கழிமுள்ளி நெஞ்சுக்காரி-26

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-26

கழிமுள்ளி-26

அடுத்த நாள் காலேஜில் நதியாவுக்காக காத்திருந்த பிரண்ட்ஸ் அவள் வரவில்லை என்றதும் என்னாச்சு என்று சந்தேகத்தோடு உட்கார்ந்திருந்தனர்.

ஒருவேளை சார்கூட வந்து கிளாசுக்குள்ள போயிட்டாளோ? என்று அங்கேயும் போய் பார்த்துட்டு அவளுக்குப் போன் பண்ணினார்கள்.

அவள் போன் சுவிட்ச்டு ஆஃப் என்று வந்தது. அதில் விஜய்க்கு சந்தேகம் வந்தது. 

‘என்னாச்சு நேத்து அரவிந்தைப் பார்த்துட்டு வந்ததுல ஏதும் பிரச்சனையாகிடுச்சோ?’ என்று நினைத்தவன் உடனே பிரண்டஸ்ஸோடு ரமேஷைப் பார்க்க போனான். அப்போதான் ப்யூன் “இன்னைக்கு பிரின்சிபால் சார் லீவுப்பா நாளைக்குத்தான் வருவாராம்” என்ற தகவலைச் சொன்னான்.

விஜய் உனக்குத் தெரியாமல் ஏதோ நடக்குது என்று நினைத்தவன் உடனே தினேஷை மட்டும் கூப்பிட்டான்.

முகேஷோ அவனைப் பார்த்து முறைத்தவன் “ஏன்டா எங்களுக்குத் தெரியாமல் நீங்க இரண்டுபேரு மட்டும் எப்பவும் தனியாவே ஏதோ செய்யிறீங்க. எனக்கென்னமோ டவுட்டா இருக்கு?எங்களை சேர்த்துக்கமாட்டீங்கன்னா நாங்க எதுக்குடா பிரண்ட்ஸுன்னு இருக்கோம்”என்று நேராகவே விஜயிடம் கேட்டுவிட்டான்.

“இவன் ஒரு சந்தேகத்துக்குப் பிறந்தவன். நதியா காலேஜிக்கு வரலை என்னென்னு பார்த்துட்டு வருவோம்னு அவனைக் கூப்பிட்டேன்டா. நீயும் வர்றியா?”

“கிளாஸுக்குப் போகவேண்டாமா?”

“நான் வரலை. நீங்க இரண்டுபேரும் போங்க.நாங்க நதியைப் பார்த்துட்டு வர்றோம். எல்லோருமா போனா சந்தேகம் வரும் புரியுதா”

“சரி சரி இப்போ புரியுது. நீங்களே போயிட்டு எங்களுக்கு தகவலைச் சொல்லுங்க”

“இதைத்தான்டா முதல்லயே சொன்னோம்” 

“ஹீஹீ அது எங்கக்கிட்ட ஒன்னும் சொல்லாமல் போனதும் கோபம் வந்துட்டு மச்சீ”

“உன்னை வந்து மிதிக்கிறேன் இருடா”என்றவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு நேராக இப்போது நதியாவின் வீட்டுக்கு வந்தான்.

அங்கே அவங்க வீட்டு முன்னாடி இரண்டு மூணு கார் நின்றிருந்தது. அதைப் பார்த்ததுமே விஜய “ஏதோ நடக்குதுன்னு நினைச்சது சரியாகப் போச்சுது பாருடா” என்று தினேஷிடம் சொன்னவன் உள்ளே போகலாமா?போகக்கூடாதா? என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அவங்க ஏதாவது பேசிட்டிருந்து நம்ம உள்ளப்போயிட்டா சங்கடமா இருக்காது என்று நினைத்தவன், நதியா ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது நர்மதாகிட்ட வாங்கியிருந்த நமபர் ஞாபகத்துக்கு வந்தது.

‘அவளுக்கு ஒரு மெசேஜ் போட்டுப்பார்ப்போம். அவள் உடனே ரெஸ்பான்ஸ் பண்ணினா என்ன நடக்குதுன்னு கேட்டிடலாம்’ என்று நினைத்தவன் உடனே “ஹாய்” என்று மெசேஜ் அனுப்பியிருந்தான்.

அதை அவள் ஒரு பத்து நிமிஷமாக பார்க்கவேயில்லை. இதுக்குத்தான் இவளுக்கு மெசேஜே பண்ணக்கூடாதுன்னு இருந்தேன். இவளுக்கு நதி எவ்வளவோ பெட்டர் என்று நினைத்தான். அதற்குள் ஞஅவளிடமிருந்து போனே வந்துவிட்டது.

அவன் எடுத்து காதில்தான் வைத்தான் “என்னடா குரங்கே நதி எதுக்கு காலேஜ் வரலைன்னு தெரியணுமா?சொல்லு”என்று நேரடியாகவே கேள்வியைக் கேட்டாள்.

“ம்ம்ம் என் நம்பர் எப்படி உனக்குத் தெரியும்”என்று முக்கியமான் கேள்வியைக் இப்போ கேட்டு வைத்தான்.

“ஆமா பெரிய இளவரசரு நம்பரு தெரியாமல் இருக்கிறதுக்கு. உன்கிட்டயே என் நம்பர் இருக்கும்போது என்கிட்ட உன் நம்பர் இருக்காதா?”

“அதுசரி ஆமா என்ன வெளியே எக்ஸ்ட்ரா கார்லாம் நிக்கிது”

“ஆமா நீ எப்போ பார்த்த? நீ வீட்டுக்கு வெளியவா நிக்கிற?”

“ம்ம்ம் இப்போதான் வந்தேன். என்னடி நடக்குது உங்க வீட்டுல”

“அதுதான் எனக்கும் தெரியல. மிஸ்டர் ரமேஷ் ஏதோ வில்லன் வேலை பண்றாரோன்னு எனக்கும் சந்தேகமாக இருக்கு. நதியை பொண்ணுப்பார்க்க வந்திருக்காங்க”

“என்னது பொண்ணு பார்க்கவா?ஏன்டி எங்களுக்கெல்லாம் சொல்லவேயில்லை”

“உன்கிட்ட எதுக்குடா சொல்லணும். எங்கக்கிட்டயே நேத்து நைட்டுத்தான் சொன்னாரு”

“நதிக்கு இதுல விருப்பமாடி”

“அவா விருப்பத்தையெல்லாம் கேட்கிற காலமெல்லாம் போயாச்சு. இனி அவளுக்கு நல்லது எதுன்னு அப்பாவும் அம்மாவும் பார்த்து செய்துக்குவாங்களாம். ஆமா நீ எங்க நிக்கிற?உன் நால்வர் படையோட வந்திருக்கியா?இல்லை தனியாவா?”

“நானும் தினேஷும் வந்திருக்கோம். ஆமா மாப்பிள்ளை யாராம்”

“அது அப்பாவோட பிரண்டாம். அயர்லாந்துல செட்டில்டாம். அப்பா மாதிரியே இன்ஞ்சினியரு படிச்சவருதான். அவங்க மகனும் இன்ஞ்சினியர்தானாம். மாப்பிள்ளை பார்க்க நல்லாதான் இருக்கான்”

“அப்போ நீ கல்யாணம் பண்ணிக்கயேன்டி”

“என்னு பொண்ணுப்பார்க்க வந்தா கட்டிக்க ரெடி. இப்போ நதியைல்ல பார்க்க வந்திருக்காங்க”

“நதி என்ன சொல்லுறா?”

“என்னத்தை சொல்லுவா?ஒன்னுமே சொல்லலை. அமைதியா இருக்கா”

“ஓஓஓ”

“என்னாச்சு ஓஓவெல்லாம் வருது?”

“இப்போ நதியை பார்க்க முடியுமா?”

“வாய்ப்பில்லை. என்னைய வேணும்னா பார்க்க முடியும்”

“உன்னைய பார்க்க எதுக்கு வீட்டுக்கு வரணும். நாங்க வீட்டுக்குள்ள வரலாமா?”

“வரலாம்தான் ஆனால் வரவேண்டாம்”

“ஏன்?”

“ம்ம்ம். ஏன்கனவே வந்திருக்க குடும்பம் துளைச்சு துளைச்சு கேள்வியா கேட்கிறானுங்க. இப்போ நீங்க உள்ள வந்தா அதுக்குவேற கேள்வி வரும். அப்பா பாவம்ல”

“உங்கப்பா ரொம்ப பாவம்தான்மா ரொம்ப பாவம்தான்”

“ஓகே தேங்க்ஸ் தகவல் சொன்னதுக்கு”

“உன் தேங்க்ஸ் எனக்கு வேண்டாம் நீயே வைச்சுக்க”

“ஓகே பை “என்று போனை வைத்துவிட்டான்.

“என்னடா இது?பொண்ணெல்லாம் பார்க்க வந்திருக்காங்க? நம்ம என்னமோ நினைச்சோம்,ஆனால் பிரச்சனை வேற மாதிரி போகுது. இப்போ என்ன பண்றது?”

“ஒன்னும் பண்ணவேண்டாம். பிரச்சனைக்கு காரணமானவங்களே அதை சரி செய்வாங்க. நம்மலால என்ன பண்ணமுடியும் சொல்லு”

“அதுவும் சரிதான் வாடா நம்ம காலேஜ்ல போய் இருக்க மீதி லெக்ட்சர்ஸையாவது அட்டெண்ட் பண்ணுவோம்”

“உள்ள விடுவாங்களா?”

“அதெல்லாம் விடுவாங்க வா போகலாம்”என்று கிளம்பிவிட்டனர்.

இங்கே நதியா பொம்மை மாதிரி உட்கார்ந்திருந்தாள். அவக்கிட்ட வந்தவங்க கேள்விக் கேட்க அதுக்கெல்லாம் கீதாஞ்சலி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பொண்ணு ரொம்ப வெட்கப்படுதுபோலன்னு நினைத்தனர்.

அவளுக்கு மாப்பிள்ளையை பார்க்கும்போதுதான் அப்படியே குற்றவுணர்ச்சியாகவும்’ இவனா நமக்கு வருங்காலமா வரப்போறான் என்று ஒருவிதமான குழப்பமாகவும் இருந்தது. 

ஆனாலும் இது அப்பாவுடைய முடிவு நல்லதாகத்தான் இருக்கும். எவனை நம்மத் தலையில் கட்டினாலும் கட்டிக்கிட்டு, எங்கேயாவது கண்காணத இடத்துக்குப் போயிடவேண்டியதுதான் என்று மனசைக் கல்லாக்கிக்கொண்டாள்.

மாப்பிள்ளை பையன் வேற அவக்கிட்ட பேச முயன்றான். அவளோ அதுக்கும் அவங்கப்பாவைப் பார்த்து வைக்க,அவரோ நிச்சயதார்த்தம் அடுத்தவாரம் வைச்சிருக்கோம்ல அது முடிஞ்சதும் இரண்டுபேரும் தாராளமா பேசிக்கங்க. இப்போ வேண்டாம். எப்படியும் இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம் முடிஞ்சிடுமே. அப்புறம் உங்கக்கூட அயர்லாந்துக் கூட்டிட்டுப்போய் எவ்வளவு பேசணுமோ அவ்வளவு பேசிக்கோங்க என்று சிரித்துக்கொண்டே சொல்லி அப்படியே அவர்களை அனுப்பி வைத்துவிட்டார்.

அவர்கள் போகும் வரைக்கும் ஏதோ இறக்கை இரண்டையும் வெட்டி வீசிட்டு பறக்கவிடாது பிடித்து வைத்திருக்கும் ஒரு உணர்வு நதியாவுக்குள் இருந்தது. அவர்கள் போனதும்தான் கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்தாள்.

 அவர்கள் போனதுமே ரமேஷ் நதியாவிடம் வந்தவர் “நதிம்மா இங்கப்பாரு. நாளையில் இருந்து என்கூடவே காலேஜிக்கு வா, நானேகூட்டிட்டுப்போயிட்டு கூட்டிட்டு வர்றேன். உன் பிரண்ட்ஸ்கிட்டக்கூட பொண்ணுப் பார்த்துட்டு போனதையோ, நிச்சயம் நடக்கப்போறதையோ வாய் திறக்கக்கூடாது புரியுதா?”

அவளோ ஏன்பான்னு ஒரு வார்த்தைக்கூட எதிர்த்து கேட்காமல் சரிப்பா என்று தலையாட்டிவிட்டாள்.

நர்மதாவுக்குத்தான் மனசே கேட்கலை. “இந்த நதியா ஏன் இப்படி மாறிட்டா?எதுக்கெடுத்தாலும் அப்பா சொன்னதும் தலையாட்டுறா இது சரியில்லையே. அந்த அயர்லாந்துக்காரனையும் அவன் குடும்பத்தையும் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை. இந்த அக்காவுக்கு எப்படித்தான் பிடிச்சதோ தெரியலை. பார்க்க பெரிய குடும்பா இருந்தாலும் ஏதோ ஒன்னு அவனுங்ககிட்ட மிஸ்ஸிங். ஆத்தி அவனுக்கு வேற தம்பி இருக்கானே அவனுக்குப் பிடிச்சு நம்மளை கட்டி வைச்சிருவாங்களோ?அதுதான் அவன் நம்மளை உத்து உத்துப் பார்த்திட்டிருந்தானோ? இது நடக்கக்கூடாதே”என்று நினைத்தவள் நதியாவிடம் போய் பேசினாள்.

“நதி”

“ம்ம்ம் சொல்லு”

“இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லு”

அவளோ அவளை நிமிர்ந்து பார்த்தவள் “ என்ன லூசுத்தனமா பேசிட்டிருக்க?எதுக்கு நிறுத்தணும்?”என்று கேட்டாள்.

“அந்தக் குடும்பம் உனக்கும் செட்டாகாது எனக்கும் செட்டாகாது”

“எனக்கு செட்டானா போதும். உனக்கு செட்டாகாணும்னு இல்லை”

“ஹல்லோ நதியா மேடம் உங்கப்பாவோட ப்ளானே அதுதான் அக்காவையும் தங்கச்சியையும் ஒன்னா ஒரே இடத்துல ஒரே குடும்பத்துல கட்டிக்கொடுக்கணும்னுதான் ப்ளானே புரியுதா?இதுக்கு நான் ரெடியில்லை”

“ஏன் ரெடியில்லை. உனக்கும் இது கடைசி வருஷம்தானே இரண்டுபேருக்கும் ஒன்னா கல்ய்ணமாகி ஒரே வீட்டுக்கு போறதுல உனக்கென்ன நஷ்டமும் கஷ்டமும் வந்திடப்போகுது”

“அதுக்கு முதல்ல எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கணும். உண்மையை சொல்லு உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு. உன் டேஸ்டெல்லாம் எனக்குத் தெரியும்.அந்த அரவிந்தை உன்னால மறக்கமுடியுமா?ஏன் அப்பா அரவிந்துக்கிட்ட பேசி அவனையே உனக்கு கட்டிவைக்ககூடாது?எனக்கென்னமோ இந்த அரவிந்த் திடீர்னு உன்கிட்ட அப்படி பேசியதுல ஏதோ தப்பாயிருக்குன்னு மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது”

“அந்தப்பட்சியை பிடிச்சு சூப் வைச்சிக் குடிச்சிருவேன்னு சொல்லு. இங்கப்பாரு அப்பா என்ன சொல்லுறாங்களோ அதுதான் இனி என் முடிவு”

“சரிதான்”

“என்ன சரிதான்”

“நீ கண்ணை மூடிக்கிட்டு பாழுங்கிணத்துல விழணும்னு முடிவு பண்ணிட்டியே அதுக்குத்தான் சரின்னு சொன்னேன்”

“ஏற்கனவே பாழுங்கிணத்துல விழுந்து எழுந்து வந்ததுனால இனி விழமாட்டேன் அப்படிங்கிற நம்பிக்கையிலதான் சம்மதம் சொன்னேன். இனியாவது உன் லெக்டசரை நிறுத்துவியா?” 

“நோ இனிதான் முக்கியமான லெக்ட்சரே இருக்கு”

“அப்போ தனியா புலம்பிட்டிரு எனக்கு வேற வேலையிருக்கு”என்று போய்விட்டாள்.

நர்மதா தனியா யோசிச்சிட்டிருந்தாள். அப்போதான் விஜய் வந்து மெசேஜ் பண்ணினது அவளுக்கு ஞாபகம் வந்தது. 

ஐய்யய்யோ அவன்கிட்ட இவளை பொண்ணு பார்க்க வத்ததை வேற சொல்லிட்டோமே. இப்போ என்ன பண்றது என்று யோசித்தாள். இதை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

அரவிந்த் தனது டேபிளில் காலைத் தூக்கிப்போட்டு ஹாயாக உட்கார்த்து மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டிருந்தான்.

‘இன்னைக்கு எதுக்கு நதியா வரலை?அப்படியே என் மாமனாரும் சேர்ந்து வராமல் இருக்காரே!இதுல ஏதோ உள்குத்து இருக்குதோ?’என்று யோசித்தவன் அப்படியெதுவும் நடந்தா நம்ம என்ன செய்யலாம் என்றும் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.

அவன் என்ன நினைச்சானோ அதே தகவல்தான் அவனுக்கும் கொஞ்சநேரத்துல வந்து சேர்ந்தது.

‘ஆஹா நம்ம மூளைக்கு வேலை வந்திடுச்சிப்போல இறங்கி செய்திடுவோம். இதுக்குமேலயும் சும்மாயிருந்தால் அது இந்த அரவிந்துக்கு அவமானம்!இதை சும்மாவிடக்கூடாது’ என்று ஒரு முடிவெடுத்துவிட்டான்.

அடுத்தநாள் நதியா காலேஜிக்கு ரமேஷோடு போனாள். அவர்கள் வராண்டாவில் அப்படியே நடந்துக்கொண்டிருக்க அவர்களுக்கு எதிராக அரவிந்த் சிரித்தமுகமாக வந்தான்.

“ஹலோ சார் நேத்து வீட்டுல விசேஷமெல்லாம் நல்லபடியாக நடந்துச்சா?மாப்பிள்ளைக்கு பொண்ணை பிடிச்சிருக்கா? கல்யாணத்துக்கு எங்களையெல்லாம் கூப்பிடுவீங்களா?”என்று சிரித்துக்கொண்டே கேட்டவன் பக்கத்தில் நின்ற நதியாவை பார்த்தான்.

அவளுக்கோ இவனுக்கு இதுக்குள்ள யாரு விஷயத்தைச் சொன்னது. இவன் என்ன இப்படி பார்த்து வைக்கான் என்று நினைத்தவளுக்கு அவனது கண்ணைப் பார்க்க முடியாது முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவளுக்கே இப்படியென்றால் ரமேஷுக்கு சொல்லவா வேணும். அப்படியே அதிர்ச்சியில் அவனை ஏறிட்டுப்பார்த்தவர் “கண்டிப்பா அரவிந்த் சார் நம்ம க்லேஜ்ல எல்லோரையும் இன்வைட் பண்ணுவேன் சார். என் பொண்ணோ கல்யாணம், அதுக்கு உங்களைக் கூப்பிடாமல் இருப்பேனா?”என்று ஏதோ சொல்லணும்னு சொல்லி சமாளித்தார்.

“நீங்க கூப்பிடலைன்னாலும் நாங்க உங்க வீட்டு பங்க்ஷனுக்கு வரணும்ல சார். அதுதானேமுறை. நம்ம பிரின்சிபாலோட பொண்ணு கல்யாணத்துக்கு நானில்லாமலா. கண்டிப்பா வருவேன் சார்” 

“கண்டிப்பா வாங்க” என்றுவிட்டு ரமேஷ் நகர்ந்துவிட நதியா கிளாஸுக்குப் போக நடந்தாள். எங்கே அரவிந்த் நதியாகிட்டா ஏதாவது பேசுவானோ என்று ரமேஷ் திரும்பிப் பார்த்துக்கிட்டேதான் போனார்.

அவர் பிரின்சிபால் ரூமுக்குள்ள நுழையவும் நதியா வேகமாக நடந்தாள்.

“என்ன அம்மணி மாப்பிள்ளையெல்லாம் பிடிச்சிருக்கா?”என்று அவள் காது பக்கத்தில் போய் கேட்டான்.

அதைக்கேட்டதும் நெஞ்சில் கைவைத்து திடுக்கிட்டவள் அவனது முகத்தைப் பார்த்தாள்.

“அதில்லைங்க அம்முணி நீங்க நினைச்சா மனசை மாத்திப்பீங்க, அடுத்த கல்யாணம் பண்ணிப்பீங்க. நாங்க அப்படிங்கள அம்முணி நாங்க ப்ரேக்கப் பண்ணினாலும் காதலிச்சவளையேதான் மனசுக்குள்ள இன்னமும் நினைச்சிட்டிருக்கோம். அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகலைங்க அம்முணி.எப்படிங்க அம்முணி உங்க கல்யாணத்துக்கு என்னை கூப்பிடுவீங்களா?இல்லை நானே வரணுமா?”என்று கேட்டவனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து கடுமையிருந்தது.

அந்த முகம் அவளுக்கு புதுசாக இருந்தது. எப்பவும் சிரித்துக்கொண்டே பேசுபவனின் கடுமை முகத்தைப் பார்த்ததும், அப்படியே உறைந்துப்போய் நின்றவளுக்கு பேச்சேவரவில்லை. 

அதைப்பார்த்தவன் “என்ன அம்முணி அமைதியாகிட்டீங்க. வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் பண்ணுவீங்க. இப்போ என்ன வாயில கொழுக்கட்டையவா வைச்சிருக்கீங்களா?பதில் சொல்லுங்க அம்முணி”என்று கொஞ்சமாக அவள் பக்கத்தில் நெருங்கி வந்தான்.

அதில் கொஞ்சம் மிரண்டுபோனவள் வேகமாக அவனிடமிருந்து விலகி ஓடிப்போனாள்.

அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவன் கண்கள் இறையைத் தூக்கத்துடிக்கும் கழுகைப்போல அவளை பார்த்திருந்தது.

அரவிந்த் என்னடா இது?ப்ரேக்கப்புன்னு சொன்ன?இப்போ அவளைத் தூக்கிட்டுப்போக நினைக்கிற?அட குழப்பம் பிடிச்சவனே!