பசப்புறு பருவல் 8
Para8

8 பசப்புறு பருவல் !!
ஒவ்வொரு நிமிடமும் மூன்று பேருக்கும் கண்டிப்பாக ஒரு யுகமாய்தான் கடந்து இருக்கும்.. வானத்தில் வெகு அருகே பறந்து வரும் விமானத்தை அண்ணாந்து பார்த்த ரித்திக் கையில் மெல்லிய நடுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது..
காதலில் பலவீனமாக உணர்வதுதான் காதலின் பலம் !! தன் ஆண்மை பலத்தை காதலில் காட்டுவது வீரமோ?? அவள் முன் எப்போதும் அவன் கோழையே!!
இனி எதையுமே மாற்ற முடியாது இருதயத்திற்கு புரிகிறது .. ஆனால் அவளும் அந்த இருதயத்திற்குள் ஒரு இடத்தில் ஒளிந்து கிடந்து காதல் சடுகுடு இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறாளே... தன் காதலியை பார்க்க வாழ்நாளில் அவனுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.. அதை விடவும் மனதில்லை அருகே நின்று அவளை கண்ணார பார்க்கவும் மனதில்லை ... ஒவ்வொரு நபராக வெளியே வர வர,. நங்கையின் கண்களும் ஆர்வமாக தேட .. தூரத்தில் நின்று அவன் கண்களும் அவளை தேடி அந்த கூட்டத்தில் அலைமோத...
"அம்மா வைஷு ஆன்ட்டி வந்துட்டாங்க" என்று முதலில் கண்டுபிடித்தது சந்துருதான்... கூட்டத்தின் நடுவே காட்டன் சேலை அணிந்து நளினமாக நடந்து வரும் வைஷ்ணவியை கண்டு கொண்டான் கந்தர்வ காதலன் ...
பார்த்த விழி பார்த்தபடி பூத்து கிடந்தது அவள் வந்த வழி மீது .. அவள் கண்களும் அலைபாய்ந்து அங்கும் இங்கும் அலைந்து திரிவதை பார்த்துக்கொண்டே நின்றான் ... கண்ணை தட்டி முழிக்காமல் அவன் பார்த்த பார்வையில் கண்ணில் இருந்து கண்ணீர் அது அவள் பிம்பத்தை மறைக்க,, சட்டை கொண்டு அதை துடைத்து கொண்டான் ..
வைசு ஆன்டி இங்க இருக்கோம்" என்ற குரலில் அலைபாய்ந்த அவள் கண்களும் சட்டென கீழே குனிந்து சந்துருவை பார்த்தது.. ஈட்டி பாயும் வலி ஒன்று அவள் இதயத்தை சதக் சதக் என்று குத்திப் போனது.. அப்படியே தன் காதலனை உரித்து வைத்து பிறந்திருக்கும் மகனைக் கண்டு உதட்டை கடித்துக் கொண்டு வலியை சிரிப்பில் மறைத்துக் கொண்டவள்..
"ஹரே ஜூனியர் ரித்விக் ,எப்படி இருக்க??? குனிந்து குழந்தையை தூக்கி கொண்டாள்
பைன் ஆன்டி நீங்க ?
"பைனோ பைன் அம்மா எங்க?
"அம்மா மாதாஜி இஇஇ என்று சந்துரு தன் தாயை அழைக்க
"இதோ இங்கேயேதான் இருக்கேன்" என்று அருகே ஓடி வந்து நின்ற நங்கையை அப்போதுதான் முதல் முறை பார்க்கிறாள் ... அழகான பெண் என்பதை விட அவனுக்கு பொருத்தமான மனதை கொண்ட பெண் ... பெண்ணே பொறாமை கொள்ளும் அழகியாக நின்ற அவளை கண்கள் கலங்க பார்ப்பது தவிர வேறு வழி இல்லையே...
எத்தனை பேர் பழைய காதலியை பழைய மனைவியை இப்படி எதிர்கொண்டு ஏற்றுக் கொள்ள முடியும்..
"வைசு அக்கா நல்லா இருக்கீங்களா ??என்று அவளே வைஷ்ணவி கையைப் பிடித்துக் கொள்ள... அவளும் சிக்கென நங்கை கையை அழுத்தி கொடுத்து
"நல்லா இருக்கேன்டாம்மா, நல்லா இருக்கியா?
"ம்ம் , நாங்க ரொம்ப நேரமா காத்துக்கிட்டே இருந்தோம்
"நானும் எப்போ உங்கள எல்லாம் பார்ப்பேன்னு காத்துக்கிட்டுதான் இருந்தேன்..
ஆனால் அவள் ஆசை ஒன்று நிறைவேறவில்லையோ?? அவள் கண்கள் இன்னும் இல்லாத ஒருவனை மெலிதாக தேட .. அதை கண்டு கொண்ட நங்கை
"அவர் வேலை இருக்குன்னு போயிட்டார் அக்கா , ராத்திரிதான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னார்
"ஓஓஓ வேலை இருக்கும்ல, நான் ஹோட்டல் எதிலையாவது தங்கிக்கவா? உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்
"மறுபடியும் ஆரம்பிக்காத அக்கா,. நாங்கெல்லாம் ஊரு உறவு தாண்டி எங்கனையோ கிடக்கிறவங்க இப்படி யாராவது ஒருத்தர் வந்துட்டு போனாதான் எங்களுக்கு கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் ரெண்டு நாள் எங்க வீட்டுல இருந்துட்டு போனா தான் என்ன... ஓ நீங்க பெரிய பணக்காரவங்க எங்க வீட்ல வசதி பத்தாதுன்னு நினைக்கிறீர்ங்களோ
"ச்சே அப்படியெல்லாம் இல்ல, உங்களுக்கு ஏதாவது
சங்கடமா இருக்குமென்னு
"என்ன சங்கடம் நாங்க திங்கிறதை கொடுக்க போறோம் ,நாங்க தங்குற இடத்துல உங்களுக்கு கொஞ்சம் இடம் கொடுக்க போறோம் அதில எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை .. உங்களுக்கு சங்கடமா இருந்தா சொல்லுங்க, வேற ஏதாவது ஏற்பாடு பண்ண சொல்றேன்..
"ஆத்தாடி !!! என்ன வெடி வெடிக்கிற, எந்த வண்டியில் ஏறனும்னு சொன்னேன்னா நான் போய் ஏறிடுவேன், இங்கேயே நிக்க விட்டு அடிச்சு விட்டுருவ போல இருக்கு
"பின்ன சொல் பேச்சு கேட்டா, நான் ஏன் உங்கள அடிக்க போறேன் வாங்க" என்ற அவள் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க..
தன்னை நோக்கி அவர்கள் வருவது தெரிந்த ரித்விக் வேகமாக வண்டிக்கு பின்னால் போய் நன்றாக ஒளிந்து கொண்டு, தன் அருகே வரும் வைஷ்ணவியை ஆசையாக பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
பச்சை நிற காட்டன் புடவை, ஆரஞ்சு நிற ஜாக்கெட் கழுத்தில் சிறிதாக பவளப்பாசி கையில் வாட்ச் ஒரு கையில் வளையல் காதில் டைமண்ட் கம்மல் , தரை கூட அதிராமல் சந்துருவோடு ஏதோ பேசி சிரித்துக்கொண்டு வந்த அவளை எச்சில் விழுங்கி பார்த்தான்... அப்படியே தான் இருந்தாள், ஆனால் கண்ணில் ஒரு பவர் கிளாஸ் அது கூட அழகாகத் தான் இருந்தது.. பிடித்தவர்களிடம் என்ன குறை கண்டுபிடித்து விடப் போகிறோம்... ஏற்பாடு செய்திருந்த வண்டியில் நங்கை முதலில் ஏறிக்கொள்ள, சந்துருவை மடியில் வைத்தபடி வைஷ்ணவி ஏறி உட்கார்ந்தவள்... ஏதோ தோன்றி தலையை வெளியே விட்டு ஒரு பார்வை பார்த்தாள்
அப்பா அதே பார்வை அவனை பேயாக அலைய வைக்கும் அந்த பார்வையில் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே காரில் சாய்ந்தான்..
அவள் தேடல் நானாக இருக்கக் கூடாதா என்று முன்பெல்லாம் யோசித்தான்... இப்போது அவள் தேடல் எப்போதும் இனி நானாக இருக்கக் கூடாது என்று யோசிக்கிறான் யோசிக்க வைத்து விட்டது கால சூழ்நிலைகள்... இப்படி தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு கடப்பது சாலச் சிறந்தது என்று முடிவெடுத்த பின்பு தானே தள்ளி நிற்கிறான்.. அவள் பின்னே போக துடித்த இதயத்தை அடக்கி வண்டி மறையும் வரை நின்று பார்த்தவன் வேலைக்கு கிளம்பினான்..
"வாங்க அக்கா இதுதான் வீடு "நாலு மறைப்பு இது வீடா அய்யகோ !! ஏன் இவனுக்கு இப்படி ஒரு அவலம் என்று தான் தோன்றியது ..
"குட்டி படிப்பு அது இதுன்னு கொஞ்சம் செலவு அதிகம் அக்கா பெரிய வீடு எல்லாம் பிடிக்க முடியல" சங்கடமாக இடத்தை ஒதுக்கும் நங்கையை பிடித்த வைசு
"உன் மனசை விட விசாலமான இடம் எதாவது இருக்கா நங்கை ..அவள் பேச்சில் புன்னகை செய்த நங்கை வைஷ்ணவி முகத்தை வழித்து நெட்டி முறித்து
"அட அட இதுதான் மாமா உங்ககிட்ட விழ காரணம் போல
"ஹான் அவள் அதிர்ந்து பார்க்க
"பழைய காதலில்ல அதை சொன்னேன் எனக்கு எல்லாம் தெரியும் அக்கா, மாமா என்கிட்ட எதையும் மறைக்காது...
"அது பழைய கதை நங்கை, இப்போ வெறும் நட்புதான் என்று மென்று முழுங்கினாள் எதிரே கிடந்த அவர்கள் புகைப்படத்தை பார்க்காது ...
"நானும் பழையதுன்னு தான் அக்கா சொன்னேன் ... உட்காருங்க நான் எதாவது காப்பி தண்ணீ போட்டு கொண்டு வர்றேன்
"ம்ம் மாடமாளிகை இத்தனை நாள் தராத ஏதோ ஒன்றை இவ் வீடு தந்தது மெய்!! தரையில் பாயை விரித்து வைஷ்ணவி அமர ... சந்துரு அவள் அருகேயே உட்கார்ந்து வளவளத்து கதை சொல்லிக் கொண்டிருந்தான்
"ஆன்டி உனக்கு நெறைய வாங்கிட்டு வந்திருக்கேன் என்னன்னு பார்ப்போமோ குட்டி
"நீங்க என்ன பார்க்க வந்ததே பெருசுதான் ஆன்டி
"ஹாஹா அப்படியா உன் அப்பா போலவே பேசுறியே "
"ஆமா நான் அப்பாவோட மினில்ல ஆன்டி
"அது என்னடா ஆன்டி, இனி பெரியம்மா சொல்லு என்று நங்கை உள்ளிருந்து குரல் கொடுக்க
"ஓகே மாதாஜி ...வைசு பெரியம்மா நான் என் டிராயிங் காட்டுறேன் வாங்க" என்று அவளை அழைத்து போக...பிஞ்சு விரல் உள்ளே விரும்பி சிறைப்பட்டு போனாள்...
"இங்க தான வச்சேன் இந்த கிறுக்கனுக்கு இதே வேலையா போச்சு என் டிராயிங் பேப்பரை வச்சே சைக்கிள் தொடைப்பான்... என்று தகப்பனை திட்டி கொண்டே சந்துரு தாளை தேட
"கோவம் வந்தா அவன் அப்பா போல அக்கா, இப்படிதான் மட்டு மருவாதை இல்லாம பேசி வைப்பான்... என்ன, மாமா குடிச்சா குண்டக்க மண்டக்க பேசும் இவன் கோவம் வந்தா பேசுவான்
"இன்னும் குடிக்கிறாரா நங்கை ??
"ம்ம் நடக்கும் நடக்கும் எப்பவாவது என்று நங்கை சலிக்க..
"ஓஓஓ குடிக்காதீங்கன்னு சொல்ல கூடாதா..
"என்ன இதை செய் அதை செய்ன்னு அவர் ஒருநாளும் கட்டுப்படுத்தியது இல்ல.. நான் மட்டும் ஏன் அக்கா அதை பண்ணணும், ஏதோ மனசு பாரமாகிதான் குடிப்பார், அதை ஏன் தடுப்பானேன்?
"ஜாடிக்கேத்த மூடிதான் போல ...
"மூடிதான் சைஸ் மாறி போச்சு அக்கா ..
"என்ன சொன்ன நங்கை புரியல
"ஒன்னும் இல்லை என்று விட காற்றடித்து
கொடியில் தொங்கும் அழுக்கு லுங்கி வந்து வைசு மீது விழ ...
ஆவ்ஊஊஊ முகத்தில் வந்து மோதிய அவன் குபீர் மணத்தில் மூச்சடைத்து போய் வைசு அப்படியே நின்றாள்... உடல் வியர்க்க பல வருடம் கழித்து கிடைத்த அவன் நறுமணம் அவள் நாசியில் பட்டு வெவெடக்க வைக்க...
"இந்த மாமாவுக்கு வேலையே இதுதான் , அப்படியே கழட்டி போயிட்டு போயிடும் "என்று அவள் முகத்தில் விழுந்த லுங்கியை தூக்கி நங்கை போட .. சட்டென்று தன்னிலை வந்த வைசு ...
"வீடுன்னா அப்படித்தான் இருக்கும் நங்கை , ரொம்ப பெர்பெக்ட் எதிர்பார்க்க முடியாதுல்ல
"ம்ம் அது சரி தான் ,ஆமா உங்க வீட்டுக்காரர் எப்படி வைசு அக்கா?? என்றதும் வைசு தடுமாறி
"ஹான் அது அது
"போன வருடம் போன் பேசும் போது கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னீங்கல்ல... குழந்தை வேண்டாம்னு தள்ளி போட்டிருக்கீங்களா??
"இல்லை குழந்தை பிறந்து இ....து போச்சு
"அக்காஆஆஆஆ நங்கை அதிர்ந்து அவளை பார்க்க
"என் விதியை யார் கிறுக்கினாங்களோ எதுவும் இல்லை என்று உதட்டை பிதுக்க
"புரியல அக்கா
"பிள்ளை இல்லை புருசன் இல்லை ஏதோ போகுது போ .. அதை மறக்கத்தான் முயற்சி பண்றேன் .... மறந்துடுவேன் நம்புவோம்... கொடு நான் துணியை மடிக்கிறேன் ... என்று வைசு கட்டலில் உட்காந்து துணியை மடிக்க நங்கை காயை நறுக்கினாள் ..
கையை காலை நீட்டினால் கூட இடப்பற்றாக்குறை கொண்ட வீடு ...
"ஏன் நங்க பையன் பெருசாக ஆரம்பிச்சிட்டான், இதைவிட கொஞ்சம் பெரிய வீடு பார்க்கலாமே வைசு மடியில் தலை வைத்து தூங்கும் சந்துரு தலையை தடவி கொடுத்தபடி கேட்க
"புரியுது அக்கா நீங்க கேட்கிறது, புருசன் பொண்டாட்டிக்கு சங்கடமா இருக்காதான்னு கேட்கிறீங்க அதான..
"அது அப்படி இல்லை "
"என்ன அக்கா ஒளிவு மறைவு இருக்கு என்னைக்காவது குடிச்சிட்டு வருவார், அப்ப மட்டும் தான் அலப்பறை பண்ணுவார்" என்று குனிந்து கொண்டே நங்கை காயை நறுக்க இவள்தான் அதிர்ந்தாள் ...
"இன்னைக்கு குடிக்க போறேன்னு சொன்னா ஆளு வரும் போது லம்பும் கணிச்சிக்க வேண்டியதுதான் மகனை தூங்க வச்சிடுவேன் விடிய விடிய கபடி தான்" என்று நங்கை சிரிக்க ... வைசுவுக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை
"ஒன்னு சொல்லவா அக்கா ... அவர் உங்கள மறக்கவே இல்லை "
"எ....ன்.ன சொல்ற ??"
"ம்ம் குடிச்சுட்டு வந்தா தான் தெரியும்... சீமப்பசு என் வைசுக்குட்டின்னு என்ன பிடிச்சு கொஞ்சிட்டு கிடப்பார் "என்று சிரித்த நங்கை சிரிப்புக்கு பின்னே எத்தனை வலி இருக்கும் புரியாது இல்லை ....
"நங்கை அது வந்து
"விடுங்க அக்கா பழகி போச்சு .... அவர் மனசு முழுக்க நீங்க தான் கிடக்கீங்க .. நீங்க ஏன் சேர்ந்து வாழ கூடாது அக்கா ""இக்கேள்வியை எதிர்பார்க்காத வைசு அதிர..
சும்மா கேட்டேன் தப்பா இருந்தா மன்னிச்சுசோங்க அக்கா
ப்ச் புரியாம பேசாத நங்கை, நான் வேற ஒருத்தர் மனைவி "
"அதுதான் காரணமா அக்கா ? உங்களுக்கு உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சா??? தொடர் தாக்குதலில் நிலைக்குலைந்து போன வைசு
"மக்கும் டிராவல் பண்ணினது டயர்ட்டா இருக்கு நங்கை தான் கொஞ்சம் படுத்துக்கவா
"எதுல எப்படியோ?? ரெண்டு பேருக்கும் நல்லா சமாளிக்க தெரியுது ... சாப்பிட்டுட்டு தூங்குங்க என்று அன்பாக பரிமாறும் நங்கையை சாதாரண ஒரு பெண்ணாக அவளால் பார்க்க முடியவில்லை ...
அவர்கிட்ட பேசினால்தான் சரி வரும்.. குழந்தை மனைவின்னு ஆன பிறகு, என்ன நினைச்சுட்டு வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்கார் ... அவ்வளவு காதல் இருந்தவர் அவளை ஏன் தொட்டாராம்...
அந்த பொண்ணு மனசுல எத்தனை ஏக்கம் இருக்கும் விளையாடுறாரா இவர்.. அன்னைக்கு என் மனசு புரியாம பண்ணினார், இன்னக்கு இவ மனசு புரியாம நடந்துக்கிறார்... ஆனாலும் ஓரத்தில் இன்னும் என்னை நேசிக்கிறானா என்ற பதில் புல்லரிக்க வைத்ததுவோ?? அவள் கண்கள் வாயிலேயே பார்க்க அதை அறிந்த நங்கை
அவர் வர பத்து ஆகும் அக்கா நீங்க தூங்குங்க
ஓஓஓ பத்து ஆகுமா? கொட்டாவி விட்டபடி வைசு தூங்கும் சந்துரு அருகே பாயில் ஒரு பக்கம் படுக்க, நங்கையும் இன்னொரு பககம் படுத்து கொள்ள ... நங்கை படுத்தவுடன் குறட்டை விட ஆரம்பித்து விட்டாள் ...
மெய் காதல் கொண்டு காத்தே கிடந்த இவளால் தூங்க முடியுமா என்ன ?? இன்னும் பெரும் குறை ஒன்று உண்டே அவள் காதலனை காண வாய்ப்பு கிட்ட வில்லையே... யோசனையாக படுக்கையில் உருண்டபடி கிடக்க....
டக் டக் என்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நல்ல நித்திரையில் இருந்த நங்கை சட்டென கண்களை திறந்து விட்டாள் ... வைசுவுக்கு மூச்சு திணறுவது போல பிரம்மை இன்னும் சில நொடிகளில் அவள் காதலன் முகம் முன்னே நிற்க போகிறாள் நினைவே என்னவோ செய்தது ..
அக்கா மாமா வந்துட்டு போல கொஞ்சம் கதவை மட்டும் திறந்து விடுங்களேன் ...
நானா?? ....
எனக்கு அவசரமா சுச்சு வருதுக்கா போயிட்டு வர்றேன் என்று நங்கை ஓடி விட
"நங்க " மெலிதாக அவன் குரல் .... கால்கள் நடை பயிலும் குழந்தை போல வைசுவுக்கு பின்னியது, உடல் எங்கும் ஏதோ படபடப்பு, நெஞ்சு தாறுமாறாக அடித்து இதயம் வாய்வழி குதித்து விடும் போல இருக்க ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்தாள்
டொக் என்று வைசு கதவை திறக்க ... திரும்பி நின்று போனில் நங்கைக்கு அழைக்க போனை தட்டி கொண்டிருந்த ரித்விக் கதவு திறக்கப்படவும் சட்டென திரும்ப... திரும்பிய அவனும் அப்படியே நின்றான் திறந்த வைசுவும் தாடி மீசையில் முழு ஆணாக நின்ற ரித்விக்கை பார்த்தபடி நின்றாள்.... எத்தனை நிமிட பார்வைகள் அவை இமைக்கா நொடிகள் போல அலையும் காற்றும் கூட அவர்களுக்கு தொல்லை செய்யாது நின்று விட்டதுவோ?!!
பசலை நோயில் வாடிக்கிடந்த அவள் விழிகள் கண்ணீரில் மினுங்க, பசலை நோயில் உயிர் போகும் நிலையில் கிடந்த அவன் கண்ணும் பளபளப்பாக இருவர் விழியும் ஆயிரம் நல விசாரிப்புகளை சத்தம் இல்லாது பரிமாறி கொண்டு நின்றது ...
நல்லா இருக்கிங்களா ?? என்றது அவள் விழி
நீ இல்லாம நான் எப்படிடி நல்லா இருக்க முடியும் என்றதா அவன் விழி
என்னாலும் நீங்க இல்லாம வாழ முடியல என்றதா அவள் விழ
இன்னும் காதலிக்கிறியா?
எப்போ உன்ன மறந்தேன் என்றது அவன் விழி
அப்போ இதெல்லாம் என்னதுடா என்றது அவர்கள் குடும்ப புகைப்படத்தை ஒரு பார்வை பார்த்து குற்றம்சாட்டி
காலத்தின் கோலம் , இப்போ என்னோட உலகம்
அப்போ நான் யார் ?
உன்ன தான் என் இதயத்தில் வைத்திருக்கிறேனே போதாதா என்று சமாதானம் செய்ததுவோ ....
கண் பேசும் வார்த்தைகள் காதலில் மட்டுமே புரியும் அவள் பேசியது அவன் அறிவான் அவன் பேசியது அவள் அறிவான் ..