ஆலங்குயிலின் ஆலாபனை-4

ஆலங்குயிலின் ஆலாபனை-4

ஆலாபனை-4

முரளி வீடு வரும்போதே அவனது அக்காவும் மச்சானும் அவங்க வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

முரளியைக் கண்டதும் அவனது அக்கா முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே போய் பைகளையெல்லாம் வெளியே எடுத்து வைத்தாள்.

அவள் எப்போ வீட்டுக்கு வந்தாலும் இங்க என்னவெல்லாம் கிடைக்குமோ அத்தனையும் எடுத்துட்டுப்போவாள். ஏதோ அவங்க வீட்டுல கஷ்டப்படுறமாதிரியே இங்கிருந்துக் கொண்டுபோவாள்.

அவளோட வீட்டுக்காரர் பெருமாள் சொந்தமா தேங்காய் பிஸினஸ் பண்றவன்தான். அதுவும் அவங்க சொந்தத் தோப்புல இருந்துதான் மொத்த வியாபரமும். ஆனால் அங்கிருந்து ஒரு தேங்காயோ, எண்ணெயோ அம்மாவீட்டுக்கு எடுத்துட்டு வரமாட்டாள். இங்கிருந்தான் கையில கிடைக்கிற எல்லாத்தையும் எடுத்துட்டுப்போவாள்.

அவளோட வீட்டுக்காரரே எதுக்கெல்லாம் இதுன்னு கேட்டால் “நான் ஒரு பொண்ணுதானே எனக்குத்தானே தந்துவிடமுடியும். அதுவும் என் தம்பிக்குகல்யாணம் முடிஞ்சிட்டுன்னா இதுவும் தரமாட்டாங்க. அதுவரைக்குமாவது எடுத்துட்டு வர்றேன்னு சொல்லி அவரு வாயையும் மூடிடுவாள்.

இப்பவும் அவங்க வீட்டு காட்டுல விளைஞ்ச நிலக்கடலையையும், கருப்பட்டியையும் கட்டி வைச்சிருக்காள்.

அதைப்பார்த்த முரளிக்கு சிரிப்பு வந்தாலும் எல்லோரும் துளசி மேலயும் என் மேலயும் கோபத்துல இருக்காங்கன்னு புரிந்து, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, அமைதியா போய் உட்கார்ந்தான்.

அவங்கம்மா கோதை இப்போ வெளியே வந்து அவனது முகத்தைப் பார்த்துவிட்டு “உனக்கு ஏம்ல சிரிப்பு வராது?ஏம்னா அடி வாங்கிட்டு பல்லை இளிச்சிட்டு தையல் போட்டுட்டு வந்திருக்க பாத்தியா, அவா சின்ன கல்லால உன்னை அடிக்காம பெரிய பாறங்கல்லைத் தூக்கிப்போட்டிருந்தான்னா சரியாயிருந்நிருக்கும்”என்று கோபத்தில் கத்தினார்.

அதைக்கேட்டதும் ஹாஹாஹா என்று சத்தமாக சிரித்தவனைப் பார்த்து மொத்தக்குடும்பமும் கொலைவெறியோடு அவனைப் பார்த்தார்கள்.

அதில் சிரிப்பை நிறுத்தியவன் கொஞ்சம் ஓவராதான் போயிட்டமோ என்று யோசித்துவிட்டு “ஹீஹீஹீஹீ சும்மா சிரிச்சு பார்த்தேன் கோத. இதுக்கு எதுக்கு இவ்ளோ கோபப்படுத. அவா பெரிய பாறங்கல்லைத் தூக்கிப்போட்டா உன் மவன் செத்திருவான்னு அவளுக்கே தெரியும். அதுதான் சின்னதா ஒரு கல்லைத் தூக்கிப்போட்டா அதுபாரு நேரா வந்து என் தலையையும் நெத்தியையும் சேர்த்து பதம் பார்த்துட்டு. அதுக்கு அவா என்ன பண்ணுவா? பாவம்”என்று துளசிக்காக வக்காலத்து வாங்கினான்.

“இங்கப்பாரு இனி அவளே மனசு மாறி அவங்க மாமனைக் கட்டிக்கமாட்டேன், முரளி மச்சானைத்தான் கட்டிக்கவேன்னு ஒத்தக்காலுல நின்னாலும், அவளை உனக்குக் கட்டி வைக்கமாட்டேன். அந்த அடங்காபிடாரி நம்ம வீட்டுக்கு வேண்டாம். உனக்கு நாளைக்கே தரகர்கிட்ட சொல்லி வேற பொண்ணுப் பார்க்க சொல்லதான்போறேன். இதுக்குமேல உன் கல்யாணத்தை தள்ளி போடமுடியாது. ஏழு கழுதை வயசாகிட்டு, படிச்சிட்டு நம்ம ஊரையே சுத்திட்டிருக்க. நீ இங்கயே சுத்திட்டிருக்க காரணம் தெரிஞ்சும் சும்மா விட்டுவைச்சேன் பாரு என்னை சொல்லணும்”என்று அவங்கப்பா கோபத்தில் எழுந்து அவன் பக்கத்தில் வந்து நின்றார்.

“யப்பாஆஆஆஆஆஆ” என்று அவன் அக்கா ஓடிவந்து இரண்டுபேருக்கு குறுக்கால நின்னவள் “யப்பாஆஆ அவனுக்குப் பொண்ணுப்பார்த்துக் கல்யாணத்தை முடிச்சு வைச்சிடுவோம்பா. அப்படின்னா அவனே வெளியூருக்கு வேலைக்குப் போயிருவான். அவன் மேல கோபப்பட்டு கைய்ய கிய்ய வைச்சிராதிங்க”என்று பதற்றத்தில் பேசினாள்.

எப்பவும் அப்பாங்களுக்கு பொம்பளை பிள்ளைங்க கொஞ்சம் குரலை மாத்தி அழறமாதிரி பேசினால போச்சே!

அதேமாதிரி இப்பவும் முத்துமாரி பேசினதும் சமுத்திரம் தன் கோபம் தணிந்து, மீண்டும்போய் உட்கார்ந்தார்.

‘ஏம்ல முரளி அப்பா உன்னை அடிக்கவே வந்துட்டாரே. இதுவரைக்கும் துளசி கட்டிவைக்கிறோம், பேசுறோம்னு சொன்னாரே. இன்னைக்கு மொத்தக்குடும்பமும் நம்மளை சுத்தி வளைக்கிறாங்களே. என்ன செய்யிறது’ என்று கண்ணுமுழி பிதுங்க பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் இதுதான் படிக்கிறேன் சொல்லும்போதும் ஒன்னும் சொல்லாதவர்;நான் நம்ம ஊர்லயே இருந்து நம்ம வயலைப் பார்த்துக்கிறேன்னு சொல்லும்போது சரின்னு தலையாட்டியவர்;துளசியை காதலிக்கிறேன் அவளைப் பொண்ணு கேளுங்கன்னு சொன்னதும் போய் பொண்ணு கேட்டவர்;ஆனால் இப்போ எல்லாமே தலைகீழாக மாறிட்டு. அவருக்கு மகன் வாழ்க்கை மீதான பயம் வந்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்டான்.

அதனால் அவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார். கோதை அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து “என்னாச்சுங்க நீங்க மவன்மேல எப்பவும் இப்படி கோவப்பட்டதேயில்லையே. இவ்வளவு கோபத்துல அடிக்க போயிட்டீயளே?”என்று பயத்தை உள்ளே வைத்துக்கொண்டு மெதுவாகக் கேட்டார்.

“அந்தப்பிள்ளைக்கு இவன் மேல ஆசையும் இல்லைக் காதலும் இல்லை. அதைவிட அந்தப்பிள்ளை அவ மாமானைக் கட்டிக்கத்தான் ஆசைப்படுறா. அதுதான் இவ்வளவுநாளும் இல்லாம இப்போ இவனைக் கல்லால அடிச்சிருக்கா. அதையாவது பேசியெடுத்து உன் தம்பிக்காரன்கிட்ட சொல்லி புரியவைச்சு கல்யாணத்தை முடிக்கலாம்னாலும் அதுவும் நடக்கல. அந்தப்பிள்ளைக்கு நம்மளை இவனுக்கு கட்டி வைச்சிருவாங்ளோன்னு பயம் வந்திடுச்சு. இதுக்கு மேல துளசியைத் தொந்தரவு பண்ணா அது செத்துகித்து போயிட்டுன்னா கஷ்டம். எல்லோருக்கும் வலியாயிடும்” என்றவர் மகனைத் திரும்பிப் பார்த்தார்.

அவனுக்கோ ‘ இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கோ?இத நம்மயோசிக்காமல் விட்டுட்டமோ?’என்று கொஞ்சம் தெளிவு வந்ததும் பயந்தவன் பின் தைரியமாக “யப்பாஆஆ துளசியைப் பத்தி உங்களைவிட எனக்கு நல்லாவே தெரியும். அப்படியெல்லாம் முடிவெடுக்கிறவ அவகிடையாது. அதுக்குபதிலா நம்ம மொத்தபேரையும் கிணத்துல தள்ளுணாலும் தள்ளுவாளே தவிற அவா அப்படியெல்லாம் முடிவெடுக்கமாட்டாள். க்கும் யாருக்கிட்டவந்து யாரைப்பத்தி பயமுறுத்துறீங்க. போங்கப்பா பீதியைக் கிளப்புறீங்க. போங்க போங்க வீட்டுப் பஞ்சாயத்தும் முடிஞ்சுப்போச்சு. யக்கோ போய் நீ கட்டிவைச்ச மூட்டையை எல்லாம் எடுத்து உன் கார் டிக்கில வைச்சிட்டு, உன்பிள்ளைங்க இரண்டுபேரும் டிக்கியைத் தூக்கி காருக்குள்ள வை. கிளம்பு கிளம்பு அடுத்த பஞ்சாயத்துக்கு உனக்கு தகவல் சொல்லிவிடுதோம் அப்போ வா. இப்போ இங்கிருந்து இடத்தைக் காலிபண்ணு,காத்து வரட்டும்”என்று அக்காவை அவளை ஊருக்குக் கிளப்பிவிடுறதுல குறியாக இருந்தான்.

“அதைக்கேட்டவள் லேய் என் மவன்களை விட்டே உன்னை கல்லை வைச்சு அடிக்கவைச்சிருவேன். பொறவு மண்ட முழுக்க தையல் போட்டுட்டுத்தான் திரியணும் பார்த்துக்க. வாயை கொஞ்சம் குறைச்சு பேசு. என் சின்ன மாமனாரு மவா துளசி படிக்க காலேஜிலதான் படிக்கா, அவளை உனக்கு பார்த்தா பிடிக்கும், அவளை பொண்ணு கேட்டு வரீயா”என்று மெதுவாகக் கேட்டாள்.

“யாரு அந்த தேவிகாவையா?அதெல்லாம் எனக்கு சரிபட்டுவராது”

“அதுசரி உன்னைக் கல்லால அடிக்கவதானே உனக்கு சரியாவரும். இரு அவா அவன் மாமனைக் கட்டடிக்கிட்டு உன் முன்னாடியே வயித்த தள்ளிட்டுவந்து நிப்பா பாரு அப்பதாம்ல உனகெல்லாம் சுரணை வரும். வாங்கல உங்க மாமனுக்கு கிறுக்கு முத்திப்போச்சு. அவனா ஒருநாளு தெளிவான்னு” மகன்களிடம் சொல்லியவாறே அவர்களை அங்கிருந்து இழுத்துக்கொண்டுபோய் காரில் ஏத்தினாள்.

கோதைக்கும் முத்துமாரிக்கும் மனசேகேட்கலை. நம்ம வீட்டுப்பையனை இப்படி அடிச்சிட்டாளே என்று மனசு ஆறவேயில்லை. 

முத்துமாரி திரும்பவும் வீட்டுக்குள்ள வந்தவள் “யப்ப்பாஆஆ உங்க மவனை கொஞ்ச நாளு வெளியூருக்கு அனுப்பி வைங்க. இவ்வளவு நடந்ததுக்கு பொறவும் அந்த காந்திமதி ஆச்சி சும்மாயிருக்கும்னு நினைக்காதிய, அது இப்பவே மவனுக்கும் பேத்திக்கும் கல்யாணத்துக்கு தேதியே குறிச்சிருக்கும். அவங்க கல்யாணத்தன்னைக்கி நம்ம தம்பி இங்க இருக்கவேண்டாம். அவனைவிட நல்ல சம்பளத்துல வேலைக்கு போயிரட்டும். அவனுக முன்னாடி என் தம்பி தலைகுனிஞ்சு நிக்கதுலாம் நம்மளால பார்க்க முடியாது”என்றவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

“யக்காஆஆ நீ எதுக்கு இப்போ அழுத. நான் அப்படியெல்லாம் மனசொடிஞ்சு போகமாட்டேன். என்னை யாரும் தலைகுனிய வைக்கவும் முடியாது. உன் தம்பி ஒன்னு நினைச்சா அது கண்டிப்பா நடத்திக்காட்டுவேன்க்கா. நீ மச்சானோடு ஊருக்குப்போ. என் கல்யாணத்துக்கு நானே கூப்பிடுவேன் அப்போ வா. என்னைப் பத்தி கவலப்படாத”

“அந்த துளசியைத் தவிற வேற யாரைக்கட்டினாலும் நான் கல்யாணத்துக்கு வருவேன். அவள கட்டுனன்னா வரமாட்டேன் பார்த்துக்க. நா இப்போ கிளம்புதேன்”என்றவள் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு கிளம்பினாள்.

கோதை அவக்கூடவே கார் வரைக்கும் போனவர் “அந்ந துளசியைப் பத்தியெல்லாம் நீ நினைக்காத அவ எக்கேடும்கெட்டுப்போறா, நீ உன்னையும் உன் குடும்பத்தையும் பாரு. அவா கல்யாணம் முடிஞ்சு அந்த அறிவழகன்கூடவே வெளிநடுக்குபோயிட்டான்னா இவன் எப்படியாவது கல்யாணம் பண்ணிப்பான். அதுவரைக்கும் நீ இந்தப்பக்கம் வராத”

“நீ ஏம்மா இப்படி சொல்லுத”

“சொல்லத கேளாம்பிள்ளை. அதுவரைக்கும் உன் தம்பிக்கிட்டயும் துளசியை பத்தி பேசவேண்டாம்”

“என்னத்தை பேசவேண்டாம்னு சொல்லுத. அவன் என்னை அவபின்னாடி அலையாமலா இருப்பான். போம்மா நீ. உனக்கும் ஒன்னுமே தெரியல நான் கிள்ம்புதேன்”என்று சொன்னவள் கணவனை காரை எடுக்க சொல்லிவிட்டாள்.

கோதைக்கும் மகள் இங்கனக்குள்ள இரண்டுநாள் இருந்தா நல்லாயிருக்கும்னுதான் நினைப்பு. இங்கயிருந்தா அவா வாய் சும்மாயிருக்காது. எதையாவது சொல்லி சண்டையிழுத்துட்டேயிருப்பாள். அதுக்கு அவா ஊருக்குப் போறதே நல்லதுன்னு அனுப்பி வைத்துவிட்டார்.

துளசி இப்போது வீட்டுல இருந்து வெளியே வந்தவள் அம்மாச்சி வீட்டுப்போனாள். அவள் பின்னாடியே பவானியும் வேலனும் போனார்கள்.

அவங்களைப் பார்த்ததும் காந்திமதிக்கு புரிந்துவிட்டது. பவானியைப் பார்த்து கண்களாலே என்னடி என்று கேட்டார்.

“இரும்மா உன் மருவனே” பேசுவாரு என்றுவிட்டு சும்மா நின்றாள்.

பவானி அப்பா மலையரசன்தான் “வாங்க மருமவனே. உள்ள வந்து உட்காருங்க. ஏய் முருகம்மா பிள்ளையிலுக்கு தண்ணி கொண்டுவா”என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.

கொஞ்ச நேர அமைதிக்குப்பின் வேலனே பேசினார்.

“அது வந்து மாமா இனியும் நம்ம அறிவழகன் துளசி விசயத்துல ஒரு முடிவெடுத்து கல்யாணத்தை முடிச்சு வைக்கலன்னா, குடும்பத்துக்குள்ள பிரச்சனையிலதான் வாழணும். என்னதான் என் அக்கா மகன் துளசியை விரும்பினாலும் துளசிக்கு அறிவழகனைக் கல்யணாம் பண்ணிக்கத்தான் ஆசை. சின்ன வயசுல இருந்தே நம்மளுமே அதை உறுதிப்படுத்திக்கிட்டோம். அதனால் ஏன் இன்னும் நாளைத் தள்ளிப்போடுவானேன். அவளோட படிப்பும் முடியப்போகுது.அதுதான் அறிவழகனுக்கும் துளசிக்கும் கல்யாணத்தை அவன் வந்ததும் உடனே நடத்திடலாம்னு எனக்கு யோசனையா இருக்கு. நீங்க உங்க முடிவை சொல்லுங்க மாமா”என்று நேரடியாகவே கேட்டார்.

“இதுல நான் சொல்லதுக்கு என்ன மருமவனே இருக்கு. அடுத்த மாசம் அவன் வர்றான் வந்த உடனே கல்யாணத்தை நடத்திருவோம். அவன்கிட்ட நான் இன்னைக்க்குப் பேசிடுறேன். நம்ம கல்யாண வேலையை ஆரம்பிப்போம். உங்களுக்கு எப்படி நடத்தணும்னு நினைக்கியளோ அப்படி நெத்திருவோம். என் மகன், என் பேத்தி அப்போ ஊரையே கூப்பிட்டு வைச்சு செய்யணும்னு எனக்கு ஆசை” என்று மலையரசன் சொன்னார்.

“எனக்கும் அதுதான் ஆசை மாமா. ஒத்தைப்புள்ளையா இருக்கா, அவளை அறிவுக்கு கெட்டிக்குடுத்துட்டு அவா சந்தோசமா வாழ்றதை நாங்களும் பார்க்கணும். அவளும் சந்தோசமா இருப்பா. அதுபோதும் எனக்கு.நீங்க நம்ம ஜோசியருக்கிட்ட பேசி நாளைக் குறிச்சிருங்க மாமா. அப்புறம் சேர்ந்தே பத்திரிக்கையை அடிச்சிடுவோம். கல்யாணம் முடிஞ்சதும் அவா பரீட்சை எழுதிட்டான்னா முடிஞ்சுது. அதுக்கப்புறம் அறிவு முடிவெடுத்து அவன் பொண்டாட்டிய படிக்க வைக்கிறான்னாலும் சரிதான்.இல்லை அவன்கூட கூட்டிட்டுப் போனாலும் சரிதான்.இரண்டுபேரும் சந்தோசமா இருக்கணும் அதுபோதும் எனக்கு”என்று பெண்ணைப்பெத்த அப்பனின் பரிதவிப்போடு வேலன் பேசினார்.

அதைக்கேட்டதும் துளசிக்கு அவங்கப்பா மேல அவ்வளவு பாசம் பொங்கி வந்தது.அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் அவரது தோளில் தலைசாய்த்துக்கொண்டாள்.

அவருக்கு உடனே சந்தோசத்தில் சிரிப்பு வந்தது. பவானியும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளது தலையை தடவிக்கொடுத்தார்.

அவளால் அவங்கப்பாவுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த சின்ன செய்கை அவரிடம் அவளது அன்பினை வெளிப்படுத்தியது.

தனக்காக எல்லாத்தையும் யோசித்து செய்யும் அப்பாவை நினைத்து அவளுக்கும் கண்ணீர் வந்தது.

காந்திமதி உடனே ஓடிப்போய் வத்தலும்(காய்ந்த மிளகாய்) உப்பு எல்லாம் எடுத்துட்டு வந்து மூணுபேருக்கும் ஒன்னாக சுத்தியவர்,அதைக் கொண்டு அடுப்பில் போட்டுட்டு வந்தார்.

மகனும் பேத்திக்கும் கல்யாணம் என்றதும் காந்திமதி சந்தோசத்துல முகமெல்லாம் பூரிப்போடு மகளைப் பார்த்தார்.

பவானிக்குமே தான் நினைச்சது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறி, நம்ம மகளுக்கு கல்யாணம் நடக்கப்போவதை நினைத்து கண்கள் கலங்கியது.

வேலனும் பேசி முடித்துவிட, அப்படியே அங்கயே இரவு உணவையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

மலையரசன் ஏற்கனவே குறித்து வைத்திருந்த நாட்களில் எப்போ கல்யாணம் வைக்கலாம் என்று காந்திமதியோடு கலந்து பேசிவிட்டு மகனிடம் பேச காத்திருந்தார்.

துளசிக்குத்தான் வீட்டுக்கு வந்ததும் கைகால் எல்லாம் அப்படியே வானத்தில் பறப்பதுபோன்று மிதந்தாள். ஓடிப்போய் அறிவழகன் போட்டோவை எடுத்து வைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அப்படியே படுத்துவிட்டாள்.

அவளது கல்யாணக்கனவுகள் ஆயிரத்திலிருந்து இப்போது இலட்சங்களா மாறிக்கொண்டிருந்தது!