ஆலங்குயிலின் ஆலாபனை-3
ஆலாபனை-3
துளசியும் பூங்கொடியும் காலேஜ் விட்டதும் வெளியே வந்தவர்கள் மெதுவாக பஸ்டாண்டிற்கு நடந்தனர்.
பூங்கொடி துளசியின் கையைப் பிடித்தவள் “என்னடி யோசனையிலயே நடந்திட்டிருக்க?ஊருக்குப் போனதும் உங்க அத்தையையும் மச்சானையும் எப்படி சமாளிக்கலாம்னு மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கா என்ன?அதைத்தான் யோசிட்டே வர்றியாக்கும்?””என்று கேட்டாள்.
“க்கும் அவங்களை எதுக்கு நான் சமாளிக்கணும், இதுக்குள்ள எங்கப்பா அவங்களை சமாளிச்சிருப்பாங்க. எங்கப்பாவுக்கு என்னை ரொம்ப புடிக்கும்டி. அதனால் எனக்கு என்ன புடிக்குமோ அதைத்தான் செய்வாங்க. எனக்கு என் மாமாவைக் கட்டிக்கத்தான் ஆசைன்னு அவங்களுக்குத் தெரியுமே. அதானலதான் எங்க அத்தைக்காரி பொண்ணுக் கேட்டு வந்தும் எங்கப்பா என் பொண்ணோட ஆசைக்குத்தான் முதல்ல தலையாட்டுவேன்கா. ஒத்தைப்பொண்ணை பெத்து வைச்சிருக்கேன். அவா உன் வீட்டுக்கு மருமகளாக வர்றதைவிடவும் என் மாமியார் வீட்டுக்கு மருமகளா போனா கொண்டாடுவாங்க. நீ மருமகளாகத்தான் அவளைப் பார்ப்ப, ஆனால் அங்க அவதான் எல்லாமேன்னு ஆகிடுவா. அதனால் என் பொண்ணை என் மச்சான் அறிவழகனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நெத்தியில அடிச்சமாதிரி சொல்லிட்டாங்க. இன்னைக்கும் என் அத்தைக்காரி எப்படியும் பஞ்சாயத்தை கூட்டிருப்பா, எங்கப்பா அதே பதிலை கொஞ்சம் மாத்தி சொல்லி விரட்டி விட்டுருப்பாங்க அவ்வளவுதா,அ. இதுதான் அங்க நடந்திருக்கும். இதுக்கு எதுக்கு நான் மூளையைப்போட்டு கசக்கி யோசிக்கணும்”
அவள் சொன்னதைக் கேட்டதும் பூங்கொடி அமைதியாக அவளது முகத்தையே பார்த்தாள்.
“ஏய் எதுக்கு இப்போ இப்படி பார்க்க?”
“இல்லை உங்க மாமா அறிவழகனைவிடவும் முரளி அழகா இருக்கான், உங்க மாமாவாது இன்ஞ்சிரியரிங்க் மட்டும்தான் படிச்சிட்டு பாரீன் போயிருக்காங்க, ஆனால் முரளி அவரைவிடவும் ஒருபடி மேல போய் எம்.ஈ படிச்சிருக்கான் உனக்காகவே உன் மாமாவைவிடவும் அதிகம் படிக்கணும்னு படிச்சிட்டு உன் பின்னாடியே காதலோடு சுத்தி வர்றானே ஏன் அவனை உனக்குப் பிடிக்கலை? பிடிக்காமல் போறதுக்கூட ஓகேதான். ஆனால் இன்னைக்கு கல்லால அடிச்சி இரக்குறையாக்கிட்டியே இதெல்லாம் உனக்கே தப்புன்னு தோணலையா”
“ஏய் என்ன இப்படி பேசுத? முரளி மச்சான் அழகுன்னு சொல்லு, அதுக்காக என் மாமனைவிடலாம் அழகுன்னு சொல்லாத. உன் மூஞ்சையே உடைச்சிடுவேன். நான் பொறந்ததிலிருந்தே மாமாவைத்தான் கட்டிக்கப்போறன்னு கேட்டு வளர்ந்துட்டேன். எவ்வளவு பெரிய ஆணழகனா இருந்தாலும் எவனும் எனக்கு வேண்டாம், என் மாமா மட்டும் எனக்குப் போதும். என் மாமா வெளிநாட்டுக்கு போகாமல் இங்கயே விவசாயம் பார்த்தாலும், அவருக்கூட சேர்ந்து நான் வயக்காட்டுல வேலை செய்வனே தவிற வேற யாருக்கூடவும் வாழமாட்டேன். போடி கிறுக்கி அழகாம், படிப்பாம் இதெல்லாம் என் மாமனுக்கு முன்னாடி ஒன்னுமில்லை”என்று சொன்னவளின் தொணியிலும் முகத்திலும் அவ்வளவு பெருமை இருந்தது.
அதைப்பார்த்த பூங்கொடி இதுக்குமேல இவக்கிட்ட முரளியைப் பத்தி பேசினா, நம்மளையும் அவனை அடிச்ச மாதிரியே அடிச்சாலும் அடிச்சிருவா என்று வாயை மூடிக்கொண்டாள்.
இருவரும் பஸ்ஸில் ஏறி ஊருக்கு வந்து இறங்கும்போதே அங்கே முரளி தலையில் கட்டோடு வண்டியில் உட்கார்ந்திருந்திருந்தான்.
அவனைப் பார்த்தவள் எகத்தாளமா “என்கிட்ட வசமகா வாங்கிக்கட்டிக்கிட்டியா மண்டக்கணம் புடிச்சவனே. இனி என் வழியிலயே நீ வரமாட்டல்ல. எப்படி நம்ம ட்ரீட்மெண்டு? என்ற ரீதியில் அவனைப் பார்த்துவிட்டு கெத்தாக நடந்துப்போனாள். அவக்கூடவே ஒட்டுப்புல்லு மாதிரியே பூங்கொடியும் போனாள்.
முரளி துளசியைப் பார்த்து ரசித்தான்.அதைக் கண்ட ராகவன் “ஏன்டா காலையிலதானடா அவா உன் மண்டையை உடைச்சிட்டுப்போனாள். மூணு தையல் வேற போட்டுவிட்டிருக்கானுங்க. இதுல அடுத்த தையல் போட ரெடியாகிட்டியா மச்சான்”என்று நக்கலாகக் கேட்டான்.
“அவ என்னை மம்பட்டியால வெட்டினாலும் ரசிப்பேன்டா”என்று துளசியைப் பார்த்துக்கொண்டே சொன்னவனுக்கு வாயில ஜெல்லு மட்டும்தான் வடியல. அந்தளவுக்கு அவளை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
அதைப்பார்த்த பூங்கொடி “துளசி நீ அடிச்சும் அவன் திருந்தலைடி. அங்கப்பாரு அழகா உட்கார்ந்து உன்னை சைட்டடிச்சிட்டிருக்கான். இவனை நீ அருவாளால வெட்டுனாலும் போகமாட்டான் போலடி”என்று பேசிவிட்டு அவனைப் பார்க்க அவனோ அவளைக் கொலைவெறியில் பார்த்தான். அதற்குள் துளசியும் அவனை ஏறிட்டுப்பார்த்து முறைத்துவிட்டு திரும்பி நடந்தாள்.
“க்கும் இன்னைக்கு நேத்தாடி நீ என்னை முறைச்சிப்பார்க்கிற?உனக்கும் எனக்கும் விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இப்படித்தான் முறைக்கிற?நானும் ரசிக்கிறேன். போ போ” என்பதுபோல அவனும் அவளைத் தெனாவெட்டாகப் பார்த்து வைத்தான்.
ஆனால் பூங்கொடியோ “ஏன்டி இவன் எதுக்கு என்னை இப்படி முறைச்சிப்பாக்குறான்?நானா இவன் காதலுக்கு குறுக்கால வந்து நிக்கேன். நீ உன் மாமானை விரும்புற, இவன் உன்னை விரும்புறான். இந்த பிரச்சனைக்கு நடுவுல நான் எங்கடியிருந்து வந்தேன்?உனக்கு பிரண்டா இருக்கிறது குத்தமா என்ன?”என்று அலுத்துக்கொண்டே கேட்டாள்.
“அவன்கிடக்கிறான் மயிராண்டி!என்னை அவனால வளைக்க முடியலல்ல அந்த ஆத்திரத்தை உன்மேல காட்டுறான். அவனையெல்லாம் ஒரு ஆளுன்னு நினைக்காத சும்மா வா. எனக்கு இன்னைக்கு அம்மாச்சி என்ன பேசிச்சுன்னு கேட்கணும்னு உள்ளுக்குள்ள குறுகுறுன்னு இருக்குது. வா சீக்கிரம் வீட்டுக்குப் போவோம்”என்று அவளது கையைப்பிடித்துக்கொண்டு வேகமாக போனாள்.
“ஏன்டி பிரச்சனை பண்ணிருக்கணும்னா முரளியோட அம்மாதான் பண்ணிருக்கணும், உங்கப்பாவும் அம்மாவும் பதில் சொல்லிருக்கணும். இதுல உங்க அம்மாச்சி எங்கிருந்து வந்தாங்க?”
“ஏய் எங்க அம்மாச்சியைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன?.உனக்கும் அவங்க அத்தைதானே. தூரத்து சொந்தம்னாலும் இந்தவூர்க்காரிதானே. அம்மாச்சி இப்பவே எனக்கும் என் மாமாவுக்கும் கல்யாணம் பண்ண நாளே பார்த்திருக்கும் பாரேன். ஏன்னா எங்க அத்தைக்காரி ரொம்ப வம்பிழுத்தான்னா அவா வாயை அடைக்க ஏதாவது செய்து வைக்கும். எங்கம்மாவை எங்கப்பா கல்யாணம் பண்ணிட்டு வந்த நாள்ல இருந்தே எங்க அத்தைக்காரி இப்படித்தான் சண்டைக்கு நிக்குமாம். அதுக்காகத்தான் நான் பொறந்ததும் அவன் மவனுக்கு எங்க பேசிடுவளோன்னு என் மாமாவுக்கே என்னை அப்பவே பேசி வைச்சிச்சாம். பொல்லாத கிழவின்னு அம்மா சொல்லிட்டே இருக்கும்,அதுதான் இன்னைக்கு என்ன பேசினாங்கன்னு கேட்க ஓடுறேன்”
“ஓஓஓ”
“என்னடி ஓஓஓன்னு சொல்லிட்டிருக்க. வா வீட்டுக்குப் போகலாம்”என்று அவளோட கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.
பூங்கொடி அவளது கையிலிருந்து தன் கையை இழுத்து எடுத்தவள் “யம்மா தாயே நீ வேணும்னா ஸ்பீடா வீட்டுக்குப்போ நான் மெதுவா வாரேன்”என்று மெதுவாக யோசனையோடு நடந்தாள்.
“அதுசரி நான் போறேன்டி நீ பின்னாடியே வந்து சேரு”என்றவள் அவளது பதிலுக்குக் காத்திராமல் வேகமாக போய்விட்டாள்.
பூங்கொடி மெதுவாக நடந்து வீட்டுக்கு வந்தவள் துளசியின் வீட்டை எட்டிப்பார்த்தாள்.
பவானியும் துளசியும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டே சத்தமாக சிரித்துக்கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த பூங்கொடி “எப்படியும் அம்மாவும் மகளும் இன்னைக்கு முரளியை அடிச்சதைப் பத்திதான் பேசிட்டிருப்பாங்க. நமக்கென்ன நம்ம நம்ம வேலையைப் பார்ப்போம்”என்று திரும்பி அவங்க வீட்டுக்குள்ளே போனாள்.
அவங்கம்மா சொர்ணம் அவள் திரும்பித் திரும்பி துளசி வீட்டைப் பார்த்துக்கொண்டே வருவதைக் கண்டு “ஏய் பூங்கொடி என்னடி கண்ணை பொடதிலயா வைச்சு பார்த்துட்டு வருத. காலேஜ்விட்டு வர இவ்வளவு நேரமாக்குவியா?பொம்பளை புள்ளையா போனமா வந்தமான்னு இருக்கமாட்டியா?”என்று சத்தம்போடவும் வேகமாக உள்ளவந்தாள்.
அவங்கப்பா - சொர்ணம் சத்தம் போட்டதைக் கேட்டதும் “ஏய் இப்போ எதுக்கு வந்ததும் வராததுமா சின்னவளைப்போட்டு பேசிட்டிருக்க?வந்தப்புள்ளைக்கு ஏதாவது திங்கக்குடு. அதைவிட்டுட்டு யேசாத”என்று அவங்கப்பா முத்தையா மகளுக்காக பரிந்து பேசினார்.
பூங்கொடிதான் அந்த வீட்டுக்கு கடைசி பொண்ணு, அவளுக்கு முன்னாடி இரண்டு அண்ணன், இரண்டு அக்கா எல்லோருக்குமே கல்யாணமாகிவிட்டது.
இவாதான் கடைக்குட்டியா இவங்களுக்கு தப்பி பிறந்தவள். அதாவது கொஞ்சம் வயசு போனதுக்கு அப்புறம் முத்தையா பொண்டாட்டியை ஆசையாகப் பார்த்துவைக்க, அந்த பார்வையில சொர்ணம் சொக்கி அவருக்கிட்ட விழ, அந்தக்காதல்ல பிறந்தவதான் பூங்கொடி. அவங்க எதிர்பாராத நேரத்துல வயித்துல வந்ததும் இல்லாமல், சொர்னம்மாள் வயாசிகிட்டுன்னு கவனிக்காமல் இருந்துவிட, அதுக்கப்புறம் என்ன அழிக்கவே முடியாதுன்னு டாக்டர் சொன்னதும் வேற வழியில்லாமல் பொத்துப்போட்ட ஐந்தாவது வாரிசு.
கொஞ்சம் வயசுக்கு அப்புறம் பிறந்ததுனால பூங்கொடியை எப்படியாவது நம்ம காலத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வைச்சிடணும் சொர்ஙம் ஆசைப்பட்டார். அந்தா ஆசையில் ஒரு டொம்போ மண்ணள்ளி போட்டுட்டு அவளோ படிக்கப்போய்விட, அந்தக் கோபம் அப்பப்போ இப்படி வார்த்தையில வெளிப்படும்,அதை முத்தையாதான் சமாளித்துவிடுவார்.
“க்கும் மகளை சொன்னதும் உடனே வந்திடுங்க. இன்னைக்கு எதிர்த்த வீட்டு சீமாட்டி அவா அத்தைப் பையனை கல்லால அடிச்சிருக்கா. அவ்வளவு ராங்கிக்காரியா இருக்கா. அவளுக்கெல்லாம் அவ மாமன்காரனைக் கட்டிக்கப்போற திமிரு. அவன் வெளிநாட்டுல இருக்காம்ல அந்த ஏத்தம்தான். அம்மாக்காரியும் ஒத்தைக்கு ஒன்னுன்னு பெத்துப்போட்டிருக்கா, அவளுக்கு எல்லாம் செய்வா. நம்ம புள்ளையையும் ஒருத்தன் கையில புடிச்சிக்குடுத்திரலாம்னுதான் கல்யாணத்துக்கு பேசலாம்னு சொன்னா படிக்ப்போறேன்னு இவா சிலுப்பிக்கிட்டுப் போறா. இவளும் அவக்கூட சேர்ந்தா நாளைபின்ன யாராவது பொண்ணுக்கேட்டு வருவாவளா எப்படி? கொஞ்சம் சொல்லி வைங்க”என்று தனது ஆற்றாமையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்திக்கொண்டிருந்தாள்.
அதைக்கேட்ட முத்தையாவோ “சும்மா இருடி. அவளுக்குன்னு பொறந்தவன் கண்டிப்பா வருவான். நம்ம என்ன ஒன்னுமில்லாமலா இருக்கோம். அவளுக்குன்னு உள்ளதை சேர்த்து வைச்சிருக்கம்ல, அவா வேற படிப்பை முடிக்கப்போறா, நல்ல மாப்பிள்ளையா வருவான்.நீ இப்படி பொலம்பாம இரு” என்று சத்தம்போட்டு பொண்டாட்டியை சமாதானப்படுத்தினார்.
இதையெல்லாம் உள்ளிருந்துக் கேட்டுக்கொண்டிருந்த பூங்கொடிக்கு ஒரு மாதிரி வெட்கம் வந்து தலைத்தூக்க அப்படியேபேக்கை கட்டிலில் வைத்துவிட்டு ஆளுயரக்கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
“உனக்கென்னடி குறைச்சல். துளசியைவிடவும் நீ அழாகாதான் இருக்க.பொறவு எதுக்கு இந்த அம்மா உனக்கு மாப்பிள்ளை கிடைக்கணுமே, எப்படி மாப்பிள்ளைக் கிடைப்பானோன்னு எப்பவும் அழுதுட்டேயிருக்காங்க. அச்சோ அச்சோ!உனக்கு ராசா மாதிரி மாப்பிள்ளை வருவான்டி” என்று கண்ணாடிப் பார்த்து பேசியவள் தனது கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்துக்கொண்டாள்.
யப்பா இந்த மூணு வருஷத்தை எப்படியோ தள்ளியாச்சி, இன்னும் ஒரு செமஸ்டர்தான் இருக்கு அதுவும் இன்னும் மூணு மாசத்துக்குள்ள முடிஞ்சிடும். அப்புறம் ஜாலிதான் என்று யோசித்தவளுக்கு முகம் தானாகவே சுருங்கிவிட்டது.
இந்த படிப்பு முடிஞ்சதுக்கப்புறம் என்ன பண்ணுவ பூங்கொடி?இந்த அம்மாவேற மாப்பிள்ளை பார்க்கிறேன்னு கிளம்பிடுமே. இப்பவே மாப்பிள்ள பார்த்தாலும் பார்த்திருப்பாங்க. அடுத்து எம்.எஸ்ஸி படிக்கணும்னா திருநெல்வேலிதானே போகணும்.அவ்வளவு தூரமெல்லாம் விடமாட்டாங்களே. இப்பவே கடுகடுன்னு நிக்கிறாங்க என்று யோசனையோடு உட்கார்ந்திருந்தாள்.
இந்த துளசிக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா?நான் மாட்டிப்பனே?அவளை வைச்சு தப்பிச்சிட்டிருந்தேன். இனி அதுவும் முடியாது போலிருக்கே. இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும் என்று அதைப் பத்தியே யோசித்துக்கொண்ட்டிருந்தாள்.
அவளதுபோன் சைலண்ட் மோட்ல இருந்து உர்உர்ன்னு வைப்ரேட் ஆகவும் எடுத்து பார்த்தவள், உடனே காதில் வைத்து ம்ம்ம் ம்ம்ம் என்று பேச ஆரம்பித்தாள்.
அவ்வளவுதான் அடுத்து வீட்டுல என்ன நடக்குது, அம்மா என்ன சொல்லி திட்டிட்டிருக்காங்க என்று எதுவும் அவள் காதில் விழவேயில்லை!
இந்தப்பக்கம் முரளியோ ராகவனிடம் எகிறிக்கொண்டிருந்தான் “நான் எவ்வளவு கோபத்துல அந்தப் பூங்கொடியைப் பார்க்கேன் அவளா நம்மளை மதிக்கவேயில்லை பார்த்தியா. அவளால்தான் மச்சான் எல்லாமே இப்படி நடக்குது. அவா மட்டும் தனியா என் கையில மாட்டட்டும் பொறவு இருக்கு அவளுக்கு”
“அவளை ஏன்டா இப்போ இப்படி யேசிட்டிருக்க. அவா அமைதியாதானே போற, உன் மாமா மவதானே உன்னை அடிச்சது. அவளை பேசவேண்டியுதுதானே. அதைவிட்டுட்டு சும்மாபோற பிள்ளையை இப்படி யேசிட்டிகிருக்க. விடு. அடுத்து உன் ப்ளான் என்ன அதைச்சொல்லு மொதல்ல”
“என்னத்தை ப்ளானு பேசாமல் துளசியைக் கடத்திட்டுப்போய் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன். இதைப்பத்தி நீ என்ன நினைக்க?”
“ம்ம்ம் இப்போவாவது கல்லால அடிச்சா தப்பிச்சிக்கிட்ட. அவளைத் தூக்கிட்டுப்போனன்னு வையேன் பத்திரகாளி மாதிரி உன் நெஞ்சுல ஏறி உட்கார்ந்து உன்னைப் பொளந்திருவான்று நினைக்கேன். இப்போ நீ என்ன நினைக்க?”
“இந்த திட்டமெல்லாம் சரிவராதுன்னு நினைக்கேன்”
“அப்போ ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் மூடிக்கிட்டு காயம் ஆறட்டும்னு வீட்டுல கிடப்பியாம். வால வீட்டுக்குப்போவோம்”என்று அவனை வீட்டுக்கு விரட்டினான்.
“ஒருத்தன் நல்ல ரோசனை சொன்னா உங்களுக்கெல்லாம் விளங்காதே. போல”என்று ராகவனை திட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.
ஆனாலும் அவன் மனசெல்லாம் துளசியை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறது என்கின்ற யோசனையே ஓடிக்கொண்டிருந்தது.