிவந்து “பங்காளி எப்போடா வந்த? எப்படி இருக்க?ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டியேடா?பாருடா நாங்க உன்னை வெளிய எடுக்க எவ்வளவோ ட்ரை பண்ணினோம் தெரியுமா? ஆனால் எங்க முயற்சி எல்லாத்தையும் உங்க மாமா மகள் ஆதிரா முறியடிச்சிட்டா. உங்க அத்தையும் அவளும் சேர்ந்து உனக்கு எதிரா கேஸ் கொடுத்து உன்னை உள்ளே தள்ளிட்டாங்க. நாங்க கட்சியில் இருந்து லாயர் எல்லாரையும் கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் வாசல் வைச்சு போராட்டம் பண்ணினோம். ஆனால் ஒருத்தரும் எங்களை உள்ள விடலை தெரியுமா.அடிச்சு விரட்டினதுல நானும் மாமாவும் கீழே விழுந்து அடிபட்டு மூணு நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தோம். அந்தளவுக்கு உங்க அத்தையும் ஆதிராவும் இராட்சஷி மாதிரி நடந்துக்கிட்டாங்க. இப்போ நீ எப்படி இருக்க பங்காளி. உன்னை நினைச்சு நினைச்சு தூக்கமே வாராமல் இத்தனை நாளும் இருந்தேன் தெரியுமா. வா வா உள்ளவா”என்று அவனது கையைப்பிடித்துக் கூப்பிட்டான்.
“அப்படியா?நீங்க என்ன பார்க்க வந்தீங்களா?அதுதான் பார்த்தேன். என் உயிர் நண்பன் எனக்காக உயிரைக்கூட குடுப்பான். எப்படி என்னை பார்க்கவராமல் இருந்தான்னு நினைச்சேன். ஆனால் நீ அப்படியில்லைன்னு என் குடும்பத்துக்கு நிருபிச்சிருக்க நன்றி”என்று சொன்னவனின் முகம் ஒரு மாதிரியாக இருக்கவும் ரகுவரனுக்கு அடுத்து பேசவும்முடியவில்லை,அவனது முகத்தைப் பார்க்கவும் முடியவில்லை.
அவன் திரும்பி சிவானந்தனைப் பார்க்க அவரோ இளந்தீரனின் தோளில் கைப்போட்டு” வா இளந்தீரா உள்ளப்போய் பேசுவோம்” என்று கூப்பிட்டார்.
அவனோ மெதுவாக அவரது கையை தனது தோளில் இருந்து எடுத்துவிட்டு “என்ன தலைவரே வீடெல்லாம் தோரணம் கட்டியிருக்கு?ரகுவரன், மதுமதி போட்டோவெல்லாம் போட்டிருக்கு. வீட்டுல என்ன விசேஷம். நான் நம்ம கட்சிக்காக கொலைகேஸ் வாங்கிட்டு உள்ளபோயிட்டு வந்திருக்கேன். என்னைக்கூட கல்யாணத்துக்கு கூப்பிடாமல் இரண்டுபேருக்கும் கல்யாணத்தை முடிக்கிறீங்களே தலைவரே இது நியாயமா?”என்று கேட்டவன் ரகுவரனைப் பார்த்தான்.
அவனுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியாது தொண்டுக்குழி அடைக்க அப்படியே திருதிருவென்று முழித்தான்.
அவன் இப்படி பேசாமல் நிற்பது அவங்க நட்பின் அதிகாரத்தில் இதுதான் முதல்முறை!
அவனது நிலையைப் பார்த்த சிவானந்தன்தான் அது மதுமதிக்கும் ரகுவரனுக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இன்னும் முணு நாளில் கல்யாணம் வைச்சிருக்கேன் இளந்தீரா. நீயில்லாமல் நம்ம வீட்டுக் கல்யாணம் எப்படி நடக்கும். இது என் மனைவியோட ஆசை. பிடிவாதமா இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணிட்டா. அதுதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்”
“ஓஓ அப்படியா தலைவரே ரொம்ப நல்லது. ஆமா ரகுவரன், இதுக்கு மதுமதி சம்மதம் சொல்லிட்டாளா?”என்று நக்கலாக கேட்டுவிட்டு அவனைப் பார்த்து சிரித்தான்.
அவனோ அப்படியே அதிர்ந்து பங்காளி என்ற வார்த்தை சொன்னதோடு வேறு பேசமுடியாது ஊமையாகிப்போனான்!