ஆலங்குயிலின் ஆலாபனை-6
ஆலாபனை-6
துளசி பஸ்ஸில் வேடிக்கை பார்க்க, அவளது கையைப் பிடித்த பூங்கொடி “உங்க மச்சான் முரளி அங்க நின்னதை நீ பார்க்கலையாடி?”என்று கேட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்த்தாள்.
“அவனை எதுக்கு நான் பார்க்கணும். இனி அவனை நான் மச்சான்னு ஆசையோட பார்க்கப்போறதில்லையே.என் மாமாவைக் கட்டிக்கிட்டு வாழப்போறேன். அவனை ஏன் நான் பார்க்கணும்?”
“ஏன்டி உனக்கு மனசாட்சியே இல்லையா? முரளி பாவமில்லையா?”
“பாவமா? எதுக்குபாவம்?”
“உன்னை விரும்புறான்லடி. அவனும் உனக்கு முறைதான்”
“அத்தைப்பையன், முறைப்பையன்னு சொல்லுறதெல்லாம் இருக்கட்டும். அவனுக்கு விவரதெரிஞ்ச நாள்ல இருந்தே எனக்கு அறிவழகன் மாமாவுக்கும்தான் கல்யாணம் நடக்கப்போகுது. பெரியவங்க பேசி வைச்சிருக்காங்கன்னு அவனுக்கு தெரியுமா? தெரியாதா?”
“தெரியுமே, அதுதான் இந்த ஊருக்கே தெரியுமே”
“அப்புறம் என்ன மயித்துக்கு அவன் என்னை காதலிக்கிறேன், கட்டிக்குடுங்கன்னு வந்து பொண்ணு கேட்டான். என்மனசுல என் மாமாதான் இருக்காங்கன்னும் அவனுக்கு நல்லாவே தெரியும். அப்படி தெரிஞ்சும் கிறுக்குபுடிச்சு அலைஞ்சா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?”
“அதுவும் சரிதான்”
“மனசுங்கிறது பிச்சுக்கொடுக்கிறதில்ல பூங்கொடி. அது ஒருத்தருக்கு முழுசா மொத்தமா உயிரோட கொடுக்கிறது”என்றவளுக்கு கண்கள் நிறைந்துவிட்டது.
அதைப்பார்த்து பதறிய பூங்கொடி “ஐய்யோ துளசி நான் யதார்த்தமாதான் அவனும் பாவமில்லையான்னு கேட்டுட்டேன். அவனும் உன்னை மாதிரியே காதல்ல பிடிவாதமா இருக்கானேன்னு கேட்டுட்டேன். இனி இதைப்பத்தியெல்லாம் நான் கேட்கவும்மாட்டேன் பேசவும் மாட்டேன், மன்னிச்சிடுடி”என்று அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள்.
அன்று முழுவதும் துளசி பூங்கொடியிடம் அவ்வளவாக பேசாமல் அமைதியாகவே இருந்தாள். இப்போ பூங்கொடிக்குத்தான் தன்னைத்தானே எங்கயேவாது போய் முட்டிக்கணும்னு தோணுச்சு.
இரண்டுபேரும் சாயங்காலம் வீட்டுக்கு வரும்போதும் அப்படித்தான் அமைதியாக வந்தார்கள்.
பூங்கொடிக்கு துளசி பேசாமல் இருந்தது வருத்தமாக இருக்கவும் ஒரு மாதிரி சோகமாக வீட்டுக்குள்ளே போனாள்.
அவங்கம்மா சொர்ணம் இப்போ அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தார்.
“பார்த்தியா உன் சோட்டுக்காரி அவா மாமனைக் கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தப்போயிருவா. அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு எல்லாம் முடிவு பண்ணியாச்சு. அவக்கூட சேர்ந்து படிக்கப்போறன்னு படிச்சியே உனக்கு எப்போ கல்யாணம்?இல்லை அதுக்கும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு இன்னும் வீட்டுலயே உட்கார்ந்துக்க போறீயா?உன் அண்ணிக்காரிங்கக்கூட உன்னைவிட இளையவளுங்கதான் இரண்டுபேரும் கையில ஒன்னு இடுப்புல ஒன்னுன்னு இரண்டு பெத்துட்டாளுங்க. நீ இப்படியே படிச்சிட்டு இரு. உனக்கு மாப்பிள்ளையும் கிடைக்காம அவனுங்க கேக்கிறதையும் கொடுக்க முடியாம நாங்க பாடாபடப்போறோம். எனக்குன்னு காலம்போன கடைசில பெறந்திருக்கப்பாரு”என்று தலையிலடித்துக்கொண்டார்.
ஏற்கனவே துளசி பேசாமல் போனதுல வருத்ததோடு வந்தவளுக்கு, அம்மா இப்படி திட்டினதும் கோபம் சுர்ரென்று வந்துவிட்டது.
“ காலம்போன காலத்துல நீ ஏன் என்னைய பெத்தியாம். அப்படியே பிரண்டையை வைச்சு என்னை கழிச்சு விட்டிருக்கலாம்ல, இல்லை பிறந்ததும் வாயில நெல்லைப்போட்டுக் கொன்னுருக்கலாம்ல. எதுக்குதினம் தினம் இப்படி சாவடிக்கிங்க. உனக்கு என்ன பிரச்சனை உன் நகை பணத்தெல்லாம் எடுத்துட்டு போயிடுவேன்தானே. அப்படியெல்லாம் கொண்டுட்டு போகமாட்டேன். எவனாவது பார்த்து நானே அவன் பின்னாடி ஓடிப்போயிருதேன் போதுமா? அதுவும் நடக்கலியா அரளிக்காயைத் தின்னுட்டு சுடுகாட்டுல போய் படுத்துக்கிடுதேன். உனக்கு எந்தக் கஷ்டமும் வராது. எனக்கு செலவு பண்ணி கல்யாணம் முடிச்சு வைக்க நிலமை உனக்குவராது. பாடைச்செலவு மட்டும்தான். அதாவது என்னைப் பெத்தக் கடமைக்குச் செய்”என்றவள் கோபத்தில் பேக்கைத் தூக்கி வீசிவிட்டு விறுவிறுன்னு தோட்டத்துப் பக்கம் போய்விட்டாள்.
சொர்ணம் முதன்முறையாக அவள் எதிர்த்துப் பேசியதில் அதிர்ச்சியானாலும், அவள் பேசி வார்த்தைகளின் வீரியத்தால் அப்படியே உடைந்துப்போய் உட்கார்ந்துவிட்டார்.
முத்தையாதான் வந்து “ஏய் சொர்ணம் அவா ஏதோ கோபத்துல பேசிட்டுப்போயிட்டா, அதுக்கு எதுக்கு உட்கார்ந்து அழுத விடு. இதுக்கெல்லாமா அழுவாங்க?”என்று சமாதானப்படுத்தினார்.
“நம்ம என்ன அவளுக்கு எதுவும் தராம அனுப்பபோறமா?இல்லை நகைப்பணம்னு சேர்த்து வைக்கமா இருக்கோமா?எங்க இந்த வயசுல நம்ம இல்லாம போயிட்டா அநாதையா நின்னுருவாளேன்னுதான் அவளுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கப்பாக்கேன். அதுக்கூட அந்தக் கூறுக்கெட்டவளுக்கு புரியமாட்டைக்கு. அக்காக்காரிங்களும் பார்க்கமாட்டுளுங்க,அண்ணங்காரனுங்களும் பார்க்கமாட்டானுங்க.ஏதோ தள்ளிவிடணுமேன்னு எவனுக்காவது புடிச்சு கட்டிவைச்சிருவானுங்கன்னுதான் நம்ம இருக்கும்போதே எல்லாத்தையும் பார்த்து முடிச்சுவைச்சிறலாம்னு யோசிக்கேன். அது புரியுதா அவளுக்கு?”
“நம்ம என்ன நினைச்சாளும் அந்த சாமி என்ன நினைக்குதோ அதுதான் நடக்கும். அவா ஏதோ கோவத்துல பேசிட்டுபோறா,சின்னபுள்ளதானே எங்கப்போயிடுவா”என்று பொண்டாட்டியை சமாதானப்படுத்திவிட்டு மகளைத்தேடி போனார்.
அவளோ பின்னாடி தோட்டத்துல பூஞ்செடிகளுக்கு நடுவுல இருந்த துணி துவைக்கிற கல்லுல போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்த முத்தையா “பூங்கொடி உங்கம்மா யேசுனதுக்கா இப்படி வந்து உட்கார்ந்திருக்க?அவா அந்தப்பக்கம் உக்கார்ந்து அழுதிட்டிருக்கா, நீ இந்தப்பக்கம் வந்து அழுதிட்டிருக்க. இரண்டுபேருக்கும் பேசவும் தெரியல, பாசத்தைக் காண்பிக்கவும் தெரியல. போ போய் முகமெல்லாம் கழுவிட்டு ஏதாவது சாப்பிடு. எப்படியும் நீ வருவன்னு உனக்காக ஏதாவது செஞ்சி வைச்சிருப்பா போ”என்று மகளை சமாதான்ப்டடுத்தி உள்ளே அனுப்பி வைத்தார்.
அவள் மெதுவாக உள்ளே வரவும் அவளுக்காக காபியும் முறுக்கும் எடுத்து வைத்திர்ந்தாள் சொர்ணம். இதுக்குமேல என்னத்தை சண்டைப்போடன்னு அதை எடுத்துட்டு வந்து தின்னையில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துட்டே சாப்பிட்டாள். அவங்க அம்மாவும் பக்கத்தில் காபியோடு வந்து உட்கார்ந்தார். அவ்வளவுதான் அவங்க சண்டையெல்லாம் முடிஞ்சுபோச்சு.
முரளி அன்று முழுவதும் எதுவுமே சாப்பிடாமல் அவனது ரூமுக்குள்ளயே படுத்திருந்தான். கோதைக்கும் காலையிலிருந்தே மனசு சரியில்லை.
இப்படி நம்ம தம்பியே நம்ம கழுத்தறுப்பான்னு நினைக்கலையே என்னதான் சண்டைன்னு வந்தாலும் இப்படியா அக்கா குடும்பத்தை விடுக்கொடுப்பான் என்று ஆதங்கப்பட்டார்.
அவருக்குமே காலையிலயே துளசிக்கும் அறிவழகனுக்கும் கல்யாணத்தை அடுத்த மாசம் பேசிமுடிச்சிருக்காங்க என்ற செய்தியைக் கேட்டதுமே வேதனையாக இருந்தது. நம்ம மகன் ஆசைப்பட்டும் பொண்ணு தரமாட்டேன்னு தம்பிகாரன் பிடிவாதமா நின்னுட்டான்னா, துளசி கல்யாணத்தை பேசி முடிவு பண்ணுறதுக்குக் கூடவும் நம்மளைக் கூப்பிடலையே என்று எல்லா பக்கமும் வேலன் அவரை ஒதுக்கி வைச்சத நினைச்சு இப்போ அழுதார்.
சமுத்திரத்துக்கு கோபம் வத்துவிட்டது.
“இதென்ன இழவு வீடா?இப்படி வீட்டுக்குள்ள அழுதிட்டே இருக்க. உன் மவன் ஒருபக்கம் சோகத்துல ரூமுக்குள்ள இருந்து வெளிய வராம கிடக்கான். நீ வீட்டுல எதுவும் பண்ணாம சுத்துத. அதுதான் சின்னவயசுலயே முடிவு பண்ணிட்டுத்தானே இப்போ கல்யாணம் வைக்கிறாங்க. ஏதோ இவனை உண்மையா காதலிச்சு பிரிஞ்ச மாதிரியே சுத்திட்டுத் திரியுதான். ஒழுங்கா வயலுக்குப் போகச்சொல்லு,இல்லையா போய் அவனுக்குன்னு ஒரு வேலையைப் பார்க்கச்சொல்லு. கதுக்குமேல இந்த ஊருல இவன் இருக்கக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்”என்று பொண்டாட்டியை திட்டுற மாதிரி மகனையும் சேர்த்து திட்டினார்.
அதைக்கேட்ட கோதைக்குக் கோபம் வந்துவிட்டது.
“என்னாச்சு உங்களுக்கு இப்படி பேசிட்டிருக்கிய? நம்ம மவனுக்கு என் தம்பி துளசியைக் கட்டிக்குடுக்லைன்னு நானை வருத்தத்தில் இருக்கேன். அவனும் மனசு நொந்துப்போய் இருக்கான் அந்த வருத்தம் உங்கக்கிட்ட கொஞ்சம்கூட இல்லையே”என்று முணுமுணுத்தார்.
“பொலம்பிட்டிருக்காதடி. நம்ம வீட்டுக்கு யாரு மருமகளா வரணும்னு அந்த சாமி வைச்சிருக்கோ, அவதான் வருவா. நீ நினைக்கதும், உன் மவன் நினைக்கதெல்லாம் நடக்காது. உன் தம்பி பொண்டாட்டிக்காக பார்க்கிறான்னு நீ நினைக்கிற, ஆனால் ஒரு தகப்பனாக எனக்கு என் பிள்ளைங்களோட ஆசை எப்படி முக்கியமோ, அதே மாதிரிதான் வேலனுக்கு துளசி முக்கியம். அப்போ அவளுக்கு என்ன விருப்பமோ அதை அவன் செய்யிறான். நீ எதுக்கு குதிக்கிற. உன் மவனுக்காக எப்படி யோசிக்கிற அப்படித்தான் பவானியும் யோசிக்கும். அன்னைக்கு பஞ்சாயத்துக்கு வந்ததுக்குக் காரணம் என் மவனை அவா அடிச்சது தப்புன்னு வந்தேன். பொண்ணுக் கேட்டோம் குடுக்கலை. உன் மவன் படிச்சபடிப்பு துளசியைவிட நல்ல படிச்ச பொண்ணும் குணமான பொண்ணும் கிடைப்பான். இந்தப்பேச்சை விட்டுத்தொலை”என்று சத்தம்போட்டார்.
“அதெப்படிப்பா சட்டுன்னு மறக்கமுடியும். அவளைவிட படிச்சப்பொண்ணு கிடைப்பாப்பா.ஆனா எனக்கு பிடிச்சப்பொண்ணா கிடைப்பாளா? ஏம்னா துளசிதானே என் மனசுக்குப் பிடிச்சுப்பொண்ணு. இப்போ நான் என்ன செய்யணும் சொல்லுங்க?”என்று அமைதியாகக் கேட்டான்.
“அதுக்கு இப்போ என்ன செய்யசொல்லுத. தூக்கிட்டு வந்து தாலிகட்டுன்னு சொல்லுவேன்னு நினைக்கியோ?”
“அப்படியெல்லாம் ஒன்னும் நினைக்கல. நீங்க சும்மாயிருங்க அதுவே போதும். எனக்கு என்ன செய்யணும்னு தெரியும்”
“என்ன செய்யப்போற?கல்யாணத்தைன்னைக்குப் போய் சண்டையிழுப்பியோ?அடிச்சு கொன்னுருவேன் பார்த்துக்க”
“போங்கப்பா நீங்க வேற எரியற புண்ணுல பெட்ரலோ ஊத்தாதிங்க. என்னைத் தனியாவிடுங்க”என்றுவிட்டு வெளியே போய்விட்டான்.
கோதை மகன் வெளியே போனக்கோபத்தில் கணவரை முறைச்சிட்டுப்போனார்.
“இவளுக்கு வேற வேலையே இல்லை. மவன் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கணும்னு நினைக்கா. நான் என்ன சும்மாவா இருக்கேன். எனக்கும் எல்லாம் தெரியும்னு இவளுக்கு எப்போதான் புரியப்போகுதோ?”என்று புலம்பியவர் வயலை நோக்கிப்போய்விட்டார்.
நாட்களும் வேகமாகப் பறக்க, பத்தே நாளில் துளசி அறிவழகன் கல்யாண பத்திரிக்கை அடிச்சி வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.
அதை முதலில் கொண்டுவந்து வீட்டில் வைத்ததுமே துளசிக்கு மனசு அப்படியே சிறகடிக்க ஆரம்பிச்சிட்டு. இந்தக் கல்யாணம் முடிவானதிலிருந்து இன்னும் அறிவழகன் துளசிக்கிட்ட நேரடியாக பேசவேயில்லை. அதுக்கு முன்னாடிவரைக்கும் வாரத்துல ஒரு நாள் இரண்டு நாளுன்னு போன் பண்ணி துளசிக்கிட்டயும் பவானிக்கிட்டயும் பேசிட்டுத்தான் இருந்தான்.
இப்போ தினமும் அவங்கம்மா காந்திமதிக்கிட்டதான் கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது? என்ன நடந்திட்டிருக்கென்று விசாரித்தான்.
பவானிக்கு இதில் கொஞ்சம் வருத்தம்தான். துளசிக்கிட்டயும் விசாரித்தாள்.
“ஏன்டி உன் மாமான் என்னடி பத்துநாளா போனே பண்ணலையே. நீயாவது அவனுக்குப் போன் செஞ்சி பேசினியா என்ன?”என்று விசாரித்தாள்.
“நான் எப்படிம்மா இனி மாமாவுக்கு போன் செஞ்சு பேசுவேன். இதுக்கு முன்னாடி பேசினா மாமான்னு பேசுவேன். இப்போ எப்படிக் கூப்பிடுறது. எனக்கு ஒருமாதிரி இருக்கும்மா” என்று புதுப்பெண் என்ற நாணத்தோடு சொன்னாள்.
பவானிக்கு அவளது நிலை புரிந்தது. ஒருவேளை தம்பியும் இதுக்காகத்தான் பேசாம இருக்கான்போல என்று நினைத்தவளுக்கு தம்பிமேல் இருந்த சின்ன சுணக்கமும் பேய்விட்டது.
கல்யாண பத்திரிக்கை வந்ததும் துளசியைக் கூட்டிட்டுக்கிட்டு கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு, காந்திமதி மலையரசன் உட்பட எல்லோரும் திருநெல்வேலி கோவிலுக்குப் போய் பூஜை பண்ணி, சாமிக்கிப்ப வைச்சிட்டு எடுத்துட்டு வந்து குடுக்கலாம் என்று கோவிலுக்குப் போனார்கள்.
இவர்கள் கோவிலுக்குள் போய் பத்திரிக்கையை அர்ச்சனை தட்டில் வைத்துக் கொடுத்து பூஜைக்காக நின்றுகொண்டிருக்க, அவர்கள் எதிரே கோதை தன் குடும்பத்தோடு வந்து நின்றிருந்தார். அவங்களோடு முரளியும், அவனோட அக்கா முத்துமாரி உட்பட நின்றிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் பவனிக்கும் துளசிக்கும் முகம் ஒரு மாதிரியாகிற்று. வேலன்தான் அமைதியாக “வாங்க மச்சான் என்ன வேண்டுதலா?” என்று சமுத்திரத்தைப் பார்த்துக் கேட்டார்.
“ஆமா மாப்ள என் மகனுக்கு பொண்ணுப் பார்க்க ஜாதகத்தைக் கொடுக்கப்போறோம். அதுக்கு முன்னாடி சாமிக்கிட்ட வைச்சிக்குடுக்கலாம்னு வந்தோம்” என்று என் மகன் என்பதை அழுத்திச் சொன்னார்.
இனி அவன் உன் அக்கா மகன்ற முறையில் நிக்கமாட்டான். அவன் என் மகன் என்பதைத்தான் அப்படி அழுத்திச்சொன்னார். முன்னாடியெல்லாம் உன் மருமகன்னுதான் சொல்லுவார். அதை வேலனும் கவனித்தார். இனி பழையமாதிரி அக்கா மகனை உரிமைக்கொண்டாட வேண்டாம்னு தள்ளி நிக்கிறாங்க, நிக்கட்டும் அதுதான் என்பிள்ளைக்கு நல்லது என்று புரிந்துக்கொண்டு அமைதியாக சிரித்தார்.
அப்போது ஜயர் இரண்டுபேரு பேருக்கும் அர்ச்சனை பண்ணி, கல்யாண பத்திரிக்கையையும், ஜாதகத்தையும் எடுத்துட்டு வந்துக் கொடுத்தார்.
அதுல ஜாதகம் பவானி கையிலயும் பத்திரிக்கை கோதை கையிலயும் மாறிப்போயிருந்தது.
அதைப்பார்த்ததும் பவானி பதறினாள். வேலனோ “எதுக்குப் பதறிட்டிருக்க, என் இரத்த உறவுக்குத்தான் முதல் பத்திரிக்கைப் போகணும்னு இருந்திருக்கு, போயிடுச்சு”என்று சத்தமாகச் சொன்னவர் “மச்சான்,யக்கா உங்க மருமக கல்யாண பத்திரிக்க முதன்முதல்ல உங்கக் கைக்குத்தான் வந்திருக்கு. அது உங்கக்கிட்டயே இருக்கட்டும். என் கூடப்பிறந்தவளுக்குத்தான் அந்த சாமியே முதல்ல தரணும்னு விதிச்சிருக்காரு. தயவு செய்து அந்த பத்திரிக்கையை எடுத்துட்டு என் மகளை வாழ்த்துங்க. அவளோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு அவள் புள்ளைக்குட்டிகளோட வாழையடி வாழையாக நல்லா வழாணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க”என்றவர் திரும்பி துளசி அத்தை மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு என்றார்.
துளசியும் அப்பா இப்படி சொல்லுறாங்களே என்று பவானியின் முகத்தைப் பார்த்தாள்.
“போய் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு”- என்று வாயைத்திறந்து சொன்னாள்.
கோதைக்குத்தான் இப்போ என்ன செய்யணும்னு புரியாமல் கணவனை பார்க்க, அவரோ புள்ளையை ஆசிர்வாதம் பண்ணுடி என்றார்.
“நல்லாயிரும்மா. சந்தோசமா வாழ்க்கை வாழுங்க. உங்க கல்யாணம் அமோகமா நடக்கட்டும்”’ என்று இரண்டுபேரும் சேர்ந்து வாழ்த்தினார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முத்துமாரிக்கு கோபம் கோபமாக வந்தது. அதை வெளியே காண்பிக்க முடியாது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
முரளியோ எந்த உணர்வுகளையும் காட்டிக்காது கல்யாண பத்திரிக்கையை எடுத்து விரித்து அவர்கள் முன்னாடியே படித்தான். இப்போது துளசியைப் பார்த்து சிரித்தவன் “உன் கல்யாணத்துக்கு இந்த மச்சானோட பரிசு கண்டிப்பா உனக்கு வந்து சேரும் வாழ்த்துகள்” என்றான்.
என்ன முரளியா இப்படி அமைதியா பேசுறது?நம்பமுடியலையே என்று காந்திமதி பவானியும் நம்பமுடியாது பார்க்க, துளசிக்கு என்ன சொல்லணும்னு தெரியாது லேசாக சிரித்துவைத்தாள்.
அவன் வாய்தான் வாழ்த்து சொன்னது உள்ளமோ எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்தது. துளசியின் அந்த சிரிப்பு வேறு அந்த எரிமலையை இன்னும் குமுறிக்குமுறி வெடிக்கவைத்தது!