அநாயகா-22

அநாயகா-22

அநாயகா-22

ஆதிரா தனது அம்மாவை பார்த்து அதிரச்சியாகலை. அவங்க அடிச்ச அடியில் அதிர்ச்சியாகி அப்படியே சித்தம் கலங்கி பார்த்திட்டிருந்தாள்.

அம்மா எதுக்கு அடிச்சிருப்பாங்க என்றுதான் அவளுக்குத் தெரியுமே!அவள் அசையாது அப்படியே கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தாள்.

அதைப்பார்த்த மகேஷ்வரிக்குத்தான் மனசும் கண்ணும் கலங்கியது. இப்படிப் பொண்ணை அடிச்சிட்டமேன்னு 

மனம் வருந்தியவர், அவளது கன்னத்தைப் பிடிச்சு தடவினார்.

“ஏன்டி உனக்கு இப்படி புத்தி போச்சு? எதுக்காக நீ அந்த பொறுக்கிப் பையல கேஸ்ல இருந்து வெளியே எடுத்துட்டு வந்த. அவன் உங்க அப்பாவை கொல்லப் பார்த்தவன்டி. அவனால்தான் உங்கப்பா ஒரு மாசமா கோமாவுல படுத்திருக்காரு. அவன் என்ன பிரச்சனை செய்தாலும் சொந்த தங்கச்சி மகன்னு,அவன் மேல எவ்வளவு பாசமா இருந்தாரு. அவன் இத்தனை நாள் செய்த பிரச்சனையெல்லாம் தாண்டி அவனுக்காக அவனது வாழ்க்கைக்காகத்தானே பொறுமையா இருந்தாரு. அப்படிப்பட்ட ஒருத்தரோட பாசத்தையும், அவரையும் பத்தி ஒரு நிமிஷம்கூட நினைச்சு பார்க்காமல் அவரையே கல்லால அடிச்சு இப்படி காயப்படுத்தியிருக்கான். அவரைக் கோமாவுல படுக்க வைச்சிட்டான். என் புருஷன் எப்போ நல்லபடியா எழுந்துவருவாருன்னு துடியா துடிச்சிட்டு இருக்கனே! என்னைப் பத்தி உனக்கு கவலையே இல்லையா? அங்க அவரு உயிரோட மீண்டும் வருவாரா? இல்லையா? எப்படின்னு தெரியாமல் ஒவ்வொரு நாளும் பயந்திட்டிருக்கேன். இப்படி மோசமான நிலையில் இருக்கிற உங்க அப்பாவைப் பத்தி உனக்கு கவலை இல்லையா? உனக்கு கவலையெல்லாம் உங்க அத்தை மகன், உனக்கு பிடிச்சவன் வெளியில வந்துடனும், அவன் மட்டும் நல்லாயி ருக்கணும்னு அப்படித்தானே! நீ இவ்வளவு பண்ணிட்டிருக்க. உன்னை போய் அறிவுள்ளவ, திறமையானவன்னு நினைச்சிட்டிருக்கேன் பாரு என்னைச் சொல்லணும். ஆனால் இப்படி அவனோட விசயத்துல அடிமுட்டாளா இருக்கியே. உனக்கு அந்த பொறுக்கி மேல காதல் இருந்துச்சுன்னா இப்படிப் பண்ணுவியா?அவனைத்தான் ரொம்பப் பிடிக்கும்னு இப்படி உங்கப்பாவை நினைக்காமல் அவனை வெளிய எடுத்துட்டு வந்திருக்கியே. உன்னையெல்லாம் என்ன செய்ய?”என்று திட்டியவர் அழுதார். 

அவர் அழுகிறதைப் பார்த்ததும் ஆதிராவுக்கு இன்னும் அதாகமாக அழுகை வந்தது. 

மகேஸ்வரியின் கையைப் பிடித்தவள்”அம்மா அழாதம்மா. நான் சின்னத்தானை வெளியில எடுத்துட்டு வந்தேன்தான். அதுக்காக என்னை இன்னும் வேணும்னா நாலு அடி அடிச்சிக்கம்மா. நீ ஆனால் இப்படி அழாதம்மா. நீ அழறதை பார்த்து தாங்கிக்க முடியலம்மா”என்று சொன்னவள் அவரது கையைப்பிடித்து தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு கதறினாள்.

“ச்ச்சீ என் கையை விடுடி. என் கையைத் தொடாத. உன்னைப போய் இந்த வயித்துல சுமந்துப் பெத்து போட்டேன் பார்த்தியா என்னைத்தான் செருப்பால அடிக்கணும். என் புருஷனே இப்படி பண்ணினவனை யாருக்குமே தெரியாமல் வெளியே கூட்டிட்டு வந்திருக்கியே? உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும். இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்பவே இங்க இருந்து வெளியே போயிடு. எங்க கண்ணு முன்னாடி நிக்காத. அப்படியே அவன்கூடவே போயிடு. அவன் யாரை நம்பி இவ்வளவு நாளும் ஆட்டம் போட்டானோ, அவங்கள்லாலயே அவனுக்கு நல்ல தண்டனைக் கிடைச்சிட்டு. இப்படித்தான் அநாதையா செத்துக்கிடப்பான்னு எனக்குத் தெரியும்டி. அவன் செய்ததுக்கு அந்த ஆண்டவனே அவனுக்கு தண்டனைக் குடுத்துட்டான். ஆனால் நீ எதுக்குடி அவனை இங்கக் கொண்டுவந்து அட்மிட் பண்ணி இருக்க. அவன் எழுந்து வரவேமாட்டான். அவன்கூட சேர்ந்து எங்கேயாவது போயிடு. எங்க வீட்டுபக்கமே வந்துவிடாத” என்றுவிட்டு கோபம் தாங்காமல் மீண்டும் அவளை அடித்தார். 

சங்கவியும் ரவியும் அப்போதான் அங்க வந்தார்கள். அவர்கள்தான் மகேஷ்வரி ஆதிராவை அடிப்பதைப் பார்த்து ஓடிவந்து அவரைத் தடுத்துப் பிடித்து ஆதிரா அடி வாங்காது தடுத்தனர்.

சங்கவிதான் இருக்கிற இடம் உணர்ந்து “அம்மாஆஆஆ அவளை அடிக்காதம்மா. எதுக்கு இப்போ அவளை இப்படி அடிக்கிறீங்க. அவளை விடுங்கம்மா. இங்கப்பாருங்க ஹாஸ்பிட்டலே நின்னு வேடிக்கைப் பார்க்குது. எதுன்னாலும் அவக்கிட்ட அப்புறமா விச்ரிச்சிக்கலாம்மா”என்று சத்தம்போட்டு இழுத்து தனியாக உட்கார வைத்தாள்.

“இதுக்குமேல் அவக்கிட்ட விசாரிக்க என்னடி இருக்கு. அதுதான் மொத்தமா எல்லாத்தையும் நமக்கு எதிரா செய்துமுடிச்சிட்டு வந்துநிக்கிறாளே. அந்தப்பொறுக்கியையும் இங்கதான்கொண்டுஅட்மிட் பண்ணிருக்கா. அப்படியேகிடந்து சாகட்டும்னு விடாமல் தூக்கிட்டுவந்து அட்மிட் பண்ணிருக்கா பாரேன். இவளை கொன்னுபோட்டா என்ன?”என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

அவரை சமாதானப்படுத்தி உட்காரவைத்துவிட்டு இப்போ சங்கவி ஆதிராவிடம் வந்தாள்.

 “ஏன் ஆதிரா இப்படி பண்ணின? உனக்கே இது நியாயமா படுதாடி. எதுக்கு அந்த பொறுக்கியை இவ்வளவு பணம் செலவு பண்ணி வக்கீல் எல்லாம் வைச்சு வெளியே எடுத்துட்டு வந்த? அவனெல்லாம் திருந்தாத ஜென்மம்டி. அவன் குணமாகி வந்தாலும் மறுபடியும் வந்து நம்ம அப்பாவை கொல்லத்தான் நிப்பான். அப்படி அவரை மொத்தமாக கொலைப் பண்றததுக்காகவா நீ பிளான் பண்ணி அவனைக் கூட்டிட்டு வந்த?சொல்லுடி சொல்லு”என்று கோபத்தில் கேட்டாள்.

“அக்கா சும்மா கத்தாதக்கா. உனக்குத்தான் அப்பாவை பத்தி நல்லத் தெரியுமே, அப்பா உள் மனசு இப்பவும் இளந்தீரன் அத்தானைப் பத்திதான் யோசிச்சிட்டிக்கும். இப்பக்கூட இந்த நிலையிலும் இவ்வளவு கஷ்டப்பட்டு கோமா ஸ்டேஜ்ல இருந்தாலும், அவரோட மனசு எல்லாமே சின்னத்தானை நம்ம ஏதாவது பண்ணிடுவோமோன்னு கவலைலதான் இருக்கும். நம்ம அப்பாவுக்காக மட்டும்தான் நான் அவரைப்போய் வெளியில எடுத்துட்டு வந்தேன். உங்க எல்லாத்தையும்விட எனக்கு அப்பாவை நல்லாதெரியும் அதனால்தான் போய் அவங்களை கேஸ்ல இருந்து வெளியே எடுத்துட்டு வந்தேன். அதுவும் இல்லாமல் அவர் காதலிச்ச பொண்ணுக்கு இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம், இந்த நேரத்துல கண்டிப்பா அவர் வெளியே இருந்தா மதுமதி கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணுவார். அத்தானுக்கு அப்பா உண்மையிலயே உதவியிருப்பார். அதுக்காகதான் நான் இதையெல்லாம் செய்தேன். ஆனாலும் அது இப்படி முடியும்னு நான் எதிர்பார்க்கல" 

" அது சரி நீ ஜெயச்சந்திரன் மகள்னு இதையெல்லாம் செயது நிருபிச்சிருக்க அப்படித்தானே!”

“ஆமா” என்று இப்போது வேகமாகத் தலையாட்டினாள்.

“என்னடி நீ இப்படி இருக்க?அப்பாதான் அப்படி இருந்தார்னா‌ நீயுமா? நம்ம அப்பாவையே அடிச்சு கோமாவில் போட்டிருக்கான்டி. அதைப் பத்தி நீ கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லையா?அவனுக்காக இப்போ இப்படி இறங்கிபோய் கேஸ்ல இருந்து அவை விடுதலை பண்ணிருக் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இதுக்கு அம்மா ஒன்னு கொல்லாமல் விட்டதே பெரிய விஷயம். நீ அம்மாகிட்ட இன்னும் கொஞ்சம் அடி வாங்கிறது தப்பேயில்லை, இன்னும் நாலு அடி வாங்கு” என்று அவள் பக்கத்தில் எரிச்சலில் உட்கார்ந்தாள்.

அப்பொழுது ஐ. சி.யூவில் இருந்து வெளியே வந்த டாக்டர் ஒருத்தர்“ஆதிரா மேடம் நீங்க அட்மிட் பண்ணி இருந்தா பேஷன்ட் கண்ணு முழிச்சிட்டாரு. நீங்க வந்து கொஞ்சம் பார்த்து பேசிடுங்க. அப்புறம் அடுத்து வர்ற டாக்டர்ஸ் பார்த்துட்டு ரூமுக்கு மாத்தணும்னா மாத்திடுவாங்க. தையல் எடுக்கிற வரைக்கும் இருந்தா போது" என்று ஆதிராவை இளந்தீரனைப் பார்க்கக் கூப்பிட்டார்

உடனே ஆதிரா எழுந்தவள் மகேஸ்வரியையும் சங்கவியையும் பார்த்தாள். அவர்களுக்கப கோபம் ஆற்றாமையும் ஒருசேர வந்தது. இவளையும் திட்ட முடியாது, இவங்க அப்பனையும் திட்ட முடியாது என்று திட்டிய மகேஷ்வரி கோபத்தோடு எழுந்து ஜெயச்சந்திரனை வைத்திருக்கும் ரூமுக்குள்ளே போய்விட்டார்.

ரவியோ என்ன இருந்தாலும் தனது தம்பி என்ற சிறு பாசம் நெஞ்சில் ஓரத்தில் இருக்குமே, அவன் ஆதிராவின் பின்னாடியே ஐ.சி.யூவிற்குள் போனான்.

சங்கவி எழுந்தவள் எப்படியும்போங்க என்று இருவரையும் திட்டிவிட்டு தனது அம்மாவோடு அந்த ரூமுக்குள்ளே போய்விட்டாள்.

இப்பொழுது ஆதிர நேராக போய் இளந்தீரனிடம் நின்றாள் அவன் கண்ணை முழித்து ஆதிராவை பார்த்தவன் " நீயா?அப்போ என்னை இங்கக் கொண்டுவந்து சேர்த்தது நீயா?ஆமா நீ ஏன் என்னை தூக்கிட்டு வந்த இங்க அட்மிட் பண்ணின? நீ எப்படி மறுபடியும் அந்த இடத்துக்கு வந்த?”என்று சந்தேகமாகவே கேட்டான்.

“நான்தான் உங்களை டிரைவர் அண்ணாவோடு வந்து தேடிக் கண்டுபிடிச்சு தூக்கிட்டு வந்தேன். ஆமா நான் தூக்கிட்டு வந்து அட்மிட் பண்ணினதுதான் உங்களுக்குப் பிரச்சனையா இருக்கா அத்தான்?”என்று கொஞ்சம் கோபம் குரலில் ஏறக கேட்டாள்.

“ப்ச்ச் புரியாம பேசாத. நீ ஏன் அங்க மறுபடியும் வந்த. உன்னை யாராவது ஏதாவது பண்ணிருந்தா. யாரு வந்து காப்பத்திருப்பாங்க. அறிவிருக்கா?”என்று அந்த நேரத்திலும் திட்டினான்.

ஆதிராவுக்கு இப்போதான் நிம்மதியா இருந்துச்சு. ஹப்பாடா தெளிவாதான் இருக்காங்க. தலையில அடிபட்டதுல எதுவும் குழம்பிட்டோன்னு நினைச்சேன் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

“என்ன பைத்தியம் எதுவும் பிடிச்சிருக்கும்னு நினைச்சியா?அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நீ எப்படி அங்க வந்த அதைச்சொல்லு?”என்று கேட்டான்.

“அதுதெரியல. ஆனால் உங்களை விட்டுட்டு பாதி தூரம் வரும்போது எனக்கு மனசுக்குள்ள ஏதோ சரியாவே தோணலை. உங்களை அங்க தனியா விட்டுட்டு வந்தது தப்பா பட்டுச்சு. அதனால் டிரைவர் அண்ண்கிட் காரை திருப்பிட்டு அங்க பெகச்சொன்னேன். அங்க வந்தா உங்க யாரையுமே காணலை. அவ்வளவு குறைஞ்ச நேரத்துல பேசி முடிச்சிட்டு திரும்பிப்போக வாய்ப்பேயில்லை. அதுதான் சநதேகத்துல உங்களைத் தேடிப்பார்த்தோம்,அந்தப் பாலத்துக்கு கீழே புதருக்குள்ள இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தீங்க. உங்க பக்கத்துலயும் யாரும் இல்லை அதனால வேற வழி இல்லாம டிரைவர் அண்ணாவோட சேர்ந்து உங்களைத் தூக்கிட்டு வந்து அட்மிட் பண்ணிட்டேன். டாக்டர் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. கொஞ்சம் காயம் அதுல தையல் மட்டும் போட்டு இருக்காங்க. நாளைக்கு நார்மல் வார்டுக்கு மாத்திருவாங்க. இரண்டு நாள்ல வீட்டுக்கு போயிறலாம்னு சொல்லி இருக்காங்க" என்று அவனுக்கு தானாகவே விளக்கம் சொல்லி கொண்டிருந்தாள்.

“நீ வரும் போது அங்க யாருமே இல்லையா?உண்மையாவா?நான் புதருக்குள்ள கிடந்தேன்னா?அப்போ மதுமதிகூட அங்க இல்லையா?”

“இல்லை. நீங்க புதருக்குள்ளதான் கிடந்தீங்க. உங்க உடம்புல முள்ளு குத்தின காயம் இருக்கும் பாருங்க. தல்லவேளை நாங்க செருப்பு போட்டிருந்தோம். ஆனாலும் உங்களைத் தூக்கும்போது கையெல்லாம் காயமாகிடுச்சு. ட்ரெஸ்ஸெல்லாம் இரத்தம்தான் என்று சொன்னவளை அமைதியாப்பார்த்தான். அவளது கையிலெல்லாம் முட்கள் லேசாக தோளைப் பதம் பார்த்திருந்தது. அவளது நெஞ்சிலும் வயிற்றிலும் அவனது இரத்தம் படிந்து கறையாக இருந்தது.

அதைப்பார்த்தவாறே “ஓஓ அப்படியா” என்று கேட்டவனின் அந்த வேதனையான குரல் அவளைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.

ரவிதான் " அதுசரி அந்த சிவானந்தன் மகளைப் பார்க்கப் போய்தான் வாங்கிக் கட்டிக்கிட்டியா?சந்தோசம் உனக்கு இது தேவைதான். மாமா எத்தனை தடவை அந்த சிவானந்தனையும் ரருவரைனையும் உன்கிட்ட சொல்லிருப்பாங்க. ஆனா அதையெல்லாம் நீ நம்பவேயில்லையே. அந்த மதுமதி மேல உள்ள மயக்கத்துல எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுகிட்ட. இப்போ உனக்கு புரியுதா நீ உள்ள போய் ஒரு மாசம்தான் ஆகுது அதுக்குள்ள அவளுக்கு கல்யாணமே ஏற்பாடு பண்ணிட்டாரு. அதுவும் அந்த ரகுவரன்கூடவே. உன்னோட உயிர் நண்பன்கூட இப்போ உன் முதுகுல குத்திட்டுப்போயிருக்கான். இனியாவது அவங்களோட இலட்சணத்தைப் புரிஞ்சிக்கோ" என்று நக்கலாகப் பேசினான்.

அதைக் கேட்டதும் அந்த சூழ்நிலையிலும் இளந்தீரன் தனது அண்ணனைப் பார்த்து கோபத்தில் முறைத்தான்.

“என்னடா தம்பி இந்த சூழ்நிலையிலும் என்னை முறைக்கிற நீ செய்த தப்புக்கான தண்டனைதான் இப்போ அனுபவிச்சிட்டு இருக்க. நீ நம்ம மாமாவோட நெத்தியில செங்கலால் அடிச்சி அவரைக் கோமா ஸ்டேஜ்ல ஒரு மாசமா படுக்க வைச்சிட்ட. ஆனா அவனுக்கு அடிச்ச அடியில உனக்கு எதுவாகாமல் பத்துத் தையலோட போச்சுன்னு சந்தோஷப்படு. நீ செய்ததுக்கான பலன் உனக்கு உடனே இந்த வாழ்க்கை தந்துட்டு கர்மா இஸ் பூமரங்க். அந்த உண்மையைச் சொன்னால் ஏன் என்மேல கோபப்படுற?”என்று எகிறினான்.

“ரவி அத்தான் ப்ளீஸ். இப்போ எதையும் சொல்லி குத்திக்காட்டவேண்டாம். எதுன்னாலும் அப்புறமா பேசிக்கலாம்”

இல்லை இப்போதான் பேசணும் ஆதிரா என்றவன் இளந்தீரனைப் பார்த்து “உன்னோட உயிர் நண்பன் அவனேதான உன்னோட உயிரை எடுக்கிறதுக்கு முயன்றிருக்கிறான். யார் செய்த புண்ணியமோ ஆதிராவுக்கு மனசுல தோனி,அவ திரும்ப வந்து அந்த இடத்தில் உன்னைத் தேடிப்பார்த்து தூக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல போட்டுருக்கா. யார் செய்த புண்ணியமோ தெர்ல. நம்ம அம்மா தினமும் கடவுள்கிட்ட உனக்காக வேண்டிகிட்ட பலனுக்குத்தான் நீ இப்போ உயிரோட இருக்க. இப்போ சொல்லு பார்ப்போம் என் கட்சி, என் தலைவர் என் உயிர் நண்பன் எல்லாரும் எனக்காக காத்திருப்பாங்கன்னு. நீ ஜெயிலுக்குள்ள போனதுக்கு ஒருத்தன் கூட வருத்தப்படலை. எப்போடா சனியன் ஒழியும் தின்னைக் காலியாகும்னு அந்த இடத்துக்கு நான் வந்து உட்காருவேன்னு உன் உயிர் நண்பன் உன் இடத்துக்கு வந்துட்டான். உன் காதலியையும் ஆட்டைய போட்டுட்டான். என்னைப் பார்த்து முறைக்கிறத விட்டுட்டு செய்த தப்பை நினைச்சு வருந்தி திருந்தி வாழப்பாரு” என்று அவனைத் திட்டிவிட்டு வேகமாக வெளியே வந்து விட்டான்.

அதையெல்லாம் கேட்டதும் இளந்தீரனுக்கும் இப்பொழுது பதில் ஏதும் பேச முடியாதா நிலைதான். அதனால் விரக்தியில் தனது அந்த கட்டிலில் தனது கையைத்தூக்கி வேகமாக குத்தினான்.

அவன் குத்திய வேகத்தில் டிரிப்ஸ்க்கா போட்டிருந்த நீடில் வளைந்து,உள்ளே குத்தியதில் அவனுக்கு கையில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. 

அதை பார்த்ததும் ஆதிராதான் பயந்து அவனது கையை பிடித்துக் கொண்டாள்.

“என்னத்தான் பண்ணிட்டு இருக்கீங்க. இந்த நிலையில உங்களுக்கு கோபமெல்லாம் தேவையில்லை. அமைதியா இருங்க. இல்லைன்னா டாக்டர்கிட்ட சொல்லி மயக்க ஊசிபோட்டு மயக்கத்துலயே வைச்சிருவேன்”என்று அவனை திட்டியவாறு நர்ஸைக் கூப்பிட்டாள். 

ஆதிரா பதறி கூப்பிட்டதும் நர்ஸ் ஓடி வந்து பார்த்துவிட்டு உடனே எல்லாத்தையும் எடுத்துவிட்டு, மறுபடியும் நீடில் உள்ளோ போட்டு டிரிப்ஸை ஏத்தினார்.

“சாரி சிஸ்டர் அத்தான் கோபத்துல கைய அசைச்சதுல இப்படி ஆயிட்டு. இனி நான் பாத்துக்குறேன் நீங்க போங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டு இளந்தீரனை அமைதியாகப் பார்த்தாள்.

“இதுவரைக்கும் நடந்தது எல்லாமே நல்லதுக்கென்று நினச்சுக்கோங்க ,துக்கு மேல சொல்லி புரிய வைக்க நீங்க ஒன்னும் சின்னபிள்ளை இல்லை. நல்ல புத்திசாலி.ஏன் இப்படி நடந்ததுன்னு யோசிங்க. அது போதும் அதற்கான காரணம் புரிந்து விட்டாலே உங்களுக்கு பின்னாடி இருக்க பிரச்சனை எதுன்னும் உங்களுக்கு புரிஞ்சிடும். நல்லா ரெஸ்ட் எடுங்க. டிரிப்ஸ் போட்டு இருக்கு. உங்களுக்கு சாப்பாடு கொடுக்க விடமாட்டாங்க. நாளைக்கு ரூமுக்கு மாத்துனதும் அப்பத்தாவை சாப்பாடு எடுத்துட்டு வரச் சொல்லுறேன். நல்ல ரெஸ்ட் எடுங்க. நான் நாளைக்கு வர்றேன்” என்றுவிட்டு கிளம்பி போகிறவளை ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆதிராவைத் தனது மாமா மகளாக பார்த்தான்!