தெருளோ மருளோ காதல் 5

Theru5

தெருளோ மருளோ காதல் 5

5 தெருளோ மருளோ காதல்??  

என்ன தாய் அன்பு என்ன தகப்பன் பாசம்? என்ன சிநேகிதன் கொடுக்கும் தோள் அணைப்பு? அவன் ஒருத்தன் அத்தனைக்கும் ஈடு கொடுத்தானே .... 

பத்து நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்கட்டும் நாயகம் , வேற யாரையாவது அவங்களுக்கு துணைக்கு வச்சிட்டு நீஙக வேணும்னா போயிட்டு காலையில வாங்களேன் என்றதும் ரதி பயந்து நாயகத்தை பார்க்கும் முன் , 

"ஆள் அண்ட மாட்டா, நான்னா பயம் இல்லாம கிடப்பா , எனக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலை நானே பார்த்துகிடுதேன் இவளை இங்கன விட்டுட்டு போனா எனக்கு மனசு கிடந்து அடிச்சிக்கும் இவ நினைப்பாவே கிடந்து துடிக்கும் இங்கனையே இருக்கேன்... "

இல்லை பொண்ணுன்னா என்று அவர் இழுக்க 

"அவ பிறந்த நாள்ல இருந்து குளிச்சு ,உடுப்பு போட்டு விட்டது நான்தேன், எனக்கு என்ன சங்கடம் வர போவுது, ஏன்ட்டி உனக்கு மாமா செய்றதுல எதுவும் சங்கடமாக இருக்காட்டி" என்று நாயகம் ரதிதேவியை திரும்பி பார்க்க 

வேறு யார் அவளுக்கு துணை வைத்திருந்தாலும் சங்கடமாகத்தான் நெளிந்து இருப்பாள் நாயகம் என்றதும் அடுத்த செகண்ட் 

"ம்ஹூம் என்று தலையாட்ட...

"பின்ன என்ன அவளுக்கு பிள்ளை பிறந்தாலும் நான்தான் பார்க்கணும் அவளுக்கு தாயா தகப்பனா நான்தானே செய்யணும் என்று விட்டவன் நேசித்தில் எப்போதும் கர்வம் கொண்டாள் ரதிதேவி!! 

அவள் தலைமுடி கோதி பின்னல் இட்டு முகம் கழுவி அவள் பொட்டு இல்லாத நெற்றியில் போட்டு வைத்து , சாப்பாடு அள்ளி கொடுத்து, ரதி மருத்துவமனை படுக்கை மீது பஞ்சணை மீது தூங்க ,அவள் காலடியில் தரையில் போர்வையை விரித்து கட்டையை சாய்த்து கோழி தூக்கம் போடும் அவன் கண்ணை மூடும் வரை காத்திருந்து, அவன் கண் மூடியதும் கண்ணை திறந்து வெள்ளை பனியன் லுங்கியில் தூங்கும் நாயகம் அருகே வலித்த காலை தரையில் ஊன்றி வலியை பல்லில் கடித்து அடக்கி , சத்தம் இல்லாது ரதிதேவி தூங்கும் பெரிய நாயகம் அருகே வந்து அமர்ந்தாள்.... அவன் சுருங்கும் புருவம் தூக்கத்தில் கூட சுருங்கி இருந்தது....

கொர் கொர் குட்டி குறட்டை வந்தது , சங்கம் அமைத்து கவி பாடினாலும் பாட்டில் இசைக்க முடியாத கானம் தான் அஃது.. அசதியில் கூட மீசை கம்பீரம் குறையாத அழகில் சேர சோழ பாண்டிய மன்னனும் தோற்று போவானோ? அவளுக்காக ஓடி ஓடி ஓய்ந்த பாதம் மீது முகத்தை புதைத்து முதல் முத்தம் கொடுத்தாள்... 

இதழில் கொடுத்திருந்தால் காதலாகி இருக்கும் 

நெற்றியில் கொடுத்திருந்தால் நேசம் ஆகி இருக்கும் 

சுகம் தரும் இடத்தில் கொடுத்திருந்தால் காமம் ஆகி இருக்கும்

அவன் பாதம் பிடித்து கொடுத்த முத்தத்தில் முத்தம் புனிதம் ஆனதுவே!! 

"மாமாஆஆஆஆ இந்த நேசம் ஒரு நாள் காதலாகும், என் ரதி என் மனைவி என் துணைன்னு ஒரு நாள் என் எலும்பு உடைய கட்டி அணைச்சு , இந்த ஊர் மத்தியில சொல்வுல ... என் காதல் சொல்ல வச்சிடும், எனக்கு நம்பிக்கை இருக்கு... ஆனா எந்த சூழ்நிலையிலும் என்ன ம‌ட்டு‌ம் பொட்டளவு வெறுத்துடாதீங்க ஏன்னா அதுதான் எனக்கு மரண தண்டனை ... எனக்காக நீங்க வாழ்றீங்க, உங்களோட வாழ ஆசைப்பட்டே நான் வாழ்ந்துட்டு இருக்கேன் ... யார் என்ன சொன்னாலும் என் காதல் இஞ்ச் அசையாது நேசிச்ச என்ன காதலிக்கிறது ஈசிதான் மாமா .... சீக்கிரம் உங்க மனசு மாறும் என்று மீண்டும் அவன் பாதம் மீது அவள் பட்டு இதழ் குவித்து முத்தம் வைக்க நித்திரையில் இருந்த நாயகம் சட்டென கண்களை திறக்க ரதிதேவி பட்டென்று முகத்தை நகட்டி விட ... தன் காலடியில் பூனை போல சுருண்டு கிடந்த ரதிதேவியை கண்டு பதறி போன நாயகன் 

"யேத்தா என்னாச்சு, கால் மாட்டுல உட்கார்ந்து இருக்க கால் வலிக்குதாத்தா.... என்ன சொல்வது என்று தெரியாது ரதி திருதிருக்க 

"ஏட்டி உன்றகிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் கோழி முழி என்னதுக்கு முழிச்சிட்டு இருக்க ,இதுக்கு போகணுமா ??"என்று ஒற்றை விரலை அவன் நீட்டி காட்டிட

ம்ம் "சும்மா இவள் தலையாட்ட 

"அதுக்கு என்ன எழுப்பி விட்டிருக்க வேண்டியதுதான, கால்மாட்டுல உட்கார்ந்து சொரிஞ்சுட்டு கிடக்க" என்று உடலை சோம்பல் முறித்து கொண்டே நாயகம் எழும்பியவன் குனிந்து ரதிதேவியை பூவாக கையில் தூக்கி கொள்ள அவன் முரட்டு கையில் காமம் பூக்கவில்லை காதல் பூத்து காயாகி கனியாகி கசிந்தது.... 

இங்கனத்தேன் நிக்கிறேன் ஆவ்ஊஊஊஊஊ சத்தம் கொடு "கொட்டாவி விட்டு கொண்டே கதவு அருகே நாயகம் நின்று கொள்ள  

என் சமத்தா!! என் ஆசை அரசா!! என் காதல் புருசா!! என் மீசை மாமா உனக்கு நிகர் நீதான்யா என்று பறக்கும் முத்தம் கொடுத்தாள்....

என்னட்டி உள்ளார தூங்கிபுட்டியா என்ன ? 

"இல்ல மாமா முடிஞ்சு ...

"ம்ம் வரவா 

"வாங்க மாமா" மீண்டும் அவளை தூக்கி கொண்டு வந்து கட்டில் மீது படுக்க வைத்தவன் உருண்டு கொண்டே கிடந்த அவள் கால்மாட்டில் வந்து படுக்கை மீது அமர்ந்து அவள் காயப்பட்ட காலை தொட 

"மாமா" வெடுக்கென்று அவள் காலை நகட்ட போக 

"கால் வலிக்குது போல அதான் தூங்காம உருண்டுட்டு கிடக்க கொண்டா, மாமா தடவி விடுறேன்,நீ கண்ணை மூடி தூங்கு "

"இல்லைங்க மாமா 

"ப்ச் மூச் கண்ணை மூடி தூங்கு, ஏசக்கு பிசக்கா பேசின வாய் மேல போட்டு புடுவேன் ...படிக்க பள்ளிக்கூடம் போனியா, பன்னி மேய்க்க போனியாட்டி "என்று நாயகம் அவள் காலை தடவி கொண்டே திட்ட இவளுக்கு அவன் திட்டினாலும் பிடிக்கும் கொஞ்சினாலும் பிடிக்கும் என்ன செய்தாலும் பிடிக்குமே ...

படிக்கத் தான் போனேன் மாமா 

"படிக்க போன மாதிரி தெரில , கழுதை மேய்ச்சியோ பன்னியை மேய்ச்சியோ... படிச்ச நாய்க்கு ரோடு பார்த்து கடக்கணும்னு தெரியாதாட்டி ,அப்படியே வந்து வண்டி மேல விழுற 

"இல்ல மாமா நீங்க நின்னீங்களா உங்கள பார்த்துட்டே வந்தேனா 

"பிடிறிக்குள்ளதேன் மூளை வச்சிருப்ப போல என்னத்த சொல்ல நல்லவேளை லேசு அடி ,இல்லை நினைச்சு பார்க்கவே பதறுது ஏட்டி இப்போ வலி பரவாயில்லையா... அவள் காலை தடவி கொண்டே நாயகம் ரதிதேவியை எட்டி பார்க்க .... 

ம்ம் ம்ம் கொட்டி கொண்டே அவன் வலிதத காலை தடவியதில் சுகமாக தூங்கி கொண்டு இருந்தாள் ரதி 

"பாவத்த, தாய் முகம் பார்த்தது இல்லை, தந்தை உருப்படி இல்லை என்ன நம்பி என்ற காலை சுத்தி வர்ற பூனைக்குட்டி போல கிடந்தா, யார் கண்ணு பட்டிச்சோ , கால் ரணப்பட்டு கிடக்கே" அவள் தூங்க இவன் இரவெல்லாம் நாயகம் தூங்காது அவள் காலை தடவி விட்டு கொண்டு இருந்தான்... 

ரதிதேவி கால்கள் அடிப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வீட்டிற்கு வந்து ரெண்டு மாதம் கடந்து விட்டது ..நாயகம் அவள் உடல்நிலை கருத்தில் கொண்டு பக்கத்தில் உள்ள காலேஜில் ரதிதேவியை சேர்த்து விட்டான்.. முதலில் அதற்கும் முகத்தை சுளித்தவள் காலேஜ் நாயகம் மரக்கடைக்கு அருகே இருக்கிறது என்றதும் டபுள் ஓகே ..  

உடல் தேறும் வரை வீட்டில் இருக்க நாயகன் அனுமதி கிடைத்திருக்க.. இவள் தின்னு கொழுத்து அவன் அறியாது அவனை பார்வையில் களவாடி ஏப்பம் விட்டு கொண்டிருக்கிறாள் .... வெள்ளை உள் பனியனில் கிணற்றில் தண்ணீர் இறைத்து வாளியில் ஊற்றி கொண்டு நின்ற பெரிய நாயகத்தை தன் மேல் அறையில் இருந்து ரதிதேவி கண்ணை சிமிட்டாது பார்த்து கொண்டு நின்றாள் .. 

காதல் பைத்தியம் முத்திப்போய் சுற்ற ஆரம்பித்து விட்டாள்... 

"புது சிம் போட்டு லவ் டிராக் ஓட்டலாம்னு பார்த்தா போன்ல மீசை குரலை கேட்டாலே, கண்ட்ரோல் இல்லாம கை கால் ஆடுதே... புது சிம் வாங்கி வச்சு இத்தனை நாள் ஆகுது., பேசலாம்னு பார்த்தா தொண்டைக்கு வெளியில வார்த்தையே வரமாட்டேங்குது.. ரெண்டு மூன்று முறை போன் போட்டு குரலை மாத்தி பேச ட்ரை பண்ணிட, காத்துதான் வந்துச்சு இவ பேசும் முன்னே அவன் வண்டை வண்டையாக திட்டி விடுவான் 

"போனை போட்டு வச்சி விளையாட்டு காட்டுறியா எவம்னு கண்டுபிடிச்சேன்,பல்லு பகடை எல்லாம் பெயர்ந்து போகும் பார்த்துக்க என்று கண்டமேனிக்கு திட்டு விழ... இவள் போனை வைத்து விடுவாள் 

"ப்ச் இப்படி பயந்தா எப்படி லவ் பண்ண , இந்த லட்சணத்துல நான் இவரை கல்யாணம் கட்டி இவரை போல ஒம்போது புள்ள பெத்து போட போறேன்னு சவால் வேற விட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்கேன்.... என்ன அம்சமா இருக்கார்.." கன்னத்தில் கை வைத்து திண்டில் சாய்ந்து நின்று வியர்க்க வியர்க்க நீரை எடுத்து பக்கெட்டில் ஊற்றி அவள் குளிப்பதற்கும் சேர்த்து நீரை ஊற்றிக் கொண்டிருந்த அவனை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் காதலிக்க தான் தோன்றியது...

ஒரு பெண்ணின் அதிகபட்ச ஆசை தன் கணவன் தன் தகப்பனைப் போல நேசிக்க வேண்டும் என்பதுதான்... இவளுக்கு தகப்பன் நேசம் எல்லாம் தெரியாது... தன் கணவன் தன் மாமனை போல இருக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசை எழும்பியது, அந்த ஆசை ஒவ்வொரு நாளும் பெருகிப் பெருகி ஏன் அந்த கணவன் என் மாமனாகவே இருக்கக்கூடாது, எதற்கு கையில் நெய்யை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேட வேண்டும் என்னை வளர்த்த ஆளாக்குவது அவன் கடமை என்றால், அவனுக்காகவே வாழ விரும்புவது என் காதல் கடமை என்று அவனை சுற்றுவதையே அவளின் கொள்கையாக மாற்றி விட்டாள்....

கொள்கை எல்லாம் நல்லாத்தான் இருக்கு உன்ற மாமன் காதுக்கு உன் கொள்கை போகணும் அப்போ இருக்குடியோ உனக்கு , மூளை புடைப்பா இருந்தா தானே யோசிப்பன்னு கையை விட்டே குடைஞ்சு எடுக்க போறான் .., 

அது என்னவோ காதல் பஞ்சம் உள்ள இடத்திலேயே காதலுக்கு பிச்சை எடுப்பதே பெண்களின் கதியாகி போனது !!