பொய் 10
Poi10

10 பொய்யில் ஒரு மெய் !!
என்ன சொல்றீங்க அரவிந்த், உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பி இருக்கீங்களா?? அதுவும் இந்த மாதிரி காஜித்தனமா , புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..
"ம்ம், என் மனைவி எவ்வளவு அருமையான மனைவியோ அதே அளவுக்கு எனக்கு அருமையான காதலியும் கூட ..இப்ப கூட என் மனைவியோட காதல யாராலும் ஈடு கட்ட முடியாது சார் .. என்னால அவளை மறந்துட்டு இன்னொரு பெண்ணு கூட நினைச்சு பார்க்கவே உடம்பெல்லாம் கூசுது... அருவருப்பா இருக்கு" என்று உடல் சிலிர்த்து நிற்கும் அரவிந்தை வக்கீல் மட்டுமல்ல அங்கே கேட்டுக் கொண்டிருந்த சீதாலட்சுமியும் உடல் புல்லரிக்க தான் கேட்டு கொண்டு நின்றாள்..
"அப்போ இதெல்லாம் என்னது ??
"அவளை நிறைய காதலிக்க ஆசை, ஆனா எனக்கு நேரம் கொடுக்க அவளுக்கு நேரமில்லை சார்... பேசட்டும் என வக்கீல் அமைதியா அவனை பேச விட்டார்..
' அவளை சொல்லியும் தப்பில்லை .. இரண்டு குழந்தைங்க அதுவும் மூத்தது பொண்ணு வேற .. என் குடும்பத்திலும் சரி அவ குடும்பத்தையும் சரி காதல் கல்யாணம்ன்றதுனால சப்போர்ட்க்கு ஆள் இல்லை ..எல்லாத்தையும் அவளே தான் பாத்துக்குவா, சோ உடல் உபாதை மனசு சோர்வு பிள்ளைகளோட பராமரிப்பு , எனக்கு தேவையானது பண்றதுன்னு, பம்பரம் போல ஒரு நாள் முழுவதும் சுத்திக்கிட்டே இருக்கா.. தூங்குற நேரம் கூட கம்மிதான் அந்த நேரத்தில் கூட என் தேவைக்கு உடம்பு தான்னு கேட்க எனக்கே சில நேரங்களில் ரொம்ப சங்கோஜமா இருக்குது ...
ம்ம்
"ஆனாலும் நானும் ஆம்பள தானே சார் , உங்களுக்கே தெரியும் 40 வயசுக்கு மேல ஒரு ஆம்பளையோட ஆசை அதிகமாயிடும்.. அது உடம்பு தேவைன்னு மட்டும் இல்ல , மனத்தேவைன்னு ஒன்னு இருக்கும்ல . 40 வயசு வரைக்கும் ஆம்பள செட்டில் ஆகணும்கிறதுக்காக ஓடுவான், 40 வயசுக்கு மேல நாம செட்டில் ஆகிடுவோம்.. அப்போ ஆற அமர காதலிக்கணும் நிறைய மனைவி கூட அந்தரங்கமா பேசணும் சிரிக்கணும்னு ஒரு விதமான மனநிலை, எனக்குத்தான் அப்படியா இல்ல எல்லா ஆம்பளைக்கும் அப்படியான்னு சொல்லி தெரியல.. பட் ஐ நீட் பிசிகலி, மென்டலி மை வைஃப்" என்றவன் சங்கடமாக நெளிய
'புரியுது அரவிந்த் இது எல்லா ஆணுக்கும் வர்ற தடுமாற்றம்தான் சொல்லுங்க ,
"எனக்கும் சீதா கூட கொஞ்சம் இல்ல நிறைய கூட இருக்கணும் போல ஆசை ... பிள்ளைங்க இடைஞ்சல்னு சொல்ல மாட்டேன் .. ஆனா, பிள்ளைங்க இல்லாத நேரமாவது அவ எனக்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்கனும்னு ஏக்கம்.. பழைய புருஷன் தானே என்னத்த பாக்க போறான், இல்ல என்னத்த பேச போறான்னு , அவ பிள்ளைங்களே பாத்துட்டு இருக்கும் போது எனக்கும் அவளுக்கும் இடையில நிறைய கேப் இருந்தது மாதிரி ஒரு ஃபீலிங் .. "
'வாஸ்தவம்தான், அவ எனக்காக தான் காலையில எழும்பி அவ்வளவு வேலையும் செஞ்சு எல்லாத்தையும் அவ தலையில தூக்கி போட்டுக்குறா.. ஆனா அதை செய்யறதுக்கு எனக்கு ஒரு வேலைக்காரி போதுமே சார்...
"மனைவி என்கிற அவகிட்ட மட்டுமே நான் தேடக்கூடிய அன்பு பரஸ்பரம், காதல் , கூடல் இதை எல்லாம் நான் வேற யாருகிட்டேயும் போய் கேட்க முடியாது... கேட்டா நான் எப்படி ஒரு நல்ல ஆண் மகனா, அப்பாவா, புருஷனா இருக்க முடியும் எனக்குள்ளேயே அடக்கி அடக்கி ஒரு கட்டத்துல அது வெடிக்க ஆரம்பிச்சது ...
சோ ???
"ஏன் உணர்வுகளை அவளால புரிஞ்சுக்க முடியல அப்ரோச் பண்ணி கூட பார்த்தேன், உடம்பு தேவ மட்டும்தான் அவசியமான்னு கேட்டா.. அது மட்டும் காரணம் இல்லை சார், சில நேரங்களில் ஒர்க் பிரஷர் தாங்க முடியாம, அவ மடியில படுத்துக்கிட்டு கல்யாணம் முடிஞ்சு புதுசுல, இவ்வளவு கஷ்டமா இருக்குடி என்ன பண்ணலாம்னு எனக்கு தெரியலன்னு அவகிட்ட நான் சொல்லும்போது, என் தலையை கோதி விட்டுக்கிட்டே
"ஒன்னும் இல்ல ராம் எல்லாம் சரியா போயிடும்னு ஒரு வார்த்தை சொல்லுவா பாருங்க .. பத்து நாளைக்கு அப்படியே எனக்குள்ள பூஸ்ட் ஏத்துன மாதிரி இருக்கும் ...
'ரொம்ப உடம்பு அடித்துப் போட்ட மாதிரி வலிக்கும்போது என்ன ஆச்சு உடம்பு வலிக்குதான்னு என்ன டைட்ட ஹக் பண்ணிக்குவா பாருங்க அப்படியே வலி குறைஞ்சது மாதிரி இருக்கும் சார்..
ம்ம்
"வாரத்துல அந்த ரெண்டு நாள் கூட போதும் , ஒரு வாரமும் அப்படியே வானத்தில் பறந்த மாதிரி மன அழுத்தமே இல்லாம இருக்கும் .. ரெண்டு பேரும் கையை கோர்த்துக்கிட்டு கடைக்கு போறது , தனிமையா ஒருத்தர் மடியில் ஒருத்தர் படுத்துகிட்டு பாட்டு கேக்குறது, ஒரு நாளைக்கு மூணு நேரமாவது அவ எனக்கு போன் போட்டு சாப்பிட்டீங்களா, நான் செஞ்சு தந்த சாப்பாடு நல்லா இருக்கான்னு கேப்பா, ஏன் வர லேட் ஆயிடுச்சுன்னு கேப்பா, எங்கேயாவது போயிட்டு வரலாமா, இப்படி ஏகப்பட்ட பேச்சுவார்த்தை எங்களுக்கு இடையில் இருக்கும் இதெல்லாம் எனக்கு ஒரு மனைவி இருக்கா எனக்கு ஒரு குடும்பம் இருக்குன்னு அப்பப்போ எனக்குள்ள நினைவு படுத்திக்கிட்டே இருக்கும்... என்றவன் தொண்டையை செருமி..
ஆனா, இப்போ ஒரு அஞ்சு வருஷமா எதுவுமே இல்லை சார் என்றவன் பெருமூச்சு விட்டு,
அந்த வீட்ல புருஷன் என்கிற கௌரவம் இருக்கு, எனக்கு அந்தஸ்து இருக்கு , பெரிய பட்டம் இருக்கு ஆனா ஏதோ ஒரு ஓரத்துல டிவி போல, நானும் ஒரு பொருள் மாதிரி இருந்துட்டு இருந்துட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீல்... "
"மெக்கானிக்கல் லைஃப்னு சொல்லுவாங்க இல்ல அந்த மாதிரி காலையில ஏழு மணிக்கு சுவிட்ச் ஆன் பண்ணுனா , ராத்திரி பத்து மணிக்கு பெட்ல ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுது... என்னைக்காவது ஒரு நாள் அவளா மனசு உவந்து ஒரு கூடல்... அது கூட பிள்ளைகள் முழிச்சிடும் அப்படின்னு அறக்க பறக்க எதுவோ மிஷின் கூட பண்ணின மாதிரி ஒரு கூடல்..
ஆசையா முத்தம் கூட இல்லை ..
புரியுது சார்
"ம்ம் , இதெல்லாம் எல்லா இடத்துலயும் நடக்கிறது தானே உங்களுக்கு மட்டும் புதுசா நடக்குதான்னு கேட்டா இல்ல தான் , ஆனா எதிர்பாக்குதே மனசு.. ஒரு வயசுக்கு மேல அதிகமா மனசும் உடம்பும் எதிர்பார்க்குதே , இத வாய்விட்டு அவகிட்ட என்னால எப்படி சொல்ல முடியும் ?? என் உடம்பு மட்டும்தான் உனக்கு முக்கியமான கேட்டுட்டான்னா அதுக்கு பிறகு நான் வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போயிடும். நான் எப்படி சொல்லுவேன் உன் மனசும் உன் உடம்பும் மொத்தமும் எனக்கு மட்டும் வேணும்னு ....வெட்கத்தை விட்டு சொல்றேன் சார், என் பிள்ளைங்க கூட அவ அவ்வளவு அன்யோனியமா இருக்கும்போது, ஏன் என் கூட மட்டும் இருக்க மாட்டிக்கிற , எனக்கும் இதுதாண்டி தேவைன்னு அவ கைய புடிச்சுகிட்டு கேக்கணும் போல இருக்கு .. பொறாமை கூட வருது .. ஏதோ அந்த வீட்ல அனாதை பிள்ளை மாதிரி எனக்கு உணர்வாகுது ... எல்லாம் இருக்கு, சாப்பாடு இருக்கு வகைவகையா செஞ்சு தர அவ இருக்கா ,பிள்ளைங்க அப்பா அப்பான்னு என்ன சுத்தி வராங்க, ஆனா அவ மனசுல எனக்கான அன்பு குறைந்து கொண்டே போகுதுன்னு தோணல்.. இதுவே ஒரு கட்டத்துல எனக்கு பைத்தியம் பிடிக்க வைச்சுது....
"எப்போதும் என் பொண்டாட்டி இப்படித்தான்னா அதுவே எனக்கு ஒரு வேளை பழகி இருக்கும்.. ஆனா சீதா அப்படி கிடையாது, குழந்தைங்க வளர்ற வரைக்கும் என்னையும் ஒரு குழந்தை மாதிரி முந்தானை சேலைக்குள்ள முடிஞ்சு வச்சுக்கிட்டேதான் சுத்துவா ... அதோட அம்மா அப்பான்னு இவளை கல்யாணம் கட்டினதனால எல்லா பக்கமும் எனக்கு நெருக்கடி .... அதையும் சேர்த்து இவ அன்பால என்னை அணை போட்டு வச்சிருப்பா ... ஒருநாள் கூட எனக்கு யாரும் இல்லேன்னு யோசிச்சது இல்ல.. எனக்கு சீதா இருக்கா பிள்ளைங்க இருக்குன்னு நினைச்சு போயிடுவேன் ...ஆனா, எப்போ குழந்தைங்க வளர்ந்து அதுக்கான தேவைகளை கவனிக்கறதுக்காக , அவ அந்த பக்கம் திரும்ப ஆரம்பிச்சாளோ, அப்பத்தில் இருந்து என்ன கண்டுக்கிறதே கிடையாது , என் பிள்ளைகளுக்கு அவளைத் தவிர வேற யாரு செய்வாங்கன்னு என் புத்திக்கு தெரிஞ்சாலும் , நிறைய அன்பை அவகிட்ட வாங்கி பழகின மனசுக்கு , அது தெரிய மாட்டேங்குது சார் ... என்னோட பிரஷர் , கோபம் தாபம் எல்லாத்தையும் குறைக்கிற மந்திரம் மாத்திரை எல்லாமே என் சீதாலட்சுமிதான் ... ஆனா அவளுக்கு நான் இரண்டாவது கட்டமாக போயிட்டேன், அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல சார் என் பிள்ளைங்க தான் புரியுது , ஆனா ஏத்துக்க முடியலையே ..என்றவன் கண்ணில் மெல்லிய கோடாக கண்ணீர்... காதலுக்கு ஏங்கி நின்றான்...
இருபது வயதில் மட்டும் தான் காதலிக்க, காதலை வாங்க ஆசை வருமா என்ன ?
பெண்ணுக்கு இருபதில் காதல் இனிக்கும்
ஆணுக்கு நாற்பதில் தான் காதல் இனிக்கும் ...
அவன் நிதானிக்கும் வயதே நாற்பது தான் .. ஆனால் பெண்ணோ நாற்பது வயதில் எல்லாம் முடிஞ்சு சாமி மனநிலைக்கு போய் விடுகிறாள்.. என்பதை விட சமூகம் தள்ளி விட்டு விடுகிறது என்பதே மெய் !!
நாற்பது வயசுல பிள்ளை பெத்தாளா?
நாற்பது வயசுல உனக்கு என்ன கொஞ்சல்
பிள்ளைங்க வந்த பிறகு என்ன ஒரே பெட்டுல படுக்கிறது
பிள்ளைங்க வளர்ந்த பிறகு ஏன் ஜோடி சேர்ந்து அலையுறீங்க இது பொதுவாக கேட்கப்படும் கேள்வி ... இத்தனை கேள்விக்கு பிறகு எப்படி கணவன் அருகே ஒரு பெண்ணால் போக முடியும் ??
எப்படி பசி என்ற உணர்வு சாகும் வரை மனிதனுக்கு இயல்போ, அவ்வண்ணமே காதல் என்ற உணர்வும் மனிதன் சாகும் வரை இருக்கும்... காதலின் முடிவு கூடல்தான் .. கூடல் என்றால் உடல் மோதும் சுகம் மட்டும் இல்லை, தோல் சுருங்கிய கைகள் இணைந்து கிடப்பது கூட கூடல் தான் , கணவன் நெஞ்சில் எல்லாம் மறந்து தூங்குவது கூட கூடல் தான், பேருந்தில் தோள் சாய்ந்து பயணிப்பது கூட காதல் தான் ....
பசிக்கு உணவு போல
மனதுக்கும் அன்புத் தேவை சாகும் வரை இருக்கும்
அதை புரிந்து கொள்ள தவறுவது தான் இங்கு கொடிதிலும் கொடிது!!
குடும்பத்தை கட்டமைக்க பெண்கள் தன்னை உருக்கி தியாகம் செய்கிறார்கள் உண்மைதான்... ஆனால் கணவன் என்ற ஒரு ஜீவன் இருப்பதையே பல பெண்கள் மறந்து விடுவது தான் வேடிக்கை!!
இந்த சீதா லெட்சுமியும் அப்படியே, கணவனை மறந்து விட்டாள்.. குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்தாள்.. குடும்பத்தை தலையில் சுமந்தாள் .. ஆனால் சுமக்க வேண்டிய கணவனின் நேசத்தை மறந்து போனதின் விளைவு.. அவன் மாயையான ஒரு காதலை தேடி ஓடிவிட்டான்..
மனைவி மாயை ஆகி போனாள், அவனும் பொய்யாக காதலை தேடி கொண்டான்....