கழிமுள்ளி நெஞ்சிக்காரி-18

கழிமுள்ளி நெஞ்சிக்காரி-18

கழிமுள்ளி-18

நதியாவைத் தேடிவந்த தினேஷ்தான் “என்னாச்சு நதி? இப்படி உட்கார்ந்திருக்க, எதுவும் பிரச்சனையா?”என்று அவள் முகத்தைப் பார்த்தவாறே கேட்டுவிட்டு, அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். 

“நான் தப்பு பண்ணிட்டனோன்னு யோசிக்கிறேன்டா. அரவிந்த் விசயத்துல நான் இவ்வளவு அவசரப்பட்டிருக்கக்கூடாதுன்னு இப்போ தோணுது,விஜய் சொன்னமாதிரி நான் ஏமாந்துப்போய் நிக்கிறனோன்னு தோணுது. ஏதோ தப்பாவேயிருக்குடா”என்று அழுதாள்.

“ஏய்ய் நதி ஏன் அரவிந்த் உன்னை எதுவும் சொல்லிட்டானா?”

“மொத்தமா என் காதல் முடிஞ்சுபோச்சுடா. இதுக்குமேல என்கிட்ட எதையும் கேட்காத. இதை விஜய்கிட்ட சொல்லாத”என்றவள் இன்னும் சத்தமாக அழுதாள்.

“ஏய்ய் நதி இந்தளவுக்கா போயிடுச்சு. அரவிந்த்தை கொஞ்சநாளா காணலையேன்னு உன்கிட்ட கேட்டனே.நீதான் அவன் ஊருக்குப் போயிட்டான்னு சொன்ன?இப்போ வந்து எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லுற? எனக்கு ஒன்னுமே புரியலையே.ஐய்யோ உங்க லவ் நல்லாதானே போச்சு?”

“நல்லாதான் போச்சு. அவனையும் அவன் காதலையும் நம்பினேன். ஆனால் எக்ஸாமுக்கு முன்னாடி ஊருக்குப்போனான். அதுக்கப்புறம் என்கிட்ட பேசவேயில்லை. நானும் அவன்கிட்ட பேச எவ்வளவோ ட்ரை பண்ணினேன் அவன் போன்லகூட பேசலை. என் போனை அட்டெண்ட் பண்ணவேயில்லை. நானும் எதுவும் பிரச்சனையாக இருக்கும்னு நினைச்சேன். ஆனால் இப்போ எக்ஸாம் எழுத வந்திருக்கான். அவன்கிட்ட நெருங்கிப்போனால் விலகிப்போனான். இன்னைக்கு கடைசி எக்ஸாம் அதுதான் தேடிப்போய் பேச முயறசி பண்ணினேன். அதுக்கு என்னென்னமோ பேசிட்டுப்போயிட்டான் தினேஷ்”என்றவள் ஏங்கி ஏங்கி அழுதாள். அவளால் அவன் பேசினதைத் தாங்கிக்கமுடியலை. அவனுக்கு இப்படியெல்லாம் ஹார்ஷா பேசுவரும் என்பதையே இப்போதான் தெரிஞ்சிக்கிறாள். 

(அதுசரி அப்போ முத்தம் கொடுக்கமட்டுத்தான் தெரியும் நினைச்சிருந்தியா நதியா!)

“ப்ச்ச் அவன் என்ன பேசினான்னு சொல்லு அவன் மண்டையை உடைச்சி உன் முன்னாடி கூட்டிட்டு வர்றேன். அதெப்படி உன்னைக் காதலிச்சிட்டு பழகிட்டு எல்லாம் எக்ஸாம் முடிஞ்சதும் விட்டுட்டு போறதுக்கு இதென்ன காதல் கோர்ஸா? வாழ்க்கை இது உன்னோட வாழ்க்கை. நீ அவன் சட்டையைப் பிடிச்சு இழுத்து கேட்டிருக்கணும்ல, ஏன் சும்மாவிட்ட நதியா. நீ எங்க பழைய நதியாவா இருந்தா அவனைத் தூக்கிப்போட்டு மிதிச்சிருக்கணும்ல. ஏன் அப்படி பண்ணாமல் அழுதிட்டியுக்க?”

“நான் அவனோட சண்டைக்காரி இல்லை தினேஷ். நான் அவனோட வாழ நினைச்சு காதலிச்சவ. அவனை உயிருக்கு உயிரா காதலிச்சவ,அவனால் என்னை காயப்படுத்த முடிஞ்சது. என்னால அவனைக் காயப்படுத்த முடியல. நான் அதிர்ச்சியில் என்ன நடக்குதுன்னு பிரக்ஞையில்லாமல் நின்னுட்டேன் தினேஷ். அவன் நான் வேண்டாம்னு போயிட்டான்டா. எனக்கு என்ன பண்ணனும்னே தெரியலை”என்று சொல்லி சொல்லி அழுதாள்.

அவளது அழுகையில் அப்படியே தினேஷும் உடைந்துப்போனான்.

“நதி அழாதடா. என்னால தாங்க முடியல. எதுன்னாலும் பார்த்துக்கலாம். நம்ம யாருக்கிட்டயும் இதை சொல்லன்னு தெரியலை. இப்பவே காதலான்னு திட்டுவாங்க. இதுக்கு என்ன வழின்னு யோசிச்சு நான் போய் அரவிந்தைப் பார்த்துப்பேசிட்டு வர்றேன். அதுவரைக்கும் அழாத. என்ன பிரச்சனைன்னு அரவிந்துக்கிட்டயே கேட்டிருவோம் சரியா”என்று ஆறுதல் சொன்னாள்.

அதைக்கேட்டவள் “வேண்டாம் தினேஷ். ஒருத்தன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டுப்போயிட்டான். அவன் பின்னாடிபோய் நான் கெஞ்சி என் காதலைப் பிச்சைக் கேட்கமாட்டேன். என் காதல் என் நெஞ்சோடு பத்திரமா இருக்கு. அவனோட நெஞ்சில உள்ள காதலைத்தான் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டான்.இனி அவனே நினைச்சு திருந்தி வந்தாலும் எனக்கு வேண்டாம். நான் தோத்துப்போயிட்டேன். எவனோ ஒருத்தன் வந்தைஉ என்கிட்ட காதலைச்சொல்லி ஏமாத்திட்டுப்போயிட்டான்னுதான் என்னால தாங்கிக்க முடியல. நெஞ்செல்லாம் அடைக்குது இப்பவே மூச்சு போயிடணும்னு தோணுது”என்று அழுதாள்.

அவனது கையைப்பிடித்துக்கொண்டு அழுதாள். தினேஷுக்கு இப்பவே போய் அரவிந்தை தூக்கிப்போட்டு மிதிக்கணும்னு வெறியே வந்துச்சு. 

ஆனாலும் நம்ம ஏதாவது செய்யப்போய் நதியாவோட காதல் மொத்தமா போயிடுச்சுன்னா என்ன பண்ண என்று அந்த நேரத்திலும் பொறுமையாக இருந்தான்.

“நதி இது உன்னோட வாழ்க்கை. அதை சரி செய்யணும்ல. அப்போ அரவிந்த்கிட்ட பேசினாதானே நல்லது”

“இல்ல வேண்டாம். அவனை நான் மறக்க முயற்சிப்பண்றேன். அம்மா சொன்னமாதிரி நல்லா படிச்சு வெளிநாட்டிற்கு போய் படிக்கிறேன். என்னை நானே உயரத்திக்கிறேன்.இதுதான் என்னை ஏமாத்தினவனுக்கு நான் கொடுக்கும் தண்டனை” என்று அவ்வளவு தெளிவாகப் பேசினாள்.

அந்த நேரம் பார்த்து முகேஷும் வஸந்தும் ஓடிவந்தார்கள். 

“நதியாஆஆ! தினேஷ்!” என்று அங்கிருந்தே கத்திக்கொண்டே வந்தார்கள். எக்ஸாம் முடிஞ்ச சந்தோசத்தில் வந்தார்கள்.

அதைப்பார்த்த தினேஷ் “நதி நம்ம பிரண்டஸுங்க வர்றானுங்க. அவனுங்க வர்றதுக்கு முன்னாடி கண்ணைத் துடைச்சிக்க. இல்லைன்னா இப்பவே அரவிந்தை தேடிப்போய் அடிப்பானுங்க. அதுவும் வஸந்த் ஏற்கனவே விஜயிக்கு பனிஷ்மெண்ட் கொடுத்த அன்னையிலிருந்து அரவிந்த் மேல கோபாமாதான் இருக்கான். நீயும் கொஞ்சநாளா எங்ககிட்ட இருந்து விலகிப்போனியா அப்பவே அரவிந்தை தூக்கிப்போட்டு மிதிச்சா எல்லாம் ஒரே நாள்ல சரியாகிடும்னு சொன்னான். இப்போ அவன் முன்னாடி அழுதன்னா அவ்வளவுதான் அமைதியா இரு”என்று அவளை சமாதானாப்படுத்தினான்.

அவளும் உடனே கண்களைத் தூடைத்துவிட்டு அமைதியாகி, அழறதை நிறுத்தியிருந்தாள்.

அவர்கள் பக்கத்தில் வந்த வஸந்த் “ என்ன நதியா மேடம் இப்போதான் பிரண்ட்ஸ் ஞாபகம் வந்துச்சா. உங்க லவ்வர் எங்கக்கிட்ட பேச பெர்மிஷன் தந்திட்டானா?”என்று நக்கலாகக் கேட்டுவைத்தான்.

“வஸந்த் சும்மாயிரு “என்று தினேஷ் அவனை அதட்டினான்.

“பின்ன என்னடா நம்ம நட்பை பிரிக்கிற மாதிரிதானே அந்த அரவிந்தும் இவளும் நடந்துக்கிட்டாங்க. அவன் நம்ம விஜயை நம்மக்கிட்டயிருந்து பிரிச்சான். அடுத்து இவளை பிரிச்சான். அடுத்து என்ன ப்ளானோடு சுத்துறானோ? இதை சொன்னா இவளுக்கு கோபம் வரும். இவளுக்கு எப்பவும் அந்த அரவிந்துதானே முக்கியம்”

“எப்போடா அவன் முக்கியம்னு உங்கக்கிட்ட சொன்னேன். நீங்கதான்டா எனக்கு முக்கியம். உங்கக்கிட்ட எப்பவும்போலதானே பேசினேன்”

“ஆமா ஆமா பேசின பார்த்தோம எப்படி பேசினன்னு. எங்களைப் பார்த்தாலே ஒதுங்கிப்போயிட்டு இப்போ பிரண்ட்ஸாம். ஆனாலும் பத்து பனிரெண்டு வருஷ நட்பை ஒரு காதல் வந்து கெடுத்துட்டே. போ போ. உன் லவ்வர் அந்த அரவிந்த்கிட்டயே போ”என்று திட்டினான்.

“ம்ம்ம் இன்னும் இப்படி பேசினேன்னு வையேன் உன் வாயை உடைப்பேன். இப்போ என்னடா செய்யணும் நான் உங்க பிரண்ட் நதியாதான்டா. வாங்க இந்த வருஷத்தின் கடைசி நாளை கேண்டீன்ல டீக்குடிச்சு கொண்டாடுவோம். எப்பவுமே நீங்க மட்டும்தான்டா எனக்கு முக்கியம்” என்று எழுந்தவள் முன்னாடி நடந்தாள்.

“பார்றா கடைசி நாள்னு எங்களுக்கு சலுகை தர்றியாக்கும். இன்னைக்கு மொத்த செலவும் நீதான் பண்ணனும் அப்படின்னாதான் நாங்க வருவோம். என்ன ஓகேவா” 

“டபுள் ஓகே. மிஸ்டர் ரமேஷ்குமார் இங்க பிரின்சிபலா இருக்கிறவைக்கும் எனக்கோன்னடா கவலை. எதுன்னாலும் சாப்பிடுங்க பில்லை அப்பா தலையில கட்டிருவோம்”என்றவள் பழைய நதியாவாக மாறி கேண்டீனை ஒரு கலக்கு கலக்கிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார்கள்.

அங்கிருந்து கிளம்பும்போது நதியா நின்று நிதானமாக அந்த காலேஜை ரசித்துப்பார்த்தாள்.

“என்ன நதி நம்ம காலேஜை போய் இவ்வளவு ரசிச்சு பார்க்கிற?”

“இன்னையோட கடைசி நாள்ல அதான் ரசிக்கிறேன்”

“என்னது கடைசி நாளா. அடுத்த வருஷமும் இங்கதான் குப்பைக்கொட்டணும். உங்கப்பாவை சமாளிக்கணும். நம்ம ஜாலியா இருக்கணும். இதுக்குப்போய் இப்பவே கடைசி நாளுன்னு சொல்லுறியே நதி.ஹாஹாஹா. இந்த வருஷம் உன் லவ்வரால கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சு. அடுத்த வருஷம் அதுக்கும் சேர்த்து அடிச்சு தூள் கிளப்பணும்”

“செஞ்சிடுவோம்”என்று ஹைபை கொடுத்துவிட்டு அப்படியே கிளம்பி விஜய் வீட்டுக்குப்போனார்கள்.

அவனை கிட்டதட்ட ஒரு மாசம் கழிச்சு இப்போதான் நதியா பார்க்கிறாள்.

இருவரும் அமைதியாக பேசாமல் இருந்தனர். அதைப்பார்த்த தினேஷ்தான் “இன்னும் இரண்டுபேரும் சண்டைப்போட்டதை மறக்கலையா. நம்ம பிரண்ட்ஸுக்குள்ள இதென்ன புதுசா பேசிக்கோங்கப்பா”என்று பேசவைத்து இரண்டுபேரையும் கைகுலுக்க வைத்தான்.

அதுக்கப்புறமும் ஏதோ பேசணும்னு இரண்டுபேரும் நார்மலா பேசிக்கிட்டாங்களே தவிற பழையா அந்த ஒட்டுதல் இரண்டுபேருக்குமே வரவில்லை.

அப்படியே பேசி முடித்துவிட்டு நதியா “கிளம்புறேன் அப்பா வர்றதுக்குள்ள போகணும்” என்று வெளியே வந்தாள். 

அவளுக்கு விஜயிடம் நிறைய பேசவேண்டியதிருந்தது. ஆனால் அது எதையுமே பேசாமல் அமைதியாக வெளியே வந்தவள், அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவளது கண்ணைப்பார்த்தே அவளைக் கண்டுபிடிக்கிற நண்பன் அவன் வெளியே வந்து அவளுக்காக நின்றான்.

பை விஜய் என்று கையைக்காட்டிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டாள். ஆனால் விஜய்தான் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று சரியாக கண்டுபிடித்தவன் தினேஷைப் பார்த்தான்.

தினேஷோ எதுவுமே தெரியாத மாதிரி இருந்தான். அவன்கிட்ட கேட்கமுடியாமல் விஜய் திணறினான்.

அதுலயே அவன் புரிந்துக்கொண்டான். நாளைக்கு அவள் வீட்டுக்கே போயிடவேண்டியதுதான். இப்போ போய் என்னன்னு கேட்டோம்னா முறைச்சிட்டுப்போவாள் என்று அவனும் அத்தனை சீரியஸாக எடுதுதுக்காமல் விட்டுவிட்டான்.

அர்த்த இராத்திரியில் விஜயாக்குப் போன் வரவும் எடுத்துப் பேசியவனுக்கு உலகமே நின்றுவிட்டது போன்று தவித்துப்போனான்.

அப்படியே வெளியே வந்தவன் ஓடிப்போய் வண்டியை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலை நோக்கி ஓடினான். அவங்க சொன்ன ஹாஸ்பிட்டலுக்குள் போய் விசாரிச்சு ஐ.சி.யூவுக்குப்போனான்.

ஐ.சி.யூவின் வாசலில் உட்கார்ந்து ரமேஷின் தோளில் சாய்ந்து கீதாஞ்சலி அழுதுகொண்டிருக்க, ஓடிப்போய் கண்ணாடிக்கதவு வழியாக பார்த்தவனது நெஞ்சத்தில் இரத்தம் வழிந்தது.

வாடி வதங்கிப்போய் குற்றியுராக உயிருக்குப்போராடிக்கொண்டிருந்த நதியாவை அப்படியே கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தான்!

ஐய்யோ நதியா?என்னடி செஞ்சு வைச்சிருக்க! என்று கதறியவன் அவளை அப்படி பார்க்கமுடியாமல் அழுதான்.

அவளையே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு நின்றவனுக்கு அதைத் தாங்கிக்க முடியவில்லை.

இப்போ திரும்பி ரமேஷிடம் வந்தான் “என்ன அங்கிள் நடந்துச்சு? நீங்க அவளைப் பார்த்துக்கலையா?என்ன பிரச்சனை நடந்துச்சுன்னு இப்படி பண்ணிட்டா. ஏன் நம்மெல்லாம் அவளுக்காக இருக்கோம் அப்படிங்கிறதை மறந்துட்டாளா? எதுக்கு இப்படி தற்கொலை பண்ணிக்க ட்ரை பண்ணினாள். கையையெல்லாம் வெட்டிக்கிட்டு சாகுறளவுக்கு அவளுக்கு என்ன வேதனை இருந்துச்சு. இன்னைக்குகூட எல்லோரும் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துட்டுதான் வந்தாங்க அப்போ நல்லாத்தானே இருந்தா”என்று சொன்னவன் அவள் போகும்போது பார்த்த பார்வையை நினைவுக்கு கொண்டுவந்தான்.

“எங்களுக்கும் எதுவுமே தெரியாது விஜய் . நைட்டு எப்பவும்போல அவ ரூமுக்குப் போய் அவளைப் பார்க்கலாம்னு போனேன். அவ எப்பவுமே ரூம் கதவை அடைக்கமாட்டாள். ஆனால் இன்னைக்கு அடைச்சிருந்துச்சுன்னு தட்டிப்பார்த்தேன் திறக்கலை. ஏதோ சரியில்லைன்னு மனசுக்குத் தோணுச்சு. அதுதான் கதவை தள்ளி லாக்கை உடைச்சுட்டு உள்ளப்போய் பார்த்தா கட்டில்ல இரத்தம் வடிய மயங்கிக்கிடந்தாள். இங்க தூக்கிட்டு வந்து சேர்த்திருக்கேன்” என்று அழுதார்.

கீதாஞ்சலிக்கோ ஒன்னும் புரியவில்லை. அழுது அழுது முகமெல்லாம் வீங்கியிருந்தது. ஏற்கனவே போலீஸும் வந்தும் விசாரிச்சிட்டுப் போயிட்டாங்க. பிரண்ட்ஸை விசாரிக்கணும்னு சொல்லப்போய்தான் விஜயிக்கு போன் பண்ணினார்.

இப்போ உடனே தினேஷ் முகேஷ் என்று எல்லோருக்கும் போன் பண்ணி, கொஞ்சம் ஹாஸ்பிட்டலுக்கு வாங்கன்னு இங்கே வரச்சொன்னான்.

நர்மதாவோ அங்கேயிருந்த ஒரு பென்சில் பாவம்போல் சுருண்டுப் படுத்திருந்தான். எப்பவும் சண்டைப்போட்டுக்கொண்டிருக்கும் அவளுக்கு நதியா இல்லன்னை தேடுவாள். அவக்கிட்ட வம்பிழுதுதுக்கிட்டே இருக்கணும். அவக்கூட ஒட்டிக்கிட்ட இருப்பவளுக்கு அவள் உயிருக்குப்போராடிக்கிட்டிருக்கான்னா எப்படி தாங்கிக்க முடியும்!

விஜயின் மனது ஏதோ கணக்குப்போட்டு ரமேஷையும் கீதாஞ்சலியையும் பார்த்தான்.

அவங்கக்கிட்ட ஒன்னும் பேசாமல் நிறைய யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

‘இவா இந்த முடிவு எடுக்க ஒரே காரணம் அரவிந்தாகத்தான் இருக்கும்’ என்று அவன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே புரிந்துக்கொண்டான்.

ஆனால் என்ன நடந்தது என்று தெரியாததால், எதையும் யாருக்கிட்டயும் பேசமுடியாது மனதிற்குள் வைத்து குமைந்துக்கொண்டிருந்தான்.

தினேஷ் ஹாஸ்பிட்டலுக்கு வந்ததும்தான் நதியாவின் தற்கொலை முயற்சியை விஜய் சொன்னான்.

அவனால் அதை நம்பமுடியாது ஓடிவந்து பார்த்துவிட்டு அழுதவன், மத்தியானம் காலேஜில் நடந்த எல்லாத்தையும் விஜயிடம் சொல்லிவிட்டான்.

அவ்வளவுதான் ஏற்கனவே அரவிந்த்துதான் காரணம் என்று கண்டுப்பிடித்தவனுக்கு இப்போது அது ஊர்ஜிதமானதும் கோபம் தலைக்கேறியது. ஆனாலும் இப்போதைக்கு எதையுமே போலீஸுக்குக்கூட சொல்லக்கூடாது என்று தினேஷிடம் சொல்லிவிட்டான்.

அவங்க எல்லோருக்கும் நதியாஆஆஆ பொழைச்சு வரணும், அதுவும் எந்த சேதமும் இல்லாமல் என்ற பிராத்தனையே பிராதானமாக இருந்தது!

அடேய் அரவிந்த் இவனுங்க கையில மாட்டிக்காத உன்னை சட்னியாக்கிடுவானுங்க!