அலெக்ஸ் 7

Alex6

அலெக்ஸ் 7

7 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி !!

என்ன அக்கா காலையில இருந்து மின்னல் அறையை விட்டு வெளியே வந்த மாதிரி இல்ல ... இரவு நேர சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே நெப்போலியன் யாமினி  சத்தமே இல்லாத வீட்டை கண்ணை சுழற்றி பார்த்தான்...  

அக்கா நீ எதுக்கு வயக்காட்டுக்கு வேலைக்கு போற நான் இருக்கேன்ல நான் பாத்துக்குறேன் என்று  விடலை  வயதிலேயே அக்காவை உட்கார வைத்து காட்டில் வேலை செய்து உழைக்க ஆரம்பித்து விட்டான் ... அவனுக்கு ஸ்ரீதேவி தாயாக இருந்த நாட்களுக்கும் சேர்த்து , அவன் தான் ஸ்ரீதேவிக்கு தகப்பனாக இன்று வரை இருக்கிறான்

விளை  நிலங்களை வாங்கி போட்டு அதை நிர்வகித்து குத்தகைக்கு விடுவது விவசாயம் விளைச்சல் பால் மாடு என்று அமோக வருமானம் தான்...  இரண்டு பேரும் வீணாக செலவு செய்வது இல்லை எப்போதாவது சிறிது குடித்துவிட்டு வருவான் அதற்கும் அக்காவிடம் வாங்கி கட்டிக்கொண்டு வழிந்து வைப்பான்...  காலை போனால் இரவு வரை வேலை இருக்கும் மாடு போல உழைப்பான்,  அரக்கன் போல சாப்பிடுவான் குறட்டை விட்டு தூங்குவான் இவ்வளவு தான் அவன்.. 

மனைவி தங்க தட்டில் வளர்ந்தவள் அவள் செயல் பிடிக்கவில்லை என்றாலும் கணவனாக குறை வைக்க நினைக்காது உடனே ஏசி மாட்ட ஆளை  அனுப்பி வைத்தான் ...  இதெல்லாம் அவள் கண்ணுக்கு தெரியாதே 

"என்ன அக்கா உன் மக எங்க ??

"யாருக்கு தெரியும் அந்த அறையை வி்ட்டு வெளிய எங்க வர்றா வந்தாலும் நடு ராத்திரி பேய் போல ஊரை சோவாரிட்டு காலையில முழுக்க தூங்குறா ஒரு பழக்கம் நல்ல பழக்கம் இல்லை உள்ள தூங்குவா போல புலம்பி கொண்டே தம்பிக்கு குழம்பை ஊற்றினாள்.. 

யாமினி அறையில் இருந்து எப்போதும் வரும் பாட்டு சத்தம் இல்லை யாரையாவது ஆங்கிலத்தில் ஃபோனில் திட்டும் சத்தம் கேட்கும் , இன்று குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு வீடு நிசப்தமாக இருந்தது ..

எங்க வீடா இப்படி எல்லாம் மாறிடுச்சு என்பது போல் அவள் வந்த பிறகு வீடே தலைகீழாக மாறிவிட்டது...  எதுக்குடா வீட்டுக்கு போறோம் , அந்த பேய் இருக்கும் என்று இவன்தான் பதறும் அளவு அவள் நடத்தை இருக்கும் 

ஏண்டா நீயா என் பொண்ண பார்த்து பயப்படுற என்று ஸ்ரீதேவி கூட தன் தம்பியின் பயத்தை பார்த்து சிரிக்க 

"அக்கா சிங்கமா இருந்தா சிங்கத்தோட சிங்கமா போட்டி போட்டு பார்த்துடலாம்,  உன் மகன் பன்னிக்குட்டி பன்னிக்குட்டி கூட சண்டை போட்டா நாமளும் அசிங்கமாயிடுவோம்ல

போடா,  தாய் வளர்ப்புல வளர்ந்து இருந்தா , அவளும் மத்த பொண்ணு போல சமத்தா வந்திருப்பா..  என்ன செய்ய எல்லாம் என் தப்பு..

" உன் தப்பு என்ன இருக்கு அவர் கொண்டு போய் என் பொண்ண நான் தான் வளர்ப்பேன்னு தூக்கி வச்சுக்கிட்டா,  நீ என்ன செய்ய முடியும்.. என்ன அவ சத்தமே இல்ல ..

"அதுதாண்டா நானும் பார்க்கிறேன்..  ஏதாவது  ஆர்டர் போடுவா கொண்டு வந்து கொடுக்கிறதுக்கு ஆட்கள் வரும்...  இன்னைக்கி அத வாங்குறதுக்கு கூட அவ வரல , நான்தான் வாங்கி அந்த டிவி பக்கத்துல வச்சிருக்கேன் "இந்த வீட்டிலிருந்து ஒரு பொருளையும் எடுக்க மாட்டாள்..  எல்லாம் ஆன்லைன் டெலிவரி தான்,  வீடு தேடி வந்துவிடும் அவள் வந்து வாங்கிவிட்டு அறைக்குள் போய்விடுவார்

திடீரென்று ரோமியோ ஓடிவந்து குரைத்துக் கொண்ட  நெப்போலியன் காலை சுரண்ட 

ப்ச் என்னடா உனக்கு வெளிய சாப்பாடு வச்சேன்ல போய் சாப்பிடு , சாப்பிட்டு வரேன் வயக்காடு வரைக்கும் போயிட்டு வந்துடலாம்...  அதுவோ மீண்டும் மீண்டும் குரைக்க சாப்பாட்டில் கை வைத்து இருந்த நெப்போலியன் சலித்தபடி

என்னடா ?? வேட்டியை பிடித்து இழுத்தது...  ஏதோ அவசரம் என உணர்ந்த நெப்போலியன் கையை கழுவி விட்டு நாயின் பின்னால் நடக்க ஆரம்பிக்க..  வீட்டிற்கு பின்னே இருந்த ஆற்றங்கரைக்கு இழுத்துக் கொண்டு போனது..

இங்க யாருடா இருக்கா? ஏதும் திருட்டு பசங்களா இருப்பாங்களோ பார்த்துட்டானோ என்று அந்த இருட்டில் கண்ணை அலையவிட்டு பார்க்க..

யாமினி சுயநினைவு இல்லாது ஆற்றங்கரையில் நுரை வாயில் கொட்டி கிடந்தாள்,  அவள் அருகே நாய்க்குட்டியும் அதே ஜாடையில் கிடந்தது...

இவர்கள் பின்னே வந்த ஸ்ரீதேவி பதறிப்போய்

"யாமிபாப்பா என்று கத்திக்கொண்டு வந்து மகளை பார்க்க...யாமனி  கரண்டை காலில் பாம்பு கடித்த தடம் இருந்தது...

இருவரையும் ஏதோ பாம்பு தீண்டி விட்டுப் போய் இருக்கிறது என்று உடனே அறிந்து கொண்ட நெப்போலியன்..

"அக்கா பாம்பு கடிச்சிருக்கும்னு நினைக்கிறேன் பாரு இங்க பாம்பு  தடம் கடக்குது" என்று மணலில் பாம்பு தடத்தை காட்ட 

"அய்யய்யோ தெய்வமே!! என்,புள்ளை போச்சு  புள்ளையை காவு வாங்குவதற்காகவா இங்க கூட்டிட்டு வந்தேன் கடவுளே" என்று நெஞ்சில் அடித்து ஸ்ரீதேவி அழ

"அக்கா விஷ பாம்பா இருக்காது தண்ணி பாம்பு ஏதாவது இருக்கும் ரொம்ப நேரம் ஆனதனால மயங்கி இருப்பா வைத்தியரை வர சொல்றேன் என்னன்னு  பார்த்து சொல்லட்டும் அதுக்கு பிறகு பெரிய ஆஸ்பத்திரி கூட்டிட்டு போவோம்..

ம்ம் 

இவ எதுக்கு இங்க இந்த நேரத்துல வந்து நின்னா எதையும் கேட்கக் கூடாதுன்னு திமிர்லேயே சுத்துவா போல இருக்கு என்று யாமினியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு..

யக்கா எழும்பி என் நாய்க்குட்டிய கொன்னுட்டான்னு நம்மள சொல்லுவா,  அதையும் தூக்கிக்க அதுக்கும் மாத்து மருந்து சேர்த்து கொடுத்துடுவோம்" என்றதும் ஸ்ரீதேவி ஜூலியட்டை தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்

"ஆமா தம்பி  விஷம் கம்மியா இருக்கிற பாம்பு தான் கடிச்சு இருக்கு ,  ரொம்ப நேரம் ஆனதனால தலைக்கு விஷம் ஏறி மயங்கிட்டாங்க போலிருக்கு 

"உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே

"ஆபத்துன்னு இல்ல ஆனா கவனமா பாத்துக்கோங்க..

"சரி வைத்தியரே 

"குறிப்பாக வீட்டு சாப்பாடு கொடுங்க  எப்பவும் தூங்க விடாதீங்க தலையை சாய்வா வச்சி உட்கார வைங்க நாளைக்கு ஒரு நேரம் வந்து பார்த்துக்கிறேன்.."

"ம்ம் 

"அந்த குட்டிக்கு எப்படி இருக்கு ? 

"பயம் இல்ல , பால் மட்டும் கொடுங்க வேற உணவு வேண்டாம் ரோமியோ பாவமாக ஜூலியை சுற்றி சுற்றி வர 

"பார்த்தியா உன் ஆளுக்கு பால் மட்டும் தான் கொடுக்கணுமா என்றதும் தன் பால் தட்டை இழுத்து கொண்டு ஓடி வந்து முன்னால் போட்டது 

"என்னடா?

"வவ்வவ்

"ஓஓஓ உனக்கு ஊத்துற பாலை உன் ஆளுக்கு தாரை வார்த்து கொடுக்கிறியா 

உர்உர் என்று ஆமோதிக்க ...

"அதெல்லாம் பார்த்துக்கலாம் ஒன்னும் ஆகாது சரியா உன் ஆளை கடிச்ச பாம்பை போய் தேடி வேட்டையாடிட்டு வா ....அது சீறி கொண்டு பின்னே ஓடியது ....

இவ எப்போ பின்ன போனான்னு கூட நான் பார்க்கல தம்பி , அவர் வந்து கேட்டா நான் என்னத்த சொல்ல "

"ப்ச் விடுக்கா இவ நாம சொன்னா மட்டும் கேட்டு அடங்கி வீட்டுக்குள்ள இருந்திடுவா பாரு ... கெட்டதுல நல்லது ஆளு சரக்கு அடிக்கல ,இல்லை மாத்து மருந்து கூட கொடுத்திருக்க முடியாது, நல்லா பிள்ளை பெத்து எனக்கு  கட்டி வச்ச போ..முகம் தொங்கி போன ஸ்ரீதேவி... 

"உண்மையாகவே இப்பதாண்டா எனக்கு புரியுது என் பொண்ண என் கூட வச்சு பாத்துக்கணும் , அவளுக்கு இந்த அம்மா கெட்டவ கிடையாது உனக்காகத்தான் இந்த வாழ்க்கை கூட போராடிகிட்டு கிடக்கேன்..  அஞ்சு வயசுல கூட்டிட்டு போன உன்ன மறுபடியும் என் நெஞ்சுல மார்ல சுமக்கிறதுக்காகத்தான் என் உசுர புடிச்சு வச்சிருக்கேன்னு காட்டணும்..  அவளுக்கு இந்த அம்மாவோட அன்பை புரிய வைக்கணும்னுதான் வாழ்க்கையோட , உன் அப்பா கூட போராடிகிட்டு கிடக்கேன்னு தெரிய வைக்கணும்னுதான் உன்ன அவளுக்கு கல்யாணம் கட்டி வச்சேன்... 

ஆனா இப்பதான் புரியுது,  உன் வாழ்க்கையையும் கெடுத்து அவ வாழ்க்கையையும் கெடுத்துட்டேன்..  அவ உன் கூட வாழவே மாட்டா போல இருக்குடா உனக்கும் அவள புடிக்கல,  என்னோட சுயநலத்துக்காக உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் பொதச்சிட்டேன்னு எனக்கு வருத்தமா இருக்கு நெப்போலியா...  நீ வேணும்னா இவள?? என்று இழுக்க 

என்ன செய்ய சொல்ற விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் கட்டிக்க சொல்றியா?? என்ற நெப்போலியன் பேச்சில்  ஆமோதிப்பாக தலையாட்டிட 

சரி வேற பொண்ணு பாரு "என்ற தம்பியை ஸ்ரீதேவி எச்சில் விழுங்கி பார்க்க 

கிராமத்து பொண்ணா ,எனக்கு ஏத்த பொண்ணா பாரு இவளை விவகாரத்து பண்ணிட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் "

டேய் "

உண்மையத்தான் அக்கா சொல்றேன்; முப்பது வயசு ஆகி போச்சு இந்த ராங்கியை வளைச்சு வாழ்ந்து பிள்ளை குட்டி இது எல்லாம், ம்ஹூம் நடக்காத காரியம் மயக்கம் விட்டு தெளிந்து கண்ணை மூடி கொண்டு கிடந்த யாமினி உதட்டை சுளித்தாள்... 

பெருசா பேசினான் என்கிட்ட தோத்து போயிட்டான் பின்ன நான் யாரு போட்ட போட்டுல ஆளு துண்டை காணல துணியை காணலேன்னு ஓடிருச்சு என்று எகத்தாளமாக சிரித்தாள் ..

நீ பொண்ண பாரு நான் அடுத்த முகூர்த்தத்திலேயே தாலியை கட்டி புடுறேன் ஸ்ரீதேவி கண்ணில் கண்ணீர் கட்டி விட்டது 

இப்படி எல்லாம் சொன்னா நான் எப்படிக்கா உன் தம்பியா இருப்பேன் ஹான் .. 

டேய் "

அவளை இடையில விடவாக்கா இந்த கல்யாணம்.. உன் தம்பியை பத்தி உனக்கு தெரிஞ்சது இவ்வளவு தானா?"

வேற என்னடா செய்ய அவளுக்குத்தான் உன்ன புடிக்கலையே உனக்கு அவளை புடிக்கல ... சேர்ந்துதான் வாழனும்னு கட்டாயப்படுத்த நான் யாரு...

புடிக்காதன்னு யாரு சொன்னா ??கண்ணை முழிக்க போன யாமினி இவன் சொன்ன ஒற்றை வார்த்தையில் மீண்டும் கண்ணை இறுக்க மூடி கொண்டாள்

அவள பிடிக்காதுன்னு யாரு  உனக்கு சொன்னது..

உன் மகளை பிடிக்குமோ இல்லையோ..  ஆனா என் பொண்டாட்டிய எனக்கு ரொம்ப பிடிக்கும்கா"

"என்னய்யா சொல்ற இவள உனக்கு புடிச்சிருக்கா

 "உன் பொண்ணா இருக்கும் போதே அவளை எனக்கு பிடிக்கும் என் பொண்டாட்டி ஆன பிறகு அவளை ரொம்ப பிடிக்கும்க்கா ...

"உனக்கு தான் அடங்கவே மாட்டேங்கிறாளே

 "பொண்ணுன்னா அடங்கித்தான் இருக்கணும்னு ஏதாவது சட்டமா என்ன,  அடக்கம் ஒடுக்கமா ஆயிரம் பொண்ண இந்த கிராமத்துல , இந்த ஊர்ல நம்ம பார்த்திருக்கோம்..  ஆனா இவ லட்சத்துல ஒருத்திக்கா,  அதுதான் அவளுக்கு அழகு!! அவ அப்படியே  இருந்துட்டு போகட்டுமே, 

ப்ச் ,  நீ சும்மா அக்காவுக்காக சொல்ற .. யாருக்குடா இப்படி ஒரு பொண்டாட்டி வந்தா புடிக்கும் ... அதுவும் குடிச்சுட்டு வரைமுறை இல்லாம பேசுற திமிரு,  யாரையும் மதிக்க மாட்டேங்கிறா,  பொண்ணு மாதிரியா நடந்துக்குறா"

"இப்ப சொன்ன பாத்தியா பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு ஒரு கோட்பாடு .. இவ அதுக்கு எலலாம் விதிவிலக்கு..  அதுதான் நமக்கு எல்லாம் வித்தியாசமா தெரியுறா,  அந்த வித்தியாசம்தான், அவ அழகு..  அத நாம ஏத்துக்கிட்டா அவ அழகா தெரிவா என்ற தம்பியின் நிதானமான பக்குவ பேச்சில்  ஸ்ரீதேவி மெய்சிலிர்த்து போனார்...

நான் எத்தனை நாள் குடிச்சிட்டு வந்து இருக்கேன் .. நீ என்ன செஞ்சிருக்க ?"

என்ன செய்ய வெளங்காம போற நாயே எதுக்குடா இப்படி கண்ணுமுன்னு தெரியாம குடிச்சிட்டு வந்து இருக்கேன்னு ரெண்டு திட்ட போட்டுட்டு கதவை திறந்து விட்டு இருக்கேன்.."

ம்ம்  அதையே உன் பொண்ணு செய்றா,  இப்ப உனக்கு என்ன தோணும்...

பொம்பளையா இவ குடிச்சிட்டு கிடக்கிறான்னு  கோவம் வரும் .."

"ஹாஹா , ரெண்டு பேர் செஞ்சதும் ஒரே செயல் தான் ... ஆனா என்ன ஏத்துக்க முடியுது, அவளை ஏத்துக்க முடியல ஏன்?

நீ ஆம்பளடா "

"ஓஓஓ அப்போ நான் குடிச்சா  தப்பு இல்ல,  லேட்டா வந்தா தப்பு இல்ல...

"அது 

"ம்ம் இது தான் பிரச்சனை, அவ பொண்ணு இதத்தான் செய்யணும் இதை செய்யக்கூடாதுனுட்டு நாமளா ஒரு கட்டுப்பாடு விதிச்சு வச்சுட்டோம்....  குடிங்கிறது யார் செஞ்சாலும் தப்புதானக்கா 

ம்ம்"

"அதுல ஆம்பள செஞ்சா சரி, பொம்பள செஞ்சா தப்புன்னு என்ன இருக்கு ... ஆம்பள குடிக்க கூடாதுன்னா பொம்பளையும் குடிக்க கூடாது ஆம்பளை எட்டு மணிக்கு வீட்டுக்குள்ள வரணும்னா பொம்பளையும் எட்டு மணிக்கு வீட்டுக்குள்ள வரணும் .. ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டம் கோட்பாடு எல்லாம் ஒன்னு தானே..

'அது சரி தான்டா அதுக்காக கல்யாணம் முடிஞ்ச பொண்ணு வாழ வேண்டியவ,  புருஷன் கிட்ட மல்லு கட்டிகிட்டே இருந்தா,  எப்படி வாழ சொல்லு?..

கஷ்டம்தான்க்கா,  ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முதல்ல அவ பண்றது எல்லாம் பார்க்கும்போது எனக்கு கோபம்தான் , நாலு அப்பு அப்பிட்டு போக தான் செய்வேன்... ஆனா , அதுக்கு பிறகு போய் யோசிச்சு என்ன அவ மேல தப்பு இல்லன்னு தோணும்கா...  தகப்பனோட செல்லத்துல வளர்ந்த பொண்ணு,  தாயோட நிழலே படாம வளர்ந்த பொண்ணு , அவளுக்கு யாரு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்திருப்பான்னு நினைக்கிற

ம்ம்

"அவளை சுத்தி பணம்,  வேலைக்காரங்க அத்தனை பேரும் இருந்து இருப்பாங்க..  ஆனா பாசத்தை கொடுக்க அவளுக்கு அவ தகப்பன தவிர யாருமே இல்லையே அக்கா ...அவர் பாசத்தை மட்டும் தான் கொடுத்தார் எப்படி இருக்கணும்னு சொல்லியே கொடுக்கலையே...

வாஸ்தவம்தான்"

"நீ ஏங்கின மாதிரி அவ எத்தனை நாள் தாய்க்கு ஏங்கி இருப்பா சொல்லு , சடங்காகி இருக்கான்னு போனோமே அவ உன்ன அடிச்சு விரட்டுனா பாரு என்ன தொட கூட விடாம விரட்டினா பாரு அதுல அவ கோவம் தான் எல்லாருக்கும் தெரிஞ்சது..  ஆனா இந்ந சூழ்நிலையில தகப்பன் கிட்ட இருந்த பிள்ளை எப்படி பரிதவிச்சு நின்னு இருக்கும்...

"ஆனா நான் எதுவும் செய்யலயேடா 

"அது அவளுக்கு தெரியாதேக்கா 

"பெண்ணுக்கான வலியை கூட சொல்ல ஒரு தாய் இல்லை , என்ன செய்யணும்னு கேட்க சுருண்டு படுத்துக்க தனக்கு தாய் இல்லன்னு எங்கேயோ காயப்பட்டு கிடக்கிறாக்கா உன் புள்ள....

ம்ம்"

"அந்த காயம் எல்லாரையும் காயப்படுத்துது. நாம அவ செய்றது மட்டும்தான் பார்க்கிறோம்...  ஆனா அவளோட காயத்துக்கு நாம யாரும் மருந்து போட நினைக்கல ... அவ காயத்துக்கு மருந்து போட்டா உன் பொண்ணு மாதிரி சொக்கத்தங்கம் இந்த உலகத்துல வேற எவளும் கிடையாது ... மறைச்சு  ஒளிச்சு  தப்பு பண்ற பொண்ணுங்க மத்தியில... நான் இப்படித்தான்டா செய்வேன்னு மல்லு கட்டி நிக்கிறா பாரு இப்படி ஒரு குணம்தான் அபூர்வம்க்கா..

இவ்வளவு புரிஞ்சுருக்கியாடா  உன் பொண்டாட்டியை  பத்தி...

அவள பத்தி அத்தனையும் புரிஞ்சு வச்சிருக்கேன் ஆனா இதுல எடர்வாடு என்ன தெரியுமா? 

ஒருத்தர பத்தி புரிஞ்சுக்கிறத விட , நாம யாருன்னு அவங்களுக்கு புரிய வைக்கிறதுக்கு படுறோம் பாடு பாடு அதுதான் பெரிய கஷ்டம்...  உன் மக யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு .. ஆனா இந்த நெப்போலியன் யார் என்ன அவளுக்கு கொஞ்சமாவது புரிய வச்சிடலாம்னு நினைக்கிறேன் ..ஆனா,  அத்த வரைக்கும் முடியல...  முடியுமான்னு கூட எனக்கு தெரியல போ... அவ புரிஞ்சா தானே எங்கேயாவது வாழ்க்கையை தொடங்க,  அவ புரிஞ்சுக்க போற மாதிரியும் இல்ல நாங்க வாழ்க்கையை தொடங்குற மாதிரியும் இல்லை 

என்னடா இப்படி அபச குணமா பேசிக்கிட்டு,  அதெல்லாம் நீ என் பொண்ண வழிக்கு கொண்டு வந்துருவேன்னு இப்போ முழுமையா நம்பிக்கை வந்துடுச்சு,  எங்க அவளை  புடிக்காம இடையிலேயே விட்டுட்டு போயிடுவியோன்னு  உண்மையா எனக்கு கொஞ்சம் பயமா தான்டா இருந்துச்சு...  என்னதான் மகனு ஒரு பக்கம் இருந்தாலும்,  தம்பி வாழ்க்கையும் இதுல இருக்கேன்னு , ரெண்டு பேர் வாழ்க்கையை நினைச்சு மதில் மேல பூனை மாதிரி இருந்தேன் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்குடா

பின்ன ,  அவ கழுத்துல தாலி கட்டும்போது இந்த தாலிய இடையில கழட்டனும்னு நான் யோசிக்கவே இல்ல அக்கா....  இவதான் காலம் முழுக்க என் பொண்டாட்டி , கட்டையும் நெட்டையோ அவளை அனுசரிச்சு என்ன அனுசரிக்க வச்சு , அவ கூட வாழ்ந்தே தீரணும்.. . காலம் முழுக்க இவ நெப்போலியன் பொண்டாட்டியாதான் இருக்கணும்ங்கிற தீர்க்கமான முடிவு எடுத்துட்டு தான் இந்த தாலியை எடுத்து அவ கழுத்துல கட்டினேன்...  என் உசுரு போகுமே தவிர இந்த நெப்போலியன் பொண்டாட்டி கழுத்துல இருந்து நான் சாகுற வரை  தாலி இறங்காது...  இறங்கவும் விடமாட்டேன் .. இவ தான் என் பொண்டாட்டி.. அவ எப்படி இருந்தாலும் கடைசி வரைக்கும் நேசிக்க பழகிக்கிட்டே இருக்கேன்... 

எனக்காக சொல்லலையே நெப்போலியா , எனக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்"

"சந்தோஷமா இருப்போம்கா ..ஆனா ,  கொஞ்சம் அவகாசம் அவளுக்கு கொடு , அவ நம்ம பக்கத்துல வர பயப்படுறா..  எங்க இந்த அன்பு அவளை கண்ணீர் வடிக்க வச்சுடுமோன்னு  பயப்படுறா..நம்ம முன்ன  கண்ணீரே வடிக்கக்கூடாதுன்னு ஒரு வைராக்கியத்தில இருக்கா , அந்த கண்ணீரை நம்ம முன்னாடி காட்ட பயப்படுறா..  இந்த அன்பு அவளை தலைகீழா மாத்திடுமோன்னு பயப்படுறா..  அதனாலதான் நம்மள பாக்க வெறுக்கிறா..  கோபத்தை காட்டுறா.. நாம அவளை காயப்படுத்தினா,  அவளும் பதிலுக்கு பதில் காயப்படுத்தி விட்டு இந்த இடத்தை விட்டு ஓடிறணும்னு பார்க்கா..  பாக்கலாம் எவ்வளவு தூரம் தான் உன் பொண்ணு போறான்னு... 

அவள் ஒரு சொட்டு  கண்ணீர் தன் வாழ்க்கைக்காக வடித்து விட்டால் என்றாலே காதல் ஜெயித்து விடும் ..  

ஆனா அதற்குள்  எத்தனை உசுர் போக போகுதோ அதானே!!