கழிமுள்ளி நெஞ்சுக்காரி-10

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-10

கழிமுள்ளி-10

நதியா மெதுவாக வீட்டுக்குள்ளே வந்தவள் கீதாஞ்சலியும் நர்மதாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை கண்டு அவங்க பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

இருவரும் அவளை திரும்பிப் பார்க்க,அவள் அப்படியே கீதாஞ்சலியின் மடியில் தலைவைத்துப் படுத்துவிட்டாள்.

கீதாஞ்சலிக்குத் தெரியும் மகள் ஏதோ பெரிய குழப்பத்துலயோ, இல்லை மனசு வேதனையிலோ இருந்தா மட்டும்தான் நம்மக்கிட்ட வருவான்னு அதனால் அவளத தலையை ஆதுரமாகத் தடவிக்கொடுத்தாள்.

அப்படியே நர்மதாவையும் திரும்பிப் பார்த்து கண்களால் “என்னடி பிரச்சனை உனக்கு எதவும் தெரியுமா?”

அவளோ “தோளைக் குலுக்கி தெரியாதுமா. ஆனால் அவ பிரண்டஸ்கூட சண்டைன்னு லேசா தெரியும். இன்னைக்கு அந்த விஜய் குரங்கு இருக்குல்ல அந்தக் குரங்குகிட்ட பேசப்போனேன். என்னை முறைச்சிக்கிட்டேபோயிட்டான்மா. அப்போ இவங்களுக்குள்ள சண்டைதானே”என்றாள்.

அதெல்லாம் இல்லை என்று தலையாட்டியவர் “ நதியாம்மாஆஆஆ. என்னாச்சுடி எதுவும் உடம்புக்கு முடியலையா? டாக்டருக்கிட்ட போவோமா”என்று மெதுவாக முடியை ஒதுக்கிவிட்டு காதை வருடியவாரே கேட்டார்.

“வேண்டாம்”என்று தலையாட்டினாள்.

“அப்போ மனசுக்குத்தான் சரியில்லையா. உனக்கும் பிரண்டஸுக்கும் எதுவும் பிரச்சனையா?”

அதுக்கும் “இல்லை”என்று தலையாட்டினாள்.

“அப்போ பீரியட்ஸ்ஸா”

“ப்ச்ச். உங்களுக்குத் தெரியாதா எனக்கு எப்போ பீரியட்ஸ்னு”

“ம்ம்ம். அப்போ என்னதான்டி பிரச்சனை”

“பிரச்சனைன்னு உங்கக்கிட்ட யாரு சொன்னா?”

இதுக்குமேல அவளா சொன்னாதான் உண்டு என்று கீதாஞ்சலி அமைதியாகிவிட்டாள்.

கொஞ்சநேர அமைதிக்குப்பின நர்மதாவும் கீதாஞ்சலி மடியில் படுத்தாள்.

“ஏன்டி நான்தான் படுத்திருக்கேன்ல அப்புறம் எதுக்கு இடிச்சிட்டு வர்ற”

“நீ மட்டும்தான் அம்மா மடியில படுப்பியோ நானும் எங்கம்மா மடியில படுத்துப்பேன்”என்று இரண்டுபேரும் சண்டைப்போடவும் அங்கே ரமேஷ் வந்தார்.

உடனே நதியா எழுந்துப்போய் அவர் மடியில் தலவைத்துப் படுத்தவள் கீதாஞ்சலியைப் பார்த்தாள்.

“என்னடி அப்படி பார்க்கிற?”என்று கீதாஞ்சலி நதியாவிடம் கேட்டார்.

“அதில்ல எப்படி அப்பாவை எப்போ பார்த்தாலும் உங்க கண்ணுல அப்படியே காதல் பொங்கி வழியுது?அதுதான் ஆச்சர்யமா பார்த்தேன்”என்று முக்கியமான கேள்வியைக் கேட்டு வைத்தாள்.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் கீதாஞ்சலிக்கு அவ்வளவு வெட்கம் வந்தது. அது அவரது முகத்திலும் தெரிந்தது. அவள் வெட்கச்சிவப்போடு ரமேஷைப் பார்த்த பார்வையில் அவ்வளவு காதல் இருந்தது.

அவர்களது பார்வையை பார்த்தவளுக்கு அரவிந்தும் தானும் இன்று பார்த்துக்கொண்டு அப்படியே நின்றிருந்தது மூளைக்குள் ஒளிப்படமாக ஓடியது.

அந்த நினைவு தந்த சுகத்தில் அப்படியே கண்கள் மூடியவளுக்கு அவனின் கைகளில் தான் அணைவாய் நின்றிருந்தும், அவனது நெஞ்சில் கைவைத்து அவனது இதயதுடிப்பை உணர்ந்தும் ஞாபகத்திற்கு வந்தது.

அவனது அழுத்தமான பிடியும்,அதில் தெரிந்த உரிமையும் அவனுக்கும் தன்மேல் விருப்பம் இருப்பதைகாட்டுதே என்று ஆச்சர்யபட்டாள்.

‘அரவிந்த் என்னைக் காதலிக்கிறது விஜயிக்குப் பிடிக்கலையோ?அதுதான் சண்டைப்போடுறானோ. இல்லைன்னாலும் அவன் சண்டைப்போடுவான்.அவனுக்குதான் அரவிந்தை சும்மாவே பிடிக்காதே. அப்போ அப்போ இதுதான் காதலா?’என்று நினைத்தவளுக்கு அவளையும் அறிய்மல் புன்னகை வரவும் உதட்டை விரித்து லேசாக சிரித்தாள்.

அதைப்பார்த்த ரமேஷ் “எங்க காதலை நினைச்சா உனக்கு சிரிப்பா வருதா நதியாம்மாஆஆ”என்று பொய்யாக கோபப்பட்டு அவளை முறைத்தார்.

அதில் உணர்வுக்கு வந்தவள் “அதில்லப்பா அம்மாவோட முகத்தைப் பாருங்களேன். உங்க காதலைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னதும் எவ்வளவு வெட்கம்,எவ்வளவு படபடப்பு, ஒருத்தங்களை இந்தக் காதல் எவ்வளவு மாத்திடுதில்ல. அதை நினைசசுத்தான் சிரிச்சேன்”என்று காதலை சிலாகித்து சொன்னாள்.

“அதுசரி இதுக்குத்தான் எங்க லவ் ஸ்டோரியைக் கேட்டியா என்ன?”

“சும்மா கேட்டேன்பா. அதுக்கு உங்க லவ்வருக்கு முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப்பு எரியுது. குங்கும சிவப்பு கன்னத்துல தெரியுது. கண்ணுல மின்னல் தெறிக்குது. இதையெல்லாம் பார்த்து உங்களுக்கு உங்க லவ்வர் மேல பாசம் பொங்குது.அதையெல்லாம் பார்க்க எங்களுக்கு குஷியாயிருக்குது”என்னவள் சத்தமாக சிரித்தாள்.

அரவிந்த் மீதான தன்னுடயை காதலை தெரிந்துக்கொண்டதுமில்லாமல், அவனுக்கும் தன் மீது காதல் இருக்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு மனப்பூர்வமாக வந்த வெள்ளந்தி புன்னகை அது!

“வர வர நீ டீ.ஆர் மாதிரிபேச ஆரம்பிச்சிட்ட நதிம்மாஆஆஆ” என்று சொன்ன ரமேஷுக்கும் சிரிப்பு வர எல்லோரும் கொஞ்ச நேரம் சந்தோசமா சிரித்தனர்.

இவ்வளவு நாளும் இருந்த ஒரு சின்ன இறுக்கமான சூழல் முற்றிலும் மாறியிருந்தது.

அப்படியே நான்குபேரும் பேசி சிரித்துவிட்டு தூங்குவதற்கு ரூமுக்குப் போய்விட்டனர்.

ரமேஷின் சிரிப்பு இன்னும் மாறவில்லை. அந்த சிரிப்போடு ரூமுக்கு வந்தவர் கீதாஞ்சலியை கட்டிப்பிடித்துக்கொண்டு கட்டில் உட்கார்ந்தார்.

ஆனால் கீதாஞ்சலியின் முகமோ யோசனையோடு இருப்பதைப் பார்த்தவர் “என்ன கீதும்மா இது?நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோசமான மூடுல வந்திருக்கேன். நீ இப்படி முகத்தை தூக்கி வைச்சிருக்கியே. இவ்வளவு நேரம் பேசி சிரிச்சிட்டுதானே வந்தோம். என்கிட்ட மட்டும் ஏன் முகத்தை திருப்பட்டிருக்க. எதுக்கு இந்த ஓர வஞ்சனை.ஹ்ஹான்”என்றவாறே அவளது முகத்தோடு முகம் வைத்து உரசியபடியே காதலாகி கசிந்துருகினார்.

“இரண்டு பெண் பிள்ளைகளை வைச்சிக்கிட்டு உங்களை மாதிரி இருக்கமுடியாதுங்க. நிறைய யோசிக்கவேண்டியதிருக்கு” என்று சொன்னதும் ரமேஷ் அந்த காதல்வலை அறுந்து தகப்பானா கீதாஞ்சலியை அதிர்ச்சியோடு பார்த்தார்.

“என்ன சொல்ல வர்ற கீதும்மா. நீ ஏதோ மனசுக்குள்ள வைச்சிக்கிட்டு பேசுற. என்னாச்சுடி?இவ்வளவு நேரம் நம்ம பிள்ளைங்ககூட சந்தோசமா பேசிச் சிரிச்சிட்டுத்தானே வந்த. அப்புறம் என்னடி?”என்று பதற்றத்தோடு கேட்டார்.

“நீங்க நதியா பேசுனதைக் கவனிச்சீங்களா இல்லையா?அவா காதலைப் பத்தி பேசும்போது அவளோட முகத்தைப் பார்க்கலையா?”

“ஏன் நல்லாதானே சிரிச்சா, பேசினா. எதுக்குடி இப்படி கண்டதையும் யோசிக்கிற?”

“கண்டதைத்தான் யோசிக்கிறேன் அவள் முகத்துல காதல்னு சொன்னதும் வந்த வெட்கமும் சிரிப்பும் புதுசா இருந்துச்சு. இதுக்கு முன்னாடியும் நம்ம காதல் கதையை கேட்டு சிரிக்கத்தான் செய்வாள். அதுல ஒரு நக்கல் நையாண்டி இழையோடும். ஆனால் இப்போ நம்ம காதல் கதையை கேட்டு ரசிக்கிறா,தனக்குள்ளாகவே அதை உணருகிறாள் இங்க அதுதான் பிரச்சனை. காதலிச்ச எனக்குத் தெரியாதா ஒரு பொண்ணு எப்போ வெட்கப்படுவான்னு. அவ மனசுக்குள்ள காதல் வந்திடுச்சு அவ்வளவுதான். இனி நம்மதான் கொஞ்சம் கவனமாக இருக்கணும்”

அதைக்கேட்ட ரமேஷுக்கு ஒன்னுமே புரியலை. அதனால் அப்படியே அதிர்ச்சியில் கீதாஞ்சலியையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னங்க என்னாச்சு!ஏன் இப்படி இருக்கீங்க?”என்று அவரது தோளைத் தட்டிக்கூப்பிட்டாள்.

“இல்லைடி இதையெல்லாம் நீ எப்போ கவனிச்ச?எனக்கு நம்ம நதியாஆஆ லவ் பண்றாளான்னு நம்பமுடியலைடி. நீ சொல்லுறதையும் நம்பாமல் இருக்குமடியலை. என்னடி நடக்குது இங்க. யாரை லவ் பண்றாளோ தெரியலையே?என்று பதறினாள்.

அதைப்பார்த்துவிட்டு கண்களை சுறுக்கி ரமேஷை பார்த்த கீதாஞ்சலி “ என்னைய லவ் பண்ணும்போது உங்களுக்கு எவ்வளவு இனிச்சுச்சு. இப்போ மகள் லவ் பண்றான்னதும் ஷாக்குல கதறுறீங்களே. அது அந்தந்த வயசுக்கு வர்றதுதானே. ஒரு காலேஜ் பிரின்சிபாலுக்கு இதுக்கூட தெரியலையா?”

“அதெல்லாம் இந்த பிரின்சிபாலுக்கு எல்லா பசங்களோட மைண்ட் செட்டும் புரியும். ஆனால் பெத்த பொண்ணு காதலிக்கிறான்னு சொன்னதும்தான் கொஞ்சம் ஷாக்கு. இப்போ என்ன கீது பண்றது. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. அவளோட படிப்பு, அவளோட எதிர்கால வாழ்கைன்னு பயமாயிருக்குடி. எங்க என் பொண்ணு தோத்துப்போய் நின்னுருவாளோன்னு பீலாகுது”என்றவருக்கு டென்சன் ஏறி பீபீ. சூட்டப்பாகிவிட்டது. 

உடனே கீதா அவரை இழுத்துக் கட்டிக்கொண்டாள்.

“எதுக்கு இவ்வளவு பயம்?நம்ம காதலிக்கும்போது தெளிவா முடிவெடுக்கலையா?அது அவளுக்கான வாழ்க்கைன்னா கண்டிப்பா அந்தக் காதல்ல தெளிவா இருப்பா. இப்போதைக்கு நீங்க இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராக இருங்க அதுபோதும்”என்றதும் அவளது முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.

“ஏன்டி அவா காதலிக்கிறான்னதும் உனக்கு கோபம் வரலையா?”

“இல்லை பயம்தான் வந்துச்சு. இந்த சூழ்நிலையிஸ் இருந்து அவளை எப்படி கொண்டுவரப்போறோம்னு பயம்தான் வந்துச்சு”

“ஏன்டி?”

“இதே சூழ்நிலையை நானும் கடந்து வந்திருக்கனே. அப்பா அம்மா என்ன சொன்னாலும் காதுலயும் ஏறாது மண்டையிலயும் ஏறாது. நம்ம செய்யிறதுதான் சரின்னு தோணும். அப்படித்தானே இரண்டுபேரும் இருந்தோம். என்ன ஒன்னு நம்ம நம்ம கேரியரை நல்லா அமைச்சிக்கணும்னுதெளெவா ப்ளான் பண்ணிட்டு காதலிச்சோம். இவா எந்த ட்ராப்புல மாட்டிருக்கா யாரைக் காதலிக்கிறான்னு தெரியலையே. அது தெரிஞ்சாளாவது அடுத்து என்னென்னு யோசிக்கலாம்.அதனால் வந்த பயமிது”

“கலெக்டரம்மா நீ செம ஷார்ப்பு. அதெப்படிடி எல்லாத்துக்கும் அவக்கிட்ட நீதனடி சண்டைப்போடுவ. இப்போ என்ன இவ்வளவு பக்குவமா பேசுற. எனக்கு ஒன்னுமேபுரியலை. ஒருவேளை அந்த விஜயைக் காதலிக்கிறாளோ?”

“தெரியல”

“எனக்கு இன்னும் குழப்பமாவே இருக்குடி”

“இதுல குழம்புறதுக்கு என்ன இருக்கு. எல்லாத்துக்கும் தயாராக இருங்க”

“என்னடி இப்படி சொல்லுற?”

“வேற எப்படி சொல்லச்சொல்லுறீங்க. ஒன்னு இவா காதலிக்கிறவனையே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணுவா, இல்லையா அது யாருன்னு பார்த்து நம்ம கல்யாணத்துக்கு முடிவு பண்ணனும்”

“ஏதே கல்யாணமா?அவா இப்போதான் தேர்ட் இயர் படிக்கிறாடி. இப்படி தலையில் குண்டைத்தூக்கிப்போடாத. அவளுக்கு இன்னும் உலகமே தெரியலடி. நாலு தடிமாடுகளை பிரண்டஸுன்னு கூட்டிட்டு அடிதடியோட ஆர்ப்பாட்டமா சுத்திட்டிருக்கிறா நீ வேற”

“ம்ம்ம் இதுதான் தகப்பனோட மனநிலை. நீங்க என்கிட்ட லவ் சொல்லும்போது என்ன படிச்சீங்க. நான் என்ன படிச்சேன்”

“நீ பர்ஸ்ட் இயரு. நான் தேர்ட் இயரு”

“என்னைவிடவும் அவளுக்கு இரண்டு வயசு கூடுதல்தான். அந்த தடிமாடுகளால்தான் இத்தனை வயசு வரைக்கும் காதல்னு சுத்தாம இருந்தா.அப்படியிருந்தும் இப்போ யாருக்கிட்டயோ மனசை விடுறா. எப்படியும் இவா பாரீன் போய் படிக்கமாட்டான்னுதான் தோணுது. ஒன்னு கல்யாணம் இல்லை அந்த பையன் எங்க இருக்கானோ அங்கயே படிப்புன்னு இருக்கப்போறா”

“அப்போ அவளோட படிப்பு எதிர்காலம். இதெல்லாம்”

“இப்போ நான் சொன்னது உங்க காதுல கேட்டுச்சா இல்லையா?அவா படிப்பையெல்லாம் விட்டுக்கொடுக்கமாட்டா,அதைவிட காதல்னு வந்துட்டா அதையும் விட்டுக்கொடுக்கமாட்டா”

“ஏன்டி இருக்க இரண்டு பிள்ளைங்களையும் சீக்கிரம் கட்டிக்கொடுத்தா எப்படிடி”

“அதுக்காக இந்த வயசுல மூணாவதெல்லாம் பெத்துக்க முடியாது”

“அடியே நான் பயந்துட்டிருக்கேன் இப்போ போய் மூடேத்திறியேடி”என்று அவளது கன்னத்தை நிமிண்டினார் ரமேஷ்.

“இங்க என் பேச்சு போயிட்டிருக்கு நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க”

“ப்ச்ச் இப்போ நான் என்ன பண்ணனும்?அதையும் நீயே சொல்லு”

“முதல்ல மனசை எல்லாத்துக்கும் தயார் படுத்திக்கங்க. அப்புறம் அவ லவ்வர் யாருன்னு கண்டுபிடிங்க”

“நான் எப்படி?”

“உங்க காலேஜ்லதானே அவா படிக்கிறா”

“அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?”

“அவளை பார்த்துக்கங்க அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டாள

அதுக்குமேல ரமேஷ்குமாருக்கு தூக்கம் வருமா என்ன?விடிய விடிய மகளை நினைச்சு முழித்திருந்தாள்.

அவளோ அரவிந்தை நினைத்துக்கொண்டிருந்தாள்.அரவிந்துக்கிட்ட போய் நேரா லவ்வை சொல்லிடலாமா?இல்லை அவனே சொல்லட்டும்னு வெயிட் பண்ணுவோமா?என்று தீவிர சிந்தனையில் இருந்தாள்.

நதியா வேணும்னா இங்கி பிங்கி பாங்கி போட்டுப்பாரேன்!