அநாயகா-19
அநாயகா-19
இளந்தீரனோ ரகுவரனின் அமைதியைப் பார்த்து சத்தமாகச் சிரித்தவன் “என்ன பங்கு எனக்கும் மதுமதிக்கும் இடையில் என்ன ஓடிட்டிருக்குன்னு உங்க மாமாவுக்குத்தான் முழுசா தெரியாது. ஆனால் கூடவே இருக்கிற உனக்குமா தெரியாது?எங்களோட காதலுக்கு சாட்சியே நீதானாடா?அப்படியிருந்தும் எப்படி மதுமதியை கல்யாணம் பண்ணிக்க எப்படி ரெடியான?இதுக்குத்தான் என்னைப் பங்காளின்னு ஆரம்பத்துல இருந்தே கூப்பிட்டியோ?நான்தான் இதெல்லாம் தெரியாமல் உண்மை, நேர்மை, எருமைன்னு கட்சிக்காக உழைச்சிருக்கேன் போல. இவன் எப்போடா ஒழிஞ்சிப்போவான், நம்ம அந்த இடத்தைப் பிடிச்சிக்கலாம்னு காத்திருந்திருக்க அப்டித்தானே பங்கு?”என்று சிவானந்தனின் முன்பே அவனிடம்கேள்விக்கேட்டான்.
“ஐய்யோ அதுவந்து பங்காளி மாமாதான் மதுமதியைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாரு. நானும் வேற வழி இல்லாமதான் தலையாட்டினேன். நானும் சம்மதிக்கலைன்னா அத்தை வெளிய மாப்பிள்ளைப் பார்க்கிறேன் சொன்னாங்க. அதுதான் மாமா சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன். இதுல சத்தியமா மதுமதிக்கு விருப்பம் கிடையாது பங்காளி” என்று ஏதேதோ உளறினான்.
அவனது பேச்சில் உண்மையில்லை என்று புரிந்த இளந்தீரன் “அப்படியா பங்கு. ரொம்ப சந்தோசம்டா. மதுமதிக்கு வாழ்க்கைக் குடுக்கப்போற பாரு. அதுக்காக வாழ்த்துக்கள் பங்கு” என்றவன் அவனது கையைப்பிடித்து குலுக்கி வாழ்த்தினான்.
இதை மாமா மருமகன் என்று இரண்டுபேருமே எதிர்பார்க்கவில்லை. இளந்தீரன் வந்ததும் சண்டை போடுவான்,பெருசா பிரச்சனை பண்ணுவான். அப்படியே அவனை தூக்கி திரும்பவும் ஜெயில்ல போட்டுறலாம். அப்படின்னா நமக்கும் கொஞ்ச நாளைக்குப் பிரச்சனை இருக்காது என்று நினைத்திருந்தனர். ஆனால் அவன் அதுக்கு சண்டைப்போடவில்லை.
இந்தக் கல்யாண விசயத்தைக் கேட்டதும் கண்டிப்பாக நம்ம சட்டையைப் பிடித்து, மதுமதியை நான்தான் காதலிக்கிறேன்னு சண்டைப்போடுவான்னு எதிர்பார்த்திருக்க, அவனோ அமைதியாக வாழ்த்துக்கள் பங்கு என்று சொன்னதும் அவர்களது அரசியல் மூளை வேறு மாதிரியாக தானாகவே கணக்குப்போட்டு, ஏதேதோ முடிச்சு போட்டது.
உடனே சிவானந்தன் “அது இளந்தீரா மதுமதிக்கு கல்யாண வயசு ஆகிட்டுன்னு அவங்க அம்மா அவளுக்குக், கல்யாணம் பண்ணனும் அப்படின்னு சத்தம் போட்டுட்டே இருந்தாள். அதுவுமில்லாமல் மதுமதியோட ஜாதகத்துல இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை முடிக்கணுமாம், அதுக்குள்ள கல்யாணம் முடிக்கலைன்னா இந்த ஜென்மத்துல அவளுக்குக் கல்யாணமே நடக்காதுன்னும், அவளோட உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டான். அதுதான் ஒருவராத்துல எப்படிவெளியில மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிக்கமுடியும். அப்படி பார்த்தாலும் சொந்தக்காரன் மாதிரி வருமா. நம்ம வீட்டுலயே முறைக்கு மாப்பிள்ளையா ரகுவரன் இருக்கானே, அவனையே மாப்பிள்ளையாக்கினால் என்னன்னு தோணுச்சு, என் மனைவிக்கும் அதுதான் நல்லதுன்னுபட்டுச்சு. எனக்கு ஒரு அரசியல் வாரிசாவாவது அவன் இருப்பானே! அதனால்தான் மதுமதிக்கும் ரகுவரனுக்கும் கல்யாணம் பண்ண முடிவுபண்ணி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைதான். ஆனாலும் எனக்காக சம்மதிச்சு இந்த கல்யாணத்துக்கு தயாராகிட்டாள்”என மகளுக்கும் மருமகனுக்குமாக சேர்த்து அவரே பேசினார்.
சிவானந்தனுக்கு ஏற்கனவே மதுமதியும் இளந்தீரனும் காதலிக்கிறாங்க, பழகுறாங்கன்னு எல்லாம் தெரியும். அது தெரிஞ்சுமே இதுவரைக்கும் அவராக வாயைத்திறந்து நீ மதுமதியே கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று ஒரு நாள்கூட இளந்தீரனிடம் கேட்டதும் இல்லை, அவர்கள் காதலிக்கிறதைத் தெரிந்து கொண்டதைப்போல காட்டிக்கொண்டதும் இல்லை. அதனால் தைரியமாக ரகுவரனுக்கும் மதுமதிக்கும் கல்யாணம் என்று இளந்தீரனிடமே சொல்லுகிறார்.
அப்போது அங்கே வந்த சிவானந்தனின் மனைவி இளந்தீரனைப் பார்த்துவிட்டு “இவன் ஜெயில்ல இருந்து எப்போ வந்தான்?இவன்கிட்ட போய் எதுக்கு நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுறதை விளக்கி சொல்லிட்டிருக்கீங்க. அதுதான் நம்ம கட்சியில இருந்து மொத்தமா இவனைத் தூக்கிட்டீங்களே. நம்ம கட்சியில அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத இவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு பேசிட்டிருக்கீங்க?வாங்க நேரமாகுது பாருங்க வந்து இரண்டுபேரும் சாப்பிடுங்க. நமக்குக் கல்யாண வேலை நிறைய இருக்கு”என பேசிவிட்டு அவனை மதிக்காது உள்ளே போய்விட்டார்.
அதைக்கேட்ட இளந்தீரனுக்கு அடுத்து என்ன பேசணும் என்பதே மறந்துப்போய்விட்டது. அவன் அவங்க கட்சியில அடிப்படை உறுப்பினர் என்பதைக்கூட எடுத்துட்டாங்களா?அப்போ அந்த கட்சிக்கு நான் இவ்வளவு நாளும் செய்ததெல்லாம் வீணா?என் கட்சி, இதுலதான் நான் வளரப்போறேன்னு பார்த்துப் பார்த்து செய்த எல்லாம் இதுக்குத்தானா? என்று கிறுக்குப்பிடித்தவன் போன்று நடந்ததையெல்லாம் யோசித்தவனுக்கு அவனது மண்டைக்குள் குளவி கொட்டினதுபோன்று சுர்ரென்று ஏறியது.
அந்தக் கோபத்தில் ரகுவரனைப் பார்த்தான். அவனோ “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு மாமா நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து ஓடப்பார்த்தான்.
ஆனால் இளந்தீரனோ அவனது சட்டையை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தினான்.
“எதுக்கு பங்காளி என் சட்டையைப் பிடிச்சு வைச்சிருக்க. எனக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாமா சொன்னாரு நான் தலையாட்டிட்டேன் அவ்வளவுதான். நீயும் மதுமதி காதலிக்கிறது அத்தைக்கு பிடிக்கலை. அதுதான் இந்த கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினாங்க வேற வழி இல்லாமல் நானும் மதுமதியும் சம்மதிச்சுட்டோம். இப்போ அதுக்கு என்ன என்கிற? உனக்கு மதிமதி வேணும்னா நீதான் எதிர்த்து நின்னு சண்டைப்போட்டு, சமாளிச்சு அவளை கல்யாணம் பண்ணனும். என்கூட சண்டை போடுறதுனால எந்த பிரயோஜனமும் இல்லை. நான் எப்போதும் உனக்கு நண்பன்தான்” என அமைதியாக பேசியவன் தனது சட்டையிலிருந்து இளந்திரனின் கையை எடுத்து விட்டான்.
இளந்திரன் ரகுவரனின் சட்டையை விடமால் பிடித்திருந்தவன், திரும்பி சிவானந்தனைப் பார்த்தான்.
அவரோ ஒன்னுமே தெரியாதது மாதிரி பாவமாக அவனைப்பார்த்தார்.
“யோவ் என்ன நடிப்புய்யா இரண்டுபேரும் நடிக்கிறீங்க?ஒன்னுந்தெரியாது பச்சைப்பிள்ளை மாதிரியே மூஞ்சை வைச்சிக்கிட்டா நீங்க செய்ததெல்லாம் எனக்குத் தெரியாதுன்னா?இங்கப்பாரு நானும் உன் மகளும் காதலிக்கிறதுல இருந்து இந்தக் கட்சிக்காக நான் என்ன செய்தேங்கிறதுவரைக்கும் உனக்கும் இவனுக்கும் நல்லாத்தெரியும். அது தெரிஞ்சிக்கிட்டே என்னை உங்க கட்சியிலிருந்து நீக்கியிருக்கன்னா எவ்வளவு வஞ்சகத்தனம் பண்ணியிருக்கணும். இத்தனை வருஷமா என் மூளையை கழுவியிருக்கிறீங்கன்னு இப்போ எனக்கு நல்லா புரியுது. உங்க இரண்டுபேரையும் நான் சும்மாவிடமாட்டேன். கொலை பண்ணிடுவேன்”என்று சத்தம்போட்டான்.
இவ்வளவு நடந்திட்டிருக்கு ஆனால் மதுமதி வெளியேவந்து அவனைப் பார்க்கவேயில்லை.
உடனே சிவானந்தனோ “என்னடா எங்க வீட்டுக்கு வந்து என் மருமகன் மீதே கைவைக்கிறியா?இருடா இப்பவே போலீஸைக் கூப்பிடுறேன். உன்னை தூக்கி உள்ள வைக்கிறேன்”
“ஹா பார்றா தலைவருக்கு மருமகன் மேல கைவைச்சதும் கோபம் வந்துட்டு. ஜெயிலுக்குள்ள இருந்துதான் வந்திருக்கேன். நீ தூக்கி உள்ளப்போட்டா பயப்படுறதுக்கு நான் ஒன்னும் பழைய இளந்தீரன் இல்லை. போறேதே போறேன் உங்க இரண்டுபேரையும் கொன்னுட்டு மொத்தமா உள்ளப்போறேன். அதுக்கும் நான் தயார்தான். நீங்க ரெடியா இருங்க என் கையால சாகுறதுக்கு”என்றவன் ரகுவரனின் கழுத்தை நெறித்தான்.
அதைப்பார்த்த சிவானந்தன் இப்பவே இளந்தீரனை போட்டுத்தள்ளிடணும்னு ஆத்திரம் வந்தாலும்,அடக்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி நின்றார்.
“இளா கையை எடு. உனக்கு இப்போ என்ன வேணும். மதுமதியைக் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானே நான் மாமாக்கிட்ட பேசுறேன். நீ கொஞ்சம் பொறுமையா இரு.நானே அதுக்கு ஏற்பாடு பண்றேன்”
“இப்போதைக்கு மதுமதியைக் கல்யாணம் பண்ணிக்கனும். அடுத்து கட்சி தலைவராகணும். இப்போ எனக்கு மதிமதியோட பேசணும். இப்பவே பேசணும் அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோ. அதுக்கு முன்னாடி ஒன்னு அவக்கிட்ட கேட்கணும். என்னைக் காதலிச்சிட்டு ஒரு சின்ன பிரச்சனை வந்த உடனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கான்னா ஏன்னு தெரிஞ்சிக்கணும்? அப்போ அவ என்னைக் காதலிச்சது பொய்யான்னும் எனக்கு தெரிஞ்சாகணும். நான் அவக்கிட்ட இப்பவே பேசணும். ஏன்டா நான் தான் இந்த கட்சியில் முக்கியமான ஆளுன்னு மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லுவீங்களே! இப்ப என்னடான்னா இந்த ஒரு மாசமும் கட்சியும்சரி கட்சி ஆளுங்களும்சரி என்னை கண்டுக்கவேயில்லை. போய் தொலையுறான்னு விட்டுட்டீங்களே. நான் என் மாமாவை அடிச்சுட்டு ஜெயிலுக்கு போனதே நம்ம கட்சிக்காகத்தான்டா!ஆனால் நான் வர்றதுக்குள்ள கட்சியிலிருந்து என் உறுப்பினர் நிலையைவே எடுத்து விட்டிருக்கீங்க. நான் காதலிச்சவளை நீ கல்யாணம் பண்ணிக்கப்போற. இப்போ சத்தியமா இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு புரியவே இல்ல .எனக்கு மதுமதிக்கூட கொஞ்சம் பேசினால் மனசு ஆறுதலா இருக்கும். அவளை இப்பவே வெளியே கூப்பிடு நான் பேசுறேன். அவளுக்கு என்கூட வர்ற சம்மதமான்னா இப்பவே அவளை கல்யாணம் பண்ணி என்கூடக் கூட்டிட்டு போகவும் தயாரா இருக்கேன். அவமேலயும் அவக் காதலின் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு இந்த கட்சி, அரசியல் இதெல்லாம் இப்படித்தான் இருக்கும்னு எனக்கு இப்போ நல்லா தெரிஞ்சிப்போச்சு. அவளை வெளியே வரச்சொல்லு”என்று கத்தினான்.
அதைக்கேட்ட சிவானந்தன் அதெப்படி என் மகளை வெளியே வந்து பேசச்சொல்லுவான். அப்படியெல்லாம் அவளை வரச்சொல்லமுடியாது. உன்னால என்ன செய்யமுடியுமோ அதை செய் என்று எகிறினார்.
“யோவ் சிவானந்தன் நீ கட்சித்தலைவருன்னுலாம் இப்போ பார்க்கமாட்டேன். எங்க மாமா மண்டையவே உடைச்சவன் நான். நீ பண்ணிருக்கிற வேலைக்கு உன்னையும் உன் குடும்பத்தையும் மொத்தமா போட்டுத்தள்ளிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன். மாமா பையலே என்னை மயக்கதுக்கு மட்டும் உன் மகளை என்கிட்ட உரசதுக்குவிட்டியே இப்போ மட்டும் பேச அனுமதிக்கமாட்டியோ. நீ இப்போ அவளை என்கூட பேசுறதுக்கு அனுப்பிவை இல்லையா இப்பவே பிரச்சனே பண்ணி எல்லோருக்கும் உன் மகளோட இலட்சணத்தைச் சொல்லிடுவேன் பார்க்கிறியா? பார்க்கிறியா?”என்றவன் ஓடிப்போய் சிவானந்தனை அடிக்க நின்றான்.
அதைப்பார்த்த ரகுவரன் அவனைப் பிடித்து இழுத்து நிறுத்தியவன் “இளா! பங்காளி நில்லுடா! அவரே அடிச்சிடாத. நான் மதுமதியை உன்கூட பேசுறதுக்குக் கூட்டிட்டு வர்றேன். கொஞ்சம் பொறுமையா இரு. நீ பேசினபிறகு அவள் உன்கூட வரவிரும்பலைன்னா நீ பிரச்சனை பண்ணக்கூடாது. அதுக்கு சம்மதம்னா நீ அவளை எப்பவும் சந்திக்கிற இடத்துக்கு கூட்டிட்டு வர்றேன். பேசிக்கலாம். இப்போ தயவு செய்து போ”என்று அவனிடம் கெஞ்சாத குறையா கெஞ்சி சமாதானப்படுத்தினான்.
“என்ன பங்கு மதுமதி உன்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிட்டான்னு ரொம்ப தெனாவெட்டுல பேசுற மாதிரி இருக்கு. இப்போ நீ என் நண்பனா பேசலயே. சிவானந்தனோட மருமகனா பேசுறேன்னு புரியுது. அதெப்படி மதுமதி நான் கூப்பிட்டா வராமல் இருப்பா கண்டிப்பா வருவாள். அப்படி அவள் என்கூட வந்தால் நீங்க பிரச்சனை பண்ணாமல் இரைக்கணும். இன்னைக்கே அவளைக் கூட்டிட்டுப்போய் தாலிகட்டி என் பொண்டாட்டி ஆக்கிப்பேன். இதுக்கெல்லாம் தயாராகியே அவளை வரச்சொல்லு”
“அதுவந்து இளா?அதெப்படி முடியும்?”
“என்ன ரகுவரா ஒரு மாசத்துல ஆளே மாறிட்ட போல இருக்கு. அதெப்படி முடியும்னு கேட்கிற. அதெல்லாம் முடியும். நீ அவளைக் கூட்டிட்டுவா போதும்” என நக்கலாக சொன்னவன் அவனைக் கூர்மையாக பார்த்தான்.
“ஐயோ பங்கு அப்படியெல்லாம் இல்லை. நீயும் நானும் எவ்வளவு உயிர் நண்பர்கள்னு இந்த உலகத்துக்கே தெரியும். நான் போய் உனக்கு துரோகம் பண்ணுவேனா? அப்படி இல்லை பங்காளி பிரச்சனை எதுவும் வேண்டாம்னு முதலிலயே உன்கிட்ட சொல்றேன் அவ்வளவுதான். உன்னைப்பத்தி எனக்கு நல்லா தெரியுமே. இந்த ஒரு மாசத்துல நிறைய நடந்து போச்சுது. உங்க மாமா வீட்ல இருந்து நிறைய நெருக்கடி எங்களுக்கு கொடுத்தாங்க. அதுதான் பங்காளி சிவானந்தன் மாமா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. நீ வேற எதுவும் நினைக்காத, தயவுசெய்து நீ போய் எப்பவும் மதுமதி பார்க்கிற இடத்துலயே நில்லு. நான் அவளை மாமாவுக்கு தெரியாம கூட்டிட்டு வர்றேன்” என்று இளந்திரனிடம் சமாதானமாக பேசினான்.
இந்த ஒரு தடவை உன்னை நம்புறேன். இன்னும் பத்து நிமிஷத்துல அவ அங்க வரலைன்னா நான் வேற மாதிரி இங்க வந்து நிப்பேன் புரியுதா?என்றவன் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாலும் அவனது மனதில் பெரிதாக சந்தேகமும் நெருடலும் வந்தது.
அப்படியே இளந்தீரனோ யோசனையோடு திரும்பி ரகுவரனை பார்த்தவாறே வெளியே வந்தான்.