ஆலங்குயிலின் ஆலாபனை-2
ஆலாபனை-2
முரளியும் ராகவனும் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு ஊருக்குள்ளாக வரும்போதே ஏதோ சரியில்லையே என்று தோன்றியது.
‘இந்தம்மா மாமா வீட்டுல ஏதும்போய் சண்டைப்போட்டிருக்குமோ?’ என்று நினைத்தவன் ராகவனின் தோளைத்தட்டி “ ஏலேய் வண்டிய எங்க மாமாவீட்டுப்பக்கமா கொண்டுபோ. எங்கம்மா ஏதோ வில்லங்கம் பண்ணி வைச்சிருக்கும்னு நினைக்கேன்”என்று சொன்னான்.
அதைக்கேட்டதும் ராகவன் “சரிதான் உனக்கு செய்வினை வைக்க வேற யாருமே வேண்டாம்டா அத்தையே போதும். இந்தா வண்டியை துளசி வீட்டுக்கு விடுறேன்” என்றவன் சரியாக துளசியின் வீட்டு முன்னாடி கொண்டு வண்டியை நிறுத்தினான்.
அங்கயோ அவங்கம்மா நின்றிருந்தார்.
அவங்கம்மா கோதை அவனைப் பார்த்ததும் “ஐய்யோ தலையில அடின்னு சொன்னானுங்க எவ்வளவு பெரிய கட்டுப் போட்டு விடடிருக்காங்களே. என் மகன் நெத்திய அடிச்சு உடைச்சிட்டாளே பாவிமவ. தம்பி மவன்னு பாசம் வைச்சதுக்கு என் மகனை இப்படி அடிச்சிருக்காளே. யம்மா மாரியம்மா நீதான்தாய் இதுக்கெல்லாம் நியாயம் கேட்கணும்”என்று திட்டிவிட்டு ஓடிவந்து அவனது தலையைத் தொட்டுப்பார்த்தார்.
“யம்மா நீ எதுக்கும்மா இங்க வந்த?நான்தான் வீடடுக்கு வந்திருப்பனே. இங்கவந்து ஏன் சண்டைப்போடுத”என்று அவரது கையைப் பிடித்துக்கொண்டு கேட்டான்.
அவரோ முந்தானையால் தனது கண்ணீரைத் துடைத்தவாறே “நீ எதுக்குடா அவக்கிட்ட கல்லால அடி வாங்கிட்டு நிக்கணும்?நீதானாடா அவளுக்கு உறுத்துள்ள முறைப்பையன். நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டதுல என்ன தப்புன்னு உன்னை கல்லால அடிச்சிருக்கான்னு சொல்லு. அதுதான்டா என் தம்பியைப் பார்த்துக் கேட்கவந்தேன்”என்று சத்தம்போட்டு எல்லோருக்கும் கேட்கிறமாதிரியே பேசினார்.
அதைக்கேட்டவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.”யம்மா இது நம்ம வீட்டு பிரச்சனை இதைக் கேட்க மொத்த ஊரையே கூட்டி வைச்சுத்தான் கேட்பியா என்ன?வா நம்ம வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்”என்று அவரது கையைப் பிடித்து இழுத்தான்.
அதற்குள் அவளது அக்கா முத்துமாரியும், அப்பா சமுத்திரமும் அவன் பக்கத்தில் வந்தவர்கள் “அதெப்படில இந்த விசயத்தை சும்மாவிட முடியும். என் மகனை நடு ஊருக்குள்ள வைச்சு கல்லால அடிச்சு இரத்தம் வரவைச்சிருக்கா, எந்தத் திமிருல அப்படி செய்தான்னு கேட்கவேண்டாமா?உங்க மாமானுக்கு தெரியாமலா இது நடந்திருக்கும். உங்க அத்தைக்காரி அவன் தம்பிக்காக இதையெல்லாம் செய்ய சொல்லிருப்பாள். அந்த தெனாவெட்டுலதான் துளசியும் நடந்துக்கிறா. இதுக்கு ஒரு முடிவுகட்டணும்ல. அதுக்குத்தான் வந்தோம்”என்று கோபத்தில் பேசினார்.
அதைக்கேட்டதும் பவானிக்கு கோபம்தான் வந்தது“இவங்க மகன் பொம்பளைபுள்ளையை நடுரோட்டுல வைச்சு, வழியைமறிச்சு வம்பு பண்ணினால் கல்லால அடிக்காமல் சும்மாவா இருப்பாங்க. அதுதான் என் மகள் அடிச்சு விரட்டிருக்காள். அத்தை மகன், சொந்தக்காரன்னா சும்மாவா விடமுடியும்”என்று முணுமுணுத்தாள்.
அதைக்கேட்டதும் துளசியின் அப்பா வேலன் சட்டென்று பவானியை அடித்துவிட்டார். பவானி இதை எதிர்பார்க்கவில்லை. அப்படியே கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.
அவர் எதுக்கு அடிச்சாருன்னு யாருக்குமே தெரியாது. பவானி முணுமுணுத்தது அவருக்கு மட்டும்தானே தெரியும்.
அந்த நொடியில் எல்லோரும் அப்படியே வாயைப் பிளந்துக்கொண்டு அமைதியாகிவிட்டனர். அந்த அமைதிக்கு நடுவில் வேலன் பேசினார்.
“அக்கா இங்கப்பாரு என் மகளுக்கு யாரைப் பிடிச்சிருக்கோ அவனைத்தான் அவளுக்குக் கட்டிவைப்பேன். அவளுக்கு அவங்க மாமன் அறிவழகனைத்தான் பிடிச்சிருக்கு. அதனால் அவனுக்குத்தான் கட்டிவைப்பேன். சின்ன வயசுல இருந்தே அறிவழகனுக்குத்தான் துளசின்னு பேசி வைச்சதுதானே. அப்போ எல்லாம் நீங்க சும்மாயிருந்துட்டு இப்போ வந்து வம்பிழுத்திட்டிருந்தா துளசிக்கும் கோபம்வரத்தானே செய்யும். அந்தக் கோபத்துலே ஏதோ கல்லெடுத்து அடிச்சிட்டா, அவ செய்ததுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். இனி உன் மகனை சும்மாயிருக்கச்சொல்லு. அவனுக்கு வேற பொண்ணுப்பார்த்துக் கட்டிவை. என் மகளுக்காக காத்திருக்கணும்னு அவசியமில்லை. இனி உன் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் சரிவராது. கொஞ்சம் ஒதுங்கியே இருப்போம் அதுதான் நல்லது. என் மகளோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நான் நினைக்கிறேன். அவ பேரையே உன் மகன் கெடுத்திருவான் போலிருக்கு. தயவு செய்து இங்கிருந்துப்போங்க, ஊர் முழுக்க வேலன் மக சமுத்திரம் மகனை கல்லால அடிச்சிட்டாளம்னுதான் பேசிட்டிருக்காங்க. இது சரியில்லை”என்று கையெடுத்துக்கும்பிட்டு மன்னிப்பும் கேட்டு, தன் மகளுடைய கல்யாண விசயத்தில் தன் முடிவையும் ஊர்காரங்க முன்னாடி வேலன் சொல்லிவிட்டார்.
உள்ளே போன பவானிக்கு வீட்டுக்காரர்கிட்ட அடிவாங்கினது வலிச்சாலும், துளசியை தன் தம்பிக்கே கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன்னு அவங்க அக்கா முன்ன்டியே சொன்னதைக்கேட்டதும் அப்படியொரு சந்தோசம் அவளுக்குவந்தது.
ஒரே தம்பி,பாசமான தம்பி, அவனுக்கே தன் மகளைக் கட்டி வைச்சிடணும்னு துளசி பிறந்ததிலிருந்து ஆசைப்பட்டிட்டிருந்தவளுக்கு இது எவ்வளவுபெரிய சந்தோசமான முடிவாக இருக்கும்!அதனால் கண்ணைத் துடைச்சிட்டு,புருஷன்மேல உள்ள கோபத்தை தூக்கி ஓரமா வைச்சிட்டு, இப்போ வெளியே வந்து கோதையை ஏளனமாகப் பார்த்தாள்.
அதைக்கண்டதும் கோதைக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது. உடனே குனிந்து இரண்டு கையாலும் மண்ணையள்ளி தம்பியோட வீட்டுக்கு நேராக வீசிவிட்டு “அம்மையும் மவளும் என் மவனோட ஆசையைக் குழித்தோண்டிப் புதைச்சிட்டு நல்லாவே வாழமாட்டீங்கடி. உன் மகள்லாம் நாசமாதான் போவா. என் வயிறெரிஞ்சு சொல்லுதேன்டி. நீங்க இரண்டுபேரும் விளங்காமதான் போவீங்க. உன் தம்பியைக் கட்டின்லும் உன் மவா வாழமாதான்டி போவா. என் மவன் எவ்வளவு ஆசையோடு உன் மவளைக் கட்டிக்க நினைச்சான் தெரியுமா. மாண்ணா போயிடுவீங்கடி”என்று சாபமிட்டவர் சத்தமாக அழுதார்.
அதைக்கேட்ட முரளிக்கு ஒருமாதிநியாகிவிட்டது. “யம்மா எதுக்கும்மா இப்போ மாமா வீட்டுக்கு சாபம்போடுற?துளசிக்கு இஷ்டபட்ட வாழ்க்கை வந்தா வாழட்டும். அதுதான் அந்த ஆண்டவன் வைச்சிருக்காருன்னா அப்படியே அவா நல்லா வாழட்டும். எதுக்கு இப்படியெல்லாம் பேசுத. வா நம்ம வீட்டுக்குப்போவோம்”என்றவன் அவரை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்தான்.
ராகவன் அவங்கக்கூட மெதுவா வண்டியை உருட்டிக்கிட்டுப் போனான். கோதை மண்ணள்ளி வீசி போட்ட சாபத்தைப் பார்த்து ஒரு நொடி பவானிக்கு நெஞ்சே வெடிச்சிரும்போல இருந்தது.
வேலனுக்கு இப்போதுமே முரளியைப் பிடிக்கும்தான். அவன் அவங்கம்மாவிடம் பேசினதைக் கேட்டுட்டுத்தானே இருந்தார். ஒருவேளை அறிவழகனுக்குத்தான் துளசியைக் கட்டிக்கொடுப்பேன்னு வாக்குக்கொடுக்காமல் இருந்திருந்தால் அக்கா மகனுக்குக் கட்டிக்கொடுத்திருப்பார். ஆனால் இங்கே துளசி அப்பா மாமாவைக் கட்டிக்க சம்மதம் சொல்லிட்டாருன்னு சின்ன வயசுலயிருந்தே மனசுல ஆசையை வளர்த்திட்டிருக்காளே. அதை எப்படி திடீர்னு மாத்தமுடியும்?அக்கா மகன் வாழ்க்கையைவிடவும் நம்ம பொண்ணு வாழ்க்கைதான் முக்கியம்னு பேசி அனுப்பிவிட்டுட்டார். ஆனாலும் அவரது மனது கொஞ்சம் சங்கடப்படத்தான் செய்ததது.
பவானிக்கு இப்போதான் நிம்மதி பெருமூச்சே வந்தது. எப்போ துளசிக்கு பதிணெட்டு வயசு முடிஞ்சுதோ அப்பத்திலிருந்து கோதை தன் மகனுக்காக துளசியைப் பொண்ணுக்கேட்டு பிரச்சனைப் பண்ணிக்கிட்டேயிருந்தாள். இப்போ வேலன் உடைச்சுப்பேசியதும்,கோதை திரும்பி போனதையும் பார்த்து பவானிக்கு மனசுக்குள்ள குளுகுளுன்னு இருந்தது.
துளசி ‘நான் பெத்த மவளே இன்னைக்குத்தான்டி நீ உருப்டடியான வேலையே செய்திருக்க. உன் அத்தை மவனை கல்லால அடிச்சதும் அடிச்ச உன்னைப் பொண்ணுக்கேட்டு தொந்தரவு பண்ணிட்டிருந்த உன் அத்தைக்காரி துண்டைக்காணும் துணியைக்காணும்னு ஓடிட்டாளே!உன் அப்பாவும் சரியான முடிவைத்தான் எடுத்திருக்காரு. இந்ததடவை என் தம்பி வந்ததும் முதல்ல உங்க கல்யாணத்தைதான்டி நடத்தி வைக்கணும். இன்னைக்கே எங்க அம்மாக்கிட்ட பேசி முடிச்சு, ஒரு முடிவு பண்ணிடுறேன். இனியும் இப்படியே இருந்தா சரிவராது’என்று மனசுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தாள் பவானி.
அவள்போடும் திட்டம் எதுவும் தெரியாமல் அவள் பக்கத்தில் வந்த வேலன் அவளது கன்னத்தைப் பார்த்துவிட்டு “அது அக்காவை நீ பேசினதும் கோபத்துல அடிச்சிட்டேன் விடு. போய் சாப்பாட்டுக்கு ரெடி பண்ணு. துளசி வந்தா சொல்லிவை. எப்படியும் கல்யாணம் முடிஞ்சு அடுத்தவீட்டுக்கு வாழப்போறப் பொண்ணு இப்படியா கோபத்துல அடிக்கிறதுக்கு நிக்கிறது. உன் தம்பியவே கல்யாணம் பண்ணிட்டு போனாலும் அங்கயும் அவன் கையை நீட்டுனா இவா திருப்பி அடிக்கமுடியுமா?கொஞ்சம் அனுசரிச்சு பொறுமையா போகணும்ல, சொல்லி புரியவை. நம்ம முரளிங்கிறதுனால ஒன்னுமில்ல, கேஸ் எதுவும் கொடுக்கலை. வேற யாராவதுன்னா இந்நேரத்துக்கு பிரச்சனை ஆகிருக்கும். என்ன புரிஞ்சு நடந்துக்க சொல்லு”என்றுவிட்டு உள்ளே போய்விட்டார்.
பவானியும் தலையை ஆட்டிவிட்டு வேகமாக உள்ளே போனவள் படபடவென்று வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வேகமாக தனது அம்மாவீட்டுக்குப் போனார்.
அங்கே பவானியின் அம்மா காந்திமதி மகள் எப்போ வருவான்னுதான் காத்திருந்தார் போல “ஏன்டி இவ்வளவு நேரமா இந்தா இருக்க ஒரு தெருவைத் தாண்டி வர்றதுக்காச்சு. நான் காலையிலயே அந்த முருகம்மாள்கிட்ட உன்னை வரச்சொல்லி சொல்லிவிட்டனே வந்துச் சொல்லலியாக்கும்”என்று விசனமாகக் கேட்டார்.
“நீ வேறம்மா உன் மருமவன் வீட்டுல இருக்காரு. அதுதான் எல்லா வேலையும் முடிச்சு வைச்சிட்டு, அவருக்கு சாப்பாட்டும் தந்துட்டு வந்தேன். ஆமா எதுக்கு அவ்வளவு அவசரமா வரச்சொன்ன?”என்று கேட்டுவிட்டு அம்மா என்ன வைச்சிருக்கா என்று சமையற்கட்டுப் பக்கம்மெல்லாம் போய் பார்த்துட்டு வந்தாள்.
“ஏன்டி உன் மைனிகாரி காலையிலயே ஏதோ ஊருக்கூட்டத்தை உன் வீட்டு முன்னாடி கூட்டிட்டானு சொன்னாங்களே அதென்ன எழவு கூட்டம்னுதான் கேட்க வரச்சொன்னேன்”
“அதுவா உன் பேத்திக்காரி அவா மவன் மண்டையை உடைச்சிட்டு காலேஜிக்கு போயிட்டா. அதுக்குத்தான் இவா ஊரைக்கூட்டி கல்யாணத்தை பேசிப்புடலாம்னு வந்தா. உன் மருமவன் என் பொண்டாட்டியோட தம்பிக்குத்தான் கல்யாணம் பண்ணிக்குடுப்பேன். என் மவளோட ஆசைதான் முக்கியம்னு முடிச்சுவிட்டுட்டாரு. இது நல்லதாபோச்சுது. இனி பொண்ணைக் கொடு பன்னைகொடுன்னு கத்தமாட்டாள்ல”
“உன் மைனிக்காரி வாய் என்னைக்குத்தான் அடங்கியிருக்கு. உன் புருஷன் சொன்னா மட்டும் அவா கேட்டிருவாளா என்ன?”
“அவா கேட்காளோ கேட்களையோ அடுத்து அவ ஊரைக்கூட்டி பேசதுக்கு முன்னாடி தம்பிக்கும் துளசிக்கும் கல்யாணத்தை முடிச்சிருவோம். அதுக்கு என்ன வழின்னு சொல்லும்மா”
“நீ சொல்லுறதும் சரிதான். நான் உன் தம்பிக்கிட்ட ஏற்கனவே கல்யாணத்தைப் பத்தி பேசினேன்டி. அடுத்த வருஷம் செய்யிறேன்மான்னு சொன்னான். ஏன்டான்னு கேட்டதுக்கு துளசி படிப்பு முடியட்டும்னு சொன்னான்”
“அதுதான் இந்த வருஷம் முடியப்போவுதே. அவன் அடுத்த மாசம் வரும்போது பேசி உடனே கல்யாணத்தை முடிக்கப்பாரு. நான் இப்பவே துளசி ஜாதகத்தை எடுத்துட்டு வந்திருக்கேன். தம்பி ஜாதகத்தையும் எடுத்துட்டு வா நம்ம ஊரு ஜோசியருக்கிட்டயே தேதியை கேட்டுட்டு வந்திரலாம். அப்பாவை எங்கம்மா?”என்று பேசியவாறே அவங்கப்பாவை தேடினாள்.
“அவரும் எதுக்கோ உன் தம்பி ஜாதகத்தை எடுத்துட்டுத்தான் போனாரு. ஒருவேளை இந்தப்பிரச்சனை தெரிஞ்சுதான் அப்பா எடுத்துட்டுப்போனாரோ என்னவோ தெரியலையே?”என்று பேசிக்கொண்டிருக்கம்போதே அவங்கப்பா உள்ளே வந்தார்.
“பவானி நீ இங்கேயா இருக்க.நான் உன்னை உன் வீட்டுல தேடிட்டுவாரேன். மருவன்தானே அங்க இருந்தாரு”என்று வந்தவருக்கு தண்ணியைக்கொடுத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“அப்பா நீங்க தம்பி ஜாதகத்தை எடுத்துட்டு போனீங்களா?”
“ஆமாம்மா. அறிவுக்கும் துளசிக்கும் கல்யாணயோகம் எப்போம்னு கேட்கப்போனேன். இப்பவே இரண்டுபேருக்கும் குரு திசைதான் நடக்குதாம். எபஅவேணும்னாலும் கல்யாணத்தை நடத்தலாம்னு சொல்லிட்டாரு.ஐஞ்சாறு தேதியை குறிச்சு வாங்கிட்டு வந்துட்டேன். அவன் வந்ததும் உடனே கல்யாணத்தை நடத்திட்டா நல்லது பாரு”
“அதுக்காகத்தான்பா நானும் துளசி ஜாதகத்தை எடுத்துட்டு வந்தேன். ஆமா அவா ஜாதகம் உங்கக்கிட்ட இருக்கா என்ன?”
“அதுதான் ஒரு நவலு எடுத்து தந்தியே. அது என் பைக்குள்ளதான் இருந்துச்சு. மருமவன்கிட்டயும் இதைப்பத்தி பேசணும். எப்போ வரட்டும் பேசுறதுக்கு?”
“இன்னைக்கு வேண்டாம்பா. இரண்டு மூணு நாள் போகட்டும். இவா வேற அந்த முரளிப்பைய மண்டையை உடைச்சிருக்கு. என் மைனிகாரி வேற ஆடிட்டு போயிருக்கா. என்னதான் என் வீட்டுக்காரரு சம்மதம் சொன்னாலும் அக்காவுக்கு ஒன்னுன்னா துள்ளுவாரு. இந்தப்பிரச்சனை கொஞ்சம் ஆறட்டும். நானே சொல்லுதேன் எப்போ வரணும்னு அப்போ வாங்க”
சரிம்மா எனக்கு சாப்பாடு எடுத்து வை என்றவர் உள்ளே போய்விட்டார்.
“காந்திமதிதான் ஏன்டி அப்போ எல்லாத்தையும் ஒன்னோன்னோ செய்யத் தொடங்கிடுவோம். அப்போ கடைசி நேரத்துல இருந்து ஓடக்கூடதுபாரு. உன் மைனிக்காரி வேற எப்போ பிரச்சனை பண்ணலாம்னு அலைவா அதுக்கு இடங்கொடுக்காமல் சத்தங்காட்டாம கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிடணும். உன் புருஷன்கிட்ட நீதான் கொஞ்சம் பேசிகீசி புரியவைக்கணும்”
“அத நான் பார்த்துக்கிறேன் உன் மவன்கிட்ட சொல்லி இந்தத் தடவை வரும்போது கல்யாணத்தை முடிக்கிற வழியைப்பாரு. என் மவள இந்த வீட்டுக்கு வாழ அனுப்பணும்னு நான் கங்கணம்கட்டிக்கிட்டு நிக்கேன். அவனுக்கு அது புரியவேமாட்டேங்குது. சரி நான் வந்து நேரமாகிட்டு. துளசியும் வந்திடுவா”என்று அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு நடந்தாள்.
காந்திமதி மனசுக்குள்ள இப்பவே மவனுக்கு கல்யாணத்தை இந்தவாட்டி எப்படியாவது நடத்தி வைச்சிரணும், அவனுக்கும்தான் முப்பது வயசாகுது. இன்னும் ஏன்தான் கல்யாணத்தைத் தள்ளிப்போடுதானோன்னு தெரியலை. அக்கா மவன்னுதான் உறுதியாயிட்டுல்ல அதுக்கு எதுக்கு இவ்வளவு நாளைத் தள்ளிப்போடணும்.அந்தந்த காலத்துல கல்யாணத்தை முடிக்கவேண்டாமா என்று மவனைத் திட்டிக்கொண்டு அவனது கல்யாணத்துக்கு என்னவெல்லாம் செய்யணும் என்று மனசுக்குள்ளயே காந்திமதி ஆச்சி திட்டம்போட்டுக்கொண்டிருந்தார்.