அநாயகா-11

அநாயகா-11

அநாயகா-11

இளந்தீரன் இப்போ போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்க்க யாருமே வரவில்லை. அவனது கட்சியில் இருந்தும் அவனைப் பார்க்கவோ, அவனுக்காக போலீஸ் ஸ்டேஷனில் பேசவோ யாருமேவரவில்லை. அவனது உயிர் நண்பன் ரகுவரன் உட்பட யாருமே வரவில்லை.

அது அவனுக்குள்ளே ஒரு மாதிரியான கசப்பான மனநிலையைக் கொடுத்து யோசிக்கவைத்தது. 

‘என்னை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்துக் கூட்டிட்டுப்போக ஏன் யாருமே வரலை? ஒருவேளை நம்மளைக் கண்டுக்காமல் விட்றணும்னு பண்றாங்களா?அப்படியிருக்க வாய்ப்பில்லையே! இதுலயும் என் மாமன்காரன் குடும்பத்தோட சதியிருக்குமாயிருக்குமோ? எவன் என்ன பண்ணினாலும் என்னை அசைக்கமுடியாதுடா. நான் என் நண்பனையும், என் தலைவனையும் நம்புறேன். அவங்க கண்டிப்பா இதுக்குள்ள ஊர்ல இருக்கிற பெரிய பெரிய லாயர்ஸ் எல்லோரையும் தேடிப்போய் பேசிருப்பாங்க. அவங்களோட இங்க வந்து என்னை இங்கிருந்து கெத்தா,மாலை மரியாதையோட கூட்டிட்டுப் போவாங்க’என்று நினைத்தவனது முகம் இப்போது கொஞ்சம் தெளிவாகியது.

அவன் உட்கார்ந்திருந்த சேரை அந்தப்பக்கமாகக் கொஞ்சம் இழுத்துப்போட்டு அங்கிருந்த பென்ச் ஒன்றில் தன்னுடைய, காலை நீட்டி வைத்து, கண்ணை மூடிப் படுத்துக்கொண்டான்.

அதைப்பார்த்த கான்ஸ்டபிளும் இன்ஸ்பெக்டர் நல்லபெருமாளும் கோபத்தோடு அவன் பக்கத்தில் வந்து நின்றார்கள்.

அவர்கள் வந்து நிற்கும் சத்தம்கேட்டதும், இளந்தீரன் கண்ணைத் திறந்து அலட்சியமாகப் பார்த்தான்.

“என்னடா பார்க்கிற?நீ இப்படிப் பார்த்தா நாங்க பயநதிடணுமா என்ன? இது உன்வீடுல்ல, போலீஸ் ஸ்டேஷன். உன் இஷ்டத்துக்குப் படுத்துத் தூங்குறதுக்காக ஒன்னும் உன்னை கைது பண்ணிக் கூட்டிட்டு வரலை. உன்னை இங்கிருக்கிற லாக்கப்புக்குள்ள தூக்கி வைச்சு ரிவீட்டு அடிக்கத்தான் அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கோம். ஒழுங்கு மரியாதைக்கு எழுந்து உட்காருடா”என்று மிரட்டும் தொணியில் பேசினார்.

அதைக்கேட்டதும் இளந்தீரன்“ஐய்யோ நீங்க மிரட்டுறதைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கே. லாக்கப்புக்குள்ள வைச்சு ரிவீட்டு அடிச்சா நான் செத்திருவனே!இப்போ என்ன பண்றது இன்ஸ்பெக்டர் சார். உங்க கால்ல விழணுமா. ஐய்யய்யோ பயமா இருக்கே”என்று பயந்த மாதிரி பேசினான். அவனதுஉடல்மொழியே அவன் நக்கலாகப் பேசுகிறான் என்று சொல்லியது.

அதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் “டேய் டேய் அடங்கு உன் நடிப்பெல்லாம் எங்களுக்குத் தெரியும். இப்போவரைக்கும் உன் மேலக் கைவைக்காமல் இருக்கிறதுக்குக் காரணம் உங்க மாமா மட்டும்தான். அவருக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் அப்புறம் இருக்குடா உன்னை என்ன பண்றோம் பாரு”என பல்லைக்கடித்தார். 

அவருக்கோ இவனை இப்பவே அடிச்சு எலும்பை உடைக்கணும்னுதான் எண்ணம் வந்தது. ஆனாலும் சரியான கேஸ் இல்லாமல் கையை வைச்சிடக்கூடாது. எப்.ஐ.ஆர் எல்லாம் போட்டு கையெழுத்து வாங்கிட்டு அப்புறம் இவனைக் கவனிக்கிற கவனிப்புல இவனோட வாய்க்கொழுப்பெல்லாம் அடங்கிடணும் என்றுதான் நினைத்து இப்போது அவனை சும்மாவிட்டு வைச்சிருக்கார்.

அவனோ அவர் சொன்னதைக்கேட்டும் கேட்காதமாதிரி மீண்டும் சேரில் சாய்ந்து,கண்ணை மூடித் தூங்கிவிட்டான். 

அடுத்த நாள் காலையில் வரைக்கும் அவனுக்காக யாருமே ஜாமீன் ஒன்னும் எடுத்துட்டு வரவில்லை, அவனுக்காக பேசுவும் வரவில்லை. எந்த வக்கீலையும் அவனுக்காக அனுப்பவில்லை. அவனது அப்பா அம்மான்னு யாருமே வந்து அவனுக்கு உதவவும் வரவில்லை.

அவன் பாதித் தூக்கத்தில் எழுந்துப் பார்த்தான். விடியகாலை ஐந்து மணி என்று ஸ்டேஷன் கடிகாரம் காட்டியது.

அவனுக்காக வருவாங்கனனு அவன் நம்பின யாருமே அவசர அவசரமா, அர்த்த இராத்திரியிலயே வாக்கீலைக் கூட்டிக்கிட்டு பாவமாக ஓடி வந்திருக்கவில்லை என்பதை அப்போதான் உணர்ந்தான்.

அவன் தூக்கத்திலிருந்து எழுந்து பாவமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், இப்போ நக்கலாகச் சிரித்தார். 

“என்ன‌ வருங்கால சி.எம் சார் தூங்கி முழிச்சிட்டீங்க போலிருக்கு. என்ன அப்படி பார்த்திட்டிருக்கீங்க? உங்களைப் பார்க்க பெருங்கூட்டம் வெளியில காத்துநிக்கிறாங்களாம், அவங்களை உள்ளே உங்களை பார்க்க ஒவ்வொருத்தரயா வரச்சொல்லட்டுமா?இல்லை நீங்க வெளியப்போய் அவங்களைப் பார்த்து கைக்காட்டிட்டு வர்றீங்களா?ஏன்னா இந்த உலகம் பிற்காலத்துல வந்து,இந்த இன்ஸ்பெக்டர் நம்ம வருங்கால சீ.எம்மை இப்படி மக்களை பாக்க விடாம அடைச்சு வச்சுட்டாங்கன்னு சொல்லிடக்கூடாதுல்ல. நாளைக்கு அந்த பழியெல்ல்ம் எங்க மேல வந்துடுமே? அதுக்காகத்தான் சொல்லுறேன். இப்போ எழுந்து வெளியேவாங்க வருங்கால சி.எம்.சார். நீங்க அப்படியே வெளியே வந்து கொஞ்சம் கெத்தா போஸ் கொடுத்தா நல்லா இருக்கும்னு தோணுது”என்று கேவலமான பார்வையோடு நக்கலாகச் சொல்லிவிட்டு அவனது கையைப் பிடித்து வெளியே இழுத்தார்.

அவனோ அவரிடம் எதுவுமே சொல்லாது, அவரிடமிருந்து தன் கையை வேகமாக இழுத்துக் கொண்டவன் கோபத்தில் அவரை முறைத்து பார்த்தான். 

அவன் முறைப்பதை பார்த்ததும் எரிச்சலான இன்ஸ்பெக்டர் “என்னடா முறைப்பு வேண்டியிருக்கு உனக்கு?நீ செய்தது கிரிமினல் குற்றம். அதுக்கு ஜெயிலுக்குள்ள வந்துட்டு இன்ஸ்பெக்டரான என்னையவே பார்த்து முறைப்பியோ?”என்றவர் அவனை அடிப்பதற்காக கையை ஓங்கினார்.

அதற்குள் அங்கிருந்த கான்ஸ்டபிள் ஓடிவந்தார்.

“சார் சார் அது நம்ம எம்.எல்.ஏவுடைய மருமகன் சார். என்னதான் கோவமா இருந்தாலும் அவன் மேல நீங்கக் கையை வச்சிடாதீங்க சார். அவர் கண்ணு முழிச்சு வந்துட்டாருன்னா நம்மளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாரு. அவரைப்பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே. அந்த தைரியத்தில்தானே இவன் இவ்வளவுதூரம் பிரச்சனை செய்திட்டிருக்கான். இப்போ மட்டும் நீங்க அவன் மேலக் கையை வச்சீங்க அவ்வளவுதான் அடுத்து வரப்போற பிரச்சினைகளை நீங்க மட்டும்தான் சார் சமாளிக்கணும். நாங்க யாரும் இதுக்குப் பொறுப்பாக முடியாது”என்று இன்ஸ்பெக்டரையே கான்ஸ்டபிள் எச்சரித்ததும் இன்ஸ்பெக்டர் ஒன்றும் சொல்லாமல், இளந்தீரனை அடிக்க ஓங்கிய கையை அப்படியே கீழே போட்டுவிட்டார். 

ஆனாலும் அவருக்கு கோபம் அடங்கவேயில்லை. இளந்தீரனை பார்த்து கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்புவது போல பேசினார். 

“உன் மாமா உயிருக்கு போராடிட்டிருக்கார். அவர் பொழைச்சி வந்தா நீ தப்பிச்சிருவ. அவருக்கே ஏதாவது ஒன்னு ஆச்சுன்னு வையேன். அவ்வளவுதான்டா உன்னை மொத்தம் பொளந்து கட்டுறதுக்குமுதல் ஆளாக நான்தான்டா வந்து நிப்பேன். ஏன்னா ஒவ்வொரு தடவையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததுக்கு அப்புறம் நீ பண்ற அட்டூழியத்துல நாங்கெல்லாம் கடுப்பாகியிருக்கோம். இங்க இருக்க ஒவ்வொருத்தரும் உன்னை பிச்சிப்போட்டிருவாங்க. அதுவும் நானெல்லாம் அவ்வளவு ஆத்திரத்தோட இருக்கேன். உன்னை அடிக்க முடியாதபடி உங்க மாமாதான் எங்க கையை கட்டி போட்டிருந்தார். ஆனால் அவரையே மண்டையை பொளந்து ஹாஸ்பிட்டல்ல படுக்கவைச்சிருக்க. அப்போ உன்னையெல்லாம் தலேகீழத் தொங்கவிட்டு லாடம் கட்டணும்னுதான் கை பரபரக்கு. இப்போ முடியலைன்னாலும் எப்போவாது மாட்டுவன்னு காத்துக்கிட்டிருந்தேன். இப்போதான்டா அந்த வாய்ப்பு சரியா வந்திருக்கு. இந்த வாய்ப்பையெல்லாம் சும்மா விட்றமாட்டேன்டா. இரு எப்படியும் இன்னைக்கு உனக்கு லாடம் கட்டிருவேன். உன்னை அடக்கி துள்ளிட்டிருக்க உன் காலை உடைச்சு போடல நான் இன்ஸ்பிக்டர் நல்லபெருமாள் இல்லைடா. இந்தத்தடவை உன்னைக் காப்பாத்த உங்க மாமா ஜெயசந்திரன் ஐயாவும் வரமாட்டாருல்ல ”

அதைக்கேட்டதும் வேகமாக எழுந்த இளந்தீரன் “என்னது எங்க மாமா வந்து என்னை போலீஸ்காரங்க கையில மாட்டாமல் இவ்வளவு நாளும் காப்பாத்தினாரா? காலையிலயே நல்லதா ஒரு ஜோக் சொல்லிருக்கீங்க இன்ஸ்பெக்டர் சார். நான் அவருக்கு எதிரா எங்க கட்சியிலயே வளர்ந்து வந்திருவேன்னு என்னை வெறும் தொண்டனாவே வைச்சிருந்தார். அவரு போய் எனக்காக எல்லாம் செய்தாருன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?எனக்காக நின்னது என் தலைவன் சிவனந்தன்தானும்,என் உயிர் நண்பன் ரகுவரணும்தான் இது புரியாமல் கண்டதையும் பேசாதிங்க மிஸ்டர் நல்லபெருமாள். அவங்க எனக்காக இப்பவும் வருவாங்க. நீங்க அர்த்த இராத்திரியில் என்னை அரஸ்ட் பண்ணிட்டு வந்தால் அவங்களுக்கு எப்படி தெரியும்?அவங்க கண்டிப்பா எப்பவும் போல வக்கீலோடு காலையில் வருவாங்க. இதுதான் சாக்குன்னு என் மூளையைக் கழுவ வராதிங்க. நீங்கெல்லாம் எங்க மாமா ஆடக்ளுன்னு தெரியும். போங்க சார் சும்மா எதையாவது உளறிக்கிட்டு”என்று அவரை மதிக்காது பேசினான்.

“அடிங்க போடுற போடுல உச்சா போயிடுவ பார்த்துக்க. அதுசரி உன் மூளையை கழுவறதுக்கு நான் ஏன் ட்ரை பண்ணனும். ஏற்கனவே உன் மூளையைத்தான் உன்கூட இருக்கிறவனே கழுவி வைச்சிருக்கானே. நீயே ஒரு தறுதலை. உன்னைப் போய் உங்க மாமா என் மருமகன்னு காப்பாத்துனாரு பாரு. அந்தாளு உன் குணம் தெரிஞ்சே காப்பாத்துனாரு பாரு அவருக்கு இதெல்லாம் பத்தாது. இன்னும் அதிகமா உன்கிட்ட அடி வாங்கியிருக்கணும். இதுவும் நல்லதுக்குத்தூன் அவரு போய் சேர்ந்துட்டாதானே உன் அடாவடியெல்லாம் அடங்கும். நாங்க அடக்குவோம்”

“பார்க்கலாம் யாரு அடக்குவா? யாரு அடங்குவான்னு?ஹ்ஹ்ம் வந்துட்டாரு என்னைஅடக்குறேன்னு. அடக்குறதுக்கு நான் என், மாடா? தீ கிரேட் இளந்தீரன். நான் அப்படியெல்லாம் யாருக்கும் அடங்கிரமாட்டேன். உங்க இந்த போலீஸ் மிரட்டல் எல்லாம் என்னை மாதிரி பெரிய அரசியல்வாதிக்கு லட்டு சாப்பிடுறமாதிரி. அப்படியே தூக்கி வாயில போட்டு நசுக்கி சாப்பிட்டுப் போயிட்டே இருப்போம். நான் வெளியே வந்நதும் உங்களை எப்படி அடக்கிறேன்னு பாருங்க. என் கட்சி சார்பா இந்த வர்ற தேர்தல்ல என்னைத்தான் நிக்க வைக்கப்போறாங்க. அப்போ தெரியும் நான் யாருன்னு.வந்துட்டாரு தூக்கிக்கிட்டு போங்க சார்”என்றவன் திரும்ப போய் அந்த சேரில் உட்கார்ந்து காலை நீட்டி கண்ணை மூடிக்கொண்டான்.

“நீயெல்லாம் கண்டிப்பா அடங்குவடா.அதுவும் கூடிய சீக்கிரமே அடங்குவடா. என்எதிரவே எவ்வளவு தெனாவெட்டா உட்கார்ந்து என்கிட்ட மரியாதை இல்லாமல் பேசுற? உன்னை என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். உங்க மாமா உயிரோட வந்துட்டா நீ தப்பிச்சிட்ட. இல்லையா உன் அரசியல் வாழ்க்கை மட்டுமில்ல,மொத்த வாழ்க்கையும என் கையில்தான்டா இருக்கும். ஏன்னா உன்னை வைச்சி விளையாடிட்டு இருக்கிறவனுங்க அப்படி. நீ நினைச்சுக்கிட்டு இருக்க உன்னோட கட்சித் தலைவனும் அவன் மருமகனும் வந்துதான் இத்தனை நாளு உன்னை எல்லா கேஸ்ல இருந்தும் உன்னைக் காப்பாற்றினாங்கன்னு, ஆனா உனக்குத் தெரியாத விசயம் இப்போ சொல்லுறேன் கேளு. அந்த ஆளு இதுவரைக்கும் உன்னை வெளிய விடுதுக்கும் போன் பண்ணி பேசினது இல்ல, அவரோட லாயர்ஸ் யாரையும் உனக்காக அனுப்பினதுமில்லை. இப்போ அந்த ஆளு உனக்காக வந்து எதுவும் செய்ய மாட்டார்னு எனக்கு நேத்தே தெரியும். எதுக்காக உன்னே இராத்திரி முழுசும் இங்க காக்க வச்சிருக்கேன் தெரியமா?உன்னை வெளிய கொண்டுவர அவனுங்க வரமாட்டாங்கன்னு நீ தெரிஞ்சுக்கணும். நானும் உன்னோட திமிர அடக்கணுங்கிறதுக்காகத்தான் இப்படியே விட்டுவைச்சேன். நீ நேத்து வரைக்கும் எவ்வளவு ஆட்டம் போட்ட? அதுக்கெல்லாம் முடிவு கட்டறதுக்கு நீயே உன் மாமாவை கல்லால் அடிச்சு கொலை பண்ண பார்த்திருக்க. இந்த நாளுக்காகத்தான்டா நாங்களும் இத்தனை நாளும் காத்துகிட்டு இருந்தோம். உன்னை அப்படியே கைய காலை உடச்சு ஜெயில்லுக்குள்ள போட்டு, வாழ்க்கை முழுவதும் வெளியே வரவிடாமல் பண்றோம் பாருடா. உன் மாமா செத்துகித்துப் போயிடக்கூடாதுன்னு நீ இப்போவே வேண்டிக்க. அதே மாதிரியே நானும் உன் மாமான்காரன் சாகணும்னு வேண்டுக்கிறேன். அப்போதானே நான் உன்னைத் தூக்கி உள்ள உள்ளப்போட்டு நைய புடைக்க முடியும். இருடா‌ எனக்கான நேரம் வந்திருச்சு. நான் யாருன்னு காண்பிக்கிறேன்”என்று சொன்னவர் அவனை அடிக்க முடியாத கோபத்தை பக்கத்தில் இருந்த ஒருத்தனை தள்ளிவிட்டு, தனதை ஆத்திரத்தின் உச்சத்தைக் காண்பித்துவிட்டு போய்விட்டார்.

இன்ஸ்பெக்டர் நல்லபெருமாள் பேசியதையும் நடந்துகொண்டதையும் பார்த்த இளந்தீரனோ தனது உதட்டை வளைத்து “போடா டேய் உனக்கெல்லாம் நான் பயப்பட முடியாது அரசியல்ல நான் எப்போதிலிருந்து இருக்கேன் தெரியுமா? காலேஜ் படிக்கத்திலிருந்து இருக்கேன். எவன் எவன் யாருக்காக என்ன பேசுவான்னு எனக்கு நல்லாவே தெரியும் .இப்போ நீ என் மாமனுக்கு சப்போர்ட் பண்ணித்தான் பேசுறன்னும் எனக்குத் தெரியும். நீங்க எல்லாம் என்ன மாதிரி சப்போர்ட் பண்ணி பேசினாலும் அந்த ஆளு எனக்கு எதிரின்னா எதிரித்தான்.இதையெல்லாம் கேட்டு நான் மறுவேன்னு நினைச்சா அது உங்க முட்டாள் தனம்” என்றவன் நக்கலாக சிரித்தவாறே அங்காருத்தவர்களை பார்த்தான்.

அவன் இப்போதும் தனது நண்பன் ரகுவரன் வருவான் என்று நம்பிக்கையொடு காத்திருந்தவன் அடிக்கடி வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கே ரகுவரனின் காருக்கு பதிலாக வேற ஒரு கார் வந்து நின்றது.

இது யாரு காரு. மாமாவீட்டுக் கார் மாதிரில்லா இருக்கு. ஆனால் அவங்க யாரும் நம்மளை பார்க்க வர வாய்ப்பில்லையே. ஒருவேளை ரகுவரன் வேற யாரையும் அனுப்பி வச்சிருக்கானோ. அவனுக்கு நம்மளை பார்க்க வர்ற முடியாதளவுக்கா வேலை இருக்கு? சரி யாருன்னு பார்ப்போம்” என்று எழுந்து போய் வெளியே நின்றான். 

ஆனால் அந்த காரில் இருந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் அவனது முகமே மாறிப்போயிற்று!