மீளா 18
Mila18

18
மீளா காதல் தீவிரவாதி!!
ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் ஒரு பெண் எப்படி குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் முன்னுதாரணமாக நடக்க வேண்டும் என்று சகுந்தலா பாடம் கற்பித்து போயிருக்க.. ஒரு பெண் ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதை நாச்சியார் காட்டிக்கொண்டிருந்தாள்..
தன் தாயின் சாமாதி மீது படுத்து கலங்கிய மகன் தலையை காற்றாக தென்றல் கோதிட...
ம்ம்மா என்றவன் கண்ணீர் கூட காய்ந்து போனது தாயன்புக்கு நிகர் ஏது , அவன் மனதில் பாரம் அதிகம் என்றாலும் பாரங்களும் சோகங்களும் அவனுக்கு புதிது அல்ல என்பதால் தோளை உலுக்கி கொண்டான்...
"நாயி இனி இந்த வீட்டுக்குள்ள வரட்டும் வெட்டி பொழி போட்டுபுடுதேன்... அவதான் வேணும்னு போறியா , மாமா காப்பாத்துன்னு வந்தாலும் இனி,ஏன்னு எட்டி பார்க்க மாட்டேனே.. உன் கூறு தெரிஞ்சும் உன் நினைச்சி சுத்தி இருக்கேன் பாரு என்னையே செருப்பால அடிக்கோணும் , ஒரு பெண்ணால மருது சாஞ்சான்னு என்னைக்கும் இந்த உலகம் கைகொட்டி சிரிக்கபுடாது" என்று வாய்விட்டே கூற..
"என்னதான் நீ சகுந்தலா மகனா இருந்தாலும், சில சமயம் அந்த சந்தன பாண்டி இரத்தமும் உனக்குள்ள ஓடுதுன்னு சொல்லாம சொல்லுத மருது "என்று முதல் நாள் ஒரு முதியவரை அறிமுகப்படுத்தினோமே அவர் உள்ளே வந்தார் .. சகுந்தலா தேவியின் சித்தப்பா முறை எஞ்சியதில் மிஞ்சியவர்.. கால்கள் எரிபட்டு, கட்டை கால் பொறுத்தி நடக்கிறார்..
"வாரும் உன்மையத்தான் தேடிட்டு இருக்கேன்.. இவள கட்டினா வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்னு சொன்ன புண்ணியவான் நீர்தான.. " முகத்தை துடைத்து கொண்டு ஐயம் வெரி நார்மல் என்பது போல் அமர...
"நல்லா இருக்கும்னுதான் சொன்னேனே தவிர நிகழ்காலம் நல்லா இருக்குன்னு சொல்லவே இல்லையே மருது" என்று அவன் அருகில் அவர் உட்கார ..
"யோவ் எழும்பி ஒழுங்கா ஓடிரும், நான் இருக்கிற கடுப்புல எட்டிக்கிட்டு மிதிச்சாலும் மிதிச்சிடுவேன்.."
"நானா வந்தேன் , உன்ற தம்பி விருமன்தான் , தாத்தா அண்ணன் ஒப்பாரி வைக்கிறார் , வந்து என்னன்னு பாருன்னு சொன்னான்.. எனக்கு ஒன்னும் உன்னை வந்து பாக்கணும்கிற அவசியம் கிடையாது... "
"ஒப்பாரி வைக்கும் போது சொல்லி அனுப்புறேன் வந்து மொத சீட்ல உட்கார்ந்து பார்த்துட்டு போரும் இப்ப எழும்பி போ..."
"ஏன்டா மருது எனக்கு ஒரே ஒரு சந்தேகம் , உன் அம்மா வீரதீர செயல் செய்யும்போது பின்னாடியிருந்து விசில் அடிச்ச அதுவே உன் பொண்டாட்டிய மட்டும் வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு வெளியே விடாம பண்ணுற .. என்ன காரணம்..."
"என் பொஞ்சாதின்னு சொல்லாத , அந்த நாச்சியார் மகள்னு சொல்லு ... எல்லாத்துலேயும் சரியாதேன் இருந்தேன்.. அவ விஷயத்துல மட்டும் கோட்டை விட்டுட்டேன் ... இல்ல அன்னைக்கே அவ அப்பன போட்டு தள்ளும் போது இவளையும் சேர்த்து போட்டு தள்ளி இருக்கணும் ..."
"
"நீ பொண்ணு மேல கை வைக்க மாட்டேங்குற தைரியத்துலதானே நாச்சியார் மறுபடியும் ஊருளுக்குள்ள வந்திருக்கா.. உன் அம்மாவை கொன்ன அவளையே நீ விட்டு வச்சிட்ட... அவ மகள் இந்த புள்ளபூச்சியவா நீ கொல்ல போற" ... எனறதும் மருது பதில் சொல்லாது தலையை திருப்பிக் கொண்டான்...
"ஆமாம் அண்ணன்., சகுந்தலா அத்தை கட்ஸா நிக்கும் போது பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கோணும்னு நீயே எத்தனை தடவை கைதட்டி இருக்க .. ஆனா நம்ம மதனிய மட்டும் ஏன் அடைச்சு அடைச்சு வீட்டுக்குள்ளாரையே வச்ச .. எனக்கும் இது ஒன்னு மட்டும் புரியவே இல்ல" என்று விருமனும் மருதுவுக்கு சாப்பாடு எடுத்து கொண்டு அவன் பக்கத்தில் வந்த அமர ..
"ஏன்னா இன்னொரு இழப்பை தாங்க என்னால முடியாதுன்கிற காரணம்தான்.. என் அம்மாவும் ஆளப்போல அமைதியா இருந்திருந்தா , ஒரு வேளை இங்க உறங்காம இருந்திருப்பாங்களா இருக்கும்... "
"என்னடா இது சுயநலம் ..."
"ம்ம் சுயநலம்தான் அவ விஷயத்துல கொஞ்சம் இல்லை நிறைய சுயநலம் வந்துடுச்சு.. அவ கூட காலத்துக்கும் வாழனும்கிற ஆசை .. எங்கே வெளிய வந்தா இதே மாதிரி ஏதாவது ஆகிடுமோன்னு சின்ன கலக்கம் "என்று மனதை கூறிவிட்டு எழும்பி போய் விட்டான்...
அதுதான் உண்மையான காரணமும் கூட அவனுக்கு ஆண் என்ற கர்வம் உண்டு .. அது மறுக்க முடியாது ஆனால் பெண்ணென்று தாழ்வாக நினைக்கவில்லை.. தன் தாயை பறிகொடுத்த அவனால் குழலியை இழக்க மனமில்லை .. அவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட தன் தாயிக்கே இந்நிலை என்றால்... இவளுக்கு எந்த நிலை.. நாச்சி நாசமாக்கி விடுவாள் எனவே குழலிக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை தன் கையில் பொத்திவைத்து பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள்கிறேன் என்று நினைத்திருந்தான்
அவன் செய்த தவறும் அதுதான் .. அவள் ஒன்றும் சிறு குழந்தை இல்லை.. தாம்பத்தியத்தை பழகிக் கொண்டாள், இவனுக்கு விருப்பம் என்று சமையலை பழகிக் கொண்டாள், இந்த வீட்டில் வாழக் கற்றுக்கொண்டாள் .. அவன் சொல்லிக் கொடுத்திருந்தால் நல்லது தீயதையும் எளிதாக கற்றுக் கொண்டிருந்திருப்பாள்..
விருமனுக்கும் , அவருக்கும் பெருமூச்சு வந்தது...
"ஏன் சித்தப்பு இப்ப என்ன பண்ண.. கட்டம் என்ன சொல்லுது..."
"ம்ம் உன்னையே இதுல தலையிடாதுன்னு சொல்லுது.. "
"மதனிகிட்ட போய் பேசுவோமா ?
"ஏன் இவன் வாயிலேயே எட்டி மிதிக்கவா ..
"ப்ச் இப்படி நாமளும் போனா எப்படி சித்தப்பு .."
"பொன்னிக்கிட்ட மருதுவை பத்தி சொல்லி அழைச்சிட்டு வரலாம் , ஆனா அது நம்ம மருதுவுக்கு தலையிரக்கம் ,அவளே தேடி வரணும் ... எப்படி என் அம்மை முக்கியம்னு போனாளோ, அதே போல நீதான் மாமா எலலாம்னு அவன் கையை பிடிச்சான்னு வை காலத்துக்கும் அந்த வாழ்க்கை குறையாத அன்பை கொடுக்கும் ...
"அப்போ இப்போதைக்கு சேர வாய்ப்பு இல்லையா?...
"ஏன் இல்லாம இத்தனை நாளும் பாலுக்கும் கள்ளுக்கும் வித்யாசம் தெரியாத பொன்னிக்கு இனிதான் கண்ணு திறக்கும்.. ஒரு வகையில இந்த பிரிவு கூட இவன் வச்சிருக்க காதலை அவளுக்கு காட்டும் .."
"ஆனா அண்ணன் இப்படி பக்கத்தில சேர்க்க மாட்டேன்னு சொல்லிட்டு போறாவளே அதுக்கு என்ன பண்ண..."
"எங்கடா போக போறான் ... எங்க போனாலும் முட்டி மோதி பொஞ்சாதி முந்தானை தேடத்தான் செய்வான் .."
"என்னத்த, பாருங்க ஆயிரம் சோகம் இருந்தாலும் ஒன்னுமே நடக்காதது போல போறார்.."
",அது சகுந்தலா ரத்தம்டா , அப்படிதேன் இருக்கும் மார்ல அருவா வெட்டு விழும் போது கூட நெஞ்சை நிமிர்த்தி நின்னவடா என்ற மக, அவன் பிள்ளை இவன் எப்படி இருப்பான்... "
"என்னவோ போங்க , என் அண்ணன் நல்லா இருக்கோணும் அவ்வளவுதேன் என் ஆசை...""
"அவ்வளவுதான் ஆசையா, இல்லை வைத்தியர் வீட்டுல பக்கம் குடிசை போட்டு வாழவும் ஆசையா எனறதும் விருமன் திருதிருவென விழிக்க..
"போன வாரம் அந்த ஊர் புள்ளையை காதலிச்ச கல்யாணம் பண்ணினான்னு ஜோடியாக எரிச்சு கொன்னதை பார்த்ததான??...
"ம்ம் ...
"இதுகள எல்லாம் திருத்த முடியாது, விலகிதான் போகணும் .. காதலுக்கு கண்ணு இல்லைன்னு போனன்னு வை தலை இருக்காது ..."
"அட போ சித்தப்பு பயம் காட்டாத அண்ணன் பார்துப்பார்.."
"ம்க்கும் அவன் காதலே அந்தரத்தில தொங்குது உன் காதலுக்கு அவன் என்னத்த செய்ய முடியும் .... "
"யோவ் போய்யா, அண்ணன் அப்பவே சொன்னார் சித்தப்பு கூட சேராத அவன் ஒரு குறை மண்டைன்னு குழப்பி விடுற ..."
"அதான, அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன பார்த்தா குறையாதேன் தெரியும்... கூட குடும்பம் நடத்தினவனுக்கு அவகிட்ட மனசை சொல்ல துப்பில்ல , காட்டுல குடும்பம் நடத்துறோமே நாச்சி ஸ்கெட்ச் நமக்கும் சேர்த்துதான் போடுவான்னு உனக்கு அறிவு இல்லை , முட்டிகிட்டு இரண்டு பேரும் குனிங்க , என்ன சொல்ல வந்துட்டான்க .. வீட்டுல கொண்டு இறக்கி விடு வா" என்று போக...
"அப்போ நமக்கும் ஆப்பு இருக்கா சித்தப்பு ..
"எவனுக்கு இருக்கோ இல்லையோ உனக்கு இருக்கு , யார் மேலையும் ஓவர் நம்பிக்கை வைக்காத உடைஞ்சி போவ "என்று கடந்து போனார் ...
"யாரை நம்ப கூடாதுன்னு சொல்றார் ஒன்னும் புரியலையே , தெளிவா பேசினாலே எனக்கு விளங்காது.. இவர் திருக்குறள் போல இரண்டு அடியில சொல்லிட்டு போறார் .... சரி என்னதான் வரும்னு பார்ப்போமே.. உயிருக்கு ஏதாவது உலை வைக்க பார்ப்பாணுவ, அவ்வளவு தானே, அண்ணனுக்காக அதை கொடுக்க மாட்டேனா?" என்று விருமனும் அவர் போன திசையில் போனார்...
உயிர் இழப்பை விட காதல் இழப்பு பெரிது என்று தன் முன்னால் நிற்கும் மருதுவை பார்த்து கூட அவனுக்கு தோணல் வரவில்லை ...
மருது பாண்டியன் காலை உணவுக்கு சிறுகல்லையும் , மதியம் லஞ்சுக்கு பாறாங்கல்லையும் உண்டு வளர்ந்தவன் மக்களே, அதனால் அசால்டாக போவதும் வருவதுமாக இருக்க.. விருமனுக்கே குழப்பம் வந்துவிட்டது.. உண்மையிலேயே மதனி மேலே இவருக்கு காதல் உண்டா இல்லையா.. எதையுமே காட்ட மாட்டேங்கிறார் .. சட்டை கலையாமல், சொல்லப்போனால் இன்னும் ஒரு படி மேலே போய் நெற்றியில் குங்குமப்பொட்டு , மீசையில் எண்ணெய் தேய்த்து பளபளவென்று முறுக்கிவிட்டு, போதாக்குறைக்கு ஒரு தங்க சங்கிலி வேறு எக்ஸ்ட்ராவாக போட்டுக் கொண்டு ஊரில் மைனர் போல சுற்றினான்..(வலி அது வேற செக்ஷன்ல )
"என் அண்ணன் இந்த காதல் தோல்வி வந்தா தண்ணி அடிக்கிறது, நாய் பின்னாடி சுத்துறது சோகத்துல சோக பாட்டு பாடுறது அதெல்லாம் உங்களுக்கு வராதா??" என்று சந்தேகமாக கேட்க
"உனக்கு இப்ப என்ன தெரியணும்..
"இல்ல மதனி போன கவலை கொஞ்சம் கூட இல்லாம என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாங்கிற ரேஞ்சுல அலையுறீங்களே அதேன்..
"என்னைய புரிஞ்சுகிட்டு போயிருந்தான்னா அவளுக்காக உட்கார்ந்து அழுறதுல ஏதாவது பிரயோஜனம் இருக்கு.. அவளுக்கு என் கூட வாழ்ந்த வாழ்க்கையே என்னன்னு புரியல.. "
"புரியல , சொல்லி கொடுத்து கூட்டிட்டு வரலாம்ல"..
""ஏன் அவளுக்கா பார்த்து தெரிஞ்சுக்க தெரியாதா... அவ ஆத்தாக்காரி என்னைக்கு இவள வாம்மா மகளேன்னு கூப்பிட்டா, இன்னைக்கு கூப்பிட்டதும் ஓடி போவ தெரியுது.... நான் அவள மடியில வச்சி கொஞ்சுனது அவளுக்கு நியாபகம் இல்லையோ? அப்போ அவளுக்கு நான் முக்கியம் இல்லை ,,அப்படி பட்ட நாயிக்கு நான் ஏன் துக்கம் கொண்டாடணும்...
ஒவ்வொன்னா அவகிட்ட வாயை திறந்து சொன்னாதான் அவளுக்கு புரியுமா? புருஷனுக்கு நம்ம மேல ஆசை இருக்கா, இல்லையான்னு தெரிஞ்சுக்க முடியாத ஒரு முட்டாள் கூவைக்காக உட்கார்ந்து கண்ணீர் வடிக்க சொல்லுதியா? போனவள அப்படியே போக சொல்லு... ஆனா ஏதாவது நடந்துச்சுன்னு இங்க வந்து நின்னான்னு வச்சுக்கோ என்னைய விட பொல்லாதவன் வேற யாரும் இருக்க மாட்டான்"
"ம்ம் சரிண்ணே
"இனிமே நீங்க ஒருத்தனும் போயி குத்தகப் பணம் வாங்க வேண்டாம்.. உங்ககிட்டன்னா லந்து பண்ணுவானுங்க, நான் போறேன்.. எவன் பேசுகிறான்னு பார்க்கிறேன்.."
"நானும் வரவா?
"ஏன்?? இழுத்து வச்சிருக்க ஓரண்டை காணாது குறிப்பா நீ அந்த ஊருக்குள்ள போக கூடாது...""
"ஏன்ண்ணே??" பதறியது மின்னலை பார்க்க போக முடியாதோ ... இனி ரொமான்ஸ் எபி நாமதான்னு ரைட்டர் சொல்லிச்சே கிடையாதா.. பிள்ளை முகம் சுணங்கி போனது ... (ஏன் கிடையாது கனவுல வைக்கிறேன் கோபால்.. )
"போக கூடாதுன்னா போக கூடாது ...
"ம்ம் போகல" என்று மனமே இல்லாது முடித்தான்...
நாற்பது நாள் ஓடி விட்டது ..
"நாச்சியார் வீடு .... "
ஊர் மக்கள் வாசகலில் கூடி இருந்தனர்... பொன்னி அறையில் புடவை கட்டி கொண்டிருந்தாள் .. ஏக கவனிப்பு அது போலி என்று கூட திரியுது பூரிப்பு குறையாத சுற்றினாள்..
"அம்மாவுக்கு என் மேல எவ்வளவு பாசம் பட்டு புடவை நகை எல்லாம் வாங்கி தந்திருக்காங்க இவங்கள போய் அவர் தப்பா பேசுறார்" என்று முணுமுணுத்து கொண்டே சேலை கட்டி சிறு நகையை போட...
"பொன்னி அக்கா எல்லா நகையும் போடணுமாம்"..ஒரு பெண் வந்து கூறிவிட்டு போக
"இங்கேயுமா??" என்று உதட்டை சுளித்து கொண்டு போட்டு கொண்டாள் .. இனி அடுத்து என்ன செய்ய சரி யாராவது சொல்லுவாங்க என்று எப்போதும் போல் யார் தன்னை எடுப்பார் அவங்கள் கையில் பாவையாக தயாராக ..
"பொன்னி இங்கன வா ஆத்தா" என்று அன்னை குரல் கேட்டு வாசல் பக்கம் போக... இரண்டு பெண்கள் அவளை அழைத்து சென்று ஹாலில் விட்டனர் ..
"இதுதான் என்ற பொண்ணு பொன்னி மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்கா?? "
"எந்த மாப்பிள்ளை என்ன நடக்குது?" என சுற்றி முற்றி பார்த்தாள்.. அங்காளி பங்காளி, தாம்பூலம் பூ விருந்து என்று வித்யாசமாக வீடு இருந்தது ...
"என்ன விஷேசம் அப்பா?" என்று அருகே நின்ற முனியன் காதில் கடிக்க..
"சும்மா இரு சாமி தேவிம்மாவுக்கு சத்தம் உசத்தி பேசினா ஆவாது மூச்" என்று விட..
"ம்ம் யாருக்கோ சடங்கு போல" என யாரோ போல் வேடிக்கை பார்த்தாள் ..
"பொன்னி எடைக்கு எடை தங்கம், பொறவு வீடு வாசல் எல்லாம் என்ற மக மேல எழுதி வச்சிருக்கேன்... வேற என்ன வேணும்னாலும் கூசாம கேளுங்க.. செய்றேன்.. என்ற பொண்ணு நம்ம ஜாதி ஜனத்து கூட வாழணும் ,அது ஒன்னு போதும்.. "
பொன்னிக்கு நடக்கும் சுயம்வரம் கூட புரியாது அங்கும் இங்கும் அலைப்பாய்ந்த கண்ணோடு பார்க்க....
"தேவிம்மா குடும்பத்து பொண்ண கல்யாணம் கட்ட கசக்குமா என்ன" என்று மாப்பிள்ளை தகப்பன் பல்லை காட்ட ..
"ஆனா தேவிம்மா பொன்னி அவன் கூட வாழ்ந்துட்டு வந்திருக்கு" என்று தலையை சொரிய...
"அதெல்லாம் மருத்துவச்சி வர சொல்லி இருக்கேன் ஏதாவது புழு பூச்சி தங்கியிருந்தா, கலைச்சிட சொல்லலாம்..."
""ப்பா புழு பூச்சின்னா என்னது? "சந்தேகம் இபோதுதான் கேட்க தோணியது போல் ...
"குழந்தை தாயி , அவன்கூட வாழ்ந்துட்டு வந்திருக்கல்ல .. பிள்ளை உண்டானா மறுக்கல்யாணம் கஷ்டம் சாமி.. அதேன் அழிக்க சொல்லுதாவ... "
"யாருக்கு கல்யாணம்? ..."
"வேற யாருக்கு சாமி ,,உனக்கும் அவனுக்கும்தேன்" என்று விருந்து கவனிக்க போக குழலி நிலையின்றி சுவற்றில் சாய்ந்தாள்....
நிலையற்ற சொந்தங்களை நம்பி தன் ஜீவனை விட்டுவிட்டு வந்தது இப்போதாவது உணர்வாளா?
அவளுக்காக இனி மருது வர போவது இல்லை... அவள்தான் போராடி ஆக வேண்டும் என்ற நிலையில் குழலி நிற்க வைக்கப்பட்டாள்..