ஆலங்குயிலின் ஆலாபனை-5
ஆலாபனை-5
மலையரசன் மகனிடம் போனில் பேச காத்திருந்தார்.
காந்திமதிதான் “முதல்ல அவன் எப்போ வருவான்னு கேளுங்க. அவன் டிக்கெட் போட்டதும் இதெல்லாம் பேசுங்க.அவன் வரவர நான் கல்யாணத்தைப் பத்தி பேசினாலே பிடிகொடுக்கமாட்டுக்கான்.இன்னும் துளசிக்கு வயசு போகட்டும்னு சொல்லுறான். அதுதான் இருபத்தியொன்னு ஆகிடுச்சே. இதுக்குமேலயும் அவளை படிக்கவைச்சு கல்யாணம் பண்ணி பிள்ளைக்குட்டின்னு ஆகுறதுக்குள்ள நம்ம போய் சேர்ந்திருவோம்.நம்மளும் மகன் பிள்ளைங்களையும் பார்க்கவேண்டாமா?”என இந்த வயசுலயும் நல்ல மனைவியாக கணவருக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்.
அதைக்கேட்டதும் மலையரசனோ “அதெல்லாம் எனக்குத் தெரியும் நான் பேசிடுதேன்.நீ இடையில வள்ளு வள்ளுன்னு கத்தாமா இருந்தா போதும்” என்று சொல்லி முடிக்கிறதுக்குள்ளாகவே அறிவழகன் போன் பண்ணிட்டான்.
மலையரசன் போனை காதில் வைத்தவர் “அறிவு சாப்ட்டியாப்பா?என்ன அங்க வேலை அதிகமா?உடம்புக்கு நல்லாயிருக்கா?”என்று கேட்டார்.
அவனோ “யப்பா என்ன திடீர்னு உடம்புக்கு நல்லாயிருக்கான்னு கேக்கீங்க. உங்க உடம்புக்கு இப்போ நல்லாயிருக்குல்ல. பிரச்சனை ஒன்னுமில்லையே?”என்று கேட்டான்.
அதைக்கேட்ட காந்திமதி மலையரசனை முறைத்துவிட்டு, அவரிடமிருந்து போனை வெடுக்கென்று பிடுங்கிவிட்டார்.
“அறிவு வேலையைவிட்டு இப்போதான் வந்தியாய்யா?”என்று தன்மையாகக் கேட்டார்.
“ஆமாம்மா நீங்க சாப்பிட்டீங்களா?அப்பாவுக்கு என்ன இன்னைக்கு?சாப்பிட்டியா உடம்புக்கு சரியா இருக்கான்னு கேட்காரு,எப்பவும் ஊர்ல இருக்கதைப்பத்திதானே பேசுவாரு.அதுக்குமேலன்னா பணத்தை பார்த்து செலவு பண்ணுன்னு அட்வைஸ்தானே பண்ணுவாரு. இப்போ என்னாச்சு?”என்று அக்கறையாக விசாரித்தான்.
“அதெல்லாம் சும்மா ஏதாவது பேசணும்னு பேசிருப்பாரு உங்கப்பா. அவரைப்பத்தி உனக்குத் தெரியாதா?ஆமா நீ ஊருக்கு வந்து ஒரு வருஷத்துக்குமேலாச்சுதே. எப்போய்யா ஊருக்கு வருவ?உன்னைப் பார்க்கணும்போல இருக்குய்யா. என் கண்ணுக்குள்ளயே நிக்க. ஒத்தை ஆம்பளை பையனைப் பெத்துட்டு பக்கத்துல வைச்சு பார்க்க முடியாம தூரத்துலயே இருக்க”என்றவருக்கு உண்மையிலயே அழுகைதான் வந்தது.
மகளையே அடிக்கடி பார்க்கணும்தான் உள்ளூருக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்குடுத்த காந்திமதிக்கு, மகனை மட்டும் வருஷத்துக்கு ஒருதடவை பார்க்கணும்னா மனசு வலிக்கத்தானே செய்யும்.அதனால்தான் அவர் சங்கடப்பட்டு அழுதார்.
“யம்மா யம்மா இப்போ இப்படி அழாதம்மா. நான் இன்னும் ஒரு மாசத்துல வந்திருவேன். டிக்கெட்டெல்லாம் போட்டு ரெடியா வைச்சிட்டேன். எனக்கும் உங்களையெல்லாம் பார்க்கணும்போல இருக்கு. உன் சாப்பாட்டை சாப்டணும். நம்ம ஊருக்குள்ள கொஞ்சநாள் நல்ல காத்தை முகரணும்னுதான் ஏக்கமா இருக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு. ஓடிவந்திருவேன்”
“சரிய்யா சரிய்யா. பொறவு உன் மச்சான் இன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்தாரு”
“என்னம்மா திடீர்னு. நீங்க இரண்டுபேரும் நல்லாதானே இருக்கீங்க. எங்கிட்ட எதுவும் மறைக்கீயளோ?ஆஸ்பத்திரிக்கு எதுவும் போயிட்டு வந்தியளோ?”
“அதெல்லாம் இல்லய்யா. உங்க கல்யாணத்தைப் பத்சிப்பேசத்தான் வந்திருந்தாரு. அப்பாவும் அவரும் பேசி நீ வந்ததும் கல்யாணத்தை வைக்க தேதி குறிச்சிட்டு வந்திருக்காங்க. உங்க மச்சான் ஒரே முடிவா இந்தத்தடவை அறிவு வரும்போது என் மகளைக் கட்டி வைச்சிடுங்க மாமா. இதுக்குமேலயும் பொறுமையா இருக்கமுடியாது. ஏற்கனவே பேசி வைச்சதுதானேன்னு கொஞ்சம் கோபப்பட்டு பேசிட்டாரா. அப்பாவும் சரி மருமவனேன்னு சம்மதம் சொல்லிட்டாங்க. நீ அதுக்கு ரெடியாவே வா. வரும்போது எங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வராண்டாம். துளசிக்கு மட்டும் தாலியை நல்ல கணமா எடுத்துட்டு வந்திரு”
“அப்படியா?மச்சான் கல்யாணத்தை உடனேவா வைக்க சொன்னாரு.ப்ச்ச். அவளுக்கு இப்போதான்மா இருபத்தியொன்னு ஆகுது. அடுத்தும் படிக்கட்டும்னு பார்த்தேன்”என்றவன் யோசனையில் இருந்தான்.
“யய்யா அதுதான் நீ ஒரு மாசத்துக்கு மேல இருப்பல்ல. கல்யாணத்தை முடிச்சு வைச்சிட்டுப்போ. அவா படிக்கணும்னா படிக்கட்டும். யாரு வேண்டாம்னு சொன்னா.நம்ம வீட்டுல இருந்து படிக்கட்டும். இதுல என்னயிருக்குய்யா”என்று மகனுக்கு மண்டையில ஏறுற மாதிரியே நைச்சியமாக பேசினார்.
அவன் அதற்கு பதில் சொல்லாமல் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தான். உடனே காந்திமதி “என்னய்யா ஒன்னும் பேசாம அமைதியா இருக்க, உன் மேல துளசி உயிரையே வைச்சிருக்காய்யா. நீ அங்க யாரையும் விரும்புதியோ?எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்ட சொல்லிடு தங்கம். நீ இப்படி இருக்கதப்பார்த்தா ஏதோ இருக்குப்போல”என்று பயந்துக்கேட்டார்.
அதைக்கேட்டுக்கொண்டிருந்த மலையரசனோ கோபத்தில் “என்னது அங்கவுள்ள பொம்பளைய விரும்புதானா?அவனை அப்படியே கழுத்தைத் திருவி கொன்னுருவேன்னு சொல்லு”என்று கத்தினார்.
“யம்மா நீயேம்மா கண்டதையும் நினைச்சுக்கிட்டு, நீயா ஒன்னை சொல்லுத, அப்படி இங்கவுள்ள பொம்பளை யாரையும் நான் விரும்பலம்மா. உங்க கண்ணுமுன்னாடி வந்துதான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்களே ஒரு முடிவெடுத்துட்டு என்கிட்ட கேட்டா நானும் யோசிக்கவேண்டாமா?அதுதான் யோசிச்சிட்டிருந்தேன். அதுக்குப்போய் இங்கவுள்ள பொம்பளைய விரும்புதுயோன்னு கேட்டா எப்படி?இதுல அப்பா வேற கோவப்பட்டு பேசுதாறு. நான் டிக்கெட் போட்ட தேதியை சொல்லுதேன். அதுக்கு ஏத்தப்புல கல்யாண தேதியை வைங்க. வந்து இறங்குத அன்னைக்கு வைச்சிறாதிய”என்று கல்யாணத்துக்கு சம்மதத்தைச் சொன்னான்.
“சரி இந்தா அப்பாக்கிட்ட நீயே தேதியைக் கேட்டுட்டு உனக்கு என்னைக்கு வைச்சா வரமுடியுமோ அன்னைக்கு வைக்கச் சொல்லு. நாங்களே இங்க எலலாத்தையும் ஏற்பாடு செய்துக்கிடுதோம். பத்திரிக்கையெல்லாம் அடிச்சிட்டு உனக்கு ஏதோ போனுல அனுப்பலாமாமே அதுல மச்சானை அனுப்ப சொல்லுதேன்”என்றவர் உடனே போனை மலையரசனிடம் கொடுத்தார்.
அவர் வெடுக்கென்று போனை பிடுங்கியவர் “நீ இந்ததடவை வரும்போது உனக்கும் துளசிக்கும் கல்யாணம் அவ்வளவுதான். அடுத்த மாசம் இரண்டு தேதி ஜோசியருக் குறிச்சு தந்தாரு. அதுல எந்த தேதியில வைக்கணும்னு சொல்லு போதும். மீதியெல்லாம் நாங்க பார்த்துக்கிடுதோம். நீ வந்து துளசி கழுத்துல தாலிகட்டினாபோதும். பைசா எல்லாம் இருக்கும்னா அவளுக்கு தாலியும், கல்யாணத்துக்கு மோதிரமும் வாங்கிட்டு வா. இல்லையா அதுக்கும் நான் பைசா போட்டுவுடுதேன்”என்று தகப்பனாக கொஞ்சம் கறாராக பேசினார்.
“இல்லைப்பா என்கிட்ட பைசா இருக்கு. நானே வாங்கிட்டு வந்திருதேன்”
“ம்ம்ம் பார்த்து பத்திரமா வந்து சேரு. உனக்கு எதுவும் சொல்லவேண்டியதிருக்குன்னா இப்பவே சொல்லு. அப்புறம் அது சொத்தை இது நொள்ளைன்னு கல்யாணத்தன்னைக்கு வந்து நின்னு உங்கம்மைக்கிட்ட சாடக்கூடாது”
“ம்ம்ம். நீங்களே எல்லாத்தையும் செய்யுங்க. நான் ஐஞ்சு நாளைக்கு முன்னாடியே வரப்பார்க்கேன்”
“இந்த வரப்பார்க்கேன்னுலாம் இங்க சொல்லப்புடாது. வந்து நிக்கணும். ஒத்தை மவனுக்கு நான் சாவதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சு, பேரன்பேத்தியை எடுத்து கொஞ்சிரலாம்னு நானும் பாக்கேன்.நீ கல்யாணத்தை தள்ளிப்போடுறதுலயே இருக்க. இந்ததடவை அப்படியெல்லாம் முடியாது. துளசி அத்தைக்காரி அவா மவனுக்கு துளசியைக் கட்டித்தான்னு அடிக்கடி சண்டைக்கு வாரா. இதுக்குமேல முடியாதுன்னுதான் மருமவன் வந்து பேசிட்டு போயிருக்காரு. அதுதான் துளசிதான் நம்ம வீட்டுக்கு வாழ வரணும் சொல்லிட்டேன். நீ கல்யாணத்துக்கு வந்துச்சேரு”
“சரிப்பா”
“ம்ம்ம் இந்தா உங்கம்மை ஏதோ சொல்லணுமாம்”என்று இறுகிய முகத்தோடு போனை காந்திமதியிடம் கொடுத்தார்.
காந்திமதிக்கு கணவர் பேசினது சரிதான் என்று தோன்றியது. அதனால் “ எய்யாஆஆ அப்பா ரொம்ப கோபத்துல இருக்காங்க. என்ன பேசின நீ?”என்று தன்மையாகக்கேட்டார்.
“நான் என்னத்தை பேசினேன். அவருதான் படபடன்னு பேசிட்டு உன்கிட்ட குடுத்திட்டாரு. அதுதான் கல்யாணத்தை வைக்க சொல்லிட்டனே.அப்புறம் எதுக்கு மூஞ்சை திருப்பிக்கிட்டுப் போறாரு. ஒத்தை புள்ளையா பொறந்தது என் தப்பா?”
“விடுய்யா நல்லகாரியம் பேசும்போது கோவப்படாத. ராஜாமாதிரி வந்து இறங்கு. அந்த கோதைக் குடும்பத்துக்கு முன்னாடி உங்கக் கல்யாணம் நல்லா நடக்கணும். நீங்க இரண்டுபேரும் நல்லா வாழணும்.உடம்பை பாத்துக்கய்யா. வேலவேலன்னு சாப்பிடாம அலையாத என்ன. நல்வபடியா வந்து சேரு. பத்திரிக்கை அடிச்சிட்டு உனக்கு அனுப்ப சொல்லுதேன்”
“சரிம்மா. நீங்க இரண்டுபேரும் உடம்பை பாத்துக்காங்க. கலயாணத்துக்கு எல்லாத்தையும் செய்தேன்னு அலைஞ்சிட்டு அப்புறம் கல்யாணத்தைன்னைக்கு படுத்துக்கிடாதிங்க. வைக்கேன்”
“சரிய்யா”என்று போனை வைத்தவர் மலையரசனை முறைத்தார்.
“ஏன்டி முறைக்க?உன்கிட்டமட்டும் நல்ல பேசுதான். என்கிட்ட மட்டும் முறுக்கிட்டு நிக்கான். அதுதான் கோவத்துல பேசிபுட்டேன்”
“அப்பனுக்கும் மவனுக்கும் வேலையில்லை.எப்பவும் இப்படிதான் பேசுதிய. அதைவிடுங்க கல்யாணத்துக்கு முதல்ல போய் மண்டபத்துக்கு அட்வான்ஸ் குடுத்திட்டு, பொறவு போய் கார்ட அடிக்கலாம். காலையில போய் மருவன்கிட்ட எல்லாத்தையும் பேசிடுங்க”
“சரி சரி நாளைக்கு நான் மருவன்கிட்ட பேசிடுதேன். இப்போ போய் படுத்து தூங்கு”என்றவர் அடுத்து என்னென்ன செய்யணும் என்று மனதிலயே குறித்துக்கொண்டார்.
மகனுக்கு பேத்தியவே கல்யாணம் பண்ணி வைக்கிறதுல அவருக்கு அவ்வளவு மனநிறைவு. அந்த சந்தோசத்திலயே படுத்ததும் தூங்கவிட்டார்.
அடுத்தநாள் காலையில் துளசி காலேஜிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். அவளுக்கு மனசு முழுதுவதும் அவளது மாமாவிடமே இருந்தது.
‘எப்படியும் ஆச்சி நேத்து இராத்திரியே மாமாக்கிட்ட பேசிருக்கும். இந்த மாமா என்ன சொல்லுச்சோ தெரியலையே?’ என்ற தவிப்பும் ஒருபக்கம் இருந்தது.இந்த மாமாவுக்கு எனக்கு இன்னும் வயசாகணும்னு ஆசைபோல,அதுதான் படிக்கட்டும், இன்னும் வயசுபோகட்டும்னு சொல்லிட்டே இருக்காங்க. எப்படியும் இந்தத் தடவைக் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிருப்பாங்க என்று நினைத்துக்கொண்டே அரக்கபறக்க கிளம்பி வந்தாள்.
அவளைப் பார்த்ததும் பவானி “இன்னும் நேரத்துக்கு எழும்பணும் காலேஜிக்குப் போகணும்னு ஒரு பொறுப்பேயில்லை. இதுல இன்னும் ஒருமாசத்துலக் கல்யாணம் முடிஞ்சு போகப்போறா, அங்கப்போய் என்னத்தை செய்துக்குடுப்பியோ தெரியல. உனக்குப்பதிலா எங்கம்மாதான் எழும்பி எல்லாம் செய்யணும்போல.போய் தலையை ஒழுங்கா பின்னிப்போடு தண்ணி வடியுது பாரு. குளிச்சிருக்கா பாரு காக்கா குளியல்னு. இப்போ தாத்தா வந்திருவாரு. தாத்தாக்கூட நாங்களும் கிளம்பி திருநெல்வேலிக்குப் போயிட்டு வருவோம். நீ சீக்கிரம் வந்தன்னா சாவி எங்க வைப்பேன்னு தெரியும்ல எடுத்து திறந்துக்க. கவனமா இரு”என்று சொல்லிவிட்டு அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
“இப்போ எதுக்கும்மா ஜோடியா திருநெல்வேலி போறீங்க?”
“ம்ம்ம் என் தம்பி கல்யாணத்துக்கு நாள் குறிக்கதுக்குத்தான். கேட்குது பாரு கேள்வின்னு”
“அதுசரி குறிச்சிட்டு வாங்க” என்றவள் சத்தமாக சிரித்துவிட்டாள்.
அந்த சிரிப்போடே பேக்கினை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். பூங்கொடியும் இவளைப் பார்த்ததும் வெளியே வந்தவள், அவளது முகத்தைப் பார்த்துவிட்டு “என்ன துளசி வாயெல்லாம் பல்லா இருக்கு. என்ன விசயம்?”என்று கேட்டாள்.
“அதுவா நேத்து ஒருத்தன் மண்டையைப் பொளந்ததுக்கு பலனா எங்க வீட்டுல கல்யாணத்தை இப்பவே முடிச்சிடணும்னு பேசி முடிவெடுத்துட்டாங்க. எங்கக் கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரமா வைக்கணுமோ அவ்வளவு சீக்கிரமா வைக்கதுக்கு நாள் குறிச்சு, நேரமும் பார்க்க ஜோசியர்கிட்ட போறாங்க. எப்படியும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் வைச்சிருவாங்க. அதுதான் சந்தோசத்துல வந்தேன்”
“பார்றா அப்போ இந்தக் குழந்தைப்புள்ளைக்கு கல்யாணமாம். முகத்துல கல்யாணக்கலை வந்திடுச்சே. அப்புறம் உன் மாமாக்கிட்ட பேசிட்டியா?”
“இந்த வாரம் மாமா ரொம்ப பிஸியாம். பொறவு போன் பண்ணுதேன் துளசின்னு மெசேஜ் போட்டுட்டாங்க. மாமாவும் பாவம்ல, மாமா ப்ரீயானதும் பேசுவாங்க”
“ஓஹோன்னானாம் நடத்துங்க நடத்துங்க. வேற என்ன?இனி ஒரே கல்யாணகனவுதான் எப்படியும் என்னையெல்லாம் ஞாபகத்துலயே வைச்சிருக்கமாட்டியே?”
“ஆமா நீ யாரு?இப்பவே எனக்கு நீ ஞாபகத்துல இல்லையே. உன் பேரென்ன?”என்று கேட்டதும் பூங்கொடி அவளது தலையில் ஒரு கொட்டு வைக்க, இவா அவளை வேகமாக அடிக்க கையோங்க என்று இரண்டுபேரும் பேசி சிரித்தவாறே பஸ்டாண்டிற்கு போனார்கள்.
அக்கம் பக்கம் யாரு நிற்கிறா? யாரு நம்மளை பார்க்கிற என்று எதுவும் கவனிக்காது இரண்டுபேரும் அவங்க தோழிகளின் உலகத்துல போய்கொண்டிருந்தனர்.
“ஏம்ல இதுக்காகவா இவ்வளவு நேரமா என்னை இங்க உட்கார வைச்சிருக்க. வண்டி சீட்டு சூடாகி எங்கெல்லாம் எரியுது பாருல?நீ இர்றாம்ல, என்னையாம்ல இருக்க சொன்ன?”என்று ராகவன் எரிச்சலில் முரளியை திட்டிக்கொண்டிருந்தான்.
அதைக்கேட்ட முரளியோ “இன்னைக்கு காலையிலயே எனக்கு ஒரு ரகசியத்தகவல் வந்துச்சு. அந்தத் தகவல் உண்மையா இல்லையான்னு பார்க்கத்தான் வந்தேன். நம்ம மட்டும் தனியா வந்தா துளசியை பார்க்க வந்தேன்னு இந்த ஊரு தப்பா நினைச்சிடக்கூடாதேன்னு உன்னையும் என்கூட கூட்டிட்டு வந்தேன். உனக்கு டீ குடிக்கணும்ல, வடை திங்கணும்ல போய் அதை ஒழுங்கா தின்னு”என்று அவனை விரட்டினான்.
“அப்படியென்ன முக்கியமான தகவல் உனக்கு வந்துச்சு?அந்த தகவலை காலையிலயே சொன்னது யாரு?”
“அதெல்லாம் ஒரு உளவுப்படை வைச்சிருக்கேன். அவங்கதான் சொன்னது”
“உளவுப்படையா?சரிதான். இருக்க பத்து தெருவுக்கு ஒரு உளவுப்படை வைச்சிருக்கன்னு சொல்லுத பார்த்தியா. அதை என்ன நம்ப சொல்லுத. அதுவிடுல உனக்கு வந்தத் தகவலைச் சொல்லுல”
‘அதாவது என் அருமை மாமன்மகள் துளசிக்கும் அவளசு தாய்மாமான் அறிவழகனுக்கும் அடுத்த மாசம் இருப்த்தஞ்சாதேதி கல்யாணமாம். அதுக்கு முகூர்த்த நேரம் குறிக்க என் மாமானும் அவங்க மாமானாரும் சேர்ந்து காலையிலயே திருநெல்வேலிக்கு கிளும்புதாவளாம். அந்த சந்தோசத்துலதான் என் மாமன் மவள் இவ்வளவு சிரிப்போட காலஜிக்கு போறாளாம்”என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
அதைக் கேட்ட ராகவனுக்கு அப்படியே நெஞ்சு பக்கென்று நின்று, முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து, கையில் இருந்த வடை கீழே விழுந்தது.
“லேய் ஒரு வடை பதினைஞ்சு ரூவால. அதை எதுக்கு கீழே போட்ட?”என்று முரளி ராகவனைப் பார்த்துக் கேடடான்.
“என்ன மச்சான் இது. இதை இவ்வளவு சாதாரணமா சொல்லுத. உனக்கு வலிக்கிற செய்தில இது. ஏன் இப்படி?”என்று அவனது தோளில் கைவைத்து வேதனையோடு தனது தோழனிடம் கேட்டான்.
“இதுக்காக அழுதுகிட்டால இருக்க சொல்லுத?அது என்ன நடக்கணும்னு விதியிருக்கோ அதுதானே நடக்கும். துளசிக்கும் அறிவுக்கும்தான் கல்யாணம் நடக்கணும்னு இருந்தா நம்ம அந்த விதியை மாத்தவா முடியும்?”
“விதியை மாத்த முடியாதுதான். அதேமாதிரி நீ அவளைக் காதலிச்சதும் மாறாதுல்ல. எப்படில இதை நீ தாங்கிக்கிட்டு சிரிக்கிற?”
“என்ன செய்ய சொல்லுத?அவளுக்கா விஷத்தைக் குடிச்சிட்டு சாகசொல்லுதியோ?அப்படியெல்லாம் செய்ய நானென்ன கோழையா? எதுவந்தாலும் தாங்கும் இதயம்ல இந்த முரளியோடது. நான் அவளை காதலிக்கத் தொடங்கும்போது அவளுக்கு அவளோட மாமாவைத்தான் பிடிக்கும்னு செரிஞ்சுதானே காதலிச்சேன். எதுக்காக நான் கலங்கி நிக்கணும். நம்ம வாழ்க்கை ஒன்னும் இப்படியே நிக்கவா போகுது. அது அதுபாட்டுக்கு வண்டிசக்கரம் மாதிரி உருளும். இன்னொரு சக்கரம்தான் யாருன்னு தெரியல”என்று சொன்னவனுக்கு கண்கள் சிவந்திருந்தது.
“மச்சன் லேய் “என்று ராகவன் அவனது தோளில் கைப்போட்டு தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டான்.
முரளிக்கு எதுவும் பேசமுடியாது பஸ்ஸில் ஏறிப்போகும் துளசியைப் பார்த்தான். அவளோ அப்படியொருத்தன் அங்க நிக்கிறான்னான்னுகூட கவனியாது வேண்டுமென்றே பூங்கொடியோடு சிரித்துபேசிக்கொண்டே போனாள்.
அந்த பஸ்ஸும் கிளம்பிவிட போகும் பஸ்ஸை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அந்த பஸ் புள்ளியாகி அது அப்படியே மறைந்துபோனதுபோதும் அவனது பார்வை அங்கயே வெறித்திருந்தது!