கழிமுள்ளி நெஞ்சுக்காரி-3
கழிமுள்ளி-3
அரவிந்தனுக்கு அவங்க ஐந்து பேரையும் பார்த்து ஒரு பக்கம் சின்னபிள்ளைங்க என்று நினைத்து சிரிப்பு வந்தாலும்,அவங்க நட்பைப் பார்த்து பொறாமையும் வந்தது.
அதனால் வெளியே போனதுக்கு அப்புறமும் அவர்களை அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டுதான் போனான்.
அவர்கள் பிரின்சிபால் ரூமைவிட்டு வெளியே வரும்போது மட்டும்தான் ஒரு மாதிரி சோகமாக வந்தனர்.
அவங்களோட பேரண்ட்ஸ் வெளியே போனதும் ஜாலி மோடுக்கு மாறிட்டாங்க.
அதுவும் நதியா நடுவுல நடக்க இரண்டுபக்கமும் நான்கு பிரண்டஸும் அப்படியே பாடிகார்ட்ஸ் மாதிரி நடந்துவர்றதைப் பார்த்து அவனுக்கே புன்னகை மெல்லிய பூங்காற்றாக அவனது உதட்டை வருடிச்சென்றது.
நெடுநாளைக்குப் பின் அவனது முகத்தில் புன்னகையைப் பார்த்த வெற்றிவேல் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“அரவிந்த்”என்று தோளைத் தட்டிக்கூப்பிட்டார்.
அதில் உணர்வுக்குவந்தவன் என்ன என்பதுபோல் அவரைப் பார்த்து வைத்தான்.
“உண்மையிலயே உனக்கு அடிபட்டதுன்னு தெரிஞ்சதும் பதறிப்போயிட்டேன். நீ அப்படியெல்லாம் அடிதடிக்கு போற ஆளில்லையே. என்னாச்சோ என்றுதான் பிரின்சிபால்கிட்ட விசாரிச்சிட்டு ஹாஸ்பிட்டல் வந்தேன். அங்க என்னடான்னா உனக்கு நெத்தியில தையல் போட்டுட்டு இருக்காங்க. அச்சோ இதென்னடா புதுசா நமக்கு வந்த சோதனைன்னுதான் பயந்தேன். நல்லவேளை யாரோ செய்த பிரச்சனையில நீ அடிவாங்கியிருக்க. இதுவும் நல்லதுக்குத்தான் உன் பொறுமையவே சோதிச்சிருக்குல்ல. அந்த ஐஞ்சு பேரும் ஏற்கனவே நம்ம காலேஜிக்கு பெருத்த தலைவலியை குடுத்திட்டுத்தான் இருக்காங்க. எப்போடா படிச்சு முடிச்சுட்டு வெளிய போவாங்கன்னு கருக்கு. உன்மேல கைவைச்சதுக்கு சீட்டைக் கிழிச்சுத்தான் வெளிய அனுப்பணும்னு இருந்தேன். ஆனால் ரமேஷ்குமார் சாருக்காகவும் கீதாஞ்சலி மேமுக்காகவும்தான் பொறுமையா போனேன். அதுவும் நீ சொன்னதுனாலதான் அவங்களை சும்மாவிட்டேன். நதியா இருக்காளே சரியான அறுந்தவாலு. பையனா பொறக்கவேண்டியது பொண்ணா பிறந்துட்டான்னு ரமேஷ்சாரே அடிக்கடி சொல்லுவாரு”என்று பேசிக்கொண்டு வந்தார்.
“அவங்களை விடுங்க மாமா. சின்னபிள்ளைங்க இப்போ தப்புன்னு தெரியாமல் ஏதாவது செய்துவைப்பாங்க. அப்புறம் அது தப்புன்னு மனசுக்குபடும்போது அதை அவங்களேதிருத்திப்பாங்க”என்று பெரிய மனுஷன் போல பேசியவனை திரும்பிப் பார்த்தார்.
“அதுதானே மாமா யதார்த்தம்”என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாது அமைதியாக வெளியே பார்க்க ஆரம்பித்தான்.
அவனைப் பார்த்த வெற்றிவேலுக்குத்தான் ஒருமாதிரியாக இருந்தது.
இந்த சின்ன வயசுலயே இவ்வளவு பொறுமையா ஞானி மாதிரி பேசுறானே!என்ன இவன் இவ்வளவு அம்மாஞ்சியா இருக்கான் என்றுதான் நினைத்து வருத்தப்பட்டார்.
இதுக்குமேல நம்ம என்ன பேசினாலும் அவன்கிட்டயிருந்து பதில் வராதுன்னு தெரியும் என்பதால் அமைதியாக வீட்டுக்கு வந்தனர்.
அவன் வீட்டுக்குள்ளே நுழையும்போதே அவனைப் பார்த்த வெற்றிவேலின் மனைவி சுகந்தி ஓடிவந்து “என்னாச்சு அரவிந்த் நெத்தியில கட்டுப்போட்டிருக்கு?”என்று பதறிக்கேட்டாள்.
“அது ஒன்னுமில்லை அத்தை அங்க காலேஜ் பசங்க சண்டையில நான் குறுக்கப்போயிட்டேன். அதுல நல்ல வாங்கியும்கட்டிக்கிட்டேன். மூணு தையல் போட்டிருக்கு”என்று எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் பொறுமையாகச் சொன்னான்.
ஆனால் அதைக்கேட்ட சுகந்தியோ பதறி துடித்துவிட்டாள்.
“என்ன அரவிந்த் இப்படி சொல்லுற?நீ அவங்களைக் கவனிக்கலையா?சண்டைப்போடுறாங்கன்னு தெரிஞ்சா ஒதுங்கியிருக்கலாம்ல. இப்போ பாரு எவ்வளவு அடிபட்டு தையல் போட்டிருக்காங்க”என்று திட்டிக்கொண்டே அவனது கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு உட்காரவைத்தாள்.
இப்போது வெற்றிவேலைத் திரும்பிப் பார்த்து “அந்த சண்டைப்போட்ட ஸ்டூடன்ட்ஸ்ஸை சும்மாவா விட்டீங்க. அவங்க சீட்டைக் கிழிச்சு வெளிய அனுப்புங்க. இப்போ அண்ணி கேட்டால் என்ன பதில் சொல்லுவீங்க?இப்படியா உங்க காலேஜை மோசமா நடத்துவீங்க?”என்று திட்டினார்.
அதைக்கேட்ட வெற்றிவேலோ “உனக்கு என்னைத் திட்டுறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சா விடமாட்டியே. அப்படியெல்லாம் என் காலேஜ் ல்டூடன்ட்ஸ் இல்லை. ஏதோ சின்னபசங்க சண்டை அவ்வளவுதான். இதுல அரவிந்த் போய் மாட்டிக்கிட்டான். அதனால நான் உன்கிட்ட மாட்டிக்கிட்டேன். நீ வேற எதையாவது பேசாத”என்று எரிச்சலில் பேசினார்.
அதானே நான் பேசிட்டாமட்டும் இவருக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்திரும். காலேஜ்ல மட்டும் ஒன்னும் சொல்லமாட்டாங்க என்று முணுமுணுத்தவாறே அரவிந்த் தலையை தடவிக்கொடுத்தாள்.
“இரு உனக்கு சூடா குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்”
“இல்லை அத்தை நான் ரூமுக்குப் போறேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று போய்விட்டான்.
அவன் போவதையே பார்த்திருந்த இருவருக்கும் மனசு வலித்தது. இவன் எப்போதான் வாயைத்திறந்து தனக்கானதை பேசுவான்னு தெரியலையே. இப்படியா இருந்தா எப்படி?என்று நினைத்து பெருமூச்சுவிட்டனர்.
அரவிந்தோ தன்னுடைய ரூமுக்குப் போய் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான்.
அவனது நெற்றியில் பட்டக் காயத்தை தடவிப்பார்த்தவன் லேசாக சிரித்துக்கொண்டான். அப்போது அவனுக்கு நதியாவின் ஞாபகம்தான் வந்தது.
சரியான அவசரக்குடுக்கைப்போல. எதை எப்படி செய்யணும்னு யோசிக்கறதேயில்லை. டப்புடிப்புன்னு செய்துட்டு அதைக் கண்டுக்காமலயே போறது. சரியான ராவடி ரவுடி போல. ஆனால் அவளுக்குகூட இருக்க பிரண்ட்ஸுங்க அதுக்குமேல. அவ பக்கத்துலயே ஒருத்தன் நின்னுட்டிருந்தானே. அவன் ஒன்னுமே செய்யாத என்னையவே முறைக்கிறான். அவன் சரியான முசுடா இருப்பான்போலிருக்கு. இத்தனை நாளும் இவங்களை எப்படி கவனிக்காமல் இருந்தேன?” என்று யோசனையோடு இருந்தவனுக்கு உடல் சோர்வைக் காட்டவும் அப்படியே கட்டிலில் சாய்ந்துப் படுத்துவிட்டான்.
அவனது மூளைக்குள் இப்போது அவனை அறியாமலயே என்னென்னமோ மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்க,அப்படியே கண்ணை மூடியவன் தூங்கிவிட்டான்.
அவனுக்கு சூடாக சூப்பு போட்டு எடுத்துட்டு வந்த சீகந்தி அவன் தூங்கிவிட்டதைப் பார்த்துவிட்டு “அச்சோ பிள்ளை ஒன்னும் சாப்பிடாமலயே தூங்கிட்டானே!”என்று வருத்தப்பட்டவர் அவனது தலையைத் தடவிக்கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அவள் கீழேவரும்போது அவளது மகள் திஷா காலேஜ் போயிட்டு வந்து விசயத்தைக் கேள்விப்பட்டு அவங்கப்பா பக்கத்திஸ் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவள் சுகந்தி திரும்பி வருவதைப் பார்த்தாள்.
“என்ன மம்மீ உன் செல்ல மருமகனுக்கு பணிவிடை செய்து முடிச்சாச்சா?”என்று நக்கலாகக் கேட்டாள்.
“எதுக்குடி இப்படி நக்கலாகக் கேட்கிற?”
“பின்ன என்ன மம்மீ உன் மருமகன் இங்க வந்த இந்த மூணுமாசத்துல எங்களை கண்டுக்காமலயே சுத்துறீங்கள்ல அதுதான் கேட்டேன்”
“உங்களையும் கவனிக்கத்தான்டி செய்யிறேன். ஏன்டி அவன்கிட்ட பேசாமல் நீங்கதானடி ஒதுங்கிப்பேறீங்க. அப்புறம் அவனைக் கவனிக்கிறேன்னு பொறாமை படுறீங்க. அவன் நம்ம வீட்டுப்பையன்டி”
“க்கும் நம்ம வீட்டுப் பையனாம் நம்ம வீட்டுப்பையன். உன் மருமகன் அப்படியா நினைக்கிறான். என்கிட்டயும் அண்ணன்கிட்டயும் ஒட்டவேமாட்டுக்கான். ஏதோ அவன் பெரிய நல்லவன் மாதிரியும் நாங்க ஏதோ அடாவடி மாதிரியும் பார்க்கிறான்”
“ஏய் அவன் உனக்கு மூத்தவன் ஒன்னு அத்தான்னு கூப்பிடு இல்லை அண்ணன்னு கூப்பிடு”
“இரண்டும் கூப்பிடமுடியாது”
“அப்போ மச்சான்னு கூப்பிடு”
“ஐய்யே உன் மருமகனையெல்லாம் மச்சான்னுக்கூப்பிடமுடியாது”
“ஏன்டி? அவனே பாவம்?”
“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். அவன் பாவம்தான் பாவம்தான்.ரொம்ப ரொம்ப அம்மாஞ்சி.அந்த அம்மாஞ்சிக்கு ஏத்தவ நான் இல்லை. என்ன விட்டுறும்மா”
“அடியேய் நீயே கட்டிக்கணும்னு சொன்னாலும் அரவிந்த் வேண்டாம்னுதான் சொல்லுவான். உனக்கு ரொம்பத்தான் ஆசை”
“எனக்கெல்லாம் உன் மருமகனைக் கட்டிக்கணும்னு ஆசையெல்லாம் இல்லை. இவனெல்லாம் என்னத்தை ஜப்பான்ல போய் படிச்சுட்டு வந்தான். இப்படி முகத்தை வைச்சிக்கிட்டு சுத்தவா. அங்கபோய் படிச்சிட்டு கடைசில எம்.பீ.ஏ படிக்க அதுவும் பாதியில படிக்க நம்ம க்லேஜுக்கு வந்திருக்கான். இதுல நான் போய் இவன் பின்ன்டி மச்சான் அத்தான்னு போகணுமா. ஏற்கனவே உன் மருமகனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். நீ ரொம்பாசைப்படாத. அவனை ஒழுங்கா படிப்பை முடிச்சிட்டு இங்கிருந்து போகச்சொல்லு போதும். நான் இலண்டன் போய் என் மெடிக்கல் படிப்புல மேல படிக்கப்போறேன்.க்கும்”என்று முகத்தை வெட்டிக்கிட்டுப் போனாள்.
அதைக்கேட்ட சுகந்திக்குத்தான் கடுப்பேறியது. வெற்றிவேலிடம் திரும்பியவள் “உங்க மக எப்படி பேசிட்டுப்போறா பாருங்களேன். அரவிந்தைக் கல்யாணம் பண்ணிக்க எத்தனைபேரு போட்டி போடுறாங்க. ஆனா இவனென்ன இப்படி சொல்லிட்டுப்போறா. அவனை மாதிரி நல்லபையன் இருக்கானா என்ன?”என்று கேட்டாள்.
அவளே ஏறயிறங்கப் பார்த்த வெற்றிவேல் “அவன் என் தங்கிச்சிப் பையன், உனக்கு அண்ணன் பையன். அவன் நம்ம சொந்தக்காரன். இதை வைச்சிட்டு கல்யாணம் பண்றதுக்கெல்லாம் பேசமுடியாது சுகந்தி. அவங்க அவங்களுக்குன்னு பிடிச்சிருக்கணும். அதுதான் திஷா சொல்லிட்டுப்போயிட்டாளே விடேன்”என முகத்திற்கு நேராகவேசொல்லிவிட்டார்.
“க்கும் நீங்க இப்படியே சொல்லிட்டுப்போங்க. அவன் குணத்துக்கு ஏத்தமாதிரி நல்லப்பொண்ணு பொண்டாட்டகயா வருவா. அதையும் நீங்க பார்க்கத்தானே போறீங்க. வந்துட்டாங்க அவன் அம்மாஞ்சின்னு சொல்லிக்கிட்டு, போவீங்களா” என்று சொன்னவள் எழுந்துபோய்விட்டாள்.
“அதுசரி நீ அடுத்த வீட்டுப் பசங்களையே விட்டுக்கொடுக்கமாட்ட இதுல அண்ணன் பையன்னதும் சும்மாவா இருப்ப. இவன் இப்படியே மூஞ்சு வைச்சிக்கிட்டு எவக்கிட்டயாவது வசமா மாட்டப்போறான் பாரு. எனக்கென்னமோ அப்படித்தான் நடக்கப்போகுதுன்னு உள்ளுக்குள்ள இருக்க பட்சி சொல்லுது” என்றவர் இதுக்குமேல அங்க இருக்க வேண்டாம்னு திரும்பவும் தனது கம்பெனிக்குப் போய்விட்டார்.
இங்க தியேட்டர்ல படம் பார்த்து முடிஞ்சதும் அப்படியே வெளியே வந்த ஐஞ்சு பேரும் அந்த மாலில் கீழே இறங்கிக்கொண்டிருந்தனர்.
விஜய் உம்முன்னு பேசாமல் வருவதைப் பார்த்த நதியா “ஏனுடா ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி வர்ற. உன்னை பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் பயந்துப்போறாங்க பாரு”என்று அவனது தோளில் அடித்தாள்.
“ப்ச்ச் சும்மா இரு நதியா!இன்னைக்கு திருமூர்த்தி எனக்கு என்ன அபிஷேகம் பண்ண காத்திருக்காரோன்னு யோசிச்சிட்டு வர்றேன்”
“அவ்வளவுதானே திருமூர்த்தியை நான் பார்த்துக்கிறேன் விடு”
“நான் பார்த்துக்கிறேன்னு என்ன அர்த்தத்துல சொல்லுற நது”
“ஐய்யோ ஐய்யோ பார்த்துக்கிறேன்னா நான் வந்து அங்கிள்கிட்ட பேசுறேன்னு அர்த்தம். யப்பா ஒரு வார்த்தை சொல்லவிடமாட்டீங்களடா?”
“இல்லை பார்த்துக்கலாம்னு சொன்னாலே அவங்க மண்டையை உடைச்சிட்டு வந்திடுவியேன்னுதான் கேட்டோம்”
அவனை முறைத்துப் பார்த்தவள் எங்கவீட்டுல “எனக்கு என்ன அடிவிழும்னு யாரும் யோசிக்கலை. அவன் அவனுக்கு என்ன அடிவிழும்னு யோசிக்கிறீங்க. நல்ல நண்மனுங்களை கூட வைச்சிட்டு சுத்துறேன்ல என்னைய சொல்லணும். போங்கடா நான் என் வீட்டுக்குப்போறேன். அவன் அவன் பிரச்சனையை அவன் அவன் சமாளிங்க”என்றவள் கோபத்தில் அவங்ககிட்டயிருந்து விலகி நடந்தாள்.
தினேஷ்தான் “ஏன்டா ஏன்?அவதான் கோபப்படுவான்னு தெரியுமே.அப்புறம் ஏன்டா இப்படி பேசி வைக்கிறீங்க. அவளைப் போய் சமாதானப்படுத்துங்கடா”என்றவன் முதலில் அவள் பின்னாடியே ஓடினான்.
அவன் ஓடவும் விஜயைத் தவிர்த்து எல்லோரும் ஓடிப்பபய் அவளை சமாதானப்படுத்தினார்கள்.
அவளோ இன்னும் கோபத்தில்தான் இருந்தாள்.
விஜய் மெதுவாக அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன் “ஏன் மகாராணிக்கு நம்ம எது சொன்னாலும் பிடிக்காதா என்ன?நீதான் இன்னைக்குப் பிரச்சனைய இழுத்து வைச்சிருக்க நாங்கயில்ல. ஆனாலும் உனக்காக நாங்களும் மன்னிப்புக் கேட்டம்ல. அப்புறம் என்ன அவன் அவன்பிரச்சனைன்னு தனியா இழுக்க. எல்லோருக்கும் வீட்டுல இன்னைக்கு அடி விழுறது உறுதி. அதனால் பேசாம இங்கயே நல்ல சாப்பிட்டுப் போய் தெம்பா அடிவாங்குவோம் அவ்வளவுதான்”என்றவன் போய் பிரியாணி ஆர்டர் பண்ணினான்.
அவ்வளவுதான் நதியா கோபமெல்லாம் பறந்துப்போச்சு. அப்படியே பிரண்ட்ஸ்கூட உட்கார்ந்து பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை எல்லோருமே வித்தியாசமாகப் பார்த்துட்டு போனார்கள்.
என்னடா இது ஒரு பொண்ணு நாலு பசங்கக்கூட உட்கார்ந்து அரட்டை அடிக்குது. அவனுங்கக்கூட சுத்தது. ரொம்ப நல்ல பொண்ணுப்போல என்றுதான் பார்த்தனர்.
ஆனால் அதையெல்லாம் அவள் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. எல்லோரும் சாப்பிட்டு முடித்து வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
“டேய் விஜய் உன்கூட வந்து அங்கிள்கிட்ட பேசவா?”
அவனோ கையெடுத்து அவளைக் கும்பிட்டவன் “வேண்டாம் தாயே. நானே சாமளிச்சிக்கிறேன். நீ வந்தன்னா பிரச்சனையை பெருசாக்கிட்டுத்தான் வருவ. இதுவரைக்கும் செய்துவைச்சதே போதும்.நான் பார்த்துக்கிறேன். நீ வீட்டுக்குக் கிளம்பு”
“ஓகே ஓகே வேற யாரு வீட்டுக்காவது வந்து பேசணுமான்னு சொல்லுங்கடா. நான் உதவி செய்யிறேன்”
“நீ வராமல் இருக்கிறதுதான் எங்களுக்கு பெரிய உதவியே. நீ வீட்டுக்குப்போ”
“ச்சை எல்லோருக்கும் உதவி செய்யிற எனக்கு என் பிரண்ட்ஸ்க்கு உதவி செய்யமுடியலையேன்னு வருத்தமா இருக்கு.ரொம்ப பீலிங்க்ஸா இருக்கு”
“போதும் ரொம்ப சீன் போடாத. போய் மிஸ்டர் ரமேஷ்குமாரை எப்படி சமாளிக்கலாம்னு பாரு”என்று அவளை அப்படியே அவா வீடுவரைக்கும் வந்து விட்டார்கள்.
அவளது என்பீல்ட் காலேஜ்லயே விட்டுட்டு வந்துட்டாள். இப்போ வீட்டுக்குள்ள போகலாம்னா கேட்டு பூட்டியிருக்கு.
“என்ன கேட்டுபூட்டியிருக்கா? இப்போ என்ன பண்ணப்போற?”
“என்ன பண்ணப்போறியாவா?என்ன பண்ணப்போறோம்னு கேட்டு பழகுங்கடா!வண்டியை கொண்டுட்டுவாங்கடா. வண்டிமேல ஏறி கேட்டுமேல ஏறி அப்படியே உள்ள குதிச்சிடுறேன்”
“ஏன் நதியா அதுதான் போன் இருக்குல்ல உன் தங்கச்சியை வந்து கேட்டைத் திறக்கச் சொல்லு”
“யாரை நர்மதாவையா?அவதான்டா எனக்கு பெரிய எதிரி.இன்னைக்கு கொஞ்சம் ஓவரா பண்ணிட்டோம்டா. எப்படியும் இரண்டுபேரும் கோபத்துல இருப்பாங்க. அதனால் சத்தமேயில்லாமல் போய் தூங்கிடணும்”
ஓகே ஓகே என்று வண்டியிலேத்தி அவளை கேட்டுக்கு அந்தப்பக்கம் குதிக்கவைத்தார்கள்.
“ஓகேடா குட்நைட் பார்த்து பத்திரமா போயிட்டுவாங்க. நான் போறேன்” என்றவள் மெதுவாக கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தாள்.
அந்த இருட்டிலும் ஒரு உருவம் அவளுக்கு முன்பாக வந்து நின்றது. ஐய்யோ இது யாருன்னு தெரியலையே என்று கண்ணை உருட்டி பார்த்தாள்.
அவள் பார்த்து முடிப்பதற்குள் அவளது கன்னத்தில் பளார்னு ஒரு அறை விழுந்தது.
அவ்வளவுதான் பொத்தடிர்னு போய் அந்தப்பக்கமாக விழுந்துவிட்டாள். அவளது கண்ணுக்குள் பொறி பறந்தது.
அப்படியே அடிவாங்கி விழுந்த வேகத்தில் எழுந்து நிற்க முயன்றாள் முடியாது அப்படியே தளர்ந்து விழுந்தாள்!
ஆத்தீஈஈ என்ன் அடி!