பகலவனின் பனிமலர் 7

Pani7

பகலவனின் பனிமலர் 7

7 பகலவனின் பனிமலர் அவளோ!!

"மச்சான் அது உன் பொண்டாட்டிதான" ... வினய் போன சுவாதியை அடையாளம் கண்டுவிட்டு ஸ்ரீயை நோக்கி திரும்ப, அவன் புருவம் உயர்த்தியது அவள் தலையாட்டியது இரண்டையும் ஒருசேர பார்த்த வினய்..

"என்ன பார்க்க உங்களுக்கு கிறுக்கு போல இருக்காடா .."

"போல என்ன கிறுக்குதான் , என்னத்துக்கு இப்போ இப்படி கத்துற "

"பின்ன என்னடா கல்யாணம் பண்ணி அம்போன்னு விட்டுட்டு வந்த, இப்ப என்னன்னா அவள சைட் அடிக்கிற .."

"இதுக்கு பேர்தான் சைட் அடிக்கிறதா??..

"விளையாடுறியா நீ , பிடிக்கல அவக்கூட வாழ மாட்டேன், அது இதுன்னு சொல்லிட்டு பார்க்கற பார்வையே சரியில்ல.

"நான் எப்ப மச்சான் அப்படி சொன்னேன் தப்பு தப்பா பேசாத .. 

"அப்ப பிடிச்சிருக்கா ?

"அதை ஏன் உன்கிட்ட சொல்லணும்,  

"வேணும்டா எனக்கு இன்னும் வேணும், உன்கூட சேராதன்னு என் அப்பன் சொல்லியும் கேட்காம உன் பின்னாடி சுத்தினேன் பார்த்தியா, எனக்கும் இதுவும் வேணும் , இன்னமும் வேணும் ..உன்ன நம்பி நாலு பேரையும் கைகழுவிட்டு நிற்கிறேன்.. நீ என்னடான்னா கல்யாணம் பண்ணி , அடுத்து அவள டாவு வேற அடிக்கிற என்ன மட்டும் உருப்பட விடல..

"போய் உருப்படு ,யார் உன்ன பிடிச்சு வச்சா , வா ஹார்பர் வர போயிட்டு வரலாம்.. ஏதோ வேலை இருக்குன்னு பீட்டர் சொன்னான், நமக்கு செட் ஆகுமான்னு பார்த்துட்டு வருவோம்".. நண்பன் மனதில் என்னதான் இருக்கிறது என புரியாத வினய் தலையை சொரிந்து கொண்டே ஏறி பின்னால் அமர்ந்தான்.. இத்தனை நாள் ஸ்ரீ கூடவே குப்பை கொட்டுகிறான்.. ஸ்ரீ ஒரு நாள் கூட எந்த ஒரு பெண்ணையும் இப்படி , ஒரு செகண்ட் கூட குனிந்து பார்க்க மாடடான்.. அவன் வாழும் உலகில் பெண்கள் என்று ஒரு இனம் கிடையவே கிடையாது என்பது போல போகும் ஸ்ரீ, சுவாதியை குனிந்து பார்த்து புருவம் உயர்த்தி ஜாடை பேசியதே ஆச்சரியம் தான் ..தாலிய கட்டியது உலக அதிசயம் தன் வீட்டில் அவள் இருக்கிறாள் என தெரிந்தும் சும்மா இருப்பது ஆச்சரியத்தின் உச்சம் .. 

"ஒருவேளை லவ்வுதான் பண்ணி இருப்பானோ, பின்ன எதுக்கு கல்யாணம் பண்ணி, விட்டுட்டு வந்தான்.. கூடவே சுத்துறான் இவன் என்ன நினைப்புல இருக்கான்னு தெரியலையே,கேட்டாலும் முத்தை கொட்ட மாட்டானே ..சரி போகட்டும் ,எவ்வளவு தூரம் போறான்னு பார்ப்போம்.. நமக்கு வழி திறந்திடுச்சி . இனி நாமளும் களத்துல குதிச்சிட வேண்டியதுதான்" என்று நம்பி பின்னால் ஏறி அமர .. பைக் ஒரு காலேஜ் வாசலில் சடென் பிரேக் போட்டு நின்றது ..

"என்ன மச்சான் ஹார்பர் போறேன்னு சொல்லிட்டு காலேஜ் வந்திருக்க.. உன் தங்கச்சி இந்த காலேஜ்லதான சேர்ந்திருக்கா,, பார்டா ஸ்ரீக்கு தங்கச்சி பாசமா.. நான் கேட்டுட்டு இருக்கேன் எங்க போற ஸ்ரீ" .. ஸ்ரீ தாடியை சொரிந்து கொண்டே சுற்றி முற்றி பார்த்தவன்..

"ஓய் வாத்தி இங்க வா "என்று பெல்டை சரி செய்து போட்டு கொண்டு போன ஒரு ஆசிரியரை கைத்தட்டி அழைத்தான் 

"என்னையா தம்பி

"உன்னையதான் வா ... அவர் அருகே வர.. 

"இங்க புதுசா சுவாதிஸ்ரீ ன்னு ஒரு புது வாத்திச்சி வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்காள்ல, எந்த டிப்பார்ட்மெணட்.."

"இங்கிலிஷ் தம்பி ..

'ஸ்டாப் ரூம் எந்த பக்கம்? ..

"அந்த பக்கம்" ... என்றதும் ஸ்ரீ மாடியேறி போக..

"ஏன்டா உன் பொண்டாட்டி பார்க்கத்தான் வந்தியா .. நீ போற போக்கு ஒரு தினுசால்ல இருக்கு .. அங்க வரவேற்பு வைக்க மிலிட்டரி தயார் ஆவுறார்.. நீ சாந்தி முகூர்த்தம் பண்ண வழி பார்த்த மாதிரில்ல இருக்கு .."

"தெரியுதுல்ல , பின்ன ஏன்டா கூட கூட வர்ற , போய் கீழ நின்னு ,அவகிட்ட பைசல் பண்ண வேண்டிய கணக்கு இருக்கு முடிச்சுட்டு வர்றேன் .. "

"டேய் என்ன பார்த்து என்ன வார்த்தை பேசிட்ட , எங்க போனாலும் சேர்ந்து போவோம்னு சத்தியம் பண்ணிணியே மச்சான்,இப்ப என்ன மட்டும் கழட்டி விட்டுட்டு போற பார்த்தியா, "என திரும்ப ஸ்ரீயை காணல .

"பேசிட்டு இருக்கும் போதே போயிட்டான், இவன் பின்னாடி சுத்தினதுக்கு நாலு கன்பெனி ஏறி இறங்கி இருந்தா வேலையாவது கிடைச்சிருக்கும்.. சவத்தை நமக்கு ஒன்னும் இவனுக்கு போல சிறப்பா வாய்க்க மாட்டைக்கிதே" என புலம்பி கொண்டே போனவன் மரத்திற்கு பின்னால் ஒரு ஜோடி நின்று கடலை போட..

'ம்ம் வயித்தெரிச்சல் கிளம்பி விடுறதையே ஒரு வேலையா வச்சி செய்றான்க "புலம்பி கொண்டே மரத்து திண்டில் அமர்ந்தான் .. 

சுவாதி ஓய்வு அறையில் , மேஜையில் ஒரு கையை கன்னத்தில் வைத்து புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தாள் .. மாலை திருமண வரவேற்புக்கு அனைத்தும் ரெடியாகி கொண்டிருக்கிறது, இந்த காலேஜில் ஸ்டீபன் தான் வேலை எடுத்து கொடுத்தது.. முதல் நாளே லீவ் போட வேண்டாம் என சிவகாமியிடம் போகவா? என்று தயங்கி கேட்க 

"முதல்ல சாதாரணமா இரு சுவாதிம்மா, இது உன் வீடு ராதிகாவுக்கு கூட இரண்டாவது உரிமைதான் ..அதனால என்ன செய்யணும்னு நினைக்கிறியோ அதை செய் அதானுங்க.."

"ஆமாம்மா உன் விருப்பம் போல பண்ணு , அவன் எங்கேயாவது நின்னா மட்டும் கண்டுக்காம போயிடு.. இல்லை நிம்மதியா உன்ன வேலைக்கு போக விடாம தொல்லை பண்ணுவான் .. நீ வந்தது தெரிஞ்சு அதுக்கு என்ன ரகளை போறானோ" .. மகேந்திரன் மகன் குசும்பு தெரிந்து கூற.. 

"அண்ணி அவங்க எல்லாம் பில்டப் பண்ற அளவு அவன் டான் எல்லாம் கிடையாது..நீங்க சும்மா போங்க எதாவது ஓவர் ரவுசு பண்ணினான் எங்கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன்.. "

"இந்தா சுவாதிம்மா சாப்பாடு மறக்காம சாப்பிடு இதுல ஆப்பிள் வெட்டி வச்சிருக்கேன் , இதுல மோர் இருக்கு மிச்சம் வைக்காத ..' 

சரி அத்தை" அம்மா உறவில் அவளுக்கு பிடித்தம் குறைவு எனவே அத்தை என்றே அழைத்தாள்.

"இந்தா சுவாதி பஸ் செலவுக்கு வச்சிக்க , அந்த நாயர் கடை பக்கம்தான் பஸ் ஸ்டாப் அதுல நின்னு ஏறிடு" மகேந்திரன் காசை சுவாதி கையில் கொடுக்க.. வாழ்க்கையில் இதெல்லாம் அவளுக்கு முதல் முறை .. வாங்க கூச்சம் கொண்டவளுக்கு ..

"நீ ஸ்ரீ பொண்டாட்டியா எப்ப ஆகுறியோ, அப்ப அவன் கையில காசு வாங்கு, இப்ப நீ என் பொண்ணு போயிட்டு வா"என்ற மகேந்திரன் தந்தை போல் தான் தெரிந்தார்...

"ஏன் எல்லாரும் நல்லாதான இருக்காங்க , இந்த தொல்லைசாமிக்கு மட்டும் ஏன் யாரையும் பிடிக்கல தினுசான பிறவி , எதுக்கு தாலி கட்டினான், எதுக்கு விட்டுட்டு வந்தான் ஒன்னும் தெரியல , எதிர்காலம் எப்படி இருக்கும் கண்டிப்பா நல்லா இருக்காது, அது மட்டும் உறுதி ம்ம்" நொந்து கொண்டு பஸ் ஸ்டாப் நோக்கி நடந்த சுவாதி , ஸ்ரீயை தூரத்திலேயே கண்டுவிட்டாள் .. புகையை ஊதி கொண்டு ஏதோ காலில் தட்டி விளையாண்டு கொண்டு நின்றான்.. அவன் துள்ளும் போது அவன் முடியும் சேர்ந்து குதிக்க, சட்டென்று அவனை விட்டு கண்ணை திருப்பி கொண்டாள்.. 

"நான் வந்தது தெரிஞ்சிருக்குமா, தெரிஞ்சா இழுத்து கொண்டு வெளியே போடுவானோ?" என பல யோசனையில்தான் பஸ்ஸில் ஏறி அவனை திரும்பி பார்த்தது.. தன்னை பார்த்தானா இல்லையா என்று அறிந்து கொள்ள .. ஸ்ரீபுருவம் உயர்த்தி பார்த்ததும் , நாக்கை கடித்து திரும்பி கொண்டாள்..

"வரவேற்பு வேற வச்சிருக்காங்க எப்படியும் தொல்லைசாமி வராது" ..என்று புத்தகம் கையில் ஆனால் நினைவு அவனை சுற்றி ஏதோ தோன்றி சுவாதி நிமிர ... அவளுக்கு முன் இருக்கையில் , அவள் முகம் முன்னால் மேஜை மீது காலை வைத்து ஆட்டி கொண்டு, சேரில் சாய்ந்தபடி ஸ்ரீ உட்கார்ந்து அவளைதான் பார்த்து கொண்டிருந்தான் .. 

"நீங்களா?" என பதறி சுவாதி எழும்ப 

"நானேதான் வேற யார எதிர்பார்த்த.. மரியாதை எல்லாம் வேண்டாம் உட்கார் ... "அவள் சீட் நுனியில் அமர்ந்து கொண்டாள் .. யாராவது பார்த்தா அசிங்கம் ஆகி போகுமே என திருதிருவென முழிக்க... 

"இங்க என்ன பண்ற? "என்றான் பார்வை முழுக்க அவள் நெஞ்சில் உறவாடும் தாலி மீதுதான் ..

"எதுக்கு அங்க பார்க்கிறான்னு தெரியலையே செலவுக்கு காசு இல்லைன்னு அத்துட்டு போக போறானா" தானாக கைகள் தாலியை உள்ளே மறைவில் தூக்கி போட , அவள் முகத்தை தலை தூக்கி பார்த்த ஸ்ரீ..

"பதில் வரல ..இங்க என்ன பண்றன்னு கேட்டேன் 

"வேலை பார்க்கிறேன் இங்கிலீஷ் லெக்சரர்.

"ப்ச் அது எவனுக்கு தேவை, என் வீட்டுல என்ன பண்ற, யார கேட்டு உள்ள போய் உட்கார்ந்த" ..

இல்ல சாரி வேற வழி தெரியல ... 

"போக வழி இல்லைன்னா என் வீட்டுல வந்து உட்கார்ந்திருவியா, சரி நாசமா போ நானா சோறு போடுறேன் அந்த மில்ட்ரி தான போடுது, தாய்கிழவி சோறு கட்டி தந்து விட்டிருக்குமே..

'ம்ம்

"எடுத்து கொடு "என்றதும் சிவகாமி கட்டி கொடுத்த பையை தூக்கி அவன் முன்னால் வைக்க.. ஒவ்வொரு பாக்ஸிலும் கையை வி்ட்டு, எடுத்து சாப்பிட்டு, மீதியை மூடி அவள் கையில் கொடுத்தவன்.. 

"வரவேற்பு நான் இல்லாம நடக்குதாமே".. விரலை நக்கி சுத்தம் பண்ணி கொண்டே அவளுக்கு பின்னே உள்ள கைகழுவும் இடம் நோக்கி போனான்..நல்லவேளை முதல் பாடவேளை இவளுக்கு மட்டும் தான் ப்ரீ, இல்லை இவன் பண்ணும் லோலாங்கி தனத்துக்கு முதல்நாளே வேலை போயிடும் ..

"ஆமா நான் வேண்டாம்னுதான் சொன்னேன் அத்தைதான் கேட்கல.." ஸ்ரீ கையை நீட்ட, சுவாதி 

வேகமாக தன் கர்ச்சீப் எடுத்து அவன் பக்கம் நீட்ட.. அதை வாங்காது நிற்கவும், சட்டென்று தன் முந்தானை நீட்டினாள், கையை அதில் துடைத்து கொண்ட ஸ்ரீ ... 

"ஈவினிங் வெயிட் பண்றேன் வந்திடு.. எத்தனை மணிக்கு காலேஜ் முடியும்??" அவள் பர்ஸை திறந்து காசு எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டான் .. 

"நாலு "

"ம்ம் நாலு இரண்டுக்கு வெளியே நிற்கணும்.. இல்லை நாலு மூணுக்கு இங்க நிற்பேன்" ..என வாசல் நோக்கி நடக்க .. 

"எதுக்கு வரணும்னு சொல்லவே இல்லையே .. என்ன ஏதுன்னு சொல்லாம வான்னா என்ன நினைக்கிறது" வந்தான், சாப்பிட்டான் வான்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கான், என்ன கதை என புரியாது சுவாதி அவனிடம் கேட்டு விட 

"ஹான் நீதான பொண்டாட்டி உன்னதான் கூப்பிடுவேன் .. வேற ஒன்னும் இல்லை இரண்டு பிள்ளை கொடுக்கதான் கூப்பிட்டேன் .. 

"ஓஓஓஓ என்று விட்டு 

"ஏதேஏஏஏஏஏஏஏ "என்று அலறி அவன் ஓடி வர ... ஸ்ரீ மாடிபடி சறுக்கில் ஸ்வைய்ங் என சறுக்கி கீழே போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணி கொண்டு நின்றான்.. 

"அத்தை குற்றாலம் போன இடத்திலதான் ஆள மாத்தி தூக்கிட்டு வந்துட்டாங்க, பண்றது எல்லாம் குரங்கு வேலை "என்று தலையில் அடித்து கொண்டு 

"ஈவினிங் வரவேற்பு இருக்கு, எங்கேயும் வர முடியாது .." சுவாதி மேலிருந்து சத்தம் கொடுக்க 

"வர்ற , வரணும் , நாலு மணி ஷார்ப்பா வெயிட் பண்ணுவேன்" என்றவன் அண்ணாந்து அவளை பார்த்து ..

"பூ கொஞ்சம் குறைச்சி வை, உன் முகத்துக்கு செட் ஆகல.. "அவள் முகத்துக்கு நேரே பைக் கண்ணாடியை திருப்பி, சூரிய வெளிச்சம் பட வைக்க கூசி கண்களை திரும்பினாள்.. மீண்டும் கீழே பார்க்க ஸ்ரீ இல்லை 

"வா மச்சான் போகலாம் பரதேசியாக மரத்து நிழலில் உட்கார்ந்திருந்த வினய்யை எழுப்பி அழைத்து கொண்டு செல்ல ...

சுவாதியோ எதிரே தெரிந்த கண்ணாடி ஜன்னலில் தலையில் உள்ள பூவை பார்க்க, அவன் சொன்னது போல் கொஞ்சம் அதிகம்தான்..இவளுக்கு முடி தோள்வரை மட்டுமே கிடக்கும்.. சிவகாமி மருமகள் பாசத்தில் ஒரு கூடை பூவையும் வைத்து விட்டிருக்க.. மண்ட மேல பூ லாரி கொட்டியது போலதான் இருந்தது ..உடனே எடுத்து குறைவாக வைத்து கொண்டாள்.. வயிறு பசிக்க சரி முதல் பாடவேளை ப்ரீதான என கட்டி கொண்டு வந்தது , புருஷன் அணகோண்டா விழுங்கிட்டு போயிருக்க, பாக்ஸை திறந்து வைத்து பார்த்து கொண்டிருந்தாள்.. ஸ்ரீ கை வைத்து பாதி உண்டு மீதி ஒதுக்கி வைத்திருக்க. 

"கேண்டீன் போய் சாப்பிடலாமா ? ச்சை அத்தை ஆசையா செஞ்சாங்க, மீதி கொண்டு போனா என்ன நினைப்பாங்க , ஒரு பக்கம் தானே சாப்பிட்டிருக்கார் மறுபக்கம் சாப்பிடலாம் "என சாப்பிட ஆரம்பிக்க.. சாப்பாட்டில் இருவரும் பங்கு போட ஆரம்பித்தனர் ... அறை போய், சாப்பாடு வந்தாச்சி டூம் டூம் டூம் ... 

"மச்சான் நீ இப்ப சுவாதியை பார்க்க வரல அப்படிதான" எப்படியும் உண்மை சொல்ல மாட்டான் என வினய் தப்பு கேள்வி கேட்க 

"யார் சொன்னா?? .. அவளைதான் பார்க்க வந்தேன்".. 

"அப்போ பிடிக்குமா ? 

"பிடிக்காது ,ஆனா இன்னைக்கு ஆள் பார்க்க நல்லா கும்முன்னு இருக்கா, அதான் மறுபடி பார்த்துட்டு போறேன் . "உல்லாசமாக விசில் அடித்து கொண்டே கண்ணாடியில் முகத்தை பார்த்து தலை முடி கோதினான்..  

"ஓஓஓ, ஆனா அவள லவ் பண்ணல அப்படிதான .. 

"லூசாடா , அவள லவ் பண்ணாம , எப்படி கல்யாணம் பண்ண முடியும்..

"மச்சான் ஓரமா அந்த பைத்தியகார ஆஸ்பத்திரி பக்கம் நிப்பாட்டு , நானே போய் படுத்துக்கிறேன்.. எப்படியும் நீ என்ன பைத்தியம் ஆக்காம விட மாட்ட, அதுக்கு நானே போய் படுத்திட்டா நோய் முத்தாது பாரு .."

"ஓகே" தோளை உலுக்கி கொண்ட ஸ்ரீ ,மெண்டல் ஆஸ்பத்திரியில் வினய்யை இறக்கி விட்டுட்டு,இல்லை தள்ளி விட்டுட்டு போயிட்டான் அப்படி சொன்னாதான் சரி.  

நாலு மணிக்கு ஓட்டமும் நடையுமாக சுவாதி வெளியே வந்து நின்றாள்.., எங்க வரலைன்னா உள்ள வந்து வாடின்னு தூக்கிட்டு போயிடுவானோ என்ற அளவுக்கு மிரட்டி வைத்திருந்தான் ..

நாலு, ஐஞ்சானது , ஐஞ்சு ஆறானது, கால் கடுத்து போனது. சிவகாமி வேறு போன் மேல் போன் போட்டு என்னாச்சி என கேட்க.. ஸ்ரீயை போட்டு கொடுக்க முடியாது அதையும் இதையும் சொல்லி ஒப்பேத்தி..

"ப்ச் இவர பத்தி தெரிஞ்சும் நின்ன என்ன செருப்பால அடிக்கணும் வந்த ஆட்டோவை கை நீட்ட ... அவள் முன்னால் ஸ்ரீ பைக் வந்து பிரேக் போட்டு நின்றது ..

"உன்ன வெயிட் பண்ணதான சொன்னேன் .. ஹான்.."

"எத்தனை மணிநேரமா வெயிட் பண்ண" மனசுக்குள்தான் மண்டகப்படி கொடுத்தாள்.

"இல்லை நீங்க வர லேட்டாச்சி..

"லேட்டானா போயிடுவியா நான் வர்ற வரை நிற்க முடியாதா ? இல்லை போன் போட தெரியாதா? ஏறு ... "

"ஏறணுமா? "மனசு சில்லிட்டது .. அடுத்த அகநானூறு தொடங்கி தொலைத்து விடுவான் என நினைத்த சுவாதி பின்னால் அவன் மேல் விரல் படாது ஏறி அமர...

"ம்மமாஆஆஆஆஆஆ கடவுளே காப்பாத்து " என்று அலறி, மோதி, வழுவி, கீழே விழ போனவள் பதறி ஸ்ரீ இடுப்பை தவ்வி பிடித்தாள் ..

சொல்லிட்டு எடுத்தா என்ன சாக பார்த்தேன் .. ம்மா வீடு போய் சேர்த்திடுவானா சுவாதி கையை எடுக்கும் போதெல்லாம் சர்கஸ் பண்ண.. 

" என்ன நினைச்சாலும் பரவாயில்லை, கையை மட்டும் எடுக்க மாட்டேன், விழுந்தா சுக்கு நூறாகி கிடப்பேன்" என அவன் இடுப்பை இறுக்கி பிடித்து கொண்டாள்.. 

காலையிலிருந்து வேலை ,இவனுக்கு காத்திருப்பு வேறு , சிலுசிலு காற்று அனைத்தும் கண்களை சொக்க வைக்க.. கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்திற்கு போனவள்.. வசதியாக ஸ்ரீ முதுகில் முகத்தை புதைத்து தூங்கிவிட.. சட்டென்று வண்டி வேகத்தை குறைத்த ஸ்ரீ , ஒற்றை கையை பின்னால் விட்டு அவள் வழுவாது பிடித்து கொண்டவன், திரும்பி அவள் கன்னத்தில் இச் என முதல் முத்தம் வைத்தவன் ,அவளை தாங்கி பிடித்து கொண்டே வண்டியை ஓட்டினான்... 

அவனுக்கும் காதலிக்க தெரியும்!!! 

ஆனால் எல்லார் போல காதலிக்க தெரியாது!! 

அவள் கண்டது தேடுவது சிலிர்க்க வைக்கும் காதல் !!

இவனுக்கு பூவை பூவாக வைத்து முகர்ந்து பார்க்க தெரியாது, அதை பிய்த்து போட்டு ஆமா இதுதான் பூ என்று பார்க்கும் ரகம் .. 

பகலவன் கையில் இரவின் மகள்... பகலவன் காதல் சுடத்தான் செய்யும் ..