கழிமுள்ளி நெஞ்சுக்காரி-20

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-20

கழிமுள்ளி-20

நதியாஆஆ மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அவளை அடுத்த நாளே நார்மல் வார்டுக்கு மாத்தி, தனி ரூமுக்கும் கொண்டுவந்துட்டாங்க. இப்போ அவள் எழுந்து உட்கார்ந்ததும் அவளுக்காக எடுத்துட்டு வந்த கஞ்சியை சூடாக கீதாஞ்சலி வாயில் ஊட்டிவிட்டாள்.

அதை ரமேஷ் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஏனோ ஒரு மாதிரியாக இருந்தது. கீதாஞ்சலியைப் பார்த்தார்.

“என்னாச்சு பிரின்சிபாலுக்கு காலேஜ்ல வேற வேலை எதுவுமில்லையா?இங்கயே மகளைப் பார்த்துக்கிட்டிருந்தா போதுமா?”என்று கீதாஞ்சலி கேசுவலாகக் கேட்டாள்.

“அதுதான் லீவு விட்டுட்டாங்களே. பொண்டாட்டிபிள்ளைங்கன்னு இருக்க வேண்டியுதுதான்”என்று கோபத்தில் சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்தார்.

அதைப்பார்த்த நதியா லேசாக உதட்டை விரித்து சிரித்து வைத்தாள். அவளுக்கோ ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தோம் என்ற குற்றவுணர்ச்சி நேத்திலிருந்து மனதை அரித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

நர்மதாவும் அவள் பக்கத்தில் சண்டைப்போடாமல் அமைதியாக அவளோடு கட்டிலில் படுத்திருந்தாள்.

இப்போ உள்ளே வந்த அவளது கேங்க் ஆர்ப்பாட்டமாக கையில் கேக்குடன் வந்து அவளுக்கு முன்பாக வைத்தனர்.

அவளோ என்னவென்று புரியாது முழித்தவளிடம் “ஏய் நதி இன்னைக்கு முகேஷுக்கு பொறந்தநாளு மறந்திட்டியா என்ன?அதுதான் நீ வரமுடியாதுன்னு உனக்காக இங்கயே கேக்கை கையோட எடுத்துட்டு ஓடிவந்துட்டோம். எப்படி எங்க ஐடியா?டொட்டடொய்ன்”என்று அவள் பக்கத்தில் ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டு கேக்கை வைத்தனர்.

அவள் பக்கத்தில் படுத்திருந்த நர்மதா “அதெல்லாம் இருக்கட்டும் தம்பி கேக்கு இருக்கு கேண்டில் எங்க?எத்தனை வயசுன்னு தெரிஞ்சாதானே பாட்டு பாடமுடியும், விஷ் பண்ணமுடியும்?அதென்ன ஒரே ஒரு கேக்கு மட்டும் வந்திருக்கு. சாக்லேட் எங்க? வேற பார்ட்டி கொண்டாடா ஒன்னத்தையும் காணல. இதுதான் பிறந்தநாள் கொண்டாடுற இலட்சணமாக்கும்”என்றவள் விஜயைப் பார்த்து நக்கலாக சிரித்தாள்.

விஜயோ அவளைப் பார்த்து முறைத்தவன் “உனக்கு சாக்லேட் வேணும்னா முகேஷ்கிட்ட கேளு வாங்கித்தருவான். அதைவிட்டுட்டு பார்ட்டி அதுஇதுன்னு உளறாத. அப்புறம் ரொம்ப பேசாத வாயில பல்லி முட்டைவிட்ற போது. உனக்கு கேக்கும் கிடையாது ஒன்னும் கிடையாது”என்றவன் மெழுகுவர்தியை எடுத்து வைத்தான்.

“ஓஓஓ சாருக்கு இருபத்தியோரு வயசாகுதா?என்னைவிட ஒரு இரண்டு வயசு பெரியவன் அவ்வளவுதானா. அப்புறம் விஜய்சார் பிறந்தநாளு முகேஷுக்கு உனக்கு இல்லை. கேக்கு அவன் தருவான். நீ மூடு க்கும்”என்றுவிட்டு இறங்கிப்போய் முகேஷுக்கு வாழ்த்து சொல்லிக் கைக்கொடுத்தாள்.

“ஹாய் முகேஷ் ஹாப்பீ பெர்தேடே விஷ்ஷஸ் டூ யூ. நீ நல்லாயிருக்கணும்னா முதல்ல இந்த உராங்குட்டான்கிட்டயிருந்து விலகி இரு. ரொம்ப நல்லாயிருப்ப”

அதைக்கேட்டதும் பிரண்ட்ஸ் மொத்தமாக சிரித்துவிட்டனர். நதியாவும் சிரித்தாள்.

அதைப்பார்த்த விஜயிக்கு அவள் பேசினதைவிடவும் இப்போதான் கோபம் வந்துச்சு “யாரு நான் உராங்குட்டானாடி?நான் உராங்குட்டானாடி? யாரைப்பார்த்து இப்படி சொன்ன? நீதான் சிம்பென்சி மாதிரி ஹீஹீன்னு சிரிச்சிக்கிட்டே இருக்க. நான் எதுவும் சொன்னனாடி சொன்னனாடி. அடி வெளுத்திருவேன். சின்ன பிள்ளைன்னு பார்க்கிறேன்”என்று அவள் பக்கத்தில் போனான்.

அவளோ பயப்படாமல் “இல்லைன்னா என்னடா பண்ணுவ? அடிப்பியோ? அடிறா பார்ப்போம் அடிறா பார்ப்போம்”என்று அவனையே மிரட்டினாள்.

கீதாஞ்சலிதான் அவளைப் பிடித்து நிறுத்தி “அவன்கிட்ட எதுக்கு சண்டைக்குப்போற, சும்மாயிரு நர்மதா, முகேஷ் நீ கேக்கை வெட்டுடா” என்று அந்த சுழ்நிலையை மாற்றினார்.

இது எதுலயுமே ரமேஷ்குமார் கலந்துக்கவேயில்லை. அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவங்க நாலுபேரும் நதியாவுக்காகத்தான் இங்க வந்திருக்காங்க, அவளை வேறெதையும் நினைக்கவிடக்கூடாதுன்னு அவனுங்களா ஏதாவது ப்ளான் பண்ணிட்டு வர்றானுங்க என்று அவருக்குத் தெரியும். 

ஆனாலும் அவரது மனசு முழுவதும் ரணமாகியிருந்தது. நம்ம பொண்ணு நம்மளை பெருசா நினைக்காமல் இப்படி பண்ணிட்டாளே! என்ற வேதனை அவரது கண்களில் தெரிந்தது. ஆனாலும் எதையும் காட்டிக்காது அமைதியாகவே இருந்தார்.

நதியாஆஆ எழுந்து நிற்க முயல,அவளால் நிற்கமுடியாது தள்ளாடினாள். அவளைப் பிடித்துக்கொண்ட கீதாஞ்சலி உட்காரவைத்தாள்.

இதைப்பார்த்த எல்லோருக்குமே நெஞ்சுக்குள் இரத்தம் வடிந்தது. ஒரு இடத்துல நிக்காது ஓடிக்கொண்டிருந்தவள் இப்போது நிற்கவே தள்ளாடுகிறாளே என்றதும் தாங்கிக்க முடியாது கண்கள் கலங்கிவிட்டது.

அப்படியே கொஞ்சநேரம் எல்லோரும் அமைதியாகிவிட்டனர். இது தாங்காது என்று நினைத்த நதியாவே “அடேய் முகேஷ் கேக்கை வெட்டுடா. கேக்கு சாப்பிடணும்போல ஆசையா இருக்கு. இவன் ஒருத்தன் பீல் பண்றேன்னு பீல் பண்ணிட்டு நிக்காத, கேண்டிலை ஊது”என்று திட்டியதும்தான் உணர்வுக்கு வந்து கேக்கை வெட்டினான்.

முகேஷ் கேக்கை வெட்டி எடுத்து முதலில் அவளுக்குத்தான் ஊட்டினான். இதே நதியா நார்மலாக இருந்திருந்தாளென்றால் அர்த்த இராத்திரி பனிரெண்டு மணிக்கு முகேஷ் வீட்டுக்குள்ளபோயிருப்பாள்.

அப்பவே பலுனை உடைத்து, ஆர்ப்பட்டம் பண்ணி கேக்கை முகேஷுக்கு சர்ப்பரைஸ் கொடுத்து கிப்ட்டும் பிரண்டஸோட சேர்ந்து கொடுத்திருப்பாள். இந்த வருஷம் அவள் அங்க வரமுடியாதுன்னதும் அவங்க நாலுபேரும் அவளுக்காக இங்க வந்துவிட்டனர்.

அவங்க நாலுபேரும் ரொம்ப நேரம் இருந்து சந்தோசமாக பேசி சிரித்துவிட்டு வெளியே வந்தனர்.

இப்போ நாலுபேரின் சிரிப்பும் அப்படியே உதட்டிலயே உறைந்துவிட்டது. அவர்கள் வெளியே வந்து அங்கிருந்த பென்ஞ்சில் உட்கார்ந்து யாரும் யாரோடும் பேசாது அமைதியாக உட்கார்ந்தனர்.

எவ்வளவு நேரம் அப்படியிருந்தனர் என்றே தெரியாது விஜயின் போன் சத்தம்கேட்டுத்தான் கொஞ்சமாக உணர்வுக்கு வந்தனர்.

அவன் போனை எடுத்து யாரென்று பார்த்துவிட்டு அவர்கள் மூவரையும் பார்த்தான்.

இதுக்குமேல என்னயிருக்கு எடுத்துப் பேசு வேற வழியென்றவர்கள் அமைதியாக அவன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

விஜய் பேசிமுடித்துவிட்டு “ இப்போ என்னடா பண்றது? எனக்கு பயமா இருக்குடா?”என்றான்.

“என்னடா நீயே பயமாயிருக்குன்னு சொன்னா அப்புறம் நாங்க எப்படி தைரியாமயிருக்கமுடியும். நதியாகிட்ட முதல்ல பேசுவோம், அப்புறம் அங்கிள்கிட்ட பேசுவோம். என்ன நடந்தாலும் ஏத்துப்போம். இதுசரி இது தப்புன்னு நம்ம பக்கத்துல இருந்து மட்டும் பார்த்து யோசிக்கமுடியாதுல்லடா. ஒருத்தி மனசு உடைஞ்சு இனி வாழ்க்கையே வேண்டாம்னு உயிரைவிட துணிஞ்சிருக்காளே அவள் பக்கத்துலயிருந்தும் யோசிக்கணும்ல. இதென்ன சின்னப்பிள்ளை விளையாட்டா, இல்லை கண்ணாமூச்சு விளையாட்டா எல்லாம் உடனே மாறி நம்ம முன்னாடி வந்து நாக்கிறதுக்கு. உயிரோட்டமான வாழ்க்கை. இனி நதியா என்ன தீர்மாணிக்கிறாளோ அதுதானே நடக்கணும், அதுதானே அவளுக்கு நல்லது”

“ம்ம்ம் அவக்கிட்ட முதல்ல யாரு பேசுறது”என்று வஸந்த் கேட்டதும் “ஆமா யாரு பேசுறது?” என்று அவங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொண்டனர்.

“யாரு பேசுறதா? என்று யோசித்த விஜய் உள்ளே எட்டிப்பார்த்து பெரியவங்ககிட்ட இனி அவா எப்படி பேசுவான்னு தெரியாது?அவங்க என்ன சொன்னாலும் இனி சரிப்பா, சரிம்மான்னுதான் தலையாட்டுவா. ஒரு அடியில இருந்து மீண்டு வந்திருக்காள்ல எல்லாத்துக்கும் அப்பா அம்மா மேலதான் நம்பிக்கை அதிகமாவரும். அதனால் அந்த குட்டிப்பிசாசுக்கிட்டதான் சொல்லி பேசவைக்கணும்”

“யாரு நர்மதாக்கிட்டயா?அவள் சும்மாவே நம்மளை வண்டை வண்டையா திட்டுவாடா. இப்போ போய் அவக்கிட்ட ஏதாவது பேசினோம்னா பெரிய மனுஷி மாதிரி நம்மளையே வைச்சி செய்வா. அவாக்கிட்ட பேசி புரியவைக்க ஐநம்மளால முடியாது

அதுக்கு சும்மாவே இருக்கலாம். எனக்கு ஒட்டசிவிங்கின்னு பேரு வைச்சிருக்காடா.முகேஷுக்கு ஊமைக்கோட்டான்,குள்ளவாத்துன்னு வைச்சிருக்கா. அப்புறம் உன்னை கரடின்னுதான் கூப்பிடுறா தினேஷ். விஜய் உனக்கும் அவளுக்கும் சும்மாவே ஆகாது.உன்னை உராங்குட்டான்னு கூப்பிடுறா இந்த இலட்சணத்துல போய் அவக்கிட்ட பேசிட்டாலும். விடுடா வேற ஏதாவது வழியிருக்கான்னு பார்ப்போம்”

“வேற என்ன வழியிருக்கு வெளியே போற வழிதான் இருக்கு போறீயா?”என்று கேட்டுவிட்டு விஜய் மறுபடியும் உள்ளே எட்டிப்பார்த்தான்.

நதியா அப்படியே சுருண்டு கீதாஞ்சலியின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தாள். நர்மதா கேக்கை எடுத்து சும்மா வாயில வைச்சிட்டு திரும்பி பார்த்தாள்.

அங்கே விஜய் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவள் கண்களை “சுருக்கி என்ன?இன்னும் போகலையா?”என்று சைகையால கேட்டாள்.

அதற்கு அவனோ “இங்க வா” என்று தலையசைத்துக் கூப்பிட்டான்.

அதைப்பார்த்தவள் ‘இந்த குரங்கு எதுக்கு நம்மளைக் கூப்பிடுது. இருடா வர்றேன்’ என்றவள் அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவன் வாயைத் திறந்து பேசுவதற்கு முன்பாகாவே “டேய் குரங்கே கேக்கு கொண்டு வந்தோமோ கட் பண்ணுனோமா போனமான்னு இருக்காம எதுக்குடா என்னை இப்போ வெளியே கூப்பிட்ட. நானே எங்க அக்கவுக்காக பீலங்க்ல இருக்கேன்”என்றவள் கையிலிருந்த கேக்கை வாயில் போட்டாள்.

அதைக்கேட்டதும் வஸந்த் அவனைப் பார்த்து சொன்னேன்ல இவக்கிட்டலாம் பேசமுடியாதுன்னு கேட்டியா என்பதுபோல் பார்த்துவைத்தான்.

“தினேஷோ ஏம்மா நர்மதா உனக்கு மரியாதையா பேசவே வராதா?”

“வருமே”

“அப்புறம் ஏன்மா இப்படி பேசுற?”

“எப்படி?”

“இப்படி வாடா போடான்னு பேசுறியே அதைச் சொன்னேன்”

“உங்கக்கிட்டலாம் மரியாதையா பேச வராது. இதைக்கேட்கத்தான் கூப்பிட்டானா?”என்று விஜயை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம்னுதான் கூப்பிட்டேன்”

“என்ன ஹெல்ப்னு சொன்னதானாடா செய்ய முடியும்? முதல்ல என்ன ஹெல்ப்புன்னு சொல்லு”

அதைக்கேட்டு பல்லைக் கடித்தவன் “கொடுக்கு மரியாதைக் கொடுத்து பேசுடி. எல்லாரையும் வாடா போடான்னுதான் கூப்பிடுவியா?”

“எல்லோரையும் இல்லை உங்களை மட்டும்தான்டா?”

“இவக்கிட்ட போயாடா ஹெல்ப் கேட்க நினைச்ச?”என்று மூணு பேரும் அவனை முறைத்தனர்.

“இங்கப்பாரு உன் மரியாதை இங்க யாருக்கும் வேண்டாம்”

“அப்புறம் யாருக்கு வேணும். எதுக்கு என்னைக் கூப்பிட்டியாம்?

“உங்க அக்காவுக்காக ஒரு ஹெல்ப் கேட்கலாம்னு நினைச்சு கூப்பிட்டோம். இப்போதான் உணர்ந்தோம் தெரியாமல் கூப்பிட்டுட்டோம்னு. நீ போய் அவள் பக்கத்துல படுத்துட்டு கேக் சாப்பிடு. உனக்கு அதுதான் சரியான வேலை. நாங்க வேற ஏதாவது வழியில அவக்கிட்ட பேசிக்கிறோம்”

“என்ன பேசணும்னு சொல்லுங்கடா. நானே பேசுறேன் என்ன விசயம்னு பட்டுன்னு சொல்லித் தொலைங்களேன்டா”என்று கோபப்பட்டாள்.

உடனே விஜய் அவளது கையைப்பிடித்து தள்ளி அந்தப்பக்கமாக இழுத்துட்டுப்போனான்.

“ஏய்ய் குரங்கே எதுக்குடா இப்படி கையைப்பிடிச்சு இழுத்துட்டு வர்ற?” என்று அவன் கையில் அடித்தாள்.

“ஏய்ய் அடிக்காதடி கொடுக்கு அங்க வைச்சுப் பேசினா உங்காக்காவுக்கு கேட்டிரும்னுதான் இங்க கூட்டிட்டு வந்தேன்”

“கூட்டிட்டு வந்தியா? இழுத்துட்டு வந்தேன்னு சொல்லுடா. அக்கா விசயம்னால உன்னை சும்மா விடுறேன். இல்லை கடிச்சி வைச்சிருப்பேன்டா”

“சரிதான் ஏதோவா பொறக்கவேண்டியவா கடேசில நதியாவுக்கு தங்கச்சியாவா பொறந்துட்டப்போல”

“ஏதோவா? என்னை நாயின்னு சொல்றியா?”என்று கோபத்தில் அங்கிருந்து திரும்பி நடந்தவளின் முன்பாக ஓடி வந்து நின்றவன் “இங்கப்பாரு ஒன்னு என்னை பேசவிடு. இல்லை நீ பேசு. எதுக்கும் சரியாவரமாட்டுக்கன்னா என்னடி பிரச்சனை உனக்கு. லூசே”

“இதுதான்டா பிரச்சனை என்னு லூசுங்கிற, நாயிங்கிற அப்புறம் எப்படி உன் பேச்சை கேட்கமுடியும்டா. நீதான்டா பைத்தியம் லூசு. இந்தா இருக்குப்பாரு அந்ந சுவத்துல முட்டிக்கிட்டே பேசு.அதுதான் உன் பைத்தியத்துக்கு சரியா இருக்கும்”

“அதுக்குத்தான் நீ இருக்கியே போதும்”

“போடா டேய் வழியை விடுடா உரங்குட்டான்”

“அப்படியெல்லாம் போகமுடியாது. நீ ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லு போறேன்”

“என்னென்னு முதல்ல சொல்லித் தொலை”என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“அடுத்து காலேஜுக்கு வர்றவரைக்கும் நீ எப்பவுமே நதியாகூடவே இருக்கணும்”

“இதைச் சொல்லத்தான் நீ இவ்வளவு பில்டப்பு கொடுத்தியா? ஆளு மூஞ்சியையும் பாரு. அவா என்னோட அக்கா அவளுக்காக எப்பவுமே கூடவே இருப்பேன். இதைச்சொல்ல தனியா கூட்டிட்டு வந்திருக்கான் பாரு”என்றவள் அவனை கேவலமாக ஒரு லுக்குவிட்டாள்.

“அடியேய் முந்திரிக்கொட்டை இருடி நான் சொல்ல வந்ததை சொல்லவிடுடி”

“என்னது முந்திரிக்கொட்டையா? சொல்லவிடுடியா? டேய் மரியாதையா பேசு”

“மரியாதையா?நீ எனக்கு மரியாதைத் தா அப்புறம் நான் மரியாதையா பேசுறேன்”

அதில் கோபம் வந்து அவனை முறைத்துப் பார்த்தவள் “அதெல்லாம் தரமுடியாது”என்று உதட்டை வளைத்து சொன்னாள்.

“அதெல்லாம் நீ தரமாட்டன்னு எனக்குத் தெரியும், நீ தர்ற மரியாதை எனக்கு வேண்டாம்.இப்போ நான் சொல்லுறதைக் கேளுடி முதல்ல நதியா கொஞ்சம் நல்லானதும், வீட்டுக்குக்கூட்டிட்டுப் போவீங்கள்ல அப்போ அவக்கிட்ட கொஞ்சம் அரவிந்த பத்திப் பேசி இப்போ அரவிந்த் பத்தி என்ன நினைக்கிறான்னு கேட்டு எங்கக்கிட்ட சொல்லணும்,அவள் இப்பவும் அரவிந்தை லவ் பண்றாளா? இல்லை அரவிந்தை வெறுக்கிறாளா? என்று தெரிஞ்சு என்கிட்ட சொல்லணும். ப்ளீஸ் இந்த உதவியை நீ கண்டிப்பா செய்யணும்”

“என்னது அரவிந்தை பத்தியா?அவனால்தானே அக்கா சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணினாள். அவன் அக்காவைவிட்டுப் போயிட்டான்னுத்னே சொன்னாங்க. அப்போ அக்காவுக்கும் அவனுக்கும் பிரச்சனையிருக்குள்ள அவனைப் பத்தி எதுக்குப் பேசணும். உனக்கு மண்டைக்கோளாறு ஏதும் பிடிச்சிட்டா?”

“நீ வேறடி. நான் சொன்னதை மட்டும் கேட்டு பேசு. அவள் என்ன சொல்லுறான்னு என்கிட்ட வந்து சொல்லு?”

“ஏன் அக்கா அரவிந்தை வெறுத்தா நீ உள்ள வந்திடலாம்னு பார்க்கிறியா?”என்று கூர்மையான பார்வையோடு அவனைப் பார்த்துக் கேட்டாள்.

அவளது மண்டையில் நறுக்கொன்று ஒரு கொட்டு வைத்தவன் “அதிகபிரசங்கி கண்டதையும் பேசாத. நான் சொன்னதைக் கேட்டு மெதுவா பேசு. அதுக்கப்புறம் உள்ளதை நாங்க பார்த்துக்கிறோம்”

“அக்கா எப்படியும் அவனைக் கல்யாணம் பண்ணிக்கத்தானே ஆசைப்படுவா. அவனுக்காகத்தானே இவ்வளவும் செய்திருக்கா?”என்று தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

“அது நம்முடைய அனுமானம். ஆனால் அவள் உண்மையாகவே என்ன நினைக்கிறான்னு தெரியணும். அவனை வெறுக்கிறாள்னா வேற மாதிரி யோசிக்கணும், இன்னும் நேசிக்கினாள்னா ரொம்ப யேசிக்கவேண்டிய அவசியமேயில்லை”

“நீ என்ன பேசுறன்னு எனக்கு ஒன்னுமே புரியலை”

“உனக்குப் புரியாமல் இருக்கிறவரைக்கும் நல்லது”

“ம்ம்ம் என்ன?” என்று இடுப்பில் வைத்து அவனை முறைத்தாள்.

அவளது தலையில் கொட்டி “போடி குட்டச்சி. போய் சொன்னதை செய். அவக்கிட்ட கேட்டுட்டு என்கிட்ட சொல்லு” என்றுவிட்டு பிரண்ட்ஸ்கிட்ட போக நடந்தான்.

அதைப்பார்த்தவள் பின்னாடியே ஓடிவந்து துள்ளி அவன் தலையில் கொட்டிவிட்டு ரூமுக்குள்ளாக ஓடிவிட்டாள்.

அதைப்பார்த்த பிரண்ட்ஸ் மூணுபேரும் சிரித்தனர். அவனோ தலையைத் தடவிட்டு அவளை அடிக்கமுடியாத கோபத்தில் உள்ளே எட்டிப்பார்த்து முறைத்தான்.

என்னடா விஜய் நண்டு சிண்டெல்லாம் உன்னை அடிக்கிது. நீயெல்லாம் பெரிய காலேஜ் டானுன்னு சொல்லிக்காத!