அஃது 8
Akthu8
8 அஃது!!
"அடியேய் அம்சா..உன் புருஷன் இருபது நேரம் போன் போட்டுட்டாரு, ஒன்னு எடுத்து பேசு இல்ல அந்த போனை ஆஃப் பண்ணி வச்சு தொல எப்ப பார்த்தாலும் நச நசன்னு போன் வந்துகிட்டே இருக்கு ... இத்தன நாளும் நல்லாத்தானே இருந்த பத்து வருஷம் கழிச்சு என் புருஷனை எனக்கு பிடிக்கல வெட்டி விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்ற கிறுக்கு எதுவும் பிடிச்சு போச்சா உனக்கு ? தாய் திட்டுவது காதில் கேட்டது போலவே இல்லை நகத்தை கடித்து துப்பி
"இந்த ஊர்ல எவளுக்காவது இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா கழுத்து நிறைய நகை சேலை வசதியான வாழ்க்கை இதுக்கு மேல உனக்கு என்ன தாண்டி வேணும்" என்று தாய் மகளை திட்ட ...
"சேலை நகை நட்டு இருந்தா போதுமா புருஷன் பிரியமா இருக்க வேண்டாமா?
" ஆமா பிரியமா இல்லாம தான் அவரைப்போல பிள்ளை பெத்து வளர்த்து வச்சிருக்கியாக்கும்
"கிறுக்கு மாதிரி பேசாதம்மா , பிரியமாதான் பிள்ள பெக்கணுமா என்ன, ராத்திரியானா ஏறி விழுந்தா கூட தான் புள்ள வரும்
"கருமம் கருமம் அறிவு கெட்டவளே பச்ச பிள்ளையை வச்சிக்கிட்டு என்னடி பேசுற
"அப்போ சும்மா போயிடு என் வீட்டு பிரச்சனையில நீ மூக்கை நுழைக்காத ,நான் பாட்டுக்கு உக்காந்து புலம்பிக்கிட்டு தானே இருக்கேன்..ன நீ எதுக்கு ஏன் குடும்ப விஷயத்துக்குள்ள இடையில் வர்ற...
"என் வீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டு சோறு தின்னா நான் தாண்டி இடையில் வருவேன்,
"நீ ஒன்னும் சோறு தர வேண்டாம் போவியா, நானே இங்க கடுப்பு கூந்தல்ல இருக்கேன்.. இவ வேற எ, அம்சா முகத்தை கோணிக் கொண்டு , மீண்டும் அதே பொசிஷனில் உட்கார்ந்து புலப்பலை தொடங்கி விட்டாள்
"ம்க்கும் நகை நட்டாம் எவனுக்கு வேணும் இது என்று தாலி தவிர மத்ததை கழட்டி திண்ணையில் போட
"திமிர் எடுத்தவ, நீதான்டி அந்த மனுசனை கொடுமை பண்ணி இருக்கணும் , பாவம் இம்புட்டு ஆன பிறகும் போன் போடுறார் பார்
"என்ன விரட்டி விட்டதே அவர் தான் அதை ஏன்னு கேட்காத...
"ப்ச் அந்த போனையாவது எடுத்து பேசுடி" திண்ணையில் கிடந்து அலறிக் கொண்டிருந்த போனை எடுத்தால் பாரேன் என்று அம்சவேணி அதை பார்க்காமல் வாசலில் உட்கார்ந்து திருவிழா கூட்டத்தை ரசித்து கொண்டு இருந்தாள்....
கண்கள் தான் திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்தது மனம் என்னவோ கணவன் பேசிய வார்த்தைகளில் தான் இருந்தது...
மிடில் கிளாசுக்கும் கீழான பேமிலி தான் அம்சா குடும்பம் .. நகை நட்டு எதுவும் வேண்டாம் என்று அருண் அவளை திருமணம் செய்து கொள்ள அவன் மீது மிகப்பெரிய மரியாதை வந்தது உண்மை ...
நான் மருத்துவன் நீ எனக்கு சரிசமமா என்று ஒரு நாள் கூட அவன் சொன்னது இல்லை , அதே போல் ஒதுக்கி வைத்ததும் இல்லை... வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது தெரியாது ..
ஒரு நாள் நல்ல மழையில் அருண் வாசலில் நனைந்தபடி வந்து நிற்க
"மாமா மழை வந்தா எங்கேயாவது நின்னுட்டு வரலாம் தானே" என்று அவசரத்தில் தன் சேலை தலைப்பை எடுத்து அவன் நனைந்த முடியை துவற்றிவிட... குறுகுறுவென்று தன் மனைவியை அருண் குனிந்து பார்த்தான் ... நேரம் எடுத்துக் கொள்கிறேன் என்றவனுக்கு ஆறு மாத நேரம் போதுமானதாக இருந்தது.. கலகலவென்று ரீங்காரம் போடும் வண்டாக அவன் வீட்டுக்குள் சுற்றி வரும் மனைவியை சும்மா பார்ப்போம் என்று பார்க்க ஆரம்பித்தவன் பார்வை , காதல் பார்வையா இல்லை காமப் பார்வையா ஏதோ ஒன்று கொழுத்து திரியும் பூனைக்குட்டி மேல் ஆசை வர வைத்து விட்டது...
திடீரென போய் அவளை தொட்டு உங்க மனசுல நான் முழுசா வந்துட்டேனா என்று அவள் கேட்டால் அதற்கு பதில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை .. இது காதலா என்றும் தெரியாது திருமணம் செய்து விட்டேன் வாழ வேண்டும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று மனசை கட்டி இவளிடம் கொண்டு வந்து விட்டான்... ஆசையும் வரவைத்து விட்டாள்
மாமா
ம்ம் தன் முன்னால் நின்ற மனைவியை அடித்து தின்பது போல அவன் ஒரு பார்வை பார்த்து வைக்க, இவள் வெட்கத்தில் நெளிய , அந்த வெட்கம் போதுமானதாக இருக்க ,அருண் அப்படியே அவளை இடையோடு தூக்கிக் கொண்டு படுக்கையறையில் கொண்டு போய் போட்டவன் தன் மீது இருக்கும் மழை நீரை அவள் மீது இடம் மாற்றிவிட்டான்...
"மாமா அந்த அக்காவை முழுசா மறந்துட்டீங்களா? காலையில் முதல் கேள்வி அதுதான் கேட்டாள்... இரவு அவன் அணைக்கும் போது இதையெல்லாம் கேட்டு அவனை சங்கடப்படுத்த அவளுக்கு மனம் வரவில்லை.. அவன் தொட்டதற்கு இசைந்து விட்டாள்.. ஆனால் காலையில் அவளை ஏறிட்டு பார்க்காத கணவனின் செயலில் பயந்து கேட்க..
"கல்யாணம் முடிஞ்சாச்சு மத்ததும் முடிஞ்சு இனி எதுக்கு இந்த கேள்வி இதுதான் என் லைஃப் அந்த தெளிவு எனக்கு இருக்கு; போய் காபி போட்டு எடுத்துட்டு வா" என அருண் ஃபோனை தூக்கிக் கொண்டு தன் நண்பர்களோடு பேச பால்கனி சென்றுவிட... தெளிவு இல்லாத அவன் பதிலில் தலையை சொரிந்து கொண்டே அம்சவேணி கிட்சன் சென்று விட்டாள்
அன்றிலிருந்து இன்று வரை அவனுக்கு தேவையானது படுக்கையோ சமையலறையோ எதுவோ எல்லாவற்றையும் செய்து கொடுப்பாள்... ஆனால் என்றாவது ஒருநாள் உன்னை எனக்கு பிடிக்கும் , நான் காதலித்த பெண்ணை மனந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்க மாட்டேன், உன்னால் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லி விட மாட்டானா என்று தினம் தினம் காத்திருந்து இதோ ஏமாளியாகி போய் நிற்கிறாள்..
அவன் காதலித்த ரவியின் மனைவியாக இப்போது இருக்கும் ரூபியை பார்க்கும் போது தன்னை அவளோடு ஒப்பீட்டு பார்த்தாள்
"அந்த அக்கா மாதிரி நாகரீகமா நான் இல்ல.. படிச்சிருக்கல, இடம் பார்த்து பேச தெரியல அதனாலதான் மாமாவுக்கு என்ன பிடிக்கலையோ? அப்போ எதுக்கு என்னை கல்யாணம் கட்டிக்கிட்ட எதுக்கு என் கூட வாழ்ந்தார்.. அந்த அக்கா மாதிரி அவங்க மட்டும் தான் இருக்க முடியும் ... நான் எப்படி அவங்கள மாதிரி மாற முடியும்... நான் வளர்ந்தது இங்க, என் படிப்பு இவ்வளவுதான் என் குணம் இவ்வளவுதான் இருக்கும் ... பத்து வருஷம் வாழ்ந்து என்ன தேச்சு தேய்மானம் ஆக்கிட்டு, இப்போ உன்ன போய் கல்யாணம் கட்டினேன் பார்ன்னு சொன்னா என்ன அர்த்தம்
"கோபத்துல முகம் பேசி இருப்பார்டி புலம்பி தள்ளாத' மகள் புலம்பல் தாங்காது தாய் கூற
"நீ வாயை மூடும்மா , கோபமா இருந்தாலும் ஒரு மனுஷன் இப்படியா பேசுவான், இனிமே மானங்கெட்டு போய் அவர் முன்னாடி மாமான்னு பல்ல இழிச்சுக்கிட்டு நிக்க கூடாது , அவருக்கு பொண்டாட்டியை விட அவங்க நண்பர்கள் தான் ஒசத்தி..
ப்ச் அப்படி சொன்னாரா ??
"சொல்லணுமா என்ன , அவருக்கு என்ன பிடிக்கல
"இது வேறையா ?
"ம்ம் , அவங்க பிரெண்டு பொண்டாட்டி மாதிரியெல்லாம் நான் இல்லன்னு தான் எங்கயுமே என்னை கூட்டிட்டு போகாம, வீட்டிடமா வச்சிருந்திருக்கார்... அது தெரியாம நான் எங்கேயோ தொலைஞ்சு போயிருவேன்னு பயந்து மாமா என்ன வீட்ல விட்டுட்டு போறாருன்னு நெனச்சு கிறுக்கி மாதிரி கனவுகோட்டை கட்டிக்கிட்டு இருந்திருக்கேன்... என்ன கூட்டிட்டு போனா அவரு சூட்கேஸ் குறைஞ்சு போகுமா?
"அம்மா அது சூட்கேஸ் இல்ல பிரஸ்டீஜ் என்று மகள் சுரண்ட "
"ப்ச் ஏதோ ஒன்னுடி உங்க அப்பனை குறை சொன்னா, உடனே குறுக்க வந்துருவியே..
"அம்மா பாவம்மா பத்து நாளா உனக்கு போன் போட்டுக்கிட்டே இருக்கார் எடுத்து பேசு..
"ம்க்கும் நான் எதுக்கு எடுத்து பேசணும், இனிமே வீட்டு பக்கம் வராதன்னு சொல்றார் , அவர் தகுதிக்கு ஏத்த மாதிரி பொண்ணு கட்டிப்பாராம் .. கட்டிக்க சொல்லு யாரு வேண்டாம்னு சொன்னா , எவளும் உன் அப்பன என்ன மாதிரி வச்சு கட்டி மேய்க்க முடியாதுன்னு அதையும் சேர்த்து சொல்லுடி.... வாரத்துல ஏழு நாள் வேலைக்கு போறேன் வேலைக்கு போறேன்னு போக வேண்டியது, ராத்திரி கொஞ்ச நேரம் கிடைச்சா, பிரெண்ட்ஸ் கூட ஊர் சோவார போறேன்னு போயிட வேண்டியது.. நடுராத்திரி வந்து சோறு இருக்கா குழம்பு இருக்கான்னு என்ன வந்து உருட்ட வேண்டியது... வேற எவளையாவது இதே மாதிரி உருட்ட சொல்லு எட்டி மிதிச்சிருவா , நாங்க போயி , என் மாமா பசியோட வருவாரேன்னு அந்த ராத்திரி கூட சுடச்சுட தோசை போட்டு , கேட்டுக்கடி சுட சுட தோசை போட்டு குருமா வச்சு அவர் சாப்பிடுற அழகை ரசிச்சுக்கிட்டே இருப்பேன் ...ஆற்றாமையில் வந்தது அத்தனையும் அவள் காதல் செய்த விதம் தான் ..
" என்ன வார்த்தை பேசினார் பார்த்தியா, உன் அப்பன் மட்டும் இந்த வீட்டுக்குள்ள இன்னொரு வாட்டி வரட்டும் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பேன்... என்று அம்சா சாடை போட .. உள்ளே இருந்த அவள் பெற்றவர்களும் சரி மகளும் சரி
"அய்யோ பத்து நாளா இந்த புலம்பலை கேட்க வேண்டியது இருக்கே என்று தலையில் அடித்தனர்... வந்த நேரத்தில் இருந்து இதே ரிப்பீட் மோடில்தான் புலம்பல் வந்து கொண்டிருக்கிறது...
நிறைய காதலித்து விட்டாள் ஏமாற்றம் தாங்க முடியவில்லை பின்னாலேயே வருவான் என்று நினைத்தாளோ என்னவோ? அவன் வரவே இல்லை ஃபோன் மட்டும் வருகிறது அவளுக்கு அதை எடுத்துப் பேச மனமில்லை , போடா மனசு விட்டு போச்சு என்ற நிலையில் அம்சவேணி இருந்தாள்
இது ஆவறதுக்கு இல்லை என்று நினைத்த அருண் மகள், அடித்துக் கொண்டிருந்த ஃபோனை ஆன் செய்து எடுத்து கொண்டு வந்து தாயின் கையில் கொடுத்துவிட்டு திருவிழா கூட்டத்தை வேடிக்கை பார்க்க வீட்டிற்கு வெளியே வந்து விட்டாள்
"ஹலோ ஹலோ அம்சா ", 10 நாள் கழித்து எடுக்கப்பட்ட போனில் அவசரமாக அருண் குரல் கேட்டது ... அம்சவேணி ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள
"அம்சா அம்சா இருக்கியாடி
ம்க்கும் உடனே எடுத்து காதில் வைத்த அம்சவேணி..
"ஓ உங்க பொண்டாட்டி அம்சவேணிங்கிறது வரைக்கும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா மாமா..
"ப்ச் குறை சண்டையை போடாத அம்சா, முக்கியமான விஷயம் பேசதான் போன் போட்டேன்
"என்ன முக்கியமான விஷயம் , பொண்ணு உடனே பாத்துட்டீங்களா, கல்யாண இனிமதானா, இல்ல கல்யாணத்தை முடிச்சிட்டு தான் எனக்கு போன் போட்டு இருக்கீங்களா?
"ப்ச் பேசுறது கேளுடி
"மாட்டேன் , நான் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போக மாட்டேன் மாமா அதான் நீங்களே சொல்லிட்டீங்களே உன்ன புடிக்கலன்னு , இனிமே உங்க கூட வாழுறதுக்காக நான் போராடி என்ன மாமா செய்யப்போறேன்....
"அடியேய் வாய மூடுடி குந்தாணி, நான் பேசுறதை கேளுடி
'ஓ பேசுனா கூட தப்புன்னு உங்க அகராதியில இருக்குதா... பொண்டாட்டி சிரிச்சா தப்பு , யார் கூடயாவது பேசினா தப்பு , வீட்டை விட்டு வெளியே வந்தா தப்பு , சுடிதார் போட்டா தப்பு, மேக்கப் போட்டா தப்புன்னு ஏகப்பட்ட வரிசை வச்சிருந்தீங்க இப்போ பொண்டாட்டி பேசினா கூட தப்புன்னு ஆகிப் போச்சா?
"அம்சா நான் பேச ஒரு ரெண்டு நிமிஷம் டைம் தாயேண்டி
"அப்போ உங்களுக்கு பேசுறதுக்கு கூட நான் டைம் தர்றதில்லை... உங்கள நான் கொடுமை படுத்தினேன்னு சொல்ல வரீங்களா மாமா?
என்ன அனுப்பி விட்டுட்டீங்களே அவ்வளவுதான் இல்ல" என் மீண்டும் அழ ஆரம்பிக்க...
இச் இச் இச் மொச் என்ற முத்த சத்தத்தில் அம்சவேணி அழுகை நின்று
"மாமா உண்மையாவே வேற கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா? படுக்கை வரைக்கும் உங்க சகவாசம் போயிடுச்சா... முத்த சத்தம் எல்லாம் கேட்குது" என்றவள் அறியாமையில் இவனுக்கு அத்தனை கவலையிலும் கெக்கேபிக்கே என சிரிப்பு வந்துவிட்டது... தன்னையே சுற்றும் மனைவிகள் கிடைப்பது எல்லாம் வரம் .. அவனுக்கு அப்படி ஒரு வரம் கிடைத்திருக்கிறது தெரியாமல் இருக்குமா என்ன...
"அடியேய் பட்டு குஞ்சம்; என் குந்தாணி குசலா, இந்த முத்தம் எல்லாம் உனக்கு தாண்டி என்றதும் உதடு துடிக்க அழுது கொண்டிருந்த அம்சவேணி கண்களை விரிக்க
"இன்னும் ஆயிரம் முத்தம் வேணும்னாலும் வாங்கிக்கோ தயவுசெஞ்சு இப்ப மாமா பேசுறத கேக்குறியா ??
"இப்படி நைசா எல்லாம் நீங்க பேச மாட்டீங்களே எதும் தப்பு பண்றீங்களா?? எவ கூடையாவது கண்டபடி பழகிட்டு இருக்கீங்களா...
"ஏன்டி உன் புத்தி இப்படி போகுது,
"இல்ல நீங்க எப்பவும் என்கிட்ட இப்படி எல்லாம் பேச மாட்டீங்களே அதான் முத்தம் அது இதுன்னு பேசினதும் ஆள் மாத்தி பேசுறீங்களோன்னு பயம் வந்துடுச்சு...
"தப்பு செய்றவன் ராத்திரி ஏண்டி உன் முந்தானையில வந்து சுருண்டு கிடக்கணும் ... எவ்வளவு வேலை இருந்தாலும் எந்த ஊருக்கு போனாலும் ராத்திரி உன்கிட்ட தாண்டி வரேன்
"அப்போ ராத்திரிக்கு மட்டும் தான் உங்க பொண்டாட்டியா மத்ததுக்கு எல்லாம் கிடையாதா உங்க கௌரவத்துக்கு நான் குறைச்சல், அதனால தானே நீங்க என்ன வீட்டோடவே வச்சுக்கிட்டீங்க...
"சரி உன்ன அப்படியே அவுத்து விட்டிருந்தா மட்டும் அவ்வளவு பெரிய சிட்டியில நீ எங்க போயிருப்ப ... பக்கத்து கடைக்கு போயிட்டே ரெண்டு நாள் காணாம போன ஆள் நீ
"அது "தலையை சொரிந்தாள் காணாது போன அவளை கண்டுபிடிக்க அவன் பட்ட பாடு, மளிகை கடையில் இருந்து போன் வந்தது
"அருண் சார் உங்க பொண்டாட்டி வீடு தெரிலன்னு அழுதாங்க இப்பதான் கொண்டு போய் விட்டேன் என்று கூற அய்யா சாமி என்று கும்பிடு போட்டான்
"எதுக்கு மாமா எல்லா வீடும் ஒரே மாதிரி கட்டி வச்சிருக்காங்க என்று அவள் வீட்டை குறை சொல்ல
"உனக்கு அடையாளம் தெரிலன்னு சொல்லு இனிமே வெளிய போக கூடாது
ஏன் ஏன் ஏன்??
போக கூடாது அவ்வளவு தான் முடித்து விட்டான் ...
"என் பிரண்ட்ஸ் ஒய்ப் கூட உன்ன பழக விடலாம்னு பார்த்தா, அவங்களோட மைண்ட் செட்டுக்கும் உன் மைண்ட் செட்டுக்கும் செட் ஆகாது, இன்னொன்னு ரவியோட வைஃப் என்னோட எக்ஸ் ... உனக்கு அவ கூட பழகும் போது நான் ஏன் இப்படி இல்லைன்னு யோசிக்க ஆரம்பிச்சு , தாழ்வு மனப்பான்மை வந்துரக்கூடாது நினைச்சுதான் உன்ன என் கூடவே வச்சுக்கிட்டேன் ... இது கூட புரியாம ஏண்டி இப்படி பண்ற
"இதையெல்லாம் நீங்க என்னைக்கு என் கிட்ட சொன்னீங்க
" சொல்லாதது தப்புதான் போதுமா
"அப்ப என்ன பிடிக்குமா
"புடிக்காம தான் ஒரு புள்ள என்ன போல பெத்து வச்சிருக்கியா
"புள்ள பொறக்குறதுக்கும் காதலுக்கும் கல்யாணத்துக்கும் சம்மந்தமே இல்லயே மாமா
"ப்ச் நான் பத்து நாளா சாப்பிடாம நாய் மாதிரி தெருத்தெருவா அலையிறது உனக்கு கவலை இல்லை அப்படித்தானே ??
மாமா என்ன ஆச்சு, குரல் ஏன் உடைஞ்சு வருது எங்க மனைவி ஆறுதல் மொழி கேட்ட பிறகுதான் அவனுக்கு கண் திறந்த உணர்வு
என்னதான் நண்பர்கள் புடைசூட வாழ்ந்தாலும் மனைவியின் ஆதரவும் அணைப்பும் விடுங்க பார்த்துக்கலாம் என்ற வார்த்தையும் கொடுக்கும் தன்னம்பிக்கையை வேறு எதுவும் கொடுத்து விடாதே
"அம்சா ரெண்டு பேர் பிள்ளையையும் கடத்திட்டாங்க
"அய்யோ இது எப்ப ???
"பத்து நாள் ஆகுதுடி, அடுத்து நம்ம மக தான்...
அய்யய்யோ என்ன மாமா இப்படி சொல்றீங்க...
"அதனாலதான்டி பயந்து உன்ன அங்க போக சொன்னேன்... ஆனா இப்போ கடத்தல்காரன் அங்க தான் வந்து இருக்கான் போல .. நம்ம புள்ளைய கடத்த... பாப்பா பத்திரமா இருக்காளா?
"மாமா பாப்பா திருவிழா கூட்டத்தை பார்க்க போறேன்னு வெளிய போனாளே இருங்க நான் போய் மகளை பார்க்கிறேன்" என்று அம்சவேணி பதறி அடித்து வெளியே வர ...
அவள் மகள் கையில் வைத்திருந்த பலூன் மட்டும் தான் அந்த கூட்டத்தில் கிடந்தது, மகளை காணவில்லை
இன்னும் தொடருமா அஃது?? ..