அஃது 12

Akthu12

அஃது 12

12 அஃது !!

தமிழகத்தையே உலுக்கிய மூன்று நண்பர்களின் பிள்ளைகள் காணாமல் போன வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்ததாகவும் , அவரை சிறப்பு நீதிமன்றத்தில் பிரத்தியேக அறையில் சிறப்பு நீதிபதிகள் தலைமையில் வரையறுக்கப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் குற்றவாளியை விசாரிக்க, தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.... பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கு பிரத்தியேகமாக விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் என்று கோர்ட்டில் மக்கள் கூட்டம் நடுவே மீடியா மைக்குகளோடு சுற்றி வர .. விர் விர்ரென வந்து நின்ற போலீஸ் வாகனத்தில் இருந்து அர்ஜூன் இறங்கி அவனுக்கு பின்னே வந்து நின்ற கம்பி போட்டு குற்றவாளியை அடைத்து அழைத்து வரும் வேனில் இருந்து ஒரு நபரை முழுதாக கருப்பு துணியால் மூடி கண் மட்டும் வெளியே தெரிய அழைத்து வர .. 

"பச்சை பிள்ளைங்கள கடத்திட்டு போன இவன உயிரோட விட கூடாது கல்லெறிஞ்சு கொல்லுங்க என்று மக்கள் கல்லை தூக்கி கொண்டு அவனை நோக்கி வீச போக... சட்டென மறைத்தார் போல வந்து நின்ற அர்ஜூன் வாரியர்

"அவன் குத்தம் செஞ்சானா செய்யலையான்னு கோர்ட்தான் முடிவு செய்யணும், நீங்களோ நானோ இல்ல.... அவன் மேல ஒரு கல் பட்டுச்சு இங்க லத்தி சார்ஜ் பண்ண வேண்டியது இருக்கும்.. 

"சார் மனசாட்சியே இல்லாம மூணு குழந்தைகளை தூக்கிட்டு போயிருக்கான், நீங்க மட்டும் கரெக்டான நேரத்துல போகலன்னா அந்த பிள்ளைங்க நிலைமையை யோசித்து பார்த்தீங்களா?

"இப்போதைக்கு அவனை குற்றவாளின்னு புடிச்சி இருக்கோம் அவ்வளவுதான் , அவ செஞ்சானா இல்லையாங்கிறது யாருக்கும் தெரியாது, இவ்வளவு நாள் வேடிக்கை தானே பார்த்தீங்க, இனிமேலும் வேடிக்கை பாருங்க.. யாராவது அவன் மேல கை வைக்க நினைச்சீங்க, அத்தனை பேரையும் தூக்கி உள்ள போட்டுருவேன்" என்று கண்ணை இடுக்கி அர்ஜூன் வாரியர் கர்ஜிக்க அத்தனை பேரும் கல்லை தூக்கிப் போட்டுவிட்டு தளர்ந்த நடையோடு நடக்கும் அந்த கருப்பு உருவத்தை பல்லை கடித்துக் கொண்டு பார்த்தனர்.

சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றால் நாங்களே கை அடியாக அடித்துக் கொன்று விடுவோம் என்பது போல் அத்தனை பேரும் பார்த்தனர்..

பின்னே எல்லோர் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கின்றனரே , அந்த காலத்தில் எல்லாம் உறவினர்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொள் பக்கத்து வீட்டுல போய் விளையாடு என்று பிள்ளைகளை அனுப்பி வைத்த காலம் போய், தாய் தகப்பனை கூட நம்பாதே என்று சொல்லும் காலம் வந்துவிட்டது உறவினர்களை நம்பி பிள்ளைகளை அனுப்பக்கூட பீதியாகி போனது .... ஏன் இந்த அவல நிலை என்று ஒவ்வொரு மீடியாவும் வித விதமாக அலசிக்கொண்டிருக்க ...

அர்ஜூன் வாரியர் குற்றவாளியை தன் முதுகின் பின்னால் மறைத்து இந்த கேசுக்காக தனியாக அமைக்கப்பட்டிருந்த அறைக்குள் அழைத்துக் கொண்டு வந்தான்...

போக்சோ வழக்கு என்பதாலும் இதில் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது என்பதாலும் ,கூட்டத்தை பார்த்து குழந்தைகள் மிரண்டு உண்மை நிலையை சொல்ல தயங்க கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .... 

 அர்ஜூன் , மூன்று குழந்தைகளின் பெற்றோர் இரண்டு வழக்கறிஞர்கள், ஸ்டெனோ இன்னும் சிலர் அவ்வளவுதான் அங்கு இருந்தவர்கள் சிறப்பு நீதிபதி கருப்பு சீருடையில் உள்ளே நுழைய அத்தனை பேரும் வணக்கம் வைத்தனர்...

தன் நீதிபதி இருக்கையில் போய் அமர்ந்தான் நீதிபதி கருடன்.... (கலுழனின் காதல் புராணம் ஹீரோ.. புது ஹீரோக்கள் கால்ஷீட் தராத காரணத்தால் நம்ம பழைய ஹீரோக்களையே சிறப்பு தோற்றத்தில் இறக்கியாச்சு ஹிஹி)

"இவர்தான் குற்றவாளி என அடையாளம் படுத்த பட்டவரா வாரியர் என்று முழுதாக மறைத்து நின்றவனை கருடன் பார்க்க ... 

"எஸ் யுவர் ஹானர்...

"ரிமூவ் த கவர் "என்றதும் அர்ஜூன் வாரியர் அந்த உருவத்தை மறைத்த கருப்பு ஆடையை விலக்க .... பரட்டை தலை கருத்த மேனி ,அழுக்கு ஆடை நல்ல உயரம் , பிய்ந்து போன செருப்பு , காலில் வெடிப்பு வேட்டியில் கிழிசல் என்று நின்ற நாற்பது வயது ஆணை அனைவர் கண்ணும் நோக்க, அவனோ யாரையும் பார்க்காது தலையை குனிந்து கொண்டான் .. 

அப்பாவி முகம் , அனுதாப்பட வைக்கும் பார்வை , வறுமையில் நலிந்த தேகம் , இவனா நாட்டை உலுக்கிய பிள்ளை கடத்தல் காரன் ...யாராலும் நம்பவே முடியவில்லை ... 

கேஸ் விசாரிக்கபடுவதை வீடியோ எடுத்து முதல்வருக்கு அனுப்ப உத்தரவு வந்திருக்க விசாரனை ரெக்கார்ட் செய்ய பட ஆரம்பித்தது ... 

உன் பேர் என்ன ? என்றதும் அவன் கண்ணை தூக்கி கருடனை பார்க்க ..

உன் பேர் என்ன ?கேட்ட கேள்விக்கு பதில் வரணும் புரியுதா 

ம்ம் , கருப்பன் அய்யா!!!! ... 

அவன் குரல் மெலிதாக வந்தாலும் பயம் இன்றி வந்தது .... 

""ஓஓஓ நீதான் இந்த குழந்தைகளை கடத்தினியா அவன் அமைதியாக இருக்க 

"சொல்லு நீதான் கடத்துனியா ? 

"ம்ம் ஆமாய்யா 

ஏன் கடத்தின ?

"ஏன் கடத்தினன்னு கேட்டேன் .... இதுக்கு உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா 

"என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் அய்யா

"ஓ காசுக்காக கடத்தினியா 

"ம்ஹூம் 

"யாரும் சொல்லி கடத்தினியா?

"ம்ஹூம் 

"அந்த குழந்தைகளை உன் உடம்பு தேவைக்காக என்று கருடன் முடிக்கும் முன் 

"அய்யோ அதுவும் என் பிள்ளைங்க மாதிரிதான் அய்யா பச்சை பூவுகளை போய் சீசீ "என்று கருப்பன் பதற 

"அப்போ அந்த பச்சை பூவுகளை வச்சி வியாபாரம் பண்ண நினைச்சியோ ஹான் .. 

"ம்ஹூம் ....

"நீ ஒரு காம கொடூரன் , இந்த மாதிரி சின்ன பொண்ணுங்கள கடத்திக் கொண்டு போய் உன் வக்கிர புத்திய காட்ட பார்த்து இருக்க... மாட்டிக்கிட்டதும் அப்பாவி போல நடிச்சு கேசை திசை திருப்ப பார்க்கிற...

"இல்ல 

"ஆமா , உனக்கு தூக்கு தண்டனை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு தெரியுமா??" என்ற கருடனின் எஃகு குரலில் பயமில்லாமல் உதட்டை வளைத்து சிரித்தான் கருப்பன்

"மூன்று குடும்பத்தோட நிம்மதியை கெடுத்து இருக்க அந்த குழந்தைகளை பறிகொடுத்த அந்த மூன்று குடும்பமும் எப்படி பரிதவிச்சிருக்கும் உனக்கு என்ன தண்டனை தரலாம் ?? சாகும் வரை தூக்கில் போட சொல்லவா ? என்றதும் ம் உதட்டை வளைத்த அந்த அப்பாவி முகத்தில் ஒரு எள்ளல் சிரிப்பு வந்தது... அத்தனை பேரும் அவனை அதிர்ச்சியாக தான் பார்த்தனர் ... 

"என்ன கோர்ட்டை அவமதிக்கிறியா , எல்லாத்துக்கும் சிரிச்சா எப்படி வாயை திற , இல்ல இங்கேயே இத்தனை பேர் மத்தியில சூட்டிங் ஆர்டர் கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன் என்று கருடன் எரிச்சலாக அவனைப் பார்த்தான்...

நம்ம ஆட்களுக்கே கொஞ்சம் பொறுமை கம்மி அதுவும் இதுக ரெண்டும் பொறுமையில் பூமாதேவியை மிஞ்சியவர்கள், இன்னும் கொஞ்ச நேரம் கருப்பன் அமைதியாக இருந்தால், நீதிபதி கோர்ட்டை கழட்டி வைத்துவிட்டு கருடன் ஓங்கி ஒரு மிதி மிதித்து விடுவான்... வாரியார் கோட் என்பதையும் மறந்து வெளுத்து தள்ளி விடுவான் இப்படி இருவர் நடுவில் பயமில்லாமல் ஒருவன் நிற்கிறான் என்றால் பாராட்டத்தான் வேண்டும்...

"சொல்லு அந்த மூணு தகப்பன்களோட கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போற??ஹான்..

"என் கண்ணீருக்கு அந்த மூணு பேரும் என்ன பதில் சொல்லப் போறாங்களோ, அந்த பதிலை நானும் சொல்றேன் ஐயா "என்றவன் குரல் அழுத்தமாக அந்த அறையில் ஒலித்தது....

அத்தனை பேரும் அவனை கண்ணைச் சுருக்கி பார்க்க.... தன் பிள்ளைகளை மடியில் வைத்தபடி உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களும் அவனை யோசனையாக பார்க்க... இவர்கள் அவனை குற்றம் சாட்டிக் கொண்டு நிறுத்தி இருக்க, அவனும் அவர்கள் மூவரையும் நோக்கி கையை சுட்டினான்..

"என் கண்ணீருக்கு, என் புள்ளைக்கு என் குடும்பத்துக்கு அவங்க என்ன பதில் சொல்லப் போறாங்களோ அதே பதில நானும் அவங்களுக்கு சொல்றேன் ஐயா..

"என்ன சொல்ற?

" நான் செஞ்சது தப்புதான் ஒத்துக்குறேன்.. ஆனா அவங்க செஞ்சது சரியா தப்பான்னு சொல்லுங்க, அதுக்கு பிறகு நீங்க என்ன சுட்டு தள்ள வேண்டாம் ஐயா.. நானே என் கையால என்னையே சுட்டுக்கிறேன் என்றதும் கருடன் அர்ஜூன் வாரியரை பார்க்க , அர்ஜுன் வாரியர் கண்ணை திறந்து ஏதோ சமிக்ஞை செய்ய, கருடன் பேனாவை மூடி வைத்துவிட்டு சேரில் சாய்ந்து அமர்ந்தவன்..

ம்ம் என்று கைகளை அசைத்து பேசு என்னும் விதமாக கூற ..  

எல்லா குற்றங்களுக்கும் ஆயிரம் காரணம் உண்டு!! ஆனால் இவன் செய்த குற்றத்திற்கு கண்ணீரே காரணம் ....

அஃது என்ன காரணம் ??