ஆலங்குயிலின் ஆலாபனை-1

ஆலங்குயிலின் ஆலாபனை-1

ஆலங்குயிலின் ஆலாபனை

ஆலாபனை-1

“துளசி!துளசி”என்று அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டதும் தலையை பின்னிக்கொண்டிருந்த துளசிக்கு எரிச்சல் வரவும் “ஏம்மா கத்திட்டிருக்க. இரு தலையை வாரிட்டு வாரன”என்றவள் வேக வேகமாக முடியைப் பின்னல்போட்டுவிட்டு கண்ணாடியில் தன் முகத்தைத் திருத்தி திருநீறு இட்டுவிட்டு வெளியே வந்தாள்.

“ஏன்டி உன் கூந்தலை அள்ளி முடியறதுக்கு இவ்வளவு நேராமடி. காலேஜிக்கு நேரமாயிட்டு. இப்படி ஆடி அசைஞ்சு கிளம்பினா பஸ்போயிடும் பொறவு உங்கப்பன்கிட்ட வந்து கொண்டுவிட சொல்லுவ. சீக்கிரம் கிளம்பி போ போ பஸ்ல நாலு பிள்ளைங்ககூடவே போயிட்டு வா”என்று டிபன் பாக்ஸை அவள் கையில குடுத்துட்டு சாப்பாட்டுத் தட்டையும் எடுத்து வைத்தாள்.

“என்னம்மா இது இன்னைக்கும் அதே இட்லியும் சட்னியுமா?கறியில்லையாம்மா?ஒத்தைப் பொம்பளை புள்ளைக்கு கறியாக்கி தரமாட்டியா?அம்மாச்சி பாரேன் கறி மீனுன்னு எனக்கு செஞ்சித்தர்றாங்க. நீயும்தான் இருக்கியே? இப்படி சைவைத்தையே கண்ணுல காட்டி வளர்ற பிள்ளை என்னை வளரவிடாம செய்யுத. இது உனக்கே குத்தமா தெரியலையா?”என்று அலுத்துக்கொண்டே சாப்பிட்டாள்.

“எங்க அம்மாவுக்கு என்னடி?நினைச்சா பொறவாசல்ல கிடக்க கோழி கழுத்தைத் திருவி உடனே கறியை சட்டியில ஆக்கிருவா?மவன் வெளிநாட்டுல இருக்கான்னு மிதப்புல வைப்பா. நான் அப்படியா என் புருஷன் பண்ணையம் பண்ணித்தான்டி வீட்டுக்கு நெல்லு கொண்டு வர்றாரு. ஒத்தை புள்ளையா உன்னைய வைச்சிருந்தாலும் நாலு நகையை போடணும்ல, சேர்க்கணும்ல. ரொம்ப வியாக்கியானம் பேசாமல் தின்னுட்டுகிளம்பு. காலையிலயே வாயைப்பாரு வாயை” 

“யம்மா அம்மாச்சி வீட்டுக்குத்தானே நான் மருமகளா போறேன். அப்புறம் எதுக்கு நகைபோடணும்னு சொல்லுத. அதுதான் உனக்குப்போட்டது இருக்குமே அதையே எனக்குப் போட்டுவுடேன் யாரு கேட்கப்போறா?”

“அதுசரி ஊருக்காரிய நாக்குமேல பல்லைப்போட்டு என்னை நாத்துறதுக்கா. அதெல்லாம் உனக்கு எவ்வளவு போடணுமோ அதையெல்லாம் போட்டுத்தான் பதவிசா அனுப்புவேன். என் தம்பிக்கு கட்டிக்கொடுத்தாலும் அதுல என் புருஷனோட மரியாதையும் மதிப்பும் இருக்கணும்டி.எங்கம்மா போட்டதையே உனக்குப்போட்டுவிட்டா அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும். நானும் எம் புருஷனும் உழைக்கிறதே உனக்காகத்தான்.என்னால எவ்வளவுபோடமுடியுமோ போட்டுத்தான் என் தம்பிக்கானலும் கட்டிக்குடுப்பேன்”என்று யதார்த்தமான அம்மாவாக தன் புருஷனுக்காக யோசிக்கும் மனைவியாக பவானி பேசினாள்.

“அதென்ன என் தம்பிக்கானாலும்னு ஒரு இக்கன்னா வைச்சு பேசுத.உன் தம்பிக்குத்தான் இந்த துளசின்னு அம்மாவும் மவளும் நான் பொறந்தப்பவே பேசி வைச்சிட்டியளே. இப்போ தம்பிக்கானாலும்னு இழுக்கிறம்மா!உன் தம்பிதான் என் புருஷன்னு மனசுல எழுதி வைச்சிருக்கேன். உன் தம்பி இந்தத்தடவை ஊருக்கு வரும்போது கல்யாணத்தை முடிச்சு வைக்கிற ஆமா சொல்லிட்டேன். நானும் படிக்கணும்னு படிப்பையும் முடிகப்போறேன். உன் தம்பி வந்துட்டுஅந்தப்பக்கம் நாலு லாந்து இந்தப்பக்கம் நாலு லாந்துன்னுஊரை சுத்திட்டு திரும்ப போயிடுறாங்க. இதுசரியில்லைன்னு சொல்லி வை”

“க்கும் இன்னும் கழுத்துல தாலியேறல அதுக்குள்ள பேச்சைப்பாரு, அப்படியெல்லாம் கல்யாணத்தை பண்ணிவைக்கமுடியாது, அப்படி செய்யலைன்னா என்னடி செய்வ?”

“ஒன்னும் செய்யமாட்டேன். இப்படியே போய் உங்கம்மா வீட்டுல டேரா போட்டிருவேன். எப்படியும் அம்மாச்சி விரட்டிவிடமாட்டாங்க. அங்கயே குடும்பம் நடத்தவேண்டியதுதான். வேற வழி”என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

அதைக்கேட்டதும் பவானி “அடிங்க உன்னை தென்னமட்டையை உறிச்சு நாலு விலாசு விலாச ஆளில்லைன்னு மெதப்புல பேசுறியாடி. சும்மா இப்படி போய் எங்கம்மா வீட்டுல உட்காருவாளாம்ல. இப்படி வாயடிக்காமல் காலேஜிக்கு கிளம்பு. இந்த வருஷ படிப்பும் முடிட்டும்,எதுன்னாலும் தம்பி வருவான்ல அப்போ பேசிக்கலாம். இப்போ உன் நினைப்பை படிப்புல வை”

“உன் தம்பியைக் கட்டிக்கிட்டு வெளிநாட்டுல போய் வாழணும்னுதானே இந்த மூணு வருஷ டிகிரியைப் படிச்சிட்டிருக்கேன். அதெல்லாம் டாப்பா படிச்சிருவோம்”

“ஏதே இந்த பி.எஸ்.ஸி படிப்பையா?அவன் இன்ஞ்சினியருடி. அவன் பக்கத்துல உன் படிப்பு வராது.ஏதோ அக்கா மவளாச்சேன்னு உன்னை கட்டிக்க சம்மதிச்சிருக்கான். ரொம்ப ஆடாதடி. போ எதிர்த்த வீட்டு பூங்கொடி உனக்காக காத்திட்டிருக்கா.அவங்க வீட்டு வசால்ல நின்னு எட்டி எட்டிப் பார்க்குறா பாரு.இங்க நின்னு வியாக்கியானம் பேசிட்டுரு, பஸ் போயிடப்போகுது. அப்புறம் உங்கப்பா கொண்டுவிடமாட்டாரு. இப்பவே சொல்லிட்டேன்”

“க்கும் அவரு கொண்டு விடுறேன்னு சொன்னாலும் நீ விட்றுவியாக்கும். நான் போறேன்”என்று வேகமாக வெளியே வந்தவளின் பின்னாடியே ஓடிவந்த பவானி “துளசி சாப்பாட்டு டப்பாவை வைச்சிட்டுப்போற பாரு. இந்தா”என்று அவளது பேக்கில் வைத்துவிட்டு அவளது முகத்தைப் பார்த்தவள்“இன்னும் கண்ணாடியை பார்த்து பவுடருக்கூட ஒழுங்கா போடத்தெரியல. இதுல இவளுக்கு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தணுமாம், உன்கூடவந்து நானும் உனக்கு வேலை செய்யவேண்டியாதாயிருக்கும்”என்றவாறே முந்தானையை எடுத்து அவளது முகத்தைத் துடைத்துவிட்டாள்.

“அதுதான் எனக்கு எல்லாம் செய்துதர நீயும் அம்மாச்சியும் இருக்கியளே. அதனால குடும்பத்தை ஒழுங்கா நடத்திருவேன். நீ கவலைப்படாதம்மா”என்றுவிட்டு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும் அவளோடு கல்லூரியில் படிக்கும் பூங்கொடியும் வெளியே வந்தாள். அவளும் ஊர்க்காரி வகையில அவளுக்கு சொந்தம்தான். பவானிக்கு மாமா மகள்னு முறையாகும். அவதான் அந்த வீட்டுக் கடைக்குட்டிப் பெண் என்பதால் அவளை அவா இஷ்டபடியே படிக்க வைக்கிறாங்க. அவளும் பி.எஸ்ஸி ஐ.டிதான் படிக்கிறாள். இரண்டுபேரும் ஒன்னா போயிட்டு ஒன்னாவே வர்றாங்க. சின்ன வயசிலிருந்தே ஒன்னாவே வளர்ந்த தோழிங்க.

துளசி பூங்கொடியைப் பார்த்ததும் “ஏன்டி சீக்கிரமா கிளம்பி வந்து நிக்க?உன்னால நானும் அவசர அவசரமா ஓடிவந்தேன். எங்கம்மா அதுக்கும் யேசிறாங்க. இனி நான் சொன்னதுக்கு பொறவு கிளம்பிவா ”என்று பேசியவாறே நடந்தாள்.

“நான் இன்னும் ஒருமணி நேரம் லேட்டா வந்தாலும் நீ இப்படிதான்டி பேசுவ?உன்னையெல்லாம் திருத்ணவேமுடியாது. எட்டுமணிக்கு கிளம்பணும்னா ஆறுமணின்னு உன்கிட்ட டைம் சொல்லணும். வேகமாக வா பஸ்ஸுக்கு நேரமாகிட்டு”என்றவள் துளசியின் கையைப் பிடித்துக்கொண்டு விறுவிறுவென்று பஸ்டாண்டுக்கு நடந்தாள்.

“ஏன்டி கொஞ்சம் மெதுவாதான் போவமேடி. அடுத்த பஸ்ஸும் வரும்ல. ஏதோ மொதபஸ்ல போய் பையன்களை சைட்டடிக்கிற போற மாதிரியே போற. எப்படியும் கிளஸுக்குள்ள போய்தானே உட்காரபோறோம் அதுக்கு எதுக்கு இவ்வளவு வேகமாகப்போய் உட்காரணும்?”

“அதுசரி உன்னோட வாய் உன் இஷ்டத்துக்கு பேசுவ. ஆனா பஸ் அப்படியில்லடி நம்ம கரக்ட்டா போனாலும் லேட்டாதான் வருவான். அப்புறம் லேட்டா போய் காலஜ்ல விட்டா அரக்கபறக்க ஓடிப்போய் கிளாஸ்ல உட்காரணும். அது எதுக்குத் தேவையில்லாமல். நம்ம இப்போ போனாதான் சரியா இருக்கும்”என்றவள் அவளது கையையும் சேர்த்துப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

“இவா ஒருத்தி நானென்ன டிஸ்டிங்க்ஷன் வாங்கவா படிக்கப்போறேன். என் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கப்போய் செட்டிலாக படிக்கிறேன். அதுக்கு பாஸானா போதும். உன்னை மாதிரி நல்ல மார்க் எடுக்கணும்னு இல்லைடி”

“இதையேதான் மொத இரண்டுவருஷமும் சொல்லி சொல்லி என்னைவிடவும் அதிகமா மார்க் வாங்கி கிளாஸ் டாப்பரா இருக்க. இந்த மூணாவது வருஷத்துலயும் அதையேதான் சொல்லுற. உன்னை மாதிரியேதானடி நானும் படிக்கிறேன் ஆனால் எனக்குமட்டும் அறுபது தாண்டுது. பர்ஸ்ட் கிளாஸ் வருது அவ்வளவுதான். ஆனாலும் படிக்கலை படிக்கலைன்னு எல்லாத்துலயும் என்னைவிட முன்னாடி நிக்கிறடி. எனக்குக் கொஞ்சம் வழிவிடுறது”என்று பூங்கொடி சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“ஏன்டி நானாடி வழிவிடமாட்டேன்னு சொன்னேன். நீ அடிச்சுப்பிடிச்சு என்னைத் தள்ளிவிட்டு முன்னாடி வர்றதா இருந்தா வாயேன்டி.நானா வேண்டாம்னு சொன்னேன். நான் யாரையும் போட்டியா நினைச்சு எப்பவும் படிக்கிறதேயில்லை. எனக்கான கடமை படிக்கிறதுன்னு உட்காருவேன் அவ்வளவுதான். மத்தபடி அவளை முந்திரணும் இவளை முந்திரணும்னு எப்பவும் நான் படிக்கிறதில்லைன்னு உனக்கே அது நல்லா தெரியும். அப்புறம் ஏன்டி இப்படி சொல்லுற?என்னைத் தள்ளிட்டு வர்றதா இருந்தா வாயேன். யாரு வேண்டாம்னு சொன்னா. நீ நல்லாயிருந்தா எனக்கும் சந்தோசம்தானே” என்று துளசி அந்த துளசியின் குணத்தைப் போன்றே கள்ளம் கபடமில்லாது சொன்னாள்.

“இதையெல்லாம் சும்மா பேசுறதுதானேடி. நீ டாப்பரா வந்தா எனக்கும் சந்தோசம்தானடி. என் நண்பி, படிப்ஸ்னு நானும் பெருமைபீத்திப்பன்ல” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டே பூங்கொடி சொன்னாள்.

அவர்கள் இரண்டுபேரும் பேசி சிரித்துக்கொண்ட நடந்துபோக,அப்போது சரியாக அவங்க முன்னாடி பைக்கு ஒன்று வேகமாக வந்து நின்றது.

அதில் இருவரும் வேகத்தடைப் போட்டதுபோல ஜெர்க்காகி நின்று “யாருல நம்ம வழியில குறுக்க வந்து வண்டியை விட்டுட்டு நிக்கது” என்று ஏறிட்டுப் பார்த்தனர்.

அங்கே வண்டியில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்ததும் பூங்கொடி திரும்பி துளசியின் முகத்தைப் பார்த்தாள். 

அந்தப் பார்வைக்கு இவனை நீயே சமாளிச்சு அனுப்பி வை தாயேன்னு அர்த்தம்!அதைப் புரிந்துக்கொண்ட துளசியோ இப்போது வண்டியில் இருந்தவனை ஒரு மார்க்கமாக ஏறயிறங்கப்பார்த்தாள்.

“ஏன் ராசா உன் வண்டியை நிறுத்த ஆட்கள் போற நடுவழிதான் கிடைச்சுதாக்கும். அதுவும் பொம்பளை பிள்ளைங்க போற வழியில் இப்படி வண்டிய நிப்பாட்டிருக்கியே.உனக்கு எவ்வளவு ஏத்தமிருக்கணும். ஒழுங்கு மரியாதையா வண்டியை எடுத்து தள்ளி நிறுத்து”

“என் வண்டியை நான் எங்க வேணும்னாலும் நிறுத்துவேன். ஆமா ஏன்டி இதென்னா உங்க தாத்தா போட்டா ரோடா வண்டியில பின்னாடி வந்தா வழிவிடாமதான் நடப்பியளோ!எத்தனை திருப்புடி ஹார்ன் அடிக்கிறது?”

அதைக்கேட்டதும் திரும்பி பூங்கொடியிடம்“இவன் ஹார்ன் அடிச்சானாடி? எனக்கு சத்தமே கேட்கல, உனக்காவது கேட்டுச்சா?”என்று ரகசியமாகக் கேட்டாள்.

“தெரியலையடி நம்ம பேசிக்கிட்டே வந்ததுல கவனிக்கலைடி”என்று அவளும் முணுமுணுத்தாள்.

இரு இவனை நானே சமாளிக்கிறேன் என்றவள் திரும்பி அவனைப் பார்த்து எகத்தாளமாக“அப்படிததான்டா ரோட்டுல போவோம். நீதான் வண்டியைக் கொண்டுட்டு ஒதுங்கிப்போயிருக்கணும். அதைவிட்டுட்டு இப்படி வழியை மறிச்சா நீ பெரிய இவனாக்கும்”என்று அவனையே மிரட்டினாள்.

அதைக்கேட்டவனோ“வாடி என் மாமன்மகளே. அப்படித்தான் போவியாவா?அதுசரி அப்போ நானும் இப்படித்தான்டி வந்து வண்டியை நிறுத்துவேன். உன்னைய பார்த்துக்கிட்டே வந்ததுல உன் முன்னாடி என் வண்டி தானா வந்து நின்னுட்டு. நீ ஓதுங்கிப்போகல நான் குறுக்கால வந்து நிக்கேன். இப்போ நீ ஒதுங்கி போகணும்ல,ஒதுங்கிப்போ”என்றவன் தெனாவெட்டாக சட்டையைத் தூக்கி பின்னாடிவிட்டவாறே கெத்தாக அவளிடம் சண்டைக்கு நின்றான்.

அவனை முறைத்துப் பார்த்தவள் “இங்கப்பாரு மச்சான் நான் போற இடத்துலயெல்லாம் வந்து சண்டைக்கு நின்னன்னா நல்லாயிருக்காது. இதுதான் கடைசியா இருக்கணும். இல்லைன்னா?”

“இல்லைன்னா என்னடி பண்ணுவ?என்னைய அடிப்பியா என்ன?எங்க அடி பார்ப்போம். நீ என்னை அடிடி. அதுக்குத்தானே உன் மச்சான் நான் ஆசையகா காத்திருக்கேன். அப்போதானே என் மாமன்கிட்ட பஞ்சாயத்து வைக்கமுடியும். அப்படி பஞ்சாயத்தை வைச்சிட்டு உன்னை வைச்சிக்கிறேன்”என்றவன் மீசையை முறுக்கியவாறே அவளைப் பார்த்தான்.

“இங்கப்பாரு அப்படியெல்லாம் நீ நினைக்கிறதையெல்லாம் நான் பண்ணமுடியாது. நீ இப்படியே எங்கப்பாக்கிட்டயே பஞ்சாயத்து பண்ணிட்டேயிரு. எங்கப்பா முடிவு மாறினாலும் என் முடிவு மாறாது”

“அந்த முடிவை நான் மாத்திட்டா என்ன பண்ணுவ?”

“அப்படியொன்னு நடந்தால் பார்த்துக்கலாம். அது இந்த ஜென்மத்துல நடக்காது. ஏழேழு ஜென்மத்துக்கும் என் மாமாக்கூட வாழணும்னுதான் சாமிக்கிட்டயே வேண்டிக்கிட்டிருக்கேன். அதனால் நீ இப்படியே கிறுக்கன் மாதிரியே பேசிட்டும் சுத்திட்டும் திரி, நான் காலேஜிக்குப் போகணும் வழியைவிடு”

அதைக்கேட்டதும் துளசியின் அத்தை மகன் முரளி அவளைப் பார்த்து முறைத்தவன் “என்னடி சொன்ன ஏழேழு ஜென்மத்துக்கு உன் மாமாங்கூட வழணும்னா?அதுசரி உன் வாய் நீ பேசுவடி பேசுவ. ஆனாப்பாரு இந்த ஜென்மத்துல நான்தான்டி உன் புருஷன். இனி வரக்கூடிய அடுத்த ஏழேழு ஜென்மத்துக்கும் என்கூடத்தான் குடும்பம் நடத்தப்போற, இதுக்கு குறுக்க எவன் வர்றான்னு நானும் பார்க்கிறேன்டி”என்றவன் வண்டியை உறுமவிட்டு அவளைச் சுத்தி வந்தான்.

அதைக்கேட்டதும் துளசிக்கு கோபம் சருட்டுன்னு ஏறியது.உடனே குனிந்தவள் பக்கத்துல கிடந்த கல்லைத் தூக்கி அவன் வண்டி கண்ணாடியிலயே சல்லென்று எறிந்துவிட்டாள்.

அவ்வளவுதான் வண்டி கண்ணாடி உடையும்னு போட்டக் கல்லு சரியாக முரளியின் மண்டையை பதம் பார்த்தது.

அவனுமே அவள் கல்லால் அடிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் அப்படியே தலையில் கைவைத்துப்பிடித்துக்கொண்டு அவளையே அதிர்ச்சியில் பார்த்தான்.

துளசியோ “இனியும் என்னைக் கட்டிப்பேன்னு ஏதாவது உளறிக்கிட்டு இருந்தன்னு வையேன் அவ்வளவுதான் பாறாங்கல்லைத் தூக்கி உன் தலையில போட்டிருவேன் பார்த்துக்க”என்று கையை நீட்டி எச்சரித்தவள் பூங்கொடியின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக பஸ்டாப்பை நோக்கி நடந்தாள்.

அவன் அப்படி அதிர்ச்சியோடே நிற்பதைப் பார்த்த

பூங்கொடி துளசியோடு நடக்கும்போதே திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே போனாள்.

அவள் திரும்பிப்பார்க்கும் போதெல்லாம் உனக்கு இருக்குடி ஒரு நாள் என்பதுபோல அவளை முரளி கொலைவெறியில் பார்த்தான். 

அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவள், அவனிடமிருந்து பார்வையை விலக்கியவள் துளசியைப் பார்த்தவள், அமைதியாக அவளோடுக்கூட நடந்தாள். அதன்பிறகு பூங்கொடி திரும்பி முரளியைத் திரும்பிப் பார்க்கவேயில்லை.

அவன் இரத்தத்தோடு அப்படியே வண்டியில் உட்கார்ந்தவாறே, வேகமாக போகும் துளசியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனைக் கல்லால் அடிச்ச துளசிமேல அவனுக்கு இப்பவும் கோபம் வரவேயில்லை. அதற்குப்பதிலாக இன்னும்தான் காதல்கூடியாது. அந்தக் காதலோடு அவளைப் பார்த்தவன் “அடியே என் சண்டைக்காரி இந்த ஜென்மத்துல மட்டுமில்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் என்னவள்னு அந்தசாமியே எழுதி வைச்சிட்டாருடி. நீயில்லை எவன் நினைச்சாலும் அதை மாத்தமுடியாது. நான் மாத்தவும் விடமாட்டேன்டி”என்று நக்கலாகச் சொன்னவன் வண்டியை எடுக்கவும் அங்கே நின்றிருந்தவர்கள் எல்லோரும் அவன் பக்கத்தில் வந்தனர்.

அதற்குள் அவனோட பிரண்ட்ஸும் அவனைப் பார்க்க ஓடிவந்திருந்தனர். துளசி அவன் தலையில் கல்லால் அடிச்சதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்களின் மூலமாக ஊருக்குள் தகவல் போய்விட்டது. அது கிராமம் என்பதால் துளசியையும் அவங்களுக்கு நல்லா தெரியும், முரளியையும் தெரியும். எல்லாரும் அவங்க சொந்தங்காரங்கதானே. ஏற்கனவே துளசியை கட்டிக்கொடுங்கன்னுதான் முரளி அவங்க மாமா வீட்டுலயே பிரச்சனை பண்ணிட்டிருக்கான். இப்போ இந்தளவுக்கு பிரச்சனை பெருசாகிட்டுன்னுதான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

முரளியோட பிரண்ட் ராகவன் வந்தவன்,நெத்தியில் இருந்த அவனது கையை எடுத்துவிட்டு காயத்தைப் பார்த்தான்.

“என்ன மச்சான் காயம் பெருசா இருக்கு. இந்தத்தடவை பெரிய கல்லா தூக்கி எறிஞ்சிட்டா போலிருக்கு?வா ஹாஸ்பிட்டல் போகலாம் எப்படியும் தையல் போடவேண்டியது இருக்கும்”என்றவன் அவனை தள்ழி உட்கார சொல்லிவிட்டு ,வண்டியை அவன் ஓட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்குப் போனான்.

அங்கே டாக்டர் அவர்களிடத்தில் ஆயிரத்தெட்டுக் கேள்வியைக் கேட்டதுல, வயலில் இருந்து வெளியே வரும்போது கல்லுதட்டி விழுந்துட்டான் டாக்டர்னு ராகவன் ஏதோ சொல்லி தையல் போடவைச்சான்.

மூணு தையல் போட்டனர். அதில் முகத்தை சுழித்தாலும் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

இப்போ வெளியில வரும்போதே அவன் போன் சத்தம்போடவும் எடுத்துப்பார்த்தான்.

அவங்கம்மாதான் போன் பண்றாங்க என்றதும் எடுத்து என்ன பேசவென்று தெரியாது அதை மீண்டும் பாக்கெட்டுல போட்டான்.

“ஏன்டா அத்தைதானே எடுத்து பேசு. உன் ஆசை மருமவ என்மண்டையை உடைச்சிட்டான்னு சொல்லு”

“ஏற்கனவே என்னால இரண்டு குடும்பமும் மண்டையை உடைச்சிட்டு இருக்காங்க. இப்போ சொன்னா எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துறமாதிரி ஆகிடும்ல”

“இல்லைன்னா மட்டும் தெரியாமலா இருக்கும். இதுக்குள்ள ஊருமுழுக்கத் தெரிஞ்சிருக்கும். அத்தைக்குத் தெரியாதா என்ன?அத்தை தெரிஞ்சேதான் உனக்கு போன் பண்ணிருக்கும். இப்போ பேசாத வீட்டுக்குப் போய் பேசு”

ம்ம்ம் என்று தலையாட்டியவன் வண்டியில் இருக்கும்போதே யோசனையோடு இருந்தான். அவனது யோசனை என்னவாக இருக்கும் என்று ராகவனுக்கும் தெரியும். என்ன செய்ய இவனும் பிடிவாதம் பிடிக்கிறான். அவளும் பிடிவாதமா இருக்கிறாள். அந்த சாமிதான் இறங்கி வந்து இவங்க வாழ்க்கையை சரிபண்ணனும் என்று நினைத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

அந்ந சாமி இறங்கி வருதோ இல்லையோ நிறைய ஆசாமிங்க இறங்கிவந்தா இரண்டுபேரோட வாழ்க்கையும் நல்லாதான் இருக்கும்!