ஆலங்குயிலின் ஆலாபனை-9

ஆலங்குயிலின் ஆலாபனை-9

ஆலாபனை-9

அறிவழகன் துளசியைப் பார்க்க துளசி அறிவழகனைப் பார்த்தாள். அவர்களது பார்வை கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

காந்திமதியோ“துளசி மாமாவுக்கு காப்பி போட்டு வைச்சிருந்தல்ல அப்படியே எல்லோருக்கும் ஊத்தி எடுத்துட்டுவருவோம் வா” என்று பேசியபடிமே உள்ளே போனார்.

துளசியும் காந்திமதியின் பின்னாடியே வால் பிடித்துக் கொண்டு போய் காபியை எடுத்து வந்தாள்.

அறிவழகன் அவள் கையில் இருந்து காபியை வாங்கியவன் “அக்கா என்னைப் பார்க்க வரலையே. அக்காவுக்கு நான் பேசலைன்னு கோபமா?அதுதான் பார்க்கவரலையா என்ன? ஆமா இந்த மாசத்தோடு படுப்பு முடிஞ்சுதே. அடுத்து எக்ஸாம்தானே ஆமா படிப்பெல்லாம் எப்படி போகுது. தேறிடுவியா?”என்று நக்கலாகக் கேட்டான்

அதைக்கேட்டதும் கோபத்தில் அவனை முறைத்தவள்"அதெல்லாம் நல்லாதான் போகுது. நான்தான் டிஸ்ட்டிங்கஷன் வாங்குறனே. பரீட்சையெல்லாம் பிரச்சனையில்லை. இங்க பிரச்சனையே நீங்கதான் மாமா. இப்போ எல்லாம் என்கிட்ட சரியா பேசுறதேயில்லையே. என்னதான் பிஸின்னாலும் என்கிட்ட பேசக்கூடவா உங்களுக்கு நேரமில்ல?இருங்க இருங்க உங்களுக்கு இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு தருவேன் பாருங்க”என்று அவனை மிரட்டினாள்.

“ பாரேன் சேர்த்துவைச்சு தருவாளாம்ல. தா தா நிறையா தா.ஒரு பத்து இலட்சமா தந்தா நல்லாயிருக்கும். மாமாவுக்கு கல்யாண செலவுக்கான தேவை இருக்கு” என்று அவளிடம் வாயடித்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கு அவள்கிட்ட பேச நிறைய இருந்தது. அவளுக்குமே மாமாக்கிட்ட பேசணும்னு நெஞ்சு நிறைய நிகழ்வுகளை அடக்கி வைச்சிருந்தாள்.

இப்பவும் பெரியவங்க முன்னாடி யாரும் எதுவும் அதிகமா பேச முடியாது என்பதால் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்.

அப்போ பார்த்து பவானியும் வேலனும் அறிவழகனைப் பார்க்க வந்துவிட்டார்கள். 

பவானி வீட்டுக்குள்ள வரும்போதே “தம்பியோ”என்று கூப்பிட்டுக்கொண்டேதான் வந்தாள். 

“வாக்கா நான் வருவேன்னு முதல்ல வந்து வீட்ல இருப்பேன்னு பார்த்தா நீ இவ்ளோ நேரம் கழிச்சு வார பாரு.என்ன வரவேற்க என் மருமகள் துளசிதான் கரெக்டா வந்திருக்கா. அதனால உனக்கு என்ன வாங்கிட்டு வந்தாலும் அதையும் சேர்த்து அவளுக்கே குடுத்திருதேன்.உனக்கு ஒன்னும் கிடையாது. என்ன மச்சான் வீட்டுக்கு ஒரே ஒரு மச்சான், அடுத்து மருமவனாகாப் போறவனை கூப்பிடவும் வரல,என்னைப் பார்க்க வரதுக்கு கூட உங்களுக்கு நேரம் இல்லை அப்படித்தானே? எல்லாம் எங்க அக்கா உங்களுக்கு டிரெய்னிங் குடுக்குறா போல இருக்கு? நான் வீட்டுக்கு வந்து இறங்குப்போதே மேளம் அடிச்சு அப்படியே மாலப்போட்டு வரவேத்திருக்க வேண்டாமா” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“நானும் உன்னை அப்படித்தான் மேளதாளத்தோடு கூட்டிட்டுவரணும் ஆசைப்பட்டேன். அதுதான் இன்னும் நாலுநாள்ல திரும்பவும் அதேமாதிரி வரேவேற்கணுமே இப்போ எதுக்கு செலவுன்னு விட்டுட்டேன் அறிவு. உங்க அக்காக்காரி நேத்து இராத்திரியே இங்க வரணும்தான் சொல்லிட்டு இருந்தாள். அவங்க வீட்ல வேலையெல்லாம் பார்க்கிறது யாருன்னு வீட்டுல இருந்துட்டோம். அதுவேற உங்கக்காரி தம்பிக்கு பிடிச்சதை செஞ்சி எடுத்துட்டுப் போகணும்னாளா.அதுதான் கொஞ்சம் நேரங்கழிச்சி உன்னை பார்க்க வந்தோம். உங்க அக்கா உனக்குன்னு சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி கொண்டு வந்திருக்கா. ஆப்பமும் ஆட்டுக்கால் கறியும் செஞ்சிருக்கா. நீ சாப்பிடு மச்சான் எனக்கு வயல்ல வேலை இருக்கு போயிட்டு அப்படியே பால் பண்ணைக்கு போகணும்”என்றவர் கிளம்பிவிட்டார்.

“லேய் தம்பி எப்படி இருக்க?எல்லோரும் கல்யாணம்னா நல்லா தின்னுட்டு தெம்பா வருனுங்க. நீயென்ன போனது மாதிரியே வந்திருக்க” 

“உன் கண்ணுக்கும் அம்மா கண்ணுக்கும் மட்டும்தான் அப்படி தெரியுதேன். நான் நல்ல வெயிட் போட்டிருக்கேன்கா. நீ வேற”

“க்கும் என்னத்தை வெயிட்டு போட்டியோ?கன்னமெல்லாம் ஒட்டிப்போய் இருக்கு. சரி சரி சீக்கிரம்போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்”என்று அறிவழகனை விரட்டினாள்.

அவனும் குளிச்சிட்டு வர குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.

பவானி தம்பிக்கு பிடிச்சதை சமைச்சிட்டு வந்திருக்கவே, அப்படியே அவனுக்கு எடுத்து பரிமாறிவிட்டு சாப்பிட்டார்கள். 

“தம்பி இந்த வருஷம் எத்தனை மாசம் லீவுல வந்திருக்க. ஒரு மாசம் லீவுலயா ரெண்டு மாசம் லீவுலயா?”

“எப்பவும் போல ஒரு மாசம் லீவ்லதான்க்கா வந்திருக்கேன். வருஷத்துக்கு ஒரு தடவை தர்ற அதே லீவுதான். எக்ஸ்ட்ரா லீவ் எடுத்தா நம்மதான் டிக்கெட் போட்டு போகணும் சம்பளமும் தர மாட்டானுங்க அதனால ஒரு மாசம் லீவுலதான் வந்திருக்கேன்”

“ஒரு மாசம் லீவுதானா? என்ற பவானி தனது அம்மாவைப் பார்த்து கண்ணை காண்பித்து “என்னம்மா இது?” என்று கேட்டாள்.

அவரும் மெதுவாக நீ சும்மா இரு நான் எல்லாம் பாத்துக்குறேன் நீ அவசரகுடுக்கையா எதுவும் பேசாதே என்று எச்சரித்தவர் கண்ணை காண்பித்துவிட்ட் அமைதியாக உட்கார்ந்து விட்டார். 

துளசியும் அம்மாவும் ஆச்சியும் பேசிறதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். 

‘இந்த மாமா என்ன ஒரு மாச லீவுல வந்திருக்காங்க. கல்யாணம் முடியறதுக்கே ஒருவாரமாகிடும்.அப்புறம் இருபது நாள்தான் எங்களுக்குக் கிடைக்கும். இந்த லீவு இந்தாபிடின்னு போயிருமே. எப்படியாவது கல்யாணத்துக்கு பிறவு மாமாக்கிட்ட பேசி கூடகொஞ்சநாள் லீவு எடுக்க சொல்லணும்’என்று மனசுக்குள்ள நினைத்துக்கொண்டாள்.

அதைதேயான் பாவனியும் காந்திமதியும் நினைத்தார்கள். முதல்ல கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறமா எதுன்னாலும் பார்த்துக்கலாம் என்று அவனிடம் அதுக்கப்புறம் லீவு பத்தி எதையுமே பேசவில்லை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு பவானி எல்லா பாத்திரத்தையும் எடுத்து வைத்துவிட்டு “யம்மா நானும் துளசியும் வீட்டுக்குப்போறோம். இனி கல்யாண வேலையில இருப்பேன். நீ எதுன்னாலும் முருகம்மாக்கிட்ட சொல்லிவிடு. இல்லைன்னா போன் பண்ணு. இவளுக்கு வேற நாளைகு ஹாலுடிக்கெட்டு வாங்க போகணுமாம். அவளை வெளிய விடவா வேண்டாமான்னு உன்கிட்ட கேட்கணும்னு இருந்தேன். இப்போ அவளை வெளிய அனுப்பலாமா?”என்று கேட்டாள்.

“உனக்கு அறிவுகிறிவுன்னு ஏதாவது இருக்கா. அவளை எப்படி தனியா அனுப்ப முடியும். வேணும்னா நம்ம காரை எடுத்துட்டு நீ மட்டும் போய் அதை வாங்கிட்டு வா”என்று காந்திமதியோ மகளைத் திட்டினார்.

அதைக்கேட்டதும் அறிவழகன் “ என்னது ஹால்டிக்கெட் வாங்கப்போகணுமா?அதுதானே முக்கியம். முதல்ல அதைப்போய் வாங்கிட்டு வந்திருவோம் துளசி. நீ நாளைக்குக் கிளம்பியிரு. நான் காரையெடுத்திட்டு வாரேன். அக்கா நீயும் வர்றதா இருந்தா வா. அப்படியே திருநெல்வேலி போயிட்டு வந்திருவோம். கல்யாணத்துக்கு சொந்தக்காரங்களுக்கு துணி கொடுக்கணும்னு அம்மா சொன்னாங்க. எப்படிம்மா நீங்களும் வாங்க சேர்ந்து போயிட்டு வந்திருவோம்”என்று கூப்பிட்டான்.

“நான் வரலை அறிவு. இங்க வேலையிருக்கு. வீட்டை வேலைக்காரங்கள நம்பி இப்போ எதையும் போட்டுட்டு வரமுடியாது. நீங்க மூணுபேரும் போயிட்டுவாங்க”

சரிம்மா என்று அக்காவும் தம்பியும் தாலையாட்டினர். பவானி துளிசியோடு வீட்டுக்கு கிளம்பவும் அறிவழகன் அவர்களை கூப்பிட்டான்.

“துளசி இங்க வா. உனக்கு கொஞ்சம் சாக்லேட் வாங்கிட்டு வரச்சொல்லிருந்தல்ல. இந்தா அதை வாங்கிட்டு வந்து இருக்கேன். அதுல காலேஜ்க்கு போகும் போது கொண்டுட்டு போய் உன் பிரட்ண்ஸ்க்கு குடு” என்றவன் அவளுக்காக தானியாக வாங்கிட்டு வந்த பொருட்களையும் சேர்த்து அவள் கையில் கொடுத்தான்.

அவன் கையிலிருந்து வாங்கியவள் “நான் கேட்ட சாக்லேட்ஸ் எல்லாம் இருக்குதா மாமா” என்று ஆசையாக அதைத் திறந்து பார்த்தாள்.

“எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் உனக்குத்தான் எல்லாமே. அடுத்த வருஷம் நான் வர்றவரைக்கும் வைச்சு சாப்பிடுறளவுக்கு வாங்கிட்டுவந்திருக்கேன். வைச்சு சாப்டு”

“ஓகே ஓகே டன் டன்” என்றவளைப் பார்த்த‌ அவளது அம்மாதான் தின்னி பண்டாரம் வா நேராகிட்டுப்பாரு என்று அவளணு கையைப் பிடித்து இழுத்து கூட்டிட்டு வெளியே வரவும் சரியாக அங்கே முரளியும் ராகவனும் பைக்கில் வந்து நின்றனர்.

“என்ன அத்தை வீட்டுக்கு வரப்போற மருமகனை பார்க்க வந்தியாளாக்கும். அப்புறம் அறிவழகன் சார் வந்துட்டாரு போல.துளசி கையில என்ன? உன் மாமா கொடுத்த அல்வாவா?”என்று நக்கலாகக் கேட்டான்.

பவானியோ அவனை மதிக்காது துளசியின் கையை இறுக்கிப் பிடித்தவர் திரும்பி அங்கே நின்ற அறிவழகனைப் பார்த்தாள்.

“அக்கா நீ துளசியை கூட்டிட்டு கிளம்பு. யாருக்கும் பதில் சொல்ல நிக்காத. எவனாவது ஏதாவது சொல்லிட்டுப்போகட்டும்”என்றவன் முரளியை துச்சமாகப் பார்த்தான்.

“அட அறிவழகன் சித்தப்பு நீங்களா?எப்போ துபாய்ல இருந்து வந்தீங்க. உங்களை அங்க துபாய் சுமாமா சேக்கு விட்டுட்டானா என்ன?நீங்க இல்லாமல் துபாய்ல ஒரு வேலையும் ஓடாதுன்னு சொன்னாங்க. நீங்க இங்க வந்துட்டீங்களே, அங்கவுள்ள வேலையெல்லாம் நின்னுடாது?”என்று அவனது சந்தேகத்தை அப்போ வந்து கேட்டான்.

“இங்கப்பாரு சித்தப்பு கித்தப்புன்னு கூப்பிட்டன்னு வையேன் செவுட்டோட அடிச்சுப்போட்டிருவேன் பார்த்துக்க. யாருக்கு யாரு சித்தப்பம்ல. சும்மா இங்க வந்து நின்னு சண்டைக்கி இழுக்கப்பார்க்கியோ?ஓடிரு இங்கிருந்து முதல்ல”என்றுஅறிவழகன் முரளியை எச்சரித்தான்.

“பாரேன் சித்தப்புக்கு எவ்வளவு கோபம் வருதுன்னு. என்ன சித்தப்பு இன்னும் நாலு நாள்ல கல்யாணத்தை வைச்சிக்கிட்டு சொந்தக்காரனுவ எங்கக்கிட்ட இப்படி பேசலாமா?என்ன இருந்தாலும் சொந்தபந்தம் விட்டுப்போகுமா என்ன?கல்யாணத்துக்கு ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்க சித்தப்பு. மொத நாளே வந்திருந்து நல்லபடியா கல்யாணத்தை முடிச்சுக் குடுத்திட்டுப்போறேன். நம்ம துளசிக்காக இதைக்கூட செய்யமாட்டனா?”என்றவன் வண்டியிலிருந்து இறங்கி வந்து வீட்டுக்குள்ள நுழைய முயன்றான்.

அவ்வளவுதான் அறிவழகன் அவனது நெஞ்சில் கையைவைத்து தடுத்து நிறுத்தியவன் முரளியிடமிருந்து கள்ளு வாடை வருவதைப் பார்த்துவிட்ட் “ச்சை நல்ல எங்கயோ போய் இரண்டுபேரும் கள்ளுக்குடிச்சிட்டு போதையில வந்து இங்க பிரச்சனையை கிளப்பலாம்னு வந்திருக்கானுங்கம்மா. இவனுங்களை நாலு விரட்டுவிரட்டித்தான் அனுப்பணும். எப்பவும்போல என்கிட்ட பிரச்சனை செய்யன்னே வந்திருக்கானுங்க”என்று அறிவு சொல்லிவிட்டு அவங்கம்மாவைப் பார்த்தான்.

“அவனை அடிச்சு விரட்டிவிடுல இவங்கம்மைக்கும் இதே வேலைதான். இவனுக்கும் அதே வேலைதான். நம்ம குடும்பத்துல நல்லது நடக்கும்போதுதான் இரண்டுபேருக்கும் எழவெடுக்கும். அவங்கம்மாக்காரி என் மவளோட கல்யாணத்திலயும் வந்து பிரச்சனைதான் செய்தா. இப்போ என் மகன் கல்யாணத்துலயும் பிரச்சனை பண்ணலாம்னு மவனை ஏவி விட்றுக்கா. அவனை அடிச்சு விரட்டுல”என்று காந்திமதி இத்தனை வருஷத்து கோபத்தையும் ஒரே நாளில் வெளியே கொட்டினார்.

“ஆஹான் காந்திமதி நீ புல்பார்ம்ல இருக்கியே. உன் மவ கல்யாணத்துல நீ போட்ட நகையே குறைவுன்னு எங்கம்மாவும் ஆச்சியும் உண்மையைக் கண்டுபிடிச்சு சொன்னது உனக்குப் பிரச்சனையாக்கும். இப்போ அந்த நகையை அப்படியே உன் பேத்தி மூலமா உன் வீட்டுக்கு மறுபடியும் எடுத்துக்க பார்க்கல்ல அதைக் கண்டுபிடிச்சிட்டோம்னு நாங்க சண்டைக்கு இழுக்கோம்னு அதுஇதுன்னு பிரச்சனை செய்திறதே நீதான் கிழவி. உன் நாக்குக்கு உனக்கு இருக்குடி ஒருநாளு. உன் காதை அறுத்துவிட்றுதேன்”என்று முரளி காந்திமதியை மரியாதையில்லாமல் பேசினான்.

அவ்வளவுதான் பவானிக்கும் அறிவழகனுக்கும் தனது அம்மாவை முரளி மரியாதையில்லாமல் பேசுகிறான் என்றதும் கோபத்தில் அவன் பக்கத்தில் போனார்கள்.

அவனோ இதையெல்லாம் கண்டுக்கிற மாதிரியில்லை. அறிவழகன் அவனது சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்கப்போனான்.

அவனது கையை வளைத்துப் பிடித்த முரளி “இங்கப்பாரு உன்னை தூக்கிப்போட்டு மிதிக்க எனக்கு ரொம்ப நேரமாகாது. அந்தா நாக்காளே ஒருத்தி அந்த ஒருத்திக்காக மட்டும்தான் நான் இத்தனை நாளும் உன்னைக் கண்டலே ஒதுங்கிப்போயிட்டிருந்தேன். இனி அப்டடியெல்லாம் நல்லவனா இருக்கமாட்டேன். உன்ன மண்டையை உடைச்சிருவேன். பார்க்கியால பார்க்கியால”என்று கோபத்தில் கத்தியவன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனது நெஞ்சோடு நெஞ்சம் மோதினான்.

அவன் மோதிய வேகத்தில் அறிவழகன் பின்னாடி சாய்ந்து விழப்போனான். அதற்குள் பவானி அவனைப் பிடித்துக்கொண்டாள்.

அதைப்பார்தத துளசி ஓடிப்போய் அவர்கள் இரண்டுபேரின் நடுவில் போய் நின்னவள் “எதுக்குல என் மாமாவை அடிக்க, குடிகாரப்பையலே. ஏம்ல எங்க உயிரை எடுக்க. எங்கேயாவது போய்செத்துத் தெலையேன். எங்க கல்யாணம் நல்லபடியா நடந்திரக்கூடாதுன்னுதானே வேணும்னு வந்து சண்டையிழுக்க. நீயெல்லாம் மனுஷனால. போ போய் எங்கேயாவது விழுந்துச் சாவு”என்று வேகமாக அவனது நெஞ்சில் அடித்து தள்ளினாள்.

அவள் அடிக்க அடிக்க அதை வாங்கிக்கொண்டு சிரித்தான்.

“இன்னும் நல்ல அடி துளசி.உன்கிட்ட அடிவாங்கத்தான் நான் இத்தனை வருஷமா காத்திருக்கேன். இன்னும் நல்ல அடி”என்று சட்டையை கிழித்து நெஞ்சுத்தெரியா நின்று அவளை அடிக்கச் சொன்னான்.

அதுக்கவனித்த பவானி மகளை இழுத்து தள்ளி நிறுத்தினாள்.

“இங்கப்பாரு உங்கம்மாகாரி சொல்லித்தான் நீ இத்தனையும் செய்யிதன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நீங்க நினைக்கிற நடக்காதுடா. நல்லவ மாதிரியே உங்கம்மா பத்திரிக்கையை வாங்கிட்டு ஆசிர்வாதம் பண்ணினாளே அப்பவே தெரியும்ல. நீயும் உங்கம்ம்வும் சேர்ந்து ஏதோ களவாணித்தனம் பண்ணுதியன்னு.இதுக்குமேல ஏதாவது பிரச்சனை எய்தன்னு வை பன்னருவாள எடுத்து உன் கழுத்தை கிறுச்சு கிறுச்சுன்னு அறுத்துப்புடுவேன் பார்த்துக்க”என்று கத்தினாள்.

அதற்குள் முரளி குடிச்சிட்டு சண்டைப்போடுறது ஊருக்கே செய்தியாகிட, கோதை மவனுக்காக ஓடிவந்திருந்தார்.

அப்போதான் பவானி பேசினதைக் கேட்டவர் அவளுக்கு முன்னாடி வந்து நின்றார்.

“என்னடி சொன்ன பன்னருவாள வைச்சு அவன் கழுத்தை அறுத்திருவியா?எங்க அறுத்திரு பார்ப்போம். உன் ஆத்தாளையும் உன்னையும் அப்பவே கழுத்தறுத்துப் போட்டிருக்கணும்டி. ஏமாத்துக்காரியளா?பத்து பவுன் நகையை ஏமாத்தினவளுங்கதானடி நீங்கெல்லாம். அது தெரிஞ்சும் சரி ஏதோ போனா போகட்டும் வாழ்ந்தான். இப்போ அவனையே கைக்குள்ள போட்டுக்கிட்டு ஆடுதியளோ?எத்தனை நாளைக்கு ஆடுதியன்னு பார்ப்போம். உன் தொம்பிக்காரன் வெளிநாட்டுல பணத்துல உன் மகள எப்படி குளிப்பாட்டுதாம்னு நாங்களும் பார்க்கேன். இதுக்குமேல நாக்குமேல பல்லைப்போட்டு எதாவது டேசினன்னு வையேன். அப்புறம் தம்பி பொண்டாட்டின்னு பார்க்கமாட்டேன்”என்று கோதையும் சண்டைக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு நின்றார்.

ஆகமொத்தம் கல்யாண நடக்கப்போற வீட்டுக்கு முன்னாடி நின்னு ஊரே வேடிக்கைப் பார்க்கிற மாதிரி இரண்டுபேரும் சண்டைப்போட்டுக்கொண்டிருந்தனர்.

இப்போ வேலனும் சமுத்திரமும் ஓடிவந்து, பெண்கள் இருவரையும் இழுத்து தங்கள் பக்கத்தில் நிறுத்திவிட்டு முரளியையும் ராகவனையும் பார்த்தனர்.

அவர்கள் நிற்பதைக் கண்டதுமே இவனுங்க என்ன பண்ணிட்டு வந்திருக்கானுங்கன்னு புரிந்துவிட்டது.

சமுத்திரம் வேகமாகப் போய் முரளியின் சட்டையைப் பிடித்து இழுத்து அவனது கன்னத்தில் ஓங்கி அடித்தார்.

“ஒருத்தி உன்னை வேண்டாம்னு சொன்னாள்னா அவா மூச்சுக்காத்து படுற இடத்துலக்கூட நிக்கக்கூடாது. அதுதான்டா நல்ல ஆம்பளைக்கு அழகு. இப்படி அவா முன்னாடி குடிச்சிட்டு வந்து, அவளைக் கட்டிக்கப்போறவன்கிட்ட அடிவாங்கதுக்குன்னு வந்து நிக்க்கக்கூடாது. இப்படி கள்ளுக் குடிச்சிட்டு வந்து பிரச்சனை செய்யிறதுக்குப் பதிலா டிமிட்டு வாங்கித் தின்னுட்டு செத்திருல. இப்படி மானங்கெட்டுப்போய் ஒருத்திக்காக சண்டைப்போடுறதுக்கு நீ செத்துப்போறதே மேல்”என்று திட்டுவிட்டு கோதையிடம் வந்தவர் இனி உன் தம்பி வீட்டுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இத்தோட அவங்க குடும்ப உறவை முறிச்சிட்டு வீட்டுக்கு வா. என்னைக்கு நடுரோட்டுல வைச்சு என் மகனை கழுத்தை அறுத்திருவேன்னு உன்தம்பி பொண்டாட்டி சொன்னதைக் கேட்டுட்டு இப்படி எதுவும் சொல்லாமல் உன்தம்பி நின்னானோ இதுக்குமேல இவன் இரத்த உறவு நமக்கு வேண்டாம்”என்று இழுத்துக்கொண்டு போய்விட்டார்.

அறிவழகன் முரளியைப் பார்த்து கேவலமாக சிரித்தான். பவானியோ வேலன் என்ன சொல்லுவாரோ என்று பயந்து நின்றாள். துளசிக்கு முரளியைப் பார்க்க பார்க்க அருவருப்பாக இருந்தது.

அதனால் அவனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இவ்வளவு நாள் இல்லாமல் இன்று முரளிக்கு அவமானமாக இருந்தது. அதனால் எதுவும் சொல்லாது கோபத்தில் வண்டியை உதைத்தவன் அறிவழகனை முறைத்தவாறே போய்விட்டான்.

வேலனோ பவானியை தீர்க்கமாகப் பார்த்தவர் வேறெதுவுமே பேசாது அமைதியாக துளசி வா என்று கூப்பிட்டவர் தன்னோடு அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குப்போய்விட்டார்.

இதுக்குமேல இங்கே நின்னா நம்மளை தள்ளி வைச்சாலும் வைச்சிருவார் என்று பவானி பயந்துப்போய் வேலன் பின்னாடியே போனாள்.

காந்திமதிதான் யப்பா ஒருத்தன் தொந்தரவு இன்னையோட முடிஞ்சுப்போச்சு. இனி கல்யாணத்தை நிம்மதியாக நடத்தாலாம் என்றவாறே வீட்டுக்குள் திரும்பிபோக, அறிவழகனோ கோபத்தில் போன முரளியின்வண்டியையே முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.