கழிமுள்ளி நெஞ்சுக்காரி-12

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-12

கழிமுள்ளி-12

நதியாவை முறைத்தவாறே விஜய் இப்போ தினேஷிடம் பேசினான். 

“அந்த அரவிந்த் இவளுக்கு ஐ லவ் யூன்னு கிரீட்டிங் கார்டும் பொக்கேவும் கொடுத்திருக்கான்டா. இவளும் அதை வாங்கி கையில் பத்திரமா வைச்சிட்டு வர்றாடா. என்ன மாதிரியான மனநிலையில் இவா இருக்கான்னு எனக்கு சத்தியமா தெரியலடா மச்சான். நம்ம எப்போடா ஒதுங்கிப்போவோம், அரவிந்த்கூட ஒட்டிக்கலாம்னுதான் காத்திருந்திருக்காளோன்னு தோணுது. அவனுமே நம்மக்கிட்டயிருந்து இவளைப் பிரிச்சுக்கூட்டிட்டுப் போகத்தான் காத்திருந்திருக்கான். அவனுக்கு நம்மளை பழிவாங்கணும்னு எண்ணம் இருக்குடா. அது அவன் கண்ணுலயே தெரியுது. அவனால் நம்மளை ஒத்தைக்கு எதிர்க்கமுடியாது. என்னதான் சேர்மனுக்கு சொந்தக்காரனா இருந்தாலும் நம்ம வைச்சி செஞ்சிடுவோம்ல.அதுதான் அந்த அம்மாஞ்சி நம்மக்கிட்டயே பரமபதம் ஆடி பாக்குறான்போல. எல்லாம் இவாளல்தான்”என்று திட்டிக்கொண்டிருந்தான்.

அதைக்கேட்டதும் நதியா கோபத்தில் அந்தக் கார்டையும் பூங்கொத்தையும் தூக்கி விஜயின் மீது எறிந்தவள் “கண்டதையும் உளறாத இது யாரு தந்ததுன்னு உனக்கு தெரியாது. அது தெரியாமல் அரவிந்த் மேல பழியைபோடாத. அரவிந்த் என்கிட்ட எதுவும் பேசவேயில்லை, அதைவிட அவன் என்கிட்ட புரபோஸ் பண்ணவுமில்லை. அவனுக்கு நம்மளை பழிவாங்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அவனைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் மேட்டரேயில்லை. அவன் ஒரு பாவம்”என்று கார்டும் பூவும் யாரு தந்ததுன்னு சொல்லாமல் அரவிந்துக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கொண்டிருந்தாள்.

“பார்த்தியா பார்த்தியா இப்பவும் அவன் அப்படி செய்யமாட்டேன், இப்படி பழிவாங்கமாட்டான்னு அவனுக்குத்தான்டா சப்போர்ட் பண்றா. நம்மதான் அவளுக்காக காத்திருந்து அவா கார்ல வர்றான்னு சொன்னதும் சரின்னு காலேஜுக்கு வந்தோம். ஆனால் பாரு அவா நம்மக்கிட்ட சண்டைப்போடணும்னே கார்ல வந்துட்டு நேரா அவன்கிட்டபோய் ஹாய் சொல்லிட்டு பேசிட்டிருக்கா.நம்மளைத் திரும்பிக்கூட பார்க்கல”

“என்னது எனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தீங்களா? டேய் தினேஷ் எருமை அப்போ எதுக்குடா நாங்க காலேஜிக்கு போயிட்டோம். உனக்காக வெயிட் பண்ணலைன்னு என்கிட்ட பொய் சொன்ன?”

“ஏன் எங்களைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன? நாங்க உன்னைவிட்டுப் போகமாட்டோம்னு இத்தனை நாளும் இருந்த நம்பிக்கை இப்போ எங்கப்போச்சு. அதை யோசிக்கவிடாதளவுக்கு உன் மண்டைக்குள்ள வேற என்ன இருந்துச்சு?”என்று அவளையே மடக்கி தினேஷ் கேள்விக்கேட்டான்.

“என்னது நீ பொய் சொன்னாலும் நம்பி உங்களை வந்து பார்த்திருக்கணும்னு சொல்ல வர்றியா?”

அதைக்கேட்ட வஸந்தும் முகேஷும் “ஆமா அவன் கேட்கிறதுலயும் என்ன தப்புன்னு அவன்கிட்ட எதிர் கேள்வி கேட்கிற நதி. எங்களுக்கு உன் மேல கோபம்னு தெரிஞ்சும் சமாதானப்படுத்தலை அது ஏன்?அதுக்குப் பதில்சொல்லு.முன்னாடியெல்லாம் அப்படியில்லையே. இதைவிட பெரிய சண்டையெல்லாம் போட்டிருக்கோம் அப்போலாம் நம்ம உடனே பேசியிருக்கோம். இப்படி முகத்தைத் திருப்பிக்கிட்டு வேற பிரண்டைத் தேடலையே”

“ஐய்யோ இப்போ நான் என்னடா செய்யணும் உங்களுக்கு?”

“ஒன்னும் செய்யவேண்டாம். அந்த அரவிந்த்கிட்ட இருந்து தள்ளியே இரு அதுபோதும். அந்த சோடாபுட்டி பார்வையே சரியில்லை. உனக்கு அவன் பிரண்ட்ஸிப் வேண்டாம்”

“எனக்கு பிரண்ட்ஸ்னா அது நீங்க மட்டும்தான். அரவிந்த் என் பிரண்டுல்ல”

“அப்போ ஏன் அவன்கிட்டபோய் பேசிட்டிருக்க. இனி பேசாதா?”என்று வஸந்த் நேரடியாகவே சொல்லிட்டான்.

“அப்படியெல்லாம் பேசாம இருக்கமுடியாது”என்று சொன்னவள் அவங்க நாலுபேரும் முகத்தையும் நேராகவே பார்த்து என்ன வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியத்தோடு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அவங்க நாலுபேரு முகத்துலயும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

“ஏன் ஏன்? எதுக்கு உன்னால அவன்கூட பேசாமல் இருக்கமுடியாது?”

“ஏன்னா அந்த சோடாபுட்டியை நான் காதலிக்கிறேன். எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான்”

இப்போ தூக்கிப்போட்டிருந்த கிரீட்டிங் கார்டையும், பூக்கொத்தையும் குனிந்து எடுத்த விஜய் அவள் கையில் கொடுத்தான்.

“இது தேவையில்லை இது அரவிந்த் எனக்குக் கொடுக்கலை. நான் இன்னும் அரவிந்த்கிட்ட என்னோட லவ்வை சொல்லலை. அவனும் என்கிட்ட லவ் பண்றேன்னு தெளிவுபடுத்தல. ஆனால் எப்படியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு இங்கயே செட்டிலாகிடணும்னு நான் ப்ளான் போட்டேன்தான். ஆனால் அந்த ப்ளானுக்காக அரவிந்தை விரும்பலை. எனக்கு உண்மையாவே அவனோட அமைதியான குணமும்,அந்த சாந்தமான முகமும் பிடிச்சிருக்கு. அவன் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்றான். ஏதோ ஒரு உணர்வு அவன்மேல பைத்தியமா வருது. அந்த உணர்வையும் எனக்குப் பிடிச்சிருக்கு. என்னோட பிரண்ட்ஸ் உங்கக்கிட்டதான் இதை முதல்ல சொல்லணும்னு இருந்தேன். அதுதான் சொல்லிட்டேன். இதுக்கு அப்புறம்தான் அரவிந்த்கிட்டயே என் லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ணனும்”என்று தன்னுடைய நிலையை தன்னை புரிந்துக்கொள்ளும் நட்புக்களிடம் சொல்லிவிட்டாள்.

அவள் சொல்லிமுடிக்கும்போது அவங்களிடத்தில் கண்ணைசைக்கும் சத்தம்கூட கேட்கிறமாதிரியே இருந்தது.அவ்வளவு அமைதியாக அவளைப் பார்த்தனர்.அந்தளவுக்கு அவள் சொன்னது அவங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

அதைவிடவும் நம்ம நதியா லவ் பண்றாளா?அதுவும் அரவிந்தை போய் லவ் பண்றாளா?என்று தாங்கிக்க முடியாமல்தான் அதிர்ச்சியில் இருந்தனர்.

விஜய்தான் அதிர்ச்சியிலிருந்து விலகியவன் அடக்கப்பட்ட கோபத்தில் குரலைத் தாழ்த்தி பேசினான்.

“இங்கப்பாரு இந்த காதலிக்கிறேங்கிறதை அதுவும் அரவிந்தை விரும்புறேன்னு சொன்னதை இத்தோட மனசுல இருந்து அழிச்சிடு. அது நமக்கு செட்டாகாது. அவன் குணம் வேற உன் குணம் வேற. இரண்டு துருவம் மாதிரி இருப்பீங்க. அவன் உனக்கு வேண்டாம். உனக்கு ஏத்தமாதிரி பிடிச்சமாதிரி உன்கூடவே இருக்கிறமாதிரி ஒருத்தன் கிடைப்பான். இப்போதைக்கு நீ யாரையும் காதலிக்காமல் இருக்கிறதுதான் பெஸ்ட்டு.அதுவும் அரவிந்த் அப்படிங்கும்போது அவன் சொந்தக்காரன் காலேஜ்லதான் நீயும் நானும் படிக்கிறோம், உங்கப்பாவும் வேலைப்பார்க்கிறாரு. அப்போ அது நமக்கு செட்டாகாது. சும்மா கண்டதையும் உளறாத புரியுதா?”என்று பச்சைபிள்ளைக்கு சொல்லுற மாதிரியே பொறுமையா சொன்னான்.

அதைக்கேட்ட நதியா முகத்தைச் சுருக்கி அவனைப் பார்த்தவள் “ஏன் அவனைக் காதலிக்கக்கூடாது?”என்று ஒற்றைக் கேள்வியோடு நிறுத்திவிட்டாள்.

“லூசாடி நீ இவ்வளவுநேரமும் ஏன் அவனைக் காதலிக்கூடாதுன்னுதானே விளக்கிட்டிருந்தேன்”

“இதெல்லாம் நீ யூகமா சொல்லுற விசயங்கள்.அவன் நம்மைவிட ஸ்டேட்டஸ்ல பெரியவனாயிருக்கான் என்பதுக்காகவெல்லாம் காதலிக்காமல் இருக்கணுமா? அவன் குணம் சரியில்லைன்னு சொல்லு. அவன் சரியில்லைன்னு சொல்லு, குடிகாரன்னு சொல்லு, கொலைகாரன்னு சொல்லு, பொம்பளை பொறுக்கின்னு இப்படி ஏதாவது சொல்லு,அதற்கான ஆதாரமும் தா நான் இப்பவே அவனை மறந்திடுறேன்”என்று கெத்தாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“ப்ச்ச் இதெல்லாம் இருந்தாதான் ஒருத்தன் கெட்டவனா?அவனோட எண்ணங்கள் சரியா இல்லைன்னாலும் அவன் கெட்டவன்தான். அப்படிப்பார்த்தா அந்த சோடாபுட்டியோட எண்ணமே சரியில்லை. அதுதான் வேலிட் ரீசனா நான் சொல்லுவேன்”

“ப்ச்ச் பழகி பார்க்காமலயே இப்படி எண்ணம்ச ரியில்லைன்னு சொல்லுவியா?”

“அப்போ நீ பழகிப்பார்த்து தெரிஞ்சுக்கலாம்னு காதலிக்கிறியா?”

“ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ?”

“இப்படி விதாண்டாவாதமா கேள்விக்கேட்டா எப்படி நதி?”என்று அவளிடம் புரியவைக்கமுடியாது திணறிப்போய் கேட்டான்.

“எனக்கு அரவிந்தைப் பிடிச்சிருக்கு. அதுக்கு காரணம் அவனோட பணமான்னு மட்டும் கேட்டிராதா. அதையெல்லாம் நான் கண்டுக்காதவன்னு உனக்கே தெரியும்”

“நாங்க எதையுமே கேட்கலை நதி. உன்னோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னுதான் நினைச்சு இவ்வளவு பேசிட்டிருக்கோம்”

“அது எனக்குத் தெரியாதா?”

“அப்புறம் ஏன் புரிஞ்சுக்க மாட்டுக்க”

“நீங்கதான் என்னைப் பத்தி புரிஞ்சுக்காம ஏதேதோ பேசிட்டிருக்கீங்க”என்று வாக்குவாதம் போய்கொண்டிருக்கும்போதே கிளாஸ் ஸ்டார்ட் ஆகவும் அமைதியாகிவிட்டனர்.

ஆனால் நதியாவின் மனசோ நம்ம பிரண்ட்ஸ்கிட்ட நம்ம காதலைப் பத்தி சொன்னது தப்போ?முதல்ல அரவிந்த்கிட்ட சொல்லிருக்கணுமோ?ஒருவேளை அவன் என்னைக் காதலிக்கலைன்னு சொன்னா என்னபண்றது?அச்சோ முடியலடா சாமி. ஒரே ஒரு காதலை நான் பண்ணிட்டு இவனுங்கக்கிட்ட சண்டைப்போடமுடியல,அவன்கிட்ட காதலைச் சொல்லமுடியல என்று முடியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

“நதியாஆஆஆ என்னாச்சு?தலைவலிக்குதா? உடம்புக்கு எதுவும் சரியில்லையா?”என்று கேட்டதும்தான் அச்சோ என்று உணர்வுக்கு வந்தவள் “ஒன்னுமில்லை மேம். ஐ யம் ஓகே”என்றவள் கிளாஸை கவனித்தாள்.

அதைப்பார்த்த தினேஷ்தான் விஜயிடம் “ஏன்டா அவளைத் திட்டின?அவளும் பாவம்ல. அவக் காதலிச்சா காதலிக்கட்டுமே. அவளோட வாழ்க்கையில் யார் வரணும்னு அவளும் தீர்மாணிக்கட்டுமே”என்று பேசினான்.

அதைக்கேட்ட விஜய் மெதுவாக திரும்பி நதியாவைப் பார்த்தான்.

“அவளை அப்படி கண்டவனும் காதலிக்கவிடமாட்டேன் தினேஷ். அவ நம்ம நதியா”

“விஜய் நீ என்ன சொல்ல வர்ற?”

“நான் எதுவும் சொல்ல வரலைடா. அவளை அப்படி யாரும் வந்து காதலிச்சு தூக்கிட்டுப் போகமுடியாது. அவளை பாதுகாக்கணும்”

“நம்ம பிரண்ட்ஸ் மட்டும்தான் விஜய். எதுன்னாலும் ரமேஷ்சார்கிட்ட சொல்லிடலாமே. அவரு மீதியைப் பார்த்துப்பாரே”என்று விஜயை நம்பாமல் தினேஷ் சொன்னான்.

“நானும் அவளைப் பார்த்துப்பேன் மச்சான்”என்றுவிட்டு திரும்பி பாடத்தைக் கவனித்தான்.

தினேஷுக்கோ விஜய் பேசினதை வைச்சு யோசிக்கும்போது முடியை பிச்சிக்கிட்டு எங்கேயாவது ஓடிறலாம்னு தோணியது.அவங்க யாருக்கும் மத்தியானம் வரைக்கும் திரும்பவும் பேசுற வாய்ப்பில்லை. 

அப்படியே லன்ச் டைம்ல எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடவும் யாருக்கு என்ன பேசன்னு தெரியாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்தனர்.

அதைப்பார்த்த முகேஷ்தான் “இது நம்ம கேங்குமாதிரியே இல்லை. ஏதோ வேற கேங்குல மாத்தி வந்து உட்கார்ந்தமாதிரியே இருக்கு. வரவர நம்ம சந்தோசமெல்லாம் காணமல் போகுது. ப்ச்ச் காலேஜ் வரவேபிடிக்கலை”என்று புலம்பியவன் நதியாவின் முகத்தைப் பார்த்தான்.

“என்ன என் முகத்தைப் பார்க்கிற?என்னாலதான் எல்லாம்னு குற்றம் சொல்ல போறீயா?”

“இல்லை நம்ம கேங்கோட மொத்த சந்தோசமும் உன்கிட்டதான் இருக்குன்னு சொல்லவந்தேன்”

அதைக்கேட்டதும் சாப்பிடாமல் அப்படியே நதியா கையை சாப்பாட்டுலயே வைச்சிட்டு உட்கார்ந்துவிட்டாள்.

“நான் ஏன் இப்படியானேன்னு எனக்குத் தெரியலடா. சத்தியமா அரவிந்தை நான் காதலிப்பேன்னு கனவுலயும் நினைக்கலை. அவனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னு ப்ளான் போட்டேதான். ஆனால் இப்போ உண்மையிலயே எனக்கு காதல் வந்துடுச்சு. நான் இரண்டுமூணு நாளாவே இதை யோசிச்சுதான் உங்ககிட்ட சொன்னேன். ஒரு பிரண்டா என் காதலுக்கு நீங்கதானாட ஹெல்ப் பண்ணனும் அதைவிட்டுட்டு இப்படி எதிரியை பார்த்தமாதிரி பார்த்த என்னால எப்படி நார்மலா இருக்கமுடியும்?”

“யாரும் உன்னை எதிரியா பார்க்கலை. நம்ம எதிரியை ஏன் காதலிக்கிறன்னுதான் கேள்வியே?”விஜய் சட்டென்று கேட்டுவிட்டான்.

“அரவிந்த் நமக்கு எதிரியில்லையே?”

“அப்படியா?உண்மையாவா?அவன் நம்மளை மன்னிப்பு கேட்கவைச்சவன். அவனை அடிக்க நினைச்சோம் இதெல்லாம் ஞாபகமிருக்கா?”

“ம்ம்ம்”

“அப்போ அவன் நமக்கு எதிரி?”

“எனக்கு எதிரியில்ல?”

“அப்போ நண்பன்னு சொல்லு”என்று நக்கலாக் கேட்டான்.

“அவன் என் காதலன். என் உயிர்”

அதைக்கேட்டதும் விஜய் கையிலிருந்த டிபனை தூக்கி தூணில் அடித்துவிட்டு எழுந்துப்போய்விட்டான்.

அவனது கோபம் அவ்வளவு உக்கிரமாக இருந்தது. அவன் அவ்வளவு சீக்கிரத்தில் இப்படியான கோபத்தை காட்டமாட்டான். நதியா அரவிந்தைக் காதலன் உயிர்னு சொன்னதும் வெறியேறும் கோபத்தில் சாப்பாட்டை வீசியெறிந்துவிட்டுப் போய்விட்டான்.

நதியா அப்படியே விக்கித்துப்போய் அவன் போவதையே பார்த்திருந்தாள். அவளது கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் வந்து கன்னத்தை நனைத்து மடியில் விழுந்தது.

“ஏய்ய் நதி. அவன் ஏதோ கோபத்துல போறான்னா நீ எதுக்கு அழற?நீ அரவிந்தைக் காதலிப்பன்னு அவன் நினைச்சிருக்கமாட்டான்.அவன் நினைச்சதுக்கு அப்போசிட்டா நடந்ததும் கோபம் வந்துட்டு. ப்ளீஸ் அழாத”என்று தினேஷ் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

வஸந்த்தோ ‘ஐய்யோ நம்ம க்ரூப்புக்கு எவனோ சூன்யம் வைச்சிட்டான் போலடா. அந்த மனோஜ் என்னைக்கு பிரச்சனை பண்ணினானோ அன்னையிலிருந்து நமக்கு நேரமே சரியில்லை. எப்போ பாரு சண்டைப்போட்டுக்கிட்டிருக்கோம். அவனைத் தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் இன்னைக்கு”என்று பொங்கினான்.

அவன் என்ன செய்வான் அவனுக்கும் என்மேல காதலாம். அந்த கிரீட்டிங் கார்டும்,பூக்கொத்தும் அவன்தான் தந்து புரபோஷல் பண்ணிட்டு போனான். அதைப் பார்த்துட்டுத்தான் விஜய் அரவிந்த் எனக்குத் தந்ததுன்னு அவனைத் திட்டிட்டு வந்தான்.

“என்னது மனோஜ் உன்னை புரபோஸ் பண்ணினானா?”என்று ஜெர்க்காகி அவளிடம் கேட்டனர்.

“ம்ம்ம். இந்த விஜய் அரவிந்த விசயத்துக்கே சாமியாடுறான். இதுல இதைவேற சொன்னா முதல்லபோய் அவனை அடிச்சிட்டு நிப்பான்னுதான் சொல்லலை”

“அவன்கிட்ட சொல்லிடாத. இல்லைன்னா மனோஜை நம்ம ஹாஸ்பிட்டல்லதான் போய் பார்க்கணும்.நம்ம இன்ஞ்சினியர் ஆகுறதுக்கு முன்னாடியே கிரிமினல் ஆயிடுவோம் போலயே. முடியலடா சாமி”என்று மூன்று பேரும் அவள் எடுத்துக் காண்பித்த கிரீட்டிங்கார்டை நடுவில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அங்கே என்ன தெரிகிறது தினேஷு?உங்கள் எதிர்காலம் கண்முன் தெரிகிறதா?