ஆலங்குயிலின் ஆலாபனை-10

ஆலங்குயிலின் ஆலாபனை-10

ஆலாபனை-10

துளசி வீட்டுக்கு வந்ததும் அறிவழகன் கொடுத்த எல்லாத்தையும் எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

ஆனால் வேலனோ அமைதியாக யோசனையோடு இருந்தார். பவானிக்கு இப்போ வேலனிடம் பேசவே பயமாக இருந்தது. துளசி பிறந்த பிறகுதான் வேலனது கோபமெல்லாம் கொஞ்சம் குறைந்தது. அதற்கு முன்புவரைக்கும் கோபக்கார வேலன் என்று பேரெடுத்திருந்தார். இப்போதும் அந்தக் கோபக்கார வேலன் உள்ளுக்குள் இருக்காத்தான் செய்கிறான். அதை வெளிக்காட்டாது வேலன் அமைதியாக இருந்தார்.

துளசி அவர் பக்கத்தில் உட்கார்ந்தவள் “அது முரளி மச்சான் குடிச்சிட்டு வந்து மாமாவை அடிச்சாங்கப்பா. அதுலதான் சண்டை வந்திடுச்சு. அம்மாவும் கோபத்துல திட்டிட்டாங்க. நானும் மச்சானை கோபத்துல திட்டி அடிச்சிட்டேன். நாங்களா எதுவும் செய்யலைப்பா”என்று விளக்கம் சொன்னாள்.

வேலனோ வேண்டாம் என்று கையை நீட்டி தடுத்தவர் “எனக்கு இருக்கிற சொந்தமே என் அக்கா குடும்பம்தான். வேற எத்தனைபேரு இருந்தாலும் அவனுங்க எல்லாம் சொந்தக்காரனுங்கதானே தவிற இரத்த சொந்தமில்லை. முரளியோட கோபம் நியாயமானது. அவனுக்குத்தான் முதல் உரிமை. என்ன உங்கம்மாவும் அம்மாச்சியும் உன் மனசுல மாமான்னு ஆசையை விதைச்சிட்டாங்க.அதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்தையே நடத்துறேன். உன்னோடு விருப்பத்துக்காக மட்டும்தான் இந்தக் கல்யாணம். என் அக்கா மகனுக்கும் உன்னை கட்டிக்கணும்னு ஆசைப்பட உரிமை இருக்குல்ல. அந்த உரிமை மறுக்கப்படும்போது யாருக்குன்னாலும் கோபம்வரத்தான் செய்யும். அந்த ஆதங்கத்துல குடிச்சிட்டு வந்து ஏதாவது பேசினா பொறுத்துக்கமாட்டீங்களோ? நீ சின்னபுள்ளை அவனைக் கைநீட்டி அடிச்சிருக்க, உங்க மாமாங்காரன் அவனைத் தள்ளிவிடப்பார்த்திருக்கான். இதுக்கு இடையில உங்கம்மாக்காரி அவன கழுத்தை அறுத்திருவேன்னு துள்ளிட்டு நிக்கா. அப்போ உங்க மாமானுக்கு ஒன்னுன்னா எப்படி நிக்கீங்க. இப்படித்த்னே அவனுக்கும் அவன் மாமானுக்குமான பந்தம் இருக்கும். அவன் என் அக்கா மகன். அது எந்த நாளும் மாறாதுல்ல. உன்னைக் கல்யாணம் செய்தாலும் இல்லைன்னாலும் அவன் எனக்கு மருமவன்தான். அது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்”என்றவர் துண்டை தூக்கி எறிந்துவிட்டு உள்ளே போய்விட்டார்.

சுளசிக்கும் பவானிக்கும் ஒன்னும் பேசமுடியவில்லை. அப்படியே கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர்.

“ப்ச்ச்ச மாமா வராங்கன்னு ஆசையா போயிட்டு. இப்போ இந்த முரளி மச்சான்னால எல்லாமும் போச்சு. இதுல அப்பாவுக்கு வேற கோபம். எப்போட இந்தக் கல்யாணம் முடியும்னு இருக்கும்மா. இனியும் வந்து பிரச்சனை செய்வாங்களோன்று திக்கு திக்குன்னு பயமாவே இருக்கு. இன்னுமு என் நெஞ்சு படபடன்னு அடிக்குது பாரும்மா” என்று பவானியின் கையை எடுத்து துளசி தனது நெஞ்சில் வைத்து பார்க்கச் சொன்னாள்.

“நீ இப்படி பயப்படாத துளசி. கல்யாணத்துக்கு இன்னும் நாலே நாள்தான் இருக்கு. நல்லா சாப்பிட்டு எடுத்து சந்தோசமா இரு. அப்போதான் எங்களுக்கு பார்க்க சந்தோசமா இருக்கும். நீயும் கல்யாணத்தன்னைக்கு பார்க்க அழகா இருப்ப. இந்த முரளியும் அங்க அத்தையும் பேசுறது செய்யிறதையெல்லாம் கண்டுக்கிட்டா இத்தனை வருஷம் நான் நல்லா வாழ்ந்திருக்கவே முடியாது. எப்பவும் அவங்களையெல்லாம் ஒதுக்கித்தான் வைச்சிருக்கேன். நமக்கு ஒத்துவராதவங்களை நினைச்சு நம்ம வருத்தப்படக்கூடாது. அவங்கக்கிட்ட இருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க முடியுமோ அவ்வளவுதூரம் விலகி இருந்திடணும். அப்போதான் நம்ம நிம்மதியா வாழமுடியும். உன் வாழ்க்கையில் வர்ற முக்கியமான ஒன்னு கல்யாணம். அதை நினைச்சு சந்தோசப்படு. அதுக்காக எப்படியெல்லாம் உன்னை அலங்காரம் பண்ணிக்கணுமோ பண்ணிக்க. அதைவிட்டுட்டு உங்க அத்தைக்காரியும் அவா மகவனும் செய்ததை நினைச்சு வருத்தப்படாத.,போ போய் மாமா உனக்காக வாங்கிட்டு வந்ததை எடுத்து பத்திரப்படுத்து. இன்னும் உனக்கு பாரீன் சேலையெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கானம்.அதெல்லாம் உங்கக் கல்யாணம் முடிஞ்ச பிறகு தருவானம்”

“இப்பவே தந்தா அதுக்கெல்லாம் ப்ளவுஸ் தைச்சி வைச்சிடுவேன்லம்மா. இந்த மாமா ஏன் கல்யாணம் முடிஞ்ச பொறவு தர்றாங்களாம்”என்று சிணுங்கியவள் உள்ளே போய்விட்டாள்.

அவளுக்கு முரளி சண்டைப்போட்டது எல்லாம் இப்போதைக்கூ பெருசாவே தெரியலை. அவளுடைய மாமாவை அடிச்சிட்டான்னு கோபம் வந்து முரளியை அடித்து தள்ளினாள். அது அப்போதைக்கு முடிஞ்சு போச்சுன்னு அவளும் அதை தூக்கிப்போட்டு கல்யாணத்துக்கு என்னென்ன அலங்காரம் பண்ணலாம், எந்தெந்த நகைப்போடலாம் என்று இப்போதைக்கு எடுத்து வைக்கலானாள்.

அடுத்த நாள்தான் அறிவழகன் கொடுத்த பார்சலை பிரித்துப் பார்த்துவிட்டு சந்தோசத்தில் சுத்திக்கொண்டிருந்தாள். அவளுக்கு ட்ரஸ்ஸ், பெர்ஃப்யூம்ஸ்னு அள்ளிக்கொண்டுட்டு வந்திருந்தான். அதையெல்லாம் பிரிச்சு அடுக்கி வைச்சிட்டு கட்டிலில் ஹாயாக படுத்து கனவுக் கண்டுக்கொண்ட்டிருந்தாள்.

அப்போ யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டதும் ஓடிவந்துப்பார்க்க பூங்கொடி நின்றிருந்தாள்.

“என்னடி எங்கப்போறதுக்கு இப்படி சிங்காரிச்சிட்டு வந்து நிக்க?என்ன உங்கம்மா உன்னைத் திருநெல்வேலி கூட்டிட்டுப்போறேன்னு சொன்னாங்களாக்கும்?”

“ஏட்டி இன்னைக்கு ஹால்டிக்கெட் வாங்க காலேஜிக்கு போகணும்னுங்கிறதே மறந்திட்டியா என்ன?”

“ஐய்யோ ஆமால்ல போகணும்ல, சுத்தமா மறந்தட்டனே”

“அதுசரி நீ இப்போ உன் மாமாக்கூட டூயட்டு பாடுறதுலதானே இருப்ப. பரீட்சை ஞாபகமெல்லாம் எங்க இருக்கப்போகுது. நீ இப்போ கிளம்பி வா நம்ம போயிடடு வந்திரலாம்”

“ அது பூங்கொடி நான் இப்போ தனியா வெளியே போகக்கூடாதாம். நான் அன்னைக்கே மாமாக்கிட்ட சொல்லிட்டேன். அம்மாதான் என்னை தனியாபோகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.அதனால மாமா என்னைக் கூட்டிட்டுப்போறேன்னு சொல்லிருக்காங்க. அப்போ நீயும் எங்கக்கூடவே வர்றியா?”என்று கேட்டாள்.

“உங்கக்கூடவா?நான் எங்கம்மாக்கிட்ட கேட்டுட்டு வர்றேன். நீங்க ஜோடியா போவீங்க அதுக்கிடையில நான் எதுக்குடி கரடி மாதிரி. நீங்க போங்க. நான் இன்னைக்கு தனியா ப்ஸ்லயே போயிட்டு வர்றேன்”என்று கிளம்பினாள்.

“ஏட்டி நில்லு நீ நினைக்கிற மாதிரி நாங்க தரியாவெல்லாம் போவல. எங்கம்மாவும் எங்கக்கூட வர்றாங்க நீயும் எங்கக்கூடவே வா. அப்படியே நம்ம திருநெல்வேலி போயிட்டு நெல்லையப்பர கும்பிட்டுக்கிட்டு வருவோம்.நீயும் ரொம்ப நாளா போகணும்னு சொன்னல்ல”

ஆமா. ஆனால் உங்கக்கூட எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே பவானி வந்தாள். 

“ஏட்டி அதுதான் நாளைக்கு நாங்க போகும்போது உன்னையும் சேர்த்துக் கூட்டிட்டு போறோம்னு அவா சொல்லுதாள்லா கேளேன். நாளைக்கு எங்கக்கூட போறேன்னு சொர்ணம் அத்தைக்கிட்ட சொல்லு. அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க”

சரி மயினி என்று தலையாட்டியவள் திரும்பி அவங்க வீட்டுக்கே போய்விட்டாள்.

அடுத்தநாள் காலையில் துளசி அறிவழகனுக்குப் போன் பண்ணி காலேஜிக்கு போகணும் மாமா வாங்க என்று சொல்லவும் அவனும் கிளம்பி காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

அவனது கார் வந்ததும் துளசி வெளியே வந்தவள் “ஏய் புள்ளை பூங்கொடி வெளியே வா. நானும் அம்மாவும் வந்துட்டோம்”என்று சத்தம்கொடுத்தாள்.

அவளது சத்தம் கேட்டதும் பூங்கொடி வேகமாக வெளியே வரவும் சொர்ணம்மாள் அவளிடம் “ இங்கப்பாரு அவங்க இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கப்போற சின்னஞ்சிறுசுங்க. அதனால் கொஞ்சம் தள்ளியே நட. நீ பவானிக்கூடவே இரு புரியுதா. அவங்க கோயிலுக்குப் போனாவன்னா நீயும் போயிட்டு உனக்கும் அவளை மாதிரியே நல்ல புருஷனா கிடைக்க வேண்டிக்கிட்டு வா. எங்களுக்கும் உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசையிருக்கும்ல”என்று கையில்காசையும் கொடுத்து அனுப்பிவிட்டார்.

துளசி காரின் முன்பக்கம் ஏறவும் பவானியும் பூங்கொடியும் பின்னாடி ஏறி உட்கார்ந்தனர்.

“யக்கா கிளம்பலாமா?என்ன பூங்கொடி உங்கமாமா எப்படி உன்னை வெளிய விட்டுச்சு. சொர்ணம் அத்தை அப்படியெல்லாம் உன்னை யாருக்கூடவும் வெளிய விடாதே. இந்த அறிவழகன் மச்சான்னதும் நம்பி விட்டுட்டாங்களோ?”என்று கேட்டான்.

“அவளோ அது அதுவந்து துளசிக்கூட விட்டாங்க”என்றவள் அதுக்கப்புறம் அவன்கூடபேசுற மாதிரியில்லை. அமைதியாக உட்கார்ந்துகொண்டாள்.

அவர்கள் காருக்குப் பின்னாடிதான் முரளியின் வண்டியும் நின்றிருந்தது. ஆனால் சத்தமில்லாமல் பிரச்சனை எதுவும் செய்யாமல் அமைதியாக அவர்கள் கிளம்பிப் போகட்டும் என்று காத்திருந்தான்.

அவர்களது கார் கிளம்பவும் முரளியும் ராகவனிடம் “பார்த்தியா எப்படி ஜோடியா கிளம்பிப்போறான்னு. இவனை மாதிரி நமக்கு அமுக்கினி வேலைப் பார்க்கத் தெரியலையேடா. அப்படித்தெரிஞ்சிருந்தா இதுக்குள்ள நானும் துளசிக்கிட்ட நடிச்சு காதலை சொல்லி எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருந்திருப்பனே. நமக்கெல்லாம் அப்படி நடிப்பு நடிக்க வரமாட்டுக்கே என்ன செய்ய?”என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தான்

அதைக்கேட்ட ராகவனோ அவனது தோளைத் தட்டிக்கொடுத்தவன் “நீ நீயா இருக்க முரளி. உங்கம்மாக்கிட்ட அப்பாக்கிட்ட, உன் பிரண்ட்ஸ்கிட்டன்னு உண்மையா இருக்கு. முத்துமாரி அக்காக்கிட்ட எதுக்காவது இதுவரையிலும் பொய் சொல்லாருக்கியா?”என்று நேரடியாகவே கேள்விங்கேட்டான்.

“க்கும் சொந்த அக்காக்கிட்ட எதுக்குடா நான் பொய் சொல்லப்போறேன். இரத்த உறவுக்கிட்ட பொய் சொல்லி என்ன சேர்த்திகப்போறோம் சொல்லு”

“அதுதான் நீ. பிரண்டு என்கிட்ட பொய் சொல்லிருக்கியா?”

“அது பொய்யின்னு சொல்லமுடியாது சமாளிக்கணும்னு லேட்டா வர்றதையோ குடிக்கிறதையோ மறைப்பேன் அவ்வளவுதான்”

“அவ்வளவுதான் நீ. இதுக்குப்போட்டு ஏன் இவ்வளவு யோசிக்கிற?அவன் கிடக்கிறாம்ல லூசுப்பைய. உன் குணத்துக்கு துளசியைவிடவும் குணமான பொண்ணு கிடைப்பா”என்று தோளைத் தட்டினான்.

“ஆனாலும் பாரேன் என்ன தைரியத்துல இதெல்லாம் செய்திட்டிருக்கான்னுதாம்ல புரியல?”

“எல்லாம் பித்தலாட்டக்காரனுங்க தைரியம்தான். இதுவரைக்கும் நல்லபையன்னு பேரெடுத்து வைச்சிருக்காம்லா. அதுல தப்பிச்சிக்கலாம்னு நினைச்சிருப்பானாயிருக்கும்”

“அவன் தப்பிச்சிக்கிறது இருக்கட்டும்ல, துளசி நிலமையை நினைச்சா எனக்கு இப்பவே வயித்துக்குள்ள பயப்பந்து உருளுது. என்னால அதை தாங்கிக்க முடியல. இப்போ என்ன செய்யணும்னே ஒன்னும் ஓடமாட்டுக்கு”என்று புலம்பினான்.

“லேய் உனக்கே துளசியோட வலியை நினைச்சு மனசு தாங்கலைன்னா, அப்போ அவன் நிலமை என்னன்னு யொசிச்சுப்பாரு. அவனுக்கும் அவன் நேசிக்கிறவளோட வலியைத் தாங்கிக்க முடியாமல் தவிப்பான், திணறுவான்தானே. சமுத்திரம் மாமா உன்னை இந்தளவுக்கு திட்டியும் அடிச்சியும் நீ இன்னும் துளசிக்காக யோசிக்கிறியே. அப்போ அறிவழகனும் அப்டடித்தானு யோசிப்பான். விடு அந்த சாமி எது ஒஐச்சிருக்கோ அதே நடக்கும். எது நடந்தாலும் ஏத்துக்கிடணும்னு மனசுல சொல்லி வைச்சிக்க வா போவோம்”என்று அவனை வண்டியை ஓட்டச்சொல்லி தள்ளினான்.

முரளியோ இன்னும் யோசனையோடவே நின்றிருக்க

“இதுக்குமேல இங்க நின்னு என்ன பண்ணமுடியும். நடுரோட்டுல மாடுகிட்டத்தான் முட்டு வாங்கணும். நீ முன்னாடி இருக்க உனக்கு ஒன்னுமுல்ல என் பின்னாடி மாடு முட்டினா வடிவேலு மாதிரி நமக்கு நார்கூடையை கட்டிடு அலையமுடியாது ராசா”என்று ராகவன் அவனை பின்னாடி தள்ளிட்டு அவன் வண்டியை எடுத்தான்.

அறிவழகன் துளசியையும் பூஙாகொடியையும் காலஜ்ல கொண்டுவிட்டதும் ஓடிப்போய் ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துவிட்டனர். 

அறிவழகன் பவானியிடம் திரும்பி “யக்கா நீ நெல்லையப்பர் கோயிலுக்குப் போகணும்னு சொன்னியே அப்படியே கோயிலுக்குப் போயிட்டு கடைக்குப் போவோமா?இல்லை கடைக்குப்போயிட்டு போவலாமா?”என்று கேட்டான்.

“முதல்ல கோயிலுக்குப் போவோம் தம்பி. எனக்கும் வேண்டுதல் இருக்கு. பத்திரிக்கு வைக்கும்போகும்போதே உங்க இரண்டுபேரையும் கூட்டிட்டு வருவேன்னு வேண்டிட்டுதான் வந்தேன். முதல்ல கோயில்தான் முக்கியம்”

“சரிக்கா அப்போ வண்டியை கோயிலுக்கே விடுதேன்”என்றவன் கோயிலுக்கு வண்டிஐ ஓட்டினான்.

துளசிக்கு மனசெல்லாம் அப்படியே குளுகுளுன்னு இருந்தது. அறிவழகன் பக்கத்தில் நின்று ஜோடியாக சாமியை கும்பிட்டுட்டு, அப்படியே கடைக்குப்போய் துணியெல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு வரும்போது திருப்தியான நாளாக அந்த நாளை உணர்ந்தாள்.

அவ்வளவுதான் அடுத்தடுத்து நாலு நாளும் அடுத்து எப்படி போச்சுன்னே தெரியாது. அவளது மனசுக்குள்ள இப்போ பட்டாம்பூச்சிக் கூட்டமே பறந்துக்கொண்டிருந்தது.

இங்கயோ முரளிக்கு அப்படியே நெஞ்சில் வைக்கப்போரில் வைத்த தீ மாதிரி ஏமாற்றமும் விரக்தியும் மளமளவென்று நெஞ்சிக்குள் தீப்பிடித்ததுபோன்று எரிந்துக்கொண்டிருந்தது.

கல்யாணத்துக்கு முந்தின நாள் சொந்தக்காரங்களை அழைத்து சாப்பாடு கொடுக்கணும் என்பதால் வேலன் எல்லா ஏற்பாட்டையும் செய்தார். ஆனால் மனசு மட்டும் அகாகா வீட்டுல யாரும் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

அதனால் சூடு சுரனையா அக்காவா என்று யோசித்தவர் அக்காதான் என்று முடிவு செய்து நேராக கோதை வீட்டுக்கே போய்விட்டார்.

வேலன் இந்த நேரத்துல வீட்டுக்கு வருவான் என்பதை எதிர்பார்க்காத கோதையோ “என்ன தம்பி இந்த நேரத்துல இங்க வந்திருக்க?கல்யாண வேலையெல்லாம் நல்லபடியாதாரே போகுது? பிரச்சனை ஒன்னுமில்லையே என்று தம்பிக்க ஏத்த அக்காவாகக் கேட்டார்.

“அதெல்லாம் நல்லாதான்கா போகுது. நீ உன் குடும்பத்தோடு வீட்டுக்கு வாக்கா. நீயில்லாமா எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்ன நடந்தாலும் துளசி உன் தம்பி மவாதானே. அவளுக்காக வந்து கல்யாணத்துல நில்லுக்கான. அன்னைக்கு நடந்ததுக்கு வேணும்னா நான் மன்னிப்பு கேட்குதேன்”

“ஐய்யோ வேலா என்ன பேச்சின்னு இப்படி பேசுத. நம்ள துளசி கல்யாணத்துக்கு நான் வராமல் இருப்பனா?நாளைக்குப் பாரு மண்டபத்துல மொத ஆளா நான்தான் நிப்பேன். நீ ஒன்னும் யாருக்கிட்டயும் மன்ரிப்புக் கேட்காண்டாம்”என்று கோதை தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டார்.

இப்போது கோதை கெத்தாக மகனையும் சமுத்திரத்தையும் பார்த்தாள் “ மச்சான் நீங்களும் மருமவனும் சேர்ந்து வந்திடுங்க. நான் ஏற்கனவே முத்துமாரிக்கிட்டயும் பெருமாள்கிட்டயும் நேர்லபோய் பத்திரிக்கை குடுத்திட்டு வரச்சொல்லிட்டு வந்துட்டேன்”என்று வேலன் பேசினார்.

சமுத்திரம் சரியென்று தலையாட்டினார். முரளியோ அவரை பாவமாகப் பார்த்தான்.

இந்த பாவப்பட்ட மூஞ்சை வைச்சிட்டால அன்னைக்கு அந்தக்கூத்து நடத்துண?என்று வேலர் மனசுக்குள்ள நினைத்துக்கொண்டார்.

வேலன் அக்காவீட்டுக்குதான் போயிருக்காரு என்று தெரிந்ததும் பவானிக்கும் அவ்வளவு கோபம் வந்தாலும், துளசி கல்யாணம் முடியட்டும் இவளுகளை மொத்தமா ஒதுக்கி வைச்சிடணும் என்று நினைத்துக்கொண்டாள்.

பவானி உன்னையெல்லாம் எந்த ரகத்துல சேர்க்கது?

அடுத்த நாள் காலையில் மண்டபத்துக்கு ஐஞ்சு மணிக்கே எழுந்து எல்லோரும் மாண்டபத்துக்கு கிளம்பினார்கள்.

பரமண்டபம் பக்கத்து ஊருலதான் என்பாதல் நடந்தேபோகிற தூரம்தான். இருந்தாலும் பொண்ணு மாப்பிள்ளையும் நடந்தா போகமுடியும் காரில் போய் இறங்கினார்.

துளசி மண்டபத்துக்கு போனதுமே பொண்ணுக்கு அலங்காரம்னு ஆளாளுக்கு அவளை பிய்த்துக்கொண்டிருந்தார்கள்.

இங்கே கல்யாணத்துக்கூ எல்லோரும் தயாராகிக்கொண்டிருக்க, கோதை வீட்டில் முத்துமாரி குழந்தைகளோடு வந்திறங்கினாள்.

முத்துமாரிக்கு துளசி கல்யாணத்துக்கு போவதற்கு விருப்பமேயில்லை. ஆனால் வேலன் மாமா வந்துக் கூப்பிட்டாடாரே என்றுதான் குடும்பத்தோடு வந்திருந்தாள்.

கோதை முத்துமாரியென்று குடும்பமே துளசியின் கல்யாணத்துக்கு கிளம்பி போவதைப் வேதனையோடு முரளிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவங்கப்போனதுக்கு பிறகு அவனைத் தேடி வந்த ராகவன் அவனை இழுத்துப்பிடிச்சு கல்யாண மண்டபத்துக்கு கூட்டிட்டுவந்தான்.

“முரளியோ லேய் வேண்டாம்ல. நான் வந்தால ஏதாவநு பிரச்சனைக்கு வந்திருக்கேன்னு நினைச்சு துரத்தப்போறானுங்க”என்று வராமல் வீட்டுக்குப் போக திரும்பினான்.

“இல்லைன்னா மட்டும் பிரச்சனை நடக்காதா என்ன?வா நு வந்தால்தானே உன் அருமை அவங்களுக்குத் தெரியும்”என்று அவனை இழுத்துட்டுப்போய் முன்வரிசையில் உட்கார்ந்தான்.

பவானியும் காந்திமதிக்கும் அவனைக் கண்டதும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“வேலனோ ஓடிவந்து வா மருமவனே. கல்யாணம் முடியறவரைக்கும் நீதான் மாமாகூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கணும்”என்று அவனது கையைப்பிடித்து சொல்லிவிட்டுப் போனார்.

மூகூர்த்த நேரமானதும் மாப்பிள்ளையை கூப்பிடுங்க, அப்படியே பொண்ணையும் கூட்டிட்டு வாங்க என்று ஐயர் சொன்னதும் வேலன் அறிவழகனை கூட்டிட்டு வர்றதுக்காக அவனது அறைக்குள் போக நடந்தவர் அங்கே மொத்தமாக மேளச்சத்தம் முதற்கொண்டு நின்று அமைதியாகிவிடவும் என்னவென்று பக்கவாட்டில் திரும்பினார்.

அவ்வளவுதான் அவர் கண்டகாட்சியை அவரது கண்களாலயே நம்பமுடியாமல் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டார்.