அஃது 14

Akthu14

அஃது 14

14 அஃது !!

இன்னைக்கு என் குடும்பம் சின்னாபின்னமாகி கிடக்குது , இவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க ... இப்படி ஒருத்தன வேதனைக்குள்ள போட்டுட்டு, நாம மட்டும் நல்லா இருக்குமேன்னு ஒரு நாள் கூட யோசிக்கவே இல்லையே சார்...

இவங்களால நாங்க எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறோம், எங்களுக்கு வலிக்க கூடாதா? எங்களுக்கு வலிச்சா நாங்க திருப்பி அடிக்க கூடாதா? அடிக்கணும் என்கிற வெறி நான் நிம்மதியை இழந்த மாதிரி , இவங்க எல்லாரும் நிம்மதியை இழக்கணும்னு ஆசை , நான் கதறி துடிச்ச மாதிரி இவங்க எல்லாரும் கதறி துடிக்கணும்கிற ஆசை , பழிக்கு பழி செஞ்சேன் .. தப்பை செஞ்சிட்டு அது தப்பே இல்லை என்கிற மாதிரி நல்லவன் வேஷம் போடுற இவங்களையெல்லாம் இப்படித்தான் சார் அடிக்கணும்... தனக்கு ஒன்னுன்ன உடனே பதறுது, தான் குழந்தைகளுக்கு ஒன்னுன்ன உடனே கதறுறாங்க.. புள்ளைங்களோட உயிர் போச்சோ எதுவும் பண்ணிட்டானோன்னு ஒவ்வொரு நாளும் செத்துருப்பாங்க இல்ல "என்ற கருப்பனின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி..

"ஒவ்வொரு நாளும் என் புள்ள தூங்கும்போது மூக்குல கை வச்சி பார்ப்பேன் சார், அவ இதயம் துடிக்குதா துடிச்சுக்கிட்டு இருக்குதா என் புள்ள உயிரோட இருக்குதான்னு , என் பொண்டாட்டி அசைய முடியாம கிடந்து மாமா என்ன தூக்கி கொண்டு போய் பாத்ரூம்ல வை மாமா , என்ன தூக்கிட்டு போன்னு குழந்தை போல கை தூக்கும் போது இருதயத்துக்குள்ள ஆயிரம் ஈட்டி பாஞ்சு செல்லும் சார் ... என் வலியை, என் வேதனையை வார்த்தையில சொன்னா உங்களுக்கெல்லாம் புரியாது.. பணம், வசதி இது எல்லாம் இருந்ததுனால நான் அர்ப்பமா போயிட்டேன்.. எங்களோட உயிர் உங்களுக்கு குப்பையா போயிடுச்சு , எங்க உயிருக்கு வலிக்கிற மாதிரி உங்களை சார்ந்தவங்களுடைய கதறல் கூக்குரல், வலி , எல்லாம் உங்களையும் கதற வைக்கணும்னு நான் நினைச்சதுல என்ன சார் தப்பு???

"அப்படியே தப்பா இருந்தாலும் அந்த தப்புக்கு தண்டனை மரண தண்டனை கொடுத்தாலும் அதை வாங்கிக்க நான் தயார்" என்றவன் கத்திய கத்தலில் அவ்வளவு அடக்கப்பட்ட வெறி, வேதனை பீறிட்டு வந்தது... 

"ஆனா , உங்க அளவுக்கு நான் கொடூரன் இல்ல போல இருக்கு... அதனால தான் உங்க பிள்ளைகளோட உடம்புல ஒரு கீறல் கூட விழாம கையில கட்டுன கயிறு கூட அந்த பிள்ளைங்க கைய கடிச்சிடக் கூடாது வலிச்சிட கூடாதுன்னு பார்த்து பத்திரமா கொண்டு வந்து மறுபடியும் உங்ககிட்ட சேர்த்துட்டேன் .... நான் மனுஷனா தான் இருக்கேன் போல இருக்கு, 

உன்னோட உனக்கு உதவினது யார் ? என்று கருடன் தொண்டையை சரி செய்து கொண்டு கேட்டான்... 

"என் மனைவி, 

"மனைவியா ??

ம்ம் அவக்கிட்ட எனக்குள்ள ஒரு நெருப்பு எரிஞ்சுகிட்டே இருக்கு, நான் இப்படி பண்ண போறேன்னு சொன்னேன்.. அவ என் முகத்தை ஆழ்ந்து பார்த்தா.. அடுத்த வார்த்தை பேசல எப்படி அவளோட வலியை நான் உணர்ந்தேனோ, அதேபோல என்னோட வலியை அவ உணர்ந்தா, எனக்கு துணையாய் இருந்தது அவதான்"

அவங்க எப்படி உனக்கு உதவ முடியும்? 

"அவளுக்கு இடுப்புக்கு கீழ தான் வேலை செய்யாது ஆனா கைகள் போதும் , நான் சொன்னதை செய்ய, குழந்தைகளை நான் இல்லாத நேரம் பாதுகாத்துக்கிட்டது அவதான், பரிசல்ல அந்த குழந்தைகளை துடுப்பு போட்டு ஒரு பக்கத்துல இருந்து இன்னொரு பக்கத்துக்கு கூட்டிட்டு வந்தது அவதான்... நாங்க ரெண்டு பேரும் தான் இதை எல்லாம் செஞ்சோம் எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க .... என் மனைவி குழந்தைங்க மேல தூசி விழுந்தாலும் இங்கு இருக்கிற எல்லாரையும் சுட்டு தள்ளிட்டு நானும் செத்துடுவேன் சொல்லிட்டேன்... என்றவன் பேச்சில் அங்கே குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அமைதி... யாருக்கும் சிறிது நேரம் பேச முடியவில்லை .... இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்க வில்லையே....  

கருப்பன் சொல்றது உண்மையா ? என்று மூவரையும் கருடன் பார்க்க மூவரும் அமைதியாக நின்றனர் 

அவர் சொன்னது போல ஆக்சிடென்ட் பண்ணிட்டு நீங்க போனது உண்மையா, வாயைத் திறங்க என்று கருடன் அடக்கப்பட்ட கோபத்தோடு அவர்களை பார்க்க ... அருண் தான் ஆம் என்று தலையாட்டினான்..

"ஆமா சார் நாங்க தான்" என்று கிருஷூம் ஒத்துக் கொள்ள....

"ஆனா, சம்பவம் நடந்ததும் பயத்துல அந்த இடத்தை விட்டு போயிட்டோம் குடிபோதை இறங்குனதுன்னுதான் , நாங்க செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சுகிட்டோம்... மறுபடியும் அதே இடத்துக்கு நாங்க வந்தோம் சார்" என்று ரவி கருடனை பார்க்க .... மூவரும் ஆம் என்று தலையாட்டினர்...

"ஆமா சார் நாங்க மூணு பேரும் சம்பவம் நடந்த இடத்தில வந்து மறுபடியும் விசாரிச்சோம் .... அவங்க ரெண்டு பேருக்கும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல சின்ன அடிதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்கன்னு சொன்னதும் பிரச்சினை இல்லைன்னு நினைச்சு போயிட்டோம்

ஷட் அப் எவ்வளவோ அஜாக்கிரதியான பதில் சொல்றீங்க மூணு பேரும் ... அவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் பண்ணிட்டு, எதுவுமே நடக்கலன்னு வீடு வந்து சேர்ந்துட்டீங்க இல்லையா? அங்க போய் அவங்க நிலைமைய நேர்ல பாக்கணும்னு கூட உங்களுக்கு தோணல , நேரமில்லை அப்படித்தானே என்று கருடன் எரிச்சலாக கேட்க 

இல்ல சார் அது வந்து தப்புதான்.... 

"ஸ்டாப் நான்சென்ஸ் டாக்கிங்,  

பணத்தை கொடுத்து பாவத்தை வாங்கிட்டு வந்திருக்கீங்க ரைட் , பணத்தை கொடுத்து செஞ்ச குற்றத்தை மறைச்சிட்டு வந்து இருக்கீங்க. ரெண்டு பேரு உயிரும் உங்களால போக பார்த்து இருக்கு குற்றவாளி அவனா இல்ல நீங்க மூணு பேருமா ஹான் ?

"சாரி சார்.... சிறிது நேரம் கண் மூடி திறந்த கருடன் அர்ஜூனை பார்க்க அவன் ஏதோ தலையசைத்தான்...

"கருப்பன் 

"அய்யா 

"அவங்க செஞ்ச தப்புக்கு நீ சட்டப்படிதான் தண்டனை வாங்கி கொடுத்து இருக்கணும்; தெரியும்தானே?? சட்டத்தை உன்னோட கையில எடுத்துகிட்டது மிகப்பெரிய தப்பு " என்று கருடன் கருப்பனை ஆழ்ந்து பார்க்க

"சட்டமா??? ஹாஹா சட்டம் சட்டம் என்ன சார் செஞ்சுடும் எல்லாரும் சட்டத்தை கற்பு போல பாக்குறது இல்லையே, இங்க சட்டம் கூட பணத்துக்கு விலை போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு , காக்கிச்சட்டையும் கருப்பு சட்டையும் உங்க ரெண்டு பேருக்கும் வேணும்னா உயிரா இருக்கலாம், இங்க பல பேருக்கு அது தொழில் சார் ... பணத்தை கொடுத்தா சட்டமும் மாறும் சாஸ்திரங்களும் மாறும், எங்களை போல அன்றாட காட்சிக்கு இந்த சட்டமும் காக்கி துறையும் சாதகமாய் இருக்கிறதே கிடையாது... பணம் எந்த பக்கமோ , அந்தப் பக்கம் தான் உங்க சட்ட தேவதை கூட சாய்ந்துடும் , உங்க மனசாட்சிக்கே அது நல்லா தெரியுமே அய்யா .. அப்படி இருக்கும்போது இந்த சட்டத்தை வச்சு நான் என்ன பண்ணி இருக்க முடியும்... அப்போ இவங்க மேல கேஸ் கொடுத்திருந்தேன்னா என்ன பண்ணி இருப்பாங்க , லட்சத்துக்கு கோடியை கொடுத்து இந்த கேஸ்ல இருந்து ஈஸியா வெளியே வந்திருப்பாங்க .... இல்ல இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து உன் பொண்டாட்டி பிள்ளைக்கு மருத்துவம் பாருன்னு கொடுத்து இருப்பாங்க பிச்சை எடுக்க சொல்றீங்களா அய்யா ... அந்த பிச்சை எனக்கு தேவையில்லை... அந்த பிச்சையில தான் நாங்க பிழைக்கணும் என்கிற அவசியமும் இல்லை ... எனக்கான நீதியை, நான் தேடிக்கிட்டேன் என் நிம்மதியா நான் தேடிக்கிட்டேன் , எனக்கு தேவையானதை நான் செஞ்சுகிட்டேன்... எனக்காக நீங்க யாரும் வாதாட போறதும் கிடையாது யாரும் வலியை அனுபவிக்க போறதும் கிடையாது... அதனால நானே எனக்கு போராடிகிட்டேன்... தப்புதான் சட்டத்தை கையில எடுத்தது தப்புதான் ஆனா அந்த தப்பை நான் தெரிஞ்சேதான் செஞ்சேன் அய்யா , அந்த தப்புக்கு தண்டனை எது வேணும்னாலும் குடுங்க..  

"ம்ம் , உனக்கு நடந்தது கொடுமைதான் கருப்பன், அதுக்காக நீ செஞ்சதும் தவறுதான்.. மூன்று குழந்தைகளையும் கடத்தியதற்காக காவல்துறையை திசை திருப்பியதற்காக உனக்கு அதிகபட்ச தண்டனையாக அரை ஆயுள் விதிக்கலாம்" என்றதும் கருப்பன் தலையை குனிந்து கொண்டு தன் மனைவியை தேடினான் , செண்பா எங்கோ ஒரு ஓரத்தில் சுவரில் சாய்வாக அமர வைக்கப்பட்டிருந்தாள் ... அவள் மடியில் குழந்தை உட்கார்ந்து இருந்தது... 

தண்டனை அனுபவிப்பது எல்லாம் அவனுக்கு பயம் இல்லை ஆனால் மனைவியும் குழந்தையையும் பார்க்க வேதனை முட்டியது, 

உன் தண்டனையை கூட்டவும் உன் தண்டனையை குறைக்கவும் , உன்னை விடுவிக்கவும் என்னால முடியும் என்ற கருடனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தான்..

 ஒரு குற்றவாளி தானா உருவாகப்படுறது இல்லை எங்கோ ஏற்பட்ட வலிகள் அவனை குற்றவாளியாக உருவாக்குகிறது, கருப்பனின் தீர்க்க முடியாத வலி அவனை இதை எல்லாம் செய்ய தூண்டி இருக்கிறது குற்றவாளி அவன்னா, குற்றத்தை தூண்டிய இவர்கள் மூவரும் தான் முதல் குற்றவாளிகள் என்று நண்பர்களை நோக்கி கருடன் பார்வை போக தலையை குனிந்து எழும்பி நின்றனர்.. 

இவருக்கு கொடுக்கும் தண்டனையை சரிசமமாக இந்த மூன்று நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று கருடன் கூற....

ஐயா என்ற கருப்பனின் இடையூறில் கருடன் அவனை என்னவென்று பார்க்க 

"அய்யா சாமி அவங்க எல்லாரும் செஞ்ச தப்ப ஒத்துக்கணும் செஞ்ச தப்புக்காக மனம் வருந்தி என்னோட வலியை உணரணும்னு நினைச்சனே தவிர... அவங்க ஜெயில்ல கிடந்து கஷ்டப்படணும்னு நான் நினைக்கவே இல்ல சாமி... எனக்கு எப்படி என் குடும்பம் உயிரோ, அதேபோல அவங்களுக்கும் அவங்க குடும்பம் உயிராதான் இருக்கும்... நான் அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு நினைக்கல சாமி, 

இதுல பாதிக்கப்பட்டது நீதான் நீயே தண்டனையை சொல்லு "

அவங்களுக்கு தண்டனை கொடுக்கணும், ஆனா கடைசி வரைக்கும் அந்த தண்டனை அவங்களுக்கு வலியை கொடுக்கணும்னா "

என்ன செய்யணும் அதை இந்த கோர்ட் ஆணை இடும்...

மன்னிச்சு விட்டுடுறைன் சாமி"

வாட் ??????

ம்ம் என்னோட மன்னிப்பு கொடுத்துடுறேன் சாமி நான் அவங்க மூணு பேரையும் மன்னிச்சுடுறேன் அவங்களுக்கும் பொண்டாட்டி புள்ளைங்கன்னு இருக்கு, நான் பரிதவிச்ச மாதிரி அவங்க நிக்கக் கூடாது... என் குடும்பம் சிறகு ஒடைஞ்சு நின்ன மாதிரி அந்த மூன்று குடும்பமும் சீரழிஞ்சு போய் நின்னா, என்னால நிம்மதியா ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியாது சாமி வேண்டாம் விட்டுடுங்க என்றவனை அங்கே நின்று அத்தனை பேரும் பிரமிப்பாக தான் பார்த்தனர் 

ஏனோ இந்த உலகத்தில் நல்லவர்களுக்கு மட்டும் தான் நிம்மதி இல்லாம போகும் போல அதில் கருப்பனும் ஒருவன் 

சாமி என்று கருடன் வாயில் இருந்து வரும் தீர்ப்புக்காக அத்தனை பேரும் காத்திருக்க .... கண்ணை மூடி திறந்த கருடன் 

கருப்பன் நீ போலாம் , கிளம்பு "

"அய்யா 

"கிளம்பு , அர்ஜுன் வாரியர்

"எஸ் சார் 

"அவர் மீது உள்ள வழக்கை எல்லாம் ரத்து செய்து அனுப்புங்க ;என்று கருடன் தடாலடியாக சொல்லிவிட்டு கேஸ் பயலை கிழித்து நண்பர்கள் மூவரின் முகத்திலும் விட்டு எறிந்தவன் சீ என்று ஒரு பார்வை பார்த்தான்..

சாமி என்று கருப்பன் தொண்டை அடைக்க கருடனை பார்க்க

சட்டத்தால நான் தீர்ப்பு வழங்கல , நீ உன் மனைவி பிள்ளைங்க மேல வச்சிருந்த காதல் இந்த தீர்ப்ப எழுத வச்சிருக்கு , நான் இதுவரைக்கும் யாரையும் பார்த்து பிரம்மிச்சுது இல்லை, முதல் முதலா உன் காதலையும் உன் நேசத்தையும் பார்த்து பிரமிச்சிருக்கேன் போய் வாழு என்று கருடன் எழும்பி போய்விட்டான் ... 

அர்ஜூன் வாரியர் அவன் கையில் இருந்த விலங்கை கழட்டி விட்டவன் கையை பிடித்துக் கொண்ட கருப்பன் 

"ஐயா உங்கள சங்கடப்படுத்திட்டேன் இந்த கேசுக்காக ராப்பகலா தூங்காம கிடந்து கஷ்டப்பட்டு இருப்பீங்க மன்னிச்சிடுங்க ஐயா" என்று கைகூப்பி கருப்பன் வேண்ட 

"வேற ஏதாவது காரணமாக இருந்திருந்தா உன்ன வர்ற வழியிலேயே என்கவுண்டர் பண்ணி இருப்பேன்... உன் பொண்டாட்டி மேல வச்சிருந்த லவ்வுல இதெல்லாம் பண்ணிட்ட... நானும் லவ் பண்ணி தொலைஞ்சவன். சோ போன்னு விட்டுட்டேன்" என்று தன் பாக்கெட்டில் இருந்து பரிசை எடுத்து அர்ஜுன் கட்டு பணத்தை எடுத்து 

"உன் பொண்டாட்டி புள்ளைய ஹாஸ்பிட்டல்ல பாரு 

"ஐயா பணம் தான் எனக்கு பிரதானம்னா, என்ன வேணும்னாலும் செஞ்சு இருப்பனே, இவ்வளவு போராடி இருக்க மாட்டேன்" என்றதும அர்ஜூன் எடுத்த பணத்தை மீண்டும் தன் பாக்கெட் உள்ளே வைத்தவன் ... கருப்பனின் தோளில் தட்டி

"நல்ல டாக்டரா பார்த்து சொல்றேன் கூட்டிட்டு வா உன் மகளை சரி பண்ணிடலாம், 

"ரொம்ப நன்றிங்க ஐயா நான் போகலாமா..

"ம்ம் போறதுக்கு முன்னாடி உன் மனைவி பிள்ளைகளை கூட்டிட்டு வா என்றதும் கருப்பன் வெளியேறிவிட மூன்று நண்பர்கள் அவன் மனைவி பிள்ளைகள் மட்டும் அந்த அறையில் அர்ஜூன் முன்னால் நின்றனர்.... 

நாம் செய்யும் நல்லது தீயதும் நம்மையும் நம் பிள்ளைகளையும் தான் வந்து சேரும் என்ற அடிப்படை உணர்வு இருந்தாலே கெட்டது நாட்டை விட்டு தூரம் போய்விடும்...