தினம் தினம் 8

Thinam8

தினம் தினம் 8

8 தினம் தினம் !!

என்னங்க இப்பவே வந்துட்டீங்க , மதியத்துக்கு மேல தான் வருவேன்னு சொன்னீங்க...

 நான் எப்ப வருவன்னு காத்துக்கிட்டு இருந்த மாதிரி இருக்கு ... உடனே வந்துட்ட... ஆமா பிரின்ஸ்பல் ரூமில இருந்து வந்த மாதிரி இருந்தது கிளாசுக்கு போகலையா அஞ்சு ... அஞ்சலி கொஞ்சம் ஜெர்க்காகினாள்.. உண்மையை சொல்லுவோமா வேண்டாமா என்று

தப்பு செஞ்சவனை விட்டுட்டு, அவலம் யாருக்கு நடந்ததோ அவளை தூக்கி ஒளிச்சு வச்சா, இனிமே தப்பே நடக்காதுன்னு நினைச்சு நம்மள தூக்கி வீட்ல அடைச்சு போட்டுட்டா , கொஞ்ச நேரம் சுதந்திரமாக விடுற மூச்சும் விட முடியாம போயிட்டா என்ன பண்றது .... இவனுக்கு இன்னைக்கு கொடுத்திருக்கிற கொடையில இனிமே சொட்டை தலையன் வாயைத் திறக்க மாட்டான் அப்படி ஏதாவது வாயைத் திறக்க நினைச்சா நம்ம வீட்டு கிட்ட கூட்டிட்டு போயி மிரட்டிற வேண்டியதுதான் யோசித்தவள் ..

காலையில பஸ்ட் பீரியட் இன்னைக்கு எனக்கு லெசர் அது ஹெச்எம்முக்கு பொறுக்கல ரிஜிஸ்டர் சரி பண்ண வர சொல்லிட்டான்.... 

பெரிய மனுசனை வா போன்னு சொல்றது என்ன பழக்கம் அஞ்சு 

எய்யா சாமி எனக்கு ஒரு நல்ல பழக்கமும் இல்ல தான் , நீயே நல்லவனா இரு என்று முனங்கி கொண்டு குறுகுறுவென பார்த்தாள்..

கடைக்கு போனதும் அம்மா போன் போட்டுச்சு அஞ்சு 

எதுக்கு?

எங்கேயும் அவளை கூட்டிட்டு போறியான்னு கேட்டாங்க 

கிழவி கிராஸ் செக் பண்ணி இருக்கு , இவன் உண்மை விளம்பி போல சொல்லி இருப்பானே போச்சு அப்போ இன்னைக்கு ப்ளான் கேன்சலா என்று முகம் செத்தே போச்சு 

ஓஓஓஓஓ நீங்க என்ன சொன்னீங்க ?

முதல்ல நீ கிளம்பி வா பேசிட்டே போகலாம் ... உன்னை காலையிலேயே கடைக்கு போகணும்னு சொல்லிட்டு தானே போனேன், என்ன சேலை கட்டி இருக்க... கேவலமா இருக்கு அஞ்சு 

இல்ல வேற சேலை உள்ள வச்சிருக்கேன், 

உள்ள வச்சிருக்கியா

ம்ம், பஸ்ல வரும்போது எப்படியும் கசங்கிடும், அதான் நீங்க வரும்போது வேற கட்டிக்கலாமேன்னு உள்ள வச்சிருக்கேன் ... போய் ஸ்டாப் ரூம்ல கட்டிட்டு வரேன் .... வெயிட் பண்ணுங்க ..

ம்ம் சீக்கரம் வா .. என்ற சத்யாவுக்கு தலையை வேகமாக அசைத்து விட்டு சிறு பிள்ளை போல துள்ளி துள்ளி ஸ்டாப் ரூம் நோக்கி அஞ்சலி ஓடினாள்

அஞ்சலி அண்ணன் வாசல்ல நிக்குது பாத்தியா...

ஆமா எனக்கு தான் காத்துட்டு இருக்காரு, கடைக்கு போகணும், சேலை நல்லா இருக்கா லதா...

நல்லா இருக்கு இரு எனக்கு ஒரு பொண்ணு பூ கொண்டு வந்து கொடுத்துச்சு , அதை தர்றேன் வச்சுட்டு போ, லதா , அஞ்சு தலையில் ரோஸ் பூவை குத்தி விட்டு அழகு பார்த்தாள் ...

உன்கிட்ட நிறைய சொல்லணும் லதா.. நான் ஈவினிங் உனக்கு போன் போடுறேன்... இப்ப போயிட்டு வரேன் என்று காலில் சுடுதண்ணி ஊற்றியவள் போல அஞ்சலி குடுகுடுவென்று கணவனை நோக்கி ஓடி வந்தாள்

என்னங்க, இந்த சேலை நல்லா இருக்காங்க போனை தடவிக் கொண்டிருந்த சத்யா அவளை பார்க்காமலேயே..

ம்ம் நல்லா இருக்கு உட்காரு, 

ஒரு பார்வை பார்த்து சொன்னா ஆகாதா

சரி எந்த மோகினி பிசாசு இன்னைக்கு என் புருஷனை உரசிட்டு போச்சோ தெரியல, ஷாப்பிங் எல்லாம் கூட்டிட்டு போறதுக்கு அவனே வந்து இருக்கான் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்க கூடாது ... முடிஞ்ச வரைக்கும் அவர் சொல்றது எல்லாத்துக்கும் ஆமாம் சாமி ஆமாஞ் சாமின்னு ஆட்டு உரல் மாதிரி தலையை ஆட்டிற வேண்டியதுதான் ... பைக்கில் பின்னால் ஏறி அமர்ந்தவள் அவன் தோளில் கை வைப்போமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி மெல்ல வைக்கப் போக 

அஞ்சு கம்பில பிடிச்சுக்கோ கீழ விழுந்து கிடக்காத என்றதும் உதட்டை சுளித்துக்கொண்டு கம்பியில் பிடித்துக் கொண்டாள் பைக் மெல்ல சாலையில் ஊர்ந்தது... அழகாய் போகும் பெண்களை கண்ணாடியில் ஒரு பார்வை பார்த்து கொள்வான், அவ்வப்போது தலையை வேறு கோதி கொள்வான் ... பெண்கள் கடந்து போகும் போது ஒற்றை கையில் பைக்கை ஓட்டுவான், இது எல்லாம் உலக ஆண்கள் நோய் இதுக்கு எல்லாம் சண்டை போட்டா உலக போர் வந்திடும் .. 

என்னங்க பின்னாடி ஒருத்தி இருப்பதை அவள் நியாபகம் படுத்த 

ஹான் என்ன என்று சத்யா திரும்ப 

ப்பா இது என்ன காதல்?? சிறைச்சாலையில் பூக்கும் காதலோ, சிறை வாழ்க்கை என தெரிந்தும் ஏன் இந்த காதல் ரசனை நேசம் இது எல்லாம் தான் பெண்களை அழித்து விடும் கருவிகளோ...அவர்களை போல உதாசீனப்படுத்த தெரிந்திருந்தால் இவ்வளவு வலி இல்லையோ புரிகிறது தான் ஆனால் இதை விட்டு அகல வழி இருந்தும் மனம் ஒத்துக்கொள்வது இல்லையே ...

அவள் புருசன் பேரழகன் இல்லை , ஆனாலும் அவள் நிறைய ரசித்திருக்கிறாள் அதுவும் இப்படி எதாவது அபூர்வ சம்பவங்கள் நடக்கும் போது ரசனை கூடி காதல் ஊம்யெடுத்து அண்டா அண்டாவாக நிறைக்கும் அளவு ஆகி போகும் ... 

உங்க அம்மா போன் போட்டு என்ன கேட்டாங்க...

அதுவா கடைக்கா போறீங்கன்னு கேட்டாங்க 

 ஓஓஓ நீங்க என்ன சொன்னீங்க?

கடைக்கு தான் போறேன்னேன் , என்னையும் கொஞ்சம் கூட்டிட்டு போப்பான்னு சொன்னாங்க அவளை கடைக்கு கூட்டிட்டு போய் ரொம்ப நாள் ஆகுது ,.. நாங்க ரெண்டு பேரும் தனியா போயிட்டு வர்றோம்னு சொன்னேன்....

இவளுக்கு நடப்பது கனவா நினைவா என்று தெரியவில்லை ...

ஆஹா சைத்தான் எதுக்கு ஏரோபிளேன்ல போகுதுன்னு தெரியலையே, சாதாரணமா இவன் நமக்கு முட்டுக் கொடுக்க மாட்டானே குமரேசா, ஒரு பஜ்ஜை வாங்கி தந்துட்டு என் கழுத்துல கிடக்கிற தாலியை அறுத்துட்டு ஓடிடுவானோ ?  

எப்படி ரயில்வே ஸ்டேஷன்ல போகும்போது கள்ளர்கள் ஜாக்கிரதைன்னு நம்ம பொருளை எல்லாம் பத்திரமா பாத்துக்கிறோமோ, அதே மாதிரி இந்த புருஷன்மார் கொஞ்சம் சிரிச்சு பேசினா கவனமா இருக்கணும் சகோதரிகளே, இல்லை என்றால் கிட்னிக்கு சங்கம் பொறுப்பு ஏற்காது..

என்னடி பேசிட்டு இருக்கேன் அமைதியா இருக்க 

இல்ல அத்தையை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல பாவம் வயசானவங்க இவளும் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட ..

ப்ச் , அவங்களுக்கு தான் அறிவு இல்ல, புள்ளைங்க சந்தோஷமா போயிட்டு வரட்டுன்னு நினைக்க தோணல ... அவங்கள கூட்டிட்டு போனாலும் கால் வலிக்குது கை வலிக்குதுன்னு அங்கங்க உட்கார்ந்துக்குவாங்க

க க க போ, இதையெல்லாம் நான் சொன்னா அவங்க என்ன உன் இடுப்பிலேயா உட்கார போறாங்க கூட வந்துட்டு போறாங்கன்னு சண்டை போடுவான் இன்னைக்கு என்ன எல்லாம் குண்டக்க மண்டக்க பேசி வைக்கிறான்... எப்படியும் தாலிய அடகு வைக்க மாட்டான், கையில கிடக்கிற வளையல் அம்மன் ஜல்லிக்கு உதவாது, என்ன மேட்டரா இருக்கும்... ச்சே சே என் புருஷன ரொம்ப தப்பா நினைக்க கூடாது ... அப்பப்ப லவ் மூட் அவனுக்கும் வரும் நம்புவோம் நம்புவோமாக என்று தன் நெஞ்சில் தடவிக் கொண்டாள் ...

நீங்களும் வாங்களேன் செலக்ட் பண்ணி கொடுங்க ஏசி பார்த்து சத்யா போனோடு அமர போக 

ப்ச் நீயே எடு 

இல்லை நான் எடுத்தா உங்களுக்கு பிடிக்காதே 

எடு எடு நல்லாதான் எடுப்ப .... 

ம்ம் ... அஞ்சலி கடைக்குள் நின்றாலும் அவ்வப்போது புருசனை பார்த்து கொள்வாள் .... 

சொந்த புருசன் கூட சுத்துறதே கள்ள புருசன் கூட சுத்துற போலத்தான் இருக்கு ... எத்தனை வயசு ஆனாலும் இவனுக மேல இருக்கிற கிறுக்கு தெளியவே செய்யாது போல ...அதான் வந்து பாருன்னு நிக்கிறானுக.. 

இளம் ஜோடிகள் இடித்து கொண்டு சேலை எடுத்து கொண்டு நிற்க இவள் பெருமூச்சு விட்டபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்... சத்யா ஒன்றும் குறைந்தவன் இல்லை திருமணம் முடிந்த புதிதில் புது துடைப்பம் பரசி அடிக்கும் என்பது போல இவளை இடித்து கொண்டே தான் திரிவான்.... விளைவு நாற்பது நாளில் பிள்ளை உண்டானது தான் பரிசு ... சில மாதங்கள் தான் அவனின் கவனிப்பு அதன் பிறகு மகன் எங்கே மருமகள் பக்கம் சாய்ந்து விடுவாளோ என பயந்து மங்களம் மங்களம் பாட ஆரம்பித்து விட்டது.. 

பணத்தை பார்த்து செலவு செய்ய தெரில சத்யா நீயே வச்சி செலவு செய் ... நான் சொல்றது சொல்லிட்டேன்.. 

அவளுக்கு என்ன தெரியும் சத்யா சின்ன புள்ள அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டாத அப்பறம் உன் பாடு .. 

அடிக்கடி தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டா உனக்கு மரியாதை இருக்காது சத்யா அப்பறம் உன் இஷ்டம் .. மாமியார் டிக்ஷனரி வார்த்தைகள் இவைகள் அதையும் மூளையை பேரிச்சம் பழத்துக்கு போட்ட கோஸ்ட்டி கேட்டு தொலையும்...

எங்க அம்மாவுக்கு என்ன ஆசை நீயும் நானும் சண்டை போடணும்னு எங்க அம்மா எவ்வளவு கஷ்டபட்டு எங்கள கரை சேர்ததாங்க தெரியுமா... எங்க அம்மாவுக்கு நான்னா உயிர் தெரியுமா என்று தாய் மேல் ஆணை ரீதியில் நிற்பான் ..

போப்பா உன் அம்மாவை தூக்கி வச்சி ஆடு என்று ஒதுங்கி கொள்வது தவிர வேற வழியில்லை ... சொந்த வீட்டில் விருந்தாளி போல ஒரு வாழ்க்கை வீடு உனக்கு தான் ,ஆனா வீட்டுல உள்ள எதுவும் உனக்கு சொந்தம் இல்லை .. இது உன் புருசன் தான் ஆனா உனக்கு தர மாட்டேன் ... என்று பாகப்பிரிவினை நடத்தி பிரித்தாளும் கொள்கை நடக்கிறது ... 

அம்மாவுக்கு இந்த சேலை எடுத்தேன்ங்க பில் போடவா... 

அம்மாவுக்கா பெட்டரா எடேன், கலர் மங்களா இருக்கு 

உங்க அம்மாவுக்கு இல்லை என் அம்மாவுக்கு ஊருக்கு போறேன்ல அதான் எதாவது எடுத்துட்டு போகலாம்னு 

ப்ச் அவங்களுக்கு என்ன காசுபணமா இல்லை.. நீ எடுத்துட்டு போய்தான் நிறையணுமா அஞ்சு .... புதுப்பழக்கம் பழக்கி விடாத என்று அவன் குரல் உயர...சுற்றி இருந்தவர்கள் முன் அவமான பட முடியாது 

வேண்டாம் வேண்டாம் நான் எடுக்கல கத்திடாதீங்க.. இவன் தாய் நொந்து பெத்தா என் தாய் சிப்ஸ் தின்னுட்டு இருக்கும் போது சிரிச்சிட்டே பெத்து போட்ட மாதிரி வஞ்சனை பிடிச்சு பேசுறானே ச்சை ...

எவ்வளவு பணம் இருந்தாலும் பிள்ளைகள் கொடுக்கும் அந்த குட்டி பரிசு என் மகள் நல்லா இருக்கா என்ற சந்தோஷத்தை பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையருக்கு கொடுக்கும் என்று ஏன் இவனுக்கு இன்று வரை புரியவில்லை தாய்க்கு எடுத்த சேலையை ஆசையாக தடவினாள் 

அஞ்சு உனக்கு எடுத்துட்டீயா ?

ம்ம் பில் போட்டுட்டு வர்றேன் 

 

நீ இரு நானே போட்டுட்டு வர்றேன் , காசு கணக்கு பார்க்க தெரியாம கோட்டை விட்டுட்டு வந்து நிற்ப ... என்று சத்யா எழும்பி போக ...   

எப்பவும் இப்படிதானே எனக்கு செய்யவே கணக்கு பார்ப்பான்.... இதுல என் அம்மாவுக்கா செய்வான் விடு என்று தேற்று கொண்டாள்... 

பக்கத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டில் இருவரும் வந்து நின்றனர்

அஞ்சு உனக்கு என்ன வேணும் எப்படியும் நான் வேணும்னு கேட்கிறதை வாங்கி தர மாட்டான்.. நானும் இவனுக்கு பிடிச்சதா கேட்க மாட்டேன், எதுக்கு வம்பு

உங்களுக்கு பிடிச்சதையே வாங்கிட்டு வாங்க,

சுட சுட பருத்திப் பாலும் பஜ்ஜூம் வந்தது..

கிரகம்புடிச்சவன் காம்பினேஷன பாருங்கய்யா என்ற சலித்துக் கொண்டு அவளும் அதை வாங்கி மருந்து போல குடிக்க ஆரம்பித்தாள்

அப்புறம் அஞ்சு உன்கிட்ட ஒரு விஷயம் பேசணுமே

இந்தா பீடிகை போட்டுட்டான்ல்ல போச்சு என்ன வரப்போகுதோ தெரியலையே என்று அஞ்சு புருஷன் முகத்தை பீதியாக பார்க்க 

கொஞ்சம் பணம் தேவைப்படுது... இவள் குட்டி நெஞ்சி டமால் டமால் என்று வெடித்தது ..

தெரியும் இதுயெல்லாம் பழக்கப்பட்டதுதான் ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாறும்போது வலி அது வேற டிபார்ட்மெண்ட் என்று சொல்லிக் கொள்ளத்தான் முடிந்தது ...

என்கிட்ட பணம் இல்லைங்க 

ப்ச் உன் கிட்ட இல்லைன்னு எனக்கு தெரியாதா என்ன, உங்க அப்பாவுக்கு இப்போ ஏதோ பென்ஷன் மொத்தமா வந்துச்சாமே, கொஞ்சம் கடன ஒரு லட்சம் வாங்கி தர்றியா அஞ்சு , வட்டி கூட கொடுத்துடலாம் ...

நேத்து தானே ஒரு லட்சம் இருக்குன்னு சொன்னீங்க...

ப்ச் அது பத்தாது 

அவ்வளவு பணம் எதுக்குங்க... 

அது எதுக்கு உனக்கு

நான் கேட்க கூடாதா.. உங்க தங்கச்சிக்கு கொடுக்க தான , என் பொணத்தை பிச்சி தின்னாதான் உங்க அம்மாவும் தங்கச்சியும் சிரிப்பாங்க போல 

அஞ்சு ஊஊஊ அமைதியா பேசு 

அமைதியாவா ஒரு லட்சம் எதுக்குன்னு சொல்லுங்க ...

எதுக்காக இருந்தா என்ன எனக்காக வாங்கி தர மாட்டியா என்கிட்ட இருந்தா நான் ஏன் உங்கிட்ட கேட்க போறேன் ...

அப்ட்ரால் என்கிட்ட வந்து கேட்க என்ன தேவைன்னு தான் கேட்டேன்ங்க.... தெரியும் நேத்து அவ ஆட்டிக்கிட்டு இங்க வரும் போதே என் ரத்தத்தை குடிச்சிட்டு போவதான் வர்றான்னு உங்களுக்கும் குடும்பம் இருக்கு பொண்ணு இருக்கு பையன் இருக்கான்  

அவளும் நம்ம குடும்பம் தான் அஞ்சு 

அவ என் குடும்பம் இல்ல இல்ல நீங்க நான் என் பிள்ளைங்க இதுதான் என் குடும்பம் .... என்ன நினைச்சாலும் நினைச்சிக்கோங்க என் அப்பாகிட்ட போய் காசு என்னால கேட்க முடியாது .... ஏற்கனவே அங்க எனக்கு மரியாதை சந்தி சிரிக்குது இதுல இது வேறையா....நீங்க கட்டுன இந்த தாலியை வேணும்னா கழத்தி தரவா 

ப்ச் கிளம்பு போகலாம் 

எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை நான் ஐஞ்சு ரூபாய் பாசி வாங்கி போட்டிக்கிறேன்

உன்ன கிளம்புன்னு சொன்னேன் எழும்பு ..

உங்க தங்கச்சி நல்லா இருந்தா போதுங்க கழட்டி தர்றேன் கொண்டு போங்க ....

ச்சை உன்ன கட்டிதான்டி நான் இப்படி ஐஞ்சுக்கும் பத்துக்கும் தரித்திரமா நிக்கிறேன்... ஒரு புருசனுக்கு உதவாத நீயெல்லாம் பொம்பளையா...அப்படி என்னடி என் குடும்பம் மேல உனக்கு வன்மம்., நீயும் பொம்பள பிள்ளை வச்சிருக்க அதை மனுசல வச்சி பேசு .... என்றுவிட்டு சத்யா வேகமாக நடக்க ... இவளுக்கு உடலும் அசைய மறுத்தது மனமும் அசைய மறுத்தது...

அஞ்சு வா வேலை இருக்கு ..... வந்தா வா இல்லை ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போ .... நம்ம பொண்டாட்டின்னு வந்து உங்ககடட கேட்டேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும் என்று சத்யா பைக்கை கிக் பண்ணி காத்திருக்க... அஞ்சலி வந்து பின்னால் ஏறினாள் ...ஆனால் மனமோ எதிர்த்து பேசுனதுக்கு பதிலுக்கு பதில் ரிவெஞ்ச் எடுப்பானே கடவுளே என்று ஓலம் இட்டது அவளுக்கு மட்டுமே தெரியும் 

விட்டு கொடுத்து போவது தான் குடும்ப வாழ்க்கை வாஸ்தவம் தான் ஆனால் , ஒருத்தர் மட்டும் விட்டு கொடுத்து கொண்டே இருப்பது நரக வாழ்க்கையே,...