ஆலங்குயிலின் ஆலாபனை-8
ஆலாபனை-8
முரளி இப்போது ஆத்திரத்தில் வண்டியை கிளப்பினாலும் அவனது மனசு மட்டும் அங்கயே சுத்திக்கொண்டிருந்தது.
“இருடி நான் யாருன்னு உனக்குக் காட்டுதேன். அப்போ வந்து என்கிட்ட நீ கெஞ்சுவ பாரு. உன் மாமாங்காரனுக்கும் சேர்த்து வைக்கிறேன்டி வேட்டு”என்றவன் வீட்டுக்குப் போகாமல் நேராக தியேட்டருக்குப் போய்விட்டான்.
அவனுக்குப் பிடித்த எஸ்.ஜே சூர்யா படத்தை பார்க்க வந்து உட்கார்ந்துவிட்டான். இப்போ திரும்பி பார்த்தான் அங்கே ராகவன் உட்கார்ந்திருந்தான்.
அதில் கொஞ்சம் அதிர்ச்சியானவன் “ஏய் ஆறுமணி ஷோ பார்க்க நீ எதுக்குல வந்த? அதுவும் என் பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்க?”
“அதுவா இந்த படத்துலதான் சிம்ரன் அழகா இருப்பாங்கன்னு வந்தேன்”
“லேய் அவங்களே ஆன்டியாகிட்டாங்கல”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த சிம்ரன் நல்லா டேன்ஸ் ஆடுறாங்க”
“அப்போ நீ அந்தமாதிரி ஆளால ச்சை எருமைக்கு பிறந்தவனே”
“சத்தமா சொல்லாத எங்கப்பா கேட்டா உன்னைத் தூக்கிப்போட்டு மிதிப்பாரு”
“நீ ஏம்ல இங்க வந்த?”
“நண்பேன்டா”என்று அவன் தோளில் கையைப்போட்டு உட்கார்ந்துவிட்டான்.
அவனது கையைத் தோளில் இருந்து தள்ளிவிட்டவன் “நீ சும்மாயிருல நானே மனசு சரியில்லாமல் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். இதுல நீயும் வந்திருக்கப்பாரு”என்று நெத்தியில் அடித்துக்கொண்டான்.
“இந்த தேட்டர்ல நம்ம இரண்டுபேரு மட்டும்தான் வந்திருக்கோம். நமக்காக மட்டும் படத்தை ஓட்டுறானுங்க பாரு. நல்ல ஆப்பரேட்டர் பார்த்தியால”
“மண்ணாங்கட்டி அவனுக்கு நான்தாம்ல ஆயிரம் ரூவா குடுத்து படத்தை ஓட்டச்சொன்னேன்”
“என்னல சொல்லுத. அதுக்கு நெப்போலியனையே வாங்கியிருக்கலாமே”
“காலங்காத்தால எவன் கடையைத் திறக்கான்”
“அப்போ கள்ளு இறக்கியிருக்கலாமே”
“எதுக்கு கோதை புருஷன்கிட்ட சொல்லிக்குடுத்து என்னை சாட்டைக்கம்பால சாத்ததுக்கா. சும்மாயிருல நானே மனசு நொந்துப்போய் வந்திருக்கேன்”
“என்ன அறிவழகன் இன்னைக்கு வந்து இறங்கிட்டான் போல. அதுதான் உன் சோகத்தை ஆத்த தியேட்டர் வந்திருக்கியோ?”
“ம்ம்ம்”
“அப்போ சோகத்தை இந்தா இந்த கள்ளைக் குடிச்சு ஆத்து”என்று அவன் கொண்டுவந்திருந்த தூக்குவாளியின் மூடியை திறந்து உள்ளேயிருந்ததை அவனுக்குக் காண்பித்தான்.
“லேய் இது எப்பம்ல கிடைச்சு. நீ எப்படி வாங்கிட்டு வந்த? யாராவது பார்த்தனுவன்னா வீட்டுல போட்டு குடுத்திருவானுவல. வேண்டாம் உள்ள வை”
“ஆமா இது பெரிய ராஜாஆரண்மனைப் பாரு எவனாவது நம்மளை தனியா வந்து பார்த்துட்டு போட்டுக்குடுக்கதுக்கு. இருக்கதே நீயும் நானும்தான். இதுல எவன் வருவான் போட்டுக்குடுக்கதுக்கு”
“ம்ம்ம் ஆப்பரேட்டர் போவான். இவனுங்களும் நம்ம ஊருதானேடா. உங்கப்பனையும் எங்கப்பனையும் தெரிஞ்சவனுங்கதானே”
“ஹான் அதுக்குத்தான் இவனுங்களுக்கு பணத்தை சொளையா எண்ணி குடுத்திருக்கேன். குடுல அப்படியே நானே மொத்தமா வாளியோட குடிக்கேன்”
“எனக்கு கொஞ்சம் வையில” என்றவன் அவனுக்கு எடுத்துக்கொடுத்தான்.
அவ்வளவுதான் மொடாக்குடிகாரன்கூட இப்படிக் குடிச்சிருக்கமாட்டான். கள்ளையே தண்ணி மாதிரி குடித்தான் முரளி!
“எலேய் பேதிலபோவான். இப்படிக் குடிச்சன்னா களிச்சல்ல போயிரும்ல அப்போ கோதைக்கிட்ட என்னால அடிவாங்க முடியாது”- என்று அவனிடமிருந்து கள்ளைக் காப்பாத்தி வைத்தான் ராகவன்.
குடிச்ச கள்ளின் போதை கொஞ்சம் தலைக்கேறியதும் படத்தை பார்க்க ஸ்க்ரீனைப் பார்த்தவனுக்கு கோபம் கோபமாக வந்தது.
“லேய்…மவனே என்னல படம் போடுத. பாதி தெரியல பாதி காணல. எங்கல போச்சு”என்று எழுந்து நின்று கத்தினான்.
அவனைப் பிடித்து இழுத்த ராகவன் “மச்சான் வாயை மூடிட்டு உட்காருல. நீ பேசுறது கடுப்பாயிருக்கு. இப்போ உனக்கு என்னதாம்ல பிரச்சனை?”என்று கேட்டான்.
“என் பிரச்சனை என்னென்னு உனக்குத் தெரியாதாஆஆ ராகவா. அந்த அறிவுகெட்ட அழகன் இன்னைக்கு வந்து இறங்கிட்டான்ல. என் காதலி, என் துளசி, சும்மாவே மாமாஆஆ மாமாஆஆஆன்னு அவன்கிட்ட உருகுவா. இப்போ அவன் வேற வந்துட்டான். இன்னும் நாலு நாளையில கல்யாணம். இதுக்கு இல்லையால ஒரு எண்டுகார்டு”என்று நொந்துபோய் பேசினான்.
“நீ நினைச்சா மொத்தமா எண்ட் கார்டு போட்றலாம். நீதான் நினைக்க மாட்டிக்கியே. துளசியை வேணும்னா தூக்கிடு. அப்புறம் உள்ளதை சமாளிச்சிக்கலாம்”
“அவளையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் சமாளிக்க முடியாது மாப்ள. அவளா புரிஞ்சிக்கிட்டு வந்தாதான் வாழுவா. இல்லையா செத்துப்போயிடுவா. உனக்குத்தான் அவளைப் பத்தி தெரியுமே. அவா என்னையவிட பெரிய ராங்கிக்காரி”
“மொத்தக்குடும்பத்தையும் கூட்டி வைச்சு எல்லாத்தையும் சொல்லு”
“என்னத்தைச் சொல்லசொல்லுத”
“நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறியே அதைச் சொல்லு”
“அதெல்லாம் வேலைக்காகாது. அந்த அறிவுக்கெட்ட அழகன் மொத்தமா பிரச்சனையை மடைமாத்திருவான். அவனே ஒரு அமுக்குனிடா. துளசியை கல்யாணம் பண்ணிக்கிற ஆசையிலதான் இவன் இவ்வளவு பிரச்சனை செய்யிறான்னு நம்ம பேசப்போற விசயத்தையே இல்லைன்னு என் மேலயே பழி போட்டுறுவான். அவன் புத்திதான் தெரியுமே. துளசி, அக்கா,அம்மான்னு அவங்களுக்காக நின்னுருவான். அப்புறம் திரும்பவும் நம்மதான் மூக்கறுபட்டு நிக்கணும். இது தேவையா”
“அப்போ ஒன்னு பண்ணுவோமா?”
“நீயும் நானும் என்னத்தை பண்ண முடியும். ச்ச்சீ தள்ளிப்போ. உன் பேச்சே ஒரு மார்க்கமா இருக்கு”
“அடப்போல லூசுப்பையல. நான் போறம்ல”என்று ராகவன் கோபத்தில் எழுந்தவன் தூக்குவாளியை தூக்கி அப்படியே வாயில கவுத்தான். அது பாதி அவன் வாயிலயும் மீதி அவன் மேலயும் சிந்தியது.
அதைப்பார்த்த முரளி அவன் கையில இருந்து அதைப்பிடுங்கி இருக்க மொத்தத்தையும் அவன் வாயில கவுத்துட்டான்.
இப்போ ராகவனும் போதையில இருந்தான். முரளியும் போதையில இருந்தான்.
இதுதான் உண்மையான நட்பு மக்களே நம்புங்க!
“ராகவா ஏதோ பண்ணலாம்னு சொன்னியியே என்ன பண்ணலாம்னு சொன்னியா?”
“நீதான் ஒன்னும் பண்ணவேண்டாம்னு தள்ளிப்போயிட்டியே”
“அடச்சை நாயே. என்ன பண்ணலாம்னு ஏதாவது உன் மூளையில உதிச்சிருக்குமே அதைச்சொல்லுல”
“அந்த அறிவுக்கெட்ட அழகனை நம்ம கல்யாணத்தன்னைக்குத் தூக்கிட்டா என்ன மாப்ளே?”
“அவனைத் தூக்கி என்னல பண்ணமுடியும். வரவர உன் புத்தி ஆம்பளைங்க மேலயே இருக்குல. நீ ரொம்ப கெட்டுப்போயிட்ட”
“ஆமா ஆமா நான் திங்கிற பண்டம்பாரு கெட்டுப்போறதுக்கு. அவனைத் தூக்கிட்டா கல்யாணம் நின்னுரும்லால. அந்தநேரத்துல நீ உள்ளப்போய் துளசிக்கு தாலியைக் கட்டிரு”
“தாலியைக் கட்டி?”
“குடும்பம் நடத்துல இதெல்லாமா நான் சொல்லியாத்தரணும்”
“அதுசரி எதுக்கு கோதையும் காந்திமதியும் மொத்தமா சேர்ந்து என்னை கொல்லுறதுக்கா? அதெல்லாம் சரியாவராது. அவனைக் காணலைன்னா முதல்ல என் சங்கைத்தான்டா பிடிப்பானுங்க. நான் அவனைத் தூக்கிட்டுப்போய் கொன்னுட்டேன்னு கொலைபழியே போட்டிருவாங்க. அது சரிப்படாது”
“அப்போ இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு செஞ்ச அந்தக் காந்திமதியைத் தூக்கிருவம்ல”
“அவளையா?அவளைத் தூக்கினா கல்யாணம் நிக்காது. என் கருமாதிதான் நடக்கும். அவா எல்லாம் மனுஷியா? அம்மையும் மவனுக்குமே என்னைக் கண்டாலே ஆவாதுடா. அதுவும் துளசி பொறந்ததிலிருந்து என்னைப் பார்த்தாலே கண்ணாலயே எரிச்சிருவா அந்தக் கிழவி”
“அதென்னல உன்னையும் உன் குடும்பத்தையும் பார்த்தா அந்தக் கிழவிக்கு அவ்வளவு எரிச்சலு வருது”
“அது ஒன்னுமில்லல என் மாமான் கல்யாணத்தோட எங்கத்தைக்கு நகை சீருன்னு கொஞ்சம் குறைச்சிதான் செஞ்சிருக்கு அந்தக் கிழவி. எங்க அம்மாச்சியும் எங்கம்மையும் சேர்த்து அதுக்கு ஏதோ பேசிருப்பாங்க போல. அதை பகையா மனசுல வைச்சிக்கிட்டுத்தான் துளசி பிறந்ததும் எங்கே எங்கம்மா எனக்கு பொண்ணு கேட்டு அவளை கேட்டிருவாங்களோன்னு அப்பவே அந்தக் கிழவி அறிவழகனுக்குத்தான் துளசின்னு பேசிடுச்சு. அதை எங்க அத்தைக்காரியும் தலையாட்டி ஆமான்னு சொல்ல, என் மாமானுக்கு வேற வழியில்லாமல் ம்ம் கொட்டிட்டாரு”
“அப்போ உனக்கு வில்லி காந்திமதி ஆச்சியில்லை. உன் அம்மாச்சியும் உங்கம்மையும்தான்னு சொல்லு”
“இப்போ உன்னைக் கொன்னு நான் வில்லனாகிடுவேன் பார்த்துக்க”
“காந்திமதியை தூக்கிறதுக்கு பதிலா கொன்னுறலாமா?”
“ஏதே!அதுசரி துளசியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமானார் வீட்டுல விருந்து சாப்பிடலாம்னு நினைக்கிற என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பி மொத்தமா முடிச்சுவிடப்பார்க்கிறியோ?”
அவ்வளவுதான் ராகவன் மண்டைய பிடிச்சிக்காட்டு “யய்யா சாமி என்னை ஆளை விட்று. நீயே ஏதாவது பண்ணி உன் காதலையும் வாழ்க்கையையும் காப்பாத்திக்க. என்னால இதுக்கு மேல முடியாது”என்று ராகவன் முரளியிடம் கையெடுத்துக்கும்பிட்டுக் கெஞ்சிவிட்டு அந்தப்பக்கமாக போதையில் படுத்துவிட்டான்.
“இவனை வைச்சிக்கிட்டு ஒரு ப்ளான்கூட போடமுடியல. லேய் எழுந்திரு உன் ஹீரோயின் டேன்ஸ் ஆடுறாங்க பாரு”என்று எழுப்பவும் சட்டென்று எழுந்து ஆஆஆவென்று திரையைப் பார்த்திருந்தான்.
இவன் வேற இப்படி ஆஆஆன்று பார்க்கிறானே என்று அவன் தலையைத் தட்டியவன் “லேய் எனக்கு ஒரு வழியைச் சொல்லுல?”என்று முரளி கேட்டான்.
“அந்தா இருக்குப்பாரு தியேட்டர் கதவு அதைத் திறந்துட்டுப்போனன்னா அந்தக் காந்திமதி வீடு. அப்டியே போய் அவா வீட்டு முன்னாடி நின்னு நியாயாம் கேளு, சண்டைக்கு இழு. உன்னால என்னெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்யி. நம்மளைக் கேட்க எவன் இருக்கான்?”
“இது நல்லாயிருக்கே அப்படியே செய்திருவோம். முதல்ல படத்தைப் பார்த்துட்டுப்போவோம். அதுக்குள்ள கொஞ்சமா தெளிஞ்சிரும்ல”
சரி என்ற ராகவனின் தலை போதையில் தொங்கிவிட்டது. அவன் தலைக்கு மேல முரளி தலையை வைத்துப் படுத்துவிட்டான்.
லேய் இதுதான் உங்க டக்கா?
இங்கே காந்திமதி வீட்டின் முற்றத்தில் துளசி பெரிய கோலமாக தெருவையே அடைத்துக் கோலம் போட்டிருந்தாள்.
அறிவழகன் காரில் வந்து இறங்கும்போதே அதைப்பார்த்துவிட்டு புன்னகையோடு உள்ளே வந்தான்.
அங்கே காந்திமதிக்கு பின்னாடியிருந்து துளசி எட்டிப்பார்த்தாள். அவளுக்குமே இப்போ அவனை முகமுகமாய் பார்ப்பதற்கு வெட்கம் வந்தது. அதைக் காட்டிக்காதுதான் காந்திமதியின் பின்னாலிருந்து எட்டிப்பார்த்தாள்.
அறிவழகனுக்குமே அது புரிந்ததுதான். அதனால் “என்ன துளசி எங்கம்மா பின்னாடி ஒளிஞ்சிருக்க?என்னைப் பார்க்கத்துக்குத்தானே வந்த. அப்போ மாமான்னு ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடிச்சிருக்கணும்ல. இப்படி பம்மிக்கிட்டு நின்னா என்ன அர்த்தம்?”என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“ஐய்யோ போங்க மாமா” என்று தலையை ஆட்டி வெட்கப்பட்டவளின் முகமெல்லாம் சிவந்தது.
‘யய்யா ராசா ஒரு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து” என்று காந்திமதி அவனது கையைப்பிடித்து முத்தம்கொடுத்தவர் அவனைக் கட்டிலில் உட்காரவைத்தார்.
அதற்குள் மலையரசனும் உள்ளேயிருந்து வந்தவர் “வாய்யா அறிவு?எப்படிய்யா இருக்க?”என்று கேட்டவாறே அவன் பக்கத்தில் உட்கார்ந்தார்.
துளசி யாருக்காக எதிர்பார்த்து காத்திருந்தாளோ அந்த மாமன் அவள் முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கான்.
துளசி அவனைத்தான் அணுஅணுவாய் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘இந்த மாமா என்ன போன வருஷம் பார்த்ததைவிடவும் இந்த வருஷம் இன்னும் அழகாகிட்டாங்க!’ என்று நினைத்தவள் லேசாக சிரித்தாள்.
அவன் கண்களோ துளசியைப் பார்த்துவிட்டு “ என்னைப் பார்க்க நீ மட்டும்தான் வந்தியா? என் அக்காக்காரி எங்க?”என்று கேட்டான்.
“அவளுக்கு அவா புருஷனைப் பார்க்கிற வேலையிருக்காம்,சொந்த தம்பியை பார்க்க வரதைவிடவும் புருஷன்தான் முக்கியம்னு இருக்கா. இனி ஆடியசைஞ்சு மெதுவா வருவா”என்று காந்திமதி பவானி வரலைங்கிற வருத்தத்தை இப்படி பேச்சில் சொன்னார்.
“அப்படியா?அப்போ உன் பேத்தியும் கல்யாணத்துக்கு பின்னாடி புருஷன்தான் முக்கியம்னு அவங்கம்மா மாதிரியே இருப்பான்னு சொல்லும்மா” என்றுவிட்டு சத்தமாக சிரித்தான்.
அதைக்கேட்டதும் இன்னும் வெட்கம் வர, துளசி தன் முகத்தை காந்திமதியின் தோளில் புதைத்துக்கொண்டாள்.
“அதென்ன அவங்கம்மா மாதிரி புருஷனைக் கவனிப்பாளான்னு கேட்குத?அவா இப்பவே உன்னைத்தான் கவனிக்க வந்திருக்கா, காலையில எழும்பி நீ வருவன்னு தெருவடைக்க கோலம்போட்டு, உனக்காக தனியா பால் எடுத்துவைச்சு காப்பி போட்டிருக்கா. உனக்காகத்தான் எல்லாம் பார்த்து பார்த்து செய்தா. கல்யாணத்துக்கு முன்னாடியே அவா உன்னைத்தானே சுத்தி சுத்தி வாரா. இதுல இனி கல்யாணம் நடந்துட்டா அவ்வளவுதான் உன்னை அவா முந்தானைக்குள்ளயே முடிஞ்சு வைச்சிருவா”என்று பேத்தி அவனை எப்படியெல்லாம் நேசிக்கிறாள் என்பதை நேரடியாகவே சொல்லிக்கொண்டிருந்தார்.
அதைக்கேட்ட அறிவழகன் “அப்படியா துளசி?அப்போ இப்பவே என்னை உன்முந்தானைக்குள்ள முடிஞ்சு வைச்சுக்க. எதுக்கு இன்னும் ஐஞ்சு நாள் வெயிட்பண்ணிட்டிருக்கணும்”என்றவன் சத்தமாக சந்தோசமாக சிரித்தான்.
அவனது சிரிப்பில் துளசி அப்படியே லயித்து தன்னை மறந்து மூழ்கிப்போனாள்!