அஃது4
Akthu4
4 அஃது !!
அருண் சோர்ந்து போன முகத்தோடு உள்ளே வர அவனை விரக்தியாக பார்த்துக் கொண்டு நின்றாள் அவன் மனைவி அம்சவேணி...
இவன் எம்பிபிஎஸ் அவள் ஐந்தாம் வகுப்பு , இவனைப் போல நாகரீகமாய் பேசவோ ஆடை அணியவோ தெரியாது...
டிப்டாபாக அவ்வப்போது திருவிழாவிற்கு வரும் மாமன் மகனின் ஓரப்பார்வை தன் மீது விழாதா என்று காத்திருந்த பக்தை அவள்.. திடீரென்று ஒரு நாள் உன்னை திருமணம் செய்து கொள்ள வந்திருக்கிறான் என்று சொன்னதும் , அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. திண்ணையில் கிடந்தவனுக்கு விடிஞ்சா கல்யாணமாம் என்பது போல, இதுதான் வாய்ப்பு என்று அம்சா அடுத்த வார்த்தை பேசாமல் அவன் தாலியை வாங்கிக் கொண்டு வந்தவளுக்கு ... அவன் வேறு ஒரு பெண்ணை காதலித்திருக்கிறான் அதுவும் இப்போது அவள் தன் நண்பனின் மனைவி என்ற செய்தி சற்றும் பிடிக்கவில்லை
"ஏதாவது பொண்ணு பாத்து கல்யாணம் கட்டிக்கணும் இதை மறைச்சு அவ கூட வாழ முடியாது , படிச்சவளா இருந்தா டங்கு டங்குன்னு குதிப்பா, சோ நான் சொல்றத புரிஞ்சுக்குவேன்னு நினைச்சுதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அந்த பொண்ணு தான் என் மனைவின்னு முட்டாள்தனமா மனசுல பதிய வச்சுட்டேன்.... கொஞ்ச நாள் ஆகும் பொறுத்திரு என்று இவள் முகத்தை பார்க்காமல் படுக்கையில் திரும்பி படுத்து கொண்ட கணவனை உதட்டை பிதிக்கி பார்த்தவள் இரவெல்லாம் அவனுக்கு தெரியாது அழுதாள்
அன்றிலிருந்து இன்று வரை வாழ்க்கை என்னமோ நன்றாகத்தான் போகிறது, இவளுக்கு செய்வதில் அருண் ஒருநாளும் குறைவு வைத்தது கிடையாது... ஆனால் அதைத் தாண்டி அவளிடம் உட்கார்ந்து அரட்டை அடித்ததோ பேசியதோ கிடையாது ஏதாவது ஒன்று இரண்டு வார்த்தை பேசி விட்டு போவான் அவ்வளவு தான், இரவு மனைவியாக அவளை தேடுவான் அதில் காதல் இருந்ததா இல்லையா என்று இன்றுவரை அவளுக்கு தெரியாது.... ஆனால் அவன் கேட்டதை அவள் ஒருநாளும் மறுத்ததும் இல்லை, அடம்பிடித்ததும் இல்லை .... இவள் கேட்டால் அடுத்த நொடி அவள் கையில் இருக்கும்...
ஒருவேளை அருண் உண்மையை சொல்லாமல் இருந்திருந்தால் , இதுதான் அவன் குணம் போல என்று இதை ஏற்றுக் கொண்டிருப்பாள்... ஆனால் அவன் பழைய காதலை சொன்னதால், ஏதோ ஒரு உறுத்தல் இருதயத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்... இவனும் நண்பர்கள் என்று சிறுது நேரம் கிடைத்தால் கூட வெளியே போய்விட..
எப்போதும் இந்த வீடு இந்த வீட்டின் பொறுப்புகள் கணவன் எப்போது வருவான் அவனுக்கு துணியை எப்போது துவைப்பது மகள் எப்போது வருவாள் மகளுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் , பாத்திரம் சமையலறை பாத்ரூம் என்று அவள் கதி அத்தோடு முடிந்து போக ...
"படிச்சவளா வந்திருந்தா ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டு இருப்பா, படிக்காத பட்டிக்காடுதானே, நாம நில்லுனா நிப்பா போன்னா போவா , வீட்டுக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியா கட்டிட்டு வந்து இருப்பார் போல இருக்கு, கல்யாண கட்டி இத்தனை வருஷம் ஆகுது ஒரு நாளாவது.. உன்னை எனக்கு பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்காரா? என்று அம்சா அவன் நிலைமை புரியாமல் உள்ளே வந்த கணவனை முறுமுறுக்க... சட்டென்று திரும்பி சோபாவில் உட்கார்ந்து புலம்பி கொண்டிருந்த மனைவியை பார்த்த அருண்
"யாருகிட்ட ஒத்தையில பேசிகிட்டு இருக்க...
"பின்ன ஒத்தையில தான் பேசணும் , உங்களை கல்யாணம் கட்டினதுக்கு ஒத்தையில பேசினாதான் முடியும்... இல்லன்னா பைத்தியம் பிடிச்சுடுமே
"பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு இங்கே என்ன நடந்தது...
"என்ன நடந்ததா ? நான் உங்க பொண்டாட்டின்னு ஞாபகம் இருக்கா மாமா
"என்ன டோன் எல்லாம் வேற மாதிரி மாறுது...
"என் கூடவே இருக்கிற புருஷன் எதையுமே என்கிட்ட சொல்றது இல்ல, டெய்லி பழைய காதலிக்கு ஆறுதல் சொல்ல அவங்க வீட்டுக்கு போயிட்டு வர்றீங்க ஆனா வீட்டில் இருக்கிற பொண்டாட்டி என்ன நிலைமையில இருக்கான்னு பார்க்க உங்களால முடிஞ்சிருக்கா? என்ற மனைவியை தீயாக முறைதான் ... தெரியாத்தனமா பழைய காதலை அவளிடம் சொல்லிவிட்டு இப்போது யோசிக்கிறான் ...
"ப்ச் காப்பி கொண்டு வா ..
"முடியாது எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
"என்ன சத்தம் உயருது
"ஓ பொண்டாட்டிக்கு கொடுக்கு முழிச்சுருச்சுன்னு பயம் வந்துருச்சோ,, உங்களை விட்டுட்டு போனா எனக்குதான் நாதி இல்லைன்னு உங்களுக்கு தெரியுமே, அதனால தானே இந்த வீட்ல வேலைக்காரி மாதிரி என்ன அடைச்சு போட்டு இருக்கீங்க எரிச்சலாய் தலையை தடவிய அருண்
"என்னடி உன் பிரச்சனை மனுஷன் 1008 பிரச்சனையில வீட்டுக்குள்ள வந்தா வீட்ல இருக்குறவங்களும் நாலு பிரச்சனையை கூட்டணும்னு நினைச்சுக்கிட்டே பேசுவியோ? இப்போ எதுக்கு வளவள கொள கொளன்னு பேசிகிட்டு இருக்க.. என்றதும் அவள் அழுகை கூட
"ப்ச் எதுக்குடி அழுது தொலைக்கிற..
"இன்னைக்க தான் நான் அழுறது தெரியுதா உங்களை கல்யாணம் கட்டி பத்து வருஷமா அழுதுட்டு தான்இருக்கேன்
"பத்து வருஷமா அழுதுகிட்டு இருக்கியா, அப்படி இங்க உனக்கு என்ன கொடுமை நடந்துச்சு
"என்ன கொடுமை நடக்கல, பழைய காதலியை நெனச்சுக்கிட்டு என் கூட நீங்க சிரிச்சு கூட பேசல" என்ற அம்சவேணி சின்னப்பிள்ளைத்தனமான குற்றச்சாட்டில் அருண் கழுத்தை தேய்த்தான்
"அம்சா எரிச்சல கிளப்பாத, போய் காபி போட்டு எடுத்துட்டு வா
"மாட்டேன் , நீங்க பெரிய டாக்டரா இருக்கலாம் ஆனா எனக்கு புருசன் , அதை முதல்ல நியாபகம் வச்சிக்கோங்க
ப்ச்
"எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கூட உங்களுக்கு தெரியாது , இப்படி ஒரு வாழ்க்கை நாம ரெண்டு பேரும் வாழனுமா??...
"வாழ முடியலன்னா போடி உங்க அப்பன் வீட்டுக்கு இங்க உட்கார்ந்து என் கழுத்தை அறுக்காத...
"மாமா இஇஇஇ
"என்கூட பொத்திகிட்டு வாழனும்னா வாழு, இல்ல பொட்டியை கட்டிக்கிட்டு வீடு போய் சேரு என்ற அருண் கத்தலில் அம்சவேணி பயந்து போய் அருணை பார்க்க
"வாலை சுருட்டி கிட்டு நான் சொல்றதை எல்லாம் கேட்பேன்னு நினைச்சுதான் பட்டிக்காட்டில இருந்து உன்னை கல்யாணம் கட்டி கூட்டிக்கிட்டு வந்தேன்... எப்ப வாய் அதிகமா ஆகிடுச்சோ, இனிமே நீ இங்க இருக்க கூடாது கிளம்புடி "என்று அரட்டலாக அவளை அருண் பார்த்தான்
எப்போதும் இப்படி கண்டபடி பேசுபவன் கிடையாது ஏற்கனவே இரண்டு பேரின் பிள்ளைகள் காணவில்லை அடுத்தது தன் பிள்ளை காணாமல் போய்விடுமோ என்று அவனுக்கு பதக் பதக்கென இருந்தது ... இங்கே இருந்தால்தானே பிரச்சனை பேசாமல் கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிடு என்று அர்ஜூன் யோசனை சொல்ல ..
பத்து வருடத்தில் ஒரு நாள் கூட இவன் இல்லாது எங்கும் போக மாட்டாள் நான் இல்லாம உங்களை யார் பாத்துப்பா என்று வெள்ளந்தியாக கேட்பாள்
நான் பார்த்துக்கிறேன் போ என்றாலும் மறுத்து விடுவாள் ... இன்று சொன்னால் போகும் ஆள் அவன் மனைவி கிடையாது, சாகப் போனாலும் கூடவே வர்றேன் மாமா என்று கொஞ்சூம் பைங்கிளி அவள் , அவன் காலை பார்த்தே நடக்கும் பெண்.. தான் காதலித்த பெண்ணை மணந்திருந்தால் இவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பானா தெரியாது , மனப்பொருத்தம் இருந்திருக்குமா அதுவும் தெரியாது.. ஆனால் அவன் மனம் கோணாமல் நடந்து கொள்வதில் அவன் மனைவி அம்சவேணிக்கு நிகர் வேறு யாருமில்லை என்று அவனுக்கு நன்றாக தெரியும்..
"அயயோ அய்யோ நான் ஏமாந்துட்டேனே, இவர் மனசுல என்னைக்காவது எனக்கு இடம் கிடைக்கும்னு நினைச்சு பத்து வருஷத்தை இழந்துட்டேனே, இவர் காலடியில அடிமை போல கிடப்பேன்னு தான் என்ன கல்யாணம் கட்டிக்கிட்டு கூட்டிட்டு வந்து இருக்கார்.. அப்பப்போ ஆசைக்கு தொட்டு இருக்காரு , இது தெரியாம என் புருஷன் என் மேல மயக்கத்தில இருக்காருன்னு நானும் கிறுக்கி மாதிரி நினைச்சுக்கிட்டு, என் வாழ்க்கை மண்ணா போச்சே "என்று அம்சா தலையில் அடித்து ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க... அவள் பெட்டி படுக்கையை எல்லாம் தூக்கிக்கொண்டு போட்ட அருண்..
"ஆமாடி ஆசைக்கு தான் உன்னை தொட்டேன் அடிமையா வைக்கத்தான் நினைச்சேன், எப்போ வாய் வண்ணார்பேட்டை வரைக்கும் போச்சோ இனிமே இங்க உனக்கு இடம் இல்லை, போகும்போது நீ பெத்தியே உன் பொண்ணு அவளையும் கூட்டிக்கிட்டு போய் சேரு ... கார வர சொல்லி இருக்கேன் கிளம்பு
"போறதுன்னு ஆகிப்போச்சு அதுக்கு பிறகு கார்ல போனா என்ன மாட்டுவண்டியில் போனா என்ன?? உன் கார் எவனுக்கு வேணும்
"மரியாதை இல்லாம பேசுறியாடி என்று அருண் அவள் அருகில் போக, சட்டென பின்னால் விலகிக் கொண்ட அம்சவேணி
"உண்மையாவே என்ன போக சொல்றீங்களா மாமா
"ஆமா ஆமா எப்போ திமிர் எடுத்து போய் பேசினியோ இனிமே இந்த வீட்ல உனக்கு இடம் கிடையாதுடி கிளம்பு ..
"ஓஓஓ நல்லா கேட்டுக்கோங்க மாமா இனிமே நீங்களா வந்து கெஞ்சி கூத்தாடி வாடி ஒழுங்கா வாழலாம்னு சொல்லி கூப்பிட்டாலும் நான் உங்க கூட வரமாட்டேன்...
"தேவை இல்லை பத்து வருஷம் வாழ்ந்த பொண்டாட்டியை எவனாவது கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு வருவானா, நீ போனா போன்னு விட்டுட்டு என் ஸ்டேட்டஸ்க்கு தகுந்த மாதிரி வேற பொண்ண பாத்து கல்யாணம் கட்டிக்கிட்டு ஜாம் ஜாம்னு வாழவேண்டி"
"ஹான் வாழ்வீங்க வாழ்வீங்க, நான் மட்டும் சும்மா இருப்பேன்னு நினைச்சிங்களா , எனக்கு ஏத்தாப்ப யாராவது கிடைக்காமலா இருப்பாங்க... நான் மட்டும் உங்களை நினைச்சுக்கிட்டு கிடப்பேன்னு நினைச்சீங்களா என்று அம்சா கொண்டையை போட்டுக்கொண்டு பெட்டி படுக்கையை எடுத்து இடையில் வைத்துக் கொண்டவள்...
"போறேன்
"போ
"போக போறேன்
போ
போகணுமா மாமா?
போடி
என்றதும் அழுதுகொண்டே மகளையும் இழுத்துக் கொண்டு வேக வேகமாக வெளியே போக
போயிடு அப்படியே நாலு நாள்ல வந்திராத மானமுள்ளவளா இருந்தா அப்படியே போயிடு என்று அருண் கத்த ..
"அதேதான் நீங்க மானமுள்ளவரா இருந்தா என்னைய தேடி வராதிங்க, நானும் உங்கள தேடி வர மாட்டேன் என்று மூக்கை உறிஞ்சி கொண்டே ஆட்டோவில் ஏறி அவன் மனைவி பஸ் ஸ்டாப் நோக்கி போக....
ஸ்ப்பா என்று பெருமூச்சு விட்ட அருண் வேகமாக பைக்கை ஸ்டார்ட் பண்ணி அந்த ஆட்டோவின் பின்னால் ஃபாலோ செய்த ஆரம்பித்தவன் போனை எடுத்து காதில் வைத்து ...
"அர்ஜூன் சார் நீங்க சொன்ன மாதிரி என் வைஃபை கிராமத்துக்கு அனுப்பி வச்சிட்டேன்... என் புள்ளையை சேவ் பண்ணிடலாம் இல்ல..
ஹா ஹா என்று சிரித்த அர்ஜூன்
உங்க புள்ளைய தேடி கண்டிப்பா அந்த குற்றவாளி கிராமத்துக்கு போவான்.. இவ்வளவு பெரிய சிட்டியில அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல , அதனால தான் உங்க மகளை கிராமத்துக்கு அனுப்பி வச்சது... சின்ன இடத்துல குற்றவாளியை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்ல "
"அய்யோ சார் என்ன சார் இப்படி சொல்றீங்க? உங்களை நம்பி என் பொண்டாட்டி கிட்ட சண்டை எல்லாம் போட்டு விரட்டிவிட்டு இருக்கேன் சார்..
"ஓஓஓ அப்போ டைவர்ஸ் கேசுக்கும் ஒரு வக்கீல் பாத்துடுங்க"
"சார் என் பொண்டாட்டி ரொம்ப பிடிக்கும் சார் நான் இல்லாம அவ இருந்துக்குவா , ஆனா அவ இல்லாம என்னால நாலு நாள் கூட சமாளிக்க முடியாது சார்..
"அது உங்க பிரச்சனை, எனக்கு என்ன வந்தது இப்போதைக்கு உங்க பொண்டாட்டியும் பிள்ளையும் இங்க வரக்கூடாது அவ்வளவுதான்... தப்பி தவறி இங்க வந்தாங்க உங்க குழந்தைய மட்டும் இல்ல உங்க மூணு பேர் குழந்தையையும் காப்பாத்த என்னால முடியாது என்றதும் அருண் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்
உண்மையை சொன்னால் மனைவி இங்கே வந்துவிடுவாள் , பொய்யை சொன்னால் விவாகரத்து உறுதி, என்னடா பண்ண என்று புலம்பிக்கொண்டு உட்கார்ந்து இருந்தான்...
அஃது எதுவென தெரிந்தால் தானே எதாவது செய்ய முடியும் மறைந்து இருந்து விரட்டும் மர்மம் என்னவோ??